மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.11

கிள் என்ற சொல் கழுத்தைப் பிடித்த கதை

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிள் என்ற சொல் கழுத்தைப் பிடித்த கதை!
வாரமலர் கட்டுரை!
---------------------------------------------------
அந்தத் தொலை பேசி அழைப்பைக் கேட்டு ஆடிப் போய் விட்டாள் அருணா!

காலை 4 மணிக்கே எழுந்து நாள் முழுதுக்கும் வேண்டிய சாப்பாட்டைத் தயார் செய்தும், கணவரையும் பையனையும் அலுவலகம், பள்ளிக்குச் செல்ல வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து, அரக்கப் பரக்க காரை ஒத்தையில் ஓட்டிக்கொண்டு 40 கி மி கடந்து அலுவலகத்தில் வந்து அக்காடா என்று அமர்ந்தால் தான் அவள் படபடப்பு தீரும்.'கடல் கடந்து தாய் நாட்டை விட்டு அமெரிக்கா வந்து பணம் பணம் என்று ஆலாக‌ப் பறக்கிறோமே இதுசரியா?" என்று பல முறை தன்னைத்தானே கேட்டுக் கொள்வாள்.

தங்கையின் கல்யாணச் சமயம் பச்சை அட்டைக்காக ஏதேதோ சட்டங்களைக் காட்டி இந்தியாவுக்குப் போவது தடையானது.அவள் வராமலே தங்கை கல்யாணம் நடந்தது. யாரையும் திருப்திப் படுத்த முடியாத இந்த வாழ்க்கை தேவையா என்றெல்லாம் மனத்திற்குள் கேட்டுக் கொள்வாள். அவ்வளவுதான் அவளால் முடிந்தது. மனத்திற்குள் கேள்வி எழுமே தவிர பதில் ஒன்றும் கிடைக்காது.பதிலை யோசிக்க நேரம் இருந்தால் தானே?!

ஞாயிறு அன்று ஒரு தொலைபேசி அழைப்பு,15 நிமிடங்களுக்குக் குறையாமல், அம்மாவிடம் பேசுவாள்.அதுதான் ஒரே ஆறுதல். ஒரு செக்கு மாடு போன்ற‌ தொடர் செயல்பாட்டுக்குப் பழகிவிட்டச் சூழலில், எந்த ஒரு மாற்றமோ தடங்கலோ படபடப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இன்று வந்த அந்த அழைப்பு இதுவரை வராத ஒன்று. பையனின் பள்ளியில் இருந்து அழைப்பு.

"நீதானா சுந்தரின் அம்மா?"

"ஆம்!"

"உடனே பள்ளிக்கு வரவேண்டும்"

"ஏன், என்ன செய்தி?என் பையனுக்கு ஏதாவது உடல் நலக்குறைவா?"

"உடல் நலக்குறைவாக இருந்தால் உன்னைக் கூப்பிடவே மாட்டோம்."

"அப்போ என்ன குறைவு?"

"அவனை ஒரு தீவிரவாதியாக அல்லவா வளர்த்துள்ளாய். உனக்கும் உன் பிள்ளைக்கும் மனநல ஆலோசனை அளிக்க வேண்டும். உடனே வா!"

மறு மொழிக்குக் காத்திராமல் தொலைபேசியை அணைத்துவிட்டார்கள்.

அருணாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கணவருக்குக் கைபேசியில் அழைப்பு விடுத்தாள்.

"எனக்கும் பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது,தாயே! உன் பிள்ளை என்ன செய்து வைத்துள்ளான் என்று தெரியவில்லை. நான் கிளம்பி பள்ளி செல்கிறேன். நீயும் கிளம்பி வா!போய் பார்ப்போம். படபடக்காதே!வா வா" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.

'பாஸி'டம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு விரைந்தாள்.ஏற்கனவே கணவர் வந்து பள்ளி வாசலில் காத்திருந்தார்.

ஆறு வயதுப்பையனை, அதுவும் எதைப் பார்த்தும் பயந்து அலறிடும் தன் மகன் தீவிரவாதியா? என்ன கூத்துடா இது? இந்த 9/11 க்குப் பிறகே அமெரிக்காக்காரனுக்கு எல்லாம் தீவிரவாதமாகத்தான் தெரிகிறது.

பள்ளி முதல்வர் அறை வாசலுக்கு வந்தபோது சற்றும் காக்க வைக்காமல் உள்ளே அழைக்கப்பட்டார்கள்.

"என்ன குழந்தை வளர்கிறீர்கள்!? வீட்டில் குழந்தை முன்னிலையில் என்ன பேசுகிறோம், என்ன பேசவேண்டும், என்ன பேசக்கூடாது என்று வரை முறையே இல்லையா? உங்கள் பிள்ளை என்ன சொல்கிறான் தெரியுமா?"
முதல்வர் காட்டமாகக் கேட்டார்.

"என்ன சொல்கிறான்?" தீனமான குரலில் அருணா கேட்டாள்.

"அதை நான் சொல்வதை விட அவன் வகுப்பு ஆசிரியை, மற்றும் கூடப்படிக்கும் மாணவர்கள் சொல்லக் கேளுங்கள்"  வகுப்பறைக்கு விரைந்து அழைத்துச் சென்றார்.

"சுந்தர் எனன‌ சொல்கிறான்?" என்று வகுப்பைக் கேட்டார்.

"அவன் எங்களைக் கொன்று விடுவேன் என்கிறான்!" கோரஸ் ஆக பிள்ளைகள் கூறின.

"என் பிள்ளை எங்கே?"

"அவனைத் தனியாக உட்கார வைத்துள்ளோம். வாருங்கள் காட்டுகிறேன்!"

'லாக் அப்' போல உள்ள ஓர் இடத்தில் பிள்ளையாண்ட‌ன் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.இவர்களைப் பார்த்ததும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து வந்து நிற்கிறான்.

பள்ளி முதல்வரிடம் அருணா கெஞ்சும் குரலில்,"என் பிள்ளையிடம் முதலில் தனியாகப்ப் பேச அனுமதிப்பீர்களா?"  என்று கேட்டாள்.

"சரி சரி!"என்று ஒதுங்கிக்கொண்டார்.அந்த தொனியே 'பேசித் தொலை' என்பதுபோல ஒலித்தது.

பையனை அன்போடு அணைத்து அருணா கேட்டாள் "என்னடா கண்ணா நடந்தது? நீ என்ன சொன்னாய்?"

"எங்க‌ளுக்குள் சும்மா ஒரு ஜாலி ஃபைட் மம்மி.அப்போ நான் ஒரு பையனைப் பார்த்து "ஐ வில் கிள் யூ!"  என்று கூறிவிட்டேன். அதற்காக என்னை தனியாக உட்கார வைத்துவிட்டார்கள்."

"ஆனால் நீ ஏன் அப்படிச்சொன்னாய்?"

"உண்மையில் நான் சொன்னது என்னவென்றால் அவனை நான் 'பிஞ்ச்' பண்ணுவேன் என்பதுதான்."

"சரி அப்படியானால் நீ அப்படியே 'ஐ வில் பிஞ்ச் யூ' என்று சொல்ல வேண்டியதுதானே! ஏன் 'கில்' என்று சொன்ன்னாய்?

"நீ தானே மம்மி கூறினாய் தமிழில் 'கிள்' என்றால் ஆங்கிலத்தில் 'பிஞ்ச்' என்று?அதான் நான் தமிழில் 'கிள்' என்று சொன்னேன்"

அருணாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

முதல் நாள் இரவு தன்னிடம் கவனத்தைக் கவர உணவு மேஜையில் தன் கையை அவன் கிள்ளியதையும், வலி பொறுக்காமல் சுத்தத் தமிழில் "ஏண்டா கிள்ளரெ?"என்று தான் கேட்டதையும்,'என்ன சொல்கிறாய்?' என்று அவன் ஆங்கிலத்தில் கேட்டு தமிழ் மொழிபெயர்ப்பை கேட்டுக்கொண்டதையும் தமிழில் 'கிள்' என்றால் ஆங்கிலத்தில் 'பிஞ்ச்' என்பதை மீண்டும் மீண்டும் கேட்டு மனதில் பதியவைத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்த்தாள்.
எல்லாம் விளங்கி விட்டது. முடிச்சு சட்டென அவிழ்ந்துவிட்டது.

அப்புறம் எல்லாம் எளிதாகிவிட்டது.பள்ளி முதல்வரிடமும், வகுப்பு ஆசிரியையிடமும்,மற்ற குழந்தைகளிடமும் விளக்கிச் சொன்னாள். முதல்வரும் ஆசிரியையும் அரை மனதுடன் ஏற்றுக்கொண்டன‌ர்.குழந்தைகள் உடனே புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பிஞ்ச் பண்ணிக்கொண்டு 'ஐ வில் கிள் யூ' என்று விளையாட ஆரம்பித்துவிட்டன.

அம்மாவுக்கு தொலைபேசியில் நடந்ததை அருணா சொன்னாள்."என் பேரன் கிருபானந்த வாரியார் சுவாமிகள் மாதிரி வருவான் பாரேன். அவர் தான் அப்பரைப் பற்றி சொல்லும் போது "அவர் அப்பர் நாமெல்லாம் 'லோயர்' என்பார். அது போல அல்லவா இருக்கிறது" என்று பேரனை சிலாகித்தார் பாட்டி.

எப்படியோ ஒரு குட்டித் 'தீவரவாதி' தண்டனையில் இருந்து தப்பித்தான்.

யார் அந்தத் தீவிர வாதி என்கிறீர்களா? சாட்சாத் என் பேரப் பிள்ளைதான். என் பெண்ணின் வேண்டுகோளின் படி அவன் பெயர்,. அவள் பெயரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன‌.

ஒரு தடவை உங்களை நீங்க‌ளே கொலை செய்து கொள்ளுங்கள்.அதாவது 'கிள்ளி'க் கொள்ளுங்கள்.

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன்,
லால்குடி

===================================================

வாழ்க வளமுடன்!

8 comments:

  1. நல்ல தங்கிலீஷ் ( உண்மை ) கதை ...

    ReplyDelete
  2. தங்கிலீஷில் பேசினால்
    தடுமாற்றம் தவிர்க்க இயலாதது


    'தீவிர'மாக எதையும் 'வாதி'ட்டாலே
    தீவிரவாதி, ஆனால் மழலையை...?!


    தமிழ் சொல் ஒன்றை அவர்களுக்கும்
    தடையின்றி கற்று தந்தவர் என்பதில்


    மகிழ்ச்சி மனம் மகிழவும்
    மகிழ்ந்து ரசிக்கவும் வந்தது இப்பதிவு

    ReplyDelete
  3. அருமையான உண்மைக் கதை!!!. வெளி நாடுகளில் குழ‌ந்தைகள் வளர்ப்பது மிகவும் கடினமான பணி... நாங்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கிறோம்!
    -‍ஜாவா

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம். நானே என்னை கிள்ளிகொண்டேன் I ""KILLU""..MYSELF.இது KMR.K . சாரின் பதிவுதான்?? நன்றாக இருந்தது ""கிள்ளல்""

    ReplyDelete
  5. "ஏன்..ஏன் இப்பிடி?"
    (வடிவேல் பாணியிலே படிக்கவும்.)
    நீங்க தொடர்ந்து இது போலவே கதையைக் குடுத்தீங்கன்னா
    " ஐ வில் கிள் யு "

    ReplyDelete
  6. உங்களிடமிருந்து இப்படி ஒரு வித்தியாசமான ஆக்கம். நன்றாக இருந்தது.

    நானும் வேலைக்குப்போவதால் நீங்கள் எழுதியுள்ள அனைத்தையுமே உணர முடிகிறது.

    ஒரு செக்கு மாடு போன்ற‌ தொடர் செயல்பாட்டுக்குப் பழகிவிட்டச் சூழலில், எந்த ஒரு மாற்றமோ தடங்கலோ படபடப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. // இந்த வரிகள் என்னைக்கவர்ந்தன, இது உண்மையும் கூட.

    போன வாரம்தான் என் பெண் படிக்கும் பள்ளியை பொறுமை அனைத்தும் தீர்ந்த நிலையில் மாற்றினேன். கூடவே ஒட்டிக்கொண்டு வந்த வேறு சில பிரச்சனைகள். PTM ல் ஒரே புகார்ப்பட்டியல்தான். படிக்கும் மாணவிகளிடம் பெயிலாக்கிவிடுவேன் என்ற பயமுறுத்தல். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுவது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஊக்குவிக்கும் வழக்கம் அறவே கிடையாது. இங்கு எல்லாப் பள்ளிகளுமே கிட்டத்தட்ட இதே முறையில்தான் செயல்படுகின்றன. தென்னிந்தியப் பள்ளிகளில் இருக்கும் ஸ்டாண்டர்ட் இங்கு கிடையாது. இது போதாதென்று திடீரென்று வேறு ஏரியாவுக்கு வீடு மாற்ற வேண்டிய சூழல். ஒரே குழப்பம்தான் போங்க.

    ReplyDelete
  7. ஆனா ஆறு வயதுக் குழந்தையைத் தீவிரவாதி என்று சொன்னது டூ மச்.

    ReplyDelete
  8. என் பேரன் கிருபானந்த வாரியார் சுவாமிகள் மாதிரி வருவான் பாரேன். அவர் தான் அப்பரைப் பற்றி சொல்லும் போது "அவர் அப்பர் நாமெல்லாம் 'லோயர்' என்பார். அது போல அல்லவா இருக்கிறது" என்று பேரனை சிலாகித்தார் பாட்டி.//

    இந்த பாட்டிகளே இப்படித்தான்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com