மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.12.10

பெண்ணல்ல நீ எனக்கு!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சிறுகதைகள் எழுதுவதுதான் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்ததும், அதிகமாக வசப்பட்டதும் ஆகும்! பத்திரிக்கைகளில் இதுவரை 70 சிறுகதைகள் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எழுதிய கதைகளில் 60 சிறுகதைகள் 3 தொகுதிகளாகத் தொகுக்கப்பெற்றுப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.  இன்னும் 20 கதைகள் சேர்ந்தவுடன், அவைகளும் புத்தகமாக வெளிவரும். வட்டார மொழியில் எழுதுவதால், செட்டிநாட்டில் எனக்கு 20,000 வாசகர்கள் உள்ளார்கள். அவர்களை நான் விடமுடியாது. பல பணிகளுக்கு இடையே விடாது அவர்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

முன்பு நான் எழுதிய கதை ஒன்றை உங்களுக்காக இன்று பதிவிட்டிருக்கிறேன். படித்து மகிழுங்கள். கதையைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பெண்ணல்ல நீ எனக்கு!
  
       கண்ணிற்குள் நூறு நிலவு தெரிந்தது. காதிற்குள் பத்துப் புல்லாங்குழல்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. மல்லிகைப்பூ மனதிற்குள் காவனம் போட்டு மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மீனாட்சி மேலான மகிழ்ச்சியில் இருந்தாள்.

       ஏன் இந்த பரவசம்?

       அவள் எம்.எஸ்ஸி. - பயோ டெக்னாலஜி படித்து முடித்தவுடன் தொடங்கிய வரன் தேடும் படலம் ஓராண்டுப் போரட்டத்திற்குப் பிறகு இன்றுதான் நிறைவுற்றது.

        ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவளைப் பெண் பார்த்து மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிந்தது, பெண் பார்த்த முறைகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.

        பரவசத்திற்கு அதுதான் காரணமா? இல்லை, அதைவிட முக்கியமான காரணம் இருக்கிறது!

        மீனாட்சி கறுப்பாக இருப்பாள். கறுப்பு என்றால் சராசரி கறுப்பு தான். ஆனால் களையாகவும், வாளிப்பாகவும் இருப்பாள். முத்துப் போன்ற பற்கள். அளவெடுத்து வைத்தது போன்ற மூக்கு, “சந்திரமுகி” ஜோதிகா போன்று பெரிய பேசும் கண்கள். கவியரசு கண்ணதாசன் சொல்வாரே “பெண்ணின் பார்வை ஒரு கோடி, அது பேசிடும் வார்தை பலகோடி” என்று. அது போன்று பேசும் கண்கள்; நல்ல உயரம் வேறு.

        இதுவரை அந்தக்கறுப்பு நிறமும், உயரமும்தான் அவளுக்கு வினையாக இருந்தது. அவளுடைய திருமணமும் தள்ளிக்கொண்டே போனதற்கு அதுதான் காரணமாகவும் இருந்தது.

        ஆனால் இப்போது மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது! மணி அம்மான் மூலம் சொல்லி விட்டது, பேசியது, ஜாதகங்களை, புகைப்படங்களைப் பரிவர்த்தனை செய்து கொண்டது. மீனாட்சி அம்மன் போவிலில் இருவீட்டாரும் மாப்பிளை பெண் பார்க்கும் படலத்தை நிறைவேற்றி வாளி பழங்களைக் கைமாற்றிக் கொண்டது என்று அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டது.

        நேரம் வந்துவிட்டால் எல்லாம் தானாக நடக்கும் என்று சொல்கிறார்களே இதைத்தான் அப்படிச் சொல்கிறார்களா?

        மீனாட்சி ஒரு மண்டல காலம் நடையாக நடந்து, தினமும் ஒரு முறை, மனம் உருக, அம்மன் சன்னதியையும், சாமி சன்னதியையும் வலம் வந்ததற்கு நல்ல பலன் கிடைத்து விட்டது! மதுரையில் குடிகொண்டிருக்கும் அந்த மங்கயர்க்கரசி தானாக வந்து காட்சி கொடுத்தா தன் பக்தர்களுக்கு உதவி செய்வாள்? இல்லை, செய்ய வேண்டிய உதவிகளைச் சகமனிதர்கள் மூலமாக அல்லவா செய்வாள் !

        இப்போதும் அப்படித்தான் செய்தாள் போலும்.திருமணச் சேவை இணைய தளத்தில் மூலமாகத்தான் அவளுடைய பெற்றோர்கள் வரனைத் தெரிவு செய்திருந்தாலும், மணி அம்மான்தான் தெய்வம்போல் இருந்து எல்லாவற்றையும் அனுசரணையாகப் பேசித் திருமணத்தை நிச்சயம் செய்து வைத்தார். இரு வீட்டாரும் அவருக்கு மிகவும் தெரிந்த குடும்பங்களாகப் போனதைத் தெய்வ அனுக்கிரஹம் என்றுதானே சொல்ல வேண்டும்!
       
         மாப்பிள்ளையின் பெயர் சோமசுந்தரம். சென்னை இந்தியன் இன்ஸ்டிடூயூட் ஆ•ப் டெக்னாலஜியில் முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்றவர். மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை. கை நிறையச் சம்பளம். டில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான பெரிய குடியிருப்பு வளாகத்தில் ஜாகை, பெயர்ப் பொருத்தம் என்று எல்லாமே பிடித்துப் போய்விட்டது.

         ஆனால் எல்லாவற்றையும் விட பிடித்தது; மீனாட்சியின் மனதைக்கிறங்க வைத்தது எல்லாம் அந்தப் பெண் பார்க்கும் நிகழ்ச்சிதான். பெண் பார்க்கும் நிகழ்வில் கூட இப்படியொரு சுவாரசியம் இருக்கும் என்று வீட்டிற்குத் திரும்பி வந்த பிறகுதான் அவள் உணர்ந்தாள்.
        
         கோவிலுக்குப் போகும் வழியிலேயே அவள் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பு எடுக்காத குறையாக எல்லா விவரங்களையும் சொல்லித்தான் மணி அம்மான் அவளை அவளுடைய பெற்றோர்களுடன் அழைத்துக் கொண்டு போனார்.

          மண்டபத்தில் பத்து நிமிடங்களுக்கு முன்பே வந்து காத்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகம் செய்து வைத்த கையோடு, மாப்பிள்ளைப் பார்த்து “ அந்த ஊரணி படிக்கட்டில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிப் பார்த்துவிட்டு வாருங்கள் “. என்று இருவரையும் அனுப்பியும் வைத்து விட்டார்.

           மதுரையில் வளர்ந்த பெண்ணல்லவா - தயங்கித்தயங்கி வந்த மீனாட்சி அவன் அமர்ந்த படிக்குக் கீழே ஒரு படி தள்ளி இறங்கி அமர்ந்த நிலையில் புன்னகையோடு அவனுடன் பேசத் தொங்கினாள்.

           “உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா”

           “போட்டோவிலிருப்பதைவிட பேரில் நீ நன்றாக இருக்கிறாய் !”

           அவள் வெட்கத்தில் தலை குனிய, தொடர்ந்தவன், “மணி அண்ணன் உன்னைப் பற்றி நிறையச் சொன்னார்கள். யூனிவர்சிட்டி ராங்க் ஹோல்டெர்” என்றார்கள். கல்லூரிக் கவியரங்கம் மேடைகளிலெல்லாம் சிறப்பாகப் பேசிப் பழக்கமுள்ளவள் என்றார்கள். அதைவிட முக்கியமாக ஒன்றைச் சொன்னார்கள். நீ நன்றாகச் சமையல் செய்வாய் என்றார்கள். அதுதான் என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு இங்கே வந்தது !” என்று சொல்லிவிட்டு, அவளைப் பார்த்து மெல்லிய குரலில் புன்னகையோடு கேட்டான்.

           “அது சரி, உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா...?”

           “ம்... கொள்ளையாக !”

           “கொள்ளையாகவா...ஏன்?”

           “உங்களுக்கு நல்ல மனசு !”

           “இப்போதுதானே பார்க்கிறாய்; அதற்குள் என் மனசைப்பற்றி எப்படித் தெரியும் ?”

           “இல்லை தெரியும் !”

           “அதுதான் எப்படித் தெரியும் ?”

           “மணி அம்மான் சொன்னார்கள் !”

           “என்ன சொன்னார்கள் ?”        

           “பெண் கறுப்பாக இருந்தால் என்ன - முகம் களையாக இருக்கிறது! நானும் கறுப்புத்தானே - நான் சிவப்பான பெண் தேடுவது எப்படி நியாயமாகும் என்று சொன்னீர்கள் - அந்த உயர்ந்த எண்ணம் எனக்கு பிடித்திருந்தது !”

           “வேறு என்ன சொன்னார்?”

           “புகைப்படத்தைப் பார்த்தவுடன் இவள்தான் பெண் என்று முடிவு செய்துவிட்டேன். கோவிலுக்கு வந்து நேரில் பார்த்தபிறகு எக்காரணத்தைக் கொண்டும் வேண்டாம் என்று சொல்லமாட்டேன். ஆனால் என் தாயாருக்கும் அந்தப் பெண்ணைப் பிடிக்க வேண்டும். ஆகவே அந்தப் பெண் வீட்டில் சொல்லி பதவிசாக நடந்து கொள்ளும்படி சொல்லி வையுங்கள்” என்றும் சொன்னீர்களாம்.

           “பாவி மனிதர் - அதையும் சொல்லிவிட்டாரா?”

           “ஆமாம்” என்று புன்னகைத்தவள் தொடர்ந்து சொன்னாள். “அவ்ர்களிடம் முறை, முறைச்சிட்டை என்று பேரம் எதுவும் பேச வேண்டாம். அவர்கள் விருப்பப்பட்டுக் கொடுப்பதைக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். சரி என்று சொல்லிவிடுங்கள்” என்றும் சொன்னீர்களாம். அதனால் எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர்களுக்கும் உங்கள் மேல் அளவில்லாத மதிப்பும், மரியதையும் உண்டாகிவிட்டது”.

           “எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது!”

           “என்னவென்று சொல்லுங்கள்”

           “நீ என் தாயாருக்கு எப்போதும் ஒரு நல்ல மருமகளாக நடந்து கொள்ள வேண்டும்.”

           “நிச்சயம் இருப்பேன். காலையில் நெற்றியில் வைக்கும் பொட்டாக, பகலில் காலில் கிடந்து உழைக்கும் செருப்பாக, இரவில் கழுத்தில் இருக்கும் மாலையாக மொத்ததில் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாக இருப்பேன்”.

           அதற்குமேல் அவன் பேசவில்லை. கையில் இருந்த பையிலிருந்து, பரிசுப் பெட்டி ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான்.

           அவன் காலைத்தொட்டு வணங்கிவிட்டு, அதை வாங்கிக் கொண்டாள். அது என்னவென்று கண்களாலேயே கேட்டாள். அவன் “ஊகம் செய்து சொல் பார்கலாம்” என்றான். பார்சலின் அளவைப் பார்த்தால் ப்ட்டுப்புடவை அல்லது சாதனங்களுடன் கூடிய செல்போனாக இருக்கலாம் என்று நினைத்தவள், கேட்கவும் செய்தாள். அவன் “இல்லை” என்றான். “பிரித்துப் பார்க்கட்டுமா” என்றாள். “இங்கே வேண்டாம் - வீட்டில் போய்ப் பார்” என்றான். அதுவரை தாங்காது “தயவு செய்து என்ன வென்று நீங்களே சொல்லுங்கள்” என்றாள்.

           அவன் சொன்னான் “தங்கக் கொலுசுகள்”

           அவள் கண்கள் ஆச்சிரியத்தில் பரந்து விரிந்தன. என்ன தங்கக் கொலுசுகளா...?”

           “ஆமாம்”

           “கொலுசை வெள்ளியில்தான் போட வேண்டும் என்பார்கள். தங்கம் லெட்சுமி கடாட்சம் கொண்டது. ஒட்டியாணம் தவிர, இடைக்குக்கீழே தங்கத்தில் எதுவும் அணியக்கூடாது என்பார்களே!”

           “நோ ப்ராப்ளம். இப்போதைக்கு அப்படியே வைத்துக்கொள். திருமணத்திற்குப் பிறகு மாற்றித் தருகிறேன்”.       

           “வேண்டாம் உங்கள் கையால் எனக்கு முதன் முதலாகக் கொடுத்தது. அப்படியே இருக்கட்டும். நம் முதல் சந்திப்பின் நினைவாக இதை நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன்”.

           “சரி உன் விருப்பம்” என்று சொன்னவன் எழுந்து விட்டான்.

           அதற்குப்பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. இருவரும் வந்து மணி அம்மானிடம் தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க, மீனாட்சி தன் வருங்கால மாமியார், மாமனாரின் கால்களில் விழுந்து வணங்கி எழ அந்த ஆச்சி, மருமகளாக தன் வீட்டிற்கு வரவிருக்கும் பெண்ணின் கூந்தலில், தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த மல்லிகைச் சரத்தைச் சூட்டிவிட எல்லாம் இனிதே நடந்து முடிந்தது.

           வீட்டிற்குத் திருப்பிய மீனாட்சி, பரக்கப் பரக்க அந்தப் பரிசுப் பெட்டியைப் பிரித்தபோதுதான் மனம் கவர்ந்த அந்த சுவாரசியம் அறங்கேறியது.

           பெட்டியில் இருந்தது அவன் சொன்னதுபோல தங்கக் கொலுசுகள் அல்ல! இருந்தது வைரப் பூச்சரம். ஐந்து அல்லது ஆறு கேரெட் அளவு இருக்கலாம்; சின்னதும், பெரியதுமான வைரங்களில் பளபளத்தது!

           உடன் நான்கு வரிக் கவிதையோடு சிறிய காகிதச் சீட்டு ஒன்றும் இருந்தது. எடுத்துப் படித்தாள்.

           “பெண்ணல்ல நீ எனக்கு,         
                 வண்ணக் களஞ்சியமே!
            சிந்தும் பனித்துளியே - உன்னைச்
                  சேரும்நாள் வந்ததடி!”

           அடடா! இது மேடைப் பேச்சில் கணவன் மனைவி உறவிற்காக மேற்கோளாகச் சொன்ன திரைப் பாடல் வரிகளல்லவா? இது எப்படி அவருக்குத் தெரிந்தது? அவரும் இந்தப்பாடல் வரிகளின் ஆத்மார்த்தமான ரசிகராக இருக்கக்கூடாதா என்ன?

           கண்களில் நீர் பனிக்க மீனாட்சி, பூச்சரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். வைரங்கள் தெரியவில்லை. எல்லா வைரங்களிலும் சோமசுந்தரத்தின் முகம்தான் தெரிந்த்து!
+++++++++++++++++++++++++++++++++++++++++
            இது நடந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. நினைத்துப் பார்த்தால் எல்லாமே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர்கள் இருவரின் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்து இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன.

           குலதெய்வக் கோவில்கள், குன்றகுடிக் கோவில், கொடைக்கானல் என்று பத்து தினங்கள் பறவைகளாகச் சுற்றித் திரிந்துவிட்டு  இருவரும் டில்லியில் உள்ள தங்கள் குடியிருப்பிற்கு நேற்றுக் காலையில்தான் வந்து சேர்ந்தார்கள்.

           இரண்டு நாட்கள் பகல் பொழுது முழுவதும் அவ்னுடைய நண்பர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள். மேலதிகாரிகள் என்று பலர் வந்து திருமணத்தை விசாரித்துவிட்டு வாழ்த்துக் கூறி பரிசுப் பொருள்கள் வழங்கி விட்டுப் போனார்கள். வந்து சென்றவர்களில் இந்திக்காரர்களும் பஞ்சாபிக்காரர்களும் அதிகம்.

           கடந்த ஒரு மணி நேரமாகத்தான் இருவருக்கும் சற்று ஓய்வு கிடைத்தது. ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டு மீனாட்சியின் பக்கம் திரும்பிய சோமு, மெல்லிய குரலில் அவளைப் பார்த்துக் கேட்டான்.

           "என்ன மீனா,  வீடெல்லாம் பிடித்திருக்கிறதா?"

           "ம்......மிகவும் பிடித்திருக்கிறது!"

           “ஏன் என்று சொல்லவில்லையே?”

           “நீங்கள் இருந்தால் போதும்.எந்த இடமும் எனக்குப் பிடிக்கும்!”   
        
           “ஓஹோ” என்றவன், அவளைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்துடன் கேள்வி ஒன்றைக் கேட்டான்.

        “அஜீத் மாதிரி உயரமாக இருக்கிறேன் என்று சொல்வாயே – கறுப்பாக இல்லாமல், அஜீத் மாதிரி நானும் சிவந்த நிறமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா?”

         இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் சற்று நிலை குலைந்து போய்விட்டாள். கண்களில் நீர் கோர்த்து விட்டது. உணர்ச்சிப் பிழம்பானவள் பட படவென்று பேசத் துவங்கி விட்டாள்.

            “நிறத்தில் என்ன இருக்கிறது? கணவன் மனைவி அந்யோன்னியம், உணர்வுமயமான உறவுகள் இவைதான் முக்கியம். ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வையுங்கள். தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள். நான் உங்களிடம் கொண்டுள்ள மயக்கத்திற்கெல்லாம் காரணம் உங்களுடைய நல்ல குணம்தான். வேறொன்றுமில்லை! ஒருவரை
யொருவர் புரிந்து கொள்ளுதல்தான் கணவன் மனைவி உறவில் முக்கியமானதும், முதன்மையானதும் ஆகும். உங்களைப் பார்க்கும்
முன்பே மணி அம்மான் சொன்னதை வைத்து உங்களை நான் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டேன். திருமணத்திற்குப் பிறகு நீங்களும் என்னை நன்றாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். அதனால் வேடிக்கையாகக்கூட இனிமேல் இது போன்று தயவு செய்து பேசாதீர்கள். வீட்டில் எத்தனையோ நவீன  மின் சாதனங்கள் இருந்தாலும் மின்சாரம் இல்லையென்றால் அவையெல்லாம் எப்படிப் பயன் படாதோ அதுபோல கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனியாக எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும், புரிந்து கொள்ளுதல் இல்லையென்றால் அந்தச் சிறப்புக்கள் எல்லாம் அடிபட்டுப் போய்விடும்!” என்று சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு நா தழுதழுக்கத் தொடங்கியதுடன் கண்களில் இருந்தும் நீர் கசியத் தொடங்கி விட்டது.

      பதறிப் போய்விட்ட சோமு, அன்பான மனம் கொண்ட , அதுவும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய இவளை எதற்குப் போய்ச் சீண்டினோம் என்று நினைத்ததோடு, அவளை வாரி அனைத்து முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினான்.

         “பெண்ணல்ல நீ எனக்கு, வண்ணக் களஞ்சியமே’  என்ற கவிதை வரிகள் அவன் நெஞ்சை நிறைத்தன.

             +++++++++++++++++++++++++++++++++++++
          
       



வாழ்க வளமுடன்!

38 comments:

  1. பெண்ணல்ல நீ எனக்கு!

    Kathai arumai, vazhakkam poal varunanaiyum karuthum serinthirundhathu. Thangalin Ezhuththu pani Thotara Vendum...

    Anbutan
    Chiruthuli

    ReplyDelete
  2. ஒவ்வொரு தம்பதியும் மனமொத்து இருந்தால் வாழ்கை சொர்கம்.

    ReplyDelete
  3. ஐயா,
    மிகவும் அருமை.

    ReplyDelete
  4. அருமையான‌ கதை! எங்க அப்பாரு சொல்லுவாரு
    "மாடு(சொத்து) வாய்க்கிறது நல்ல மகாராசனுக்கு,
    பொன்னு (மனைவி) வாய்க்கிறது நல்ல புண்ணியவானுக்கு"
    சோமசுந்திரம் புண்ணியவான் தான்!!
    - ஜவகர், ஆஸ்திரேலியா

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா!

    மதுரையை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் "மீனாட்சி அம்மனை!" மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல பெண்கிடைக்கும் என்று சொல்லுகின்றீர்கள் அப்படிதானே ஐயா!

    முன்னரே மனம் உருக வணங்கி வயிதமைக்கு பலன் உண்டுதானே ஐயா?

    சிறு குறிப்பு;
    சம்பிராதய சாஸ்திரத்தில் பெயர் போன நம்மளுக்கு மேற்க்கே (மலையாள தேசம் ) உள்ள இந்து பெண்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலோனோர் காலில் தங்க கொலுசு அணிந்து உள்ளதை பார்த்து உள்ளேன்.
    ( தவறாக பொருள் எடுக்காமல் இருந்தமைக்கு நன்றி ). :-)))

    ReplyDelete
  6. ஐயா தங்கள் கதை மிகவும் அருமை. கதை ஒட்டம் தெளிவாக உள்ளது...

    ReplyDelete
  7. //தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள்.//

    அருமை அய்யா..excellent..

    என்னை உங்கள் நடை கவர்ந்திழுத்துப் போட்டுவிட்டது..

    பழனியப்பன் ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் சார்ந்தவர்களுக்கும் உண்டாகட்டும்..

    ReplyDelete
  8. சோமசுந்திரத்துக்கு 1,2,4,7,9,11,12 ம்மிடங்கள் நல்ல இருக்கும்போல..

    ReplyDelete
  9. சார், கதை நன்றாக இருந்தது. (நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு அனுப்புகிறேன்).

    ஆனால் உங்கள் வட்டார மொழி வார்த்தைகள் சில புரியவில்லை. 'காவனம்', 'வைரப் பூச்சரம்' இதெல்லாம் என்ன?

    வாளி பழங்களை - இது என்ன? பழத்தட்டா?

    ReplyDelete
  10. Good story and the way it has been expressed in words is very nice.

    ReplyDelete
  11. "தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள்."

    Absolutely beautiful phrase. The way in which you presented the phrase is also beautiful.

    In total I loved this story and the flow of the story.

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    கதையை விட கதையை சொல்லிய பாங்குதான் வகுப்பறை மாணவர்களை
    வாத்தியாரின் காலடியில் மயங்கிக்கிடக்கச்செய்கிறது, கதையும் அருமை,கதை
    சொல்லிய விதமும் அருமை.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  13. அன்புடன் வணக்கம்
    மனை வாய்ப்பது மனையாட்டி வாய்ப்பது மாடு வாய்ப்பது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம் சோம சுந்தரம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறார்.
    கிடைத்தாள் ஒரு மீனாக்ஷி !!!
    சுவைபட கொண்டு சென்ற விதம் !!!!!.....வேதங்கள் நான்கு அதில் உப வேதங்கள் .. ஆயுர் வேதம்.. ஜோதிட சாஸ்திரம் இவை யாவும் இறைவனின் திருவாக்கு அதை உபகரிப்பவர் ஆசான் .. ஆசானை வாழ்த்த பாராட்டா தகுதி வேண்டும் இல்லைஎனக்கு !!!

    ReplyDelete
  14. மீனாட்சி அம்மனை! மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல என் மகனுக்கும் பெண்கிடைக்கும். நானும் அவ்வாறே வணங்குகிறேன். சரியான நேரத்தில் தங்கள் கதையைப் படித்துள்ளேன். நன்றி.
    ஐயா,
    மிகவும் அருமை.

    ReplyDelete
  15. ////Chiruthuli said...
    பெண்ணல்ல நீ எனக்கு!
    Kathai arumai, vazhakkam poal varunanaiyum karuthum serinthirundhathu. Thangalin Ezhuththu pani Thotara Vendum...
    Anbutan
    Chiruthuli////

    முருகன் அருள் உண்டு. என் உயிர் உள்ளவரை, என்னுடைய எழுத்துப்பணி தொடரும்!

    ReplyDelete
  16. /////arthanari said...
    ஒவ்வொரு தம்பதியும் மனமொத்து இருந்தால் வாழ்கை சொர்க்கம்.//////

    நிதர்சனமான உண்மை! நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. Vibin said...
    ஐயா,
    மிகவும் அருமை.////

    உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி விபின்!

    ReplyDelete
  18. ///KUMAR said...
    Dear Sir,
    Super!
    regards
    Kumar/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி குமார்!

    ReplyDelete
  19. ////Jawahar said...
    அருமையான‌ கதை! எங்க அப்பாரு சொல்லுவாரு
    "மாடு(சொத்து) வாய்க்கிறது நல்ல மகாராசனுக்கு,
    பொன்னு (மனைவி) வாய்க்கிறது நல்ல புண்ணியவானுக்கு"
    சோமசுந்திரம் புண்ணியவான் தான்!!
    - ஜவகர், ஆஸ்திரேலியா/////

    நல்ல பெயர் வாய்க்கிறதும் அப்படித்தான். உங்கள் பெயர் தேசியப்பெயர் அல்லவா?

    ReplyDelete
  20. /////kannan said...
    உள்ளேன் ஐயா!
    மதுரையை ஆட்சி செய்துகொண்டு இருக்கும் "மீனாட்சி அம்மனை!" மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல பெண்கிடைக்கும் என்று சொல்லுகின்றீர்கள் அப்படிதானே ஐயா!
    முன்னரே மனம் உருக வணங்கி வயிதமைக்கு பலன் உண்டுதானே ஐயா?
    சிறு குறிப்பு;
    சம்பிராதய சாஸ்திரத்தில் பெயர் போன நம்மளுக்கு மேற்கே (மலையாள தேசம் ) உள்ள இந்து பெண்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலோனோர் காலில் தங்க கொலுசு அணிந்து உள்ளதை பார்த்து உள்ளேன்.
    ( தவறாக பொருள் எடுக்காமல் இருந்தமைக்கு நன்றி ). :-)))/////

    அங்கே என்று இல்லை, எல்லா இடங்களிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் அணிந்துகொள்வார்கள். நானும் கவனித்திருக்கிறேன். அது அவர்கள் விருப்பம். நமது கருத்திற்கு அங்கே இடமில்லை!

    ReplyDelete
  21. /////Admin said...
    ஐயா தங்கள் கதை மிகவும் அருமை. கதை ஒட்டம் தெளிவாக உள்ளது.../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  22. /////Govindasamy said...
    //தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள்.//
    அருமை அய்யா..excellent..
    என்னை உங்கள் நடை கவர்ந்திழுத்துப் போட்டுவிட்டது.
    பழனியப்பன் ஆசீர்வாதங்கள் உங்களுக்கும் சார்ந்தவர்களுக்கும் உண்டாகட்டும்..////

    ஆகா, அவர் ஆசியில்லாமல் தமிழில் யார் எழுத முடியும்? தமிழ்க்கடவுள் அல்லவா அவர்!

    ReplyDelete
  23. Vinoth said...
    சோமசுந்திரத்துக்கு 1,2,4,7,9,11,12 ம்மிடங்கள் நல்ல இருக்கும்போல..//////

    கதையில் எதற்கு சுவாமி ஜோதிட ஆராய்ச்சி?

    ReplyDelete
  24. Uma said...
    சார், கதை நன்றாக இருந்தது. (நானும் ஒரு கதை எழுதியிருக்கிறேன். உங்களுக்கு அனுப்புகிறேன்). ஆனால் உங்கள் வட்டார மொழி வார்த்தைகள் சில புரியவில்லை. 'காவனம்', 'வைரப் பூச்சரம்' இதெல்லாம் என்ன?
    வாளி பழங்களை - இது என்ன? பழத்தட்டா?/////

    காவனம் என்றால் பந்தல். மல்லிகைப் பந்தல். மலர்க்கொடிகளுக்கான பந்தல். பூச்சரம் என்றால் கழுத்தில் அணியும் அணிகலன். நகை. (Neclace) பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூவுடன் தட்டில் வைத்துக்கொடுப்பதற்குப் பதிலாக எவர்சில்வர் வாளியில் வைத்துக்கொடுப்பார்கள். தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக:-)))

    ReplyDelete
  25. /////Pallathur Ramanathan said...
    Good story and the way it has been expressed in words is very nice./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Srividhya said...
    "தன்னைக் கரம் பிடித்தவனின் உயர்ந்த குணம், அன்பாகப் பழகும் நேசம் இவற்றை வைத்துத்தான் ஒரு மனைவி அவனுடைய காலடியில் மயங்கிக் கிடப்பாளே ஒழிய வேறெந்த சக்திக்கும் அவள் மசிய மாட்டாள்."
    Absolutely beautiful phrase. The way in which you presented the phrase is also beautiful.
    In total I loved this story and the flow of the story.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. ////ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா, கதையை விட கதையை சொல்லிய பாங்குதான் வகுப்பறை மாணவர்களை
    வாத்தியாரின் காலடியில் மயங்கிக்கிடக்கச்செய்கிறது, கதையும் அருமை,கதை
    சொல்லிய விதமும் அருமை.
    அன்புடன், அரசு./////

    கதை சொல்லும் உத்தியே அதைச் சொல்லும் விதத்தில்தான் உள்ளது. முருகன் அருளால், தமிழ் வசப்பட்டதுபோல, கதை சொல்லும் உத்தியும் எனக்கு வசப்பட்டுள்ளது. நான் எழுதவில்லை. முருகப்பெருமான் என்னை எழுதவைக்கிறார் அவ்வளவுதான்!

    ReplyDelete
  28. /////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    மனை வாய்ப்பது மனையாட்டி வாய்ப்பது மாடு வாய்ப்பது அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம் சோம சுந்தரம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறார்.
    கிடைத்தாள் ஒரு மீனாக்ஷி !!!
    சுவைபட கொண்டு சென்ற விதம் !!!!!.....வேதங்கள் நான்கு அதில் உப வேதங்கள் .. ஆயுர் வேதம்.. ஜோதிட சாஸ்திரம் இவை யாவும் இறைவனின் திருவாக்கு அதை உபகரிப்பவர் ஆசான் .. ஆசானை வாழ்த்த பாராட்டா தகுதி வேண்டும் இல்லைஎனக்கு !!!////

    ரசிக்கும்தன்மை இருந்தால் போதும். வயது தேவையில்லை. நீங்கள் குறிப்பிடும் தகுதி வந்துவிடும். நன்றி சார்!

    ReplyDelete
  29. /////நடராஜன் said...
    மீனாட்சி அம்மனை! மனதார வணங்கினால் தாங்கள் கூறியது போல என் மகனுக்கும் பெண்கிடைக்கும். நானும் அவ்வாறே வணங்குகிறேன். சரியான நேரத்தில் தங்கள் கதையைப் படித்துள்ளேன். நன்றி.
    ஐயா,
    மிகவும் அருமை./////

    நல்லது. உங்களின் பிரார்த்தனை நிறைவேறும். நானும் அன்னையைப் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  30. தெளிந்த நீரோடை போல் அற்புதமான நடையில் உயிரோட்டமான கதை
    சமீபகால கதைகளில் வரும் திடீர் திருப்பங்களையும் எதிர்பாராத
    கிளைமாக்ஸ் போன்றவற்றையே படித்துப் பழகிப்போனதால் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ
    கடைசிவரையில் சற்று பயத்துடனே படித்துகொண்டு வந்து முடிவு சுபமாகப் போனதில் நிம்மதி.
    நன்றி வாத்தியார் அவர்களே
    நந்தகோபால்

    ReplyDelete
  31. ஐயா!!!

    சிறு கதையாயினும் இந்தக் கதையின் நோக்கத்தை இறுதியில் சொல்லிவிட்டீர்கள்.கதை நன்றாக இருந்த்தது.

    நன்றி...

    ReplyDelete
  32. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    சிறு கதை தங்களின் கை வண்ணத்தால் மிகவும் சுவாரசியமாகவும், கதையின் மூலமாக தாங்கள் தெரிவித்துள்ள அறிவுறைகள் சிறப்பாகவும் உள்ளது

    நன்றி!வணக்கம்.
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010-12-02

    ReplyDelete
  33. சார் ,

    மிகவும் அழகான சிறுகதை , வாழ்கையின் சுவாரசியமான இடங்களை அழகாக பதிவு செய்துள்ளது .ரசிக்கும் படி உள்ளது .

    ReplyDelete
  34. கதையைப் படிக்கும்போது 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோ சித்திரம் பேசுதடி'..'காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் போட்டு வைத்து தேவதை போலே நீ நடந்து வரவேண்டும்'..பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.. பரிசளிப்பு வைபவத்தின் போது காலைத் தொட்டு வணங்குவது போன்ற சம்பவங்கள் என்று அந்த காலகட்டங்களுக்கான தம்பதியினரின் மனப்பாங்கை படம் பிடித்த நீங்கள் இடையிலே 'கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு' காலத்து 'செல்போன் பரிசாக இருக்குமோ' என்று எழுதியிருப்பதுதான் இடிக்கிறது..

    'எல்லா வைரங்களிலும் சோமசுந்தரத்தின் முகம்தான் தெரிந்தது!' அந்தக்கால வீடியோ மிக்ஸ்ஸிங் எஃபெக்ட் கலக்கலாக தெரிகிறது..

    'காலையில் நெற்றியில் வைக்கும் பொட்டாக, பகலில் காலில் கிடந்து உழைக்கும் செருப்பாக, இரவில் கழுத்தில் இருக்கும் மாலையாக மொத்ததில் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாக இருப்பேன்”.'
    இப்படியெல்லாம் ஆட்கள் இன்னமும் இருக்கிறார்களா?இருக்கத்தான் வேண்டுமா?பெண்ணடிமைத்தனம் என்று ஆகிடாதா?
    மற்றபடி கதை உங்களுக்கான வழக்கமான ஸ்பெஷல் பாணியுடன் கலக்கல்..இப்படிக் கதைகளை அடிக்கடி பதிவிடுங்கள்..
    கதைகளிலாவது இப்படிக் கேரக்டர்களை பார்க்கமுடிவது ஆச்சரியம்தானே?

    ReplyDelete
  35. நேற்று இரவு போன மின்சாரம் இப்போதுதான் வந்தது. எனவே வகுப்பறைக்குத் தாமதமாக வர நேர்ந்தது.

    கதை தங்களுடைய தனித்துவ முத்திரையுடன் நன்றாக அமைந்துள்ளது.தங்களின் மண்வாசனைக் கதைகளின் தொகுப்பான 3 புத்தகங்களையும் வாசித்து, தங்களின் அணுகுமுறை எனக்கு அத்துப்படி.


    1. தங்கள் கதைகளில் எதிர்மறையான குணம் கொண்ட பாத்திரப்படைப்பு இருக்காது. அதாவது வில்லன் இல்லாத கதைகள்.

    2. கதை மாந்தர் அனைவரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். தவறிப்
    போய் ஏதாவது ஒரு பாத்திரம் தவறு ஏதேனும் இழைத்து இருந்தாலும், கதை முடிவதற்குள் மனம் திருந்தி விடுவார்கள்.

    3. கோவில்,இறைவன், பூஜை போன்ற அம்சங்கள் கதையில் தலைகாட்டாமல் இருக்காது.

    4.அன்பு காட்டுவதில் ஒவ்வொரு பாத்திரமும் போட்டி போடுவார்கள்

    5.கூட்டுக் குடும்ப முறை வலியுறுத்தப்படும்.குறைந்தபட்சம்,தாய் தந்தையருக்கு காலில் விழுந்து ஆசிபெறும் ம‌க‌ன்/ம‌க‌ள் க‌தையில் வ‌ருவார்க‌ள்.

    6.க‌தை ந‌ட‌க்கும் ஊர்,இட‌ம் நேரில் இருப்ப‌து போல் பிர‌மை ஏற்ப‌டும்.

    7. தான் சார்ந்த‌ ச‌மூக‌த்தினை நிலைக‌ள‌னாகக் கொண்டு க‌தை அமையும். ஆனா‌ல் கதைக் க‌ருவோ எல்லா ச‌மூக‌த்திற்கும் பொதுவான‌து.

    இன்னும் அடுக்கிக் கொண்டே போக‌லாம்.

    இது போன்ற‌ க‌தைக‌ள் அந்த‌க் கால‌த்தில் டாக்ட‌ர் ல‌க்ஷ்மி, அநுத்த‌மா, ராஜ‌ம் கிருஷ்ண‌ன்.ஆகியோர் எழுதுவார்க‌ள். க‌ல்கி, க‌லைம‌க‌ள் ஆகிய‌ ப‌த்திகைக‌ள் வெளியிடும்.

    இப்போதெல்லாம் ஒரு ப‌க்க‌க் க‌தை, அரைப் ப‌க்க‌க் க‌தை, ஒருவ‌ரிக் க‌தை என்று மாற்றி விட்டார்க‌ள்.

    வ‌ள‌ர்க‌ உங்க‌‌ள் பார‌ம்ப‌ரிய‌த்தைத் தாங்கிப் பிடிக்கும் எழுத்து‌ப் ப‌ணி.ந‌ன்றி!

    வ‌ண‌க்க‌ம்!

    ReplyDelete
  36. கதை மிக அருமை சார்..! நானும் என் மனைவியும் கூட கருப்புதான், ஆனால் உங்கள் கதையில் இருப்பதுபோலவே அன்னியோன்னியம்.. கதை எங்களுக்காக எழுதியது போல இருந்தது... சூப்பர்..!

    ReplyDelete
  37. கதை சொல்ல தகுந்த உத்தி வேண்டும். கதை ஓட்டமும், கதை நடக்கும் சூழலும் எழுதுபவரின் சூழலுக்கு ஒத்திருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல ஜாம்பவான்களின் கதைகளைப் படித்திருக்கிறேன். இப்போது கதை எழுதும் பாணியும், நோக்கமும், அளவும்கூட பாதித்து விட்டது. இன்னமும் அந்தப் பழைய‌ பாரம்பரியத்தில் ஆசிரியர் சுப்பையா அவர்கள் இருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கதையின் நடை, அதன் ஓட்டம் சிறிதும் தடைபடாமல், ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவசிமானதாகவும், அடுத்து என்ன என்பதை யூகிக்கும் படியாகவும் மிக அருமையான யுத்தியோடு எழுதப்பட்டிருக்கிறது. நல்ல மண் வாசனை. இறை உணர்வையும், பண்டைய பண்பான குடும்ப வாழ்வையும் ஊக்குவிக்கும் படைப்புகள். உங்கள் கதைப் புத்தகங்கள் இரண்டைப் படித்தேன். அவை அனைத்துமே மாணிக்கங்கள். இளைய தலைமுறைக்கு பழைய சிறுகதை, நாவலாசிரியர்களில் தலைசிறந்தவர்களை நினைப்பூட்டுகிறீர்கள். வாழ்க தங்கள் பணி. அது சிறக்கட்டும் மேலும் மேலும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com