எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!
கதவு திறந்து மன்னிக்கு அவனை அடையாளம் தெரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. தெரிந்ததும் திடுக்கிட்டாள் திணறி எச்சில் விழுங்கி 'நீங்களா? எப்ப வந்தேள்?"
"இப்பதான், நேர வரேன், அப்பா எப்படி இருக்கா?"
"அம்மா, அம்மா யார் வந்திருக்கா பாருங்கோ."
"யாருடி?"
"பரத்"
"பரத்தா?"
யாரு? பரத்தா?"
“என்னது? பரத்தா!" மூலைக்கு மூலை ஆச்சர்யக் குரல்கள் ஒலித்தன.
ரேடியோ நிறுத்தப்பட்டது. பிள்ளைகளின் படிப்பு ரத்து செய்யப்பட்டது.
அம்மா, பெரிய அண்ணா, அண்ணா, அக்கா, மன்னிகள் குழந்தைகள் எல்லோரும் ஹாலில் ஒரு அரை வட்ட விரோத விழாப் போல் வந்து சேர்ந்துகொண்டு, அவனைச் சுற்றிப் பார்வை வியூகம் அமைத்தார்கள்
சின்ன மன்னிதான் "வா பரத்" என்றாள். எப்படி மாறிவிட்டாள்! எங்கே அந்த அழகான மணப்பெண்?
"என்னடா, எங்கே வந்தே?" அம்மா
"அப்பாவைப் பார்க்க வந்தேம்மா எப்படி இருக்கார்?"
"இத்தனை நாளா இல்லாம இப்ப வந்தாயா? ஏன் என்னைப் பார்க்க வரக்கூடாதா? எத்தனை வருஷமாச்சு!"
"அப்பா உடம்பு ரொம்ப மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்"
"ஏண்டா, எந்த மூஞ்சியை வெச்சுண்டு விசாரிக்கறே! துப்புக் கெட்டவனே ! ஒரு கடுதாசி உண்டா? இப்ப திடீர்னு எதுக்காக வந்ததிக்கறே? எதுக்காகடா?"
"இல்லைம்மா, அம்பி அய்யர் சொன்னதைப் பார்த்தா அப்பாவை ஒரு வேளை இனிமே பார்க்க முடியாம போய்டுமோன்னு பயம் வந்துடுத்து.”
"பார்த்து இப்ப என்ன கிழிக்கப் போற?'
"ஏன்னா ? வந்தவரை...''
"சும்மாருடி! இது எங்க குடும்ப விஷயம். ப்ராடிகல் சன் வந்திருக்கான்" என்றார் அண்ணன்
"ஏண்டா, பார்க்க என்ன தகுதி இருக்கு உனக்கு?"
"ஏன் பார்க்கக் கூடாதா?" என்றான் விரோதமாக
"ஏய் பசங்களா எல்லோரும் உள்ள போங்கோ."
"மகன்ங்கிற தகுதிதான் அண்ணா ."
"மகன்! ஆஹா! பெரிசா வந்துட்டான். எத்தனை நாள் அவருக்கு சோறு போட்டே?."
"இதையெல்லாம் அப்புறம் பேசலாம். எனக்கு அப்பாவை பார்க்கணும், அவ்வளவுதான்"
"கூடாது. முடியாது. இந்த வீட்டில நுழையறதுக்கு உனக்கு அருகதை இல்லை. அப்படியே வெளில போ"
"இந்த வீடு உன்னுதா அண்ணா?"
"பார்த்தியாம்மா. வந்த உடனே என்ன கேள்வி கேக்கறான் ?
"எட்டு வருஷமா ஏண்டா வரலை? அதுக்கு பதில் சொல்"
"இந்த வீடு இன்னும் நம் அப்பாதுதானே, இதில் நுழைய எனக்கு உரிமை இருக்கு"
"இவன் அப்பாவைப் பார்க்க வரலைம்மா. கிழவன் மண்டையைப் போட்டுறப் போறார்னு சொத்தில் பங்கு வந்திருக்கான்"
"ஏண்டா கடன்காரா! எப்படி நீ வரப்போகும்? -பெத்த தாயார்க்கு ஒரு லெட்டர் போட்டியா?"
"அதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறது எல்லோருக்கும் தெரியுமே"
"தெரியும் பேப்பர்ல சந்தி சிரிச்சுதே..."
"சொத்துக்குத்தாம்மா வந்திருக்கான்..."
"இதோ பார் ஸ்ரீதர். அனாவசியமா சண்டைக்கு காலைப் பிராண்டாதே! எனக்கு சொத்தும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். அப்பாவைப் பார்க்க அனுமதிச்சாப் போறும். எங்க படுத்திண்டிருக்கார்?"
"அப்படியே சுபாவம் மாறாம இருக்கான்."
'இருந்துட்டுப் போறேன். முட்டாத்தனமாக நடந்துக்காதீங்கோ என்ன சொன்னாலும் ஏசினாலும் நான் அப்பாவைப் பார்த்துட்டுத் தான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறேன். அனாவசியத் துக்கு இந்த இடத்தில் சண்டையோ மூர்க்கத்தனமோ வேண்டாம். ஒரு நண்பன், இல்லை பார்வையாளனா நினைச்சுக் கங்கோ...... . எங்கே அவர்?"
"உன்னை இப்ப அவர் பார்த்தா அடையாளம் கண்டுப்பார்னு நினைக்கிறயா?"
"ஏன்? மயக்கமா?"
"இல்லை . மூஞ்சில காறித் துப்புவார்."
'துப்பமாட்டார். நிச்சயம் என்னை அவருக்கு ஞாபகம் இருக்கும். எட்டு யுகமானாலும் ஞாபகமிருக்கும்!"
"கிழத்துக்கு நேத்திக்கு நடந்தது இன்னிக்கு நினைவில்லை.....ஞாபகம் இருக்குமாம்!"
"சரிம்மா; இவனோட என்ன ரோதனை? கல்லுளி மங்கன் மாதிரி போகமாட்டான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு......கூடப் பிறந்த தோஷத்துக்காக காட்டிட்டு வீட்டை விட்டு விரட்டிடலாம். ஏய் சின்னி , வாடி இங்கே. இது யார் தெரியுமா... சி...த்... தப்...பா... அழகான சித்தப்பா, அழைச்சுண்டு போய் தாத்தா ரூமை காட்டு"
சின்னியின் பின் மௌனமாக நடந்தான். மாடிப்படி ஏறித் திரும்பும்போது அத்தனை கண்களும் அவனைக் குத்தித் துளைப்பதை உணர்ந்தான்
எட்டு வருஷமாக விட்டுப்போன உறவு, ஒரு கடிதமில்லை விசாரிப்பில்லை கல்யாண அழைப்பில்லை எங்கே இருக்கிறான் என்கிற சங்கதி இல்லை. சினிமா என்றோ, டிராமா என்றோ கல்கத்தா என்றோ, காசி என்றோ, பணக்காரன் என்றோ கடனில் முழ்கிவிட்டான் என்றோ, பொண்டாட்டி ஓடிப்போய் கிறிஸ்துவப் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறான் என்றோ கேள்விப்பட்டிருப்பார்கள்......எட்டு வருஷ வெட்டுக்குப் பிறகு வதந்திகளிலிருந்து வடிவெடுத்திருக்கிறான். எப்படி ஒட்டுவார்கள்?
"சித்தப்பாவா நீ" என்றாள் சின்னி.
"ஆமாம்".
மெதுவாக அந்த மாடி அறையை அணுகினார்கள்
"எந்த ஊர்?'
"ஏதோ ஊரு"
"சித்தி வரலியா"
"இல்லை"
'செத்துப் போய்ட்டாளா?"
"இல்லை"
"என்ன வேலை பண்றேள்?"
"அலையறேன்"
"எதுக்கு?"
“ஜெயிலுக்குப் போயிருந்தேன்னு சொன்னாளே, அந்த சித்தப்பாவா, நீ?"
"ஏய் சின்னி! பேசாம ரூமைக் காட்டிட்டு திரும்பி வா..."
சின்னி கதவைத் திறந்து, "உள்ள போங்கோ. தாத்தா தூங்கிண்டிருப்பார்” என்று சொல்லிவிட்டு விலகினாள்,
உள்ளே டெட்டால் வாசனையடித்தது. ஏறக்குறைய இருட்பாக, சைபர் வாட் நியான் ஒளியில் தரையில் ஒரு போர்வைக் குவியல் தெரிந்தது
சுவரில் தடவி விளக்குப்போட்டு அதை அணுகினான். குனிந்து மெல்ல விலக்கினான். அதிர்ந்து போனான்,
'மை காட்! இது அப்பா இல்லை. நான் பார்த்த அப்பா பாதி! சுருங்கிப் போய்விட்டார். கண்கள் இருட்டுப் பொத்துகளாக மூடி, கன்னங்கள் ஒட்டிப்போய், கை நரம்புகளும் மார்பு எலும்புகளும் தெரிய......பிராணன் ?
"அப்பா" பதில் இல்லை.
சற்று நேரம் அவரைப் பார்த்துக் கொண்டு அழுதான். மன வெளிச்சத்தில் சட் சட் என்று அந்த மனிதரின் ஞாபக பிம்பங்கள் மாறின.
"அப்பா, அப்பா..."
படுக்கையருகில் உட்கார்ந்து நெற்றியைத் தொட்டான். சூடு அந்த கையெலும்பை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டது.
"அப்பா..."
சட்டென்று கனவுச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்றவர் போல் சிலிர்த்துக் கண் விழித்தார்.
"யாரு?"
"நான்தாம்பா, பரத் வந்திருக்கேன்"
மெல்லத் தலை நகர்த்தி அவனைப் பார்த்தார்.
'பரத்தா?... பரத்தா?... என் மூணாவது பையனா?"
"ஆமாம்ப்பா ஆமாம்"
"நீதானா!" என்ன கிணற்றுக் குரல் அது! எட்டு வருஷத்துக்கு முந்தைய ஒலி முழக்கம் எங்கே...?
"நான் தாம்பா.."
'சௌக்கியமா இருக்கியா?"
"இருக்கேம்பா!"
"ரொம்ப நாளா காணோம்..."
"வந்துட்டேம்பா!"
"தெரியும். நீ வருவேன்னு தெரியும் சாப்பிட்டியா?'
"இல்லப்பா"
"சாப்ட்டுறு. ராட்சசிகள்ளாம் அப்புறம் இல்லைன்னுடுவா. மூணு ராட்சசி.....நாலு ராட்சசி"
"என்னப்பா உனக்கு உடம்பு..."
"களைப்புப்பா! அலுப்பு... போறும் நிஜமாவே பரத்தா...?' அந்தக் கரம் சிரமப்பட்டு மேல் வந்து அவன் தலை மயிரைக் கலைத்து, "பரத் உனக்குத்தான்... உனக்குத்தான் சரியாவே எதும் செய்யலை..." கிழவரின் கண்கள் கலங்கின
"அதெல்லாம் இல்லப்பா"
"என்னைப் பாரு சீக்கிரம் செத்துப் போய்டுவேனா? சீக்கிரம் போய்ட்டா தேவலாம்..."
"இல்லப்பா, தேவலையாய்டும்"
'உன்னைப்பத்திதான் சதா நினைப்பு"
"எனக்கும்ப்பா"
"கிட்ட வா" கிழவர் மெல்ல, யோசித்து யோசித்து, மிக மெலிந்த குரலில் பேசினார்.
"இந்த ரூமைப் பாரு சுடுகொடு மாதிரி இல்லை என்னை இதில் போட்டு அடைச்சுட்டு எல்லாரும் கீழயே இருக்கா அஞ்சு நிமிஷம் பேச ஆளில்லை. நாக்கு செத்துப் போச்சு. ஆரஞ்சுப்பழம் வாங்கிக் கொடுனு ஒரு வாரமா சொல்லிண்டிருக்கேன். இங்க வேற யாரும் இல்லையே...?
"இல்லைப்பா!"
"பழம் எல்லாம் கீழே வெச்சிண்டிருக்கா. அவாளே சாப்படறா..... உங்கம்மா, மூத்த ராட்சசி, என்னை வந்து பார்த்து மூணு நாளாச்சு, எல்லாரும் காத்திண்டிருக்கா பரத்..."
"அதெல்லாம் இல்லைப்பா, சரியாய்டும்".
"ஆரஞ்சுப்பழம் வாங்கித் தரயா"
'தரேன்ப்பா "
"இத பார் மருந்து.. இதில் விஷம் கலந்திருக்கா, குடிக்கமாட்டேன்"
"அப்படி எல்லாம் செய்யமாட்டாப்பா."
"எல்லாரும் காத்துண்டிருக்கா.. நீ எந்த ஊர்ல இருக்கே?"
"ஏதோ ஊர்ப்பா. ஸ்திரமா எதும் இல்லை ."
வீட்டில் இருக்கயா?
"இல்லை, ரூம்ல..."
எனக்கு இடம் இருக்குமா, என்னை அழைச்சுண்டு போறியா?"
"சரிப்பா"
"இப்ப போகலாமா"
"இல்லை, நாளைக்கு கார்த்தலை..."
"இப்பவே போகவேண்டாமா?'
"தூங்கிட்டு நாளைக்கு கார்த்தலை போகலாம்."
"என்னை இந்த சுடுகாட்டில் இருந்து அழைச்சுண்டு போயிடறியா?"
"சரிப்பா"
அவர் முகத்தில் சாந்தம் தெரிந்தது
"நீ பேசு"
அவர் முன் சாய்ந்து "அப்பா” என்றான் தலையைக் கோதிவிட்டு
*அப்பா நானும் நீயும் கிரிக்கெட் ஆடுவோமே, ஞாபகம் இருக்கா ?"
ஞாபகம் புன்னகையாக மலர்ந்தது
"ரெண்டுபேரும் ஒரே டீம்ல மாட்ச் ஆடியிருக்கோம். நீ பத்தொம்பது அடுச்சுட்டு ரன் அவுட் ஆயிட்டே. எனக்கு ஏற்ப உன்னால ஓட முடியலே. ஸாரிப்பா, அது ராங்கால், அது என் தப்பு...."
"சொல்லு..."
"சின்ன - வயசில அய்யன் வாய்க்கால்ல நீஞ்ச கத்துக் குடுத்தியே. தொபுக்கடீர்னு தள்ளிவிட்டுட்டு மூச்சுத் திணற வெப்பியே; அப்புறம் கொய்யாக்கா அடிச்சு சாப்பிடுவோமே அம்மாவுக்குத் தெரியாம உனக்கு பர்க்லி சிகரெட் வாங்கிண்டு வருவேனே. ரெண்டு பேரும் கவட்டை கட்டி குருவி அடிப்பமே எவ்வளவு தூரம் ட்ரெக்கிங்... போவோம்... பாண தீர்த்தத்தில் பாறைல படுத்துண்டு நட்சத்திரத்துக்கு எல்லாம் புதுசா பேர் வெப்பியே! சுள்ளி பத்த வெச்சு சட்டில சமைப்பமே..."
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகச் சொன்னான்.
தந்தை மகன் இருவருக்கும் இருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பு, சிநேகிதம் கையோடு கை அழுத்திய பலப்பரீட்சை,
நீண்ட நீண்ட நடைப் பயணங்கள், பறவைக் குரல்கள், மண் வெளியில் தியாகராஜர், துரத்தல், ஓட்டம், பிடிப்பு, ரகசியப்பரிவர்த்தனை, நிறுத்தி உட்காரவைத்து மரத்தடியில் அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்...
"பரத்" என்று அவன் கையைப் பிடித்தார். "நானும் நீயும் ஒண்ணு..."
'அப்பா! எல்டொராடோவைப் பத்தி சொல்லுவியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டு தான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்னு காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா"
"நானும்தான் அதையே தேடினேன்" என்றார்
"அப்பா உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப் போச்சு. ரொம்ப நாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே! இன்னிவரைக்கும்...சொன்னதில்லையே!"
"அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் உறவுல பிளவு வந்துடுத்து....... அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து..."
"நீ என்னைப் பார்த்து, நான் உன்னை பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம், என் மனசுல உன்ன பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சு போயி நாம் ரெண்டு பேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சுட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்து போயி, நான் விலகிப் போய், ஊர் ஊரா அலைஞ்சு...உறவு விட்டுப்போயி,கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு போய்......வேண்டாம்பா......
அதையெல்லாம் அழிச்சுடலாம்பா ......சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்....."
அப்பா தலையை ஆட்டினார். "அதுவும் இருக்கட்டும்" என்றார்.
'பரத் கிட்ட வா.."
அவன் வந்தான். "நாளைக்கு கார்த்தால என்னை அழைச்சுண்டு போறியா அந்த இடத்துக்கு-"
"சரிப்பா ."
"எத்தனை மணிக்கு வண்டி?"
"சீக்கிரமே கிளம்பிடலாம்பா.."
"என்னால நடக்க முடியாது..."
"உன்னை அப்படியே தூக்கித் தோள்மேல வெச்சுண்டு போயிடறேம்பா..நீ என்னைத் தூக்கிண்டு போவியே அது மாதிரி....."
"எனக்குத் தேவலை ஆய்டுமா?"
"நிச்சயம் ஆயிடும்பா"
"தேவலையானதும் கண்ணாடி மாத்திக்கொடு. என்ன?"
'சரிப்பா"
"ஒரு சின்ன டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்துடு"
"சரிப்பா"
"ஹெமிங்வேயோட கிலிமஞ்சாரோ படிச்சுக்காட்டு"
"சரிப்பா"
'மார்க்கஸ் அரேலியஸ், திருவாசகம், அப்புறம் பவிஷ்ய புராணம், டாஸ்டாயவ்ஸ்கி, கோஸ்லர், ரஸ்ஸல்....."
'எல்லா,.."
"இதோ பாரு, அந்த தடி ரெண்டு வேஷ்டி, ரெண்டு பனியன், அதான் என்னுது. செருப்பு கூடக் கிடையாது. இப்பவே எடுத்துண்டுடு".
'நான் வாங்கித்தரேம்பா."
"நிறைய நடக்கணும்" அவர் முகத்தில் இப்போது தேஜஸ் தெரிந்தது. உதட்டில் புன்னகையுடன் அவனை மிக அருகி அழைத்து கண் சிமிட்டலுடன், 'பரத் உங்கிட்ட ஒரு ரகசிய சொல்லணும். அவா ஒருத்தருக்கும் தெரியாது."
"என்னப்பா?"
சொன்னார்
ராத்திரி முழுவதும் அவர் அருகிலேயே உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணி சுமாருக்கு அப்பா இறந்து போயிருந்ததை உணர்ந்தான். தூக்கம் போலத்தான் படுத்திருந்தார். உதட்டில் புன்னகை ஸ்திரமாக இருந்தது.
பரத் ஓரத்தில் ஒதுங்கி நிற்க, ஒவ்வொருவராக வந்து ஆர்ப்பாட்டமாக அழுதார்கள். அதன்பின் சுரத்துக் குறைந்து அழுதார்கள். அதன் பின் மௌனமாக...
"வந்தான், முடிச்சுட்டான்! இவனைப் பார்த்த அதிர்ச்சியிலே உயிர் போய்டுத்து !!. எதுக்காக இப்படி திடீர்னு வரணும்?'
"அண்ணா ஒரு விஷயம். தனியா வாயேன்"
"என்ன?"
"போறதுக்கு முன்னால அப்பா எங்கிட்ட சொன்னார். வீட்டையும் நிலத்தையும் என் பேரில் எழுதி வெச்சிருக்கறதா..... காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த அட்ரஸ்க்கு எழுது. எல்லாத்தையும் மாத்தி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேன்..."
"பரத், எங்க போற ?'
திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
=====================================
இந்தச் சிறுகதையை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. நான் அவ்வளவு எமோஷனலான ஆள் இல்லை. சட்ரென்று கலங்குவது, உணர்ச்சி வசப்படுவது.....இதெல்லாம் அதிகம் கிடையாது.
இருந்தும் ஒவ்வொரு முறை இதைப் படிக்கும் போதும் நிறையவே கண் கலங்கியிருக்கிறேன். அதுதான் சுஜாதாவின் எழுத்தின் சக்தி
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com