Short Story: சிறுகதை: ஆத்தாவின் அஸ்தி
--------------------------------------------
சென்ற மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து இரசிப்பதற்காக இன்று பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
சிறுகதை: ஆத்தாவின் அஸ்தி
கங்கையில் கரைப்பதற்காக தான் கொண்டு செல்லும் தன்னுடைய ஆத்தாவின் அஸ்தி செல்லும் வழியில் காணாமல் போய்விடும் என்பதை அறியாமல் அப்பாவியாக கங்கா காவேரி ரயிலில் அமர்ந்திருந்தார் கருப்பையா. இடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.
அவரை வழியனுப்ப வந்திருந்த அவருடைய மூத்த சகோதரி சிகப்பி ஆச்சி, நான்காவது முறையாக சொன்னதையே திருப்பிச் சொன்னார்,” டேய் தம்பி, உனக்கு பயணத்திற்கு வேண்டிய முழு உணவும் நான் கொடுத்த கட்டைப் பையில் இருக்கிறது. மூன்று வேளைகளுக்குரிய புளியோதரை உள்ளது. இரண்டு வேளைகளுக்குரிய சப்பாத்தி இருக்கிறது. இன்று இரவிற்கு இட்லி, கொதிக்க வைத்த தக்காளிச் சட்னி இருக்கிறது. வழியில் நீ எதுவும் வாங்க வேண்டாம். இரண்டு லிட்டர் பாட்டிலில் தண்ணீரும் வைத்திருக்கிறேன்”
“சரி, ஆச்சி.மிக்க நன்றி” என்றும் மட்டும் கருப்பையா பதில் சொன்னார்.
சிகப்பி ஆச்சி தம்பி கருப்பையாவை விட பத்து வயது மூத்தவர். வங்கியில் மேலாளராக இருந்து, தற்போது பணி ஓய்வில் இருப்பவர். அவருடைய கணவருக்கு உடல் நலமின்மை. அதனால் அவர் தம்பியுடன் காசிக்குச் செல்லவில்லை. இல்லையென்றால் வந்திருப்பார்.
கருப்பையாவின் தாயார் இறந்து போய் இருபது நாள்தான் ஆகிறது. “அப்பச்சி நான் காசிக்குப் போனதில்லை. வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் நான் இறந்து போனால், என் அஸ்தியை நீயே காசிக்குக் கொண்டுபோய் கங்கையில் கரைத்துவிட்டு வரவேண்டும்” என்று தன் தாயார் அடிக்கடி சொல்வதை நினைவில் வைத்துக் கொண்டு, அவரும் அஸ்தியுடன் உடனே காசிக்குப் புறப்பட்டு விட்டார்.
நான்கு சகோதரிகளுக்குப் பிறகு, ஐந்தாவதாகப் பிறந்தவர் கருப்பையா. தவமிருந்து உன்னைப் பெற்றேன் என்று அவரிடம் சொல்வார் அவருடைய தாயார். ராங்கியம் கருப்பரின் தீவிர பக்தை அவர். அதனால்தான் தன் மகனுக்குக் கருப்பையா என்ற பெயரைச் சூட்டினார்.
கருப்பையாவிற்கு அவருடைய அப்பச்சி காலத்தில் இருந்தே ஈரோட்டில் வாசம். படித்ததெல்லாம் ஈரோட்டில்தான். படித்து முடித்தவுடன் அப்பச்சியுடன் சேர்ந்து தங்களுடைய வீட்டுத் தொழிலான டெக்ஸ்டைல்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் சாயங்கள் வியாபாரத்தையே செய்து வருகிறார்.
கருப்பரின் அருளால் வியாபாரமும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஊருக்குச் செல்லும் காலங்களில் ஆச்சி, அதாவது அவருடைய மனைவி கடையைப் பார்த்துக் கொள்வார். ஈஸ்வரன் கோயில் தெருவில் சொந்தக் கட்டடத்தில் கடை மற்றும் கிட்டங்கி எல்லாம் உள்ளது.
அந்தக் காலத்தில் வாங்கிப் போட்ட இடங்களெல்லாம் பன்மடங்கு விலை பெருகி, அவ்வப்போது பணம் வந்து கொண்டிருந்தது. பிரப் ரோட்டில் இருந்த இருபது சென்ட் இடத்துடன் கூடிய பழைய வீடு ஒன்றை, பெரிய ஜவுளி நிறுவனம் ஒன்று வாங்கிக் கொண்டு நான்கு கோடி ரூபாய்கள் பணம் கொடுத்தார்கள். கரைச்சல் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதற்காக தன்னுடைய நான்கு சகோதரிகளுக்கும் ஆளுக்கு ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்து, மீதப் பணத்தை இவர் வைத்துக் கொண்டார்.
சிதம்பரம் செட்டியார் காலனியில் பெரிய வீடு உள்ளது. அந்தப் பகுதியிலேயே இன்னும் இரண்டு காலி மனைகள் உள்ளன. நல்ல விலை கிடைத்தால் விற்கலாம் என்று உள்ளார். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைவிட இந்த மாதிரி இடம் விற்று வரும் பணம் அதிகமாக இருந்தது. அப்பச்சி இல்லை. எல்லாம் ஆத்தாவின் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வார்.
ஆத்தா இறந்த அன்று குரல் கொடுத்து ஓ’வென்று அழுது தீர்த்து விட்டார். சகோதரிகள்தான் சமாதானப் படுத்தினார்கள்.”ஆத்தாவிற்கு 82 வயதாகிறது. இந்நாள் வரை கிடக்காமல், படுக்காமல் ஆரோக்கியமாக உன்னோடு இருந்ததற்காக சந்தோஷப்படு. காலம் முடிந்தது. அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அவ்வளவுதான். முதலில் அழுவதை, கலங்குவதை நிறுத்து” என்று கூறிவிட்டார்கள்.
எல்லோரும் வாரணாசிக்கு விமானத்தில் போய் வா என்ற போது மறுத்துவிட்டார். ஆறு நாட்களில் திரும்பி விடலாம் நான் ரயிலிலேயே சென்று வருகிறேன் என்று முன் பதிவு எல்லாம் செய்துவிட்டார். முதல் வகுப்பு டிக்கெட் கூட வாங்கவில்லை இரண்டாம் வகுப்பு டிக்கெட்தான். கேட்டால் சிக்கனம் என்பார். அனாவசியமான ஆடம்பரம் கூடாது என்பார். அந்தப் பணத்தை தர்ம காரியங்களுக்குக் கொடுத்து உதவலாம் என்பார். ஆண்டிற்கு இருபது லட்ச ரூபாய்களுக்கு மேல் கோயில் திருப்பணிகளுக்கும், கல்வி நிதிகளுக்கும் கொடுத்து வருகிறார்.
ரயில் புறப்பட்டது. கையை அசைத்து தன் ஆச்சியிடம் விடை பெற்றுக் கொண்டார்.
**********************************
இரண்டாம் நாள் காலை. ரயில் அலகாபாத்தைக் கடந்து வாரணாசியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. காலை மணி எட்டு. கழிப்பறைக்குச் சென்று கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு வந்து, அமர்ந்து காலைச் சிற்றுண்டியாக மூன்று சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்தார். வண்டியில் சாயா விற்றுக்கொண்டிருந்த கேன்டீன் ஊழியரிடம் டீ’ யை வாங்கிக் குடித்தார்.
கட்டைப் பையை அடிப்பகுதியில் வைக்கும்போது தான் கவனித்தார். அஸ்தி டப்பா வைத்திருந்த பையைக் காணவில்லை. தூக்கி வாரிபோட்டது. பரக்கப் பரக்கத் தேடினார். கீழ் பகுதி முழுவதற்கும் தேடினார். பை இல்லை. அது போத்தீஸ் ஜவுளிக்கடையில் கிடைத்த அழகான பை. மேல் பகுதியில் ஜி’ப்புடன் அம்சமாக இருக்கும். அதில்தான் அஸ்தி டப்பாவும் இருந்தது.
தன்னுடன் பயணித்து, அலகாபாத்தில் இறங்கிய குடும்பத்தார்கள், நிறைய குழந்தைகளுகளுடன், ஏராளமான லக்கேஜ்களும் வைத்திருந்தார்கள். அவர்கள்தான் தங்களுடைய சாமான்களுடன் அந்தப் பையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு இறங்கியிருக்க வேண்டும்.
இப்போது என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. மனம் நொந்து போய்விட்டது. துணிமணிகள், பணம் எல்லாம் இருந்த சூட் கேஸ் பெட்டி மட்டும் பத்திரமாக இருந்தது. அதில் அஸ்தியை வைத்துக் கொண்டு வந்திருக்கலாம். அதில் வைக்கக்கூடாது என்பதாலும், அஸ்தி டப்பா சற்றுப் பெரியதாக இருந்ததாலும், தனிப் பையில் வைத்திருந்தார். இப்போது பையைக் காணவில்லை.
எடுத்தவர்கள், நல்ல மனிதர்களாக இருந்தால், கவனிக்கும்போது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அலகாபத்தில், கங்கையில் கரைத்தாலும் கரைப்பார்கள். இல்லையென்றால், யாருடைய அஸ்தியோ என்னமோ, அந்த வேலை நமக்கெதற்கு என்று குப்பைத் தொட்டியில் போட்டாலும் போட்டு விடலாம்.
நினைக்க நினைக்க பலவிதமான குழப்பங்கள் ஏற்பட்டது. வேண்டாத தெய்வம் இல்லை. ராங்கியம் கருப்பரையும் வேண்டிக் கொண்டார். கருப்பரே இந்தப் பிரச்சினை தீர நீங்கள் உதவ வேண்டும் என்று பலமாக வேண்டிக்கொண்டார். தாயாரின் ஆன்மாவையும் வேண்டிக் கொண்டார்.
கருப்பர் உதவினாரா? உதவாமல் இருப்பாரா?
எப்படி உதவினார் என்பதைத் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்!
*****************************
ரயில் ஒன்பதரை மணிக்கு வாராணாசிக்கு வந்து சேர்ந்தது. ரயிலை விட்டு இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியே வந்தவர், ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு, காசி நாட்டுக் கோட்டை நகர விடுதிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே தனி அறை ஒன்றைக் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தவர், உடமைகளை அறையின் உள்ளே வைத்துவிட்டுக் கட்டிலில் சற்று நேரம் கண் அயரலாம் என்று படுத்தவர், மன உளைச்சளிலும், அசதியிலும் நன்றாக உறங்கி விட்டார்.
கதவை யாரோ, பட படவென்று தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தவர், மணியைப் பார்த்தார் - மணி மதியம் மூன்று, அடடா, இத்தனை நேரமா உறங்கியிருக்கிறோம் என்று நினைத்தவாறே, கதவைத் திறந்து பார்த்தார். விடுதி ஊழியர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
“அண்ணே, உங்களைத் தேடி ஒருவர் வந்திருக்கிறார். விடுதி அலுவலகத்தில் உட்கார வைத்திருக்கிறேன். வாருங்கள்” என்றார்
யாரடா, நம்மைத் தேடி வந்துள்ளது என்று நினைத்தவாறே, சட்டை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, கதைவைப் பூட்டிக் கொண்டு, அந்த ஊழியருடன் நடந்தார்.
அங்கே சென்றால், ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ரயிலில் தன்னுடன் அலகாபாத்வரை பயணித்த வயதான பெரியவர், அங்கே அமர்ந்திருந்தார்.
அவர் ”சுவாமி, மன்னிக்க வேண்டும். எங்கள் பேரக் குழந்தைகள், உங்கள் பையையும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டன. வீட்டிற்குச் சென்றபிறகுதான் கவனத்திற்கு வந்தது. உள்ளே அஸ்தி இருப்பது தெரிந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை உங்களிடம் கொடுத்து விட்டுப் போவதற்காக அடுத்த ரயிலேயே புறப்பட்டு வந்தேன்” என்றார்.
கருப்பையாவிற்கு இன்ப அதிர்ச்சி, அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவர் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டவர், அஸ்திப் பையைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கு, விடுதியில் சொல்லி டீ வாங்கிக் கொடுத்தவர், தன்னுடைய அறைக்கு அவரை அழைத்துச் சென்று, பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் வாங்க மறுத்து விட்டார்.
”இந்தப் பையைக் காணவில்லை என்பது தெரிந்தவுடன், நீங்கள் எவ்வளவு துக்கம் அடைந்திருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. அதனால்தான் உடனே ஓடி வந்தேன். ஆகவே பணம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்றார்.
”என் பெயர், நான் தங்கவிருக்கும் இடம் எல்லாவற்ரையும் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்று இவர் அப்பாவித்தனமாகக் கேட்டபோது, அவர் சொன்னார்.
பைக்குள் ஒரு சுயமுகவரி இட்ட கடிதமும், கவரும் இருந்தது. அதில் உங்கள் சகோதரியின் சென்னை முகவரியும், தொலைபேசி எண்ணும் இருந்தது. விபூதி பிரசாதம் அனுப்பச் சொல்லி அவர்கள் எழுதிய கடிதமும் இருந்தது. அத்துடன் பின் பக்கம் அனுப்புனர் என்னும் இடத்தில், கருப்பையா, கேம்ப்: வாரணாசி என்று எழுதியிருந்தது. உங்கள் சகோதரியுடன் போனில் தொடர்பு கொண்டு இந்த விடுதியின் முகவரியை வாங்கினேன்” என்றார்.
இப்போதுதான் கருப்பையாவிற்கு ஞாபகம் வந்தது. ஆச்சி அவர்கள் சென்னை ரயில் நிலையத்தில் கொடுத்த கவரும், அதைத்தான் அஸ்தி
இருந்த பையில் வைத்ததும் பளிச் சென்று நினைவிற்கு வந்தது.
எப்படியோ ராங்கியம் கருப்பர், தன் பக்தையின் அஸ்திக்குக் கேடு வராமல் காபாற்றிவிட்டார். அத்துடன் கருப்பையாவின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்து உதவி செய்துவிட்டார்.
வந்த பெரியவரை வழியனுப்பி வைத்துவிட்டு, ஒரு எஸ்.டி.டி பூத்தில் இருந்து போன்போட்டுத் தன் ஆச்சியுடன் பேசினார். ஆச்சியின் கடிதம் மூலம் கிடைத்த அதிசய நிகழ்வையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
****************************
அடுத்தநாள் காலை சூரிய உதயத்தின்போது, கங்கைக் கரையில் அமர்ந்து, விஸ்வநாத சாஸ்திரி மந்திரங்களைச் சொல்லி, கருப்பையாவின் தாயாருக்குக் திதியைச் செய்து வைக்க, சிரத்தையோடு கருப்பையாவும் திதி கொடுத்தார். பிறகு சாஸ்திரி ஏற்பாடு செய்து கொடுத்த படகில் கங்கைப் பிரவாகத்தின் நடுப்பகுதிவரை சென்று, தாயாரின் அஸ்தியைக் கங்கையில் கரைத்தார்.
கண்கள் பனித்துவிட்டன. காணாமல்போன அஸ்தி திரும்பக்கிடைத்ததற்கு மனமார காசி விஸ்வநாதரை வணங்கியதோடு, ராங்கியம் கருப்பரையும் பிரார்த்தனை செய்து வணங்கினார். இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
உண்மைதான்! இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும்!
***************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
அய்யா,
ReplyDeleteசிகப்பி ஆச்சியின் உணவு வகைகள், கருப்பையாவின் எளிமை, அடுத்தவரின் உணர்வுகளை மதிக்கும் தன்மை கொண்ட வயதான பெரியவர்,..... இவை அனைத்தையும் எளிய நடையில் எடுத்துரைத்துள்ளீர்கள் அற்புதம்!
ஹரி ஓம் சார். கற்பனையாக இருந்தாலும் மனதை தொடும் நவரசங்களும் உள்ளன, இறையருள் காப்பாற்றும் அழுத்தமான பதிவு. நன்றிகள்.சேலம் ஆண்டாள் ராஜசேகரன்
ReplyDeleteDear sir,
ReplyDeletethe story is very nice and i was expecting that you will write something about Na.Muthukumar and you have written so thank you very much any how i like his songs.
வணக்கம் குருவே!
ReplyDeleteமிக மிக நல்ல கதை!நமது உள்ளப் பிரார்த்தனைகள் மனத்தின் அடித்தளத்தினினறும் புறப்படுமேயானால் அதற்கு எப்படிப்பட்ட சக்தி இருக்கும் என்பது கதை படிக்கும
போது உணர முடிகிறது!
அருமையான சிறுகதை பகிர்ந்த தங்களுக்குப் நன்றி!
நல்ல கதை....
ReplyDeleteஅருமை...
வணக்கம் ஐயா,உங்கள் சிறுகதைகள் அனைத்துமே உண்மை சம்பவங்கள் போலவே இருக்கின்றன. கதை சொல்லும் உத்திதான் கண்முன்னே கதாபாத்திரங்களை நிறுத்துகின்றன என நினைக்கிறேன்.உண்மைதான் இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும்.நன்றி.
ReplyDeleteஅருமையான கதை.
ReplyDeleteராங்கியம் என்றாலே எனக்கு தஞ்சாவூர் லக்ஷ்மி சீவல் தெய்வத்திரு ஏ. சுப்ரமணியம் செட்டியாரும், கமல்ம் ஆச்சியும்தான் நினைவுக்கு வருவார்கள். அவர்களைப் பற்றி வகுபறையில் எழுதியுள்ளென்.
ராங்கியம் கருப்பர் துணை.
ReplyDeleteஅருமை ஐயா.தெய்வ நம்பிக்கை கை கூட்டும் என்பது நிதர்சனமான உண்மை.
நன்றி ஐயா.
/////Blogger Sivakumar Selvaraj said...
ReplyDeleteஅய்யா,
சிகப்பி ஆச்சியின் உணவு வகைகள், கருப்பையாவின் எளிமை, அடுத்தவரின் உணர்வுகளை மதிக்கும் தன்மை கொண்ட வயதான பெரியவர்,..... இவை அனைத்தையும் எளிய நடையில் எடுத்துரைத்துள்ளீர்கள் அற்புதம்!/////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சிவகுமார்!
/////Blogger Unknown said...
ReplyDeleteஹரி ஓம் சார். கற்பனையாக இருந்தாலும் மனதை தொடும் நவரசங்களும் உள்ளன, இறையருள் காப்பாற்றும் அழுத்தமான பதிவு. நன்றிகள்.சேலம் ஆண்டாள் ராஜசேகரன்/////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!
/////Blogger seenivasan said...
ReplyDeleteDear sir,
the story is very nice and i was expecting that you will write something about Na.Muthukumar and you have written so thank you very much any how i like his songs./////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
மிக மிக நல்ல கதை!நமது உள்ளப் பிரார்த்தனைகள் மனத்தின் அடித்தளத்தினினறும் புறப்படுமேயானால் அதற்கு எப்படிப்பட்ட சக்தி இருக்கும் என்பது கதை படிக்கும
போது உணர முடிகிறது!
அருமையான சிறுகதை பகிர்ந்த தங்களுக்கு நன்றி!/////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!
/////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteநல்ல கதை....
அருமை...////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,உங்கள் சிறுகதைகள் அனைத்துமே உண்மைச் சம்பவங்கள் போலவே இருக்கின்றன. கதை சொல்லும் உத்திதான் கண்முன்னே கதாபாத்திரங்களை நிறுத்துகின்றன என நினைக்கிறேன்.உண்மைதான் இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும்.நன்றி./////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதித்தன்!!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமையான கதை.
ராங்கியம் என்றாலே எனக்கு தஞ்சாவூர் லக்ஷ்மி சீவல் தெய்வத்திரு ஏ. சுப்ரமணியம் செட்டியாரும், கமலம் ஆச்சியும்தான் நினைவுக்கு வருவார்கள். அவர்களைப் பற்றி வகுபறையில் எழுதியுள்ளேன்./////
நல்லது. உங்களின் பாராட்டிற்கும், சுப்பிரமணியன் செட்டியாரைப் பற்றிய செய்திக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!!
/////Blogger mohan said...
ReplyDeleteராங்கியம் கருப்பர் துணை.
அருமை ஐயா.தெய்வ நம்பிக்கை கை கூட்டும் என்பது நிதர்சனமான உண்மை.
நன்றி ஐயா./////
நல்லது. உங்களின் பாராட்டிற்கும் மேலான பின்னூட்டத்திற்கும் நன்றி மோகன்!!
Superb;- nalla enna, Deiva nambikkai, naam sella vendiya ilakkiya adaya seiyum
ReplyDelete//////Blogger Malathi Bhaskaran said...
ReplyDeleteSuperb;- nalla enna, Deiva nambikkai, naam sella vendiya ilakkiya adaya seiyum/////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!