சீடனைத் தேடிவந்த சுவாமிகள்!
பக்தி மலர்
---------------------------------
இன்றைய பக்தி மலரை நம் வகுப்பறை மூத்த மாணவரின் கட்டுரை ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------
என் தந்தையாரைப் பற்றி நான் அதிகம் எதுவும் இதுவரை எழுதவில்லை. அதற்கான காரணம் பல இருந்தாலும், மனதில் ஏற்பட்ட தயக்கம்தான் முதல் காரணம்.
மஹாகவி பாரதியாரைப்பற்றி அவருடைய மனைவியார் எழுதும்போது, "வானத்தில் இருந்து ஏதோ ஒன்று இறங்கி வந்து என்னுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, தன் பணி முடிந்தவுடன் திரும்பித் தான் வந்த இடத்திற்கே
போய்விட்டது" என்பது போல எழுதியுள்ளார்.
என் தந்தையாரைப்பற்றியும் எனக்கும் அந்த விதமான பிரமிப்பு உள்ளதால், ஏதாவது எழுதி அவருடைய பெருமைக்கு பங்கம் வந்து விடக் கூடாதே என்ற தயக்கம்தான் காரணம்.
இப்போது அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் பார்ப்போம்.
அவர் ஒரு சுதந்திரப்போராட்ட வீரர் என்பதை முன்னர் ஒரு பதிவிலேயே குறிப்பிட்டு இருந்தேன்.சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர் அவர் அரசியலில் இருந்து முற்றிலும் விலகி காந்திய கிராம நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார்.
அந்த சமயம் அவர் நடு வயதை அடைந்து விட்டதால் ஆன்மீக நாட்டமும் அதிகரித்துவிட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மிஷன் சந்நியாசிகளில் 800 பேருக்கு மேல் அவர் சந்தித்து இருக்கிறார்.மேலும் பல சாது சந்நியாசிகள்
பரிச்சயமும் ஏற்பட்டது.
அப்பாவுக்கு ஏற்பட்ட தொடர்பில் திருக்கோயிலூர் ஞானாநந்த சுவாமிகள் மிகமிக முக்கியமானவர்.ஒரு காலகட்டத்தில் அந்த சுவாமிகளின் நம்பிக்கைக்கு உரிய ஒரு சீடராக அப்பா விளங்கினார்.
சுவாமிகளுடன் அப்பாவுக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.
ஆட்டயாம்பட்டி என்று சேலத்திற்கு அருகில் ஓர் ஊர்.அங்கே திரு கந்தசாமி முதலியார் என்று ஒரு நண்பர் அப்பாவுக்கு உண்டு. அவர் அடிக்கடி அப்பாவை சேலத்தில் வைத்துச் சந்திப்பார். சந்திக்கும் போதெலாம் தங்கள் ஊரில் உள்ள மடத்தைப் பற்றியும், அதற்கு சித்தலிங்க மடத்தில் இருந்து சுவாமிகள் ஒருவர் வந்து செல்வது பற்றியும் கூறிக் கொண்டே இருப்பார்.அந்த சுவாமிகள் நீண்ட காலம் ஆட்டையாம்பட்டியில் இருந்ததாகவும், பின்னர் தென்னாற்காடு மாவட்டம் சித்தலிங்க மடத்திற்குச் சென்று தங்கிவிட்டதாகவும் கூறி வருவார்.
"நேற்று கூட சுவாமிகள் இங்கே வந்திருந்தாரே!" என்று சுவாமிகள் வந்து விட்டுப் போன பின்னர் கந்தசாமி முதலியார் வந்து சொல்வார்.
அப்பாவுக்கு சுவாமிகளைத் தரிசிக்க முடியவில்லயே என்று ஆதங்கமாக இருக்கும்.தரிசிக்க வேண்டும் என்ற ஆவலும் மேம்படும்.
"இதோ பாரும் முதலியார் !சும்மா வந்து இது போல சொல்வதில் ஒன்றும் பயனில்லை.சுவாமிகள் வந்தவுடன் எனக்குத் தகவல் சொல்ல வழியைப் பாரும்.இல்லாவிட்டால் அந்த சுவாமிகளைப் பற்றி என்னிடம் ஒன்றும் இனி
பேசவேண்டாம்."
"கோவப்படாதீர்கள் கிருஷ்ணன்! சுவாமிகளைத் தாங்கள் தரிசிக்க கூடியவிரைவில் ஏற்பாடுசெய்கிறேன்."
முதலியார் தான் சொன்ன சொல்லை அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுவார் என்று அப்பா எதிர்பார்க்கவேவில்லை.
ஒரு வாரம் சென்று அப்பா வேலை பார்க்கும் கதர்கடை வாயிலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது.அதில் முன்புறமிருந்து முதலியார் 'தொப்'பென்று குதிக்கிறார்.பின்புறமிருந்து காவி உடை தரித்த சுவாமிகள் ஒருவர் தானும் 'தொப்'பென்று குதிக்கிறார். இருவருமாக கதர் கடைக்குள் சடாரென மின்னலைப்போல பிரவேசிக்கிறார்கள்.
"சாமி! சாமி! இதான் சாமி!" என்று முதலியார் படபடக்கிறார்.
நிமிர்ந்து பார்த்த அப்பா அப்படியே பிரமித்து விட்டாரம். சுவாமிகளின் அருள் பார்வையால் காந்தம் ஊசியை இழுப்பது போல சுவாமிகளின்பால் அப்பா ஈர்க்கப்பட்டாராம்.என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து
விட்டாரம் அப்பா.
பிரமிப்பில் இருந்த அப்பாவை நோக்கி சுவாமிகள்,"பக்தகோடியைக் காண சுவாமிக்கு நீண்ட நாளாக ஆவல். இன்றுதான் திருவருள் கூட்டிவைத்தது" என்றாராம்.
எப்படி இருக்கிறது பாருங்கள்! அப்பாதான் சுவாமிகளை தரிசிக்க ஆவலாக இருந்தார். ஆனால் சுவாமிகள்
சொல்கிறார் தனக்கு 'ஆவல்' என்று!இப்படிப்பட்ட ஆவல்களை சுவாமிகள் வைத்துக்கொள்ளலாம் போல!
சுவாமிகளின் கருணையைக் கண்டு அப்பா மெழுகாக உருகிவிட்டார். அங்கேயே விழுந்து சுவாமிகளை நமஸ்கரித்தார் அப்பா.
"சுவாமி விருத்தாசலம் ரயிலில் செல்கிறார். ரயிலுக்கு நேரமாகிவிட்டதால் உடனே செல்கிறோம்" என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் முதலியாரும் சுவாமிகளும் படியிறங்கிக் குதிரைவண்டியில் ஏறிப் பறந்து விட்டார்கள்.
திகைப்பில் இருந்த அப்பா சுய நினைவுக்கு வந்து இது என்ன கனவா அல்லது நினைவா என்று தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு, 'சட்'டென முடிவெடுத்துத் தானும் ரயில் நிலையத்திற்கு ஓடியிருக்கிறார். போகும்போது
பழங்களை வாங்கிச்சென்று இருக்கிறார்.
விருத்தாசலம் பாசஞ்சர் வண்டியில் ஏறி அமர்ந்து இருந்த சுவாமிகளிடம் பழங்களைக் கொடுத்து மீண்டும் ஆசி பெற்று இருக்கிறார்.
"நலமாக இருங்கள். அடிக்கடி சுவாமியை வந்து பார்க்கவும்" என்று கூறியுள்ளார் சுவாமிகள்.
அதன் பின்னர் சுவாமிகளுடன் அப்பாவின் தொடர்பு நீடித்ததாக இருந்தது.
திருக்கோயிலூரில் இருந்து தினமும் யாராவது அப்பாவைச் சந்திக்க சேலம் வருவார்கள். எங்கள் இல்லத்தில் தங்குவார்கள்.இல்லத்தில் எப்போதும் சுவாமிகளைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.
இதுதான் தடுதாட்கொள்ளுதல் என்பதா?
குரு தக்க தருணத்தில் சீடனின் பாக்குவமான நிலை அறிந்து தானாகவே வந்து சீடனின் பொறுப்பை ஏற்பார் என்பது அப்பாவின் வாழ்வில் நிஜமாயிற்று.
சுவாமிகளின் அருட்கடாட்சம் கிடைத்த பின்னர் எஙங்கள் இல்லம் பல முன்னேற்றங்களைக் கண்டது.
சமாதியான சுவாமிகளைப் பிரியமனமில்லா பக்தர்கள் அவர் பூத உடலை வைத்துக்கொண்டு 3 நாட்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று காத்து இருந்தனர்.
அப்போதைய ஐ ஜி பொன் பரமகுருவும் அப்பாவும்தான் சுவாமிகள் இனி திரும்பமாட்டார், அடக்கம் செய்வதே சரி என்ற முடிவினைத் துணிந்து பக்தர்களிடம் சொல்லி ஒப்புதல் பெற்றனர்.
தன் இறுதி நாட்கள் வரை சுவாமிகளுடன் ஆன தன் அனுபவத்தைப் பார்ப்பவர்களிடம் எல்லாம் அப்பா சொல்லிவந்தார்.
குருவருள் பெற்று அனைவரும் உய்வோம்.
வாழ்க சத்குரு ஞானாநதர் புகழ்!
நன்றி, வணக்கத்துடன்,
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி
ஞானானந்தா சுவாமிகளுடன் எனது பெற்றோர்கள்
----------------------------------------------------------------------------------------------------வாழ்க வளமுடன்!
மனமெல்லாம் மணம் பரப்பும்
ReplyDeleteமலரும் நினைவுகள் அருமை.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
ReplyDeleteதெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
என்னும் திருமந்திரப் பாடலை சமர்பித்து மகிழ்கிறேன் ஐயா.
நன்றி கிருஷ்ணன் ஐயா..
தங்களுடைய இலண்டன் பயணம் அனைத்து வகையிலும் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல சிவபரம்பொருளை சிந்தித்து வாழ்த்துகிறோம்..
என்றுமே குருதான் ஒரு நல்ல சீடனை தேடுகிறார். பூ மலரும்போது மகரந்த சேர்க்கைக்கு தேனீகள் வருவதுபோல..
ReplyDeleteஇந்த நிகழ்வு அதை உறுதிப் படுத்துகிறது.
பகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
அன்புடன் வணக்கம் திரு .
ReplyDeleteசுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஞான தீட்சை !!!சுவாமி தடுத்து ஆட்கொண்டது நல்லூரில் அது போல தங்களின் தந்தையார அவர்கள் இருக்கும் இடம் தேடி வந்து அருள் கொடுத்து இருக்கிறார்கள் எல்லோருக்கும் வாயபதில்லை...