வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏனப்பா வம்பு செய்கிறாய்?
பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?
ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Postion என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.
அதாவது வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் அல்லது வெளியேயும் இல்லாமல், நிலைப்படி அருகே உட்கார்ந்திருக்கும் நிலைமை.
திருக்கணிதம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணிக்கும்போது, இந்த நிலைப்படி கிரகங்கள் படுத்தி எடுக்கும்.
ஒரு அட்டவணையில் (Chart) சிம்மத்தில் இருக்கும் கிரகம் அடுத்த அட்டவணையில் (Chart) கன்னியில் இருப்பதாகக் காட்டும். ஜாதகன் குழம்பிப்போவான்.
எதை எடுத்துக்கொள்வது?
நம் முனிசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) எழுதி வைத்துவிட்டுப்போனபடி வாக்கிய பஞ்சாங்கக் கணிப்புக்களையே எடுத்துக்கொள்வது நல்லது.
பாவசந்திப்பில் இருக்கும் கிரகம் எவ்வாறு பலன் கொடுக்கும்?
ஒரு பாவத்தின் மத்தியில் இருக்கும் கிரகம அந்த பாவத்திற்கு உரிய முழுப்பலனையும் கொடுக்கும். அதாவது உதாரணமாக ஒன்பதாம் வீட்டின் மத்தியில் இருக்கும் கிரகம் தன் தசாபுத்தியில் தனக்குரிய பலனை முழுமையாகக் கொடுக்கும். (Both by placement and by ownership)
உதாரணமாக ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் (திரிகோண வீடு) அமர்ந்திருந்தால், ஐந்தாம் வீட்டிற்கான பலனையும், ஒன்பதாம் வீட்டிற்கான பலனையும் ஒருசேரத் தன்னுடைய தசாபுத்திகளில் தருவார். அதேவீட்டில் அவர் வாசற்படியில் அமர்ந்திருந்தால் பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். மத்தியப் பகுதியில் இருந்து வாசற்படி நோக்கி ந்கர ந்கரவே அதற்குத் தகுந்தாற்போல பலன்கள் குறைந்து கொண்டே வரும்
ஆசாமி வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் பலன் சொன்னால, பலன்கள் தவறாகிப் போகும்.
ஏழாம் வீட்டில் சுபக்கிரகம் இருப்பதைப் பார்த்துவிட்டு, உனக்கு நல்லமனைவி, நீ விரும்பும்படி அழகான மனைவி கிடைப்பாள் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, நம்ம நாயகன் ஊ...லல்லல்லா என்று கனவுலகில் பாடிக்கொண்டிருப்பான். ஆனால் அதே சுபக்கிரகம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்தால், அவன் பாட்டு திருமணத்தோடு முடிவிற்கு வந்து விடும். தொடராது! அதாவது ஜோதிடர் சொன்னது தவறான கணிப்பாகிவிடும்!
அர்த்தமாயிந்தா சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com