Devotional அருள் தரும் சிறுவாபுரி முருகன்!
19-10-2021
இன்று செவ்வாய்க்கிழமை. முருகப் பெருமானுக்கு உகந்த நாள்.
வாருங்கள் இன்று முருகப்பெருமான் உறையும் ஒரு தலத்தைப் பார்ப்போம்
சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன்.
ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.
சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.
சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.
பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின் உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.
ஒருமுறை சிறுவாபுரி முருகணை தரிசித்து வாருங்கள். வளமோடு வாழலாம்
அன்புடன்
வாத்தியார்
=================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com