மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.9.20

அப்பளக் கதைகள்!!!!


அப்பளக் கதைகள்!!!!

தேவன் எழுதிய ஒரு புத்தகமான அப்பளக் கச்சேரி யை சமீபத்தில் படித்தேன். அப்பளம் இடும் மாமிகளும் பாட்டிகளும் ஒரே இடத்தில் கூடி ஒன்றாக அப்பளம் இடும் பொழுது அவர்கள் கை மாவு இடித்து , அப்பளம் இட்டாலும் வாய் பல விஷயங்களைப் பேச காதுகள் அவற்றை உள்வாங்கும் செயலைத் தவறாமல் செய்கின்றன. அந்த நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக தேவன் வருணித்து இருப்பார். 

அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சாவி தனது வாஷிங்டனில் திருமணம் என்ற கதையில் அதே பாட்டிகளை விமானத்தில் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று அவர்கள் அப்பளம் இட்ட கதையை ஒரு ட்வெண்டி ட்வெண்டி மாட்ச் மாதிரி ஸ்கோர் போர்டோடு சொல்லி சிரிக்க வைத்துள்ளார்.

ஆனால் இந்த பதிவு அப்பளம் பற்றிய என் சில நினைவுகள். அப்பளம் என்றவுடன் ஞாபகம் வருவது அது பற்றிய ஒரு ஜோக். ஆனந்த விகடனில் அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்தது.

பாட்டி : டீ.ருக்கு . அப்பள மாவ வெறும போக வர சாப்பிடாதேடி. காது செவிடாகி விடும்.
பேத்தி : சரி.பாட்டி. இனிமே ஸ்கூலுக்கு அழாம போறேன்.

இந்த ஜோக்கிற்கு கோபுலு வரைந்திருந்த படம் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. நீட்டிய கால்களுடன் அப்பளமிடும் பாட்டி. கட்டம் போட்ட பாவாடைச் சட்டையுடன் இரட்டை சடையுடன் , மை தீட்டிய விழிகளில் குறும்பு வழிய அப்பள மாவுப் பாத்திரத்தில் கைவிடும் பேத்தி
இந்த கூத்தினை ரசிக்கும் ஈசிச் சேர் தாத்தா. இந்த படத்தின் கீழ் மேலே சொன்ன ஜோக். எப்படி மறக்கும்.?

அப்பளம் என்றவுடன் அடுத்து ஞாபகம் வருவது அசோகமித்திரனின் கதை ஒன்று. மிகவும் வறுமையில் பீடிக்கப்பட்ட குடும்பம். கணவன் மிகுந்த கஷ்டப்பட்டு சம்பாதித்த சில்லறை காசில் கொஞ்சம் போல அரிசி வாங்கி சோறு சமைத்து பருப்பு இல்லாததால் மிளகு ரசத்துடன் பறிமாற கணவன் மெதுவாக சுட்ட அப்பளம் இருந்தால் நன்றாக இருக்குமே என்கிறான். இருக்கும்தான்.ஏற்கனவே பக்கத்து வீட்டில் இதுவரை நான்கு அப்பளங்கள் கடன் வாங்கிட்டேன். இனிமே போய் கேட்டா தரமாட்டா என்கின்றாள். சரி . வீடு. இந்த மாசம் பணம் கிடைச்சதும் அப்பளம் ஒரு கட்டு வாங்கி அவர்கள் கடனை தீர்த்து விடலாம் என்கின்றான் கணவன். இதைப் படித்தது முதல் அப்பளத்தைப் பார்த்தாலே அந்த கதை ஞாபகம் வரும். அசோகமித்திரனின் கடைசி வரிதான் கிளாஸ். அவர்களுடய கடனிலேயே அடைக்க கூடிய வாய்ப்பு இந்த கடனுக்கு மட்டும்தான். அவனுடய வருமனம் அப்படி என்று முடிப்பர்.

சுட்ட அப்பளம் தனி சுவைதான். குறிப்பாக மிளகு ரசம், மிளகு குழம்பு போன்றவற்றிற்கு அது சரியான ஜோடி. அதை கரி அடுப்பில் கையும் சுட்டுக் கொள்ளாமல், முழுமையாக சுடுவதே ஒரு அற்புதமான கலை. சில சமயம் அப்பளத்தின் சில பகுதிகள் சுடும் பொழுது கருகி விடுவதுண்டு.
அதுவும் ஒரு தனி சுவைதான். அதன் பின்னர் காஸ் அடுப்பில் அதற்கான வலையில் இட்டு சுடும் அப்பளங்கள் பரவாயில்லை ரகம். ஆனால்  ஓவனில் வைத்து சுடுவது அபத்தம். அது வெளுத்து சோகை வந்தது போல இருக்கும். கொஞ்சமும் சுவையில்லாமல் இருக்கும். என் மாமாவிற்கு சாப்பாடில் எத்தனை ஐட்டங்கள் இருந்தாலும் ஒரு அப்பளம் காய்ச்சேன் என்ற கோரிக்கையை வைக்காமல் இருக்க மாட்டார். என் கசின்கள அப்படி க்கேட்பதில்லை. அவர்களே காய்ச்சி தட்டில் முதலில் அதை போட்டுக் கொண்ட பின்னர்தான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள். மதியம் வெறும் வாயிற்கு என்று  அப்பளம் சுட்டு சாப்பிடுபவர்களும் எங்கள் குடும்பத்தில் உண்டு. 

அப்பளம் என்பது பொரிக்க  வேண்டிய பொருள் . அதைச் சுட்டுச் சாப்பிடுவது தவறு என்று வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் மாதிரி பேசுபவர்கள் உண்டு. அவர்கள் சொல்வது வாஸ்தவமாக பேச்சு. எந்த குழம்புடனுடனும் , ரசத்துடனும் சேர்ந்து ருசியைக் கூட்ட வல்லமை உடையது பொரித்த அப்பளம். முன்பெல்லாம் கல்யாணங்களில் கூடையில் வைத்து பறிமாறுவார்கள். இலையை விட பெரிய சைசில் இருக்கும் அப்பளங்கள் அவை. மிகச்சரியாக குழம்பு முடிந்து ரசம் வரும்போது இரண்டாவது ரவுண்டு அப்பளம், அப்பளம் என்று வருவார்கள்.அப்பளம் + பாயசம் ஒரு நல்ல காம்பினேஷன் என்று சொல்பவர்களும் உண்டு. அப்பளம் மோர் சாதத்துடன் சேராது என்ற என் நினைப்பு தவறு என்று சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கொஞ்சமும் புளிக்காத கெட்டித் தயிரில் பிசைந்த சாதத்துடன் பொரித்த  அப்பளம் ஒரு தனி டேஸ்ட் தான்.!  சில திருமணங்களிலில் மணமகன் மணமகள் பேர் போட்ட அப்பளங்கள் பறிமாறியதாக கேள்விப்பட்டுள்ளேன். 

அப்பளம் யானையைப் போல .இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று யானையைப் பற்றிச் சொல்வதுண்டு. அப்பளமும் அப்படித்தான். பொரித்த  அப்பளங்கள் சில சமயம் நமுத்துப் போய் துணி போல துவண்டு போகும். அந்த துவண்ட அப்பளமும் ஒரு தனி ருசிதான். அப்பளத்தூள்களைப் பொறித்து மெந்தியக் குழம்பு செய்தால் வாசனை ஊரையே கூட்டும்.

சேலம் பொருட்காட்சியில் ராக்‌ஷச அப்பளம் பொரித்து  விற்பார்கள். அதை சாப்பிட ஒரு கூட்டமே காத்து இருக்கும். அதை கீழே விழாமலும், பக்கத்து ஆள் அப்பளத்தில் இடிக்காமலும்சாப்பிடுவது ஒரு சேலஞ். சிலர் அதை வாங்கிக்கொண்டு ஒரு ஓரமாய் சாப்பிட இடம் தேடுவதும் உண்டு.

அப்பளம் என்றாலே என் நினைவுக்கு வருவது விஸ்வம் மாமாதான். அவர் சாப்பிட உட்கார்ந்தால் பக்கத்திலேயே ஒரு தட்டில் அப்பளங்களைப் பொரித்து  உடையாமல் அடுக்கி வைத்து இருப்பார்கள். தனது தட்டில் அப்பளங்களை குழம்பு , ரசம் சாதத்தின் மேல் ஐந்து அல்லது ஆறு அப்பளங்களை அடுக்கு ஒரு அமுக்கு அமுக்கு அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடுவார். அவருக்கு அப்பளம் இன்றி அமையாது வாழ்வு என்பது கொள்கை. விஸ்வம் மாமா சாப்பிட வருகின்றார் என்றாலே அவர் சாப்பிட ஆரம்பிப்பது முதல் கை கழுவும் வரை நிறுத்தாமல் அப்பளம் பொரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர் இப்படி தன் வாழ்க்கையில் ஐம்பது வருடங்களாவது அப்பளம் சாப்பிட்டு இருப்பார். ( 12x2x365x50 ) .  அப்போதெல்லாம் ஹோட்டல்களில் கூடுதல் அப்பளங்கள் கேட்டால் தனியாக பில் போடுவ்வர்கள். ஆனால் சென்னை ஸ்வாகத் ஹோட்டலில் மட்டும் எவ்வளவு அப்பளம் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் போடுவார்கள். அதனால் விஸ்வம் மாமா அந்த ஹோட்டலில் மட்டும்தான் மதிய உணவு சப்பிடுவார். கடைசி வரையில் அவருக்கு காது நன்றாக கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

விஸ்வநாதன் ராம மூர்த்தி மாதிரிதான் அப்பளம் , வடாம்  . அருமையான காம்பினேஷன். அப்பளம் எம்.எஸ்.வி. மாதிரி. தனியாகவும் சோபிக்கும். கல்யாண கட்டு சாதத்தில் மட்டும் வடாம் மோர் மிளகாயுடன் அமர்க்களப்படுத்தும். பப்படம் என்பது அப்பளத்தில் செய்யப்பட்ட genetic manipulation என்பது என் கருத்து.

அரிசி அப்பளம் , உளுந்து அப்பளம் இதில் சிறந்தது என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம் என்றாலும் சாரதி பாப்பையாவின் தீர்ப்பு உ.அப்பளம் , அ. அப்பளம் இரண்டையும் 2: 1 என்ற விகிதத்தில் சாப்பிடலாம்  என்பதே. 

இப்போதெல்லாம் யார் வீட்டிலும் அப்பளம் இடப்படுவதில்லை. அதனால் அப்பள மாவின் ருசியை அனுபவிக்க முடிவதில்லை என்ற குறை இருக்கத்தான் செய்கின்றது.
சாரதி.
07/06/2020
VKN Sastrigal 9443481901
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. அப்பளம் போல் சுவையான பதிவு ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com