=========================================================
ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1
உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - நிறைவுப் பகுதி
முந்தைய பகுதிகள் இங்கே!
-----------------------------------------------------------------------------------------
ஒருநாள் அரண்மனையில் நடந்த அதிரடி நிகழ்வில், ஆசிரியர், மன்னரின்
ஆதீதகோபத்திற்கு ஆளாக, கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள
சிறைக்குப்போகும்படி ஆகிவிட்டது என்று முன் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அப்படி என்ன நடந்தது?
அரசசபையில் ஒரு விவாதம் நடந்தது. பிறப்பிற்கு, நாளையும் நட்சத்திரத்தையும்
அடையாளப் படுத்திவைக்கிறோம், இறப்பிற்குத் திதியை மட்டுமே அடையாளப்
படுத்தி வைக்கிறோம். இறப்பிற்கும் ஏன் நட்சத்திரத்தைப் பிரதானப்படுத்து
வதில்லை. இதுதான் மன்னரின் கேள்வி. அதை வைத்து விவாதம் நடந்து
கொண்டிருந்ததது.
அதாவது இன்று 28.4.2008 சர்வதாரி ஆண்டு சித்திரை மாதம் 16ஆம் தேதி
திங்கட்கிழமை உத்திராடம் நட்சத்திரம் என்றுதான் இன்று பிறக்கும் ஒரு குழந்தை
யின் பிறப்பு முன்னிறுத்தப்படும். அதே நேரம் இன்று இறக்கும் ஒருவரை சித்திரை
பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் மரணமானவர் என்று
தான் சொல்வார்கள்.
கொண்டாடுவதற்கும், ஜாதகம் கணிப்பதற்கும், வாழ்க்கைப் பலாபலன்களுக்கும்
நட்சத்திரம் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் மரணத்திற்கும், மரணத்தை நினைவு
கூர்ந்து இறந்தவருக்கு உரிய சடங்குகளைச் செய்வதற்கும் திதிதான் பிரதானமாக
எடுத்துக்கொள்ளப்படும். அதுதான் வழக்கத்தில் உள்ளது.
நட்சத்திரங்கள் 27தான். ஆனால் திதி 30. (Thithi is the distance between Sun and
Moon in transit. when both are in the same degree, it is Amaavasai and if both
are exactly in the opposite side it is called as Full Moon Day or Pournami)
திதியைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கிப் பாருங்கள்
இதுபற்றி நமது த்ரைவேதி வாத்தியார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கம்
சொல்லியும், காதில் சரியாக வாங்கிக் கொள்ளாத மன்னன், ”ஏன் நட்சத்திரத்தை
எடுத்துக்கொண்டால் என்ன தப்பு?” என்று கேட்க, எரிச்சலுக்கும் கோபத்திற்கும்
உள்ளான வாத்தியார்,மன்னனை நோக்கிச் சட்டென்று,” போடா முட்டாள்!” என்று
கூறி அனைவரையும் திகைக்க வைத்துவிட்டார். அதோடு படு வேகமாக எழுந்து
அரசசபையை விட்டு வெளியேறியும் விட்டார்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத மன்னரும், திகைத்து நிற்க, முதன் மந்திரிதான்,
பேச்சைத்துவக்கி, சபையின் இறுக்கத்தைக் குறைத்தார். அதோடு போட்டும் கொடுத்தார்.
“அரசே, அவர் என்னதான் அரசவைக் குருவாக இருந்தாலும், உங்களை, முட்டாள்
என்று சொன்னது மாபெரும் தவறு. அவரை அப்படியே விடுதல் ஒரு மோசமான
முன்னுதாரணமாகிவிடும். அவரை நீங்கள் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.”
அதன்படி அரசரும் உத்தரவு இட, சேனாதிபதி, தன்னுடைய வீரர்களுடன் சென்று,
நமது வாத்தியாரைப் பிடித்து, விசாரனை ஏதுமின்றி, நேரடியாக பாதாள சிறையில்
போட்டுவிட்டார்கள்.
பாதாளசிறை என்பது கொடிய குற்றங்களுக்கான சிறை. நகரின் எல்லையில் ஒரு
மலையடிவாரத்தில் அது இருந்தது. உள்ளே உள்ளவர்களை வெளியில் இருக்கும்
யாரும் சென்று பார்க்க முடியாது. பூமிக்கடியில் உள்ள குகைகள் போன்ற அறைகளில்,
கைதிகள் தங்க வைக்கப்படுவார்கள். காலையில் ஒரு மணி நேரம் அனைவரும்
மலையடிவாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கரைக்குக் கூட்டிக் கொண்டு வரப்
படுவார்கள், காலைக்கடன்கள், சிரமபரிகாரங்கள் முடிந்தபின், உணவளிக்கப்பட்டு,
குகைக்குள் அனுப்பப்பட்டு விடுவார்கள். அதுபோல மாலை ஒருமுறையும் அவர்கள்
வெளிக்காற்றைச் சுவாசிக்கலாம். உள்ளே சென்றவன் வெளியே வந்ததாகச்
சரித்திரம் இல்லை. ஆட்சியோ இல்லை. மன்னனோ மாறினால் ஒரு வாய்ப்பு உண்டு.
அவ்வளவுதான்
உள்ளே சென்ற நமது வாத்தியார் நொந்து நூலாகி விட்டார். ஒவ்வொரு தினமும்,
இரண்டுமுறை குளித்து சந்தியாவந்தனம் செய்து சூரிய நமஸ்காரம், பூஜை எல்லாம்
செய்பவர் ஒன்றையும் செய்யும் மனமில்லா நிலைக்குத் தள்ளப்பட்டார். குகையில்
கிரிமினல்களோடு, கிரிமினல்களாகப் படுத்துக்கொள்ள வேண்டுமென்றால் எப்படி
இருக்கும். அதிகமாக சொல்ல விரும்பவில்லை. நீங்களே கற்பனை செய்து
கொள்ளுங்கள்.
இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. 90 நாட்கள் ஆயிற்று.
தொன்னூற்றொன்றாம் நாள் அதிகாலை, எழுந்து அமர்ந்ததும், வாத்தியாரின் கண்களில்
எதிரே தெரிந்த நபர், பலத்த ஒளி, மற்றும் ஒலியுடன் தன்னை வெளிப்படுத்திக்
கொண்டதோடு, பேசவும் துவங்கினார்.
அவர் யாரென்று சொல்லவும் வேண்டுமா? நமது சனீஸ்வரன்தான் அவர்!
“குருவே, என்ன மிகவும் நொந்து போய்விட்டீர்களா?” என்று சனீஸ்வரன் கேட்கவும்,
குருவின் கண்கள் பேசத்திரானியின்றி, கலங்கியிருந்தன!
“கவலைப்படாதீர்கள், எல்லாம் இன்னும் இரண்டு நாழிகை நேரத்திற்குள் சரியாகிவிடும்.
அன்று நடந்த விவாதத்தில், உங்கள் நாக்கில் நுழைந்து, மன்னனை முட்டாள் என்று
அடியேன்தான் உங்களைச் சொல்ல வைத்தேன். இந்தத் துயரான நிலையும் அதனால்
உங்களுக்கு ஏற்பட்டது. அஷ்டமச் சனியாக 30 மாதங்கள் உங்களைப் பிடித்துக்
துயரங்களைக் கொடுக்க வேண்டிய நான். உங்களுக்களித்த வாக்கின்படி அதை
மூன்று மதங்களுக்குச் சுருக்கியதால்தான் இந்தப் பாதாளச் சிறை வாழ்வு. இப்போது
மன்னரின் முன் தோன்றி நான் அதைச் சரி பண்ணிவிடுகிறேன். பழையபடி உங்கள்
வாழ்க்கை முன்போல கெளரவத்தோடும் புகழோடும் இருக்கும்.மீண்டும் வேறு ஒரு
சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிய சனீஸ்வரன் ஆசிரியரின்
கைகளைப் பிடித்துக் குலுக்கி வணங்கிவிட்டு மறைந்தார்.
அந்த ஷணமே மன்னரின் எதிரில் தோன்றி, நடந்ததை மன்னனுக்கு விளக்கி,
ஆசிரியருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததோடு, மன்னருக்குக் காட்சி கொடுத்
தமையால் ஆசிரியரின் செல்வாக்கு அரண்மனையில் மேலும் ஒருபடி உயரவும் வழி
வகுத்துவிட்டுப் போனார் சனீஸ்வரன்
---------------------------------------------------------------------------------------------------
கதை அவ்வளவுதான்.
இந்தக் கதையின் நீதிக்கு வருவோம். அதைச் சொல்வதற்குத்தானே
இத்தனை Build Up கொடுத்து, Suspense கொடுத்துக் கதையை உங்களுக்குச்
சொல்லியிருக்கிறேன்,
நமக்கு நல்ல நேரம் நடக்கிறது என்றால் நமது சொல், செயல் என்று எல்லாமே நல்லதாக
இருக்கும். நமக்குக் கெட்ட நேரம் நடக்கிறது என்றால், நமது சொல், செயல்
எல்லாமே கெட்டதாக, நமக்குத் தீமை பயப்பதாக இருக்கும்.அது தவிர்க்க முடியாதது.
சரி, அதிலிருந்து விடுபட முடியுமா?
விடுபட முடியாது. அதுதான் விதியின் வலிமை. விதி என்பது விதிக்கப்பட்டதாகும்.
அதன் விளைவுகளைத் தங்குவதற்கு வேண்டிய சக்தியை இறைவழிபாட்டின் மூலம்
நாம் பெறலாம். The Almighty will give you standing power!
அதற்கும் ஒரு நீண்ட கதை இருக்கிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அதைச்
சொல்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------
வள்ளுவப் பெருந்தகையார் தன்னுடைய குறுகத்தெரித்த குறளில் கூறியுள்ள
வற்றில் இது சம்பந்தப்பட்ட இரண்டு குறள்களை உங்கள் பார்வைக்காகக்
கீழே கொடுத்துள்ளேன்
ஊழ் = விதி = விதிக்கப்பட்டது = Destiny
1.
“பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக்கடை”
----------குறள் எண் 372 - ஊழ்' அதிகாரம்
பொருள் போவதற்குக் காரணமான தீய ஊழ் வந்துற்ற போது
(ஒருவன் எவ்வளவு பேரறிஞனாகயிருந்தாலும் அவனை அது)
பேதையாக்கும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான
நல்ல ஊழ் வந்துற்ற போது (ஒருவன் எவ்வளவு பேதையாகயிருந்தாலும்
அவனை அது) பேரறிஞனாக்கும்.
2.
”நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு”
----------குறள் எண் 375 - ஊழ்' அதிகாரம்
செல்வத்தைத் தேடுவதற்கு, தீயஊழ் வந்துற்ற போது நல்லவை எல்லாம்
தீயவையாகிப் பயன்படாது போகும். நல்ல ஊழ் வந்துற்ற போது தீயவை
எல்லாம் நல்லவையகிப் பயன்படும்
-----------------------------------------------------------------------------------------
தொடர்ந்து ஐந்து இதழ்களாக வாசித்து மகிழ்ந்தும், பின்னூட்டம் இட்டும்
பாராட்டிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் சனீஸ்வரனின் அருள்
கிடைக்கட்டும்
(நிறைவுற்றது)
அன்புடன்
சுப்பையா வாத்தியார்