10.4.08

சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 1



=====================================================

ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1

உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம்!

கிரகங்களில் ‘சனி'க்கு மட்டும்தான் ஈஸ்வரன் என்கிற பட்டம் உண்டு. சூரியன் உட்பட
மற்ற எந்தக் கிரகத்திற்கும் அந்தப் பெருமை இல்லை!

நமது கர்மங்களை - காரியங்களை - செயல்பாடுகளை - activitiesகளை நடத்துபவன்
அவன்தான்.

கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பான்.தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிப்பான்.
தட்ட வேண்டிய இடத்தில் தட்டுவான்.

சில நேரங்களில் ஒரேயடியாகத் 'தட்டி' மேலே அனுப்பியும் விடுவான்.

நெடுஞ்சாலையில் படு ஒய்யாரமாகப் பென்ஸ் காரில் செல்லும் ஒரு செல்வந்தனை, ஒரு டிப்பர்
லாரிக்காரன் அழுத்தமாக முத்தமிட்டு, வைகுண்டத்திற்கு அனுப்பி வைத்தானென்றால்,
அது சனி பகவானின் ஆசியோடுதான் அறங்கேறியது என்று கொள்வீராக!

ராகு ஒருவனைக் கருணையின்றி தண்டிப்பான் (Merciless Action) ஆனால் சனீஸ்வரன்
அப்படியல்ல! அவனை மாதிரி அள்ளிக் கொடுப்பாரும் இல்லை; தள்ளிக் கெடுப்பாரும்
இல்லை!

அவன் தண்டிப்பதிலும் ஒரு தர்மம் இருக்கும். அதன் விவரத்தைப் பின்வரும் கட்டுரை
ஒன்றில் பார்ப்போம்!

இப்போது சனீஸ்வரனைப் பற்றிய ஒரு சுவையான கதை!
---------------------------------------------------------------------------------
கதை' என்று சொல்லிவிட்டேன். கதையை மட்டும் பாருங்கள். அதில் உள்ள நீதியை
மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். வேறு ஒன்றும் வாலாட்ட வேண்டாம்.

கதைக்கு லாஜிக் கேட்டு, சான்று கேட்டு அவஸ்தைபட விரும்புகிறவர்கள் இப்போதே
பதிவை விட்டு விலகி விடலாம்.

இது கர்ண பரம்பரைக் கதை! செவி வழியாகவே இதுவரை அறியப்பட்ட கதை!

என் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை
எழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.

ஆகவே படிக்கும் அனைவரும் லாஜிக்கையும் சான்றுகளையும் மறந்துவிட்டுப் படிக்குமாறு
கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
----------------------------------------------------------------------------------------------------

பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

கங்கா தேவியும் அவளுடைய கிளைகாரிகளும் அதாவது உப நதிகளும் தாங்கள்
செல்லும் வழியெல்லாம் செழுமைப் படுத்துவார்களே - அப்படிச் செழுமையான பிரசேசம்
தான் நமது கதை நடக்கும் இடம்.

அப்படிக் கங்கா தேவியின் அணைப்பில் மகிழ்ந்து கொண்டிருந்த கிராமம் ஒன்றில்
நமது கதை துவங்குகிறது!

அந்தக் கிராமத்து மக்களெல்லாம் பெரிய பிரச்சினைகள் எதுவும் இன்றி ஒற்றுமையாக
இருந்தார்கள்.

அந்தக் கிராமத்தின் மத்தியில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தின்
சிறப்பு அது உயர்கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடம்.

ஆரம்பக்கல்விக்கு அந்தக் கிராமத்தில் வேறு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.

அந்தக் கிராமம் மட்டுமல்ல சுற்று வட்டத்தில் உள்ள பதினெட்டுப் பட்டிக் கிராமத்திற்கும்
உயர்கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடம் அது ஒன்றுதான் இருந்தது!

அதனால் அங்கே இடத்தைப் பிடிப்பதற்குப் பெரும் போராட்டமாக இருக்கும்.

ஆரம்பப் படிப்பை முடித்தவர்களும், வயது பதினான்கைத் தாண்டியவர்களுக்கும் மட்டுமே
அங்கே அட்மிஸன் கிடைக்கும்.

சிபாரிசெல்லாம் செல்லாது! அந்தப் பிரதேச மன்னன் வீட்டுக் குழந்தை என்றாலும்
வரிசையில்தான் நிற்க வேண்டும். செலக்ஸன் தலைமை ஆசிரியர் கையில். பையனைப்
பார்த்தவுடனேயே சொல்லிவிடுவார் - இவன் சாப்பாட்டுக் கேஸ் படிக்கமாட்டான் - இவன்
அறுந்த வால், இவனும் படிக்க மாட்டான் என்று!

வேதங்களும், வாழ்க்கை நெறிகளும், இறைவழிபாடும் அங்கே பாடமாகச் சொல்லிக்
கப்பெற்றது. கால அளவு (Duration of the course) இரண்டாண்டுகள்.

கல்விக் கட்டணம் இல்லை! அதோடு ரோட்டி, கப்டா, மக்கான் என்று எல்லாம் இலவசம்!
அதாவது குருகுலம். (Boarding School) உணவு, உடை, தங்குமிடம் எல்லாம் இலவசம்

லீவு, கட் அடிப்பது எதுவும் நடக்காது. உள்ளே போனால் திஹார் ஜெயிலை விடக்
கண்டிப்பான இடம்.

காலை ஐந்து மணி முதல் மாலை 5 மணி வரை கிண்டி எடுத்து விடுவார்கள்.

காலை மற்றும் மாலை என்று இரண்டு நேரமும் பக்கத்தில் ஓடும் சிற்றாற்றில் நீந்திக்
குளித்துவிட்டு வரவேண்டும். உணவு இரண்டு வேளைகள் மட்டுமே! அதுவும்
குளித்துவிட்டு, இறைவழிபாடு செய்து விட்டு வந்த பிறகே!

காலை எட்டு மணிக்கு, வகுப்பு துவங்கிவிடும். மாலை நான்கு மணி வரை நடைபெறும்
நடுவில் இரண்டு தடவை சூடாகத் தேநீர் மட்டும் உண்டு!

அது எப்படி சாத்தியம்?அதாவது டோட்டலாக இலவசம் என்பது எப்படி சாத்தியம்?

அந்தப் பிரதேச மன்னனிடம் இருந்து மான்யம் - அதாவது உதவித் தொகை கிடைத்துக்
கொண்டிருந்தது. அதோடு கிராமத்து மக்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தப்
பள்ளிக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தார்கள்

இங்கே ஒரே ஒரு செய்தி அதைச் சொன்னால்தான் கதையின் சுவை கூடும். ஆகவே
அதைச் சொல்லி விடுகிறேன்.

குருகுலத்தின் (Prime instructor & Principal) தலைவர் ஒரு அந்தணர். அவருடைய பெயர்
த்ரைவேதி' - த்ரைவேதி' என்றால் மூன்று வேதங்களையும் கற்றவர் என்று பொருள் படும்
அவருக்கு வயது நாற்பது. கட்டை பிரம்மச்சாரி. விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதில்
அசாத்திய நம்பிக்கை உள்ளவர். யாருக்கும் பயப்படாதவர். குடும்பம் வேறு அவருக்கு
இல்லையாதலால், யாருக்கும் எதற்கும் பயப்படாதவர். ஆசிரியர் தொழிலுக்கே தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர். எல்லா மாணவர்களையும் Fine Tuning' பண்ணுவது
அவர்தான்.

தர்மப்படி நடப்பவர். வருடத்திற்கு 2 X 50 = 100 மாணவர்களைத் தெரிவு செய்து
பள்ளிக்குள் சேர்ப்பது அவர்தான். கீழோன், மேலோன் என்ற பாகுபாடெல்லாம்
அறவே பார்க்க மாட்டார். பையன் shrewd, smart என்று தேரிந்தால் சேர்த்துக் கொண்டு
விடுவார். மக்குப் பிளாஸ்திரிகளுக்கு மட்டும் அங்கே இடமில்லை!.

புத்திசாலிப் பையனுக்கு நிச்சயமாக அங்கே இடம் உண்டு! அவன் எந்த இனத்தைச்
சேர்ந்தவனாக இருந்தாலும் சரி!

இப்போது மெயின் கதைக்குத் தாவிவிடுவோம்!
-------------------------------------------------------------------------------------------
முறைப்படி தானும் வேதங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சனீஸ்வரனுக்கு,
வெகு நாட்களாக ஒரு ஆசை இருந்து வந்தது.!

இந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றித் தெரிய வந்ததும், அங்கே சேர்ந்து படிப்பது என்று
முடிவு செய்தான். முடிவைச் செயல் படுத்த அந்தக் கிராமத்திற்கு ஒரே நொடியில்
வந்து சேர்ந்தான்.

வந்த பிறகுதான் உரைத்தது. தான் அப்படியே சென்றால் எப்படி அட்மிஸன் கிடைக்கும்?
என்பதை உணர்ந்தான்.

1.பள்ளிக்கூட விதிகளின் படி வயது 14 அல்லது 15 இருக்க வேண்டும்
2.தோற்றம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்
3.ஆரம்பப் பள்ளியை முடித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்ற சான்றிதழ் வேண்டும்

தனது சக்தியால் ஒரே நொடியில் தன்னுடைய உருவத்தை - மணி ரத்தினத்தின்
ரோஜா படத்தில் வரும் அரவிந்த சாமி - அவருடைய பதினைந்து வயதில் எப்படி
இருந்திருப்பாரோ அப்படிப் பட்ட உருவத்திற்கு மாற்றிக் கொண்டான். அவன்
எத்தனை பேர்களுக்கு சர்டிஃபிகெட் கொடுத்தவன், அதனால் அவன் கையில்
ஒரு ஆரம்பப் பள்ளிச் சான்றிதழும் வந்து விட்டது.

உடனே குஷியாகி நேராகப் பள்ளிக்குச் சென்று வாசலில் காவலுக்கு நின்ற
கிராமத்தானை ஒரு பார்வையில் மயங்க வைத்துவிட்டு நேராக பிரின்சிபால்
இருக்கும் அறையை நோக்கி நடந்தான்....!

(தொடரும்)

----------------------------------------------------------------------------

10 comments:

  1. வாத்தியாரைய்யா,

    கதை சூப்பர்!

    //என் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை எழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.//
    நீங்க சொன்னா மாதிரி இந்த கதைக்கு நீங்க தான் முதல் ஆசாமியா இருப்பீங்க.

    ReplyDelete
  2. /////சிவமுருகன் said...
    வாத்தியாரைய்யா,
    கதை சூப்பர்!
    //என் போதுகின்ற நேரமா அல்லது போதாத நேரமா - தெரியவில்லை இந்தக் கதையை எழுத்தில் வடிக்கும் முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன்.//
    நீங்க சொன்னா மாதிரி இந்த கதைக்கு நீங்க தான் முதல் ஆசாமியா இருப்பீங்க./////

    இல்லை, நண்பரே! சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்தக் கதை தெரிந்தவர் ஒருவர் நம் பதிவிற்கு வர மாட்டார் என்பதை இப்போது எப்படிச் சொல்ல முடியும்? யாராவது வருகிறார்களா என்று பார்ப்போம் - அப்போது தெரிந்துவிடும் - முதல் ஆசாமி யார் என்று!:-))))))

    ReplyDelete
  3. சனி பகவானின் சரித்திரம் தன்னை
    சமயோசிதமாக தொடங்கி சஸ்பென்சுடன்
    நிறுத்தி
    ராகு பகவானின் அழிக்கும் வேகத்தையும்
    ரவுசு பண்ன வருவோரை எச்சரித்தும்

    மீண்டும் சோதிடப் பாடத் தொடக்கம்
    உண்மையிலே அனைவரது ஆவலை தூண்டும்.

    ReplyDelete
  4. சஸ்பென்ஸ் தாங்க முடியலே குருவே. அடுத்த பகுதியை எதிர்பார்த்து.

    ஆவலுடன்
    இராசகோபால்

    ReplyDelete
  5. //////nellai said...
    சனி பகவானின் சரித்திரம் தன்னை
    சமயோசிதமாக தொடங்கி சஸ்பென்சுடன்
    நிறுத்தி
    ராகு பகவானின் அழிக்கும் வேகத்தையும்
    ரவுசு பண்ன வருவோரை எச்சரித்தும்
    மீண்டும் சோதிடப் பாடத் தொடக்கம்
    உண்மையிலே அனைவரது ஆவலை தூண்டும்.//////

    சனியைக் கூட்டிக் கொண்டுவந்தால்தான் கட்டுரை வகுப்பு ஒழுங்காக நடக்கும் என்று கூட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்! அர்த்தமாயிந்தா? லேதா?

    ReplyDelete
  6. சுவாரஸ்யமாக சனீஸ்வரன் கதையைக் கொண்டு போய், சரியான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே ஆசானே!

    ReplyDelete
  7. /கதை சூப்பர்!/ I agree.

    I am looking forward to read the next post.Keep posting.

    Ramya

    ReplyDelete
  8. //////VSK said...
    சுவாரஸ்யமாக சனீஸ்வரன் கதையைக் கொண்டு போய், சரியான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்களே ஆசானே!////

    கதை சற்று நீளமானது. மூன்று பகுதிகளாகப் பதிவிட எண்ணினேன். அடுத்த பதிவை இன்று இரவு பதிவிடுகிறேன்
    சஸ்பென்ஸில் அதிக நேரம் உங்களை வைக்க (அது ஏனோ) மனம் வரவில்லை!:-)))))

    ReplyDelete
  9. /////Anonymous said...
    /கதை சூப்பர்!/ I agree.
    I am looking forward to read the next post.Keep posting.
    Ramya/////

    இன்று மாலை, கதையின் அடுத்த பகுதியை அறியத் தருகிறேன் சகோதரி!

    ReplyDelete
  10. ////Anonymous Anonymous said...
    சஸ்பென்ஸ் தாங்க முடியலே குருவே. அடுத்த பகுதியை எதிர்பார்த்து.
    ஆவலுடன்
    இராசகோபால்////

    இன்று மாலை, கதையின் அடுத்த பகுதியை அறியத் தருகிறேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com