Short Story: சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!!!
இந்த மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை, அந்த இதழ் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக்
கதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்ல
வேண்டுகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!
கருப்பையா செட்டியார் தன் மகளுக்கு வரன் பார்க்கத் துவங்கியபோது, அவர் மகள் மீனாட்சி இரண்டே இரண்டு
கோரிக்கைகளைத்தான் முன் வைத்தாள்.
”அப்பச்சி, படித்து முடித்துவிட்டு இப்போது வீட்டில் இருப்பது போலவே, திருமணத்திற்குப் பிறகும், ஹோம் மேக்கராக
வீட்டிலேயே இருப்பதைத்தான் விரும்புகிறேன். வேலைக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே கை நிறையச் சம்பாதித்து, தன் செலவிலேயே குடும்பத்தை நடத்தக் கூடிய மாப்பிள்ளையாகப் பாருங்கள். மாப்பிள்ளை தோற்றத்தில் எப்படியிருந்தாலும் பரவாயில்லை - ஆனால் நல்ல குணமுடையவராக இருக்க வேண்டும். மனைவியை மதித்து வைத்துக் கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்....”
“மாப்பிள்ளையின் உண்மையான குணம் எல்லாம், கல்யாணத்திற்குப் பிறகுதானே அம்மா தெரியும்...”
“ஜாதகத்தைப் பார்த்தால் தெரியாதா? கோட்டூர்புரம் ஜோதிடர் கோவிந்தசாமி அய்யாதான் பெரிய ஜோதிடராயிற்றே?
அத்துடன் உங்களுக்கு அவர் நெருங்கிய நண்பரும் ஆயிற்றே? ஜாதகங்களை அவரிடம் காட்டினால் பார்த்துச் சொல்ல மாட்டாரா?”
"அவர் உன்னுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஏற்கனவே சொல்லிவிட்டார். பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு சூப்பராக
இருக்கிறது. அத்துடன் 7ம் வீட்டு அதிபதி குரு பகவானின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் இருக்கிறது. மேலும் சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப்பார்வையில் இருக்கிறார்கள். ஆகவே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அத்துடன் பெண்ணின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே நீ ஒன்றுக்கும் கவலைப் படாதே!
பழநியாண்டவரைப் பிரார்த்தித்துக் கொள் மற்றதை எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்”
பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்கும் நிகழ்விலேயே அவள் அதைத் தெரிந்து கொண்டாள்.
வடபழநி முருகன் கோவிலில்தான் பெண் பார்க்கும் நிகழ்வு
நடந்தது.
மீனாட்சி, திரைப்பட நட்சத்திரம் அனுஷ்காவைப் போல் பளிச்சென்ற தோற்றத்துடன் இருப்பாள். ஐந்தடி ஏழங்குல
உயரம். தன் உயரத்திற்குத் தகுந்ததைப் போலவே மாப்பிள்ளை இருக்க வேண்டுமென்பதுதான் அவளுடைய விருப்பம்.
மாப்பிள்ளை தன் பெற்றோருடன் வந்திருந்தார். வந்தவர் கையில் பூங்கொத்தோடு (பொக்கே) வந்திருந்தார். அதைக் கருப்பையா
செட்டியாரின் கையில் பணிவுடன் கொடுத்துவிட்டு இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.
ஆறடி உயரம். களையான முகம். ஜீன்ஸ் கால்சட்டையும், கிளாசிக் போலோ டி சட்டையும் அணிந்திருந்தார்.
மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது. கண் ஜாடையிலேயே தன் தாயாரிடம் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, அந்த ஆச்சியும், கையில் கொண்டுவந்திருந்த பையில் இருந்து நான்கு முழம் மல்லிகைப் பூவை எடுத்து, ஒரு முழம் அளவிற்கு வெட்டி மீனாட்சியின் தாயாரிடம் கொடுத்து விட்டு, மீதிப் பூவை மீனாட்சியிடம் கொடுத்து தலையில் சூடிக் கொள்ளச் சொன்னார்.
“நீங்களே வைத்து விடுங்கள்!” என்று மீனாட்சி சொல்லிவிட்டு தலையைக் குனிந்து அவரிடம் காட்ட, அவரும் பூவைச் சூட்டி
விட்டார்.
கருப்பையா செட்டியார் கோவிலுக்கு வெளியே சென்று
பெரிய மாலை ஒன்றையும், தேங்காய், பழம், வெற்றிலை
பாக்குடன் அர்ச்சனைத் தட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார்.
பின்னர் ஆறு பேரும் முருகன் சன்னிதானத்திற்குள் நுழைந்து அங்கே உறைந்திருக்கும் வடபழநியாண்டவரை வணங்கி
விட்டுத் திரும்பினார்கள்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இருவீட்டாரும் சேர்ந்து பேசி அடுத்து இரண்டு மாதங்களில் வந்த தை மாதத்தில், முதல்
முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்தி வைத்தார்கள்!
********************************************************
கருப்பையா அண்ணனுக்கு காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் வீடு. மாப்பிள்ளையும் உள்ளூர்தான். மெ.மெ.வீதியில் வீடு.
கல்யாணம் முடிந்த கையோடு, அப்பத்தா வீடு, ஆயா வீடு
காய்ச்சி ஊற்றுதல், குன்றக்குடி கோவில், இலுப்பக்குடி,
இளங்குடிக் கோவில், குலதெய்வக்கோவில் என்று எல்லாக் கோவில்களுக்கும் சென்றுவிட்டு நான்காவது நாளே
மீனாட்சியும், அவளுடைய உள்ளம் கவர்ந்த கணவன் சோமசுந்தரமும் பெங்களூருக்குப் புறப்பட்டார்கள்.
எந்த சாமானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எல்லா சாமான்களும் கேஸ் அடுப்பிலிருந்து வாஷிங் மெஷின்வரை
பெங்களூர் வீட்டில் இருப்பதால் நான்கு பெரிய பெட்டிகளில் துணிகளைத் தவிர வேறு ஒரு லக்கேஜூம் இல்லை.
இரண்டு வீட்டுப் பெரியவர்களும் மெதுவாகச் செல்லுங்கள்
என்று மட்டும் சொல்லிவிட்டு, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.
பெங்களூரில் சர் சி.வி.ராமன் நகரில் உள்ள பக்மானே டெக்னோ பார்க்கில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சோமுவிற்கு
டிசைன் இஞ்சினியர் வேலை. சென்னை ஐ.ஐ.டி யில் எம்.ஈ வரை படித்தவன். மாதம் இரண்டு லெட்ச ரூபாய் சம்பளம்.
ஹூண்டாய் ஐ 20 கார். பயணத்திற்கு சூப்பராக இருந்தது. திருமணத்திற்கு ஒரு மாதம் முன்புதான் தன்னுடைய பழைய காரைக் கொடுத்துவிட்டு இந்த வண்டியை அவன் வாங்கியிருந்தான்.
மீனாட்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரைக்குடியில் இருந்து திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி என்று வழியில் உள்ள
ஊர்களையெல்லாம் தாண்டி ஏழு மணி நேரத்தில் ஹோசூருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்து பெங்களூரில் உள்ள அவர்கள்
வீட்டுக்குப் போய்ச் சேர ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. சாலைகளில் வாகன நெரிசல் காரணம்
வழியில் ஹோசூரில் உள்ள அடையார் ஆனந்தபவன்
ஹோட்டலில் இரவு உணவை முடித்துகொண்டு வந்தவர்கள்
பயணக் களைப்பில், வீட்டிற்கு வந்தவுடன் படுத்து உறங்கி விட்டார்கள்
*******************************************
மீனாட்சி சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து பழக்கப்பட்டவள். அதிகாலையில் எழுந்தவள் காலைக் கடன்களை முடித்துவிட்டு,
காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டு,
கணவனை எழுப்பினாள்.
அவளைப் படுக்கையில் தன் அருகே அமரச் சொன்னவன், மெதுவாகக் கேட்டான்.
“வீடு நன்றாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா?”
“எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது! உங்களை, உங்கள் பெற்றோர்களை, உங்கள் காரைக்குடி வீட்டை, உங்கள்
புதுக்காரை, இந்த வீட்டை என்று எனக்கு எல்லாம்
பிடித்திருக்கிறது!”
“திருமணமாகி நான்கு நாட்கள்தானே ஆகிறது. அதற்குள் என் பெற்றோர்களை எப்படிப் புரிந்து கொண்டாய்?”
“ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள். உங்கள் தாயாரின் நல்ல குணத்தை அவர்களின் செயல்களில் இருந்து
புரிந்து கொண்டேன். திருமணப் பேச்சு வார்த்தையின்போது,
என்ன தோது எதிர்பார்க்கிறீர்கள் என்று? என் தந்தையார்
கேட்டார்களாம்.அதற்கு உங்கள் தாயார் எதுவும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னார்களாம். எங்களுக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் பெண்ணிற்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்றார்களாம்.”
புன்னகைத்த சோமு, சொன்னான். “ திருமணத்திற்காக ஏழு
லெட்ச ரூபாய் பணம் சேர்த்து வைத்திருந்தேன். திருமணத்திற்கு
முன்பு என்னுடைய வங்கி டெபிட் கார்டை என் தாயார் கையில் கொடுத்து, திருமணச் செலவிற்கான பணத்தை என் வங்கிக்
கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். என்
தாயார் மறுத்து விட்டார்கள். உன் கல்யாணத்திற்காக நான்
பத்து லெட்ச ரூபாய் எங்களுடைய வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அதில் இருந்துதான் செலவழிக்கப்
போகிறேன் என்றார்கள்.அதோடு பெண் வீட்டிலிருந்து அவர்கள் ஏதாவது ரொக்கம் கொடுத்தால், அதை உங்கள் இருவரின்
பெயரில் வைப்புத் தொகையாகப் போட்டு விடுவதாக
இருக்கிறேன் என்றார்கள்”
“என் தந்தையார் ஸ்ரீதனமாகக் கொடுத்த ஐந்து லெட்ச ரூபாய்களையும் அப்படியே வங்கியில் வைப்புத்
தொகையாகப் போட்டு விட்டு அதன் ரசீதை என் தந்தையிடம் காட்டினார்களாம். அத்துடன் இன்னொன்றும் செய்தார்கள் தெரியுமா?”
“என்ன?” சோமு ஆர்வமாகக் கேட்டான்.
“நாம் இங்கே புறப்பட்டு வருவதற்கு முன்பு உள் வீட்டிற்குள்
என்னை அழைத்தவர்கள், கையில் ஐநூறு ரூபாய்க் கட்டு
ஒன்றைக் கொடுத்தோடு சொன்னார்கள். என் மகன் சிக்கனமானவன். ஒவ்வொரு செலவையும் கணக்கெழுதி செலவழிப்பவன். ஆகவே ஒவ்வொரு வீட்டுச் செலவிற்கும் அவனைக் கேட்டு நீ செலவு செய்ய முடியாது. ஆகவே
அவசரத்திற்கு இதில் இருந்து எடுத்து செலவழித்துக்கொள் என்றார்கள். என் மகனிடம் இதைச் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்கள். நமக்குள் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதற்காக இதை நான் உங்களிடம் சொல்கிறேன். இந்த
விஷயம் நமக்குள் இருக்கட்டும்.....” என்று சொன்னவள், உள் அறைக்குள் சென்று தன் பெட்டியிலிருந்த அந்த புது ஐநூறு
ரூபாய்க் கட்டைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
“இல்லை நீயே வைத்துக்கொள்” என்றவன் தொடர்ந்து
சொன்னான், “நம் திருமணத்திற்கு அடுத்த நாள் மறுவழிச் சாப்பாட்டிற்காக உங்கள் வீட்டிற்கு வந்த போது, உன் தந்தையார் என்னிடம் தங்கத்தில் கற்பகப் பிள்ளையார் ஒன்றைக் கொடுத்தார். கால் கிலோ எடையாம். அவருடைய மாமனார், அவருடைய திருமணத்தின்போது பரிசாகக் கொடுத்ததாம். மாமனார் என்ற முறையில் அடுத்த தலைமுறை மாப்பிள்ளையான உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பதுதான் முறை. ஆகவே வைத்துக் கொள்ளுங்கள். என் பெண்னிடம் இப்போது சொல்ல வேண்டாம். சர்ப்ரைசாக இருக்கட்டும். பெங்களூர் போனதற்குப் பிறகு
அங்கே சொல்லுங்கள். இந்தப் பிள்ளையார் மிகவும்
இராசியான பிள்ளையார். எல்லா வளமும் உங்களைத் தேடி வரும்” என்று ஆசீர்வதித்துக் கொடுத்தார். ”அது என் பெட்டியில் துணிகளுக்குக் கீழே உள்ளது எடுத்துப் பார்”
மீனாட்சி அசந்து போய் விட்டாள். தன் தந்தையையும் தன் கணவனையும் ஒரு சேர நினைத்துப் பார்த்தவளின் கண்கள் பனித்து விட்டன!
"
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே!"
என்ற பாடல் வரிகள் அவள் மனதிற்குள் ஒலித்தது!!!!
***********************************************
மூன்று மாதங்கள் சென்றதே தெரியவில்லை. மீனாட்சியின் பெரியப்பச்சி மகள் அகிலா என்ற அகிலாண்டேஷ்வரி
வெளிநாட்டிலிருந்து 18 நாட்கள் விடுப்பில் சென்னைக்கு வந்தவள், மீனாட்சியைப் பார்க்க தன் மூன்று வயதுக் குழந்தையுடன்
பெங்களூருக்கு வந்திருந்தாள்.
வந்தவளுக்கு எல்லாமும் ஆச்சரியமாக இருந்தது.
ஆச்சரியத்தில் பெரிய ஆச்சரியம், மீனாட்சி தன் கணவனை ’அய்த்தான்’ என்று ஒவ்வொருமுறையும் அழைத்தது. அவள் கணவன் சோமுவும் மீனாட்சியைப் பெயர் சொல்லி
அழைக்காமல் “கண்மணி’ என்று அழைத்ததும் ஆச்சரியமாக இருந்தது.
மீனாட்சியின் கணவன் தன்னுடைய அலுவலகத்திற்குப்
புறப்பட்டுச் சென்றவுடன், அகிலா மெதுவாகக் கேட்டாள்:
“என்னடி நடக்கிறது இங்கே? நீ அய்த்தான் அய்த்தான் என்று குழைகிறாய். அவர் பதிலுக்குக் கண்மணி கண்மணி என்று
குழைகிறார்.....என்ன ஆச்சு உங்களுக்கு? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்?
“எதற்காக கேட்கிறீர்கள் ஆச்சி?”
”இந்தக் காலத்து இளம் பெண்கள் அனைவருமே தங்கள்
கணவனை பெயர் சொல்லித்தானே அழைக்கிறார்கள். நான்
என் கணவர் இராமநாதனை ராம் என்று தான் அழைக்கிறேன்.
அவர் என்னை அகில் என்றுதான் அழைக்கிறார்!”
அது ஒவ்வொருவரின் பழக்கத்தைப் பொறுத்தது. அன்பு,
அபிமானம், வைத்திருக்கும் மரியாதையைப் பொறுத்தது.
அவர் தங்கமான மனிதர். என்னைவிட ஆறு வயது மூத்தவர். அவரைப் பெயர் சொல்லி அழைக்க என் மனம் ஒப்பவில்லை. அவரிடமே கேட்டேன். உங்களை அய்த்தான் என்று
அழைக்கட்டுமா? பத்தாம் பசலி என்று நீங்கள் நினைக்ககூடாது அதனால்தான் கேட்கிறேன் என்றேன். அதற்கு அவர் உன் விருப்பம்போல எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்
என்று சொல்லிவிட்டார். ஆரம்பத்தில் இருந்து அவரும் என்னைக் கண்ணின் மணி - கண்மணி என்றுதான் அழைக்கிறார்”
”போகட்டும், காலையில் எழுந்தவுடன் தரையில் பாயை
விரித்துக் கொண்டு அமர்ந்து, சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை எல்லாம் அழகாக நறுக்கித் தட்டில் அடுக்கிக் கொடுத்து விடுகிறாரே! அதுவும் எனக்கு ஆச்சரியமாக
உள்ளது. என் கணவர் இருந்த இடத்தைவிட்டு நகர மாட்டார்.
காப்பி குடித்த டம்ளரை சிங்கில் கொண்டு போய் போடமாட்டார். நான்தான் எடுத்துக் கொண்டுப்போய்ப் போட வேண்டும். அவர் குளிக்கச் சென்றால், உள்ளாடைகள், டவல் என்று எல்லாவற்றையும் நான் தான் கொண்டுபோய்க் குளியலறையில் போட வேண்டும். எல்லாவற்றிலும் மிதப்பாக இருப்பார். ஒத்தாசையாக இருக்க மாட்டார். அது பற்றிப் பேசினால் சண்டைதான் வரும். ஆகவே
நான் எதுவும் பேசுவதில்லை. குணம் அறிந்ததால், தலையைக் கொடுத்துவிட்டோம் என்று சரி பண்ணிக் கொண்டு போகிறேன்.”
“காலப்போக்கில் எல்லாம் சரியாவிகிடும் ஆச்சி. பொறுமையாக இருங்கள்!”
“வேறு வழியில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். ஆமாம்
கேட்க வேண்டும் என்று நினைத்தேன். சென்றமுறை, அதாவது
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உன்னை நான் பார்த்தபோது, கலக்கலாக இருப்பாயே - இப்போது அடியோடு மாறிவிட்டாயே -
எப்படி மாறினாய்? என்ன காரணம்?”
“எங்கள் ஆத்தாவின் அறிவுரைதான் காரணம். என்னுடைய திருமணத்திற்கு முன்பிருந்தே தினமும் எனக்கு பல அறிவுரைகளைச் சொன்னார். அதில் மூன்று அறிவுரைகள் முக்கியமானவை. அதன்படிதான் நடக்கிறேன்.”
“என்ன அறிவுரை? எனக்கும் சொல்லேன்!”
“இனிமேல் உனக்கு உன் கணவர்தான் முக்கியம். நாங்கள் யாரும் உடன் வரமாட்டோம். அவரின் மனம் நோகாமல் நடந்து கொள்.
அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள். வியாபாரத்தில், வாடிக்கையாளர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்கின்ற பொன்மொழி உண்டு - அதாவது
customer is always right' என்பதுதான் தாரக மந்திரம். அது போல தாம்பத்திய
வாழ்க்கையில் கணவர் எப்போதுமே சரியானவர் என்பதுதான் தாரக மந்திரம்
Husband is always right. அவரை எதிர்த்துப் பேசாதே. எந்த சூழ்நிலையிலும் அவருடன் சண்டை போடாதே. இதுதான் முதல் அறிவுரை”
“இரண்டாவது........”
“கணவருக்கு மரியாதை கொடு. ஒருமையில் அழைக்காதே! மூன்றாவது அறிவுரை முக்கியமனது. அவரிடம் நேர்மையாக
நடந்து கொள். ஒளிவு மறைவாக எதையும் செய்யாதே!”
“அருமை! இதையெல்லாம் மீறி ஒன்று இருக்கிறது தெரியுமா? அதுதான் தலை எழுத்து! நாம் வாங்கி வந்த வரம்! மனைவி
அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலைக் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக எழுதினார். ஆனால்
அவர் கணவனுக்காக என்ன எழுதினார் என்பது தெரியவில்லை! நல்ல கணவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்!”
இவ்வாறு பேசி முடிக்க முடிக்க அகிலாவின் கண்களில் நீர் துளிர்த்தது.
அதைக் கேட்ட மீனாட்சியின் கண்களும் பனித்து விட்டன!!! ****************************************************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!