Astrology உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்னடா செய்தார் கண்ண பரமாத்மா?
இந்தப் பதிவின் முதல் பகுதி 4.2.2013 அன்று வெளியானது. அதன் தொடர்ச்சியை இன்று தந்துள்ளேன். முன் பதிவைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கான சுட்டி (URL LInk): http://classroom2007.blogspot.in/2013/02/astrology.html
--------------------------------------------------------------------------------------------------------------
கண்ண பரமாத்மா, தன்னுடைய கோபத்தை மறந்து புன்னகை செய்தார். அத்துடன் “என்னுடைய வேலை என்ன என்பதைச் சொல்லிவிட்டாய் அல்லவா? என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சகாதேவனிடம் சொன்னவர், அந்த இடத்தை விட்டு, புறப்பட்டுச் சென்று விட்டார் என்று முன் பதிவில் எழுதியிருந்தேன்.
புறப்பட்டுச் சென்ற கண்ண பரமாத்மா என்ன செய்தார்?
அவர் தன் வேலையைச் செய்தார். அதுவும் சுவாரசியமாக இருக்கும். அந்த நிகழ்வு கீழே உள்ளது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்.
-------------------------------------------------------------------------------------------------------
பகுதி 2
அமாவாசைத் திதியின் முக்கியத்துவம்
கண்ண பரமாத்மா இறைவனில்லையா? அவர் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் அவரால் செய்ய முடியும். ஆனால் தான் அவதாரம் எடுத்த நோக்கத்தை நிறைவேற்ற அவரும் மனிதர்களுக்கு விளங்கும்படியாகச் சில செயல்களைச் செய்ய வேண்டும். செய்தார்
அதனால் மார்கழி அமாவாசையன்று காளிக்குக் களபலி கொடுத்து, யுத்தத்தை துவங்க இருந்த துரியோதனனைக் குழப்புவதற்காக, கண்ண பரமாத்மா, அமாவாசையை ஒரு தினம் முன்னதாக வரும்படி செய்தார்
எப்படி?
'அதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே வந்த கண்ணபிரான், 14-ஆம் நாளான சதுர்த்தசியன்று, ஆற்றங்கரைக்குத் தர்ப்பணம் செய்யச் சென்றார். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். 'இதென்ன குழப்பம்! நாளைக்குத்தானே அமாவாசை! கிருஷ்ண பரமாத்மா இன்றைக்குத் தர்ப்பணம் செய்கிறாரே...’ என்று பிரகஸ்பதியிடம் கேட்டார்கள். அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினார்கள். புலம்பித் தீர்த்தார்கள். 'என்ன இது... ஒன்றுமே புரியவில்லையே..?’ என்று தவித்துப் போனார்கள்.
அமாவாசைக்கு முதல் தினம் ஆற்றங்கரைக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பதற்கு வேத சாஸ்திரிகளை வைத்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் கண்ண பரமாத்மா. அமாவாசை அன்று இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் இறைவடிவான பகவான் சொல்லும்போது, எப்படி எதிர்த்துப் பேசுவது என்று வாளாவிருந்து விட்டார்கள்.
சப்த ரிஷிகளும் திகைத்துபோய் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் மட்டுமா? அதிர்ச்சி அடைந்த சூரியபகவானும், சந்திர பகவானும் ஒன்றாக அங்கே வந்துவிட்டார்கள்.
அதற்குள் தர்ப்பணம் செய்வதற்காக கண்ண பரமாத்மா அமர்ந்து விட்டார்
ஆனாலும், துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, சூரிய, சந்திரர்கள் அவரிடம் கேட்டார்கள்
“பகவானே, இது என்ன வேடிக்கை? இன்று அமாவாசை இல்லையே? நீங்கள் எப்படி இன்று தர்ப்பணம் கொடுக்கலாம். இது மக்களுக்குத் தவறான வழி காட்டுதல் ஆகாதா?”
பரமாத்மா திருப்பிக் கேட்டார், “எப்படித் தவறாகும்? அமாவாசை என்றால் என்ன? சொல்லுங்கள்”
“'இதென்ன கேள்வி... சூரிய பகவானாகிய அவரும் சந்திரனாகிய நானும் சந்தித்துக் கொள்வதுதான் அமாவாசை திதி'' என்றார் சந்திர பகவான்.
“இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள் இன்று அமாவாசைதானே?”
அவர்கள் இருவரும் வாயடைத்துபோய் விட்டார்கள்
அது உண்மையில் அமாவாசை நாளாக இல்லாவிட்டாலும், அவர்கள் இருவரும் சேர்ந்ததால் அமாவாசை நாளாகிவிட்டது.
கண்ண பரமாத்மா எண்ணி வந்த காரியம் தங்கு தடையின்றி நிறைவேறியது!
உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, அதாவது பஞ்ச பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக் இப்படி ஒரு தந்திரத்தைக கையாண்டார் கண்ண பரமாத்மா!
இறைவனின் அருள் இருந்தால் என்னதான் நடக்காது?
---------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!