சிறுகதை: வினைப் பயன்!
சிங்காரம் செட்டியாரின் ஒன்று விட்ட தங்கச்சி, அதாவது அவருடைய சின்னத்தாள் மகள் சாலா, அதிகாலையிலேயே வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.
அவள் கணவனுக்கு கேன்சர் நோயாம். ஆரம்பக்கட்டமாம். கழுத்தில் புறப்பட்டிருந்த கட்டியைச் சிறிது வெட்டி பயோப்ஸி சோதனை செய்ததில் உறுதியாகி உள்ளதாம். முப்பது சிட்டிங் கதிர்வீச்சு சிகிச்சையும், எட்டு டோஸ் ஹீமோதெரபி ஊசி மருந்தும் போட வேண்டுமாம். மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் செலவாகுமாம். முதலில் 25,000 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி மருத்துவமனையில் சொல்லிவிட்டார்களாம்.
பாவம் இல்லாதவள். கஷ்ட ஜீவனம். பணத்திற்கு எங்கே போவாள்?
அதுதான் உதவி கேட்டு சிங்கார அண்ணனைப் பார்க்க வந்திருக்கிறாள்.
அண்ணனின் மனைவி சிந்தாமணி ஆச்சி, வந்தவளுக்கு அருமையான ஃபில்டர் காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு, அவள் அருகில் அமர்ந்து, அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அண்ணனின் மனம் பேச்சில் லயிக்காமல், என்ன காரணம் சொல்லி அவளை அனுப்பலாம் என்பதில் முனைப்பாக இருந்தது.
அண்ணன் நினைத்தால், ஒன்றும் சொல்லாமல் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவியிருக்கலாம். அவருக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல! ஆனால் அப்படிச் செய்வதில் அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.
அவள் பேசி முடித்தவுடன், குரலைச் சற்றுக் கடுமையாக்கிக்கொண்டு, ”அவ்வளவு பணம் தற்சமயம் என்னிடம் இல்லை சாலா. நீ திருப்பித்தர வேண்டாம். நான் மூவாயிரம் ரூபாய் தருகிறேன். மீதிப் பணத்திற்கு எங்காவது நீ ஏற்பாடு செய்துகொள்” என்று சொன்னவர், உள் அறைக்குச் சென்று தன்னுடைய அலமாரியில் இருந்து மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டும் கொண்டு வந்து கொடுத்தார்.
முதலில் அதை மட்டும் வாங்கிக் கொள்ளத் தயங்கியவள், சிந்தாமணி ஆச்சியின் கண் ஜாடையைப் பார்த்துப் புரிந்து கொண்டு, கை நீட்டி அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டாள்.
அவள் சென்றவுடன், ஆச்சி செட்டியாரை ஒரு பிடிபிடித்து விட்டார்கள்.
“உங்களிடமென்ன பணமா இல்லை? அவள் கேட்ட தொகையை நீங்கள் கொடுத்திருக்கலாம்”
“புரியாமல் பேசாதே! அந்த இருபத்தையாயிரத்துடன் பிரச்சினை முடியாது. அடுத்தடுத்து அவள் வருவாள்!”
“அவள் இந்த ஊருக்கு வந்து இருபது வருஷமாகுது. இதுவரை ஒரு தடவையாவது, பணம் கேட்டு நம் வீட்டு வாசப்படியை மிதித்திருக்கிறாளா - சொல்லுங்கள்! இப்போது, கஷ்டத்திற்குத்தானே வந்து கேட்கிறாள்”
”கஷ்டம் வருவதெல்லாம் வினைப்பயனால் வருவது. அடுத்தவன் அதை வாங்கிக் கொள்ள முடியாது. பட வேண்டிய கஷ்டத்தை அவள் பட்டுத்தான் ஆகவேண்டும். அதை நீ புரிந்துகொள்!”
"அவள் கணவனுக்கு வந்துள்ளது, இவளுக்கு எப்படி வினைப்பயனாகும்?”
“அவள் கணவனே இவளுடைய வினைப்பயன் காரணமாக வந்தவன்தான். இல்லாவிட்டால் இவளுக்கு நல்ல கணவன் கிடைத்திருக்க மாட்டானா?”
“நல்ல கணவன் கிடைப்பதெல்லாம் அமையும் வாய்ப்பைப் பொறுத்தது. அவளுடைய கணவன் மிகவும் நேர்மையானவன். அதை முதலில் உணருங்கள். நல்லவர்களுக்குத்தான் அடுத்தடுத்து சோதனைகள் வரும். அவர் தீவிர முருக பக்தர். பழநியப்பன் அவருக்கு நிச்சயம் உதவி செய்வான்” என்று சொன்ன ஆச்சி, அதற்கு மேல் பேச வேண்டாம் என்று எழுந்து உள்ளே போய் விட்டார்கள்.
அடுத்து என்ன நடந்தது?
அன்று காலை பதினோரு மணிக்கு, சரவணம்பட்டியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து காந்திபுரம் வரை சென்று வருவதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்ற ஆச்சி, சாலாவை அவள் வீட்டில் சந்தித்து, இருபத்தையாயிரம் ரொக்கத்தைக் கொடுத்து மருவத்துவமனைச் செலவிற்கு வைத்துக் கொள்ளும்படி கூறியதோடு, தான் பணம் கொடுத்துள்ளது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு மாதம் சென்றிருக்கும். எதிர்பாராத ஒன்று சிங்காரம் செட்டியார் வீட்டில் நடந்து விட்டது.
அதில், சிந்தாமணி ஆச்சிக்கு ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.
இரண்டு மணிவிழாக்கள், ஒரு கல்யாணக்கார வீடு, என்று மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஒரு வாரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஆச்சியும், செட்டியாரும் ஊருக்குப் போய்விட்டு, திரும்பக் கோவைக்கு வருவதற்குள், யாரோ சில களவாணிப் பயல்கள், பூட்டை உடைத்து, வீட்டிற்குள் இருந்த முக்கியமான, விலை உயர்ந்த சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போயிருந்தார்கள்.
போனவைகளில் சிங்காரம் செட்டியாரின் உடைமைகளே அதிகம்.
கழுத்துச் செயின், கைச் செயின், இரண்டு கேரட் வைர மோதிரம், பஞ்சு வியாபாரி ஒருவருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், சட்டை தைப்பற்காக வைத்திருந்த இருபது மீட்டர் உயர்ரக வெள்ளைத் துணி, புது வேஷ்டிகள் ஆறு, ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில் மூன்று என்று செட்டியாரின் பீரோவில் இருந்த பெரும்பாலான பொருட்கள் களவு போயிருந்தன. களவுபோனது பண மதிப்பில் மொத்தம் பத்து லட்சம் இருக்கும்
ஆச்சியின் பீரோவை அவர்கள் உடைக்கவில்லை. அந்தக் காலத்து லண்டன் பீரோ. உடைக்க முடியவில்லை போலும். ஆச்சி பயன் படுத்தும் பொருட்களில், டேபிள் டாப் வெட் கிரைண்டர் ஒன்றும், சி.டி ப்ளேயர் ஒன்றும் காணாமல் போயிருந்தது.
இது வருத்தப்பட வேண்டிய சம்பவம்தானே? சற்று மகிழ்வதற்கு என்ன இருக்கிறது?
ஆச்சி தன் இருபத்தைந்து வருட மண வாழ்க்கையில் செட்டியாரிடம் அதிகமாகக் கண்டதெல்லாம் அவருடைய கருமித்தனம்தான். கோவில் குருக்களின் தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் தட்சணை போடமாட்டார். உண்டியலில் பத்து ரூபாய்க்கு மேல் போட்டதில்லை!
அக்கம் பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைகளில் மளிகைச் சாமான்கள், காய்கறிகள் எல்லாம் விலை அதிகம் என்று அங்கே வாங்க மாட்டார். ராஜவீதி மார்க்கெட்டில் உள்ள மொத்தவிலைக் கடைகளில்தான் வாங்குவார். கோவையில் தையற்கூலி மிக அதிகம் என்று சட்டை, துணிமணிகளை செட்டி நாட்டிலுள்ள தனது ஊரிலேயே வருடத்திற்கு ஒருமுறை தைத்துக் கொண்டு வந்துவிடுவார்,
இரவு சமையல் கூடாது. கேஸைப் பிடித்த கேடு என்று சொல்லி, மதியமே இரவிற்கும் சேர்த்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவருக்கு தயிர் சாதமும், மாங்காய் ஊறுகாயும் இருந்தால் போதும். ஆச்சி சற்று ருசியுடன் சாப்பிடக்கூடியவர்கள் தனக்கு வேண்டியதை மதியமே விதம் விதமாக சமைத்து வைத்துக்கொண்டு விடுவார்கள்.
உயர்ரக வெள்ளைத் துணிகள், புது வேஷ்டிகள், ஈரிழைத்துண்டுகள், ஜமுக்காளங்கள் போன்ற துணிமணிகள் எல்லாம் அவர் செய்யும் பஞ்சு, மற்றும் நூல் வியாபாரத்தின் மூலம் பழக்கமான துணி உற்பத்தியாளர்களிடம் ஓசியில் வாங்கிக்கொண்டு வருவதாகும். ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில்கள், வாசனை சோப்புக்கள், ஷேவிங் க்ரீம்கள், லோஷன்கள் என்று மேனி அலங்காரப் பொருட்கள் எல்லாம் துபாயில் பணியில் இருக்கும், அவருடைய உடன்பிறப்பு வாங்கிக் கொண்டுவந்து தருவதாகும்.
செட்டியார் ஆடிப் போயிருந்தார். அவரைச் சமாதானப் படுத்தி, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று ஆச்சிதான் அனுப்பிவைத்தார்கள்.
புகார் கொடுத்துவிட்டு வந்தவர், காலைப் பலகாரத்தைக்கூடச் சாப்பிடாமல், உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
ஊருக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வங்கிகள் ஸ்ட்ரைக்கில் இருந்ததால், புதிதாகச் செய்து வந்த நகைகளை லாக்கரில் வைக்க முடியாமல் போனதைப் பற்றியும், பணத்தைப் பஞ்சு வியாபாரிக்கு அனுப்ப முடியாமல் போனதைப் பற்றியும், திரும்பத் திரும்பச் சொல்லி, புலம்பிக் கொண்டிருந்தார். தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆச்சி ஒரே போடாகப் போட்டு அவருடைய புலம்பலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
“நீங்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதால், போன சாமான்கள் திரும்பி வரவா போகிறது? எல்லாம் வினைப்பயன் என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் வினைப்பயனைப் பற்றி நன்றாகத் தெரியுமே! போக வேண்டிய நேரம் போய்விட்டது. அவ்வளவுதான்!”
ஆனாலும் அவர் விடவில்லை.
“ஆண்டிற்கு இரண்டு தடவை நடைபாதப் பயணம் சென்று பழநியப்பனையும், குழந்தை வேலாயுதசாமியையும் தொடர்ந்து கும்பிட்டு வருகிறேனே, அவர் ஏன் இதைத் தடுக்கவில்லை?”
“தெய்வத்தை எல்லாம் நிந்தனை செய்யாதீர்கள். உங்களுக்குப் பெரிதாக ஏதோ வர வேண்டியதைக் குறைத்து, இந்த அளவோடு நஷ்டத்தைக் கொடுத்துத் தப்பிக்க வைத்திருக்கிறார் முருகப் பெருமான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.”
“இதைவிடப் பெரிதாக என்ன வரவேண்டும்?”
“ சாலை விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில், மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். நஷ்டம் எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அந்த நிலைமை எல்லாம் இல்லாமல், இந்த அளவோடு போனதே என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்”
“அப்போ, நான் வருடத்திற்கு இரண்டு முறை பாதயாத்திரை செல்வதற்கு இவ்வளவுதான் பயனா?”
“நீங்கள் மட்டும்தான் போகிறீர்களா? ஆயிரக் கணக்கான மக்கள் போகிறார்கள். எல்லோரும் ஒவ்வொரு பிரார்த்தனையோடு போகிறார்கள். வேண்டுதல் களோடு போகிறார்கள். அப்படி செல்லும் மக்களுக்கு, பல நகரத்தார் பெருமக்கள், ஆயிரம், இரண்டாயிரம் பேர்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு செய்து போடுகிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். வழியில் நடப்பவர்கள் தங்குவதற்குப் பெரும் பொருட் செலவில் கொட்டகை போட்டுக் கொடுக்கிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். தண்ணீர் பந்தல்களை வைத்து தாகத்தைத் தணிக்கிறார்களே அவர்களை நினைத்துப் பாருங்கள். கைக்காசை செலவழிப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும்? பரந்த மனப்பான்மை வேண்டும்? முருகப் பெருமான் உங்கள் கால்களைப் பார்த்து உதவுவதில்லை. உங்கள் மனதைப் பார்த்துத்தான் உதவுவார்.அதைப் புரிந்து கொள்ளுங்கள்”
செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது.
ஆச்சியின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டதால், செட்டியாரின் கண்கள் கலங்கிவிட்டன!
அன்று மதியம், வங்கிக்குச் சென்று, தன் கணக்கில் இருந்து இருபத்தை யாயிரம் ரூபாய் பணத்தை எடுத்தவர், அந்தப் பணத்துடன் தன் சின்னத்தா மகள் சாலா வீட்டிற்குச் சென்றார். சாலா வீட்டில்தான் இருந்தாள். அவளுடைய கணவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு நலமுடன் வந்துவிட்டவன், கவலை தோய்ந்த முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.
சிங்காரம் அண்ணனைப் பார்த்தவுடன், இருவரும் முகம் மலர ’வாருங்கள்’ என்று வரவேற்றார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர், தன் கைப் பையில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து சாலாவிடம் கொடுத்த போது, அவள் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள்.
“இல்லை அண்ணே! தேவையான பணம் கிடைத்து விட்டது. இவர்களும் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். ஆகவே இப்போது பணம் எதுவும் வேண்டாம் அண்ணே!” என்றாள்.
“கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லாதே ஆத்தா! சிகிச்சை முடிந்து விட்டாலும், இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு உன் கணவன் வேலைக்குச் செல்ல முடியாது. ஆகவே நடப்புச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள். மேலும் தேவைப் பட்டாலும் வந்து கேள். தருகிறன்” என்று சொன்னதுடன், கட்டாயப் படுத்தி அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்தார்.
வந்தவர், அதைத் தன் மனைவியிடம் சொல்லவும் இல்லை.
”செய்யும் உதவியை, வெளிச்சம் போட்டுக் காட்டினால், அதற்குப் பலன் கிடையாது” என்று ஆச்சி சொல்வார்கள்.
அவர் ஆச்சியிடம் சொல்லாததற்கு அதுதான் காரணம்.
+++++++++++++++++++++++++++++++++++++
அடியவன் எழுதி., இந்த மாதம், இலக்கிய மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை இது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்!
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!