Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)!
சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.
அசையாத சொத்து
(Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.
நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.
அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.
நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?
கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.
எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.
சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.
அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.
கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.
”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”
என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.
ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று
Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.
உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை
பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது
2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.
3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.
4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.
5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.
6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.
7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு
8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி
9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு
10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடியாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்
இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.
ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.
“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.
அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.
இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!
மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.
பிரச்சினை தீரவே தீராது.
ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆகவேண்டும்.
கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.
பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.
ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?
இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!
1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?
2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு
(House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?
சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?
அது விரிவான பாடம். இப்போது நேரமில்லை. இன்னொரு நாள எழுதுகிறேன். பொறுத்திருங்கள்
ஒரே ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்லி, இன்றைய பாடத்தை நிறைவு செய்கிறேன்.
ஜாதகத்தில் லக்கினாதிபதியும், மனகாரகனும் வலுவாக இருப்பது முக்கியமாகும்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++