19.7.11

Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

------------------------------------------------------------------------------------------
Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?

                 மெல்லிசை மன்னர்கள் திரு எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசையமைத்து  1961ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாக்யலக்ஷ்மி’ என்ற திரைப்படத்தில், திருமதி. பி. சுசீலா அவர்கள் தன்னுடைய  கிறங்க வைக்கும் குரலால் பாடிய பாடல் ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் அது.   பாடலை இயற்றியவர் கவியரசர் கண்ணதாசன். அசத்தலான வரிகள் நிறைந்திருக்கும்  பாடல் அது  (சொல்லவா வேண்டும்?)

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
    காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


என்று பாடலின் பல்லவி இருக்கும். பல்லவியைவிட சரணத்தில் வரிகள் தூக்கலாக இருக்கும். நாயகி மனக்  குறையுடன் பாடுவாள்:

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
    இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?

---------------------------------------------------------------------------------------
நான் அதை மாற்றிச் சொல்வேன்

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
    என்றுமே இன்பம் சமமாய்க் கொண்டால் என்பதை அறிவாயா தோழி?


                உண்மை. எதையும் சமமாகப் பாவிப்பவர்களைத் துன்பம் அணுகாது. எல்லா மகாதிசைகளும் (Major Periods)

                 எல்லா புத்திகளும் (Sub Periods) அவர்களுக்கு ஒன்றாகத்தான் இருக்கும்
-------------------------------------------------------------------------------------------------
               முன் பாடத்தில், சந்திர மகா திசையில் அதன் சுயபுத்தி நடைபெறும் பத்து மாத காலத்திற்கான பலன்களைப்  பார்த்தோம். அதற்கு அடுத்து சந்திர மகா திசையில் செவ்வாயின் புத்தி. ஏழு மாத காலம் அது நடைபெறும். செவ்வாய் சந்திரனுக்கு நட்புக்கிரகம் என்றாலும் தன்னுடைய புத்தியில் நன்மையான பலன்களை அளிக்க மாட்டார். ஜாதகனைப் பாடாய்ப் படுத்தி விடுவார்.

             பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

தானென்ற சந்திரதிசை செவ்வாய்புத்தி
   தன்மையில்லா நாளதுவும் மாதம் ஏழு
வானென்ற அதன்பலனைச் சொல்லக்கேளு
   வாதமுடன் கிரந்திபித்தம் வாய்வுரோகம்
ஏனென்ற கள்ளரால் கோபமுண்டாம்
   எளிதான் ஏந்திழையால் துக்கமுண்டாம்
கோனென்ற கோதையரும் சகோதரத்தால்
   கொடுமைகளு முண்டாகும் கூர்ந்துபாரே!


            இதற்கு நேர்மாறாக செவ்வாய் மகா திசையில், சந்திரன் தன்னுடைய புத்திக்காலத்தில் (அதுவும் ஏழு மாதங்கள்தான்) நன்மையான பலன்களை வாரிவழங்குவார். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!

            பலனுக்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம்  தரவில்லை!

பூணுவான் செவ்வாய்திசையில் சந்திரபுத்தி
    புகழான நாளதுவும் மாதம்யேழு
ஆணுவான் அதன்பலனை அன்பாய்க்கேளு
    ஆயிழையா ளருகிந்து செல்வபதியாவான்
கோணுவான் கொடியோர்கள் வணக்கஞ்செய்வார்
    கொற்றவனே குவலயத்தில் பேர்விளங்கும்
ஊணுவான் தோகையரும் புத்திரருமுண்டாம்
    உத்ததொரு குலதெய்வம் உறுதிகாணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
19.7.2011

========================================

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. ///நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!///

    இன்றைய பாடத்தில் பிடித்த
    இந்த வரிகளை தொட்டுகாட்டுகிறேன்

    கெட்டவர்களும் நல்லவர்களே
    கெட்ட சமயமில்லாத போது...

    நல்லவர்களும் கெட்டவர்களே
    நல்லவர் அல்லாதாரோடு சேரும்போது

    கிரக கூட்டணிகளைபற்றி சொல்கிறேன்
    கிறுக்கு தனமாக உளறுவதாக சொல்ல

    சிலர் இருக்கலாம் நாம்
    சிலருக்காக இப்படி தான் இருக்கனும்

    வழக்கம் போல்
    வள்ளுவ சிந்தனை இந்த வகுப்பில்

    நிலத்து இயல்பால் நீர் திரிந்தற்றாகும்
    மாந்தர்க்கு
    இனத்து இயல்பதாகும் அறிவு

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,

    செவ்வாய் திசையில் ராகு புத்தி நடப்பு...
    செவ்வாய் திசை சந்திரபுத்தி, திசம்பர் ஈராயிரத்து பதினாறுக்கு மேல்.

    பதிவிற்கு நன்றி...

    என பங்கிற்கு புதியக் குறள் ஒன்றை என் குரலாகச் சொல்லி போகிறேன்..

    அழுக்காறு அவா வெகுளி இலான்கண்
    இழுக்காறு என்றும் இல. - தமிழ் விரும்பி.

    நன்றிகள் பல...

    ReplyDelete
  3. தன் சுபத்தன்மையால் நன்மை தரக் கூடிய சந்திர தசையில் செவ்வாய் புத்தி தன் பங்கு தீமையும் தீமை செய்யக் கூடிய செவ்வாய் தசையில் சந்திரன் நன்மை செய்வார் என்பதற்காக சொல்லப் பட்டது போலும்.

    ReplyDelete
  4. மாறிமாறி இன்பம் துன்பம் வரும் என்பதுதான் சோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை.சரி! என் வயதுக்கு இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் வந்தாகிவிட்டது. கவலைஇல்லை.

    தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்க‌வில்லையோ?

    அதுபோல புத்தக வெளியீடு எப்போது?

    நான் செப்டம்பர் இறுதியில் இந்தியாவில் இருப்பேன். எனவே தகவல்களை எனக்கு மறக்காமல் அனுப்பப் பணிந்து வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. நானும் திருக்குறள் தான் சொல்வேன்..

    ஹிஹி ஹஹ ஹா...

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
    அன்றாங்கால் அல்லல் படுவது எவன் ?

    ReplyDelete
  6. வணக்கம் கிருஷ்ணன் ஐயா,

    நலம் நலமே நாடுகிறோம்.

    //தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்க‌வில்லையோ?//

    என்ன இது எனக்குப் புரியவில்லை ஐயா..

    யார் புதிய இணையதளம் ஆரம்பித்திருக்கிறார்கள் ?

    ReplyDelete
  7. பாடல்களுடன் விசயங்கள் அற்புதம்

    ReplyDelete
  8. //////Blogger iyer said...
    ///நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!///
    இன்றைய பாடத்தில் பிடித்த
    இந்த வரிகளை தொட்டுகாட்டுகிறேன்
    கெட்டவர்களும் நல்லவர்களே
    கெட்ட சமயமில்லாத போது...
    நல்லவர்களும் கெட்டவர்களே
    நல்லவர் அல்லாதாரோடு சேரும்போது
    கிரக கூட்டணிகளைபற்றி சொல்கிறேன்
    கிறுக்கு தனமாக உளறுவதாக சொல்ல
    சிலர் இருக்கலாம் நாம்
    சிலருக்காக இப்படி தான் இருக்கனும்
    வழக்கம் போல்
    வள்ளுவ சிந்தனை இந்த வகுப்பில்
    நிலத்து இயல்பால் நீர் திரிந்தற்றாகும்
    மாந்தர்க்கு
    இனத்து இயல்பதாகும் அறிவு/////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  9. ////////Blogger தமிழ் விரும்பி said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    செவ்வாய் திசையில் ராகு புத்தி நடப்பு...
    செவ்வாய் திசை சந்திரபுத்தி, திசம்பர் ஈராயிரத்து பதினாறுக்கு மேல்.
    பதிவிற்கு நன்றி...
    என பங்கிற்கு புதியக் குறள் ஒன்றை என் குரலாகச் சொல்லி போகிறேன்..
    அழுக்காறு அவா வெகுளி இலான்கண்
    இழுக்காறு என்றும் இல. - தமிழ் விரும்பி.
    நன்றிகள் பல...//////////

    குறள் ஒரு பொதுமறை. யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்! பயனடையலாம்!

    ReplyDelete
  10. //////Blogger ananth said...
    தன் சுபத்தன்மையால் நன்மை தரக் கூடிய சந்திர தசையில் செவ்வாய் புத்தி தன் பங்கு தீமையும் தீமை செய்யக் கூடிய செவ்வாய் தசையில் சந்திரன் நன்மை செய்வார் என்பதற்காக சொல்லப் பட்டது போலும்.//////

    ஆமாம். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  11. Blogger kmr.krishnan said...
    மாறிமாறி இன்பம் துன்பம் வரும் என்பதுதான் சோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை.சரி! என் வயதுக்கு இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் வந்தாகிவிட்டது. கவலைஇல்லை.
    தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்க‌வில்லையோ?
    அதுபோல புத்தக வெளியீடு எப்போது?
    நான் செப்டம்பர் இறுதியில் இந்தியாவில் இருப்பேன். எனவே தகவல்களை எனக்கு மறக்காமல் அனுப்பப் பணிந்து வேண்டுகிறேன்./////

    புத்தகவேலை அணிந்துரைக்காக கிடப்பில் உள்ளது. அது வந்தவுடன் வேலை முடிந்துவிடும். பொறுத்திருங்கள். தனி இணையதளம் ஜனவரி 15ஆம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளதே!மேல் நிலைப் பாடங்கள் அதில் வந்து கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  12. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    நானும் திருக்குறள் தான் சொல்வேன்..
    ஹிஹி ஹஹ ஹா...
    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
    அன்றாங்கால் அல்லல் படுவது எவன் ?/////

    குறள் ஒரு பொதுமறை. யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்! பயனடையலாம்!

    ReplyDelete
  13. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வணக்கம் கிருஷ்ணன் ஐயா,
    நலம் நலமே நாடுகிறோம்.
    //தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்க‌வில்லையோ?//
    என்ன இது எனக்குப் புரியவில்லை ஐயா..
    யார் புதிய இணையதளம் ஆரம்பித்திருக்கிறார்கள்?//////

    வாத்தியார்தான். ஜனவரி 15ஆம் தேதி முதல் அது பயன்பாட்டில் உள்ளதே!மேல் நிலைப் பாடங்கள் அதில் வந்து கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  14. //////Blogger மாய உலகம் said...
    பாடல்களுடன் விசயங்கள் அற்புதம்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com