-------------------------------------------------------------------------------------
62 வயது இளைஞரின் முதல் விமானப் பயணம்!
வாரமலர்
இந்தவார வாரமலரை 62 வயதானாலும், மனதளவில் என்றும் இளைஞரான வகுப்பறை மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள். அவருக்கும் ஒரு ‘ஓ’ போடுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------------------
என்னுடை 62 வது வயதில்தான் முதல் முதலாக விமானத்தில் ஜூன் 26, 2011 ஞாயிறு இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறினேன்.
ஏற்கனவே என் மனைவியார் ஒருமுறை அமெரிக்கா பயணம் செய்து இருந்ததால் அவர்களுக்கு விமான நிலைய நடைமுறைகள் என்னைக் காட்டிலும் நன்கு தெரியும்.அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் வெற்றிகரமாக விமானத்தில் எங்கள் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டோம்.
இரவு சரியாக 9 மணிக்குக் கிளம்பிய விமானம் 10 30க்கு எல்லாம் கொழும்புவில் எங்களைக் கொண்டு கக்கிவிட்டது. மேற்பயணம் செல்பவர்களுக்கான இடத்தில் சென்று காலை 5 மணிவரை காத்து இருந்தோம். (சிக்கனம் கருதி நேரடி விமானத்தில் செல்லவில்லை.எனவே காத்திருப்பு). காத்திருப்பு இடத்தில் வருவோரும் போவோருமாக அந்த இரவு நேரத்திலும் திருவிழாக் கூட்டம். சிறிய நாடான ஸ்ரீ லங்காவில் கூட இத்தனை பெரிய விமான நிலையமா என்று ஆச்சரியமாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் லிஃப்ட் பழுதாகி இருந்ததும்,விமானம் ஏறும் முன் கதவு திறக்கும் இடத்தில் இருந்த நெருக்கடியும் ஏனோ என் கண் முன் வந்து நின்றது.
காலை 4 மணிக்கே பாதுகாப்புப் பரிசோதனைக்குச் சென்றோம். ஷூ முதல் பெல்ட் ஈராக அனைத்தையும் கழற்றி வைக்கச் சொன்னார்கள்.கொஞ்சம் கெடுபிடிதான். நானும் மனைவியாரும் தனித்தனியே பிரிந்துவிட்டோம். அவர்கள் விமானத்துக்கு உள்ளேயே போய்விட்டார்கள். என் சோதனையின் போது சொல்வது விளங்காமல், வேறு ஒரு வரிசையில் போய் நின்று விட்டேன். அந்த வரிசை தீவிரவாதிகளென்று சந்தேகப்படுபவர்களை மேலும் சோதிக்க உண்டானது.ஒரு இலங்கைத் தமிழ் இளைஞனின் கடவுச்சீட்டை பூதக்கண்ணாடி உதவியுடன் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு ஓர் அதிகாரி நின்று கொண்டிருந்தார்.அந்த இளைஞனுக்குப் பின்னர் ஐந்து நிமிடங்கள் நின்ற பின்னர், ஏற்கனவே சோதித்த அதிகாரி, "இங்கே நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்? விமானத்துக்குச் செல்லுங்கள்" என்று ஆணையிட்டார். அப்பாடி!தப்பித்தோம் என்று ஓடி விமானத்தில் போய் ஏறினேன்.எனக்கு முன் போய் அமர்ந்து இருந்த மனைவியார் கைகாண்பித்து 'அன்புடன்'வரவேற்றார்.
விமானப் பணிப்பெண்களை நான் உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்ட மனைவியார், 'என்ன அப்படிப் பார்வை?'என்று உரிமையுடன் கண்டித்தார்.
"இல்லை. இவர்கள் ஒன்று போல் எல்லோரும் புன்முறுவல் முகத்துடன் இருக்கிறார்களே,அவர்களுடைய முகத்தில் இருப்பது உண்மையான புன்னகையா அல்லது ஏதாவது ஒப்பனை மூலம் சிரித்த முகத்தைக் காண்பிக்கிறார்களா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தேன். நீங்கள் ஒன்றும் தவறாக நினைக்காதீர்கள்" என்று சமாளித்தேன்.
"36 வருடமாக உங்களைப் பார்த்து வருகிறேனே! உங்ளைப் பற்றி எனக்குத் தெரியாதா? உங்கள் ஆராய்ச்சி எதைப் பற்றி இருக்கும் என்று எனக்கு நனறாகத்தெரியும்" என்று 'தேனிலும் இனிய' குரலில் கூறினார்கள். அந்தக் குரலில் இருப்பது பாராட்டா திட்டா என்பதை எந்த உரை ஆசிரியராலும் சரியாகச் சொல்லமுடியாது.
காலை ஐந்து மணிக்கெல்லாம் கொழும்புவை விட்டு விமானம் கிளம்பிவிட்டது.11 மணிநேரம் எங்கும் தரை இறங்காமல் ஹீத்ரூ விமான நிலையத்தை நோக்கிப் பயணம். சீட்டுக்கு எதிரில் இருந்த திரையில் விமானம் பறந்துகொண்டு இருக்கும் உயரம், வெளியில் இருக்கும் வெப்ப நிலை, எந்த நாட்டின் மீது பறந்து கொண்டு உள்ளது, இன்னும் எத்தனை பயண நேரம் மீதம் உள்ளது, என்பது போன்ற தகவல் எல்லாம் காணக் கிடைக்கிறது.
அந்த சிறு திரையில் சினிமாவும் பார்க்கலாம். ஓர் இந்திப்படம், மாதவன் நடித்தது ஓடியது. சூர்யா நடித்த சிங்கம் மற்றொரு தமிழ்ப் படம்.ஒலி சரியாக வராததல் சினிமா ரசிக்கவில்லை.(அல்லது அந்த ஒலி கொடுக்கும் கருவியை எனக்கு இயக்கத்தெரியவில்லையோ? வெட்கப்பட்டுக் கொண்டு பணிப் பெண்ணிடம் கேட்கவில்லை)
சாப்பாடு சைவமானவர்களுக்கு விமானத்தில் கொஞ்சம் கஷ்டம்தான்.பன்றி இறைச்சியும், மீனும் அதிகமாக எல்லோரும் விரும்பி வாங்கி சாப்பிட்டார்கள். நாங்கள் ரொட்டி, பன் என்று முடித்துக்கொண்டோம்.
உற்சாகப் பானப்பிரியர்களுக்கு விமானப் பயணம் சொர்க்கம்தான்.உலகின் எல்லாவிதமான மதுவகைகளையும் கொண்டுவந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.ஆரஞ்சு ஜூஸ், லெமன் ஜூஸ் என்பதுடன் நமது தேவை நின்று போகிறது.
இலண்டன் விமான நிலையத்தில் பாட்டரி காரில் எங்களை 'குடியேற்றம்'(இம்மிகிரேஷன்) பகுதிக்கு அழைத்துச் சென்ற இரண்டு இளம் சிட்டுக்களை என்னால் மறக்கவே முடியவில்லை. ஒருத்தி கறுப்பினம். மற்றொருத்தி ஆசிய நாட்டைச்சார்ந்தவளாக இருக்க வேண்டும். என்ன ஒரு சுறு சுறுப்பு;உற்சாகம்! இளைமை ஊஞ்சல் ஆடுகிறது என்றார்களே அது என்ன என்பதை அங்கே உணர்ந்தேன்.
வாயிலில் என் மருமகப்பிள்ளை வந்து காத்திருந்தார்.எங்களையும் பெட்டிகளையும் ஒருசேர அவர் காரில் ஏற்றிக் கொண்டு 40 மைல் தள்ளியுள்ள அவருடைய இல்லம் கொண்டு சேர்த்தார்.நீண்ட நாளாகக் காணாத மகளையும் , பேத்தியையும், புதிய வரவான 70 நாள் ஆன பெயரனையும் கண்டு உற்சாகம் அடைந்தோம்.
கட்டிடங்களையும், இடங்களையும் பற்றி அல்லாமல் மனிதர்களையும் வாழ்க்கை முறைகளையும் பற்றி எழுத உள்ளேன். தொடர்ந்து படித்து மகிழ / மகிழ்ச்சியளிக்க வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்!
கே. முத்துராமகிருஷ்ணன், லால்குடி
முகாம்:இலண்டன் மாநகரம்
வாழ்க வளமுடன்!
மருமகப்பிள்ளை பற்றி ( நீண்ட நாள் காணவில்லை... ??? ) ஒன்றுமே எழுதலே. பாவம் அவர்... டிக்கட்டும் வாங்கி கொடுத்து !!!! ட்ரைவர் வேலை செய்தும்....
ReplyDelete- எல்லா மருமகன்கள் சார்பாக....
அன்புடன் வணக்கம் திரு ..
ReplyDeleteநினைத்தேன் நீங்களாகத்தான் இருக்கும் என..எனக்கும் இது போன்ற அனுபவம்.. மலேசியா செல்லும் போது ஆனால் என்ன >>>**நமது விமான கம்பனி** .இருபதிலே எவ்வளவு குறைவாக !!!கவனிக்க முடிமோ!!! அவ்வளவு குறைவாக!!!!கவனித்து **நிறைவு** செய்து விடுவார்கள்..சற்று மாறுபட்டு கலகலப்பாக இருக்கிறது பதிவு. வாழ்த்துக்கள்
வணக்கம் கிருஷ்ணன் சார்,
ReplyDeleteகலக்குறே சந்துரு..
என்று சொல்வார்களே அப்படி இருக்கிறது
ஜொள்ளும் + லொள்ளும்
களைகட்டுது...
இன்றளவிலும் இளமை குன்றா மனதிற்கு வாழ்த்துக்கள்..
அடுத்து... டேக் டைவர்சன் TO மாமி..
மாமீமீமீ... ( கேட்குதுங்களா )
அதான் இலண்டன்லே இருக்கீக
இல்லே ?
மாமா இந்த 62 லேயே இப்படினா ?
32 லே எப்பூடீ இருந்துருப்பார் ?
ரொம்பத்தான் காவ காத்திருப்பீக போல..
பூவும் மணமும் போல் வாழ்க...
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
super sir,
ReplyDeletemigavum nanraga ulladhu
enakku innum vimana payanam amaiya villai.
ungallu en vazhthukal.
உங்கள் விமானப் பயண அனுபவம் நன்று. நாம் அனுபவித்ததை பிறரும் அறிய இப்படி எழுதினால்தான் மனதுக்கு திருப்தி. இல்லையா? எழுதுங்கள்.
ReplyDelete///இளைமை ஊஞ்சல் ஆடுகிறது என்றார்களே அது என்ன என்பதை ///
ReplyDeleteஆடுதா இளமை ஊஞ்சல்
ஆட்டியதா மனதை அந்த இளமைகள்?
///சாப்பாடு சைவமானவர்களுக்கு விமானத்தில் கொஞ்சம் கஷ்டம்தான்.பன்றி இறைச்சியும், மீனும் அதிகமாக எல்லோரும் விரும்பி வாங்கி சாப்பிட்டார்கள். நாங்கள் ரொட்டி, பன் என்று முடித்துக்கொண்டோம்.///
ரொட்டி பன்னிலும் அங்கு
அப்படியே அசைவம் சேர்க்கிறார்கள்
பத்து மணிநேரம்
பச்ச தண்ணி கூட குடிக்காமல்
எமது வெளிநாட்டு பயணம் பலமுறை
சுகமாக அமைந்ததுண்டு
வெட்கமில்லாமல் என சில
வெளிப்படையாக சொன்ன
பதிவிற்கும் ..
படித்து மகிழும் தோழர்களுக்கும்..
வணக்கமும்
வாழ்த்துக்களும்..
////"இல்லை. இவர்கள் ஒன்று போல் எல்லோரும் புன்முறுவல் முகத்துடன் இருக்கிறார்களே,அவர்களுடைய முகத்தில் இருப்பது உண்மையான புன்னகையா அல்லது ஏதாவது ஒப்பனை மூலம் சிரித்த முகத்தைக் காண்பிக்கிறார்களா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தேன்.////
ReplyDeleteஇல்லை, ஒன்னு சொன்ன மாதிரி அச்சுல வார்த்தமாதிரி இருக்குதேன்னு யோசிச்சேன்னு சொல்லிருக்கணும்...
விளைவுகள் பற்றி யோசிச்சு மாத்திட்டதா நினைசுக்கிறோம்... (நீல, அகல, உயர அளவைச் சொன்னேன்)..
நல்லவேளை நம்ம ஊர் நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்கல.. தப்பிச்சீங்க சார்...
வாழ்த்துக்கள் சார் தொடரட்டும் சுவாரஷ்யம்.
நன்றி.
என் பதிவைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கம் அளிக்கும் ஐயாவுக்கும்,சோர்வடையாமல் வாசிக்கும் அனபர்களுக்கும்,பின்னூட்டம் இட்டுவரும் அனபர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.
ReplyDelete(விசு)ஐயர் அவர்கள் எல்லாவகையிலும் அனுபவஸ்தர் என்று தோன்றுகிறது.
அவர் சென்று வந்த வெளிநாடுகள் பற்றியெல்லாம் நமக்கு செய்திகள் கொடுக்கலாம்.எழுத்துத் திறமையும், சைவசிந்தாந்தம், பாரதியார், இன்னும் நாம் அறியாத பல பொருட்களிலும் சொல்லாடல் திறன் மிக்கவர் என்றே தோன்றுகிறது.இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் புத்தகங்களைவிட இணையத்திலேயே அதிகம் வாசிக்கிறார்கள். என்வே பூட்கமான பின்னூட்டங்களிலிருந்து விடுபட்டு,ஆக்கபூர்வமான கட்டுரைகளை அளித்து விஷயதானம் செய்யவேண்டும் என்று ஐயர அவர்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
இளைஞர்னா செயலூக்கம், துடிப்பு, வேகம், ரசனைனு ஒரு லிஸ்டே இருக்கும். ஜொள்ளும், லொள்ளும் பெருசுக்கலோட பாவனை வாத்தியாரே.
ReplyDeleteஎன் தம்பி ஸ்மார்ட்டா தம் மனைவி மற்றும் துனைவியாருடன் சென்ற கதை ஒன்று சொன்னான், வாய்ப்பு கிடைத்தால் அதை பதிவு செய்கின்றேன், நல்ல அனுபவ கதை.
//காத்திருப்பு இடத்தில் வருவோரும் போவோருமாக அந்த இரவு நேரத்திலும் திருவிழாக் கூட்டம்.// 62 இல்ல அப்படி தான் இருக்கும்.
ReplyDelete//சிறிய நாடான ஸ்ரீ லங்காவில் கூட இத்தனை பெரிய விமான நிலையமா என்று ஆச்சரியமாக இருந்தது.// புகைப்பழக்கம் உங்களுக்கில்லை என்றாலும் பெரிய விமான நிலையத்தில் புகைக்க தனி இடமிருப்பதை கண்டீர்களா? தங்களுக்கும் இந்த அன்டர் எஸ்டிமேஷன் பழக்கமுன்டா? சரிதான்.
//அவர்கள் விமானத்துக்கு உள்ளேயே போய்விட்டார்கள்// பாவம் அவர்கள்.
//அப்பாடி!தப்பித்தோம் என்று ஓடி விமானத்தில் போய் ஏறினேன்.// நான் சென்றபோது எனது வெள்ளி அரைஜான் கயிரையும் விடாம அவுத்துட்டானுங்க. ஊங்களை விட்டுடானுங்கனு சொல்லுரதை நம்பவே முடியலை.
சார் உங்களின் வானம் பார்த்த கதை சூப்பர்.
ReplyDelete//விமானம் ஏறும் முன் கதவு திறக்கும் இடத்தில் இருந்த நெருக்கடியும் ஏனோ என் கண் முன் வந்து நின்றது.// சென் EYE இல்லயா,
//கொஞ்சம் கெடுபிடிதான். நானும் மனைவியாரும் தனித்தனியே பிரிந்துவிட்டோம். அவர்கள் விமானத்துக்கு உள்ளேயே போய்விட்டார்கள். என் சோதனையின் போது சொல்வது விளங்காமல், வேறு ஒரு வரிசையில் போய் நின்று விட்டேன். அந்த வரிசை தீவிரவாதிகளென்று சந்தேகப்படுபவர்களை மேலும் சோதிக்க உண்டானது.// :) உங்களுக்கும் ஏதோ இருக்கு பாருங்கள்.
ம்ஹிம்.. அய்யாவைப்போல தேன் தமிழில் சொன்னால் கோனாருக்கெங்கே புரியும். எனது பயனத்தில் நான் பாஷ்மதி ரைஸ் வித் செட்டினாட் சைட்டிஷ் என்று அதிக பட்சமாக எங்கள் கம்பெனி ஆர்டர் செய்தது. ஜூஸ் எல்லாம் அதேதான். நிரைய ஆப்ஷன்சஸ் இல்லாம போனது தான் ஒரு வருத்தம்.
அய்யோ! அய்யோ!! ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் சொன்ன மாதிரி இந்தான்ட ஒரு கருப்பி அந்தான்ட ஒரு சொயிப்பி, லைப் ஃபுல்லாப் பன் யு நோ மாதிரி இருக்கே. இப்ப இப்ப தான் எழுத்தில் இளநரை தெரியுது. :)
//வாயிலில் என் மருமகப்பிள்ளை வந்து காத்திருந்தார். //
இதற்கு அல்லவா குடுப்பனை வேண்டும். நான் வேளை நிமிர்த்தமாக சென்ற இரண்டு பயனத்தின் போதும் எனது வர வேண்டிய டீம் லீட் மற்றும் எனது மேனேஜர் யாரும் வரவில்லை. அலைப்போசியில் அலைத்ததற்கு என்னை புல்லட் ரயில் அல்லது வாடகைக் கார் பிடித்து வரச்சொல்லிவிட்டார்கள். நல்ல வேலை அலுவலக, தங்கும் முகவரி என்னிடம் இருந்தது. பணத்தை ரீஎம்பர்ஸ் செய்துவிட்டார்கள்.
//Vijayashankar said... // சரியாக சொன்னிர்கள் சகோதரரே. வயதானால் பாருங்கள் மருமகன் மறைந்து விட்டன். மற்ற எல்லோரும் தெரிகின்றது.
///சரியாக சொன்னிர்கள் சகோதரரே. வயதானால் பாருங்கள் மருமகன் மறைந்து விட்டன்.///
ReplyDeleteகடைக்குட்டி அவர்களே!தமிழை உடனே சரி செய்யுங்கள்.'மருமகன் மறந்து விட்டான்' என்று எழுத வேண்டும்.என்ன எழுதியுள்ளீர்கள் பாருங்கள். எவ்வளவு 'சீரியஸா'ன பொருள் வருகிறது பாருங்கள்.
///இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் புத்தகங்களைவிட இணையத்திலேயே அதிகம் வாசிக்கிறார்கள்.
ReplyDeleteஎன்வே பூட்கமான பின்னூட்டங்களிலிருந்து விடுபட்டு,ஆக்கபூர்வமான கட்டுரைகளை அளித்து விஷயதானம் செய்யவேண்டும் என்று ஐயர அவர்களைப் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.///
நலமுடன்
நன்றிகள் தோழரே...
எண்ணங்களை சொல்ல
எழுத்துப்பிழையுடன்
பின்ஊட்டம் வரலாம்
பிறர் படித்து பயன்பெற
எந்த பிழையும் வரலாகுமோ..
எல்லா வற்றிக்கும் காலமேமா மருந்து
நாலு வரிகளில்
ஐந்து தமிழ் பிழை விடும்
உங்கள் நண்பர் விசு அய்யர்
உள்ளபடியே முதலில் தமிழ்
கற்றுக் கொள்ளட்டும் பிறகு
பற்றிக் கொள்ளட்டும் வகுப்பில் பதிக்க
இணையத்தில் உலா வரும்
இளைய தலைகளுக்கு சொல்ல
எதுவும் தேவையில்லை
எடுத்துச் சொல்ல வேண்டியது
அன்றைய இளைஞர்களுக்கு ...
இன்று இளைய தலைமுறை சில
தடம்மாற அன்றைய இளசுகளின்
தடுமாற்றமே என்பதும் ஒரு கருத்து
வாய்ப்புகள் வரட்டும்
வளரட்டும் வான் உயர நம்
அன்பும் நட்பும்
அன்றுபோல் என்றும்
அன்புடன் வணக்கம் திரு விசு அய்யர் ..
ReplyDeleteஉங்களுடைய அனுபவம் இன்றைய இளைஞர்களின் வயது !! அப்பிடி இப்பிடி என்று சொல்லி தப்பிக்காதீர்கள்
பதிவு போடுங்க.. இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் சேர்த்து போடலாமே!!...பிழை இருந்தால் என்ன ??அதற்கு தகுந்தார் போல் பரிசு உண்டு (பின்னூட்டங்கள் )
thanks..
//கடைக்குட்டி அவர்களே!தமிழை உடனே சரி செய்யுங்கள்.'மருமகன் மறந்து விட்டான்' என்று எழுத வேண்டும்.என்ன எழுதியுள்ளீர்கள் பாருங்கள். எவ்வளவு 'சீரியஸா'ன பொருள் வருகிறது பாருங்கள்.//
ReplyDeleteSorry Sir, I apologize for these types.
I thought to write
கதாசிரியரின் எலுத்தில் காணவில்லை என்று
------------------------
தங்களின் பயணம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். தங்களின் மகள், மருமகப்பிள்ளை மற்றும் குட்டி வாண்டுகள்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.