16.6.11
Short Story வாங்கி வந்த வரம்
---------------------------------------------------------------------------
Short Story வாங்கி வந்த வரம்
எங்கள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். பாதிப் பேர் முதலில் நம்பவில்லை. உண்மையைத் தெரிந்து கொண்டவர்களுக்குத் திகைப்பாக இருந்தது.
இருக்காதா பின்னே?
இதுவரை ஒரு பத்து ரூபாய்கூட தான தர்மம் பண்ணித் தெரியாத கருப்பஞ் செட்டியார் திடீரென்று ஒரு கோடி ரூபாயை ஊர்ப் பொது நிதிக்குக் கொடுத்திருக்கிறாறென்றால் அது சாதாரணமான விஷயமா என்ன?
சச்சின் டென்டூல்கர் ஔப்பனிங் பௌலராக மாறி முதல் மூன்று பந்தில் மூன்று விக்கட்டுகளைச் சாய்த்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்தச் செய்தி!
மாவன்னா வீட்டுக் கல்யாணத்திற்காக ஊருக்கு வந்திருந்தேன். திருமண மண்டபத்தில் எல்லோரும் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இன்னும் எங்கள் வீட்டிற்குப் போகவில்லை. வீட்டிற்குப் போனால் முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டேன்.
கருப்பஞ் செட்டியாருக்கு அறுபத்தைந்து வயது. எங்கள் ஊர் நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் கருப்பஞ் செட்டியாரும் என் தந்தையாரும் ஒன்றாகப் படித்தவர்கள். அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் பங்காளி வேறு. எங்கள் தந்தையார் கருப்பஞ் செட்டியாரின் கஞ்சத்தனத்தைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள் - நாங்கள் அப்படியிருக்கக்கூடாது என்பதற்காக!
‘கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்?’ என்று ஒருமுறை என் தந்தையாரிடம் நான் கேட்டபோது அவர்கள் இப்படி விளக்கம் சொன்னார்கள்.
தன் வீட்டு மரத்தில் காய்க்கும் மாம்பழங்களைத் தன் வீட்டாரைத் தவிர வெளியாட்களுக்குக் கொடுக்காதவன் கஞ்சன். அதே பழங்களைத் தன் வீட்டாருக்கேகூடக் கொடுக்காமல் வெளியே விற்றுக் காசாக்கி மகிழ்பவன் கருமி!
கருப்பஞ் செட்டியார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வந்த போது கூட - சொந்த பந்தங்களுக் கெல்லாம் வேஷ்டி, சேலை வாங்க வேண்டும், வைதீகச் செலவு, விருந்துச் செலவு என்று பத்து லட்சம்வரை செலவாகுமே என்ற ஒரே காரணத்திற்காக சாந்தியே செய்து கொள்ளவில்லை. சுவாமி மலை’ க்குப்போய் சாமி தரிசனம் பண்ணிவிட்டுத் திரும்பிவிட்டார்.
இன்றைக்குத் தேதியில் அவருக்கு பத்துக் கோடி ரூபாய்க்குமேல் சொத்துத் தேறும். மதுரை, காரைக்குடி இரண்டு ஊர்களிலும் கட்டிட வாடகையே மாதம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குமேல் வந்து கொண்டிருக்கிறது. கொடுக்கல் வாங்கல் வியாபாரத்திலும் மாதாமாதம் அதைவிட அதிகமாகப் பணம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் மிகவும் சிக்கனமானவர். பார்வைக்குப் பழைய நடிகர் எஸ.வி. சுப்பையா மாதிரி இருப்பார். துவைத்துக் கட்டிய வேஷ்டி, சட்டை.. கையில் மஞ்சள் பை. காலில் ரப்பர் செருப்பு. அதிகம் பேச மாட்டார்.
எங்கள் ஊர் எல்லையில் ஒரு தோப்பு வீட்டில் குடியிருக்கிறார். தோப்பு வீடு என்பதனால் எல்லாம் வசதி. காய்கறி, பால் என்று எதற்குமே வெளியே எட்டிப் பார்க்க வேண்டாம். ஊரின் மத்தியில் உள்ள வளவு வீட்டில் கால் பங்கு உள்ளது. அவர் வரமாட்டார். அவர் மனைவி சீதை ஆச்சி மட்டும் வாரம் ஒருமுறை அங்கே சென்று வீட்டில் விளக்கேற்றிக் கும்பிட்டு விட்டுத் திரும்புவார்கள்.
வெகு நாட்கள் வரை மாட்டு வண்டிதான் வைத்திருந்தார். கடந்த சில வருடங்களாகத்தான் - அதுவும் ஆடிட்டரின் கட்டாயத்தின் பேரில் கார் வாங்கி வைத்திருக்கிறார். வருமானவரி சலுகைக்காக. அந்தக்காரையும் வாரம் ஒருநாள் எடுத்து ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் ஔட்டிவிட்டுக் கொண்டு போய் நிறுத்திவிடுவார். காரைத் தொட்டில் கட்டிப் போட்டு வைக்காத குறைதான். துணி போட்டு மூடி வைத்திருப்பார்.
பெரிய அளவில் வைப்புத் தொகையெல்லாம் வைத்திருப்பதால் உள்ளுர் வங்கியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு. பாதி நாட்கள் காலைப் பொழுதை அங்கேயே கழித்துவிடுவார். பேனா, பென்சில், பேப்பர், கவர், உள்ளூர் போன் அழைப்புக்கள் என்று எல்லாவற்றையும் வங்கி செலவிலேயே செய்து முடித்து விடுவார்.
இப்படி அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.
அவர் மனைவி சீதை ஆச்சி ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து போனார்கள். ஆச்சி தலைவலி, தலைவலியென்று ஆறு மாதங்களாகச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது செட்டியார் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஆஸப்ரின், அனாஸின், பாரல்டிம், கோடாலித் தைலம், ஜண்டுபாம் என்று செலவைச் சுருக்கியதோடு ஆச்சியின் உயிரையும் சுருக்கி விட்டார்.
ஒரு நாள் தலைவலிப் ப்ரச்னை பூதாகரமாகி, ஆச்சியை மதுரைக்குக் கூட்டிக் கொண்டுபோய் நவீன மருத்துவ மனை ஒன்றில் சேர்த்தபோதுதான், மூளையில் கட்டி ஒன்று முற்றிய நிலையில் இருப்பதும், ஆபத்தான நிலைமையும் தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் ஆச்சி அதே மருத்துவமனையில் உயிரை விட்டு விட்டார்கள். ஆச்சியின் கதை மதுரை தத்தனேரி சுடுகாட்டில் முடிந்துவிட்டது..
ஆனால் அதையெல்லாம்விட முக்கியம்- அதிரடியாக கருப்பஞ்செட்டியாரின் மனம் மாறியது எப்படி?
அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!
***********************
சித்திரை வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்து நான் எங்கள் வீட்டிற்குப் போன போது மணி 12.30 ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குள் வெட்கை தெரியவில்லை.
என் தந்தையார் மதிய உணவை முடித்துக்கொண்டு சற்று நேரம் கண் அயர்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் வா’வென்றார். புன்னகைத்தார். அவர் அருகில் சென்று அமர்ந்தேன். பர்மா பிரம்புப்பாயும், அதன் மேல் விரிக்கப்பட்டிருந்த பட்டு ஜமுக்காளமும் அமர்வதற்கு இதமாக இருந்தது.
வீட்டு விஷயங்களைப் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு கருப்பஞ் செட்டியாரின் விஷயத்திற்குத் தாவினேன்.
‘அவருக்கு என்ன ஆயிற்று?’ என்று ஆர்வத்தோடு கேட்டேன்.
என் தந்தையார் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார்கள்.
மதுரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கிற்குப் போகுமுன்பு சீதை ஆச்சி அவர்கள் தன் கணவரிடம் பத்து நிமிடங்கள் வருத்தம் கலந்த கோபத்தோடு பேசினார்களாம். தன் பேச்சால் கருப்பஞ் செட்டியாரை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் போட்டு விட்டார்களாம். அதுதான் ஆச்சி கடைசியாகப் பேசிய பேச்சாம். செட்டியார் ஆடிப்போய் விட்டாராம். அதோடு சிகிச்சை பலனளிக்காமல் ஆச்சி இறந்தும்போய் விட்டதால் அதிர்ந்தும் போய் விட்டாராம்.
ஆச்சி பேசிய பேச்சை ஆச்சி பேசிய தொனியோடு என் தந்தையார் பின் வருமாறு சொன்னார்கள்.
“காசு காசென்று காசைக் கட்டிகொண்டு அழுகிறீர்களே- அந்தப் பெரிய டாக்டர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? ஆரம்பத்திலேயே பார்த்திருந்தால் குணப்படுத்தியிருக்கலாம் என்றாரா இல்லையா? சாவிற்கு நான் ஒன்றும் பயப்படவில்லை. விதி முடிந்தால் போய்ச்சேர வேண்டியதுதான். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்-மனிதன் செத்துப்போனால்- பட்டினத்தார் சொன்ன மாதிரி காது ஒடிந்த ஊசி கூட கூட வராது. எல்லாம் இருக்கும் வரைதான். உடன் வருவது அவனவன் செய்த பாவ, புண்ணியம் மட்டும்தான். மனிதனாகப் பிறந்தவனுக்குத் தர்ம சிந்தனை வேண்டும். அது உங்களிடம் துளி அளவுகூட இல்லை. ஏதோ போன ஜென்மத்தில் வாங்கி வந்த வரத்தால் நீங்கள் நகரத்தார் குடும்பத்தில் பிறந்தீர்கள். என்னைப்போன்ற அன்பான, அனுசரனையான மனைவி உங்களுக்குக் கிடைத்தது. கீரையும் சோறும்தான் என்றாலும் சொந்த வீட்டில் சாப்பிட்டீர்கள். ஆனல் இந்தப் பிறவியில் நகரத்தார்களுக்கே உரிய தர்ம சிந்தனையோடு எந்தக்காரியமும் நீங்கள் செய்யவில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே கிடைக்காது. வாங்கித்தான் குடிக்கவேண்டும்!”
இந்த ‘வாங்கித்தான் குடிக்கவேண்டும்’ என்ற சொற்கள்தான் செட்டியாரின் மனதை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறதாம். திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருக்கிறதாம்.
மன மாற்றத்திற்கும் அதுதான் காரனமாம்.
‘வாங்கிக்குடித்தல்’ என்னும் சொல் செட்டிநாட்டிற்கே- செட்டிநாட்டிற்கு மட்டுமே தெரிந்த சொல். பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது அதன் பொருள்.
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர் சொல்லும் சத்தியமான வார்த்தைகளுக்கு என்ன வலிமை உண்டு என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது
கண்களில் நீர் மல்கி விட்டது!
---------------------------------------------------------------------
அடியவன் எழுதி - 16 ஏப்ரல்’ 2005ம் தேதியிட்ட மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. உங்கள் பார்வைக்காக இன்று இதை வலையில் ஏற்றினேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வணக்கம் வாத்தியார் ஐயா,
ReplyDeleteசிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினுங்கு ஆக்கமும் எவனோ உயிர்க்கு
என்று இக்கருத்தை மிக அழகாக வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருப்பதை நினைவு கூர்கிறேன்.
மக்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டிய அவசியமான கதை..
நன்றி ஐயா..
கடல் பயணத்திற்கு தேவை
ReplyDeleteகப்பல் செல்ல தண்ணீர்...
அதற்காக தண்ணீரை முழுதும்
அந்த கப்பலுக்குள் செலுத்தி விட்டால்
கடல் பயணமும் செய்ய முடியாது
கடுமையாக உயிருக்கு போராடனும்..
பணமும் அது போலத் தான்;வாழ்க்கை
பயணத்திற்கு தேவை அவ்வளவு தான்
பணமே வாழ்க்கையில்லைஎன்றாலும்
பணமின்றி வாழ்க்கையில்லை
கருமியின் குணம் போல் செட்டியோ
'கருப்ப'ஞ்செட்டி தன் பெயரிலும்
'க'ஞ்சன்களுக்கு எல்லாம் பெயர்
'க'வில் தான் தொடங்குமோ..
அல்லது 'த' என்ற பெயரைக் கூட
அப்படி 'க'என மாற்றிக் கொள்வரோ..
நிதியையே தன் பெயருக்கு பின்னால்
கதியென பற்றியிருக்கும் அவர்களை
என்ன வென்பது அவர்கள் செல்வது
என்ன கதியோகோடிகளுக்கேவெளிச்சம்
வழக்கம் போல் இந்த
வள்ளுவ சிந்தனையுடன்..
அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்
பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
வாங்கி வந்த வரம் மிகவும் அருமை . நான் வாங்கி வந்த வரம் கான knsm-natarajan.blogspot.com
ReplyDelete///எங்கள் தந்தையார் கருப்பஞ் செட்டியாரின் கஞ்சத்தனத்தைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள் - நாங்கள் அப்படியிருக்கக்கூடாது என்பதற்காக!///
ReplyDeleteதந்தை சொல்மிக்க மந்திரம் வேறொன்றும் இல்லை....
///துவைத்துக் கட்டிய வேஷ்டி, சட்டை.. கையில் மஞ்சள் பை. காலில் ரப்பர் செருப்பு. அதிகம் பேச மாட்டார்./////
மடித்துப் போட்ட நாலுமுழத் துண்டு... கையில் ஒரு பழையக் குடை... மஞ்சப் பையினுள் ஒரு ஸ்டாம்ப் பேட்.... கொஞ்சம் ரெவின்யூ ஸ்டாம்ப்.... சின்னதா ஒரு ரசீது புக்கு.. பைக்கு கனமே பெரிய வீட்டுச் சாவி தான் (தற்காப்புக்கு துப்பாக்கியே தேவையில்லை அதுபோன்ற சாவி கையில் இருந்தால்).... என்று இன்னும் கொஞ்ச விரிவாக கம்பச் சித்திரம் காட்டியிருக்கலாம்.....
/////ஏதோ போன ஜென்மத்தில் வாங்கி வந்த வரத்தால் நீங்கள் நகரத்தார் குடும்பத்தில் பிறந்தீர்கள். என்னைப்போன்ற அன்பான, அனுசரனையான மனைவி உங்களுக்குக் கிடைத்தது. ////
இந்த ஒரே ஒரு வரியினுள் எத்தனை பெரிய விஷயங்கள் அடங்கும்.... அற்புதம்....
உயர்செல்வ குடியில் பிறந்ததன் அர்த்தமே ஈதலே என்பதும்..... அப்படிப் பிறக்க முன்ஜென்ம புண்ணிய காரணமே என்பதும் அதுவே மறுஜென்மத்தை நிர்ணயிக்கும் என்பதும் அருமை....
தர்ம சிந்தனையை தூண்டும் நல்லக் கதை....
வாசிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றிகள் ஐயா!
அய்யா..
ReplyDeleteஅற்புதமான நடை..
அருமையான கதை..
பகிர்வுக்கு நன்றிகள்.
கருப்பஞ்செட்டியாரின் மனம் 'வாங்கித்தான் குடிக்க வேண்டும்' என்று ஆச்சி சொன்ன சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் மாறியதும் ஒரு சுயநல நோக்கத்தோடுதான். அடுத்த பிறவியில் தான் எங்கே பிச்சை எடுத்துப் பிழைக்கும்படி ஆகிவிடப் போகிறதே என்கிற கவலை அவரை தர்மிஷ்டனாக ஆக்கிவிட்டது. ஊசியால் அல்ல, கடப்பாறையால் குத்தியதைப் போன்று மனத்தில் ஊடுருவும் சொற்கள். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது. என் நண்பர் ஒருவர் இருந்தார். ஞாயிற்றுக் கிழமையானால் என்னிடம் வருத்தப்பட்டுச் சொல்வார், "பாருங்கய்யா! காலையில் வீட்டுக்காரி புழுங்கலரிசி கஞ்சி கொடுத்தாள், மதியமாவது சுடு சோறு போடலாமல்லவா, அப்போதும் இதே கஞ்சி, இரவுக்கும் இதே கஞ்சி என்னய்யா செய்வது" என்பார். இத்தனைக்கும் அவர் நல்ல வசதி படைத்தவர். அலுவலக சம்பளம் தவிர துணி விற்றும் நன்றாக சம்பாதித்தவர். ஆனால் இப்படிப்பட்ட கஞ்சத்தனம் வீட்டில் பாவம்! என்ன செய்வார். அவருக்கு இதய நோய் வந்தது. அறுவைச் சிகிச்சைக்கு அப்போது கோவையில் ஒரு மருத்துவ மனையில் ரூ.75,000 ஆகும் என்றார்கள். செலவுக்குப் பயந்து செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் அவர் அலுவலகம் போனார், மாலையில் அவர் உடல் வீட்டுக்கு வந்தது. என்ன கொடுமை! அது சரி! கருமிக்கும் கஞ்சனுக்கும் ஒரு வித்தியாசத்தை என் நண்பரொருவர் அடிக்கடி சொல்வார். அது, "தன் அவசியத் தேவைக்கு மட்டும் செலவு செய்து கொண்டு, வேறு எந்த நல்ல காரியத்துக்கும் செலவிடாதவன் கருமி, தன் அவசியச் சொந்தத் தேவைக்குக்கூட செலவு செய்யாதவன் கஞ்சன்". கிட்டத்தட்ட நீங்கள் சொல்லிய கருத்துத்தான் இதுவும். நல்ல கதை ஆசிரியர் அவர்களே!
ReplyDeleteநல்ல கதை. அனுபவத்தால் கிடைத்த செய்திகளை அற்புதமாக ,எளிமையாகக் கதை ஆக்குகிறீர்கள்.
ReplyDeleteஇன்னொரு செட்டிநாட்டு நண்பர் அவர் உறவினரைப்பற்றி ஒருமுறை சொன்னார்.தானம் செய்யாதவரை தானம் செய்ய எல்லோரும் தூண்டினர். முதல் முதலாக தானம் செய்தார். எதற்குத்தெரியுமா? நாத்திக்த் தலைவருக்கு சிலை வைக்க! இப்படியும் சில பேர்.
super sir
ReplyDeleteI am very much impressed about the story. Very good and important message for all the people living in this machine life.....
ReplyDelete