--------------------------------------------------------------------------------
எல்லாம் நன்மைக்கே!
நேற்று அதிகாலை முதலே ப்ளாக்கர் சொதப்பியதால் பதிவுகளை
வலை ஏற்ற முடியவில்லை. இன்றுதான் சரியாகியது. ஒரு நாள்
முழுவதும் கண்மணிகளைக் காண முடியாமல் கைகளைக் கட்டிக்
கொண்டு உட்காரும்படியாகிவிட்டது. வருத்தம்தான். பரவாயில்லை. இன்றாவது சரியானதே!
அதனால் நேற்று வரவேண்டிய பக்தி மலரும், இன்று வரவேண்டிய
இளைஞர் மலரும் ஒன்றாக வந்துள்ளது. மொத்தம் 3 ஆக்கங்கள் உள்ளன. படித்து மகிழுங்கள்.
எல்லாம் நன்மைக்கே!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
1
கர்மயோகத்திற்கு ஒரு கலக்கலான விளக்கம்
பக்தி மலர்
அன்று காலை தியானம் முடிந்தவுடன், அந்தத் தெலுங்குப் பேராசிரியர் மஹரிஷியிடம் நெருங்கிப் போய் "ஒரு சந்தேகம்!" என்று பவ்யமாக விண்ணப்பித்தார்.
என்ன என்பதுபோல் மஹிரிஷி திரும்பிப் பார்த்தாரே அன்றி ஒன்றும் பேசவில்லை.
"பகவான்! கர்மயோகம் என்றால் என்ன?"
மஹரிஷி புன்முறுவலுடன் மெளனம் காத்தார்.பதில் ஒன்றும் சொல்லவில்லை
ஒருவேளை மஹரிஷி அவர்களுக்குத் தான் சொன்னது காதில் விழவில்லையோ?
சந்தேகத்துடன் இன்னும் சற்றே நெருங்கிப் போய் மீண்டும்"கர்மயோகம் என்றால் என்ன?"என்றார்.
இந்த முறை மஹரிஷி திரும்பிப் பார்த்து தான் அந்தக் கேள்வியை மனதில் வாங்கிக் கொண்டதை முக பாவத்தாலேயே காட்டினார்.. மீண்டும் மெளனமே அங்கு நிலவியது.'
'சரி! மஹரிஷிக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை போல'என்று எண்ணிக் கொண்டார் பேராசிரியர்.
'இப்படியும் இருக்குமோ!?மஹரிஷி ஞான மார்க்கத்தைச் சார்ந்தவர் ஆயிற்றே! அதனால் கர்ம மார்க்கத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லையோ?' எண்ணிக் குழம்பினார் பேராசிரியர்.
அப்போது காலைச் சிற்றுண்டிக்கான மணி அடித்தது.எல்லோரும் சாப்பாட்டு கூடத்திற்குச் சென்று அமர்ந்தனர். மஹரிஷியும் அவர்களுடனேயே வந்து அமர்ந்து இட்லி சாப்பிட்டார்.
காலை உணவு முடிந்தவுடன் மலை மீது உள்ள ஸ்கந்த ஆஸ்ரமத்திற்குச் செல்லும் பாதைக்கு மஹரிஷி வந்தார்.பக்தர்களும் அவருடன் பின் தொடர்ந்தனர்.
"அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா..." என்று பக்தர் குழாம் பாடத் துவங்கியது. மஹரிஷியும் அவர்களுடன் பாடிக் கொண்டே மலை ஏறத் துவங்கினார்.
சிறிது தூரம் சென்றவுடன் மூங்கில் கழி ஒன்று தன் புதர்க் கூட்டத்திலிருந்து விலகி ஒற்றை அடிப்பாதையில் வேரோடு முறிந்து கிடந்தது.அந்தக் கழி முண்டு முடிச்சுக்களுடன் காணப்பட்டது.
அந்தக் கழி செய்த பாக்கியம், அது மஹரிஷியின் பார்வையில் பட்டது.குனிந்து அந்தச் சீரற்ற கம்பை மஹரிஷி கையில் எடுத்தார்.
தன் லங்கோட்டுக் கயிற்றிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்தார்.இந்தக் கழி கிடைக்கும், அதை சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவே கத்தி எடுத்து வந்தாரா மஹரிஷி? யாருக்குத்தெரியும்?
காலையில் கர்ம யோகத்தைப் பற்றிக் கேட்ட பேராசிரியர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே கூட வருகிறார்.
மஹரிஷி அந்தக் கழியை அன்புடன் நோக்கி மெது மெதுவாக அந்தக் கழியில் இருந்த முண்டு முடிச்சுக்களை எல்லாம் நீக்கத் தலைப்பட்டார். அவர் செயல்படும் விதத்தைப் பார்த்தால் அந்தக் கழிக்கு வலிக்குமே என்று கவலைப் படுபவர் போல இருந்தது. ஒவ்வொரு முறை சீவும் போதும் சீவிய இடத்தை மெல்ல அன்புடன் தடவிக் கொடுப்பார். இப்படியே கோணல் மாணலாக இருந்த கழியை சீர் செய்து நேராக்கி விட்டார் மஹரிஷி.
கூட வந்த பக்தர்கள் குறிப்பறிந்து 'நாங்கள் செய்து தருகிறோமே'என்று கேட்ட போதும் மஹரிஷி தரவில்லை. தானே அந்தக் கழியை சீராக்கும் பணியை ஆர்வத்துடன் மேற்கொண்டார்.அந்த நிமிடத்தில் அதைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவருக்கு இல்லாதது போல நடந்து கொண்டார்.'சிரத்தை' என்பது இதுதானோ என்று பேராசிரியர் நினைத்துக்கொண்டார்.
அந்தக் கழி இப்போது சீர் ஆகிவிட்டது. கழியைத் தன் இடக்கரத்தால் தேய்த்துப் பார்த்தார் மஹரிஷி. சொர சொரப்பாக இருந்தது.உடனே அங்கிருந்த காய்ந்த சருகுகளைக் கை நிறைய அள்ளி கழிக்கு 'பாலிஷ்' போட்டார். சிறிது நேரத்தில் உறுதியான ஒரு கம்பு தயாராகிவிட்டது.கம்பின் உறுதியை சோதனை செய்ய ஒரு சிறிய பாறை மேல் ஏறி நின்று கம்பை ஊன்றிக் கொண்டு பாறை மீதிருந்து குதித்துப் பார்த்தார்.கம்பு வளையவில்லை. மஹரிஷியின் முகத்தில் திருப்திக்களை ஏற்பட்டது. மஹரிஷி தனக்கான ஊன்று கோலை கவனத்துடன்
செய்து, அதனைப் பயன் படுத்துவதினைக் கண்டு மகிழ்ந்தனர் பக்தர்கள்.இனி அந்தக் கழியை மஹரிஷி எப்போதும் வைத்திருப்பார் என்று எண்ணிக் கொண்டனர்.
கம்பை ஊன்றிக் கொண்டு வேகமாக நடந்து மலை மீதிருந்த ஸ்கந்த ஆஸ்ரமத்தைச் சென்றடைந்தார் மஹரிஷி.
அங்கே சென்று துதிப்பாடல்கள் பாடியும், தியானத்தில் ஆழ்தும் இருந்து விட்டு அனைவருடனும் மலையை விட்டுக் கீழிறங்கினார்.அந்தக் கழியை நன்கு பயன் படுத்தினார். அவர் வேகமாக இறங்க கழி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பாதிவழி வரும்போது ஓர் இடைச் சிறுவனைக் கண்டார் மஹரிஷி.
அந்தச் சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு சென்றான்.வெறும் கையால் ஆடுகளைப் பத்தினான்.ஆடு மேய்ப்பவர் களுக்கே உரிய நீண்ட கோல் அவனிடம் இல்லை. அதைக் கண்ணுற்றார் மஹரிஷி.அந்தப் பையனை செய்கையால் அழைத்தார்.செய்கையாலேயே "உன் கோல் எங்கே?" என்று கேட்டார். சிறுவனும் புரிந்து கொண்டு, "எங்கனயோ தொலைஞ்சு போச்சு சாமியோவ்!" என்றான்.
தன் கையில் இருந்த, தான் நீண்ட நேரம் செலவு செய்து சீராக்கிய கழியை, தன் பயன்பாட்டுக்கு என்பது போல் சிரத்தையுடன் செய்த கழியை, அந்தப் பையன் கையில் அன்புடன் கொடுத்தார் மஹரிஷி.
அந்த ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு என்னமோ பெரிய செல்வம் கிடைத்தது போல் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மஹரிஷியிடம் பெற்ற கோலைக் கொண்டு ஆடுகளை 'ஹை ஹை' என்று மகிழ்ச்சியுடன் பத்தினான்.
இப்போது மஹரிஷி பேராசிரியர் முகத்தைப் பார்த்தார். மஹரிஷியின் அர்த்த புஷ்டியான பார்வையில் பேராசிரியர் தெளிவடைந்தார்.
காலையில் கேட்ட "கர்மயோகம் என்றால் என்ன?" என்ற கேள்விக்கான பொருள் இதுதானோ?
"ஒரு செயலைச் செய்யும் போது சிரத்தையுடன் செய்து, பலனைத் தியாகம் செய்து விடலே கர்மயோகம்" என்று பேராசிரியருக்கு விளங்கியது.
கர்ம யோகத்தைப் பற்றி உபன்யாசம் பண்ணினால் போதுமா? கர்மா என்றால் செயல் அல்லவா? அதைத் தான் மஹரிஷி செய்து காண்பித்தார். நடைமுறைக் கர்மயோகம்!
ஒரு பேருரையைவிட செய்து காண்பித்ததே தனக்கு மனதில் தெளிவை உண்டாக்கியது என்கிறார் அந்தப் பேராசிரியர்.
யார் அந்த மஹரிஷி?
திருவண்ணாமலையில், அருணசலேஸ்வரருக்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்படும் பகவான் ரமணரேதான் அவர்!
ஆக்கம்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
கோளறு பதிகத்தின் வெவ்வேறு பலன்கள்
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் அருளிச் செய்யப்பட்ட கோளறு பதிகத்தின் நோக்கம் ( பதிகப் பயன் ) என்ன என்பது நம் யாவருக்கும் தெரியும் ..
அதாவது நவகோள்களினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் படிக்க வேண்டிய ( பாராயணம் செய்ய வேண்டிய ) ஒரு பதிகம் என்பது நாம் அறிந்ததே.
ஆனால் உண்மையில் இந்தக் கோளறு பதிகம் என்பது நவகோள்களினால் ஏற்படும் துன்பத்தை மட்டுமா தடுக்கிறது ? இன்னும் என்ன என்ன துன்பங்களிலிருந்து அது நம்மைக் காக்கிறது என்று பார்க்கலாம்,
கோளறு பதிகம் என்பது - கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற ஒரு கவச நூல் வகையைச் சார்ந்ததாகும் ..
உண்மையில் கோளறு பதிகமே - கவச நூல்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம்.
இன்னும் சொல்லப் போனால் கோளறு பதிகத்தின் பரிணாம வளர்ச்சியே கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற நூல்களாகும்.
சரி .. இப்போது இந்தக் கோளறு பதிகம் படிப்பவர்களை எந்த எந்தத் துன்பத்திலிருந்து காக்கிறது எனப் பார்க்கலாம்,
-------------------------------------------------------------
01 . சூரியன் முதலான நவகோள்கள்
02 . நாள்கள் ( தீய நட்சத்திரங்கள் )
03 . திருமகள்
04 . கலையூர்தி ( துர்க்கை )
05 . செயமாது
06 . பூமகள்
07 . திசை தெய்வங்கள் ( அட்ட திக்கு பாலகர்கள் )
08 . காலன் ( இயமனது அமைச்சன் )
09 . அங்கி ( அக்னி )
10 . நமன்
11 . தூதர்
12 . கொடு நோய்கள்
13 . அவுணர்கள் ( அசுரர்கள் )
14 . இடி
15 . மின்னல்
16 . பூதங்கள்
17 . புலி
18 . யானை
19 . பன்றி
20 . பாம்பு
21 . கரடி
22 . சிங்கம்
23 . வெப்பு நோய் ( அம்மை முதலான )
24 . குளிர் நோய்
25 . வாத நோய்
26 . பித்த நோய்
27 . தீவினை
28 . இலங்கை அரசனால் வரும் இடர் போன்ற துன்பங்கள் ( இதை இன்றைய இலங்கையோடு ஒப்பிடுக )
29 . கடல்
30 . பிரம்மா
31 . திருமால்
32 . வேதம்
33 . தேவர்கள்
34 . காலம்
35 . மேருமலை
36 . புத்தர் சமணர் போன்ற புறச்சமயவாதிகளால் நேரும் துன்பம்
இப்படி இன்னும் ஏராளமான துன்பங்களில் இருந்தும் இந்தக் கோளறு பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது.
இப் பட்டியலைப் படிக்கும் போது நீங்கள் ஆச்சரியப் படலாம், அதாவது கோள்கள், நாள்கள், கொடு நோய்கள், அசுரர்கள், விலங்குகள் - துன்பம் செய்யலாம் !?
ஆனால், திருமகள், செயமாது, திருமால், பிரம்மன் - போன்றோர் என்ன துன்பம் செய்வார்கள் ? என்று ஒரு சந்தேகம் தோன்றலாம் ..
இதோ அதற்கான விடை,
01 . திருமகள்
இவள் செல்வம் தருபவள் ..ஒருவருக்கு அதீத செல்வம் கிடைப்பதினால் ஏற்படும் ஆணவத்தால் அவர் தவறிழைக்கக் கூடும், இது தீமையே ஆகும். ஆக செல்வத்தினால் செருக்கு ஏற்படாமல் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
02 . கலையூர்தி ( துர்க்கை )
கலையினை ( ஆண் மான் ) வாகனமாக உடையவள்.கடவுளருக்கு உள்ள மூன்று வடிவங்களில் ( யோகம், வேகம், போகம் ) இக் கலையூர்தியின் வடிவம் வேக வடிவமாகும், இவள் பகையை அழிப்பாள் அதுமட்டுமல்லாது தன்னிடத்தில் பிழை செய்தோரையும் தண்டித்து விடுவாள் எனவே இவளால் ஏற்படும் ஆபத்திலிருந்தும் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
கலை - என்பதை நூல் எனக் கொண்டால்,
கலையைச் செலுத்துபவள் - சரசுவதி
எனவே கல்வியினால் ஏற்படும் செருக்கும்,
அதனால் விளையும் தீங்கும் ஏற்படாமல் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
03 . செயமாது
செயமாது = வெற்றி மடந்தை வெற்றிக் களிப்பினால் ஏற்படும் முனைப்பும் அதனாலாய தீங்கும்
04 . பூமகள்
பூமகள் = பூமி ஏராளமான நிலத்தைக் கையகப்படுத்துவதும், அதனால் ஏற்படும் நிலக்கிழார் அல்லது அரசனாக இருக்கிறேன் என்பது போன்ற ஆணவம் - அதனால் ஏற்படும் துன்பம்
05 . திசை தெய்வங்கள்
எண்திசைக் காவலர்கள் -
கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்னி, தெற்கு - இயமன், தென்மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானன் இவர்கள் ஆட்சிபுரியும் திசைகளில் செல்லக் கூடாத காலங்களில் நாம் சென்றால் நமக்குத் தீமை புரிவார்கள், ( இன்று வாரசூலை என்கிறோமே - அதுபோல ) ஆகவே இவர்களிடமிருந்தும் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
06 . காலன் ( இயமனது அமைச்சன் )
இயமனுடைய அமைச்சனால் ஏற்படும் துன்பத்திலிருந்தும் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது, ( இயமன் வேறு - யம தூதர்கள் வேறு - யம கிங்கரர்கள் வேறு )
07 . பிரம்மா
இவர் படைத்தல் கடவுள். முதல்வனுடைய ( சிவபரம்பொருள் ) அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கு இன்ப துன்பத்தை விதிப்பவர். இவரால் ஏற்படும் தீவினைத் துன்பமும், இன்பம் போல் தோன்றித் துன்பத்தைத் தரும் நல்வினைத் துன்பமும் வாராமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும், ஆக இத்தகைய துன்பத்திலிருந்தும் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
08 . திருமால்
இவர் காத்தல் கடவுள். முதல்வனுடைய ( சிவபரம்பொருள் ) அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கு இன்ப துன்பத்தை அனுபவப் படுத்துபவர். இவ்வனுபவத்தால் புதிதாய் முளைக்கும் ஆகாமியத் துன்பத்தை (புது வினை )
வாராமல் காத்துக் கொள்ளுதல் வேண்டும், ஆக இத்தகைய துன்பத்திலிருந்தும் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
09 . வேதம்
விதி விலக்குகளை அறிவிப்பது - இந்த வேதம் சொல்லும் விதிவிலக்குகளை தவறாகப் புரிந்து கொண்டு, அதில் அறிவு மயங்கி செய்யக் கூடாதனவற்றை செய்வதால் ஏற்படும் துன்பம். ஆக இத்தகைய துன்பத்திலிருந்தும் இந்தப் பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது,
10 . தேவர்கள்
இவர்கள் இன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழ்பவர்கள். மக்களால் இவர்களது இன்பத்துக்கோ அல்லது பதவிக்கோ இடையூறு நேர்ந்தால் அவர்கள் மக்களை அழிக்கத் துவங்குவர், ( எ.கா - இந்திரன் மகாபலியை அழிக்கத் திருமாலின் உதவியை நாடியது )
11 . காலம்
காலக் கடவுள் - இது இன்னின்ன காலத்தில் இதை இதைச் செய்ய வேண்டும் + இதை இதைச் செய்யக் கூடாது என வரையறுக்கும். அப்படி உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் காலம் கழித்தால் அது நமக்குத் தீங்கு செய்யும்.
12 . மேருமலை
இது மலை .. அண்டத்தின் நடுவாக நின்று அண்டத்திற்கே பற்றுக் கோடாக இருப்பது, இது உறுதியாய் நில்லாது சலிக்குமானால் நமக்குத் தீங்கு நேரும்.
எந்த எந்த நாள்கள் நமக்கு தீங்கு செய்யும் ?
ஆதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், முப்பூரம், கேட்டை
தீதுறு விசாகம், சோதி, சித்திரை, மகம் ஈராறில்
மா தனம் கொண்டார் தாரார் ; வழி நடை போனார் மீளார் ;
பாய்தனில் படுத்தார் தேரார் ; பாம்பின் வாய்த் தேரை தானே
- சோதிட கிரக சிந்தாமணி - கூடா நாள்.
ஆக இவ்வாறு நாம் நல்லது என நினைத்துக் கொண்டிருப்பவைகளாலும் நமக்கு தீங்கு நேரும்...
இப்படி நாம் அறிந்தது + அறியாதது என வரும் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் இந்தக் கோளறு பதிகம் நம்மைக் காப்பாற்றுகிறது. ஆகக் கோளறு பதிகம் என்பது நம்மை அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும்
காப்பாற்றக் கூடிய " சகல துன்ப நிவாரணி " என்றால் அது மிகையாகாது.
எனவே இதன் அருமை பெருமையை அறிந்து, நாளும் நாளும் பக்தியோடும் அன்போடும் நம்பிக்கையோடும் காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் முன்னதாக இந்தப் பதிகத்தை ஓதுவோம் .. நலம் பல பெறுவோம்,
குறிப்பு - இப் பதிவிற்குத் துணையாக நின்றவை : பேராசிரியர் சிவத்திரு. இரா. வையாபுரி எம், ஏ, பி,எச்,டி, கோவை அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை. மற்றும் திரு.சிவ. வே. கங்காதரன் எம், ஏ, எம்.பில், தாரமங்கலம் அவர்களது தேசியக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரை - இரு பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்,
திருச்சிற்றம்பலம்
நன்றி, வணக்கத்துடன்
சிவ.சி.மா.ஜானகிராமன்
இடைப்பாடி
==========================================================
கோளறு திருப்பதிகத்தின் வெவ்வேறு பலன்கள் சரி., பதிகம் எங்கே என்று கேட்கும் கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக, 22.11.2008ல் மனதுக்கொரு மருந்து என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள கோளறு திருப்பதிகத்திற்கான பதிவின் சுட்டியைத் தேடிப்பிடித்துக்கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்
அதற்கான சுட்டி
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
3
இளைஞர் மலர்
எதை, எதையோ பார்க்கிறோம்... இதைப் பார்க்கிறோமா?
தனது நண்பனின் மகள் திருமண வரவேற்பு விருந்துக்குத் தேவையான வேலைகளை எல்லாம் மிகவும் கவனத்துடன் செய்து கொண்டிருந்தார் சின்னுக் கவுண்டர்.
திருமணம் முடிந்து நாளை மாப்பிள்ளை வீட்டார் எத்தனை பேர் இங்கு வரவேற்புக்கு வருவார்கள் என்று; எதற்கும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துக் கொண்டு கூறுகிறேன் என்று கூறி இருந்த தனது நண்பனின் தொலை பேசி அழைப்பிற்காக காத்திருந்தார் சின்னுக் கவுண்டர்.
தொலைபேசியில் நண்பர் வரவில்லை....
அவர் சொன்ன ஆறு மணிக் கடந்து வெகுநேரமாகிவிட்டதே! என்ன ஆயிற்று என்ற சிந்தனையிலே வாசலில் கட்டும் வாழைமரத்தைப் பார்த்த படியே நின்று கொடிருந்தவரின் கைத் தொலைபேசி மணி ஒலித்தது....
அது ராஜுவின் அழைப்புத் தான்.
அலோ... அலோ... ராஜு! அலோ... என்னாயிற்று சத்தமே இல்லை என்று காதில் வைத்த தொலை பேசியை மீண்டும் ஒருமுறை பார்த்து, தொடர்பு இருப்பதை உறுதி செய்துக் கொண்டு மீண்டும், அலோ... அலோ... என்றவரின் காதில்.. தனது நண்பனின் தேம்பித் தேம்பி அழும் சத்தம் மட்டுமேக் கேட்டது.
அலோ.. அலோ... ராஜு என்று அழைத்துக் கொண்டே அங்கிருந்து யாரும் இல்லாத இடத்திற்கு வந்த சின்னு, அலோ ராஜு ஏன்? என்னாச்சு... ஏன்? அழுகிறாய் என்ன நடந்தது?, ஏதாச்சும் பிரச்சனையா? ஏன்? அழுகிறாய் என்று தொடர்ந்து பதட்டத்தில் கேள்விகளை அடுக்கினார்.
ராஜுவும் தனது அழுகையை சற்று அடக்கிக் கொண்டு, சின்னு... போச்சு, போச்சு எல்லாம் போச்சு என்றார்... போச்சா? ஏன்? என்னாயிற்று? கொஞ்சம் புரியிறமாதிரி சொல்லேன்? என்றார் சின்னு...
நான் கல்யாணத்தை நிறுத்தி விட்டேன்! என்றார் ராஜு... என்னாச்சு உனக்கு; நீ ஏன்? கல்யாணத்தை நிறுத்தினாய்? என்ன நடந்தது கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லேன்! என்றார் சின்னு.
நான் அப்பவே சொன்னேன் என் மனைவி தான் கேட்க மாட்டேன் என்றும்; அவர்கள் பெரிய இடம். நிறைய வசதி படைத்தவர்கள் என்று அடம் பிடித்தாள். இப்போது பார் பெரிய இடத்துப் பிள்ளை எப்படி இருக்கிறான் என்று; பெரிய இடம் அதனால் தான் பெரும் வியாதியையும் பெற்று இருக்கிறான். என்னது பெரிய வியாதியா? என்னது ராஜு என்றார் சின்னு. ஆமாம், பெரிய வியாதி தான் எயிட்ஸ் இருக்கிறதாம்! என்றார் ராஜு.
என்னது எயிட்ஸா? உனக்கு யார் சொன்னா? யாராவது சும்மா கெளப்பி விட்டிருப்பாங்கப்பா? நல்லா விசாரிச்சியா!
ஆமாம், நன்றாக விசாரித்தேன். சொன்னதும் வேறு யாரும் இல்லை. நம்ம நண்பன் சேலம் ரகு இருக்கிறான் அல்லவா! ஆமாம். அவனின் மனைவி வைஷ்ணவி சேலத்தில் எயிட்ஸ் நோய்த்தடுப்பு ஆலோசகராக இருக்கிறார்கள் அல்லவா! அவர்கள் தான் கூறினார்கள். அதுவும் மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் தான் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு அந்தப் பயபுள்ள அவுங்க சென்டருக்கு போயிருக்கு. அந்த விவரமெல்லாம் நேரா பேசிக்குவோம். எப்படியோ வெட்டுடையாக்காளி அருளால் கல்யாணத்திற்கு முன்பே தெரிந்ததே. எப்படியோ அந்தக் காளியும், எங்க குலதெய்வம் செல்லாண்டியம்மனும் தான் தடுத்திருக்கணும் என்றார் ராஜு.
சரி, இப்ப என்ன செய்வது என்றார் சின்னு. அதற்கு ராஜு, எப்படியும் நாம குறித்தத் தேதியில் கல்யாணம் நடக்கணும், அதுக்கும் நீ தான் உதவ வேண்டும் சின்னு என்றார், ராஜு. நானா? என்ன செய்யணும்னு சொல்லு! என்றார் சின்னு.
நீ உடனே வேலாயுதம் பாளையத்திற்கு சென்று, கந்தசாமி இருக்காருல்ல. ஆமாம் உங்க பெரிய அக்கா வீட்டுக்காரர்.
அவர் கொஞ்சம் சுகம் இல்லாமல் இருப்பதால், கல்யாணத்திற்கு அக்காவும் பிள்ளைகளும் மட்டும் தான் வந்திருக்கிறார்கள். அதனால்,வீட்டில் இருக்கும் அவரைக் கண்டு நடந்த விவரங்களைக் கூறி அவரையும் அழைத்துக் கொண்டு, இரண்டு பேருமா வேலூருக்கு; சின்ன அக்கா வீட்டிற்கு சென்று அவர்களிடம் விவரத்தைச் சொல்லி. பழசெல்லாம் மனசுல வைத்துக் கொள்ளாம என் மகளுக்கு குறித்த நேரத்தில் திருமணம் நடக்க என் அக்காவும் மாமாவும் தான் மனசு வைக்க வேண்டும் என்று நான் கூறியதாகச் சொல்லி தயவு கூர்ந்து என் மகளை என் மாப்பிள்ளை சந்திரனுக்கே திருமணம் செய்து கொள்ள சொல்ல வேண்டும்.
அது உன்னாலத் தான் முடியும் என்றார் ராஜு.
நானா! என்ன சொல்கிறாய்? ஆமாம் நீ தான், உன்னால் தான் அதைச் செய்ய முடியும். அந்த அக்காவிற்கு மாப்பிள்ளை கொண்டு வந்ததே நீ தானே!. அதோடு நீ எப்போதும் நியாயத்தை மட்டும் பேசுவாய் என்று உன் மீது நல்ல அபிப்ராயம் அவர்களுக்கு உண்டு. அதனால் தான் உன்னை செய்யச் சொல்கிறேன் என்றார் ராஜு.
சரிப்பா! அது தான் நான் முன்னாடியே சொன்னது தானே! அதற்கு உன் மனைவி ஒத்துக் கொள்ளணுமே என்றார் சின்னு. என் மனைவியா?, அவ கிடக்கிறா. அவ பேராசை பிடித்தப் பேச்சைக் கேட்டு, கேட்டுத் தான் நான் இப்படி சீரழிஞ்சுக் கிடக்கிறேன்.
அவளை விடு நான் சொல்றதைச் செய் என்றார் ராஜு. எதற்கும் நீங்கள் இருவரும் வருவது தான் சிறந்தது என்ற சின்னுவிடம். நாங்கள் அனைவரும் இரண்டு பஸ்சிலும் கிளம்பி வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு வந்து விடுகிறோம். அங்கு வந்த உடன் அங்கு அனைவரையும் இருக்கச் செய்துவிட்டு, நானும் என் மனைவியும் வேலூர் வருகிறோம் அதற்குள் நீங்கள் இருவரும் பேச்சை ஆரம்பியுங்கள் என்றார் ராஜு.
சின்னுவும், ராஜு கூறியது போல்; ராஜுவின் பெரிய அக்க வீட்டுக்காரரை அழைத்துக் கொண்டு வேலூர் சென்று அவர்களிடம் விவரத்தை எல்லாம் சொன்னார். மேலும் ராஜுவும், அவரது மனைவியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களிடம் இது பற்றிப் பேச இங்கு வருவார்கள் என்றும் கூறினார்.
அப்போது ராஜுவின் சின்ன அக்கா வீட்டுக்காரர் சுந்தரம், எனக்கு, இதில் சம்மதம்தான் இருந்தும், சந்திரனையும், அவனின் அம்மாவையும் ஒரு வார்த்தைக் கேட்டுவிடுங்கள் என்றார்.
ராஜுவின் அக்கா சொன்னார்: அது சரி தான். எங்களை வேண்டாம் என்று சென்றார்கள், இப்போது பாருங்கள் அவர்கள் ஓன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்றை நினைக்கிறது.
என் அப்பா அம்மாவும் இப்படித் தான் செய்யச் சொல்லிவிட்டு இறந்து போனார்கள். ஆனால், பெரியவர்களின் பேச்சுக்கெல்லாம் மரியாதையும், மதிப்பும் இங்கு எங்கே இருக்கிறது?.
உயிரோடு இருக்கும் போதே இருப்பதில்லை, இறந்த பின்பு, யார் நினைக்கிறார்கள்…. என்றும்; மேலும், என் தம்பி மனைவி தான் இதற்கெல்லாம் காரணம். அவளின் பேச்சை மீறமுடியாத என் தம்பி அதற்கு உடந்தை... இப்படி தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டிக்கொண்டிருந்த போது, அங்கே இருந்த சந்திரன் குறுக்கிட்டு... அம்மா, உங்களின் கோபத்தை எல்லாம் காண்பிக்கும் நேரம் இது இல்லை.... விடுங்கள் அம்மா... என்று கூறி, மேலும் கூறுவான் சின்னு மாமா, என் மாமா இருக்கும் மன நிலையில் வேறெதுவும் பேசவேண்டாம் எனக்கு முழு சம்மதம் ஆக வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள் என்றான்.
அதோடு மாமாவும், அத்தையும் இதற்காக இங்கு வரவேண்டாம் அங்கே இருந்து ஆகவேண்டிய திருமண ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லுங்கள். நாம் அனைவரும் அங்கே வந்துவிடுகிறோம் என்றும் கூறிவிடுங்கள் என்றான்.
இவ்வளவு நல்ல மாப்பிள்ளையை; உன்னை விட்டுவிட்டு வேறெங்கோ தேடிச் சென்றார்களே!... என்று சின்னு வாய்விட்டு சொல்லி அருகில் இருந்த சந்திரனை ஆரத் தழுவினார்.
சரி, அப்படியே செய்கிறேன் புது மாப்பிள்ளை. என்றார் சின்னு.
தகவல்கள் பரிமாறப் பட்டது. மனிதர்கள் இவர்கள் குறித்த நேரத்தில், இறைவன் குறித்த மாப்பிள்ளையுடன்; அவனின் தத்தா பாட்டி ஆத்மா சாந்தி அடைய; வெண்ணைமலை முருகன் சந்நிதியில், சின்னுவின் நண்பர் ராஜுவின் மகளின் திருமணம் இனிதே நடைபெற்றது...
ராஜுவும் அவரது மனைவியும் நன்றியோடு இருவரின் கண்களிலும் கண்ணீர் மல்க, தனது அக்கா மாமா இருவரிடமும் சென்று தாங்கள் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பும் கோரியும்... அவர்களின் இந்தப் பெருந்தன்மைக்கும், அன்பிற்கும் தங்களது நன்றியையும் கூறிக்கொண்டார்கள்.
அறிவியல் கூறும் காரணம் ஆயிரம் இருக்கலாம்... பணத்தாசைப் பிடித்து திரிபவர்கள் பணத்தை மட்டும் பார்க்காமல்; அதையும் தாண்டி பார்க்க வேண்டிய பல நல்ல, முக்கிய விஷயங்கள் உண்டு என்பதை அறிய வேண்டும்...
வரும் காலங்களில் சாதி, மதம், குலம், கோத்திரம், பணம், படிப்பு, நிறம், அழகு என்று வேறெதையும் கொண்டு கல்யாணம் நிச்சயிக்கப் படுகிறதோ இல்லையோ! ஒவ்வொரு மணமக்களும் திருமணம் நிச்சயிக்கும் முன்பே தங்களது மருத்துவச் சோதனைச் சான்றிதழ்களை பரிமாறிக் கொள்ளவேண்டும். அதுவும் மணமகனுக்கு, மணமகளின் குடும்ப மருத்துவரும்; மணமகளுக்கு, மணமகனின் குடும்ப மருத்துவரும் இச் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.
இதைப் பெற்றவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்; மணமக்களாகப் போகிறவர்கள் உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும். அதோடு இப்போதெல்லாம் தொலை தூரங்களில் பெண்ணும் மாப்பிள்ளைகளும் பேசப் படுவதால், திருமணம் நிச்சயிக்கும் முன்பே அந்தந்த நகரங்களில் இருக்கும் துப்பறியும் தனியார் நிறுவங்களில் கட்டணத்துடன் பதிவு செய்து, குறிப்பிட்ட பெண் மாப்பிள்ளை மற்றும் அவர்களின் குடும்பம் சார்ந்த உண்மை அறிக்கைகளை விசாரித்து தரும்படி செய்து அவைகளை கொண்டு முடிவுக்கும் வரவேண்டும்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்!!!
நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி
சிங்கப்பூர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!
பகவான் ஸ்ரீ ரமணரின் கர்மயோகத்தைப் பற்றிய விளக்கத்தை அவ்வழியிலே உணர்த்தி இருக்கிறார்.. அருமை, கிருஷ்ணன் சார் தொடர்ந்து பகவான் ஸ்ரீ ரமணரின் உபதேசக் கட்டுரைகளை வகுப்பறைக்கு எழுதுங்கள் நன்றி.
ReplyDeleteகோளறு பதிகம் அதன் பயனும் பற்றிய விளக்கம் அருமை... திருவாளர் கங்காதரனும் தனது ஆக்கங்களை வகுப்பறைக்கு அனுப்பி அனைவரையும் பயனுறச் செய்யவேண்டும் என அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்... நண்பர் சிவஞானம் அவர்களின் தொகுப்பிற்கு நன்றி... தொடர்ந்து எழுதுங்கள்.
எனது ஆக்கத்தையும் இதனுடன் சேர்த்த வாத்தியார் ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
என் ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!
ReplyDeleteஎடப்பாடியரின் மற்றொரு ஆக்கம் இன்று வெளியாகியுள்ளது.
http://jeyalakshmi-anuradha.blogspot.com/
சைவத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த திரு ஜானகிராமன் அவர்கள் சிறுகச்சிறுக நமக்கு சைவச் செய்திகளைத்தொடர்ந்து தர வேண்டுகிறேன்.அவருடைய வலைப்பூ முகவரி:http://sivaayasivaa.blogspot.com/
நண்பர் திரு ஹாலாஸ்யத்தின் படைப்பு நிகழ்கால நிதர்சனத்தைப் பேசுகிறது, ஆக்கம் நன்று.
migavum arumai
ReplyDeletesuper sir
வணக்கம் வாத்தியார் ஐயா,
ReplyDeleteஅடியவனே " சிவயசிவ " என்று ஒரு பிளகார் துவங்கியிருந்தாலும் எனது தாய்வீடாகிய " வகுப்பறையில் "
எமது படைப்புகள் வருவதையே பெரிதும் விரும்புகிறேன்..
எமது பதிவை வெளியிட்டமைக்காக மிக்க நன்றி ஐயா...
வணக்கம் கேஎம்ஆர்கே சார்,
ReplyDelete"ஒரு செயலைச் செய்யும் போது சிரத்தையுடன் செய்து, பலனைத் தியாகம் செய்து விடலே கர்மயோகம்" என்று பேராசிரியருக்கு விளங்கியது.
மிக அற்புதமான கருத்து ஐயா..
சொல் ஒன்று செயல் ஒன்று என வாழாமல் ஞானிகள் சொல்லும் செயலும் ஒத்து வாழ்ந்தமை கண்டு மகிழ்கிறோம்..
நமக்கும் இதுபோன்ற பக்குவம் வரவேண்டும் என்ற ஆவலை இவ்வாக்கம் தோற்றுவித்தது.
மிக்க மகிழ்ச்சி.
அன்புடைய சிவ.சி.மா.ஜானகிராமன் AVL,
ReplyDelete/// 36 . புத்தர் சமணர் போன்ற புறச்சமயவாதிகளால் நேரும் துன்பம் ///
இந்தச் சமயவாதிகளால் என்ன துன்பம் நேரிடும் என்று சற்று விளக்குங்களேன்.
அன்புடன்,
சஞ்சை ராமநாதன்
சேலம்
வணக்கம் ஆலாசியம் ..
ReplyDeleteமிக அற்புதமான விசயத்தை இங்கு தந்திருக்கிறீர்கள்...நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மை.
நடைமுறைக்கு சற்று ஒத்துவராததாக தோன்றினாலும் இதை நடைமுறைப்படுத்துவதே நமது சந்ததியினருக்கு நாம் செய்யும் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவம் எனது வாழ்வில் மிக சமீபத்தில் நடந்தது .. கடந்த மார்ச் 16 ஆம் தேதி கரூரில் எமது முன்னிலையில் நடைபெறவிருந்த திருமணம் தடையானது. காரணம் மாப்பிள்ளையின் குணநலன் சரியில்லை என்று இறுதி நேரத்தில் தெரியவந்ததால் மார்ச் 14 ம் தேதி இந்த திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணம் நின்று போனது மிகுந்த வேதனையைத் தந்தது.
ஆனாலும் ஒரு பெண்ணின் வாழ்கை பாதிக்கப்படாமல் தடுக்கப்பட்டது என்பது மகிழ்ச்சியைத் தந்தது.
விரைவில் அந்த பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடாகவுள்ளது.
நன்றி ஆலாசியம் நல்ல அவசியமான விழிப்புணர்வோடு கூடிய பதிப்பு.
வணக்கம் சஞ்சை ராமநாதன் அவர்களே,
ReplyDelete//இந்தச் சமயவாதிகளால் என்ன துன்பம் நேரிடும் என்று சற்று விளக்குங்களேன்.//
வாய்பிருக்கும்போது நிச்சயம் விரிவாக விளக்குகிறேன்.
அதற்கு முன்னர், எடுத்துக்காட்டுக்கு
1. இன்றைய இலங்கையில் என்ன சமயத்தை பின்பற்றுகிறார்கள் என்பதையும் அதனால் தமிழர்களுக்கு என்னவென்ன கொடுமைகளெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் நினைவு கூருங்கள்..
2. சீன அரசாங்கம் என்ன சமயத்தை பின்பற்றுகிறார்கள் என்பதையும் அவர்கள் நம் இந்திய இறையாண்மைக்கு எத்ததைகய அச்சுறுத்தல்களை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவு கூருங்கள்..
மேலும் நமது வகுப்பறையில் கடந்த 06 -05 -2011 ல் வெளியிடப்பட்டுள்ள
உயிர்தப்பி ஓடிவந்த சாமியாரின் கதையை படியுங்கள்.
அதுமட்டுமல்ல
அவ்வாக்த்தின் பின் ஊட்டத்தில் அடியவனும் + திருவாளர் ஹமாராகானா ( கணபதி ஐயா )
அவர்கள் வெளியிட்டுள்ள பின் ஊட்டத்தையும் படியுங்கள் - நிச்சயம் தெளிவாகும்.
நன்றி தோழரே..
//இந்தச் சமயவாதிகளால் என்ன துன்பம் நேரிடும் என்று சற்று விளக்குங்களேன்.//
ReplyDeleteவாய்பிருக்கும்போது நிச்சயம் விரிவாக விளக்குகிறேன்////
பாடல் எண் : 10
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
பொழிப்புரை :
நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.
இந்த அச்சம்!.. உண்ணா முலை அம்மனிடம் ஞானப் பால் குடித்த
திருஞான சம்பந்தருக்கே வந்திருந்து இதைப் பாடியிருக்கிறார் என்றால்
அதன் அபாயத்தை நம்மால் உணர முடியும்....
ஆன்மீகச் சர்வாதிகாரமே அது மடாதிபதிகள்,
துறவிகள் இவர்கள் தான் உயர்ந்தவர்கள்
ஏன்? கடவுளர்களைப் போல் (புத்தனை மறந்து)
இருந்துள்ளார்கள் / இருக்கிறார்கள்...
பகவான் ரமணரை பற்றி எழுதியதற்கு என் வந்தனங்கள். ரசிக்கதக்கதாக இருந்தது.
ReplyDeleteஇது வருகை பதிவு..
ReplyDeleteblogger கொஞ்சம் block ஆகி
"வெற்றி" விரும்பி தந்ததா அல்லது
வெறுப்பில் வந்ததா..(?!)
எதுவாக இருந்தாலும்
வாழ்த்துக்களும் வணக்கங்களும்
வழக்கம் போல்
தவத்திரு ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்கு வந்தனங்கள்.
ReplyDelete"தன்யனானேன்" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
பகவான் ஸ்ரீரமணர் அல்லவா மீண்டும் நீண்டநாள் இடைவெளிக்குப் பின் தங்களை வகுப்பறைக்கு வரவழைத்து உள்ளார்.
வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம்.இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வகுப்பறைக்கு வந்து தகவல்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
ReplyDeleteரமணரைப் பற்றிய கட்டுரை மிகவும் அருமை.குருவாக இருந்து வழி காட்டியவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.
லால்குடி முத்துராம கிருஷ்ணன் ஐயாவுக்கு நன்றி.
சிவ.சி.மா.ஜானகிராமன் ஐயாவின் கட்டுரை மிக விரிவான விளக்கங்களோடு அருமையாய் வந்துள்ளது.பல்வேறு துன்பங்களில் இருந்து விடுபட கோளறுபதிகம் ஒன்றே போதும் என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி உள்ளது.
சிவ.சி.மா.ஜானகிராமன் ஐயாவுக்கு நன்றி.
சமயச் சீர்திருத்தம் மட்டுமல்ல சமுதாயச் சீர்திருத்தமும் வேண்டும் என்பதை உழவாரப் பணி செய்து காட்டிய திருநாவுக்கரசரின் வழி வந்தவர்கள் நாம் என்பதை உணர்த்தும் வகையில் ஆலாசியம் ஐயாவின் கட்டுரை உள்ளது.
///திருவாளர் கங்காதரனும் தனது ஆக்கங்களை வகுப்பறைக்கு அனுப்பி அனைவரையும் பயனுறச் செய்யவேண்டும் என அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்...///
ஆலாசியம் ஐயா அடியேன் சிறு குழந்தை.இது ஓடும் தளம்.சிவயசிவ வில் தவழ்ந்து பின் நடந்து இங்கு வருவது நல்லது என நினைக்கிறோம்.விரைவில் இங்கும் எழுத முயல்கிறோம்.உங்கள் அன்புக்கு நன்றி.
இந்த சிறந்த பதிவுகளை எல்லாம் வெளியிட்டு வரும் வாத்தியார் ஐயாவுக்கும் நன்றி.
அன்புடன் வணக்கம் திரு .KMR.K....ஸ்ரீ ல ஸ்ரீ ரமண மகாரிஷயின் செயல்பாடுகளே... நமக்கு ஒரு வழிகாட்டிதல் அவர்களின் ஒவ்வொரு நடைய்லும்.. ஒரு கருத்து நமக்கு உணர்த்துவார்கள்!!!! பெரியவர் நீங்கள் இது போன்ற விஷயங்களை இந்த காலத்திற்கு தேவையானதை எடுத்து உபகரிக்க வேண்டும்..... செய்வீர்கள்..!!!. திரு அலசியம் ஜி ஒரு நூலகம் (A.G. ) தனது அனுபவத்தை சொல்கிறது சரிதானா !! நன்றி ..சிவஸ்ரீ .ஜானகிராம் அய்யா .. நீங்கள் எடுத்தாண்டுள்ள கோளறு பதிகத்தின் பயன் பாடு சொல்ல வார்தகளில்லை.. ஒரு சின்ன விண்ணப்பம்.:-கோளறு பதிகம்.. பண:::= "'பியந்தை காந்தாரம்"" இந்த பண்ணில் யாரவது பாடி ஏதாவது ஓலி நாடா, குறுந்தகடு இருக்கிரதா? தகவல் தெரிவித்தல் ஜென்மத்துக்கும் கடமை பட்டவன் ஆவேன். !!
ReplyDelete/////////இந்த இடத்தில சொல்லவா ? வேண்டாமா ? என்று தெரிய வில்லை . . வாத்தியார் அய்யா சரி என்றால் வெளிட வேண்டுகிறேன் நெல்லை நகரில் ஒரு தமிழ் ஆர்வலர்கள் திரு கூட்டம் திருவாசகம் முற்றோதுதல் என வைத்திருந்தார்கள்!! அடியேனுக்கும் அழைப்பு.. சென்றேன் !!அவர்கள் பாடிய திருவாசகத்தை கேட்டு மனம் வெதும்பி மAAகேஸ்வர பூஜைக்கு இருங்கள் என் வற்புறுத்தினார்கள் என்னை அழைத்த அன்பர்IDAM அழாதா குறையாக அழுது
வந்து விட்டேன் ..எனன ??சினிமா : திருட திருடிய்ல் வரும பாடல் """ மன்மத ராஜா "" மெட்டில்..திருவாசகம் படித்த் மகளிர் அணி எனனவென்று பாராட்டுவது.!!!. இவங்க கூட உட்கார்ந்து பூஜை பண்ணி உணவும் உண்ணவா???""" "எண்ண பாவம் பண்ணினேன் ""மாணிக்க வாசக பிரபு"" இந்த நாரசார ஓலி கேட்க என் கண்ணீர் விட்டுக்கொண்டே வந்தேன் . .. திருவாசகம் படிக்க வேண்டிய ராகம் ..குறுஞ்சி பண் அல்லது மோகன ராகம்.. இந்த ராகத்தில் பாடினால் ஆனந்த கண்ணீர் அருவியென வரும் எம்பெருமான் ஓடோடி வருவார்..யாரு படிக்கா ??
வணக்கம் கணபதி ஐயா,
ReplyDelete//ஒரு சின்ன விண்ணப்பம்.:-கோளறு பதிகம்.. பண:::= "'பியந்தை காந்தாரம்"" இந்த பண்ணில் யாரவது பாடி ஏதாவது ஓலி நாடா, குறுந்தகடு இருக்கிரதா? தகவல் தெரிவித்தல் ஜென்மத்துக்கும் கடமை பட்டவன் ஆவேன். !! //
வணக்கம் ஐயா.. பண்ணோடு திருத்தணி சுவாமிநாதன் பாடியிருப்பதாக நினைவு.. விரைவில் பண்ணோடு கூடிய பாடலை பெற்றுத் தர முயற்சிக்கிறேன்..
அடியவன் வசம் இருக்கின்ற
தருமபுரம் சாமிநாதன் ஐயா பாடிய கோளறு திருப்பதிகமும்
சீர்காழி கோவிந்தாராசன் அவர்கள் பாடிய கோளறு திருப்பதிகமும்
( ஆடியோ பைலாக ) அட்டாச் செய்து மெயிலில் அனுப்பியுள்ளேன்.
தங்களிடம் இவை இருந்தால் பொறுத்தருளவும்..
மேலும், இங்கெல்லாம் ( பின்வரும் வலைத்தளங்களில் )
கோளறு திருபபதிகம் இருக்கிறது கேட்டுப் பாருங்கள் ஐயா..
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TD00748
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TD00136
http://devarathirumurai.wordpress.com/
http://www.devarathirumurai.blogspot.com/
நன்றி...
வணக்கம் கணபதி ஐயா,
ReplyDelete//அவர்கள் பாடிய திருவாசகத்தை கேட்டு மனம் வெதும்பி மAAகேஸ்வர பூஜைக்கு இருங்கள் என் வற்புறுத்தினார்கள் என்னை அழைத்த அன்பர்IDAM அழாதா குறையாக அழுது
வந்து விட்டேன் ..எனன ??சினிமா : திருட திருடிய்ல் வரும பாடல் """ மன்மத ராஜா "" மெட்டில்..திருவாசகம் படித்த் மகளிர் அணி எனனவென்று பாராட்டுவது.//
தாங்கள் சொல்வது உண்மைதான்..
இன்று ஆன்மிக உலகில் போலிகள் அதிகமாகி விட்டனர் ..
அதோடு இந்த ஐயப்பன் பாடலகளை இப்படி கன்வர்ட் செய்து செய்து
இன்று ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனைக் கடித்த கதையாக இந்த இசைமாற்ற பழக்கம்
திருவாசகத்திற்கும் வந்துவிட்டது.
இளையராஜா அமைத்த திருவாசகத்தையே அடியேன் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தேன்..
யாம் அறிந்த அன்பர்களிடமும் இது கூடாது என்று சொன்னபோது பகைமையே பாராட்டினார்கள்..
சிவசிவ என்று காதை பொத்திக் கொண்டு வந்துவிட்டேன் .. வேறு என்ன செய்ய ?
இறைவனே அவர்களை நல்வழிப்படுத்தட்டும்.
என்றென்றும் பழைமையை போற்றிப் பாதுகாக்கும வரை நாடும் நாமும் நலம் பெறலாம்.
எல்லாம் சிவன் செயல்..
அன்புடன் வணக்கம்..
ReplyDelete** பண்ணோடு திருத்தணி சுவாமிநாதன் பாடியிருப்பதாக நினைவு.. விரைவில் பண்ணோடு கூடிய பாடலை பெற்றுத் தர முயற்சிக்கிறேன்..
அடியவன் வசம் இருக்கின்ற
தருமபுரம் சாமிநாதன் ஐயா பாடிய கோளறு திருப்பதிகமும்
சீர்காழி கோவிந்தாராசன் அவர்கள் பாடிய கோளறு திருப்பதிகமும்
( ஆடியோ பைலாக ) அட்டாச் செய்து மெயிலில் அனுப்பியுள்ளேன்.
தங்களிடம் இவை இருந்தால் பொறுத்தருளவும்.
மேலும், இங்கெல்லாம் ( பின்வரும் வலைத்தளங்களில் )
கோளறு திருபபதிகம் இருக்கிறது கேட்டுப் பாருங்கள் ஐயா..**
அய்யா பண்ணோடு இருக்கிறது !!! சரிதான்... இவை யாவும் பியந்தை காந்தாரம் பணதானா?? எனக்கு இந்த பண இதுதான் என்பது தெரியாது.!!ஆகவேதான் உங்களை போன்ற அனுபவ சாலிகள் சொன்னால் சரி என்று கேட்கலாம்.. கேட்கிறேன்.. ( சாமிநாதன்,பாடியது பியந்தை காந்தாரம் இல்லை என கேள்விபட்டேன்.. சீர்காழி பாடியது கேட்டதில்லை..ராஜா பாடியது கேட்க இல்லை!!! பாதுகாக்க வேண்டியது ( எப்படி பாடக்கூடாது என்று ) கவனம்::: மற்றவை:= எனது இணைய தள இணைப்பு சுமார் தரவிறக்கம் மிக கடினம்..!! ஆகவே தாங்கள் சரியான குறுந்தகடு இருப்பின் தகவல் கூறுங்கள் அடியேன் பெற்று கொள்கிறேன்.. thanks..
இன்னிக்கு பதிவில் ஆன்மீக வாடை தூக்கலாக அடிக்கிறது..ஆன்மீக ஆர்வலர்களுக்கு நல்ல விருந்துதான்..
ReplyDeleteமற்றபடி லவுகீகத்தில் உலாவருவோருக்கான மணப் பொருத்தம் பற்றிய ஆலாசியம் அவர்களின் ஆக்கம் அருமை..
திருமணத்துக்கு முன்
எய்ட்ஸ் டெஸ்ட் மஸ்ட்..
என்றுஇதனை முன்னோடியாக ஏற்கனவே இந்தியாவின் மாநிலத்தில் பஞ்சாபில் 2006 லே இது குறித்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக ஞாபகம்..எல்லா மாநிலங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம்..
அற்புதம் நண்பரே!பெரியபுராணம் என்பது பக்தி நூல் என நினைத்திருந்த என் போன்ற அனைவருக்கும் இது ஆச்சரியமான் செய்தி.
ReplyDeleteநிச்சயம் இது போன்ற நிறைய அதிசயங்கள் பெரியபுராணத்தில் இருக்கும்.அதை எல்லாம் எங்களுக்கு வாரி வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
வாத்தியார் ஐயா மன்னிக்கவும்.சிவயசிவ செல்ல வேண்டிய கமென்ட் இங்கு வந்துவிட்டது.பிழையை பொறுத்தருளி அந்த இரு கமெண்ட்டையும் வெளியிடவேண்டாம்.நன்றி.
ReplyDeleteஎனது ஆக்கத்தை வாசித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....
ReplyDeleteஎமது ஆக்கத்திற்கு
ReplyDeleteவாய்ப்பளித்த வாத்தியாருக்கும்
வாசித்த அன்பர் பெருமக்களுக்கும
வணக்கத்துடன் கூடிய நன்றிகள்...
good explanation of karma yoga by ramanar
ReplyDelete