22.11.12

இலக்கியச்சோலை: பாப்பையாவும் விரல் சூப்புகின்ற குழந்தையும்!

இலக்கியச்சோலை: பாப்பையாவும் விரல் சூப்புகின்ற குழந்தையும்!

எனது நண்பர் கவித்தென்றல் காசுமணியன் அவர்கள் சிறந்த கவிஞர். “நெஞ்சத்தில் கருவுற்றால் நிமிடத்தில் பெற்றெடுப்பான். என்று கவியரசர் கண்ணதாசனின் பாராட்டைப் பெற்ற கவிஞர். எங்கள் பகுதியில் நடைபெறும் பிரபலமான விழாக்களில் அவரைத்தான் தொகுப்புரை வழங்க அன்புடன் அழைப்பார்கள். அவரும் மனமுவந்து செல்வார். அவர் வழங்கிய தொகுப்ப்ரைக் கவிதைகள் ஏராளமாக உள்ளன். அவற்றில் சிலவற்றை நீங்கள் படித்து மகிழ்வதற்காக இன்று வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
1
பட்டிமன்ற வித்தகர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் பற்றிக் கவித்தென்றல்
சொல்லிச் சபையைக் கலகலக்க வைத்த தொகுப்புரை:

பாப்பையா என்றாலே           
  பத்துமாதம் பிறந்துவிரல்          
சூப்புகின்ற குழந்தைகூட        
  தூக்கத்தை விட்டுவிட்டு          
பாப்பையா பட்டிமன்றம்         
  பார்ப்பதற்காய் எழுந்தமரும்     
                                 
இதயத்தில் தமிழைவைத்தார்       
  ஏற்றத்தைக் குரலில்வைத்தார்
திருமாலை நிறத்தில்வைத்தார்
  சிரிப்பை உரையில்வைத்தார்

மூக்கின் கூர்மையினை
  மூவர்ணக் கிளியில்வைத்தார்
பச்சரிசி அடிக்கினாற்போல்
  பல்வரிசை அமைந்திருக்கும்
உச்சரிப்பில் மன்னராவார்
 உங்கள்முன் நடுவராக
கச்சிதமாய் தீர்ப்புத்தர
 கைதட்டி வரவேற்போம்!

2
மேடைப் பேச்சில் மேதையான திரு.பழ.கருப்பையா அவர்களைப்பற்றிக்
கவித்தென்றல் சிறப்பாகச் சொன்னது:

பழ.கருப்பையா உங்கள்           
  பழகுதமிழ் இனிப்பையா            
நல்லசுவைத் தமிழிருக்கும்          
  நகைச்சுவை கலந்திருக்கும்          
வெள்ளமாய்க் கருத்திருக்கும்       
  வேகமாய் நடையிருக்கும்          
                      
குடிநீர்க் காவலர்                      
  கொஞ்சுதமிழ்ப் பாவலர்                                        
விடியும்வரை பேசினாலும்                               
  விருப்பமுடன் பேசிடுவார்
ஆத்தா பேச்சுக்களை
  ஆச்சிகளின் இயல்புகளை
அப்பச்சி நடைமுறையை
  அப்படியே பேச்சுக்களில்
நகைச்சுவை கலந்துவிட்டு 
  நாட்டுவதில் வல்லவர்கள்
சிரிக்க வைப்பார்கள் - அதேசமயம்                                  
  சிந்திக்க வைப்பார்கள்!


3
பேராசிரியர் திரு.கண.சிற்சபேசன் அவர்களைப்பற்றிக் கவித்தென்றல்
அருமையாக உரைத்தது:

தியாகராயர் கல்லூரியில்          
  திறமையாகப் பணியாற்றி          
வங்கித் துறையினிலே            
  வாழ்க்கைப் புகழ்சேர்த்து           
பட்டிமன்ற நிகழ்ச்சிவழி           
  பரிணமித்த அறிஞரிவர்             
இயல்பான நகைச்சுவைகள்
  இவர்பேச்சில் நிறைந்திருக்கும்
சுவையாகப்  பேசும்எங்கள்
  சொல்லறிஞரே  வருக!
பழநியப்பர் பற்றியிங்கு
  பாராட்டு  உரைதருக!

               
    கவித்தென்றல் கலந்து கொண்டு சிறப்பித்த மன்றங்களில், அவரால் தொகுத்துச்
சொல்லப்பட்ட ஏராளமான தொகுப்புக் கவிதைகளில் இடம் கருதி சிலவற்றை மட்டுமே
தந்துள்ளேன்.

++++++++++++++++++++++++++++++++++++
4
தென்றல் புயலாகிப் பாடியது.

ஒரு கவிஞன்  இப்படிச் சொன்னான்

        "இருக்கும்போது காற்றாக இருப்போம்
            எழுந்து புறப்பட்டால் புயலாகிவிடுவோம்!"

இதை மெய்ப்பிக்கும் விதமாக, ஒரு முறை கோவை மணி மேல் நிலைப்பள்ளியில் கவியரசர் வைரமுத்து அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் தனக்கு முன்பு  கவிதை பாடியவர் வைரமுத்து அவர்களைக் 'கருப்புக் கம்பன்' என்று வர்ணித்ததைக் கேட்டுவிட்டு, அவருக்கு அடுத்ததாக வாழ்த்துக்கவிபாட வந்த கவித்தென்றல்,
புயலாகமாறிப் பாடிய கவிதை வரிகள்:

கருப்புக்கம்பன் என்று                   
   கவியரசைச் சொன்னீரே                 
கருப்பென்ன? சிவப்பென்ன?              
   கட்டியுள்ள ஆடை                      
வெள்ளை நிறத்தைப்பார்                
   உள்ளம் அதில் தெரியும்                 

வெள்ளை வேட்டியென்ன?               
  வெளிர்கெண்டைக்  கரையென்ன?          
முல்லைச் சிரிப்பென்ன?                     
  முழுமதியின் அழகென்ன?                
அத்தனையும் விட்டுவிட்டு              
  அன்புக் கவியரசைக்                    
கருப்புக் கம்பனென்று                        
    கவிதையிலே சொன்னீரே!
          
        - போகட்டும்

கம்பன் சிவப்பென்று
   கண்டவர் யாரைய்யா?
பட்டிமன்றம் இதுவல்ல
   பாராட்டு விழாவென்று
விட்டுவிட்டுச் செல்கின்றேன்
    வேறிடத்தில் சொல்லாதீர்

நீங்கள்எல்லாம் அறிவீர்கள்
   நிலக்கரி கருப்புத்தான்
நெருப்பிலிட்டால் சிவப்பாகும்
   நீரிலிட்டால் கருப்பாகும்                       
அதுபோலத்தான் எங்கள்                                     
   அன்புக் கவியரசர்
செந்தமிழை  எழுதச்
    சிவப்பாகமாறிடுவார் - இப்படி
வந்து அமர்ந்திட்டால்
    வண்ணம் கருப்பாவார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

7 comments:

  1. Good morning sir. Nice poems. Particularly about pappaiya. I have seen in many home, that how eager they are to see his pattimandram.

    Sir, we have asked some questions on your previous lessons like sani yepadi kodupan, thither.. We are expecting your valuable reply for that.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    நன்றி

    ReplyDelete
  3. ஒரு முறை சென்னை to கோலாலம்பூர் விமானபயனத்தில் பாப்பையா அவர்களோடு பக்கத்து சீட்டில் அமர்ந்து பயனம் செய்தேன். M.N ராஜம் மற்றும் பலர் ஒரு குழுவாக வந்தார்கள். பட்டி மன்றத்தில் பார்த்த பாப்பையா அவர்கள் நேரிலும் அப்படியே, அதே சிரிப்பு அதே நகைச்சுவை உணர்வுடன் பேச்சு, முன் சீட்,பின் சீட் பக்கத்து சீட்காரர்கள் எல்லோரும் சிரிக்கும் பேச்சு அதே கலகலப்பு இவரிடம்.

    பட்டிமன்ற பாவலன்
    பாப்பையா
    உன் தமிழ் உச்சரிப்பு
    யாருக்கு வருமைய்யா.

    கருப்பு இல்லையெனில்
    சிவப்புக்கு
    ஏதைய்யா பெயர்?
    இரவு இல்லையெனில்
    நிலவுக்கு
    ஏதைய்யா புகழ்?

    மாமன்னனிடம் இருப்பது
    ஆளுமை எனும் மாட்சி
    இந்த மன்னர் ஆள
    தமிழ்
    தன்னை தந்தே
    அதற்கு சாட்சி.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,கவிதை தொகுப்பு அருமை நன்றி.

    ReplyDelete
  5. டங்.. ட...ங்...
    என்ற ஒரு அண்மையில் வந்த திரைப்பாடல்

    இதில் ஒரு சரணத்தில் கவிஞர் இப்படி சொல்லி இருப்பார்..

    ஆச்சின்னா மனோரமா
    பேச்சின்னா பாப்பய்யா

    இது
    பாப்பய்யா பற்றிய பதிவு
    பொருத்தமாக இருக்குமே என

    இந்த பாடல் வரிகளை
    இங்கு சுழல விட்டோம்..

    பாப்பய்யா.. தமிழகத்தின்
    போப்பய்யா..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com