26.8.11

தூய அன்பால் திருந்திய திருடர்கள்!

-----------------------------------------------------------------------------------------------
தூய அன்பால் திருந்திய திருடர்கள்!

பக்தி மலர்

தூய அன்னை ஸ்ரீசாரதாமணிதேவியார் அவர்கள், 
ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குத் தாயாக, துணவியாக,தோழியாக,
சிஷ்யையாக இன்னும் பல வடிவங்களில் அவருடன் இணைந்து
ஆன்மீகத் தொண்டு ஆற்றினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்,மிஷன் ஆகியவற்றைத் துவங்கவில்லை. ஆனால் தன் ஆன்ம ஒளி இன்னும் ஓர் ஆயிரம் வருடங்களுக்காவது உலகெங்கும் பரவி  இருக்கும் என்பதை  உணர்ந்து கூறினார். அதை வளர்த்தெடுக்கும் பணியினைத் தூய அன்னையிடமே ஒப்படைத்துச் சென்றார். தனக்கு ஸ்ரீகுருதேவரால் அளிக்க‌ப்பட்ட புனிதக் கடமையை செவ்வனே ஆற்றி, மடம் மிஷன் ஆகியவை நன்கு வேர் ஊன்றிய பின்னரே தூய அன்னை இவ்வுலக வாழ்வினை விட்டு அகன்றார்.

ஸ்ரீதூய அன்னையார் அன்பே உருவானவர். மிகவும் சிக்கலான சூழலிலும் அன்பு வெல்லும் என்பதை அன்னை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் தங்கியிருந்த தட்சிணேஸ்வரக்கோயிலுக்கும் அன்னையின் தாய்வீடான ஜெயராம்பாடிக்கும் சுமார் 35 மைல்கள் இருக்கும். அந்த தூரத்தை ஓர், இருநாட்கள் நடந்தே அன்னை பலமுறை  அடைந்துள்ளார் தன் கிராமத்தைப் பலமுறை நடைப்பயணத்திலேயே அடைந்துள்ளார். இந்த இரு இடங்களுக்கும் இடையில் பல பகுதிகள் காடுகள் நிறைந்தது. கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்கள் நிறைந்த அக்காட்டுப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் உண்டு.

ஒரு முறை தூய அன்னையார் இந்தக் காட்டுப்பகுதியில் அந்தி சாய்ந்துவிட்ட நேரத்தில் தனியாக நடந்துவர நேர்ந்துவிட்டது. தூய அன்னையார் ஜகன் மாதாவின் மந்திரத்தை மனதுக்குள் ஜெபித்துக் கொண்டே விரைவாக நடந்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஓர் இடிக்குரல் கேட்டது.

"யாரது? மேலே நகராமல் அங்கேயே நில்!"

மரக்கிளையில் இருந்து ஓர் நெடிய உருவம் பயங்கரத் தோற்றத்துடன் தூய அன்னையாரின் முன் குதித்தது.முகம் முழுதும் நிரம்பிய மீசை. சிவந்த உருட்டுக் கண்கள். வலிமையான தோள்கள்.கையில் ஆளை ஒரே வீச்சில் காலி செய்யக்கூடிய கூர்மையான ஆயுதம்.

திடீரென இப்படி பய‌ங்கரமாக ஓர் ஆள் வந்து தன் முன் குதித்ததால் அன்னை அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் அச்சம் கொள்ளவில்லை. தன்னுடன் காளி அன்னையே இருப்பதால் தன‌க்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற திட நம்பிக் கையுடன் அசையாமல் நின்றார்கள்.

அப்போது  மறைவிலிருந்து ஒரு பெண்ணும் வெளியில் வந்து இருவருமாக‌ அன்னையைச் சோதனை இடத் துவங்கினார்கள்.

"எவ்வளவு பணம் வைத்து இருக்கிறாய்? என்ன நகை போட்டு இருக்கிறாய்? எல்லாவற்றையும் எடுத்துக் கொடு. உயிருடன் விட்டு விடுகிறோம். கொடுக்க மறுத்தால் பிண‌மாவாய். ஜாக்கிரதை!" என்று மிரட்டியது ஆண்குரல்.கூட இருந்த பெண் அந்த கொள்ளயனின் மனைவியாக இருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார் தூய அன்னையார். அந்த கொள்ளைக் காரியின் முகத்தில் ஒரு நல்ல தன்மை இருப்பதைத் தன் உள்ளுணர்வால் அறிந்து கொண்டார்.

அந்த இரு கொடூரர்களையும் பார்த்து "அம்மா!அப்பா!"  என்று உண்மையான பாசத்துடன் அழைத்தார் தூய அன்னையார்.

இதனை சற்றும் எதிர்பார்காத அந்த கொள்ளை தம்பதிகள் மெழுகாக உருகிவிட்டனர். இதுவரை அவர்களை யாரும் 'அம்மா அப்பா' என்று அழைத்ததில்லை. ஏனெனில் அவர்களுக்கு மழலைச் செல்வம் இல்லை. இப்படி அன்னை தங்களை பாசத்துடன் அழைத்ததால் தங்கள் கொடூரச் செயலை மறந்து உணர்ச்சி வயப்பட்டுவிட்டனர்.

குழைந்த குரலில்,"நீ யார் மகளே?எங்கே போகிறாய்? ஏன் இந்த இருட்டு நேரத்தில் தனியாக வந்தாய்? ஆப‌த்து இருக்கும் என்று தெரியாதா?" என்று கனிந்து கேட்டனர்.

"என் பிரியமான அன்னையே, தந்தையே! நான் உங்கள் அன்பு மகள். என் கணவர், உங்கள் மாப்பிள்ளை தட்சிணேஸ்வரக் கோயிலில் பூஜாரியாக இருக்கிறார்.அவரைச் சென்று அடைய போய்க் கொண்டிருக்கிறேன். கால் வலியால் வழியில் சிறிது அமர்ந்து விட்டேன் அதனா‌ல் நான் திட்டமிட்டபடி இருட்டு வருமுன் இந்தக் காட்டை கடக்க முடியவில்லை. என்னிடம் உங்களுக்கு அளிக்கப் பணம் ஒன்றும் இல்லை. வழியில் சாப்பிடக் கொண்டு வந்த தின்பண்டங்கள் கூடத் தீர்ந்துவிட்டன‌. ஒருமுறை தட்சிணேஸ் வரத்திற்கு வந்தால் உங்களுக்குப் பிடித்த உணவு செய்து போடுகிறேன். உங்கள் மாப்பிள்ளையை நீங்கள் பார்க்க வேண்டாமா? அவசியம் ஒரு முறை எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் என் அப்பா, அம்மாவே1" என்றார் தூய அன்னையார்.

இதைக் கேட்ட அந்த காட்டுவாசி தம்பதியார் கண்ணீர் உகுக்க ஆரம்பித்து விட்டனர். "எங்க‌ளுக்கு அம்மா, அப்பா என்று அழைக்கக் குழந்தைகள் இல்லை. முதல் முறையாக எஙளை அம்மா, அப்பா என்று அழைத்த உன்னையே எங்கள் அன்பு மகளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். எங்க‌ள் குடிசைக்கு வா மகளே!"

அன்னையை வற்புறுத்தி அழைத்துச்சென்று இரவு உணவு அளித்து, இரவு தங்க வைத்து, மறுநாள் காலையில் வழிக்கு உணவு கட்டிக் கொடுத்து காடு தாண்டி கொண்டு வந்துவிட்டனர் அந்த 'பொல்லாத' கொள்ளைத் தம்பதியினர்.

"என்னுடன் நீங்களும் வாருங்கள் உங்கள் மருமகனைக் காண !" தூய அன்னை தன் காட்டுவாசிப் பெற்றோரை அழைத்தார்.

"அவசியம் பின்னர் வருகிறோம்.இப்போது வந்தால் எங்களைக் காவல்காரர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். நீ  இனி என்றுமே எங்க‌ள் மகள்தான். கூடிய சீக்கிரம் சீருடன் வருகிறோம் . இப்போது போய் வா மகளே" என்று பிரியாவிடை கொடுத்தனர் தூய அன்னையின் புதிய பெற்றோர்கள்.

அதன் பின்னர் விரைவிலேயே ஒருநாள் பல பலகாரங்களையும் செய்து எடுத்துக் கொண்டு, புதிய ஆடைகளையும் கொண்டு கொடுத்து தூய‌ அன்னையையும், ஸ்ரீ பரமஹம்சரையும் கண்டனர் அந்தப் படிக்காத பாமரப் பெற்றோர். அங்கே இருந்த சூழலால், ஆன்மீகத்தால், தங்கள் புதிய உறவால், தூய அன்னையின் அன்பால் தங்களுடைய கொடூரத் தன்மைகளை விட்டு விட்டு நல் வாழ்வு வாழ்ந்தனர் அந்த காட்டுவாசிப் பெற்றோர்.

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள்?

ஆக்கம்: வகுப்பறையின் மூத்த மாணாவர்களில் ஒருவரான 
திருவாளர். கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
முகாம் இலண்டன்



வாழ்க வளமுடன்!

11 comments:

  1. கலக்கல்...தொடருங்கள்...தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. ஆஹா!!!, உண்மையிலே பக்தி மனம் கமழ்கிறது...
    அருமையான ஒரு நிகழ்வு,
    அதிலும் அற்புதமான ஒரு புனைவு.
    திருவாளர் கே.எம்.ஆர்.கே அவர்களுக்கும்,
    வாத்தியார் ஐயா அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  3. "தூய அன்பால் திருந்திய திருடர்கள்" பதிவிற்கு மிகவும் நன்றிகள் ஐயா 
    திரு.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு.....

    அறிந்திடாத தகவல்கள்....

    நானும் கூட பள்ளித்திருடன் தான்...எழுதுகோல்கள், அழிப்பான் என சின்ன சின்ன திருட்டு செய்து வந்தேன்....எனது 10ம் வகுப்பு ஆசிரியர் திரு. ஜோசப், அவர்களின் அன்பான வார்த்தைகளால் மனம் திருந்திநேன்....

    Ram

    ReplyDelete
  4. தங்கம் என்பது இறுதி வரை
    தங்குவதே என்பர் சிலர்..

    கிள்ளி எறிவது போல
    வெள்ளி வீசும் வரை தேயும் என்பர்..

    கொள்முதல் செய்ய
    கொல்லர் சந்தைக்கா போக வேண்டும்

    சுவையுடன்.. இந்த
    அவையில் அமைந்த இன்றைய

    பதிவுகளுக்கு..
    பழக்கமான நட்புடன்

    வழக்கமான வாழ்த்துக்களுடன்
    வகுப்பறைக்கும் குறள் சிந்தனை

    எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.

    ReplyDelete
  5. ஸ்ரீ தூய அன்னை பற்றிய பதிவுதான் நான் எழுதியவற்றிலேயே எனக்கு முழுமையான ஓர் உணர்வைத் தந்தது.கைவசம் புத்தகங்கள் ஏதும் இன்றி எழுதுகிறோமே, நன்றாக அமையவேண்டுமே என்று தயங்கினேன்.ஸ்ரீஅன்னைதான் சரியான சொற்களையும் பதங்களையும் அமைத்துக் கொடுத்தார். தானாக அருவிபோல வந்து கொட்டி, தமிழ்த் தட்டச்சு தெரியாத என்னை வெகு சீக்கிரம் எழுத வைத்தார். வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.படிக்கும் அனப‌ர்கள் தயவுசெய்து பின்னூட்டம் இடுவதோடு தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை பரிந்துரைத்து வாசிக்கச் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.அன்னையின் புகைப்பட தரிசனமும், அன்புச்செய்தியும் அவர்களிடம் உள்ள சிறிய மாசுகளையும் போக்கிவிடும். நன்றி!

    ReplyDelete
  6. அன்னை ஸ்ரீசாரதாமணிதேவியார் பற்றி அறிந்திறத தகவல் தந்தமைக்கு

    மிக்க நன்றி,
    Murugarajan.

    ReplyDelete
  7. வணக்கம் வாத்தியார் ஐயா!

    வெள்ளி கிழமை அதுவும் மிகவும் சிறப்பான பதிவை தந்த ஸ்ரீ முத்துராம கிருஷ்ணன் ஐயாவிற்கு நன்றிகள் பல கோடிகள்.

    --

    ReplyDelete
  8. நல்ல ஒரு பதிவு! நன்றி!

    ReplyDelete
  9. very much informative and thanx for both Author and the blogger for sharing us all the informations that most of us Havn't known before and we greatly appreciate ur work

    ReplyDelete
  10. பக்தி மணம் கமழும் அருமையானதோர் இடுகை. எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதை பரிந்துரைக்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com