29.5.11

மனிதனை எப்படி மடக்க வேண்டும்?

 ============================================================

மனிதனை எப்படி மடக்க வேண்டும்?
=================================
ஞாயிறு மலர்

இன்றைய ஞாயிறு மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------
1
முகஸ்துதி செய்ததன் பலன் என்ன?

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் கூறுவார்,

'யானையை குழிதோண்டி பிடிக்க வேண்டும்,
பறவைகளை வலைவைத்துப் பிடிக்க வேண்டும்,

மனிதனை முகஸ்துதி செய்து பிடிக்க வேண்டும்' என்று.

இன்று மனிதன் முன்னேறுவதற்கும், காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கும் முகஸ்துதி செய்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறது. அப்படி முகஸ்துதி செய்யாதவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது என்கிற நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.

தனது உயர் அதிகாரிகளால் காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதனால் அவருக்குக் கீழ்படிந்து நடக்கும் ஊழியன் அவரை எப்போதும் முகஸ்துதி செய்துதான் காரியங்களைச் சாதிக்க வேண்டும். அவரை எங்கு சந்தித்தாலும்,   "ஐயா வீட்டு நாய்க்குட்டி நன்றாக இருக்கிறதா?, ஐயாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் ரோஜாவுக்கு இணையாக நான் வேறு எங்கும் அப்படிப்பட்ட பூவைப் பார்த்ததில்லை!" என்றெல்லாம் மனமறிந்து பொய் சொல்லுவான்.

அவ்வளவு ஏன் வீட்டில் தன் மனைவியிடம் கூட காரியம் ஆவதற்குப் பொய்யும் முகஸ்துதியும் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. காலையில் ஒரு காபி சாப்பிட்டிருப்பான். அன்று விடுமுறை என்பதால் மறுபடியும் மற்றொரு காபி வேண்டும். இதை மனைவியிடம் கேட்டால், எத்தனை முறை காபி சாப்பிடுவது. காபிபொடி விலை என்ன தெரியுமா என்றெல்லாம் பொரிந்து தள்ளுவாள். என்ன செய்வது? அடடா! நீ போடும் காபிக்கு இணையாக வேறு எங்கும் நான் சாப்பிட்டதில்லை என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

வள்ளல் என்று நினைத்து ஒருவனிடம் கையேந்தி யாசகம் கேட்டு அதற்கு அவன் 'இல்லை போ' என்று சொல்லிவிட்டதற்காக மனம் வருந்தி, தான் மனசாட்சிக்கு எதிராக பொய்களைச் சொல்லி, முகஸ்துதி செய்து வாழ்ந்ததையெல்லாம் அசை போடுகிறான் ஒரு புலவன்.

அப்படி அசை போட்டதன் விளைவு அவனுக்கு ஏற்பட்ட ஞானோதயம் ஒரு பாட்டாக வெளிவந்தது. அதில் அவன் சொல்லுகிறான், படிப்பறிவு இல்லாத ஒரு பாமரனை 'கல்விக் களஞ்சியமே' என்று பொய் சொன்னேன், காட்டில் மரம் வெட்டுகின்றவனை 'நாடாளும் மன்னவனே' என்றேன், பொல்லாதவன் ஒருவனை நான் நல்லவன் என்று புகழ்ந்தேன், போர் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கோழையைப் பகைவர் மீது பாய்கின்ற புலியே என்றேன், மெலிந்து இளைத்த தொங்கிய தோளை உடைய ஒருவனைப் பார்த்து மற்போரில் வல்லவனே என்று புகழ்ந்தேன், இரந்து கையேந்தி வந்தவருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனை நான் வள்ளலே என்றேன் இப்படி நான் என் வாழ்நாளெல்லாம் பொய்யே சொன்னதனாலோ என்னவோ, நான் கையேந்திப்போய் பரிசில் கேட்ட இடத்தில் ஒருவன் எனக்கு ஒன்றும் இல்லை 'போ' என்று கைவிரித்து விட்டான். நான் சொன்ன பொய்களின் விளைவு இது என்று வருந்துகிறான் அந்தப் புலவன். இதோ அந்தப் பாடல்.

"கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் எந்தன் குற்றத்தால் ஏகின்றேனே!"


அன்புடன்
வி.கோபாலன்
தஞ்சாவூர்

++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ஆங்கிலேயன் செய்த அழும்பு!
---------------------------------------------------
தரம்பால்ஜி........! இந்தப் பெயரை உங்களில் எத்தனை பேர் கேட்டு இருப்பீர்கள்?

இப்பெயரை அறிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

"இந்தியா ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னர்தான் கல்வியிலும், தொழிலிலும் முன்னேற்றம் அடைந்தது. ஆங்கிலேயர்கள் வ‌ருவதற்கு முன்னர் இந்தியர்கள் ஒரு ஒழுங்க‌ற்ற ,படிப்பறிவில்லாத,தொழில் அறியாத, பாமரக் கூட்டமாகத்தான் இருந்தனர்!" இப்ப‌டி யாராவது மேடையில் பேசினால் "ஆமாம் தானே!" என்று பெரும்பாலான இந்தியர்கள் தலையாட்டி அங்கீகரித்து விடுவர்.

ஆனால் அப்படி அங்கீகரிக்க மறுத்தவர், ஆணித்தரமான ஆதாரங்களை அளித்தவர் தரம்பால்ஜி.

சென்ற‌ தலைமுறையில் மஹாத்மா காந்திஜியின் சொல்கேட்டு ஆங்கிலக் கல்வியை உதறிக் கல்லூரியை விட்டு வெளியேறி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார் தரம்பால்ஜி! 1922ல் பிறந்த தரம்பால்ஜி மறைந்தது 2006. உத்திரப்பிரதேச மாநிலம் முஸாப்பூர் மாவட்டத்தில் கண்டல என்ற ஊரில் பிறந்த தரம்பால்ஜி விரும்பிய ஒரு இடம் சென்னையும் தமிழ்நாடும்தான்.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களில் தீராத மோகம் கொண்டவர்.

சரித்திரம் என்பது என்ன?

எதை ஆட்சியாளர்கள் சொல்கிறார்களோ அதுதான் சரித்திரம்.

ஆங்கிலேயர்கள் இங்கே வந்தபோது நல்ல கட்டுக்கோப்பான அமைப்புக்கள் இந்தியாமுழுவதிலும் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்தன.மக்களை ஒற்றுமைப்படுத்துவும், பொருளியல் ரீதியில் செயலூக்கம் கொடுக்கவும் இந்த சமுதாய அமைப்பு பெரிய ஆற்றல் படைத்ததாக இருந்தது.

இதன் முதுகெலும்பை உடைக்க இந்த சமூகப் பொருளியல் அமைப்பை சீர்குலைக்க வேண்டும்.அதை நிர்வாகத்திறன் மிக்க ஆங்கிலேயர் செவ்வனே செய்தனர்.

கலகத்தை உருவாக்கி மக்களை மோதவிடுவதன் மூலம் தங்கள் அதிகார மையத்தை வலுப்படுத்திக் கொள்ளும் தந்திரம் மிக்கவர்கள் ஆங்கிலேயர்கள். ஒரு பிரிவினர் மற்றையோருக்கு கலவி பயிலத் தடையாக இருக்கின்றனர் என்ற வேற்றுமை விதையை வெற்றிகரமாக விதைத்தனர் அன்னியர். அவர்களுடைய பொய்யான பிரச்சாரத்தை ஒரு சாரார் நம்பி மற்றொரு சாரார் மீது தீராத பகைமை பாராட்டத் துவங்கினர். அதனுடைய உக்கிரகம் இன்றும் தணியவில்லை.

தரம்பால்ஜி செய்துள்ளது பல சரித்திர ஆய்வாளர்களால் செய்ய முடியாத பணி.

தரம்பால்ஜி இன்றளவும் ஒரு சரித்திர ஆய்வாளராகப் பேராசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவர். ஏனெனில் அவர் வசம் ஒரு பல்கலைகழகத்தின் பட்டப் படிப்புச் சான்றோ, முறையாகப் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்ட தற்கான அத்தாட்சியோ ஏதும் இல்லை.. ஆனாலும் அவர் பணி இந்திய சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.எதிர்காலத்தில் மேலும் ஆய்வுக‌ள் வரும் போது, தரம்பாலின் முன்னோடிப் பணிக்கு நிச்ச‌யமான அங்கீகாரம் கிடைக்கும்.

அப்படி என்னதான் செய்தார் தரம்பால்ஜி?

இந்திய அரசு ஆவணக்காப்பகங்களில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தார். இலண்டன் மாந‌கரில் உள்ள ஆவணங்களையும் நுணுகி ஆராய்ந்தார்.

அவருக்குக் கிடைத்த சான்று என்ன தெரியுமா?

இந்தியாவில் ஆரம்பக்கல்வியும் உயர் கல்வியும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு, சாதி, ம‌த பாலின வேற்றுமையின்றி எல்லோருக்கும் கிடைத்தது என்பதே.

அவருடைய ஆய்வு நூலகள் 5 புத்தகங்களாகக் கிடைக்கின்ற‌ன‌

Vol 1: Indian Science and Technology in the Eighteenth Century
Vol 2: Civil Disobedience in the Indian Tradition
Vol 3: The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century
Vol 4: Panchayat Raj and India's polity
Vol 5: Essays on Tradition, Recovery and Freedom (which included the Bharatiya Chit, Manas and Kaal)   

இதில் 3வது புத்தகம் "பேர‌ழகான‌ மரம்=இந்தியக் கல்வி =18ஆம் நூற்றாண்டில்" என்பது நமது மக்களுடைய கல்வி முறையைப்பற்றி,பாள்ளிகளில் மாணவர் வருகை பற்றி விரிவாகப் பேசுகிறது.

ஜூன்2011ல் சாதிவாரி மக்கட்த்தொகைக் கண‌க்கெடுப்புச் செய்யப் போகிறார்களாம். மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் 1822லேயே ஆங்கிலேயன் சாதிவாரியாகப் பள்ளிகளில் எத்துணை பேர் படிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து இலண்டனுக்கு அறிக்கை சமர்பித்துள்ளான்.

1857 சிப்பாய் புரட்சிக்குப் பின்னர்தான் ஆங்கில மஹாராணியின் நேரடி நிர்வாகம் வருகிறது.அதுவரை இந்தியாவிற்கான எந்த கல்விக் கொள்கையும் இல்லை. கிழக்கிந்தியக்கம்பெனி வரிவசூல் மட்டும் செய்து வந்தது, நலத் திட்டம் எதுவும் செயல் படுத்தவில்லை.  எனவே பழைய கல்வி முறைகளே கடைப் பிடிக்கப்பட்டன.

தென் இந்தியாவின் தற்போதைய 4 மாநிலங்களும் மெட்ராஸ் ப்ரெசிடென்சி என்று இருந்த காலம். அப்போது சர் தாமஸ் மன்ரோ கவர்னர். இந்த தென் மாநிலங்களில் சாதிவாரியாக பள்ளிகளில் படிக்கும் மாண‌வர்களின் எண்ணிக்கை மாவட்டக் கலெக்டர்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்திரவு போட‌ப்பட்டது. ஜூன் 1822 முதல் இந்த சர்வே நடந்தது.

கிடைத்த தகவல்கள் இன்றும் ஆவணக் காப்பகத்தில் காணலாம்.

ஒரு சில மட்டும் காண்போம்.

விசாகப்பட்டினத்தில் பிராமண‌ர்களும் வைஸ்யர்களுமாக மொத்த மாணவர் எண்ணிக்கையில் 47%. பிற்படுத்தப்பட்டோர் 21% தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்சி) எண்ணிக்கை 20% முஸ்லிம்கள் 12%

திருநெல்வேலியில் பிராமண மாண‌வர் எண்ணிக்கை 21.8% பிற்படுத்தப்பட்டவர்கள் 31.2% தாழ்த்தப்படவர்கள் 38.4% மூஸ்லீம் 8.6%

தென் ஆற்காட்டில் பிராமண மானவர்கள் 16% ஏனையோர் 84%

அன்றைய பாம்பே மாகாணத்தில் பிராமண மாணவர் எண்ணிக்கை 30%மட்டுமே. ஏனையோர் 70%. வங்க‌த்தில் இது 40=60%

உயர்கல்வியில் சட்டமும், தத்துவமும்தான் பிராமணர் படித்துள்ளனர். வைத்தியம், வானியல் மற்ற வகுப்பாரே படித்துள்ளனர்.அதாவது வேலை வாய்ப்பும் வருமானமும் கூடவரும் ஃப்ரொபொஷனல் கல்வி மற்றவர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளது.

தரம்பால்ஜி அவர்களின் ஆய்வு நூல்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். தொடர்புக்கு

தட்ட‌ச்சு தெரியாத, கணினி பற்றி அறியாத தரம்பாலஜி செய்துள்ள ஆய்வு மிகவும் பயனுள்ளது.

நன்கு இருந்த நம் நாட்டை, நம் கலாச்சாரத்தை, நம் பண்பாட்டை , வாழ்வியலை சீர்குலைத்த ஆங்கிலேயன் சொன்ன சரித்திரத்தை தள்ளிவைப்போம்.

தரம்பால்ஜி போன்றவர்களின் அடிச்சுவட்டைப்பின் பற்றி சரித்தரத்தை முன் நகர்த்துவோம்.
ஆக்கம்:
முக்காலம்
++++++++++++++++++++++++++++++++++=

 தரம்பால்ஜியின் புகைப்படம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

11 comments:

  1. முகஸ்துதி செய்துதான் பிழைக்க வேண்டியுள்ளது என்கிறார் பெரியவர்
    கோபாலன்ஜி! கிருபானந்தவாரியார் சுவாமிகளைப் போல கோவில் கும்பாபிஷேகம் செய்ய முகஸ்திதி செய்தாலும் பரவாயில்லை.தன் சுயநலத்திற்காகவும், அற்ப உலக வசதிகளுக்காகவும் முகஸ்திதி செய்கிறார்களே! சென்ற‌ ஆட்சியின் போது முகஸ்துதி கூட்டங்களுக்குத் தவறாமல் போய் தன் தள்ளாத வயதிலும் மணிக்கணக்காக அமர்ந்து முகஸ்திதியைத் தன் காதால் கேட்டு மகிழ்ந்தவர் அல்லவா முன்னாள் முதல்வர்!.அவர் ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தில் திருச்சி கல்யாணராமன் உரையையும், வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்தையும் கேட்க ஏற்பாடு செய்தனர் ராம.வீரப்பனும்,
    ஜகத்ரட்சகனும்.அவரும் சென்றார். திருச்சி கல்யாணராமன் விவரமான ஆள். கலைஞருக்குத் தேவையான முகஸ்த்துதியை திகட்டத் திகட்டக் கொடுத்துவிட்டார்.ஆனால் வேளுக்குடி தன் வழக்கப்படி பேச வேண்டிய தலைப்புக்கு உண்டானதை மட்டும் பேசிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
    முதலவர் 'ஆடியென்சி'ல் அமர்திருப்பதை கண்டு கொள்ளவில்லை.கலைஞர் தன் உரையில் திருச்சி கலயாணராமன் உரையை வெகுவாகப் புகழ்ந்தார்.
    "வெளியில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அச்சத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் சிலவற்றைத் தவிர்த்தது நன்றாகவே தெரிந்தது" என்று ஒரு சிறிய குட்டை வைத்துவிட்டுத்தான் நகர்ந்தார் முன்னாள் முதல்வர்.

    திருவையாறு தியாகராஜ சுவமிகளைப் போல அரசன் அனுப்பிவைத்த பொன் பொருள் ஜதிபல்லக்கைத் திருப்பி அனுப்பி "நிதிசால சுகமா? ராமா நின்ன சன்னிதி சுகமா?"என்று பாட எத்தனை பேருக்கு வரும்?


    முக்காலம் என்ற பெயரை வைத்திருப்பவர் பல பழங்க‌தையெல்லாம் சொல்கிறார்.
    இறந்த காலம் தெரிந்த அளவுக்கு, நிகழ்காலமும், எதிர்காலமும் அவருக்குத் தெரிவதாகத் தெரியவில்லை.இருப்பினும் தரம்பால்ஜியை அவர் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல தூண்டுதலாக அமையும்.
    தரம்பால்ஜியின் ஆய்வு நூலில் கேரளாவில் 1600 முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கல்வி கற்றதற்கான ஆதாரம் உள்ளது.முக்காலம் ஐயா சற்றே இக்காலத்தையும் பாருங்கள் ஐயா!

    ReplyDelete
  2. வணக்கம் கோபாலன் ஐயா,

    //நான் சொன்ன பொய்களின் விளைவு இது என்று வருந்துகிறான் அந்தப் புலவன்.//

    உண்மைதான் ஐயா,, தகுதியில்லாத மனிதர்களை முகஸ்துதி செய்து பிழைப்பதை விட ...

    கருணையே வடிவான இறைவனைப் போற்றுங்கள் அவன் உங்களுக்கு எல்லாம் தருவான் என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார், இதோ

    திருவாரூருக்கு அருகாமையில் உள்ள திருப்புகலூர் என்னும் தலத்தில் அவர் பாடியருளிய தேவாரம்,

    மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று
    கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை
    பொடிக்கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
    அடுக்குமேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

    எனவே முகஸ்துதி என்பது தேவயைற்ற ஒன்று..

    வாய்மையே வெல்லும்..

    ReplyDelete
  3. வணக்கம் தோழர் முக்காலம் அவர்களே,

    திருவாளர் தரம்பால்ஜி குறித்த அரிய தகவல்களை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    நன்றி...

    ReplyDelete
  4. முதுகு சொரிந்துவிட்டால் தன முதுகும் சொரிந்துவிடப்படும் என்று தவறான எதிர்பார்ப்பில் ஏமாந்த புலவனின் காலம் அந்தக்காலமல்லவா?பாவம்.. வலையுலகில் வாழ்ந்திருக்கவேண்டிய புலவன்..

    ReplyDelete
  5. கடந்த காலத்துப் பாடத்திட்டங்களைப் பற்றிய முக்காலம் அவர்களின் ஆக்கம் போல அவரின் புகைப்படமும் அருமை..
    (அப்பவாவுது ஒரிஜினல் முகத்தைக் காட்டுராரான்னு பார்ப்போம்..ன்னுதான்..)
    இப்போதைய சமச்சீர் கல்வியில் வந்துள்ள மாற்றம் பற்றிய விவாதங்களின் தாக்கம் இந்த ஆக்கத்தை எழுதத் தூண்டியதோ?

    ReplyDelete
  6. இறுமாந்து இருப்பன் கொலோ என
    இப்படி அப்பர் வாக்கினை சொல்ல

    எத்தனை பேருக்கு தகுதி இருக்கிறது
    எப்படியாவது நம் காரியமானால்சரியென

    திக வைப்போல் முக துதி செய்தவரும்
    பதிவுககளை சுட்டும் அவர்களும்உண்டு

    தரணி போற்றும் தஞ்சைசகோதரருக்கு
    தாழ்மையான வணங்கங்கள்..

    ReplyDelete
  7. அக்காலம் பற்றிச் சொன்ன
    முக்காலத்தின் இப் பதிவுகளிலாவது

    திரை விலகுமா என எதிர்பார்த்தோம்
    திரட்டிய செய்திகளிலும் அவர் பதிவில்

    கலகத்தை விளைவித்து தன்னை
    கலங்கமில்லாதவர் என காட்டும்

    அவர்களைப் பற்றிய தகவல்கள்
    அந்தசரித்திரத்தைமுன்நகர்த்த சொன்ன

    அந்த முகம் அப்படியே தெரிகிறது..
    அந்த நிலவு முகம் காட்டுமா..

    இசைப்பாட்டு பாடும் "அந்த" குயில்
    இந்த வகுப்பில் தன்னை காட்டும்வரை

    வழக்கம் போல் அமைதி காத்தபடி
    வள்ளுவ சிந்தனையுடன்வருகை பதிவு

    கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்

    ReplyDelete
  8. முகஸ்துதி பற்றிய கட்டுரை ஆதங்கம்....
    அரசியல் வாதிகளுக்கு அது தான் ஆபரணம்...
    அப்படிப் பார்க்கையில் முன்னாள் முதல்வர்
    பற்றிய பின்னூட்டம் திருவாளர் கிருஷ்ணன் சார்
    போட்டிருக்கிறார்.....
    இந்நாள் முதல்வரையும் குறிப்பிட்டு இருக்கலாம்!?..
    இந்நாள் முதல்வரின் செயலில் மாற்றம் தெரிகிறது...
    மாற்றம் தானே அனைவரின் விருப்பமும்; நல்லது.

    கேள்விப் பட்ட ஓன்று பண்டித நேருவா! அல்லது
    வாத்தியார் திரு ராஜேந்திரப் பிரசாத்தா! தெரியவில்லை
    ஒரு மனிதர் மேடையில் காலில் விழுந்த போது...
    தாவி குதித்து எழுந்திருக்க சொன்னாராம்...

    இந்நாள் முதல்வர் முன்னாளில் இது போன்று காட்சித்
    தரும் போதெல்லாம்.. பெரும் முக சுழிப்புக்கு ஆளானோம்..
    இப்போது நல்ல மாற்றம்... வரவேற்போம்....

    உண்மையை மரியாதையுடன் பெருமைப் படக் கூறினால்
    கொள்வதும் /கேட்பதும் நன்றாக இருக்கும்...

    ////முக்காலம் ஐயா சற்றே இக்காலத்தையும் பாருங்கள் ஐயா!////
    ஐயாவா? அம்மாவா? இவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள் கிருஷ்ணன் சார்
    எழுத்து நடை பெண்ணாகத் தோன்றுகிறது...

    எதுவானாலும்.... சமுதாயத்திற்கு உழைத்தவர்களை யார் மறந்தாலும்
    வரலாறு மறக்காது... இருந்தும் நல்லோர் செயல் நல்லோரே போற்றுவர்
    என்பதைப் போல் தங்களின் ஆக்கம் நன்று!...
    அருமை

    ReplyDelete
  9. வாத்தியார் என்று நான் குறிப்பிட்டு இருப்பது.... டாக்டர் ராதாகிருஷ்ணன் என ழுதி இருக்க வேண்டும். நன்றி!

    ReplyDelete
  10. ஒரு வித்யாசமான, அரிய மனிதரை பற்றி அறிய வாய்ப்பளித்ததற்கு நன்றி.

    அந்த தொடர்பை உடனே பார்த்தாயிற்று.

    ReplyDelete
  11. தஞ்சை கோபாலன் சாரின் ஆக்கம் அருமை. இந்தப் பாடல் எதில் இடம் பெற்றுள்ளது?

    தரம்பால்ஜி// இவரைப்பற்றிய தகவல்கள் கேள்விப்படாதவை. இந்த தலைமுறை அறியாத இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com