20.5.11

சண்டாளன் குரு ஆன கதை!

-------------------------------------------------------------------------------------
சண்டாளன் குரு ஆன கதை!

பக்தி மலர்

இந்த பக்திமலரிலும் ஸ்ரீரமணரைப் பற்றிப் பார்ப்போம்.

எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுப‌வர் ஸ்ரீ ரமண மஹர்ஷி. அவரிடம் அணிலும், குர‌ங்கும்,  பசுவும்,மயிலும் அன்புடன் பழகும். அவற்றின் மொழி அவருக்கு நன்கு விளங்கும்.

அன்று காலையும் பகவான் ஸ்ரீ ரமணர் வழக்கும் போல் தன்னுள்
தானே ஆழ்ந்து ஆனந்த பரவசத்தில் மெள‌னமே  மொழியாக அம்ர்ந்து இருந்தார்.அப்போது ஊருக்குள் இருந்து ஒரு துக்க செய்தி வந்து
சேர்ந்தது.அது இறப்பு என்பதால் துக்கம் என்று சொன்னேன்.
உண்மையில் அந்த துக்கத்தைப் பற்றி ஊருக்குள் மகிழ்ச்சியே
ஏற்பட்டது.

இறந்தவர் ஊருக்குள் பெரிய சண்டியர்.கட்டப் பஞ்சாயத்து,கந்து
வட்டி, அடிதடி, அராஜகத்திற்குப் பெயர் போனவர்  அவர்.பலருடைய
சொத்துக்களை அநியாயமாகப் பறித்துச் சாலையில் நிறுத்திய
பெருமை அவருக்கு உண்டு.தொழில்களைச் செய்யவிடாமல் பல குடும்பங்களைப் பட்டினியில் தள்ளி தற்கொலை வரை விரட்டிய
"புண்ணியச்செயலை"ச் செய்தவர் அவர். அவர் செய்த கொடுமை
களைச் சொல்லப் புகுந்தால் அது மஹாபாரதத்தில் வரும்
துரியோதனன் , துச்சாதன‌ன் எல்லாம் சுண்டைக்காய் என்ற எண்ணம்
நமக்குத் தோன்றிவிடும்.

அப்படிப்பட்ட "புண்ணியாத்மா" மறைந்து விட்டார்.

ஸ்ரீரமண மஹரிஷி அமைதியாக அமர்ந்திருந்தார்.ஊருக்குள்
இருந்து ஆஸ்ரமத்திற்குப் ப‌லரும் வர  ஆரம்பித்தார்கள்.
ஒவ்வொருவரும் வந்தவுடன், "சுவாமி செய்தி கேள்விப்
பட்டீர்களா? அந்தப் பாவி  போய்விட்டான்...!"

மஹரிஷி சலனம் இல்லாமல் இருந்தார். அடுத்த நபர் வருவார்.
அவரும் மீண்டும் தகவலை மகிழ்ச்சியுடன்  சொல்வார். அப்போதும்
மஹரிஷி எந்த சலனமும் இல்லாமல் ,முகத்தில் எந்த பாவமும்
காட்டாமல் அமைதிகாப்பார்.

இது மாலை வரை தொடர்ந்தது சுமார் 50 பேராவது மஹரிஷியிடம்
இந்த ஒரே செய்தியைச் சொல்லி  இருப்பார்கள். யாருக்குமே
மஹரிஷி பதிலும் அளிக்கவில்லை;முகத்தில் மகிழ்ச்சியோ,
துக்கமோ காட்டவில்லை.

மஹரிஷி கல்லைப்போல இருப்பதைக் காண்டு பக்தர்கள் சலிப்புக் கொண்டார்கள்.

மஹரிஷி அந்த இறந்தவரைப் பற்றி என்னதான் மனதில் நினைக்கிறார் என்பதை அறிய ஆவல் கொண்டார்கள்

பக்தர்கள்.மஹரிஷியோ இந்த விஷ்யத்தில் காஷ்ட மெளனம் சாதித்தார்.

அந்தி சாய்ந்த உடனே அந்த இறந்த நபருடைய பூத உடல்
அவருடைய உறவினர்களால் மயானத்திற்குக்  கொண்டு
செல்லப் பட்டது.அந்தத் துக்க‌ ஊர்வலம் ஆஸ்ரமத்தைத் தாண்டிக்
கொண்டு சென்ற‌து.ஆஸ்ரமத்திற்கு முன்னால் ஊர்வலம் வந்த
போது, ஸ்ரீரமணர் எழுந்து நின்றூ மரியாதை செய்தார்.மேலும் பூத
உடலை நோக்கிக்  கைகூப்பி வணங்கினார்.

பார்த்துக் கொண்டிருந்த ஒரு பக்தருக்குக் கோப‌மே வந்து விட்டது.
சற்றும் தயங்காமல் தன் கோப‌த்தை  கொட்டிவிட்டார் அந்த பக்தர்.

"என்னங்க‌ சாமி!? அவனோ அயோக்கியன்.அவனப் போயி
கும்பிடறீங்களே!? அது ஏன்னு சொல்லுங்க சாமி!"

மஹரிஷி ஒன்றும் சொல்லவில்லை. பக்தர் விடுவதாக இல்லை.
மீண்டும் மீண்டும் 'ஏன் ஏன்' என்று கேட்டுப் பின்  தொடர்ந்தார்.
அந்த பக்தரின் தொல்லை தாங்காமல்  மஹரிஷி தன்
மெள‌னத்தைக் கலைத்தார்.

"இறந்தவர் என்னுடைய ஒரு குரு!" என்றார் மஹரிஷி.

"என்னது!அந்த சண்டியன் உங்களுக்கு குருவா?"

"ஆமாம்! அவரிடமிருந்துதான் உடல் சுத்தம் பற்றி நான் அறிந்து
கொண்டேன். நான் திருவண்ணாமலைக்கு வரும்  போது எனக்கு
12 வயதுதான். அதுவரை வீட்டில் அம்மாதான் எனக்கு முதுகு
தேய்த்து தண்ணீர் ஊற்றிக் குளிப் பாட்டுவார்கள்.எப்படி குளிக்க
வேண்டும் என்பது கூட அறியாத வயது எனக்கு. அப்போதுதான்
அந்த நபர்  குளத்தில் வந்து குளிப்பதை வேடிக்கை பார்ப்பேன்.
எப்ப‌டி நாமே முதுகைத் தேய்ப்ப‌து கைவிரல் கால் விரல் காது 
மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து பார்த்து தேய்த்துக்
குளிப்பார். நானும் அதுபோல குளிக்க  அவரைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன். எனவே அவர் எனக்கு உடல் சுத்தம் பற்றி
அறிவுறுத்திய குரு  ஆவார்."

பகவான் ஸ்ரீ ரமணர் அளித்த விளக்கத்தைக் கேட்டு பக்தர்கள் அமைதி ஆனார்கள்.

எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே  கண்ணில் படும்.

நல்லதே நம் கண்ணில் படட்டும்.  அல்லவை நமக்குப் புலனாகமலே போகட்டும். இந்த வேண்டுதலை  ஸ்ரீரமணரிடம் சமர்ப்பிப்போம்!

அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

13 comments:

  1. ஸ்ரீரமணரைப் பற்றி அடியேன் எழுதிய ஆக்கத்தை வெளியிட்டட்தற்கு என் வந்தனம் ஐயா!

    ReplyDelete
  2. பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றிய சிந்தனைத் துளி தித்திக்கிறது!
    நன்றி.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் திரு .KMR.K..
    ஸ்ரீ ரமணமஹரிஷின் இந்த பண்புதானே இன்றளவு நாம் அவரது.செயல்களையும் ஒரு பாடமாக ஏற்று கொள்கிறோம்.. .எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கைலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பதிலே.. !!!

    ReplyDelete
  4. ///நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.....///

    "aap bala tu jug bala"

    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
    மிகை நாடி மிக்க கொளல்
    என்ற திருக்குறளினை சிந்தனைக்கு தந்து

    வருகை பதிவு இடுகிறோம்.

    ReplyDelete
  5. ரமனர் கதையிலிருந்து குற்ற்ம் கானாமல் இருந்தால் நம் மனது நிம்மதியாக இருக்கும்யெனவெ நி மன அமைதி காணா வேண்டூமாணால் பிரர் குற்றாம் காணாதெ

    ReplyDelete
  6. வணக்கம் கிருஷ்ணன் சார்,

    அற்புதமான படைப்பு,

    //எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.//

    எல்லா உயிர்களிடத்தும் இறைவனையே காணக் கூடிய அருளாளர்களக்கு இது சாத்தியமே..

    நன்றி ...

    ReplyDelete
  7. Ramanar was 17 when he reached Tiruvannamalai.

    ReplyDelete
  8. I also heared about this incident. On hearing all bad about that person, Ramanar said "He used to wear neat dhoti". He always look the positive.

    ReplyDelete
  9. நிம்மதியாக வாழ நாம் கைக்கொள்ள வேண்டியது என தெளிவாக நண்பர் கிருஷ்ணன் சொல்லிவிட்டார்.

    மனமார வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  10. வணக்கம் வாத்தியார் ஐயா,

    பிளாகர் செட்டிங்க்ஸ் சம்பந்தமான ஒரு தகவலை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்..

    அது தங்களுக்கு அவசியம் பயன்படும் என நம்புகிறேன்..

    பிளாகரில் பிறந்த குழந்தையாகிய அடியேன் இக் கருத்தை குறிப்பிட்டதில் தவறிருந்தால் பொறுத்தருள்க..

    நன்றி..

    ReplyDelete
  11. நல்லது..நல்லது..தங்கள் கண்ணில் இப்படி நல்ல விஷயங்கள் பட்டு உதாரணமான ஒரு பதிவை இன்று தந்ததற்கு நன்றி..KMRK அவர்களே..
    நாம் காணும் யாவரிடத்திலும் ஏதாவதொரு நற்பண்பு நிச்சயம் இருக்கும்..
    நாம் அதனை கற்க முயற்சித்தால் நல்லதொரு சாத்வீக மனோநிலைக்கு வருவோம்..
    ஆயிரமே கொடுஞ்செயல்கள் புரிந்தவனாக இருந்தாலும் ஒருவனின் வீழ்ச்சியில் கூட்டமாக மகிழ்ந்து அது பற்றி புறங்கூறி மகிழ்வது பண்பாகாது என்று அறிவுறுத்தி விரோதமும் குரோதமும் விலகினால் நாம் செல்லவேண்டிய இலக்கு நோக்கி நல்வழிப்பயணம் தொடரலாம் என்ற கருத்தை முன்வைத்த உங்களுக்கு மீண்டும் நன்றி..

    ReplyDelete
  12. வாத்தியார் அவர்களுக்கு,
    வணக்கம்..
    இதைத்தான் குரு சண்டாள யோகம் என்று சொல்கிறார்களோ?
    வழக்கம் போல் நல்ல தலைப்பு..

    ReplyDelete
  13. எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.

    நல்ல பதிவு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com