17.3.11

Short Story - கலியுகத்தின் முதல் தீர்ப்பு!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கலியுகத்தின் முதல் தீர்ப்பு!
-------------------------------------------------------
எங்கள் ஊரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து 65 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. துவக்க நாளன்று அந்தக் காலத்தில், வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் இருக்கும். இப்போது திருச்சி கல்யாணராமன் அந்த இடத்தை நிறைவு செய்து அற்புதமாக ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துவார். தொடர்ந்து எட்டு நாட்களுக்கும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். நெல்லை கண்ணன் அவர்களின் சொற்பொழிவு நடக்கும் நாளன்று அபரிதமான கூட்டம் இருக்கும்.

அத்துடன் ஆண்டு தோறும் விழா மலரையும் ஒரு நாள் வெளியிடுவார்கள். 2005 ஆம் ஆண்டு மலர்க்குழுவினர் என்னிடம் மலருக்காக ஒரு ஆக்கம் கேட்டபோது ஆன்மிகக் கதை ஒன்றை எழுதிக்கொடுத்தேன். அதை அவர்கள் பதிப்பித்து என்னை மகிழ்வித்தார்கள். அதே ஆண்டு 23.12.2005 அன்று பல்சுவை’ என்ற பெயரில் வலைப் பதிவு ஒன்றைத் துவங்கியபோது, அதை முதல் பதிவாக வலை ஏற்றினேன். அதை அன்று 10 பேர்களாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகம். ஒரே ஒருவர் மட்டும் பின்னூட்டம் இட்டார். அவர் பெயர் ஞானவெட்டியான்.

2007ஆம் ஆண்டு தமிழ்மண நிர்வாகம் ஸ்டார் பதிவுகள் எழுதப் பணித்தபோது, அதை மீண்டும் ஒருமுறை  வலை ஏற்றினேன்.

இன்று நமது வகுப்பறைக்கு, நிறையப் புதியவர்கள் வருகிறார்கள். அவர்கள் படித்து மகிழ்வதற்காக அதை மீண்டும் வலை ஏற்றுகிறேன். படித்திருப்பவர் களும் மீண்டும் ஒருமுறை படியுங்கள். கண்ணபரமாத்மாவின் கதை என்பதால் அலுப்புத் தட்டாமல் சுவாரசியமாக இருக்கும். அனைவரும் படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாரதப் போரில் வெற்றிவாகை சூடிய பாண்டவர்கள் ஹஸ்தினா புரத்தில் அரசாட்சி செய்து கொண்டிருந்த காலம்

கதிரவன் உதயமாகிப் பத்து நாழிகைகள் சென்றுவிட்ட பகல் நேரம்

வழக்கம்போல அரசசபை கூடியது.

சபைக்கு வந்த தர்மன் தன் மாமா கண்ணபிரானை வணங்கிவிட்டுத் தன்னுடைய இருக்கைக்குச்சென்று புன்சிரிப்போடு அமர்ந்தான்.

கண்ணபிரான் அவனுக்குப் பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த தர்மனின் சகோதரர்கள் நால்வரும் தத்தம் இருக்கையில் அமர்ந்தார்கள்

சபை நடவடிக்கைகள் ஆரம்பமானது.

அன்று பொது விசாரணை தினம்.அதாவது அரசன் பொது மக்களைச் சந்திக்கும் நாள்

சபைகூடிய அந்த நொடியில், அன்று ஒரு வழக்கு வரப்போகிறது என்பதையும் அந்த வழக்கு தன்னைத் திகைக்க வைக்கப்போகின்றது என்பதையும் அறியாத தர்மன் யதார்த்தமாக வீற்றிருந்தான் .

தலைமைக்காவலன் உள்ளே வந்து, "அரசே! வழக்கு ஒன்று தங்கள் விசாரணைக்காக வந்துள்ளது!" என்றான்

"அவர்களை உள்ளே அனுப்பி வை!" என்றான் தர்மன்.

இருவர் உள்ளே வந்தனர். இருவருக்கும் நாற்பது அல்லது நாற்பத்திரெண்டு வயதிருக்கலாம்.கட்டுமஸ்தான உடற்கட்டோடு இருந் தார்கள். அவர்களில் ஒருவன் கையில் ஒரு பெரிய செப்புத் தவலை இருந்தது.

கையில் தவலையோடு இருந்தவன் முதலில் பேசினான்.

"அரசே, என் பெயர் தேவநாதன் நான் ஒரு விவசாயி இங்கிருந்து பத்துக்காத தூரத்தில் என்னுடைய கிராமம் உள்ளது.விவசாயத்தை விரிவு படுத்துவ தற்காக இவரிடம் ஐந்து வேலி நிலத்தை வாங்கினேன்.வாங்கிய அந்த நிலத்தை செம்மைப் படுத்துவதற்காகத் தோண்டியபோது இந்தத் தவலை கிடைத்தது. இதற்குள் ஏராளமான பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் உள்ளன.இதை இந்த இடத்தை எனக்கு விற்ற இவரின் முன்னோர்கள் புதைத்து வைத்திருக்க லாம். நான் பணத்தைக் கொடுத்து இடத்தை மட்டும்தான் வாங்கினேன். அதனால் இந்தத் தவலை எனக்கு வேண்டாம். கொடுத்தால் இவர் வாங்கிக் கொள்ளமாட்டேன் என்கிறார். ஆகவே இதை அவரை வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்" என்றான்

இப்போது அவனுடன் வந்த இன்னொருவன் பேச ஆரம்பித்தான்.

"அரசே, என் பெயர் மாயநாதன்.நானும் அதே ஊரைச் சேர்ந்தவன்தான் மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தை இவரிடம் விற்றுப் பணத்தை முழுதாகப் பெற்றுக்கொண்டுவிட்டேன். எனக்கும் அந்த இடத்திற்கும் இப்போது எந்த சம்பந்தமும் இல்லை. அந்த இடத்தை வாங்கிய பிறகு, விவசாயம் செய்வதற்காக நிலத்தைச் செம்மைப்படுத்த ஆரம்பித்தபோது அதில் இருந்த மரங்களையெல்லாம் இவர் வெட்டி எடுத்துக்கொண்டார். அதேபோல  அந்த இடத்திலிருந்து கிடைத்த புதையலும் இவருக்குத்தான் சொந்தம்.அதனால்தான் அவர் கொண்டுவந்து கொடுத்தபோது வேண்டாம் என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். எனக்கு அது வேண்டாம்"

அரச சிம்மாசனத்தில் வீற்றிருந்து வழக்கைக்கேட்ட தர்மன் திகைத்துப் போய்விட்டான்.இருவர் சொல்வதுமே சரியாகத்தான் தெரிந்தது. நியாயமாகவும் பட்டது.

சரி, வழக்கு என்றால் அதற்குத் தீர்வு ஒன்று வேண்டுமே? யாருக்குச் சொந்தம் அந்தப் புதையல்? யோசிக்க, யோசிக்கக் குழப்பம் தான் அதிகமானது. சபை ஸ்தம்பித்துபோய் முற்றிலும் நிசப்தமாக இருந்தது!

தர்மன் யோசனையுடன், மெதுவாக வலது பக்கம் திரும்பித் தன் அருகில் அமர்ந்திருந்த கண்ணபிரானை நோக்கினான். அவர் புன்னகை செய்தார்.

என்ன தீர்ப்பு சொல்லட்டும் என்று தர்மன் தன் கண்களாலேயே அவரை வினவினான்.அவர் தன் கையைச் சற்றே உயர்த்தித் தன் விரல்களால் சமிக்கை முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்கு உணர்த்தினார்.

அவனும் அதன்படி செய்தான். வழக்கைச் சமர்ப்பித்த இருவரையும் பார்த்துச் சொன்னான், " தீர்ப்பு நாளைக்குச் சொல்லப்படும். அந்தத் தவலையைத் தானாதிகாரியிடம் கொடுத்துவிட்டு நீங்கள் இருவரும் இப்போது செல்லுங்கள்.நாளைக்கு இதே நேரத்திற்கு இங்கே வாருங்கள்."

அவர்களும் அப்படியே செய்துவிட்டு அரச சபையை விட்டுச் சென்றார்கள்.

                                              *********** *******************

அன்று மாலை. கனத்த மனதுடன் அரண்மனைத் தாழ்வாரத்தில் காலையில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கைப் பற்றிய ஆழ்ந்த யோசனையுடன் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான் தர்மன்.

என்ன தீர்ப்பு சொல்வது? ஒன்றும் புரியவில்லை. எதுவும் பிடிபடவில்லை!

சரி, கண்ணபெருமானையே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்தான். என்ன ஆச்சரியம். கண்ணன் தாழ்வாரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து தர்மனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அவர் அருகில் வந்தவுடன் தர்மன் சொன்னான்,"மாமா, எனக்குத் தர்ம சங்கடமாக இருக்கிறது! இன்று வந்த வழக்கிற்கு என்ன தீர்ப்பைச் சொல்வது? நீங்கள்தான் உதவ வேண்டும்!"

கண்ணன் சொன்னார், " தர்மா, கவலையை விடு! இந்த வழக்கின் போக்கு நாளை தலை கீழாக மாறிவிடும்.. இன்று மிகுந்த தர்ம சிந்தனையோடு பேசிய அவர்கள் இருவருமே நாளை முற்றிலும் எதிர் மாறான வாதத்தோடு பேசுவார்கள். அவர்களின் பேச்சும் போக்குமே உன்னை ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்லவைக்கும். நாளை காலை வரை பொறுத்திரு!"

"இந்த ஒரு இரவில் என்ன நடந்து விடப்போகிறது மாமா? அவர்கள் என்ன மனமாற்றம் பெறப்போகிறார்கள்?" என்று வினவினான் தர்மன்.

அதற்குப் புன்னகையோடு கண்ணபரமாத்மா பதிலுரைத்தார். "இன்று இரவு நடுநிசியிலிருந்துதான் கலியுகம் பிறக்கிறது. கலியுகம் எப்படியிருக்கும், கலியுகத்தில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள். என்பதை நீ தெரிந்து கொள்ளவேண்டும். உன் சகோதரன் சகா தேவனிடம் கேட்டுத் தெரிந்துகொள். எல்லாவற்ரையும் கற்று உணர்ந்தவன் அவன்தான்."

இப்படி இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது - பேச்சுக்குரல் கேட்டோ அல்லது அந்த மாயக்கண்ணனின் மாய உந்துதலாலோ அங்கே சகாதேவனும் வந்து சேர்ந்தான்.

அவனைப்பார்த்த கண்ணன் உடனே சொன்னார்." ஆஹா! தர்மா, உன் தம்பி இதோ வந்துவிட்டான்.அவனையே கேள்! சகாதேவா, இன்று இரவு கலியுகம் பிறக்கிறதல்லவா - கலியுகம் எப்படியிருக்கும், கலியுகத் தில் மக்களின் மனநிலையும், செயல்களும் எப்படியிருக்கும் என்பதை நீயே உன் சகோதரனுக்கு எடுத்துக் கூறு!"

"ஆமாம் அண்ணா, இன்று இரவு கலியுகம் பிறக்கிறது! கிரேதா' யுகத்தில் நூற்றுக்கு நூறு மனிதர்கள் நல்லவர்களாக இருந்தார்கள்.அடுத்து வந்த திரேதா யுகத்தில் நான்கு பேர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தீயவர்கள் தோன்றினார்கள். அந்த யுகத்தில்தான் ராமாயணம் நடந்தது. அடுத்தது நாம் வாழும் இந்த துவாபர' யுகம். இந்த யுகத்தில் நான்கு பேர்களுக்கு இரண்டுபேர் தீயவர்கள். இறந்துபோன துரியோதனன், துச்சாதனன் போன்றவர்கள். துவாபரயுகம் இன்றுடன் முடிகிறது. கலியுகம் பிறக்கிறது. கலியுகத்தில் நான்கு பேர்களுக்கு மூன்று என்ற கணக்கில் தீய சக்திகள் தோன்றும். ஆனால் அந்த ஒருவர் மற்ற மூவருடன் போராடித் தர்மத்தை நிலை நிறுத்துவார் கலியுகத்தில் போகப் போக இந்தப் போராட்டம் அதிகரிக்கும். மக்களின் மன நிலைமை பொதுவாகத் தீயதாகவும், சுய நலமிக்கதாகவும் மாறும்" என்றான் சகாதேவன்

                                                   *************** ***************

கத்தும் குயிலோசைகளுக்கிடையே அடுத்தநாள் பொழுதும் புலர்ந்தது! தர்மன் வழங்கவிருக்கும் தீர்ப்பைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு வருவதைப்போல கதிரவனும் கிழக்கில் பிரகாசமாக உதயமானான்.

படுக்கையை விட்டு எழுந்த தேவநாதனுக்குப் பொறி தட்டியது. ஆமாம், கலியுகத்தின் முதல் நாளின் மகிமையோடு அவன் மனதில் பொறி தட்டியது.

அந்தப் பாழாய்ப்போன மனது ஒரு அருவியின் வேகத்தோடு வேலை செய்ய ஆரம்பித்தது.

நேற்று தான்செய்த காரியம் பெரும் தவறு என்று அவனுக்குத் தோன்றியது. புதையல் கிடைத்ததை வெளியில் சொல்லாமலேயே இருந்திருக் கலாமேயென்றும் அவன் நினைத்தான். அதை அப்படியே வைத்திருந்தால், தானும் தன் சந்ததியினரும் எத்தனை தலை முறைகளு க்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் என்றும் நினைத்துப் பார்த்தான் மலைப் பாக இருந்தது. பத்துத் தலைமுறைகளுக்கு மேல் அது வருமே!

மிகுந்த மனப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு முடிவிற்கு வந்தான். இன்று அரண்மனையில் அரசரிடம் தன் தவறை எடுத்துச் சொல்லி, அந்தப் புதையலை வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டு மென்று முடிவு செய்தான். ஏன் மன்னர் காலில் விழுந்தாவது அதைப் பெற்றுக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற துடிப்பும் உண்டாயிற்று.

உடனே விரைந்து செயல் பட்டான். அடுத்த மூன்று நாழிகைக்குள் தன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, அரண்மனைக்குச் செல்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டான்.

அதேபோல அந்தநகரின் மறுபகுதில் தன் நண்பனின் வீட்டிலிருந்த மாயநாதனுக்கும் அதே எண்ணம், அதே துடிப்பு எல்லாம் ஏற்பட்டது.அவனும் புதையலை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.

இருவரும் அரண்மனை வாசலில் சந்தித்தார்கள்.

யதார்த்தமாகத் தங்களின் புதிய முடிவை விவாதிக்க ஆரம்பித் தார்கள். அது பெரிய சண்டையில் போய் முடிந்தது. ஒருவரை யொருவர் அடித்துத் தாக்கியதோடு, ஒருவர் ஆடையை ஒருவர் கிழித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

அரண்மனைக் காவலர்கள்தான் அவர்களைச் சமாதானப்படுத்தி வழக்கு நிலுவையில் இருக்கும்போது நீங்கள் அடித்துக் கொள்வது நியாயமாக இல்லை என்றார்கள். எதுவாக இருந்தாலும் மன்னர் வந்த பிறகு, அவரிடமே எடுத்துரையுங்கள் என்றார்கள். இருவரையும் அமரச் செய்தார்கள். சற்றுநேரம் கழித்து மன்னர் வந்துவிட்ட செய்தி கிடைத்ததும் உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

உள்ளே சென்றவர்கள் மன்னன் தர்மனை வணங்கினார்கள். தேவநாதன்தான் - அதாவது தவலையைத் தோண்டி எடுத்தவன்தான் முதலில் பேசினான்.

"அரசே! தவறுக்கு என்னை முதலில் மன்னியுங்கள்! அந்தப் புதையல் எனக்குத்தான் சொந்தம். இவர்நேற்று தெளிவு படுத்தியதைப் போல நிலத்தை நான் வாங்கிவிட்டேன்.அதன் மேற்பகுதியில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி நான்தான் எடுத்துக் கொண்டேன். அதே போல நிலத்தில் அடியில் இருந்து கிடைத்த அந்தப் புதையலும் எனக்குத்தான் சொந்தம். ஆகவே என்னிடமே தரும்படி வேண்டிக் கொள்கிறேன்." என்றான்.

பதட்டத்தோடு இடைமறித்த நிலத்தின் முன்னாள் சொந்தக்காரனும்
பேச அரம்பித்தான்.

" அரசே! இவன் சொல்வது முற்றிலும் தவறு! நேற்று நடந்த செயல்களுக்கு நானும் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். அந்தப் புதையல் என் முன்னோர்களின் சேமிப்பு. எங்கள் குடும்ப வாரிசுகளின் எதிர்காலத்திற்காக புதைத்துவைக்கப்பட்ட சேமிப்பு.அது! அந்த சேமிப்பு முழுவதும் என்னையே சேரவேண்டும். அது இருப்பது தெரிந்திருந்தால், நிலத்தை நான் விற்றிருப்பேனா? ஆகவே அதை எனக்கே கொடுக்கும் படி உத்தரவிடுங்கள். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்." என்றான்.

தர்மன் புன்முறுவல் செய்தான்

கண்ணபரமாத்மா சொல்லியதுபோல எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. என்னே கண்ணனின் மகிமை!

புளங்காகிதம் அடைந்தான்.

ஆரம்பமான கலியுகத்தின் பாதிப்பு அவனை மட்டும் விட்டு வைக்குமா? ஆகவே தெளிவோடு கலியுகத்தின் முதல் தீர்ப்பைத்தன் திருவாயால் தீர்க்கமாகச் சொன்னான்.

"அந்தப் புதையல் யாரால் எந்தக்காலத்தில் புதைக்கபட்டது என்பது தெரியாது. கடந்த காலங்களில் அந்த நிலம் பல கைகள் மாறியிருக்கலாம். ஆகவே எந்தக் குறிப்பும் இன்றி அது யாருக்குச் சொந்தம் என்பதை எவரும் தீர்மானிக்க முடியாது. ஆகவே அதைப் பொதுச் சொத்தாக்கி இந்த அரசிற்கே அது சொந்தம் என்று அறிவிக் கிறேன். அதேபோல பூமிக்கு அடியில் இருந்து இது போன்று எந்தப் பொருள் கிடைத்தாலும் அவையும் அரசிற்கே சொந்தமாகும்.எடுப்பவர் கள் அதை அரசிடமே ஒப்படைக்க வேண்டும். தானாதிகாரியிடம் இருக்கும் அந்தச் செப்புத்தவலையை நம் கஜானாவில் ஒப்படைக்கும்படி ஆணையிடுகிறேன். வழக்கைக் கொண்டு வந்த இருவருக்கும் நேற்றுப் பேசிய தர்ம சிந்தனையான பேச்சிற்காக ஆளுக்கு நூறு பொற்காசுகள் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனல் இன்று காலை இவர்கள் இருவரும் அரண்மனை வாசலில் சண்டை போட்டுக் கொண்டதாக அறிகிறேன். அதனால் அந்தப் பணமும் இவர்களுக்குக் கிடையாது.இருவரையும் சண்டை சச்சரவின்றி நட்போடு இருக்கும்படி ஆணையிடு கிறேன்! இந்த வழக்கு இத்துடன் முடிவுறுகிறது!"

*********** *************** ****************
(கலியுகம் பிறப்பதற்கு முன்பாகவே கண்ணனின் காலம் முடிந்துவிட்டதாக ஒரு அபிப்பிராயம் உண்டு. அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கதை சொல்லும் செய்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு, அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்)


வாழ்க வளமுடன்!

26 comments:

  1. கதை அருமை அய்யா!முதல் பின்னூட்டம் இட்டவ‌ரை இன்றளவும் நினைவில் வைத்து மீண்டும் குறிப்பிடும் மனமும், பண்பும் உங்க‌ளுக்கு இருப்பதால்தான் இத்தனை பேர் உங்க‌ளுக்கு பின் தொடர்பவர்களாக கிடைத்து உள்ளார்கள். உங்களிடமிருந்து 'நட்பை வளர்ப்பது எப்படி?' என்ற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன் நன்றி!

    ReplyDelete
  2. ////கத்தும் குயிலோசைகளுக்கிடையே அடுத்தநாள் பொழுதும் புலர்ந்தது! /////

    கூவும் குயில் கத்தியதால்
    கலி பிறந்தது என்ற அருமையான
    செஞ் சொல்நயம் புதுமை...

    ReplyDelete
  3. ////தர்மன் புன்முறுவல் செய்தான்
    கண்ணபரமாத்மா சொல்லியதுபோல எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. என்னே கண்ணனின் மகிமை!
    புளங்காகிதம் அடைந்தான்.
    ஆரம்பமான கலியுகத்தின் பாதிப்பு அவனை மட்டும் விட்டு வைக்குமா?//////

    கலியுகச் சூறாவளி தர்மமென்னும் சுடரொளியையும் சற்று அலங்கு செய்யும் என்ற நோக்கில் தெறித்த இந்த வரிகள் கலியின் எதார்த்தத்தை இயம்புகிறது...

    ReplyDelete
  4. ////(கலியுகம் பிறப்பதற்கு முன்பாகவே கண்ணனின் காலம் முடிந்துவிட்டதாக ஒரு அபிப்பிராயம் உண்டு. அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கதை சொல்லும் செய்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு, அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்)////

    சொல்லவரும் கருத்தை அறியாது; பெரும்பாலும், குற்றம்தேடி குறைபல பேச யோசிக்கும் இந்த கலியுக மூளைக்கு இந்தக் குறிப்பு மிகவும் அவசியமே..... இந்த அருமையானக் குறிப்பு கூறும் கருத்து இந்து மதம் சார்ந்த அத்தனை புராண, இதிகாச, வழி வழி கூறும் வாய் மொழிக் கதைகளுக்கும் பொருந்தும்..... சாத்தியத்தை ஆராய்ந்து சத்தியத்தை மறுப்பதேன்? என்ற கேள்வி மட்டுமே மிஞ்சும்.

    சரி ஐயா உங்களின் இந்தப் பதிவு அது தரும்....

    கதையில் கருக்கொண்ட கற்பனையும்; அது
    ஈன்ற கருத்தும் வெள்ளிடைமலை.

    ReplyDelete
  5. அற்புதமான கதை ஐயா,

    கலியுகத்தின் சுயநலப்போக்கை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே ,,,

    ஐயா, ஒரு வேண்டுகோள்
    எமது சொற்பொழிவுகளில் ( இதுபோன்று வகுப்பறையில் படிக்கும் கதைகளை ) பயன்படுத்திக் கொள்ளலாமா ?

    ReplyDelete
  6. தற்போதைய நிலையை அப்பட்டமாக விவரிக்கும் கதை.

    தருமனின் தீர்ப்பே கிடைத்தால் நலம்.

    நாசூக்காய் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன் அய்யா..

    பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  7. கதையும் உங்கள் எழுத்து நடையும் சுபெர்ப்.

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்...!

    கலியுகத்தின் ஆரம்பமே இப்படியென்றால் இன்னும் வரப்போகும் காலங்கள் எப்படி இருக்குமோ? கலியுகத்தின் பாதிப்பு தர்மனைக் கூட விட்டுவைக்கவில்லையா ஐயா? கதை அருமை, கதையின் சாராம்சம் மிக அருமை..!

    மிக்க நன்றிகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  9. /////kmr.krishnan said...
    கதை அருமை அய்யா!முதல் பின்னூட்டம் இட்டவ‌ரை இன்றளவும் நினைவில் வைத்து மீண்டும் குறிப்பிடும் மனமும், பண்பும் உங்க‌ளுக்கு இருப்பதால்தான் இத்தனை பேர் உங்க‌ளுக்கு பின் தொடர்பவர்களாக கிடைத்து உள்ளார்கள். உங்களிடமிருந்து 'நட்பை வளர்ப்பது எப்படி?' என்ற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன் நன்றி!////

    உங்களின் மனமுவந்த பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Alasiam G said...
    ////கத்தும் குயிலோசைகளுக்கிடையே அடுத்தநாள் பொழுதும் புலர்ந்தது! /////
    கூவும் குயில் கத்தியதால்
    கலி பிறந்தது என்ற அருமையான
    செஞ் சொல்நயம் புதுமை...///////

    உங்களின் இரசிப்புத்தன்மைக்குப் பாராட்டுக்கள். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    ////தர்மன் புன்முறுவல் செய்தான்
    கண்ணபரமாத்மா சொல்லியதுபோல எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. என்னே கண்ணனின் மகிமை!
    புளங்காகிதம் அடைந்தான்.
    ஆரம்பமான கலியுகத்தின் பாதிப்பு அவனை மட்டும் விட்டு வைக்குமா?//////
    கலியுகச் சூறாவளி தர்மமென்னும் சுடரொளியையும் சற்று அலங்கு செய்யும் என்ற நோக்கில் தெறித்த இந்த வரிகள் கலியின் எதார்த்தத்தை இயம்புகிறது.../////

    உண்மைதான். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. Alasiam G said...
    ////(கலியுகம் பிறப்பதற்கு முன்பாகவே கண்ணனின் காலம் முடிந்துவிட்டதாக ஒரு அபிப்பிராயம் உண்டு. அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் கதை சொல்லும் செய்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குமாறு, அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்)////
    சொல்லவரும் கருத்தை அறியாது; பெரும்பாலும், குற்றம்தேடி குறைபல பேச யோசிக்கும் இந்த கலியுக மூளைக்கு இந்தக் குறிப்பு மிகவும் அவசியமே..... இந்த அருமையானக் குறிப்பு கூறும் கருத்து இந்து மதம் சார்ந்த அத்தனை புராண, இதிகாச, வழி வழி கூறும் வாய் மொழிக் கதைகளுக்கும் பொருந்தும்..... சாத்தியத்தை ஆராய்ந்து சத்தியத்தை மறுப்பதேன்? என்ற கேள்வி மட்டுமே மிஞ்சும்.
    சரி ஐயா உங்களின் இந்தப் பதிவு அது தரும்....
    கதையில் கருக்கொண்ட கற்பனையும்; அது
    ஈன்ற கருத்தும் வெள்ளிடைமலை.//////

    நல்லது உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. ///எடப்பாடி சிவம் said...
    அற்புதமான கதை ஐயா,
    கலியுகத்தின் சுயநலப்போக்கை அனுபவத்தில் பார்க்க முடிகிறதே ,,,
    ஐயா, ஒரு வேண்டுகோள்
    எமது சொற்பொழிவுகளில் ( இதுபோன்று வகுப்பறையில் படிக்கும் கதைகளை ) பயன்படுத்திக் கொள்ளலாமா ?////

    சொற்பொழிவுகளில் பயன் படுத்திக்கொள்ளுங்கள். அதனால் என்ன குறைந்துவிடப்போகிறது? நல்ல செய்திகள் நான்கு பேர் காதில் விழட்டுமே

    ReplyDelete
  14. /////Govindasamy said...
    தற்போதைய நிலையை அப்பட்டமாக விவரிக்கும் கதை.
    தருமனின் தீர்ப்பே கிடைத்தால் நலம்.
    நாசூக்காய் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன் அய்யா..
    பகிர்வுக்கு நன்றிகள்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Uma said...
    கதையும் உங்கள் எழுத்து நடையும் சுபெர்ப்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. //////Soundarraju said...
    Arumaiyaana Kathai sir ,/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சுந்தரராஜூ!

    ReplyDelete
  17. ////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    கலியுகத்தின் ஆரம்பமே இப்படியென்றால் இன்னும் வரப்போகும் காலங்கள் எப்படி இருக்குமோ? கலியுகத்தின் பாதிப்பு தர்மனைக் கூட விட்டுவைக்கவில்லையா ஐயா? கதை அருமை, கதையின் சாராம்சம் மிக அருமை..!
    மிக்க நன்றிகளுடன்
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி திருவேல் முருகன்!

    ReplyDelete
  18. அன்புடன் வணக்கம் ""
    """ கலியுகத்தின் பாதிப்பு அவனை மட்டும் விட்டு வைக்குமா"""
    ""ஐயா, ஒரு வேண்டுகோள்
    எமது சொற்பொழிவுகளில் ( இதுபோன்று வகுப்பறையில் படிக்கும் கதைகளை ) பயன்படுத்திக் கொள்ளலாமா """

    எத்துணை பேருக்கு இது போன்ற மனப்பாங்கு வரும் இந்த கலி உகத்தில்.!!..
    எங்கள் வாத்தியாருக்கு இருக்கிறது!!!!!.. 100..ல் 5.. பேர் நல்லவர்கள் அந்த 5 .ல் ஒன்று
    எங்களது வாத்தியார்.!!!!!!!. வளர்க அவரது நற்பணி.

    ReplyDelete
  19. கலியின் தொடக்கத்திலேயே நல்லது சிந்திப்பவர் குறைந்த சூழலினை பார்க்கும் போது..
    இப்போ மட்டும் எப்படி என எண்ணத் தோன்றுகிறது..
    நல்ல வேளை
    அவர்கள் அந்த தீர்ப்பினை ஏற்றுக் கொண்டார்களே..

    நன்றி..

    ReplyDelete
  20. வாத்தியார் ஐயா வணக்கம்.

    என்ன ஒரு அருமையான பாத்திரம்.

    அதுவும் எம்பெருமான்
    " மாயக்கண்ணனை ", உள்ளடக்கிய ஒரு கலியுகத்தை பற்றிய அருமையான கதை ஐயா.

    நாங்கள் எல்லாம் உண்மையிலே கொடுத்து வைத்தவர்தான் தங்களை போன்றவரை வாத்தியாராக கிடைக்க பெற்றமைக்கு

    மனதார தவறு செய்யாது இருக்கும் பொழுது வீணாக வரும் பலி பாவதீர்க்கு அஞ்ச வேண்டாம் என்று தானே கூறுகின்றீர்கள்.

    மேலும் காலம் தான் தர்மனை கூட சுய நலத்துடன் சிந்திக்க வைத்தது என்று கூறுகின்றீர்கள் இல்லையா ஐயா.

    ReplyDelete
  21. நல்லதொரு செய்தியைக் தன்னகத்தே தாங்கிக் கொண்டிருக்கும் கதை. கலியுகம் என்பது சயனைட் விஷம் போல் உடனே வேலை செய்யக் கூடியதல்ல. Slow poison போல் மெதுவாகத்தான் தன் வேலையைக் காட்டும். தங்களுடைய கதையை விமர்சிப்பதற்க்காக இதை சொல்லவில்லை. கலியுகத்தைப் பற்றிய தவறான புரிதல் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் சொல்கிறேன். தர்ம நெறி சிறிது சிறிதாகத்தான் குறைந்துக் கொண்டு வரும்

    ReplyDelete
  22. i have previously read or heard this story.....nice one .

    ReplyDelete
  23. இக்கால அரசியலை பார்க்கும் போது தங்கக்காசுகளை தன்னுடைய சந்ததிகளுக்கு சேர்த்து வைக்குமாறு தருமர் சொல்லி இருக்களாம் என தோன்றுகிறது. அற்புதமான கதை

    ReplyDelete
  24. VERY NICE STORY.

    E-MAIL ADDRESS:- deivamrmc2010@gmail.com

    ReplyDelete
  25. Vathiyar Kannan is Tharman's Brother-In-Law. You Wrongly mentioned Kannan is Uncle to Tharman. Is't OK? No one notice that from your students!

    -தஞ்சை-சித்தர்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com