18.3.11

இதல்லவா ஆனந்தம்!


திருத்தவத்துறைக் கோவிலின் எழில்மிகும் தோற்றம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 இதல்லவா ஆனந்தம்!

திருத்தவத்துறை! திருச்சி மாவட்டத்தில் முக்கியமான ஒரு சிற்றூர். தாலுகா தலை நகரம்!

16 ஜனவரி 1973ல் தரணி போற்றும் தஞ்சையில் தஞ்சம் புகுந்த நான் 21 பிப்ரவரி 2011 அன்று தஞ்சைக்குப் பிரியா விடை கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். 23 வய‌தில் இருந்து 62 வயதுவரை 38.5 ஆண்டுகள் வாழ்ந்த 'தஞ்சையை  வேண்டாம்  என்று எப்ப‌டி உதறினீர்கள்?' என்று பலரும் கேட்கிறார்கள்.நான் கடக லக்னம், கடக ராசிக்காரன்.என் மனையாட்டிக்கும் கடக லக்னம். நாங்கள் இவ்வளவு காலம் ஒரே இடத்தில் வசித்ததே ஒரு அதிச‌யம்தான்.கடகத்திற்கே மாற்றங்கள் அடிக்கடி நிகழும்.

'புதிய ஊர் எப்படி உள்ளது' என்று கேட்கிறார்கள்.தஞ்சையைவிட ஒரு 7,8 மடங்கு சிறிய ஊர்.நடைப்பயணமாகச் சுற்றினால் சுமார் முக்கால் மணியிலும், மிதிவண்டியில் சுற்றினால் 25 நிமிடங்களிலும் ஊர் முழுவதயும் சுற்றி வந்து விடலாம்.அவ்வ‌ள‌வு சிறிய‌ ஊர்.

த‌ஞ்சையில் பெரிய‌ கோவில் எங்க‌ள் இல்ல‌த்திலிருந்து 4.5 கி மீ  த‌ள்ளியி ருந்த‌து. என‌வே தின‌மும் பெருவுடை யாரைத் த‌ரிசிக்க‌ இய‌ல‌வில்லை.ஆனால் இங்கோ அருள்மிகு ச‌ப்த‌ ரிஷீஸ்வ‌ர‌ர் கூப்பிடும் தூர‌த்தில் உள்ளார். 6 நிமிட‌  ந‌டை தூர‌த்தில் சிவ‌ன் கோவில்.

திரு(இல‌க்குமி) த‌வ‌ம் செய்த‌தால் திருத்த‌வ‌த்துறை என்று பெய‌ராம்.
அம்பாள் பெய‌ரே பெருந்திருப்பிராட்டியார். வ‌ட‌மொழியில்ஸ்ரீம‌தி
தாய்த் த‌மிழில் திரும‌தி ! ஆனால் தின‌ம‌ல‌ர் இணைய‌த்தில்
வ‌காம‌சுந்த‌ரி என்கிறார்க‌ள்.எது  ச‌ரியோ, இனிமேல் தான் விசாரிக்க‌
வேண்டும்.

சுவாமிக்கு ஏன் 'ச‌ப்த‌ரிஷி ஈஸ்வ‌ர‌ன்" என்று பெய‌ர்? ஸ்த‌ல‌ புராண‌ப்ப‌டி, ஸ்க‌ந்த‌ன் அவ‌தார‌த்தின் போது கார்த்திகைப் பெண்க‌ளுக்கு முன்னரே 7 முனிவ‌ர்க‌ளின் ப‌த்தினிக‌ளுக்கும் முருகனைக் குழ‌வியாக‌ அருகில்
பார்க்க‌ வாய்ப்புக் கிடைத்த‌தாம்.பாலுக்குத் த‌வித்த‌ கும‌ர‌க்க‌ட‌வுளுக்குப் பாலூட்ட‌த் த‌ய‌ங்கிய‌ ரிஷிப‌த்தினிக‌ளை, ரிஷித்தாத்தா‌க்க‌ள் 7 பேரும் பிற‌ந்த‌க‌த்திற்கு விர‌ட்டிவிட்டார்க‌ளாம்.இத‌னால் விச‌ன‌ப்ப‌ட்டு அந்த‌ முருக‌ன‌யே 7 ப‌த்தினிக‌ளும் வ‌ழிப‌ட‌, முருக‌ன் 7 ரிஷிக‌ளையும் ச‌பித்து விட்டாராம்.அவ‌ர்க‌ள் சாப‌ விமோச‌ன‌த்திற்காக‌த் திருவையாறு
உள்ப‌ட‌ ப‌ல‌ ஸ்த‌ல‌ங்க‌ளிலும் த‌வ‌ம் இய‌ற்றிவிட்டு இங்கே வ‌ர‌,
இவ்வூர் தான்தோன்றி சிவ‌பெருமான் ஸ்வ‌ய‌ம்பு),த‌ன் லிங்க‌த்தின்
உச்சியைப் பிள‌ந்து கொண்டு வ‌ந்து ரிஷிக‌ளுக்கு சாப‌ விமோச‌ன‌ம் கொடுத்தாராம்.இன்றும் லிங‌த்தின் த‌லையில் பிள‌வு உள்ள‌தாம்.

ச‌ப்த‌ ரிஷிக‌ளையும் த‌ன் ஜ்வாலையால் உள் வாங்கிக் கொண்டு லிங்க‌‌த்தில் ஐக்கிய‌மாகிவிட்ட‌தால் அவ‌ர் 'ச‌ப்த‌ ரிஷி ஈஸ்வ‌ரன்' என்று திரு நாம‌ம் பெற்றார்.'சப்த' என்றால் ஏழு!

என‌க்கு ஒரு பெருமையை நான் வ‌ந்த‌வுட‌ன் ஸ்வாமி கொடுத்து
விட்டார். அது என்ன‌? க‌ட‌ந்த‌ 75 ஆண்டுக‌ளாக‌ ஓடாத‌ திருத்தேர்
18 மார்ச் 2011 அன்று ஓடப் போகிற‌து.திருவாரூர் தேருக்கு இணையான‌ மிக‌ப்பெரிய‌ தேர்.பார‌த‌ மிகு மின் நிறுவ‌ன‌த்தார் புதிய‌ ச‌க்க‌ர‌மெல்லாம் வ‌டிவ‌மைத்துக் கொடுத்து வேலைக‌ள் எல்லாம் முடிவுறும் த‌ருவாயில் உள்ள‌ன‌.ஊரெங்கும் தேர் ஓட‌ முக்கிய‌ கார‌ண‌ க‌ர்த்த‌ராக‌ இருக்கும்
அமைச்ச‌ர் நேருவுக்கு ந‌ன்றி தெரிவித்து சுவ‌ரொட்டி.நான் என்
ம‌ன‌த்துக்குள் ஒரே ஒரு சுவ‌ரொட்டியை ஒட்டிக்கொண்டு விட்டேன்.
அதாவ‌து, நான் இந்த‌ ஊருக்கு வ‌ந்த‌ பின்ன‌ரே தேர் ஓடுவ‌தால் என் அதிர்ஷ்ட‌மே இத‌ற்குக் கார‌ண‌ம்!'என்ன‌ ஒரு அஹ‌ங்கார‌ம்' என்று
யாரும் க‌ண்ணை உருட்டாதீர்க‌ள். ஏதோ வ‌ய‌சான‌வ‌ன் பேர் புக‌ழுக்கு ஆசைப்ப‌டுகிறான் என்று பெருந்த‌ன்மையாக‌ விட்டு விடுங்க‌ள்.

த‌ஞ்சை‌யில் இருந்த‌போது காலை ந‌டைப் ப‌ய‌ண‌ம் சாலையில். இங்கோ காலை 5.30 ம‌ணிக்கே கோயிலுக்குள் பிர‌த‌ட்ச‌ண‌ம் + வாக்கிங்! போன‌ஸ் ஆக‌ ம‌னைவியாரும் உட‌ன் வ‌ரும் ம‌கிழ்ச்சி.சுட‌ச்சுட‌ மிள‌குப் பொங்க‌ல்
பிர‌சாத‌ம். ஆன‌ந்த‌ம் என்றால் இதுதானோ!?

இந்த‌ ஊர்க்கார‌ர் உல‌க‌ம் அறிந்த‌ ஒரு வ‌ய‌லின் மேதை ஜயராமன்! லா.ச‌.ராமாமிர்தம் என்ற‌ எழுத்தாள‌ரும் புக‌ழ் பெற்ற‌வ‌ர்.அவ‌ரும் இந்த‌ ஊர்க்காராதான்.இந்த‌ மேல‌திக‌த் த‌க‌வ‌லை வைத்துக்கொண்டு ஊரின் த‌ற்கால‌ப்பெய‌ரைக் க‌ண்டு பிடியுங்க‌ள் பார்க்க‌லாம். தேரின் புகைப‌ட‌ங்க‌ளையும் அடுத்துக் கொடுத்துள்ளேன். பார்த்து  ர‌சியுங்க‌ள். புண்ணிய‌‌த்தை அடை‌யுங்க‌ள். ந‌ன்றி!
 1

 2

 3

 4

ஆக்கம்: K.முத்துராமகிருஷ்ணன், திருத்தவத்துறை என்ற -- -- -- --
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

25 comments:

  1. திருத்தவத்துறை பற்றிய எனது ஆக்கத்தை வெளியிட்ட ஐயா அவர்களுக்கும்,
    படிக்க இருக்கும் எல்லா அனபர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். தேரின் புகைப்படங்கள் எடுத்தது எனது அன்புத் துணைவியார் ஜெயல‌க்ஷ்மி அவர்கள்.இதோ அருள்மிகு சப்த ரிஷீஸ்வ‌ரரையும், ஸ்ரீமதித் தாயரையும் தேரில் ஏற்றுவதைக் தரிசிக்கக் கிளம்பிவிட்டோம். நன்றி!!

    ReplyDelete
  2. நல்ல விபரங்கள் அடங்கிய படங்கள் அடங்கிய பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அன்புள்ள கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு வணக்கம்,

    திருமாந்துறையை அடுத்து உள்ள லால்குடி என்னும் ஊரே தேவார காலத்தில் திருத்தவத்துறை என்று பெயர் பெற்றிருந்ததது. இது ஒரு தேவார வைப்புத் தலம். எம்பிரான் திருநாவுக்கரசர் இத் திருமாந்துறையை
    பாடியருளியுள்ளார் ,


    கயிலாய மலையெடுத்தான்
    கரங்களோடு சிரங்கள் உரம் நெரியக் கால்விரலால் செற்றோன்
    பயில்வாய பராய்த்துறை
    தென்பாலைத்துறை
    பண்டெழுவர் தவத்துறை வெண்துறை பைம்பொழிற்
    குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும்
    குரங்காடுதுறையினோடு
    மயிலாடுதுறை கடம்பந்துறை
    ஆவடுதுறை மற்றும் துறை
    அனைத்தும் வணங்குவோமே.

    என்று திருப்பூந்துருத்தி என்னும் தலத்தின் ( தேவாரம் )திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ளார்,


    இறைவர் - ச‌ப்த‌ ரிஷீஸ்வ‌ர‌ர் ( 7 முனிவர்களால் வழிபடப் பெற்றவர் )

    இறைவி - சிவகாம சுந்தரி



    மேலதிகத் தகவல் ( தினமலர் கோயில் பகுதியில் இருந்து அன்பர்கள் பார்வைக்காக எடுத்தாளப்பட்டது )
    அனைவரும் அங்கே சென்று தேடவேண்டாமே என்னும் ஒரே காரணத்துக்காக இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது,


    திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது லால்குடி. இங்கு பழம்பெருமை வாய்ந்த சப்தரிஷிஸ்வரர் கோயில் உள்ளது.
    மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இந்த ஊர் பக்கம் வந்தார்கள். அப்போது திருவத்துறை சப்தரிஷிஸ்வரர் ஆலய கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.


    இதனைக் கவனித்த மாலிக்காபூர், அருகிலிருந்த தளபதியிடம் உருது மொழியில், "அது என்ன லால் (சிவப்பு) குடி (கோபுரம்)? என்றான். அச்சொற்றொடரே "லால்குடி' என்று மாறி விட்டது.

    ----------------------------

    தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன்பொருட்டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான்.


    அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனை கொண்டுவந்து
    அந்த 7 குடில் பகுதியில் போட்டார்.


    ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையை பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். 7 பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர்.


    குழந்தைக்கு மேலும் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள் தூக்கி பரிவோடு, தாலாட்டி பாலூட்டினார்கள்.


    வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததை கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே! அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழை கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர்.
    முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.


    தாரகாசூரனைக் கொன்றுபோட்டு, வெற்றி வீரராய் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, சப்த ரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார் முருகன். முனிவர்கள் நடுங்கினார்கள்.


    குற்றம் செய்ததை அறிந்து, நேராக திருவையாறு சென்று, சிவனை வணங்கி தவம் செய்தனர். பலன் கிடைக்கவில்லை. பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தனர்.


    கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்கு பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு தவமிருந்தனர்.
    சுயம்புலிங்கமான சிவன், முனிவர்கள் தவத்தினை ஏற்று, அவர்களுக்கு சாப விமோசனம் தந்தார். தன் தலைப்பகுதி வெடிக்க அதிலே தீயினை உண்டாக்கினார் லிங்கமூர்த்தி. அந்தத் தீப்பிழம்புகள் ஏழு முனிவர்களையும் உள்வாங்கிக் கொண்டது.


    இறைவனின் கருணைச் செயலால் இன்றும் லால்குடி சிவலிங்கத்தின் மேல்பகுதியில் வரிவரியாய் பள்ளம் இருப்பதைக் காணலாம். சிவனின் முழு அருளுக்கும் உரியவர்களாக ஏழு முனிவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இறைவனின் பெயர் அன்றுமுதல் "சப்தரிஷிஸ்வரர்' என்று வழங்கப்பட்டது.
    நுழைவாயில்அருகே ஏழு ரிஷிகளும் அருள் பாலிப்பதை நாம் இன்றும் காணலாம்.


    ------------------------------


    அன்புள்ள கிருஷ்ணன் ஐயா இத்தலத்திற்கு வந்துதான் நாங்கள் கடந்த 5 ஆண்டுகளா சுத்தமான திருநீறு ( விபூதி ) மூட்டை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்வோம், இங்கு சுத்தமான பசுஞ்சானத்திலான திருநீறு தயார் செய்து தருகிறார்கள்

    நல்ல ஒரு கட்டுரை தந்தமைக்கு நன்றி ஐயா,

    ReplyDelete
  4. வாத்தி ஐயா வணக்கம்.

    ஸ்ரீ முத்துராம கிருஷ்ணன்
    வாத்தியார் ஐயா

    பூர்விகமோ திரு+நெல்+வேலி.

    தாங்கள் இத்தனை காலம் வாழ்த்த இடமோ நிறைய ஊர்களில் கடைசியில் வருவது தஞ்சை பூமி.

    தற்பொழுது தாங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் பூமியோ திருத்தவத்துறை!

    ஏன் தாமிர பரணி நதி ஓடு நெல்லை மண் தங்களை மீண்டும் கூப்பிட வில்லை என்று தான் எமக்கு தெரிய வில்லை.


    நெல்லையின் மதிப்பை யாம் இங்கு கூறவேண்டியது இல்லை .

    இயற்க்கை அன்னையின் மடியில் இன்றும் கிடந்து உறங்கும் இடம்கலான
    பெரிய பெரிய புண்ணிய ஸ்தலத்தை தன்னுள்ளில் அடக்கிய அம்பாசமுத்திரம், கல்லிடை குறிச்சி,
    தென்காசி, பாபநாசம்,ஆழவாற்குரிட்சி,
    ஸ்ரீ வைகுண்டம் என என்னில் அடங்காத புண்ணிய பூமி அல்லவா.

    ஒரு வேலை சாதி சண்டைக்கு பெயர் போன புண்ணிய பூமியான நெல்லையே வேண்டாம் என ஒதிக்கி விட்டு விட்டீர்களோ ?

    தென் தமிழகத்தின் நடு பாகம் ஆன பகுதியில் தாங்கள் வாழ வேண்டு என இறைவன் தீர்மானம் எடுத்து இருக்கும் பொழுது நம்மால் என்ன செய்ய முடியும் அல்லவா ஐயா

    --

    ReplyDelete
  5. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்த இடத்தை விட்டுவிட்டுப் புதிய இடத்துக்குப் போன எவரும், இந்த இடம் அந்த இடம்போல் வருமா? அடடா! அங்குதான் எத்தனை வசதிகள், பழக்கப்பட்ட மனிதர்கள் என்றேல்லாம் வருந்துவார்கள். நமது கே.எம்.ஆர். சற்று வித்தியாசமானவர். புதிய இடத்தை நேசிக்கத் தொடங்கி விட்டார். அதுதான் சரி! நமக்கு வாய்த்தது எதுவோ அதில் மனத்தை லயிக்கச் செய்திட வேண்டும். அந்த வகையில் நண்பர் கொடுத்து வைத்தவர். ஆம்! லால்குடி மிகவும் வளமான ஊர். நினைத்தால் உடனடியாக திருச்சிராப்பள்ளிக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி வரலாம். நண்பரும் இதற்குள் பல புதிய தேவைகளை வாங்கி வந்திருப்பார். அருமையான ஆலயம். தண்ணீர் பஞ்சம் இல்லாத இடம். சென்னைக்குச் செல்ல வசதி. அவர் போன நேரம் தேர் ஓடப்போகிறது. போதாதா, நண்பரின் மகிழ்ச்சிக்கு. அவர் ஒரு கோடு போட, நண்பர் எடப்பாடி அவ்வூரின் ஸ்தலபுராணத்தையே எடுத்து இயம்பி விட்டார். போதாதற்கு நல்ல திருநீறு அங்கு கிடைக்கும் என்பதையும் தெரிவித்து விட்டார். நாம் அங்கு போகாமலேயே இவர்கள் நம்மை அங்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். வாழ்க! புதிய இடத்தில் நண்பர் வளத்தோடு வாழ்க. சப்தரிஷீஸ்வரர் சேவையில் மன மகிழ்ச்சி கொள்க!!

    ReplyDelete
  6. ஐயா அருமையான பதிவு,

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஆனந்தத்தை அனுபவித்தேன்.. பேரானந்தத்தில் திளைக்க வைத்தது இடுகை...!! எல்லாப் பேரும் புகழும் இறைவன் ஒருவனுக்கே... இல்லை எங்கள் ஆசிரியர் ஒருவருக்கே...!! www.thangampalani.blogspot.com

    ReplyDelete
  8. எந்த ஊராக இருக்கும் என்று அதிகம் யோசித்துக் கொண்டிருந்தேன். இதற்கு எடப்பாடியார் பதில் அளித்து விட்டார். நான் புராணக் கதைகள் படிப்பதும் இப்போது குறைந்து விட்டது. இள வயதில் ராகு தசையில்தான் புராணக் கதைகள் படிப்பதிலும், தெய்வ பக்தி மற்றும் ஜோதிடத்தின் மேலும் அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தையார் கூட இதுவெல்லாம் வயதான பிறகுதான் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் இப்போது வேண்டாம் என்று சில நேரங்களில் திட்டியிருக்கிறார். இள வயதிலேயே சன்யாசியாகி விடுவேன் என்று பயந்து போய் அப்படி சொன்னாரோ என்னவோ தெரியவில்லை.

    ReplyDelete
  9. இங்கோ காலை 5.30 ம‌ணிக்கே கோயிலுக்குள் பிர‌த‌ட்ச‌ண‌ம் + வாக்கிங்! போன‌ஸ் ஆக‌ ம‌னைவியாரும் உட‌ன் வ‌ரும் ம‌கிழ்ச்சி.சுட‌ச்சுட‌ மிள‌குப் பொங்க‌ல் பிர‌சாத‌ம்// நல்லா என்ஜாய் பண்ணுங்கோ.

    அதாவ‌து, நான் இந்த‌ ஊருக்கு வ‌ந்த‌ பின்ன‌ரே தேர் ஓடுவ‌தால் //

    இது டூ மச். மாமிக்கு கிரெடிட் கொடுக்காமல் நீங்களே எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    ReplyDelete
  10. புதிய இல்லத்திற்கு(இடத்திற்கு)சென்று விருந்து தருவது நம்மவரில் பலருக்கு வழக்கம்..
    அது போல தாங்கள் அளித்த இன்றைய இனிய விருந்து...

    தேர் படம்
    - கண்ணுக்கு விருந்து
    மிளகு பொங்கல் பிரசாதம்
    - நாவுக்கு விருந்து
    திருக்கோயில் செய்திகள்
    -காதுக்கு விருந்து
    இடமாறி இருந்தாலும் மனம் மாறாத உங்கள் மகிழ்ச்சி
    -எங்கள் உள்ளத்திற்கு விருந்து

    நன்றி வாழ்க..

    ReplyDelete
  11. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ரெத்தினவேல்.
    எடப்பாடியா‌ருக்கும் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.மேல‌திகத் த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி!

    //இத்தலத்திற்கு வந்துதான் நாங்கள் கடந்த 5 ஆண்டுகளா சுத்தமான திருநீறு ( விபூதி ) மூட்டை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்வோம், இங்கு சுத்தமான பசுஞ்சானத்திலான திருநீறு தயார் செய்து தருகிறார்கள்//

    இது மிகப் பயனுள்ள தகவல் சிவம்!எங்கே, யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். கோவிலிலா அல்லது தனியாரா? எங்கள் உறவினர், நண்பர்கள், மற்றும் வகுப்பறை குடும்பத்தினருக்கும் தேவைப்படுவோருக்கு வினியோகம் செய்ய உங்கள் தகவல் உதவும் சிவம்!

    ReplyDelete
  12. " தேர் படம்
    - கண்ணுக்கு விருந்து
    மிளகு பொங்கல் பிரசாதம்
    - நாவுக்கு விருந்து
    திருக்கோயில் செய்திகள்
    -காதுக்கு விருந்து
    இடமாறி இருந்தாலும் மனம் மாறாத உங்கள் மகிழ்ச்சி
    -எங்கள் உள்ளத்திற்கு விருந்து "

    ****இன்று ஐயரின் கவிதை
    பின்னூட்டத்திற்கு விருந்து.****

    இனிய இன்பம் பல பெற்று
    இனிதே நீங்கள் இருவரும்
    பல்லாண்டு காலம் நீடூடி வாழ
    இறைவன் அருள வேண்டிக்கொள்கிறேன்
    கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  13. ///ஒரு வேளை சாதி சண்டைக்கு பெயர் போன புண்ணிய பூமியான நெல்லையே வேண்டாம் என ஒதிக்கி விட்டு விட்டீர்களோ ?///

    அப்படியெல்லாம் இல்லை கண்ணன்ஜி!‌என‌க்கும் கூட‌ ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த கருங்குளத்தில் அக்கா(பெரியப்பா மகள்)உண்டு. அங்கு கூட பழைய வீட்டினை வாங்கிக் குடியேறுவோம் என்று ஆசை இருந்தது.ஆனால் சென்னையை அடைய நீண்ட நேரப்பயணம் என்பது கொஞ்சம் தயங்க வைத்தது.என் 3 பெண்களில் மூத்தவள் இதுகாறும் சந்திரப்பூர் அருகில் இருந்தவள் தற்போது லால்குடிக்கு வந்து விட்டாள்.மற்ற 2 பெண்களும் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆன பிறகு எனக்கு இருக்கும் ஒரே பிணைப்பு இந்த மகள் மட்டும்தான். அவளுக்கு அருகில் வசிக்கலாம் என்று இங்கே வந்து விட்டோம்.வயதான காலத்தில் எங்களுக்கு உதவியாக அவள் இருக்கலாமே என்று எதிர்பார்ப்பு. அவளை விட சப்த ரிஷீஸ்வ‌ரர் அதிகம் உதவுவார் என்று இங்கே வந்த பிறகு தோன்றுகிறது.

    ReplyDelete
  14. ///புதிய இடத்தில் நண்பர் வளத்தோடு வாழ்க. சப்தரிஷீஸ்வரர் சேவையில் மன மகிழ்ச்சி கொள்க!!///

    வா‌ழ்த்துக்கு நன்றி கோபால்ஜி! த‌தாஸ்து! அப்ப‌டியே ஆக‌ட்டும்! ஆமென்!அமீன்!(இவ‌ற்றிற்கும் 'அப்ப‌டியே ஆக‌ட்டும்' என்றுதான் பொருள்)

    ReplyDelete
  15. பிரசன்னகுமார், தங்கம் பழனி,ஆனந்த் மூவருக்கும் நன்றி.தங்க‌ம் பழனியின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்துப் பின்னூட்டம் இடுகிறேன்.ஆனந்த் ஏன் தாங்கள் ஆக்கங்களை உங்கள் வலைப்பூவில் தருவதில்லை? உடல் நிலை இன்னும் படுத்துகிறதா? ‌

    ReplyDelete
  16. //இது டூ மச். மாமிக்கு கிரெடிட் கொடுக்காமல் நீங்களே எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.///

    வாத்தியாருக்கு ஆக்கத்தை மின்னஞ்சலில் அனுப்பும் போது, ஸிஸி மாமிக்கும்,என் அண்ணாவுக்கு பிஸிஸியும் போட்டு விடுவேன்.(வீட்டுக்குள்ளேயே மாமிக்குத் தனிக் கணினி)'என் அதிர்ஷ்டம் இல்லையா?' என்று நேற்றைக்கே மாமி 'டோஸ்' விட்டாச்சு!

    அதற்காகத்தான் என் முதல் பின்னூட்டத்தில் அவர்களுடைYA பெயரைப் போட்டுக் கொஞ்சம் பச்சைக்கொடி காண்பித்து இருக்கிறேன்.தாய்க்குலமே மன்னியுங்கள் Umaji! Thank you!

    ReplyDelete
  17. ///இடமாறி இருந்தாலும் மனம் மாறாத உங்கள் மகிழ்ச்சி
    -எங்கள் உள்ளத்திற்கு விருந்து நன்றி வாழ்க..///


    த‌ங்க‌ள் வாழ்த்துக்க‌ளுக்கு மிக்க‌ நன்றி ஐயர் அவர்களே!சற்றும் எதிர் பார்க்கவில்லை தங்களுடைய பின்னூட்டத்தினை!! தங்க‌ளுக்கு வஸிஷ்டர் பட்டம் கொடுக்கிறேன். அப்போது எனக்கு என்ன பட்டம்?


    இங்கே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.தங்க‌ளுடைய பின்னூட்ட‌ங்க‌ளில்
    இருந்து த‌ங்க‌ளுக்கு ஓஷோ, பார‌தி, சைவ சிந்தாந்த‌ம் ஏன் காந்தியில் கூட‌
    (பெரியார் உட்ப‌ட‌)புத்த‌க அறிமுக‌ம் உண்டு என்று அறிந்து கொள்கிறோம்.
    எழுத்துத் திற‌மையும் இருக்க‌க் கூடும்.என‌வே ப‌ல‌ ஆக்க‌ங்க‌ளை நீங்க‌ள் வ‌குப்ப‌றையில் கொடுக்க‌லாமே!செய்வீர்க‌ளா?மீண்டும் ந‌ன்றி!

    ReplyDelete
  18. அன்புடன் வணக்கம்
    பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக!! எங்கு சென்றாலும் உங்களுக்கு அமைந்து விடுகிறது ம்...ம்...ம்...ம்.... கொடுத்து வசிருக்கனும்
    பொறாமையாக இருக்கிறது அய்யா !!! ஆனால் புதிய ஊர் வந்து மூன்று கருவிகளுக்க் மட்டும் கவனித்துள்ளீர்கள் (கண்ணு,வாயி,&காது.)இன்னும் ரெண்டுக்கு கொடுங்கா ???

    ReplyDelete
  19. நண்பர் கே.எம்.ஆர். அவர்களுக்கு ஏற்பட்ட கிரஹப் பெயர்ச்சி, நல்ல பலனைக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன். அவரும் நண்பர் ஐயரும் அன்போடு சில பிரச்சினைகளில் மோதிக் கொண்டாலும், அவர் இடம் மாறிய செய்தியறிந்து அன்போடு வாழ்த்தியிருப்பதே ஒரு நல்ல திருப்பம் தான். கருத்து மோதல் சகஜம்தான்; நட்பும், அன்பும் நிலையானது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு. வாழ்க நமது பண்பாடு!மேலும் ஒரு தகவல். அவர் தஞ்சையை விட்டு நீங்குமுன்பாக அவர் வாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாயை அடுத்தவர் அறியாமல் ஓசையின்றி கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் போயிருக்கிற இடத்தில் சப்தரிஷீஸ்வரர் அவருக்கு எல்லா நலன்களையும் அளிப்பாராக!

    ReplyDelete
  20. ****இன்று ஐயரின் கவிதை
    பின்னூட்டத்திற்கு விருந்து.**** ///


    ந‌ன்றி ஹாலாஸ்ய‌ம்ஜி! ஐயரின் கவிதையும், அதனை அவ‌ர் வெளியிட தேர்ந்தெடுத்த நேரமும்(டைமிங்) அருமை. ஐய‌ர் பலாப் ப‌ழ‌த்தைப் போல‌ இருப்பாரோ?உள்ளே இருக்கும் தேனினும் இனிய‌ சுளைக‌ளை வெளிக் கொண்டுவ‌ர‌, வெளியில் தெரியும் முட்க‌ளை நாம் பொருட் ப‌டுத்த‌க்கூடாது என்று தோன்றுகிற‌து.

    ReplyDelete
  21. ///ம்...ம்...ம்...ம்.... கொடுத்து வசிருக்கனும்
    பொறாமையாக இருக்கிறது அய்யா !!!///


    தங்க‌ளுக்கும் அவ்வாறே எல்லாம் இறை அருளால் கிடைக்கும்.முன்னர் உங்கள் துணைவியாருடன் இணைந்து நிற்கும் படம் பார்த்துள்ளேன்.சிவப் பழமாகத் தங்களைக் கண்டவுடனேயே தங்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும் என்று தோன்றியது.அவ்வாறே ஆகட்டும் நடராஜன் சார்!!

    ReplyDelete
  22. அவர் தஞ்சையை விட்டு நீங்குமுன்பாக அவர் வாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாயை அடுத்தவர் அறியாமல் ஓசையின்றி கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் போயிருக்கிற இடத்தில் சப்தரிஷீஸ்வரர் அவருக்கு எல்லா நலன்களையும் அளிப்பாராக///

    இத‌னை நீங்க‌ள் பொதுவில் போட்டு உடைத்து விட்ட‌தால்,அக்கோயிலினைப் ப‌ற்றிக் கூறுகிறேன்.த‌ஞ்சை ஸ்டேட்பாங்க் கால‌னி ஸ்ரீச‌க்தி வினாய‌க‌ர் ஆல‌ய‌மே அது.சுமார் 25 ஆண்டுக‌ளுக்கு முன்னர் துவங்கப்பட்ட இக்கோயிலில் சிறுகச்சிறுக முன்னேற்றம் நிகழ்ந்தது. ஸ்ரீ அஷ்டபுஜ துர்கை சந்நிதியும், நவக்கிரஹ சந்நிதியும் பின்னர் நிர்மாணிக்கப்பட்டன.ஒவ்வொரு ஆக்கத்தின் போதும் கோயில் நிர்வாகிகளுடன் ஒத்துழைத்தேன்.பெரிய மண்டபத்தினை/ கூடத்தினைக் கட்டி விட்டார்கள். ஆனால் அதனை தினசரி சுத்தம் செய்ய‌ சம்பள ஆள் போடப் பண வசதி கிடைக்கவில்லை. அப்போது சுமார் 4 ஆண்டு கால‌ம் விடிய‌ற்காலை 4 ம‌ணிக்குக் கோயிலுக்குச் சென்று கோவிலைப் பெருக்கி, துடைத்து சுத்த‌ம் செய்வேன்.எண்ணெய் விள‌க்கு,தாம்பாள‌ம் எல்லாம் தேய்த்துக் கொடுப்பேன். அந்த‌ ச‌ம‌ய‌த்தில் என்னுட‌லுக்கு எந்த‌ நோயும் வ‌ராம‌ல் ஸ்வாமி காப்பாற்றினார். ராகு கேது தோஷ‌ங்க‌‌ள் குடும்ப‌ ஸ்தான‌ம், மாங்க‌ல்‌ய‌ ஸ்தான‌த்தில் இருந்து, க‌ள‌த்திர‌ம் உடைய‌ என் 3 பெண்க‌ளுடைய‌ திரும‌ண‌த்தை விநாய‌க‌ரும் , துர்கா அம்பாளும் அதிக‌ச் சிர‌ம‌ம் இல்லாம‌ல் ந‌ட‌த்திக் கொடுத்தார்க‌ள். அத‌ற்கு ஒரு ந‌ன்றியாக‌ அவ‌ர்க‌ள் கோவிலுக்குப் புன‌ர் உத்தா‌‌ர‌ண‌ம் செய்ய‌ என்னால் முடிந்த‌ காணிக்கையை கொடுத்துப் ப‌ணியை‌யும் 16 மார்ச் 2011 அன்று துவ‌ங்கி ஆயிற்று. இதைக் க‌ண்ணுறும் அன்ப‌ர்க‌ள் த‌ங்க‌ளா‌ல் முடிந்த‌ காணிக்கையை அளித்து உத‌வுமாறு ப‌ணிந்து வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. ///ஆனந்த் ஏன் தாங்கள் ஆக்கங்களை உங்கள் வலைப்பூவில் தருவதில்லை? உடல் நிலை இன்னும் படுத்துகிறதா?///

    எனக்கு அலுவலகத்தில் வேலை பளு அதிகமாகி விட்டது. போதிய நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் சில காலமாக இந்த வகுப்பறக்கு கூட வராமல் இருந்தேன். விரைவில் எனது ஆக்கங்கள் வெளிவரும்.

    ReplyDelete
  24. I am proud that i belong to that place
    (Lalgudi) and lived my formative years over there. Panguni Utram festival, Sivachariyar of years 1968-72, Tejo sivachariyar (who is currently conducting the rituals) all entering my mind like film roll. My uncle Ratnam Avathanigal and Vaitheswaran are still holding the fort 2 minutes away from the temple and keeping our foot prints.

    ReplyDelete
  25. I am proud that I belonged to this place. Still remembers the reverbrating Panguni Utram festival, Saptha sthanam, thiruvadirai festival, the ven pongal in margazhi month, and it is never ending story.

    Iya.. Nanri for wonderful piece.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com