21.3.11

Astrology Lessons குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology Lessons குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே!

கேது மகா திசை

இதுவரை புத்திநாதன் புதனுடைய மகாதிசையையும், அதில் வரும் மற்ற கிரகங்களின் தசா புத்திகளின் பலன்களையும் பார்த்தோம்.

அடுத்து என்ன?

சொல்லவும் வேண்டுமா? தசா வரிசையில் புதனுக்கு அடுத்தது கேதுதான். தொடர்ந்து அதைப் பார்ப்போம்.

பூமியில் பிறந்தவர்கள் அனைவரும், ராகு அல்லது கேது திசையைச் சந்தித்தே ஆகவேண்டும். சந்திக்கவில்லை என்றால் அல்ப ஆயுசில் போர்டிங் பாஸ் வாங்கியிருக்க வேண்டும்.

பரணி, பூரம், பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி
அஸ்தம், திருவோணம், மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய பன்னிரெண்டு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகுதிசையைச்
சந்தித்தாக வேண்டும். திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு, பிறக்கும்போதே ராகுதிசை இருக்கும்.
ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும் ராகு அதிபதி.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி,
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரக்காரர்களும்
கேது திசையைச் சந்தித்தாக வேண்டும். அஸ்விணி, மகம், மூலம்
ஆகிய நட்சத்திரக்காரர் களுக்கு, பிறக்கும்போதே கேது திசை
இருக்கும். ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும்
கேது அதிபதி.

பொதுவாக கேது திசை 90% பேர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. கேது ஞானகாரகன். திசை முழுக்கப் பலவிதமான கஷ்டங்களுக்கு ஜாதகனை உட்படுத்தி இறுதியில், திசை முடிவில் ஜாதகனுக்கு ஞானத்தைக் கொடுப்பான். கஷ்டப்படாமல் ஞானம் எங்கிருந்து வரும்? இழப்புக்கள், பிரிவுகள், நஷ்டங்கள், துயரங்கள், துரோகங்கள், துன்பங்கள், உடல்வலி, மனவலி என்று பலவிதமான வலிகளைக் கொடுத்து முடிவில் ஜாதகனை மேன்மைப் படுத்துவான். ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து வலியின் அளவுகள் மாறுபடும்.

உதாரணத்திற்கு வம்பு, வழக்கு என்று ஒரு ஜாதகன் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும்போது, நல்ல வழக்குரைஞரும், ஹோண்டா சிட்டி காரும் இருப்பது ஜாதகத்தின் மற்ற அம்சத்தினால் என்று கொள்க! அதேநேரம், கடும் வெய்யிலில் குடையைப் பிடித்துக் கொண்டு நீதி மன்றம் செல்லும் நிலைமையும், வக்கீலுக்குக் கொடுக்க மனைவியின் நகையை அடகு வைத்துப் பணம் புரட்டும் நிலையும் உண்டானால், அது ஜாதகத்தின் தீய அமைப்பினால் என்பதையும் அறிக!

கேது மகா திசை மொத்தம் 7 ஆண்டுகள் காலம் நடைபெறும்.

அதில் (கேது மகாதிசையில்) முதலில் வருவது கேதுவின் சொந்தபுக்தி. அதன் கால அளவு (7 X 7 = 49) 4 மாதங்கள் + 27 நாட்கள். அதற்கான பலனைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் எழுதவில்லை!

ஆமென்ற கேது திசை வருஷம் யேழு
     அதினுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
     புகழான அரசர்படை ஆயுதத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதிகாணும்
     தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாம்
     நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!


சுருக்கமாகச் சொன்னால் குளத்திலே தண்ணியில்லாத காலம். மீன்களும் இருக்காது. கொக்குகளும் வராது. வறண்ட காலம்.

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

6 comments:

  1. அன்புடன் வணக்கம்
    அய்யா அடியேனுக்கு நடக்கிறது கேது மஹா திசை .ஒரு மனிதனுக்கு என்ன என்ன துன்பங்கள் உண்டோ [உடல் ரீதியாக மனரீதியாக பொருளாதாரா ரீதியாக ]அத்தனையும் அனுபவிக்கிறேன்
    இறைவன் மிக கருணை மிக்கவன் துன்பத்தை கொடுத்தவன் அதை தாங்குவது எப்பிடி என்றும் தங்களை போன்ற பெரியவர்கள் மூலம் சொல்லிகொடுக்கிறான் (வினை யாராக இருந்தாலும் அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி- எந்த பரிகாரம் செய்தாலும் தீராது )ஆனால் திசை முடிந்த பின்பு கொடுக்கிறான் பாருங்க!!! ஒரு ஞானம்!!! அதுதான் சாமி ஞானம்!!!!!! எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்.!!
    மிக்க நன்றி!!!!. ஆசிரியர் !!!

    ReplyDelete
  2. எனக்கு ராகு தசை இள வதிலேயே (1 வயது - 19 வயது) வந்து போய் விட்டது. எனக்கு ராகு, கேது புத்தி அந்தரங்களில் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நேரம் இருக்கும் போது உங்களுடன் அதைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. பாகு வெல்லமாய் உருகி
    ராகுவை கடந்த பிறகு..


    ருதுக்கள்பல மாறியேயிருந்த பின்னும்
    கேதுவை எதிர்நோக்கி காத்திருக்கேன்


    முழுமையாய் கேதுவை அனுபவிக்க
    முடியாது; ஏன் எனில்..


    உயிர் விருப்பமில்லை இவ்
    உடல் மீது அப்போதென்பதினால்..

    ReplyDelete
  4. ஐயா!

    புதன் சென்றுவிட்டார்,
    தற்பொழுது கேது,
    பின்னர் வர போகின்றவரோ
    இளமை வாழ்கையை கற்பனை உலகில் மிதக்க வைத்த
    " சுக்கிரன் தானே ",
    அவர் என்ன செய்வார்
    யாம் வாங்கி வந்த வரதீர்க்கு ஏற்ப கிடைக்க வேண்டிய பலனை நீதிபதியாக கொடுத்து சென்று உள்ளார் .

    ReplyDelete
  5. பாடத்திற்கு நன்றிகள் ஆசிரியரே..
    அந்தக் கேது தானே அடியேனின் நட்சத்திர நாதன்.
    அஸ்வினி முதல் பாதம்.....
    வேத தத்துவ நாட்டமும் / தேடுதலும் அதனாலோ?..

    ReplyDelete
  6. Pattum naane, bhavamum naane, (Porul: kelviyum naane, bathilum naane) Gajinthiran sir neenga kooda appadiye thaan.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com