5.3.20

எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் பற்றி எழுத்தாளர் சுஜாதா!!!!!


எழுத்தாளர் ராகி.ரங்கராஜன் பற்றி எழுத்தாளர் சுஜாதா!!!!!

ரா.கி.ரங்கராஜன் பற்றி சுஜாதா

திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கும் நம் மதிப்பிற்குரிய சுஜாதா அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு. இருவருமே மற்றவரைப் பற்றி மனமாரப் புகழ்வார்கள். குமுதத்தில் சுஜாதா எழுத ஆரம்பித்த போது, ஏற்கனவே அங்கு (ரா.கி.) ஒரு ரங்கராஜன் இருந்ததால், தன் (எழுது) பெயரை "சுஜாதா" என மாற்றிக்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஹென்றி ஷாரியர் (Henri Charriere - a French writer) எழுதிய ‘பாப்பியான் (Papillon) ’ என்ற புத்தகத்தை ‘பட்டாம்பூச்சி’ என்ற பெயரில் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மொழி பெயர்த்தார்.

அந்தப் புத்தகத்தில் ஆத்மார்த்தமாக சுஜாதா எழுதிய அணிந்துரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன் –:)

“ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது.

துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்ற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘ஜிங்லி’யின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார்.

அதேசமயம் குமுதத்தில் ‘சூர்யா’ என்பவர் தரமான சிறுகதைகளை எழுதிவந்தார். ‘ஹம்சா’ என்பவர் வேடிக்கை நாடங்களும் டி.துரைஸ்வாமி துப்பறியும் கதைகளும் ‘கிருஷ்ண குமார்’ திகில் கதைகளும் ‘மாலதி’ குறும்பு கதைகளும் ‘முள்றி’ மழலைக் கட்டுரைகளும் ‘அவிட்டம்’ நையாண்டிக் கவிதைகளும், 'மோகினி' என்பவர் சினிமாவை / அதன் நடிகர்/நடிகைகளைப் பற்றி எழுதி வந்தார்கள்.

பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது.

விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.

ஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலேயே கருத்திலோ உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும்? இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.

நேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்துவிடுவார்.

ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி; குமுதம் ஸ்தாபன விசுவாசம்; ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி; கிடைத்தது போதும் என்கிற திருப்தி; சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம்; வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக குண்டு பேனாவில் எழுதப்பட்டச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கு இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் திருமதி கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்புகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. சின்னத்திரையில் வந்திருக்கின்றன.

இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. ஆம்.திறமைகள் கண்டு கொள்ளப் படுவதில்லை

    ReplyDelete
  2. இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”

    ஆம் ஐயா...........வருத்தப்பட வேண்டிய விடையம்.


    அன்புடன்
    விக்னசாயி.
    ====================

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    ஆம்.திறமைகள் கண்டு கொள்ளப் படுவதில்லை/////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  4. ////Blogger vicknasai said...
    இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”
    ஆம் ஐயா...........வருத்தப்பட வேண்டிய விடையம்.
    அன்புடன்
    விக்னசாயி.//////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!!!!!

    ReplyDelete
  5. ////Blogger sundari said...
    good evening sir,
    nice posting/////

    நல்லது. நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com