2.1.20

ஆன்மீகக் கதை: ராமானுஜரும் சுல்தானி பீவியும்!!!!!


ஆன்மீகக் கதை: ராமானுஜரும் சுல்தானி பீவியும்!!!!!

மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான். இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.

ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், அவர்களே தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே!

முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!

தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டுவிக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி! பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார். பின்பு நீர்வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின!

மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் - திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.

ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? பெற்ற தாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதற்கு முன், அவள் கிழிந்த புடைவைக்கு வழி காணலாம் இல்லையா? கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

* மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?

# பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது - மக்கள் எல்லாரும் சொல்கிறார்கள். (இது பிஜப்பூர் சுல்தான் இல்லை, தில்லி சுல்தான் என்று சொல்பவரும் உண்டு).

இராமானுஜர் ஒரு கணம் சிந்திக்கிறார். தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.

சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான். வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன். செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும்.

செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தருவாய் அப்பனே!

சரி பெரியவரே, கொள்ளைப் பொருட்கள் சேமிக்கும் கூடாரத்தில் தேடச் சொல்கிறேன்.....

ஆகா....என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்? ஆங்....ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி, அதை அந்தப்புரத்துக்கு அல்லவா விளையாட எடுத்துப் போனாள்?

இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது."நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்பது போய்,"நீ ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்று மாற்றிப் பாட வேண்டியது தானோ!

பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள்; இராமானுஜருக்கோ கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது. ஆனால்....

அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை; இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது! நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன். இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்? போங்க வாப்பா! தர முடியாது! தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)

அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா?  நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே! அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள், வேறு பொம்மைகள் என்று காட்டினான் - எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். "குழந்தே! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாய் என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?"

"இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது" - சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தலை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று பிரார்த்தித்தார்.தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து,

எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக!
வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....

ஆ...என்ன அதிசயம்!

செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல், சிறு சிறு அடியாய், குடு குடு நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டதே!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! - இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!
________________________________________

அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள். ஊண் இல்லை, உறக்கம் இல்லை! Teddy Bear-ஐக் கட்டியணைத்து உறங்க முடியவில்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்! அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! - ஹூம்...ஒன்றும் சரி வரவில்லை!

பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டதே! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! "மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்" - அரசன் சீறினான்! கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே! :-)

"வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்" கிளம்பி விட்டாள் சுல்தானி; அவள் கிளம்பக் கேட்டு, பக்கத்து நாட்டு இந்து இளவரசன் ஒருவன், குபேர் என்று பெயர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக!

ஏன்? - ஏன்னா அவனுக்கு இவள் மேல் ஒரு-காதல்! ஒரு-தலைக் காதல்!!
________________________________________

அங்கு என்னடாவென்றால் மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கள்வர்கள்!

நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.

அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி! உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார்.உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்; இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். "வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்" என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை! ஆனால் இந்தச் "சீரங்கத்துச் சாமியார்" விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்!

தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.

800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர். வைக்கம் கோவில் நுழைவு செய்த தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, செயலில் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.
________________________________________

மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!

பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி...அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாது! வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

கண்ணன் காலடியில்...

உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்யவில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!

இரு கை தலை மேல் குவித்தாள்! மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப்பட்டது! கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!

கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே
யான் உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்;
எங்கு எழுந்து அருளுவது இனியே?
புகல் ஒன்று இல்லா அடியாள், அவன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன. அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்! இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!

துலக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் - அதனால்
சுல்தானி பீவி என்பவள் நாச்சியார் ஆனாள்! வெறும் நாச்சியார் இல்லை!
துலுக்கா நாச்சியார்!! பீவி நாச்சியார்!!!
ராமானுஜரின் கிருஷ்ண பக்தி
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com