மறுபடியும் எழுத்தாளர் சுஜாதா
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய நறுக் சுருக் கேள்வி பதில்கள்.
சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே... கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில்
கேன்டீன் எப்படி? -எம்.பரிமளா, சென்னை.
கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு? -ஏ.ஆர்.மார்ட்டின், திருமானூர்.
இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து
‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள்
இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால்
வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி.
ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே. ஏன்? -வி.மகேஸ்வரன், காரைக்குடி.
திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே
பொருந்தும். சிவனுக்கு எப்படி? -டி.என்.பாலகிருஷ்ணன், சென்னை.
சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள்
கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம்
என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.
தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -என்.எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்.
கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள்
சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.
லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா? -வி.அம்பிகை,
சென்னை.
உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண்
மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை.
மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா? -ஆவடி த.தரணிதரன், சென்னை.
சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்! -என்.அஞ்சுகம், பாலப்பட்டி.
உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!
‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’ ? -ந.வந்தியக்குமாரன், சென்னை.
இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால்
அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட
வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.
காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா? -ராஜசுதா, சேலம்.
சரிதான்... துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?
ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்? -எஸ்.வெண்ணிலாராஜ், வேம்படிதாளம்.
பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.
ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது? -எஸ்.ஏ.கேசவன், இனாம் மணியாச்சி.
‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு் போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ்,
கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.
தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே? -எஸ்.சண்முகம், திருவண்ணாமலை.
தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும்
ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது? -த.முரளிதரன், சென்னை.
‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’
அன்னை ஓர் ஆலயம் என்று கூறுவது ஏன்?
-ஆடுதுறை கோ.ராமதாஸ், தஞ்சாவூர்.
‘கர்ப்ப’க்கிரகம் அங்கிருப்பதால்.
Enjoyed these very much
---------------------------------------------------
படித்தேன்.ரசித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Very interesting. Thank you Sir.
ReplyDeleteஅருமை அருமை!!
ReplyDeleteவணக்கம் குருவே!
ReplyDeleteசொன்னால் போதாது சுஜாதா அவர்களின் தமிழும் அதன் நடையும்!
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதிலும் கில்லாடி!
தாங்கள் தந்த அவரின் கேள்வி பதில்
பகுதி நகைச்சுவை கலந்த சொற்சுவை!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Very interesting article...
Thanks for sharing.
Thanks & Regards,
Ravi-avn
வணக்கம் ஐயா,எத்துனை முறை படித்தாலும்,அந்த டைமிங்,ஷார்ப்னஸ்,ஹ்யூமர் அலுக்காது.பழைய நினைவுகளை,ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றி.
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery interesting. Thank you Sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger Sarav said...
ReplyDeleteஅருமை அருமை!!/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
சொன்னால் போதாது சுஜாதா அவர்களின் தமிழும் அதன் நடையும்!
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதிலும் கில்லாடி!
தாங்கள் தந்த அவரின் கேள்வி பதில்
பகுதி நகைச்சுவை கலந்த சொற்சுவை!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!
/////ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Very interesting article...
Thanks for sharing.
Thanks & Regards,
Ravi-avn//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,எத்துனை முறை படித்தாலும்,அந்த டைமிங்,ஷார்ப்னஸ்,ஹ்யூமர் அலுக்காது.பழைய நினைவுகளை,ஞாபகப்படுத்தியதற்க்கு நன்றி./////
உண்மைதான். நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!!