19.12.16

Short Story: சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டியார்


சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டியார்

அடியவன் எழுதி இந்தமாத, மாத இதழ் ஒன்றில் வெளியான சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்
---------------------------------------------------------------
செட்டிநாட்டின் மையப் பகுதியில் உள்ளது அந்த ஊர். சுமார் 500 புள்ளிகளையே கொண்ட ஊர் அது.அந்த ஊரில் சுந்தரம் என்ற பெயரில்  பத்துப் பேர்கள் இருந்ததால், ஒவ்வொருக்கும் அவர்களுடைய வீட்டை வைத்து அடையாளப் பெயர்கள் இருந்தன. ஆனால் நம் நாயகருக்கு அவருடைய பெயரை வைத்துத்தான் அவருடைய வீட்டிற்கே அடையாளப் பெயர். சுயம்பு சுந்தரம் செட்டியார் வீடு என்றால் அனைவருக்கும் தெரியும்.

ஊருக்கு நடுவில் இருந்த கண்டி கதிரேசன் செட்டியார் வீட்டிற்குச் சொந்தமான 33 செண்ட் தோட்டத்தை விலைக்கு வாங்கி சுயம்பு சுந்தரம் செட்டியார் சொந்தமாக வீட்டைக் கட்டிய பிறகு, ஊர் மக்கள் அந்த வீட்டிற்கு அடையாளப் பெயராக அவர் பெயரையே வைத்து விட்டார்கள்.
அது மட்டுமில்லாமல் உள்ளூர் நகரத்தார் பள்ளிக்கூடத்திற்கு அவர் ஐம்பது லட்ச ரூபாய்களையும், பஞ்சாயத்து ஒன்றியத்திற்கு அதன் வளர்ச்சிக்காக ஐம்பது லட்ச ரூபாய்களையும் கொடுத்து நிதி உதவி செய்ததால், அவர் வீடு இருந்த தெருவிற்கும் அவருடைய பெயரையே வைத்துவிட்டார்கள். ’சுயம்பு சுந்தரம் செட்டியார் வீதி’ என்பது அதன் பெயர்.

புதிதாக அந்த ஊருக்கு விஷேசங்களுக்காக வருகிற நகரத்தார்களுக்கு அந்தப் பெயர் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

ஒருமுறை அந்த ஊரில் நடைபெற்ற திருமணம் ஒன்றிற்காக வந்திருந்த பேராசிரியர் ஒருவர் பெயர்க் காரணம் கேட்ட போது, உள்ளூரைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஒருவர் அவருக்கு விளக்கம் சொன்னார்:

“என்னப்பா, வித்தியாசமான பெயராக இருக்கிறதே?”

“ஆமாம், நாங்களாக வைத்த அடையாளப் பெயர்தான் அது”

“சுயம்புலிங்கம், சுயம்பு விநாயகர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். சக மனிதனுக்கு எப்படி சுயம்பு என்ற பெயரை வைப்பீர்கள்? முதலில் சுயம்பு என்றால் என்ன? அதற்கு விளக்கம் சொல்!”

“சுயம்பு என்றால் சுயமாக வளர்வது. தானாக வளர்வது.”

”மனிதன் எப்படித் தானாக வளர முடியும்? சுயமாக வளர முடியும்? சுயமாக வேண்டுமென்றால் முன்னேறலாம். ஆனால் சுயமாக வளரமுடியாதே!
பிறந்ததில் இருந்து 18 வயதுவரை யாராவது வளர்க்க வேண்டுமே? சுயமாக எப்படிப் பிறக்க முடியும் அல்லது வளர முடியும்? அப்படியிருக்கையில் அந்தப் பெயரை ஏன் அவருக்கு அடைமொழியாக வைத்தீர்கள்?”

சின்ன வயதில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய திருமணம் கூட தாமதமாகத்தான் நடைபெற்றது. யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. கடைசியில் பெற்றோர் இன்றி பெரிய தகப்பனார் வீட்டில் வளர்ந்து வந்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டார். அவருடைய முப்பதாவது வயதில்தான் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்தக் காலத்தில் அது தாமதமான வயதுதான். இப்போது அவருக்கு 65 வயது. முட்டி மோதி நானாகத்தான் சுயமாக - சுயம்புவாக, யாருடைய உதவியும் இன்றி வளர்ந்தேன். முன்னுக்கு வந்தேன் என்று அடிக்கடி சொல்வார். அது மட்டுமில்லாமல் பேசுகின்ற ஒவ்வொருவரிடமும் வயது வித்தியாசமில்லாமல் யோசனைகளை, அறிவுரைகளைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.
”எல்லா பாதைகளும் ஒரே இடம் சேர்வதில்லை, எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கவில்லை, எல்லா மனிதர்களும் ஒரே குணத்துடன் படைக்கப்படவில்லை. ஆகவே நம் வழியை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பார். அத்துடன் அடிக்கடி தன்னைப் பற்றியும் பெருமையாகச் சொல்வார். பேச்சில் சுயம்பு என்ற வார்த்தை தூக்கலாக இருக்கும்”

“சரி போகட்டும் விடு. முடிந்தால் ஒருமுறை அவரை சந்தித்துப் பேச வேண்டும்” என்று வந்தவர் சொன்னவுடன் அவர்களுடைய உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது

           ********************************************

சுந்தரம் செட்டியார் 1950ம் ஆண்டில் பிறந்தார். அவர் பிறந்த 24-6-1950ம் தேதியில்தான் புரட்சித் தலைவர் நடித்த மந்திரி குமாரி படம் வெளியானது. அப்போது அவருடைய தந்தை சொக்கலிங்கம் செட்டியாருக்கு வயது 38. வீட்டில் ஐந்து பெண் குழந்தைகள் இருந்தன. கடைசிப் பெண் குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் சுந்தரம் செட்டியார் பிறந்தார். சுந்தரம் செட்டியாருக்கும் அவருடைய மூத்த சகோதரி சிகப்பி ஆச்சிக்கும் 15 வயது வித்தியாசம். சுந்தரம் செட்டியார் பிறந்தபோது அவருடைய தாயார் சகுந்தலா ஆச்சி பிரசவத்தில் இறந்து போனார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சுந்தரம் செட்டியார் கைக்குழந்தையாக இருந்தபோது அவரைத் தூக்கி வளர்த்தவர் அவருடைய மூத்த சகோதரிதான்.

மூத்த சகோதரி திருமணமாகிப் போனபோது அடுத்த சகோதரி பார்த்துக் கொண்டார். இப்படியே பதினெட்டு வயது வரை சுந்தரம் செட்டியார் தன்னுடைய சகோதரிகளின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். தாயில்லாமல் வளர்ந்தவன், தாய்ப்பால் குடிக்காமல் வளர்ந்தவன் என்ற மனக்குறை அவருக்கு எப்போதும் உண்டு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பக்கம் அவர்கள் குடும்பத்திற்கு எழுபது ஏக்கர் ஏலக்காய் தோட்டம் இருந்தது. திருவாரூக்கு அருகில் எண்பது ஏக்கர் விளை நிலம் இருந்தது. மனைவி இறந்த பிறகு சுந்தரம் செட்டியாரின் தந்தை சொக்கலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை உப்புச்சப்பு அற்றதாகி, எந்தச் சுவையுமின்றி ஆகிவிட்டது. சொக்கலிங்கம் செட்டியார் செட்டிநாட்டிலுள்ள தங்கள் வீட்டிலேயே காலத்தை ஓட்டி விட்டார். தோட்டங்களை எல்லாம் குத்தைகைக்கு விட்டுவிட்டார். குத்தகைப் பணத்திலேயே காலம் ஓடியது.

ஐந்து பெண் குழந்தைகள் இருந்தால், அரசனும் ஆண்டியாகிப் போவான் என்பார்கள். சொக்கலிங்கம் செட்டியார் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
தன்னுடைய ஐந்து பெண் குழந்தைகளையும், உரிய வயதில் திருமணம் செய்து கொடுத்து விட்டார். திருமணச் செலவுகளில் அவருடைய பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தும் கரைந்து போய் விட்டன. அத்துடன் தன்னுடைய 59வது வயதில், ஹார்ட் அட்டாக்கில் அவரும் இறந்து போய் விட்டார்.

நம் நாயகர் சுந்தரம் செட்டியாருக்கு அப்போது 21 வயது. காரைக்குடி கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை அவர் முடித்திருந்த நேரம். தன்னுடைய தந்தை இறந்த பிறகு காரைக்குடியில் இருந்த பங்குத் தரகர் அலுவலம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவர், ஐந்து ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தார். பங்குச் சந்தையின் நெளிவு சுளிவுகளை சிரத்தையாகக் கற்றுக் கொண்டார்.

அவ்வப்போது தானும் சிறிய அளவில் பங்கு வணிகம் செய்து, பணம் சேர்த்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்குச் சென்று, பெரிய அளவில்  வர்த்தகம் செய்து பொருள் ஈட்டினார். இன்று அவருக்கு நூறு கோடிக்கு மேல் பணம் தேறும். சென்னையில் பல இடங்களில் சொத்துக்களை வாங்கிப் போட்டிருந்தார். எல்லாம் முறைப்படி வருமான வரி கட்டி வந்த பணம்.

அவருக்கு ஒரே ஒரு மகன். அவன் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியாளர் படிப்பைப் படித்துத் தேறினான். அவனை அமெரிக்காவிற்கு அனுப்பி எம்.எஸ் படிக்க வைத்தார். படித்துவிட்டு அந்த நாட்டிலேயே வேலைக்குச் சேர்ந்த அவன்,  சொல்லாமல் கொள்ளாமல் தன்னுடன் வேலை பார்த்த கொங்கணிப் பெண் ஒருத்தியை, அவளுடைய அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டுவிட்டான்.

அந்த நிகழ்வால் மிகவும் நொடிந்து போய் விட்டார் சுந்தரம் செட்டியார்

                     ************************************************

ஒருநாள் தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்த தன்னுடைய மூத்த சகோதரி சிகப்பி ஆச்சியிடம் தன்னுடைய மனக்குறைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டார் சுந்தரம் செட்டியார்.

பொறுமையாக அவருடைய குறைகளைக் கேட்ட சிகப்பி ஆச்சி, அவரைச் சமாதானப் படுத்தும் விதமாகப் பேசத் துவங்கினார்:

”ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி, காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் என்று துவங்கும் பாடலை எழுதிய கவியரசர் கண்ணதாசன் அதன் சரணத்தில் அற்புதமாக இரண்டு வரிகளை எழுதியிருப்பார்.
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை”
ஆகவே எதுவும் நம் கையில் இல்லை. எல்லாம் விதிப்படிதான் - விதித்தபடிதான் நடக்கும்! இதில் நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை!”

“ நான் வளர்த்ததை எல்லாம் மறந்து விட்டு, என்னிடம் சொல்லாமல் என் மகன் திருமணம் செய்து கொண்டு எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததைத்தான் என்னால் தாங்க முடியவில்லை!”

“யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை. யாருடைய வாழ்க்கையும் யார் கையிலும் இல்லை. எல்லாம் கர்ம வினைப்படிதான் நடக்கும். நல்லது கெட்டது எல்லாம் பூர்வ புண்ணியப்படிதான் நடக்கும். நீ சுயமாக - சுயம்புவாக வளர்ந்ததாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாயே - அது உண்மையல்ல.யாரும் சுயமாக வளரமுடியாது. பிறப்பதற்கும், நன்றாக வளர்வதற்கு இறையருள் வேண்டும். பிறருடைய உதவி வேண்டும். அதை உனக்கு உணர்த்தான் இறைவன் உனக்கு இப்படியொரு மனக்கஷ்டத்தைக் கொடுத்தான். மனிதர்கள் மட்டுமல்ல மரங்கள் கூட அவைகள் செடிகளாக இருக்கும் போது நீர் ஊற்றி, ஆடு மாடு தின்று விடாமல் பராமரித்தால்தான் வளரும். தானாக முளைத்து வளரக் கூடியது கருவேலமரம் ஒன்றுதான். ஆகவே நாம் நம்மைக் கருவேலமரம் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. நகரத்தார்கள் எல்லாம் சந்தனமரம் போன்று இருந்தவர்கள். இருக்க வேண்டியவர்கள். நீ இனிமேல் சந்தன மரமாக இரு. நிறைய தர்ம காரியங்களைச் செய்!”

சுந்தரம் செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது.

ஆச்சியின் சொற்களால் உள்ளம் நெகிழ்ந்தது. கண்கள் பனித்து விட்டன.

அதற்குப் பிறகு, இப்போது அவர் யாருக்கும் அறிவுரை சொல்வதும் இல்லை. சுயம்பு என்ற வார்த்தையைப் பயன் படுத்துவதுமில்லை.

அடுத்தமுறை ஊருக்குச் சென்றவர் தன்னுடைய வீடு இருக்கும் தெருவின் பெயரை மாற்றும்படி செய்தார். இப்போது அதன் பெயர் ‘சுந்தரேஷ்வரன் சாலை” ஆமாம் உள்ளூர் சிவன் கோயிலில் உறையும் ஈசனின் பெயர்!

   ======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. Respected sir,


    Good morning sir. Thank you for the good story on Suyambu Chettaiyar. The message thro' the story is as you generally insist to pray The God and everything will happen as per the FAte. Do not bother about regular happenings. Pray the God and He will look after everything.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice article...

    Thanks for sharing...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. பிறந்த தேதியெல்லாம் கொடுத்ததால் உண்மைக்கதை போலவே ஒரு தோற்றத்தைக் கொடுத்துவிட்டது.ஒவ்வொருவருக்கும்(அகக்)கண் திறப்பதற்கு
    ஏதாவது அறிவுரையோ, சம்பவமோ வரவேண்டும்.சுந்தரம் செட்டியாருக்கு அவர் சகோதரியின் உருவத்தில் வந்துள்ளது. அருமையான கதை நன்றி ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,சிறுகதை அருமை.கடைசி பத்தியில் "அவனின்றி அணுவும் அசையாது" என உணர்த்தி முடித்த பாங்கு மிகவும் சிறப்பு.நன்றி.

    ReplyDelete
  5. வணக்ககம் ஐயா
    தங்களின் ஒவ்வொரு கதையிலும் மனம் நெகிழுமாறு அருமையாக உள்ளது நன்றியுடன்
    மூர்த்தி

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    சத்தான கருத்துக்களை கொண்டு எப்போதும் போல விதி மற்றும் இறைவன் தீர்ப்பு இரண்டையும் பிணைத்து படிப்பவர் மனதிலும் நீங்கா இடம் பெறும் அருமையான கதை.
    சபாஷ் வாத்தியாரையா!

    ReplyDelete
  7. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Thank you for the good story on Suyambu Chettaiyar. The message thro' the story is as you generally insist to pray The God and everything will happen as per the FAte. Do not bother about regular happenings. Pray the God and He will look after everything.
    with kind regards,
    Visvanathan N/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி விஸ்வநாதன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger Krishna P S said...
    அருமை ஐயா////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice article...
    Thanks for sharing...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி அவனாசி ரவி!!!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    பிறந்த தேதியெல்லாம் கொடுத்ததால் உண்மைக்கதை போலவே ஒரு தோற்றத்தைக் கொடுத்துவிட்டது.ஒவ்வொருவருக்கும்(அகக்)கண் திறப்பதற்கு
    ஏதாவது அறிவுரையோ, சம்பவமோ வரவேண்டும்.சுந்தரம் செட்டியாருக்கு அவர் சகோதரியின் உருவத்தில் வந்துள்ளது. அருமையான கதை நன்றி ஐயா!/////

    உண்மைதான். உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சிறுகதை அருமை.கடைசி பத்தியில் "அவனின்றி அணுவும் அசையாது" என உணர்த்தி முடித்த பாங்கு மிகவும் சிறப்பு.நன்றி./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  12. ////Blogger moorthy krishnan said...
    வணக்ககம் ஐயா
    தங்களின் ஒவ்வொரு கதையிலும் மனம் நெகிழுமாறு அருமையாக உள்ளது நன்றியுடன்
    மூர்த்தி////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  13. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    சத்தான கருத்துக்களை கொண்டு எப்போதும் போல விதி மற்றும் இறைவன் தீர்ப்பு இரண்டையும் பிணைத்து படிப்பவர் மனதிலும் நீங்கா இடம் பெறும் அருமையான கதை.
    சபாஷ் வாத்தியாரையா!/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  14. சத்தான கருத்துக்களை கொண்டு, மனம் நெகிழுமாறு அருமையாக உள்ளது,கதை

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com