15.12.16

உலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்?


உலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்?

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..

"அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்..

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்.. அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..

சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்..

அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.."விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ளத் துவங்கினர்.

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும்,தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..

அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்..

கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி "எங்கே உன் மக்கள்" என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக "அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்..

அதற்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து... என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.🙏
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. அழகான கதை. ஸ்ரீராமகிருஷ்ணரின் பொன் மொழிகளைத் தழுவி எழுதப்பட்டது.

    ReplyDelete
  2. Classic and mindblowing message.
    But where is that mountain sir.. hehe

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,சிறிய ஆல் மற்றும் அரசு வித்துக்களில் எவ்வளவு பெரிய மரங்கள்.அதுபோல் ஒரு சிறிய கதையில் எத்துனை உன்னதமான கருத்துகள்.இதுபோன்ற பதிவுகள் வித்தாகி நாளை விருஷமாகும்போது அத்துனை புண்ணியமும் ஆசிரியருக்கே.நன்றி.

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    அழகான கதை. ஸ்ரீராமகிருஷ்ணரின் பொன் மொழிகளைத் தழுவி எழுதப்பட்டது.//////

    இருக்கலாம். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ///Blogger shanp2k123 said...
    Classic and mindblowing message.
    But where is that mountain sir.. hehe//////

    உங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே இருக்கிறது...ஹி...ஹி!
    பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  6. ///Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சிறிய ஆல் மற்றும் அரசு வித்துக்களில் எவ்வளவு பெரிய மரங்கள்.அதுபோல் ஒரு சிறிய கதையில் எத்துனை உன்னதமான கருத்துகள்.இதுபோன்ற பதிவுகள் வித்தாகி நாளை விருஷமாகும்போது அத்துனை புண்ணியமும் ஆசிரியருக்கே.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. வணக்கம் குருவே!
    இறைவன் அனைவர் கண்களுக்கும் தெரியப்படும்படி வந்து விடுபவனானால்
    உலகம இப்படியா இருக்கும்?!
    அனைவரும் நற்செயல்களை செய்து இறைவனை எப்போதுமே காணும் பேறு
    பெற்றவர்களாகி இருப்பார்களே?!
    பிறவிப்பயன் உள்ளோர் மட்டுமே இத்தகையவர்கள் பாக்கியம் பெற்றோர்.
    அதேத்தான் இக்கதையரல் உணரப்படுகிறது!
    நன்றி குருநாதா!

    ReplyDelete
  8. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இறைவன் அனைவர் கண்களுக்கும் தெரியப்படும்படி வந்து விடுபவனானால்
    உலகம இப்படியா இருக்கும்?!
    அனைவரும் நற்செயல்களை செய்து இறைவனை எப்போதுமே காணும் பேறு
    பெற்றவர்களாகி இருப்பார்களே?!
    பிறவிப்பயன் உள்ளோர் மட்டுமே இத்தகையவர்கள் பாக்கியம் பெற்றோர்.
    அதேத்தான் இக்கதையரல் உணரப்படுகிறது!
    நன்றி குருநாதா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  9. ராமானுஜர் கோபுர உச்சியிலிருந்து காயத்ரி மந்திர உபதேசம் செய்தாலும் எவ்வளவு பேர்களுக்கு அதன் பயன் எட்டியிருக்கும், எத்தனை பேர்கள் அவர் வழி சென்றிருப்பார்கள், அவர் முயற்சி வீணானதோ என்பது போன்ற மிகப்பெரிய கேள்விகள் என்னுள் எழுந்ததுண்டு...அதற்கு தகுந்த பதில் இந்த கதை என கருதுகிறேன்....மிக்க நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com