14.11.16

திரைப்படம்: புதியது எது?


திரைப்படம்: புதியது எது?

கந்தன் கருணை திரைப்படத்தில் முருகனைச் சந்திக்கும் ஒளவையார், அவரை வணங்கி மகிழ்கிறார். தமிழ்க் கடவுள் முருகன் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க, ஒளவைப் பிராட்டியார் அதற்கு அற்புதமாகப் பதில் உரைக்கிறார். பாடல் வரிகளைப் பாருங்கள். அத்துடன் பாடலின் காணொளி வடிவமும் உள்ளது. அதையும் பாருங்கள். பார்த்து மகிழுங்கள்!
-----------------------------------------------
ஒளவையே, உலகில் அரியது என்ன?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!
தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? 

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?

(அடுத்துள்ள பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்)

என்றும் புதியது
பாடல் - என்றும் புதியது
பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது என்று கவியரசர் முடித்தார் பாருங்கள். அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------

=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected Sir.

    Very happy morning... Simply superb.

    Have a holy day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,பக்தி பரவசமூட்டும் பாடல் வரிகள்.நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    மிக்க நன்றி, வாத்தியாரையா.
    அமர்க்களமான பாடல் வரிகள்! படம் பார்க்கும்போது முருகப்பெருமானை நேரில் கண்டது போன்ற உணர்வு இருந்தது.காரணம் கவியரசர் வரிகள்!!

    ReplyDelete
  4. ////Blogger ravichandran said...
    Respected Sir.
    Very happy morning... Simply superb.
    Have a holy day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    Fine,Sir.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பக்தி பரவசமூட்டும் பாடல் வரிகள்.நன்றி./////

    பரவசமூட்டும் பாடல் வரிகள் என்பது உண்மைதான். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. ////வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக்க நன்றி, வாத்தியாரையா.
    அமர்க்களமான பாடல் வரிகள்! படம் பார்க்கும்போது முருகப்பெருமானை நேரில் கண்டது போன்ற உணர்வு இருந்தது.காரணம் கவியரசர் வரிகள்!!/////

    கவியரசர் எழுதியது கடைசி பாடல் வரிகள் மட்டும்தான். மற்றதெல்லாம் அவ்வையாரின் பாடல் வரிகள். நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com