1.8.16

Short Story: சிறுகதை: பசுமடத்து தர்மம்

சிறுகதை 

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி ஜூன் மாதம் வெளியான  சிறுகதை ஒன்றை உங்கள் பார்வைக்காக இன்று இங்கே பதிவிட்டுள்ளேன். படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------

                                 பசுமடத்து தர்மம்
             
---------------------------------------------------------------------------------------------------

”பொன் மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்”
என்னும் பாடல் தமிழகமெங்கும், பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த காலம். 1971ம் ஆண்டு என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

ஆனால் ராமசாமி செட்டியார் வாழ்வில் பொன் மகள் வரவுமில்லை. ஒரு பைசா தரவுமில்லை.

தான் உள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் பார்க்கும் தமிழ் வாத்தியார் வேலையில் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நிம்மதியாக ஓட்டிக் கொண்டிருந்தார். எளிய வாழ்க்கை. அதனால் நிம்மதிக்கு ஒன்றும் குறைவில்லை. உள்ளூரில் சொந்த வீடு. வீட்டு வாடகை தொந்தரவு எதுவுமில்லை.

அவர் மனைவி விசாலாட்சி புண்ணியவதி வாயையே திறக்க மாட்டார். அத்துடன் தன் வருத்ததை வெளிப்படுத்தவும் மாட்டார். ஒரே ஒரு பெண் குழந்தை. அவளும் பள்ளி இறுதியாண்டுவரை படித்து முடித்துவிட்டாள். வயது 18 ஆகிறது. அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை.

செட்டியாரிடம் மெதுவாகச் சொன்னால், “அவளுக்கு வியாழ நோக்கம் அடுத்த வருடம்தான் வருகிறது. அப்போது செய்வோம்”

”பணத்திற்கு என்ன செய்வது?”

”இப்போதே கவலைப்பட்டால் முடியமா? மாப்பிள்ளைக்கு வழி செய்யும் பழநியாண்டவர் பணத்திற்கும் வழி செய்வார். பொறுமையாக இரு”

அதற்குப் பிறகு ஆச்சி பேசாமடந்தையாகி வளவு வீட்டிற்குள் சென்று விடுவார்கள்.

ராமசாமி செட்டியாருக்கும் உள் மனதில் கவலை இல்லாமல் இல்லை. சொந்தக்காரர்களிடம் கை நீட்டிப் பணம் வாங்கி, தன் மகளின் திருமணத்தை நடத்துவதில் அவருக்கு விருப்பம் இல்லை. தன்மான உணர்ச்சி மிக்கவர் அவர். கடைசியில் வேறு வழியில்லை என்றால் தங்களுடைய வீட்டில் பாதிப் பங்கை யாருக்காவது விற்றுவிட்டு பெண்ணின் திருமணத்தை நடத்தி விடலாம். அதை இப்போது சொல்ல வேண்டாம். பின்னால் பார்க்கலாம் என்ற முடிவோடு இருந்தார்.

பழநியாண்டவர் பணத்திற்கு வழி செய்தாரா?

செய்யாமல் விடுவாரா?

என்ன செய்தார்? என்ன நடந்தது? தொடர்ந்து படியுங்கள்
                    *****************************************

சித்திரை வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அனல் காற்று வீசியது. பகல் 12 மணி. ராமசாமி செட்டியார் பழைய குடை ஒன்றைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு பொடிநடையாக  வடக்கு ரத  வீதியில் நடந்து கொண்டிருந்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார். அன்று விடுமுறை நாள். அவர் வீட்டில்தான் இருப்பார்.

வெய்யிலின் உக்கிரத்தில் வியர்த்து கொட்டியது. எங்காவது பத்து நிமிடங்கள் இருந்து விட்டுப் போகலாம் என்று நினைக்கும்போது, அவர்களுடைய பசுமடம்  நினைவிற்கு வந்தது. அந்தக் காலத்தில் அவருடைய அய்யா சேதுராமன் செட்டியார் கட்டிக்கொடுத்தது. கட்டிடம் கட்டிக் கொடுத்ததுடன் 6 பசுமாடுகளையும் வாங்கிக் கொடுத்திருந்தார். அதன் நிவாகத்தை அப்போதே கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து விட்டிருந்தார். கோவில் நிர்வாகமே பசுமடத்தைப் பராமரித்துக் கொண்டிருந்தது.அதனால். சென்ற 50 ஆண்டுகளாக பசுமடம் இன்றுவரை நன்றாக நடந்து கொண்டிருந்தது. காலையிலும் மாலையிலும் தலா 20 லிட்டர் பசும்பால் கோயிலுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் எல்லா கால அபிஷேகத்திற்கும் முடையில்லாமல் பால் கிடைத்துக் கொண்டிருந்தது.

நான்கே எட்டில் பசுமடைத்தை அடைந்தவர், குடையை மடக்கிக் கொண்டு உள்ளே சென்று முன்பக்கம் இருந்த திண்ணையில் அமர்ந்தார்.

அவரைப் பார்த்தவுடன் பசுமடத்துப் பணியாள் ஓடி வந்தான்.” அப்பச்சி உள்ளே வந்து உட்காருங்கள். தாகத்திற்கு ஏதாவது தரட்டுமா? நல்ல பசுவமோர் இருக்கிறது. ஒரு சொம்பு கொண்டு வந்து தரட்டுமா?” என்றான்

”தண்ணீர் மட்டும் கொடு தம்பி, போதும். பசு மடத்து மோரை எல்லாம் சாப்பிடக்கூடாது. பசு மடத்து பாலை நீ அப்படியே கோவிலில் கொடுக்க வேண்டியதுதானே? எதற்கு மிச்சம் பண்ணி தயிர், மோர் என்று வளர்க்கிறாய்? அது சிவன் சொத்து எந்த வடிவில் எடுத்தாலும், விற்றாலும், கொடுத்தாலும், குடித்தாலும் பாபம்தான்! அதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப் போகிறது? நீ தண்ணீர் மட்டும் கொடு. தண்ணீர் பஞ்சாயத்துப் போர்டு குழாயில் வரும் தண்ணீர். அதனால் குடிக்கலாம் தவறில்லை” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்!

அவன் அசந்து போய் விட்டான். என்னவொரு வியாக்கியானம். மோருக்கே இவ்வளவு வியாக்கியானம் சொல்பவர். கோயில் பள்ளியறையில் நடக்கும் அடாவடிகள் எல்லாம் தெரிந்தால் என்னென்ன சொல்வாரோ என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றவன் ஒரு சொம்பில் பானைத் தண்ணீரையும், ஒரு குவளையையும் கொண்டு வந்து கொடுத்தான்.

ஒரு சொம்புத் தண்ணீரையும் குடித்து முடித்தவர், அவனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டார்.

சற்று நேரத்தில் அங்கே வந்த அறங்காவலர்களில் ஒருவரும், பசுமடத்தை மேற்பார்வை செய்பவருமான சண்முகம் செட்டியாரிடம் நடந்ததை உணர்ச்சி பொங்க அப்படியே சொன்னான்.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தக் கலியுகத்தில் இப்பொடியொரு நல்ல மனிதரா - தர்ம நியாயம் தெரிந்தவரா? என்று நினைத்தவர், பசுமடத்துப் பணியாளிடம் சொன்னார்:

“அப்பனே கோயிலில் கொடுக்கும் சம்பளம் உணக்குப் பற்றவில்லை என்றால் என்னிடம் சொல். நான் என் கையில் இருந்து உனக்கு உபரியாக வேண்டியதைக் கொடுக்கிறேன். அடுத்த கோயில் கூட்டத்தில்தான் கோயில் சிப்பந்திகளுக்கு ஊதியத்தை ஏற்றிக் கொடுப்பதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். அதனால் அதுவரை, இங்கே கறக்கும் பால் மொத்தத்தையும் ஒரு சொட்டுக் கூட நீ எடுத்து வைக்காமல் கோயிலில் கொடுத்து விடு. பசுமடத்தில் இருந்து பால், தயிர், மோர், நெய் என்று எதையும் யாருக்கும் விற்காதே, உன் சொந்த உபயோகத்திற்கும் எடுத்துக் கொள்ளாதே - புரிந்ததா?” என்று கண்டித்துச் சொன்னவர், உள்ளே சென்று பசுமடத்தை முழுமையாகப் பார்வையிட்டு விட்டு அடுத்த 20 நிமிடங்களில் தன்னுடைய காரில் புறப்பட்டுச் சென்று விட்டார்.

அவர் பெரிய செல்வந்தர். பக்கத்தில் உள்ள நகரத்தில் நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் வணிகத்தையும் நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். மிகவும் பிஸியான மனிதர்.ஆனால் தன்னுடைய நேரத்தை ஒதுக்கி, ஒரு ஆர்வத்தில் உள்ளூர் சிவன் கோவிலுக்கு அறங்காவலர்களில் ஒருவராக இருந்து, திருப்பணிகளையும், சமூக சேவைகளையும் செய்து வருகிறார். நலிந்த குடும்பப் பெண்களுக்கு திருமண உதவித் தொகைகளையும் கொடுத்து வருகிறார்.

               *********************************************************

நமது நாயகர் ராமசாமி செட்டியாரும், அவருடைய அய்யா காலத்தில் மிகவும் செல்வாக்காக இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவருடைய அய்யா சேதுராமன் செட்டியாருக்கு பர்மாவின் டெல்டா பகுதிகளில் நிறைய விளை நிலங்கள் இருந்தன. சுமார் 5,000 ஏக்கர்கள். எல்லா நிலங்களையும் குத்தகைக்கு விட்டு குத்தகைத் தொகையாக ஆண்டு முழுவதும் அபரிதனான நெல் வந்து கொண்டிருந்தது. அவற்றை எல்லாம் உடனுக்குடன் சந்தைகளில் விற்றுப் பணமும் வந்து கொண்டிருந்தது. அத்துடன் ரெங்கோன்  நகரில் கொடுக்கல் வாங்கல் தொழிலையும் செய்து கொண்டிருந்தார், ரெங்கோன் நகரில் பெரிய வீடு இருந்தது. பர்மாவிற்குச் செல்லும் பல நகரத்தார்கள், அவரை வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.

அது எல்லாம் பழைய கதை. 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த நிலையில், இருந்ததை எல்லாம் போட்டது போட்டபடி, பல நகரத்தார்கள், உயிருக்குப் பயந்து, நாட்டிற்குத் திரும்பி வந்த நிலையில், சேதுராமன் செட்டியாரும் கையில் இருந்த ரொக்கம், தங்கத்துடன் திரும்பி வந்து விட்டார். அத்துடன் யுத்தம் முடிந்தவுடன் பர்மாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் யாரும் அங்கே திரும்பிச்  செல்ல முடியவில்லை. வந்த அத்தனை பேர்களுக்கும் பர்மா வாழ்க்கை முடிந்து விட்டது. பர்மா வாழ்க்கை முடிந்ததெல்லாம் வரலாறு.

பர்மா நன்றாக இருந்த காலத்தில், அடிக்கடி ஊருக்கு வந்த போன சேதுராமன் செட்டியார், உள்ளூர் சிவன் கோயில் திருப்பணிக்கு நிறையப் பணம் கொடுத்ததுடன், 1929ம் ஆண்டு தன் பேரன் ராமசாமி பிறந்த வருடம் தன் சொந்த செலவில், கோயிலுக்கு கும்பாபிஷேகத்தைச் செய்து வைத்தார். அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பெரிய பசுமடம் ஒன்றைக் கட்டி கோவிலுக்குக் கொடுத்திருந்தார். அத்துடன் ஊருக்கு வெளியே ஒரு ஏக்கர் இடம் வாங்கி, நந்தவனம் ஒன்றையும் அமைத்துக் கோவிலுக்குக் கொடுத்திருந்தார். கோவிலுக்கு வேண்டிய பூக்கள் எல்லாம் அப்போது அங்கேயிருந்துதான் செல்லும்.

இப்போது நந்தவனம் கட்டாந்தரையாகக் கிடக்கிறது. நந்தவனத்தில் இருந்த பெரிய கிணற்றில் தண்ணீர் இல்லாமல் அது வற்றிப் போனதுதான் அதற்குக் காரணம். பக்கத்தில் இருந்த கண்மாய்கள் எல்லாம் கருவேலக் காடாக மாறி விட்டிருந்தன. அதுவும் ஒரு காரணம்.

1948ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 30ம் நாள், மகாத்மா காந்தி இறந்த அன்று, சேதுராமன் செட்டியாரும் உடல் நலக்குறைவால் காலமாகிவிட்டார். 14 ஆண்டுகள் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் உட்கார்ந்தே சாப்பிட்டதால், ராமசாமி செட்டியாரின் அப்பச்சியும் கஷ்டத்திற்கு ஆளாகி 1956ம் ஆண்டு, பர்மா இனி இல்லை என்று தெரிந்த அன்று அதிர்ச்சியில், மாரடைப்பில் காலமாகிவிட்டார்.

ராமசாமி செட்டியாரின் அப்பத்தாதான் இருந்து, வீட்டிற்கு ஒரே வாரிசான அவரை ஆளாக்கினார். ராமசாமி செட்டியாரும் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால், தமிழ் வித்வான்  படிப்பைப் படித்து  முடித்து, உள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இதுதான் ராமசாமி செட்டியாரின் பூர்வ கதை. வாருங்கள் நடப்புக் கதைக்குப் போவோம்~!

                           8888888888888888888888888888888888888888888888888888888888888
அன்று வைகாசி விசாகத் திருநாள். முருகப் பெருமானுக்கு உகந்த நாள். உள்ளூரில் இருந்த முருகன் கோவிலுக்குச் சென்று, வழிபட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்த ராமசாமி செட்டியாருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

செல்வந்தரான சண்முகம் செட்டியார், அவரைப் பார்க்க வந்திருந்தவர், அவருக்காக பெட்டகசாலையில் உள்ள பிரப்பம் பாயில் அமர்ந்து நாளிதழ் ஒன்றைப் படித்தவாறு, அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்தவுடன், இவர் முகம் மலர ”வாங்க, வாங்க அண்ணே” என்று சொன்னவுடன், அவர் தான் அவரைப் பார்க்க வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்லத் துவங்கினார்.

“நான் உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டேன். மிக்க வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.”

“என்ன கேள்விப்பட்டீர்கள்?” அப்பாவித்தனமாக ராமசாமி செட்டியார் பதிலுரைத்தார்.

“கோட்டூர் கருப்பையா நந்தவனத்து இடத்தை விலைக்குக் கேட்டு வந்தபோது, முடியாது என்று சொல்லிவிட்டீர்களாமே! அத்துடன் அவன் லீசிற்காவது அந்த இடத்தைக் கொடுங்கள், நீங்கள் கேட்கும் தொகையைத் தருகிறேன் என்று சொன்னபோது, நீங்கள் அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லையாமே. இடம் எங்கள் அப்பச்சி பெயரில்தான் இருக்கிறது. ஆனால் அதை நாங்கள் கோவிலுக்குக் கொடுத்து விட்டோம். அது இப்போது சிவன் சொத்து, நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டீர்களாமே. வேறு ஆளாக இருந்தால், அந்தக் கட்டாந்தரையை விற்று இந்நேரம் காசு பண்னியிருப்பான்”

“அதுதானே, நான் சொன்னதுதானே  முறை”

“அதே போல, நம் ஊர்ப் பள்ளிக் கூடத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்களில் பலர் உபரி வருமானத்திற்காக, காலை மற்றும் மாலை நேரங்களில் பத்து, இருபது மாணவர்களை வைத்து டியூஷன் கிளாஸ் நடத்திக் கொண்டிருப்பதைப் போல நீங்கள் எதுவும் செய்யாமல், அப்படிச் செய்தால், பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தும் ஆர்வம் குறைந்து விடும். நாம் செய்யும் வேலைக்கு அது தர்மமாகாது என்றும் சொல்வீர்களாமே!”

”உண்மைதான். ஆனால் அது என்னுடைய எண்ணம் மட்டும்தான். மற்றவர்களுக்கு நான் போதனை செய்வதில்லை.”

“போகட்டும் நான் வந்த விஷயத்திற்கு வருகிறேன். எங்கள் அப்பச்சி காலத்தில் இருந்து நாங்கள் திருமணங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் பெண்ணின் திருமணத்திற்கும் உதவி செய்ய விரும்புகிறேன். நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்த வரனாக இரண்டு மாதங்களுக்குள் பாருங்கள். நானும் பார்க்கிறேன். திருமணத்திற்கு ஆகும் மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நானும் உங்களைப் போல முருக பக்தன்தான். ஒவ்வொரு கார்த்திகைக்கும், பழநியில் இருக்கும் எங்கள் விடுதியில் வேலுக்கு அபிஷேகம் செய்து 300 பேர்களுக்கு அன்னதானம் செய்கிறோம். ஆகவே முருகப் பெருமான்தான் என்னை உங்களிடம் அனுப்பி வைத்துள்ளார் என்று நினைத்து எங்கள் உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.”

“நல்லது. அப்பன் முருகனின் பெயரைச் சொல்லிவிட்டீர்கள். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் மீது உங்களுக்கு இவ்வளவு பற்று, பிடித்தம் வருவதற்கு அடிப்படையாக என்ன காரணம்? அதை மட்டும் சொல்லுங்கள்”

“பசு மடத்தின் மோரைக் குடிக்க மாட்டேன் என்று சொன்னீர்களாமே! அசந்து விட்டேன். அது ஒன்று போதாதா? அன்றே உங்களை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. உங்களைப் போல சிலர் இருப்பதினால்தான் நகரத்தார்களின் இறையுணர்வும், தெய்வ வழிப்பாடும் சிறப்பாக இருக்கிறது. பெருமைக்குரியதாக இருக்கிறது. திருப்பணிகளும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த மஹா சபைக் கூட்டத்தில், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும், நீங்கள் முன்பு செய்த திருப்பணிகளுக்காக ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சக அறங்காவலர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களும் சம்மதித்து விட்டார்கள். அதற்குள் உங்கள் பெண்ணின் திருமணத்தை நடத்தி விடுவோம்” என்று சொன்னவர், எழுந்து ராமசாமி செட்டியாரின் கைகளைப் பிடித்து வணங்கி விட்டு, புறப்பட்டுச் சென்று விட்டார்.

ராமசாமி செட்டியாரும், கதவிற்குப் பின்னால் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த ராமசாமி செட்டியாரின் மனைவி சீதை ஆச்சியும் தங்களை மறந்து, கண்கள் பனிக்க நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் தங்கள் சுய நினைவிற்கு வருவதற்கு சில மணித்துளிகள் ஆயிற்று!
                   *********************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. வழக்கம் போல் அருமை.

    காந்தி இற‌ந்த அன்று செட்டியாரும் இறந்தார் என்று கதைக்கு ஓர் உண்மைத் தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    மிக அழகான கதை!இறை பக்தி இயற்கையிலேயே மனதில் வேறூன்றி இருந்தால்,அவ்விறைவன் தானே பக்தனைத் தேடி வந்து அருள் புரிவான்
    என்பது தானே பொருள்!சிவன் சொத்து குல நாசம் என்பதை உணர்ந்து நடக்கும் ராமசாமிச் செட்டியாரேப் பற்றி ஒருபடி அதிகமாக உணர்த்துகிறார் மோர் கூட குடிக்காமல்!மிக அருமையாக பின்னப்பட்டுள்ள கதை! கதை முடிவுக்கு வரும் போது கண்ணீர் துளிர்த்தது கண்களில்!
    சபாஷ், வாத்தியார்!

    ReplyDelete
  3. Respected sir,

    Thank you for the good story. Good theme like Dharmam and God's property should not be used by others is the message inside the story. These are the stories will bring some people will follow the rules. Once again thank you for writing these kind of stories.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  4. அருமையான கருத்து. நல்லவர்களை கடவுள் என்றும் காப்பாற்றுவான் என்பதை எளிமையான நடையில் புரிய வைத்திருக்கிறீர்கள். கோயில்களுக்கு திருப்பணி செய்வதில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முதன்மையானவர்கள் என்பது நாடறிந்த உண்மை. நகரத்தார்களின் தர்ம சிந்தனையையும் இறை உணர்ச்சியையும் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.

    நான் காரைக்குடியில் 10 -12ஆம் வகுப்பு வரை படித்து வளர்ந்தவன். முதல் முதலாக காரைக்குடிக்குச் சென்ற போது அந்த ஊரில் இருந்த பெரிய வீடுகளைப் பார்த்து அதிசயித்துப் (மிரண்டு) போய் விட்டேன், அதுவும் ஆயிரம் ஜன்னல் வீட்டைப் பார்த்த போது மூர்ச்சையடையாத குறை தான். இன்னமும் பெரிய வீடுகள் செட்டிநாடு பக்கம் இருக்கிறது என்றார்கள், நம்ப முடியவில்லை, பின்பு ஒரு முறை கோட்டையூர், கானாடுகாத்தான், செட்டிநாடு, போன்ற ஊர்களுக்கு சென்று வந்த பின் தான் நம்ப முடிந்தது. காரைக்குடிக்குச் செல்லுமுன் முன் கோயில்களைப் (மீனாட்சி அம்மன், நெல்லையப்பர், ஸ்ரீரங்கம்.,,,) பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். முதல் முறையாக வீடுகளைப் பார்த்து பிரமிக்க வைத்தது காரைக்குடியும் அதன் சுற்று வட்டார ஊர்களும் தான். இன்னமும் எனக்கு அத்தகைய வீடுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகின்றன. அங்கு வசிப்பவர்கள் தனியாக வாக்கிங் செல்லத் தேவையில்லை, எல்லா ரூமுக்கும் ஒரு விசிட் அடித்து வந்தாலே போதும். நகரத்தார் வீட்டுப் பசங்க நிறைய பேர் நன்பர்களாக இருந்தனர்,அவர்களிடம் பழகியதில் நான் அதிசியத்தது அவர்களின் வீடு, இறை பக்தி, வியாபாரம் மற்றும் நிர்வாகத் திறமை, மற்றும் வள்ளல் குணம்.

    அன்புடன்,
    சரவணபாபு ஸ்ரீனிவாசன், பெங்களூரு

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா
    மிகவும் அருமை ஐயா. மிகவும் நன்றி

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,நீதிக்கும்,நேர்மைக்கும் இன்று காலமில்லை போல் தோன்றினாலும்,தேவைப்படும்போது அவர்களுக்கு கடவுள் மனித உருவில் வந்து உதவுவான் என்று புரியவைத்த சிறப்பான ஒரு கதை.அடுத்தவன் நிலத்தை அபகரிக்கும் இந்த காலத்தில்,சொன்னது சொன்னதுதான்,கொடுத்தது கொடுத்ததுதான் என்று தன்னுடைய கஷ்டமான நிலையிலும்,சொல்லும் கதை நாயகனை கண்முன்னே நிறுத்திய ஆசிரியரின் பாங்கு,இது போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கியது.நன்றி.

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    வழக்கம் போல் அருமை.
    காந்தி இற‌ந்த அன்று செட்டியாரும் இறந்தார் என்று கதைக்கு ஓர் உண்மைத் தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்! பாராட்டுக்கள் என்பது எழுதுபவர்க்கு ஊக்க மருந்தாகும்! அதாவது செலவில்லாத டானிக்!

    ReplyDelete
  8. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிக அழகான கதை!இறை பக்தி இயற்கையிலேயே மனதில் வேறூன்றி இருந்தால்,அவ்விறைவன் தானே பக்தனைத் தேடி வந்து அருள் புரிவான்
    என்பது தானே பொருள்!சிவன் சொத்து குல நாசம் என்பதை உணர்ந்து நடக்கும் ராமசாமிச் செட்டியாரேப் பற்றி ஒருபடி அதிகமாக உணர்த்துகிறார் மோர் கூட குடிக்காமல்!மிக அருமையாக பின்னப்பட்டுள்ள கதை! கதை முடிவுக்கு வரும் போது கண்ணீர் துளிர்த்தது கண்களில்!
    சபாஷ், வாத்தியார்!//////

    உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  9. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you for the good story. Good theme like Dharmam and God's property should not be used by others is the message inside the story. These are the stories will bring some people will follow the rules. Once again thank you for writing these kind of stories.
    with kind regards,
    Visvanathan N///////

    இதுவரை 130 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். பலகதைகள் தர்மத்தை வைத்து பின்னப்பட்டதுதான்! உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger வாசகன் said...
    அருமையான கருத்து. நல்லவர்களை கடவுள் என்றும் காப்பாற்றுவான் என்பதை எளிமையான நடையில் புரிய வைத்திருக்கிறீர்கள். கோயில்களுக்கு திருப்பணி செய்வதில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முதன்மையானவர்கள் என்பது நாடறிந்த உண்மை. நகரத்தார்களின் தர்ம சிந்தனையையும் இறை உணர்ச்சியையும் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.
    நான் காரைக்குடியில் 10 -12ஆம் வகுப்பு வரை படித்து வளர்ந்தவன். முதல் முதலாக காரைக்குடிக்குச் சென்ற போது அந்த ஊரில் இருந்த பெரிய வீடுகளைப் பார்த்து அதிசயித்துப் (மிரண்டு) போய் விட்டேன், அதுவும் ஆயிரம் ஜன்னல் வீட்டைப் பார்த்த போது மூர்ச்சையடையாத குறை தான். இன்னமும் பெரிய வீடுகள் செட்டிநாடு பக்கம் இருக்கிறது என்றார்கள், நம்ப முடியவில்லை, பின்பு ஒரு முறை கோட்டையூர், கானாடுகாத்தான், செட்டிநாடு, போன்ற ஊர்களுக்கு சென்று வந்த பின் தான் நம்ப முடிந்தது. காரைக்குடிக்குச் செல்லுமுன் முன் கோயில்களைப் (மீனாட்சி அம்மன், நெல்லையப்பர், ஸ்ரீரங்கம்.,,,) பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். முதல் முறையாக வீடுகளைப் பார்த்து பிரமிக்க வைத்தது காரைக்குடியும் அதன் சுற்று வட்டார ஊர்களும் தான். இன்னமும் எனக்கு அத்தகைய வீடுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகின்றன. அங்கு வசிப்பவர்கள் தனியாக வாக்கிங் செல்லத் தேவையில்லை, எல்லா ரூமுக்கும் ஒரு விசிட் அடித்து வந்தாலே போதும். நகரத்தார் வீட்டுப் பசங்க நிறைய பேர் நண்பர்களாக இருந்தனர்,அவர்களிடம் பழகியதில் நான் அதிசியத்தது அவர்களின் வீடு, இறை பக்தி, வியாபாரம் மற்றும் நிர்வாகத் திறமை, மற்றும் வள்ளல் குணம்.
    அன்புடன்,
    சரவணபாபு ஸ்ரீனிவாசன், பெங்களூரு/////

    உங்களின் மேலான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    மிகவும் அருமை ஐயா. மிகவும் நன்றி//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நீதிக்கும்,நேர்மைக்கும் இன்று காலமில்லை போல் தோன்றினாலும்,தேவைப்படும்போது அவர்களுக்கு கடவுள் மனித உருவில் வந்து உதவுவான் என்று புரியவைத்த சிறப்பான ஒரு கதை.அடுத்தவன் நிலத்தை அபகரிக்கும் இந்த காலத்தில்,சொன்னது சொன்னதுதான்,கொடுத்தது கொடுத்ததுதான் என்று தன்னுடைய கஷ்டமான நிலையிலும்,சொல்லும் கதை நாயகனை கண்முன்னே நிறுத்திய ஆசிரியரின் பாங்கு,இது போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கியது.நன்றி.//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  13. ////Blogger பரிவை சே.குமார் said...
    அருமையான கதை ஐயா...////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி குமார்!

    ReplyDelete
  14. உண்மையிலேயே ராமசாமி செட்டியார் போன்ற அற்புதமனிதர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.....அவர்களால்தான் ஊரில் மழை பொழிகிறது.....கதை. மனதை தொட்டுவிட்டது...நானும் முருக பக்தந்தான்..இன்றுவரை என்னை,என்குடும்பத்தை காத்து, வாழவைப்பவன் அந்த முருகப்பெருமான்தான்......இன்றுகூட ஒரு காரியத்திற்காக என் மனம் சஞ்சலப்பட்டது....முருகன் என்னுடன் இருக்கிறான் என்ற நினைவு கொஞ்சம் மற்ந்து போய் மனம் சஞ்சலப்பட்டது...எத்தேச்சையாக தங்களின் பசுமடத்து தர்மம் சிறுகதை படிக்க நேர்ந்தது....அதில் ராம்சாமி செட்டியார் தமது மனைவி விசாலாட்சி ஆச்சியிடம் -"இப்போதே கவலைப்பட்டால் முடியுமா.?மாப்பிள்ளைக்கு வழி செய்யும் பழனியாண்டவர் பணத்திற்கும் வழி செய்வார் பொறுமையாக இரு"- என்று சொல்லும் வார்த்தை முருகன் எனக்கே சொன்னமாதிரி இருந்தது....உடம்பே சிலிர்த்து அடங்கிற்று....முருகா...முருகா...

    ReplyDelete
  15. மிக அருமையான கதை ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com