2.8.16

ஆகஸ்ட் 2ம் தேதிக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?


ஆகஸ்ட் 2ம் தேதிக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?

இன்று (2-8-2016) நடைபெறும் அதிசயம் ஆனால் உன்மை!

இன்று 2- 8- 2016 ஒரே நாளில் ஆறு சிறப்புகள்!
 
1- ஆடி அமாவாசை
2- ஆடி பெருக்கு ஆடி 18.
3- குரு பெயர்ச்சி
4- திருக்கழுக்குன்றம பனிரென்டு வருடம் ஒரு முறை நிகழும் அதிசயம்
5-  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
6 - ஆடிசெவ்வாய்

நமது வாழ்க்கையில் வரும் மிக அரிதான இப்புனித நாளில் இறைவனை துதிப்பதும், ஆலயங்கள் செல்வதும், கிரிவலம் சுற்றுவதும், பித்ருகடன் தீர்ப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும். முக்கியமாக நாம் காணுகின்ற  ஜீவராசிகள் அனைத்திர்க்கும் நம்மால் இயன்ற வரையில் உணவளித்தால், இப்பிறவிப் பயனை சிறிதேனும் அடையலாம்.

2–8–2016 அன்று ஆடி அமாவாசை

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைப்பிடிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம்  பெறுகிறது.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை திசையை குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும், சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுது அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும்.

திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகஉள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவாசை இறுதியாகவுள்ள 15 திதிகளும் அபரபக்கம் எனப்படும். பூர்வபக்கம், அபரபக்கம் என்பன முறையே சுக்ல  பட்சம், கிருஷ்ணபட்சம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை என்றும் அழைக்கப்படுகிறது.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ எனப்படும்.

சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உயிர்களின் ஆத்ம அமைப்பு சூரியனால்தான் நிகழ்கின்றன. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரியனாலேயே தோன்றுகின்றன.

சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கவை. இத்தகைய சூரியர், சந்திரர் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள் ஆகும். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர். சிறப்புமிக்க அமாவாசை தினத்தில் விரதம் மேற்கொள்வது, இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.

ஆடி அமாவாசை விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள். அன்றைய தினம் வீட்டில், மூதாதையர்கள் படத்துக்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

விரதம் இருக்கும் முறை

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பிற்பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.

ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

திருவையாறில்  கயிலைக்  காட்சி

தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் சிவபெருமானை தரிசிக்க ஆவல் கொண்டு கயிலைக்கு சென்றார். கயிலைக்கு சென்ற அவர் வயோதிகம் காரணமாக நடக்க முடியாமல் தவழ்ந்து சென்றார். அப்போது சிவபெருமான் ஒரு அந்தணர் வடிவில் வந்து அப்பரே இங்குள்ள குளத்தில் மூழ்கிட திருவையாறில் எழுந்தருள்வாய். அங்கே உமக்கு யாம் கயிலைகாட்சி தந்தருள்வோம் என கூறி அருளினார். உடனே திருநாவுக்கரசர் அங்குள்ள குளத்தில் மூழ்கி, திருவையாறு அப்பர் குட்டையில் எழுந்தார். அங்கே சிவபெருமான் உமாதேவியாருடன் காளை வாகனத்தில் வீற்றிருக்கும் கயிலை காட்சியை திருநாவுக்கரசர் காண தரிசனம் தந்தார்.

இந்த அருளாடல் நிகழ்ச்சி ஆடி அமாவாசையன்று நிகழ்ந்தது. இதை நினைவு கூரும் விதத்தில் ஆடி அமாவாசையன்று திருவையாறு ஐயாறப்பர் சன்னிதியில் இந்த நிகழ்ச்சி கயிலைக்காட்சி விழாவாக அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

தோஷம்  நீக்கும்  தீர்த்தம்

நாகப்பட்டினத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் வேதாரண்யத்தில், வேதாரண்யேசுவரர் கோவில் உள்ளது. சிவபெருமான் அகத்திய முனிவருக்கு திருமணக்காட்சி காட்டிய திருத்தலம்.

தேவார பாடல் பெற்ற இந்தக் கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம். இதில் நீராடியவர்கள் தங்கள் பாவங்களை கழுவி கொள்வதுடன், மூதாதையர்கள் செய்த பாவங்களுக்கும் நிவர்த்தி பெற்றுவரலாம். பிரம்மஹத்தி தோஷம், ஒரு உயிரைக்கொன்றால் ஏற்படும். இங்கு நீராடினால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு எதிரே உள்ள கடல், ‘ஆதி சேது’ என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடுவதை விட சிறந்ததாகும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசைகளில் இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் நீராடுவர்.

ஆடிப்பெருக்கு என்றால் என்ன?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்புமுதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.



மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

காவிரிக்கரை:
காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
•         மேட்டூர் அணை,
•         பவானி கூடுதுறை,
•         ஈரோடு, கொடுமுடி,
•         பரமத்தி-வேலூர்,
•         குளித்தலை,
•         திருச்சி,
•         புகார்
சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம. ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்

பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவதுஅணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

குருபெயர்ச்சி என்றால் என்ன தெரியுமா.?

குரு எனும் வார்த்தைக்கு இரண்டு எழுத்துகள்தான். ஆனால், இந்தியாவை ஆன்மிக பூமியாக அடையாளப்படுத்துவது இந்த ஒரு வார்த்தைதான். ‘‘கோவிந்தன் கைவிட்டால் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால்,குரு கைவிட்டால் வழியே இல்லை’’ என்று கபீர்தாசர் கூறுவார். குரு என்றால், இருட்டைப் போக்குபவர், கனமானவர் என்றும் பொருள்கள் உண்டு. குருவானவர் பெயர்ச்சி ஆவதைத்தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்கிறார்கள். அது சரி. குரு பெயர்கிறாரா? குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம் என்பது பலரின் சந்தேகக் கேள்விகள். நவகிரகங்களில் முழுமையான கிரகமான குரு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

இந்த குருவை வியாழ பகவான், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். இவரே தேவர்களுக்கெல்லாம் குரு. இந்த தேவகுருக்கு குருவாக, ஆதி குருவான தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இதனை நன்கு தெரிந்து கொண்ட ஆன்றோர்கள் குருபெயர்ச்சியின் போது நேரடியாக தட்சிணாமூர்த்தியையே வணங்கினர். நவகிரக குருவிற்கு உண்டான மஞ்சள் நிற ஆடையையும் கொண்டைக் கடலை நிவேதனம் உள்ளிட்ட சகல பரிகாரங்களையும் தட்சிணாமூர்த்திக்கே செய்தனர். நவகிரக கிரகத்தின் குருத்வத்திற்கு அதாவது, குரு தன்மைக்கு மோன தட்சிணாமூர்த்தியின் பேரருளே காரணம். அதனால்தான் தட்சிணாமூர்த்தியை வணங்குகிறோம்.

பொதுவாக குரு பெயர்ச்சியின் போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தலங்கள் மட்டுமே குருத் தலங்களாக திகழ்கின்றன. ஆலங்குடி, தென்குடித் திட்டை, சென்னை-பாடி, திருப்புலிவனம் ஆகியவை தனிச் சிறப்பு கொண்டவை. அப்படிப்பட்ட குருத் தலங்களுள் மூன்றாவதாக தக்கோலம் ஜலநாதீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. தற்போது தக்கோலத்தை குரு பரிகாரத் தலமாகவே பக்தர்கள் அறிந்துள்ளனர். காரணம், இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அத்தனை அற்புதமானது. தேவர்களின் குருவாகிய வியாழ பகவானின் தம்பி சம்வர்த்த முனிவர் இங்கு வழிபட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்.

ஆனால், தலபுராணமோ தேவலோகப் பசுவான காமதேனுவின் சாபத்துக்கு உட்பட்ட வியாழ பகவானின் தம்பியாகிய உததி முனிவர், இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார் என்கிறது. உததி முனிவரும் சம்வர்த்த முனிவர் ஒருவரே என்ற கருத்தும் நிலவுகிறது. சில கோயில்களில் மூலவரைவிட பரிவார, கோஷ்ட தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. உதாரணமாக திருநள்ளாறு தலத்தில் மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரரைவிட சனி பகவானுக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் அதிகம். இது ஈசனே தனக்கு இணையாக பரிவார தெய்வங்களை உயர்த்தி அழகு பார்க்கிறார் என்பதனால்தான்.

அதுபோலவே இந்த ஜலநாதீஸ்வரர் ஆலயத்திலும் மோன மூர்த்தமாக தட்சிணாமூர்த்தி முன்னிறுத்தப்படுகிறார்
கருவறை கோஷ்டத்தில் தனி சந்நதியில் குருபகவான் அருள்பாலிக்கிறார். உருவமைப்பை பார்த்தவுடனே பிரமிப்பு தோன்றும். அத்தனை நுணுக்கங்களோடு பகவானின் திருவுரு திகழ்கிறது. விழுதுகளோடு கூடிய ஆலமரத்தின் அடியில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். காற்றடித்தால் அந்த ஆல இலைகள் அசையுமோ எனும் அளவுக்கு நிஜம் போன்ற தோற்றம்! வழக்கமான தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் யோக நிலையில் இருக்கும். தமது ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருப்பார். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில் தமது வலக் காலைச் சற்று வளைத்து கீழே ஊன்றிய நிலையிலும் இடது காலை மடக்கி பீடத்தின் மீதும் வைத்துள்ளார். வலது பின் கையில் அக்க மாலை. இந்த அமைப்பை உத்கடி ஆசனம் என்கின்றனர்.

சீடர்களை ஆட்கொண்டருளும் அடக்கியாளும் கண்டிப்போடு வழிப்படுத்தும் முறை என்று பல கோணங்களில் விவரிக்கிறார்கள். அதேசமயம் தலையை சற்றே சாய்த்து பார்க்கும் லாவண்யம் அபூர்வமானது. பொங்கி வழியும் ஞானத் திருமுகம். அதில் எல்லை காணா வானம்போல சாந்தம், அமைதி! விக்ரகம் கல் என்ற உண்மை மறைந்து ஞான உணர்வு எட்டிப் பார்க்கிறது. திருமுகத்தில் மெலிதான, அகலாத புன்னகை தரிசிப்போரின் நெஞ்சில் குளுமையை பரப்புகிறது. ஜென்ம ஜென்மங்களாய்த் தொடரும் வினைகள் சிதறுண்டு போகின்றன.

கழுத்தில் சவடி என்றழைக்கப்படும் சரடும், அழகான வேலைப்பாடுகளோடு கூடிய சரப்பளி கழுத்தணியும் நெளிந்து படர்ந்து அழகூட்டுகின்றன. இடது பின் கையில் தீப்பந்தமும் அதிலிருந்து வெளிப்படும் தீ ஜுவாலையும் நமக்குள் ஞானாக்னியை கொழுந்துவிட்டெறியச் செய்கிறது. காட்டில் அமர்ந்திருப்பதால் அவரது கால்களுக்கு அருகே மான்கள், பாம்பு... இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் காண முடியாது. இங்கு குருபகவான் பேசாமல் பேசுகிறார். மௌனத்தினாலேயே ஞானப் பிரகடனம் செய்கிறார், என்று உபநிஷதம் கூறுகிறது. அந்த மௌனம் இங்குதான், இங்குதான் நிலவுகிறது.

வாழ்வில் பிரச்னைகள், கிரக தோஷங்கள் எல்லாம் இந்த சந்நதிக்கு முன்பு எம்மாத்திரம்! வேண்டிக்கொள்ள வந்தவர்கள் வெறும் மௌனத்தை சுமந்து செல்வார்கள். கண்டும் வணங்கியும் எதுவும் வேண்டாமலேயே திரும்பி விடுவர். ஏனெனில், அங்கு ஞானப் பேராறு பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறது. அதன்முன்பு நின்று குவளை நீர் கேட்க யாருக்கும் மனம் வராது.

கோயிலின் தலபுராணம் என்ன?

ஈசனை மாப்பிள்ளையாகப் பெற்றும் கூட தட்சனுக்கு அகங்காரத்தை அறுக்கத் தெரியவில்லை.  திடீரென்று பெரிய யாகம் செய்தான். அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்க அவர்கள் குழுமியிருந்தார்கள். ஆனால், பிரபஞ்சத்தின் மையச் சக்தியான ஈசனை வேண்டுமென்றே அவன் அழைக்கவில்லை. வேதங்களில் ஈசனைக் குறிக்கும் சப்தங்களை தட்சன் வேண்டுமென்றே தவிர்த்தான். மற்ற எல்லா தேவர்களையும் சப்த ரூபமாக அழைத்தான். ஹோமத் தீயில் அவர்களுக்கு உரித்தானதை ஆகுதியாகக் கொடுத்தான். வேதங்களெல்லாம் யக்ஞம் செய்வதாலேயே ஈசனின் நிலையை ஒருவன் அடைகிறான் என்று கோஷிக்கின்றன. ஆனால், அதே யக்ஞத்தை செய்யும்போது தட்சன் முட்டாள்தனமாக ஈசனை அழையாமல் தவிர்த்தான்.

தட்சன் தாட்சாயிணியையும் வெளியேறும்படி கூறினான். ஆனால், அவளோ அங்கிருந்த யாக குண்டத்தில் இறங்கி யோகாக்னியால் தன்னை எரித்துக் கொண்டாள். ஈசனின் கோபம் பன்மடங்கு கூடியது. அவருக்குள்ளிருந்து வீரபத்திரர் வெளிப்பட்டு தட்சனின் யாகத்தையே சிதைத்தார். தட்சனின் தலையை சீவியெறிந்து ஆட்டின் தலையை பொருத்தினார். அப்போது தக்கன் ஓலமிட்டான். தக்கன் இப்படி ஓலமிட்டதால் இத்தலம் தக்கோலம் என்றழைக்கப்பட்டது. தக்கனின் அகங்காரம் சிதைந்து சத்வ குணம் பெருகியது. ஈசனின் ஆணைப்படியே சீர நதிக்கரையின் ஓரமான இத்தலத்தில் அமர்ந்து ஈசனை பூஜித்தான். ஆட்டின் தலை பொருத்தப்பட்டதால் ஆடு கத்தும் ஒலியாகிய ‘‘மே... மே...’’ என்னும் சமகத்தை சொல்லி பூஜித்தான்.

இது ருத்ரத்தோடு சேர்ந்து வரும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை மந்திரங்கள் கொண்டது. தக்கன் வழிபாடு செய்த இத்தலத்திற்கும் பார்வதி தேவி வந்து பூஜித்தாள். அருகேயுள்ள ஆற்றில் வெள்ளம் வந்து லிங்கத்தை அடித்துச் செல்ல முயன்றபோது தேவி தமது இரு கரங்களால் லிங்கத்தை அணைத்து வெள்ளத்திலிருந்து தடுத்தார். நீருற்றின் வடிவமாக இத்தல இறைவன் விளங்குவதால் திருவூறல் என்றே தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகிறது. ஜலநாதீஸ்வரர் என்று வடமொழி கூறுகிறது. தக்கனின் தீந்தவமோ என்னவோ, அக்கினிக் கோளமொன்று கருவறையில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜலநாதீஸ்வரர் என்றே இவருக்குப் பெயர். நீருக்குள் நெருப்பாக ஈசன் இருக்கிறார் என்பது வேத வாக்கியம்.  அது இத்தலத்தில் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

அம்பாள் கிரிராஜகன்னிகாம்பாள் என்றழைக்கப்படுகிறாள். ‘‘என் தந்தை தவறு செய்து விட்டார். உங்களின் பேச்சைக் கேட்காமல், தங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கத்தான் அந்த யாகத்துக்குச் சென்றேன்’’ என்கிற பரிதவிப்பை அம்பாளின் திருமுகத்தில் இன்றும் காணலாம். தனிச் சந்நதியில் பேரருளோடு கணவனைக் கண்ட திருப்தியோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். உததி முனிவரின் ஜீவசமாதியென்றும் அவர் பூஜித்தது என்றும் சொல்லப்படும் சிவலிங்கம் ஒன்று குருபகவானுக்கு அருகேயே சற்று உள்ளடங்கியதுபோல இருக்கிறது. தரிசிக்க தரிசிக்க தெவிட்டாத தனியமுதாக இக்கோயில் விளங்குகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலிருந்து பேரம்பாக்கம் வழியாகவும் அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்

..............................................................................
02-08-2016 அன்று அதிசயம்

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குலத்தில் சங்கு பிறக்கும்போது என்ன நிகழும்?

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரில் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலட்சதீப திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (02/08/16) நடைபெறவுள்ளது.

ஓம்  நமசிவாய.  திருசிற்றம்பலம்

வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்
--------------------------------------
'தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே.'
-திருஞானசம்பந்தர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலமான இது செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்தது. தினமும் உச்சி வேளையில் கழுகுகள் வந்து பிரசாதம் உண்ணும் மலைக்கோயில் என்று பிரசித்து பெற்றதாகும் இது.

சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில் என்று கூறுவர்.

தலபுராணம்

சாருப்ய பதவிக்காக தவம் இருந்த பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள், நஞ்சுண்டான் வரமருள நேரில் வருகையில் நா தவறி சாருப்ய என்பதற்கு பதில் கழுகு எனப் பொருள்படும் சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறி, யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு பிரசாதம் உண்டு செல்வதாக ஐதீகம்.

இந்திரன் பூஜித்த இத்தலத்தில் இன்றும் அவன் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுவதாகவும், இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகவும் மறுநாள் கருவறை திறக்கும்போதும் தாங்கவொண்ணா வெப்பமாக இருக்கும் என்றும் கூறுவர்.

வேதமே கிரியாக (மலையாக) அமைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் வேதகிரீஸ்வரர் என்று வழங்கப்பெறுகிறார். பக்தவத்சலேஸ்வரர் என்னும் பெயரும் கொண்டிருக்கிறார்.தாயாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும்.

அப்பன் மட்டுமன்றி அம்மையும் இங்கு சுயம்புவானவள் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

தலச்சிறப்பு

கடலில் மட்டுமே கிடைப்பதான வலம்புரிச் சங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தலத்துத் திருக்குளத்தில் கிடைக்கப் பெறுகிறது. இது மார்க்கண்டேய தீர்த்தம் என்று ஆடி பதினெட்டு... பதினெட்டாம் பெருக்கு என்றெல்லாம் நதிக்கரைகளில் விசேஷமாகக்
கொண்டாடுவார்கள். அது என்ன 18?

18 என்ற எண் "ஜயத்தை'.... அதாவது வெற்றியைக் குறிக்கும். அதை முன்னிட்டே காவிரிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள். ""காவிரி இன்றேல், தமிழகத்திற்கு அருளாதாரமும் இல்லை... பொருளாதாரமும் இல்லை...'' என்பார் வாரியார் சுவாமி.
அனைவரையும் வாழ வைக்கும் அந்தக்காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவே,
"ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த விழா எப்படி கொண்டாடப்பட்டது தெரியுமா?
ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள்.
அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி
என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். ஆற்றங்கரையை அடைய மூன்று மணி நேரமாகும். அங்கே தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்....பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.

வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள்.அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.

இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. அ@தŒமயத்தில் சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்
.
தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதைப் போல இருக்கும் இந்தக் காட்சி.
சிறுவர்கள் இவ்வாறு குதூகலிக்க, வாலிபர்களோ.... கரையில் இருக்கும் மரங்களின் மீதேறி ஆற்று வெள்ளத்தில் குதித்துக் கும்மாளமிடுவார்கள்.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள்.
அனைவரையும் வாழ வைக்கும் காவிரித் தாயை வழிபட்டு நன்றி செலுத்துதல், குடும்ப ஒற்றுமை, ஊர் ஒற்றுமை, குதூகலமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவுவதற்கு ஆடிப்பெருக்கு விழா தூண்டுகோலாக இருக்கிறது. இனியேனும், தண்ணீருக்கு மரியாதை கொடுப்போம். ஆறுகளைச் சுத்தமாக்குவோம். ஆடிப்பெருக்கன்று பழைய களை கட்டட்டும்!
-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. வணக்கம் குருவே!
    ஆஹா,அபாரம்!ஒரு சொற்பொழிவைக்
    கேட்டது போல் இருந்தது!ஒரே மூச்சில் படிக்க வேண்டி இருந்தது.ஏனெனிவ்,அத்தனையும் சத்தான விஷயங்கள்!

    இன்று (2-8-2016) நடைபெறும் அதிசயம் ஆனால் உன்மை!

    இன்று 2- 8- 2016 ஒரே நாளில் ஆறு சிறப்புகள்!

    1- ஆடி அமாவாசை
    2- ஆடி பெருக்கு ஆடி 18.
    3- குரு பெயர்ச்சி
    4- திருக்கழுக்குன்றம பனிரென்டு வருடம் ஒரு முறை நிகழும் அதிசயம்
    5- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
    6 - ஆடிசெவ்வாய்
    1 முதல் 4 வரை ஒவ்வொரு முக்கியத்துவத்தையும் மிகத் தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது!
    பல விஷயங்கள் அறியப்பட வேண்டி யவை!
    5 மற்றும் 6 பற்றிய முக்கியத்துவத்தையும் கொடுக்கப்படவில்லை!?ஒருவேளை கட்டுரை நீளம் மற்றும் த(எ)ங்கள்
    நேரம்/பொறுமை காரணமாயிருக்கலாம்!
    ஆயினும், இத்தனை விஷயங்களை இந்நாளில் பகிரந்தமைக்கு நன்றி வாத்தியாரையா!

    ReplyDelete
  2. Respected sir,

    Thank you for your Long Long message about AADI 18, AMAVASI, etc. Really, great sir. We are blessed by the God to read your stories, messages, etc in this modern world. Really, we are happy to read all your writings. You are spending time to give this information to the world that too to the tamil community. LIVE LONG, LOGN, LONG.................

    WITH KIND REGARDS,

    VISVANATHAN N

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் .சங்கு பிரப்பு இன்ருதான் அரிந்தேன் .மிக்க நன்ரி.ஒம் நமசிவாய.

    ReplyDelete

  4. The last Sangu emerged on 1-09-2011.How can it emerge now .Only five years have gone
    K.Mahadevan

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்!
    அருமையான பதிவு.
    குரு பெயர்ச்சி நன்நாளில் குருவை(வாத்தியார்) வணங்கி மகிழ்கிறேன்.

    ReplyDelete
  6. நிறைவான விஷயங்கள்.... அருமை ஐயா...

    ReplyDelete
  7. குருவே வணக்கம்...

    ReplyDelete
  8. குரு வணக்கம், மிகுந்த சிரத்தையுடன் மாணாக்கர்களுக்காக போட்ட நீண்ட பதிவில்,பல அபூர்வமான செய்திகள்.நன்றி.

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆஹா,அபாரம்!ஒரு சொற்பொழிவைக்
    கேட்டது போல் இருந்தது!ஒரே மூச்சில் படிக்க வேண்டி இருந்தது.ஏனெனிவ்,அத்தனையும் சத்தான விஷயங்கள்!
    இன்று (2-8-2016) நடைபெறும் அதிசயம் ஆனால் உன்மை!
    இன்று 2- 8- 2016 ஒரே நாளில் ஆறு சிறப்புகள்!
    1- ஆடி அமாவாசை
    2- ஆடி பெருக்கு ஆடி 18.
    3- குரு பெயர்ச்சி
    4- திருக்கழுக்குன்றம பனிரென்டு வருடம் ஒரு முறை நிகழும் அதிசயம்
    5- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
    6 - ஆடிசெவ்வாய்
    1 முதல் 4 வரை ஒவ்வொரு முக்கியத்துவத்தையும் மிகத் தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது!
    பல விஷயங்கள் அறியப்பட வேண்டி யவை!
    5 மற்றும் 6 பற்றிய முக்கியத்துவத்தையும் கொடுக்கப்படவில்லை!?ஒருவேளை கட்டுரை நீளம் மற்றும் த(எ)ங்கள்
    நேரம்/பொறுமை காரணமாயிருக்கலாம்!
    ஆயினும், இத்தனை விஷயங்களை இந்நாளில் பகிரந்தமைக்கு நன்றி வாத்தியாரையா!/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  10. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you for your Long Long message about AADI 18, AMAVASI, etc. Really, great sir. We are blessed by the God to read your stories, messages, etc in this modern world. Really, we are happy to read all your writings. You are spending time to give this information to the world that too to the tamil community. LIVE LONG, LOGN, LONG.................
    WITH KIND REGARDS,
    VISVANATHAN N/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  11. /////Blogger Mera Balaji said...
    அருமையான விளக்கம் .சங்கு பிறப்பு இன்றுதான் அரிந்தேன் .மிக்க நன்றி.ஒம் நமசிவாய./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger Mahadevan Krishnaswamy said...
    The last Sangu emerged on 1-09-2011.How can it emerge now .Only five years have gone
    K.Mahadevan//////

    அது தெரியவில்லை. கோயில் நிர்வாகத்தின் கணக்குப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றுதான் அறிகிறேன்!

    ReplyDelete
  13. //////Blogger Somasundaram said...
    குருவிற்கு வணக்கம்!
    அருமையான பதிவு.
    குரு பெயர்ச்சி நன்நாளில் குருவை(வாத்தியார்) வணங்கி மகிழ்கிறேன்./////

    உங்களின் மேலான அன்பிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger பரிவை சே.குமார் said...
    நிறைவான விஷயங்கள்.... அருமை ஐயா.../////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  15. ////Blogger Santhanam Raman said...
    குருவே வணக்கம்../////

    வணக்கம். நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger adithan said...
    குரு வணக்கம், மிகுந்த சிரத்தையுடன் மாணாக்கர்களுக்காக போட்ட நீண்ட பதிவில்,பல அபூர்வமான செய்திகள்.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com