15.7.16

கடவுளே வாத்தியாராக வந்தால் எப்படி இருக்கும்?


கடவுளே வாத்தியாராக வந்தால் எப்படி இருக்கும்?

ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜை

நமக்கு, ‘அ, ஆ’ எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு; அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம். கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம் செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா… அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்; அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் சபையில், அமைச்சராக இருந்தார். மன்னரின் படைக்கு, குதிரை வாங்கும் பணி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும் பணத்துடன் கிளம்பிச் சென்ற போது, வழியில் புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறை என்னுமிடத்தில், மந்திர ஒலி கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, குருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். அவரிடம், தன்னை சீடராக ஏற்று உபதேசமளிக்கும்படி வேண்டினார், மாணிக்கவாசகர்.

குருவும் அவருக்கு தீட்சை அளித்தார். சற்று நேரத்தில் குரு மறைந்து போக, ‘சிவபெருமானே குருவாக வந்து, தனக்கு உபதேசம் அளித்துள்ளார்…’ என புரிந்து, உள்ளம் உருகி பாடினார்; அதுவே, திருவாசகம்.

குதிரை வாங்குவதற்காக வைத்திருந்த பணத்தை, சிவாலய பணிக்கு செலவிட்டார்.

இதையறிந்த மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார். பக்தனின் பெருமையை உலகிற்கு உணர்த்த, நரிகளை, பரிகளாக்கி, அதை, மதுரை மன்னனிடம் ஒப்படைத்தார், சிவபெருமான். ஆனால், அன்று இரவில், அக்குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டித்தான்.

அப்போது, வைகையில் வெள்ளம் வரச் செய்தார் சிவன். ஊருக்குள் வெள்ளம் வந்து விடும் என பயந்த மன்னர், ஆற்றங்கரையை உயர்த்த, வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வரும்படி உத்தரவிட்டார். வந்தி எனும் முதிய சிவபக்தைக்காக, கூலியாளாக வந்து வேலை செய்தார், சிவபெருமான்.

ஒரு கட்டத்தில், ஒரு மரத்தடியில் களைத்து தூங்குவது போன்று பாவனை செய்தார், எம்பெருமான். அங்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்குபவரைப் பார்த்ததும், அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி, உலகில் உள்ள எல்லா உயிர்களின் மீதும் விழ, வந்திருப்பது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட மன்னர், மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டார்.

பக்தருக்காக, கடவுள் அடி வாங்கியுள்ளார் என்றால், அது மாணிக்க வாசகருக்காகத் தான்!

திருப் பெருந்துறையில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்கவாசகருக்கு சன்னிதி உள்ளது. மற்ற கோவில்களில் சிவனுக்கே உற்சவம் நடக்கும். இங்கே மாணிக்கவாசகருக்குத் தான் உற்சவம் நடக்கிறது. இதை, பக்தோற்ஸவம் (பக்தனுக்கு நடத்தும் விழா) என்பர். ஆனி மகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும்.

பக்தியுள்ளவர்களுக்கு சோதனை வருவது இயற்கை; இறைவன் அதிலிருந்து விடுதலை தருவான் என்ற நம்பிக்கையோடு, அதைத் தாங்கும் பக்குவத்தைப் பெற்று விட்டால், இறைநிலையையே அடைந்து விடலாம் என்பதற்கு, மாணிக்கவாசகரின் வரலாறு உதாரணம்.
========================================================================
மாணிக்கவாசகர் வழிபட்ட கோயிலின் தல புராணம்:
http://shaivam.org/siddhanta/sp/spt_t_tirupperunturai.htm
========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. அன்பு ஆசிரியரே!,

    சிவபெருமானே.. ஆசிரியராக வந்த அது அளவிட முடியா பாக்கியம். திருப்பெருந்துறை செல்ல ஆசை. திருவாசகத்தை சிறு வயதில் படித்துள்ளேன், ஆனால் இளையராஜா சிம்பனி(Symphony) இசையில் கேட்கும் போது, இன்னும் இனிமை. குறைந்தது 1000 முறையாவது கேட்டு உருகியுள்ளேன்.!
    நமசிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க்..! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க..!
    ஆகமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க்.!
    ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க..!
    நல்ல பதிவு. நன்றி!

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Very nice Sir.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. /////Blogger Selvam R said...
    அன்பு ஆசிரியரே!,
    சிவபெருமானே.. ஆசிரியராக வந்த அது அளவிட முடியா பாக்கியம். திருப்பெருந்துறை செல்ல ஆசை. திருவாசகத்தை சிறு வயதில் படித்துள்ளேன், ஆனால் இளையராஜா சிம்பனி(Symphony) இசையில் கேட்கும் போது, இன்னும் இனிமை. குறைந்தது 1000 முறையாவது கேட்டு உருகியுள்ளேன்.!
    நமசிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க்..! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க..!
    ஆகமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க்.!
    ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க..!
    நல்ல பதிவு. நன்றி!//////

    நல்லது. உங்களின் அனுபவப்பகிர்விற்கு நன்றி செல்வம்!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,நல்ல பதிவு.நன்றி.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு ஐயா...

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    பக்தர்கட்கு இறைவன் திருவுளம் இரங்கி திருவருள் புரிவான் என்பதற்கு
    இது ஒரு சாட்சியும் காட்சியும் ஆகும்! ஆனால்,நமது பத்தி மனம் ஒன்றி உருகியதாய் இருக்கு வேண்டும், என்பதும் நியதியல்லவா!?

    ReplyDelete
  7. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நல்ல பதிவு.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  8. ////Blogger பரிவை சே.குமார் said...
    அருமையான பகிர்வு ஐயா...////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பக்தர்கட்கு இறைவன் திருவுளம் இரங்கி திருவருள் புரிவான் என்பதற்கு
    இது ஒரு சாட்சியும் காட்சியும் ஆகும்! ஆனால்,நமது பத்தி மனம் ஒன்றி உருகியதாய் இருக்கு வேண்டும், என்பதும் நியதியல்லவா!?////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com