30.12.15

பணப் பரிவர்த்தனைக்குத் தனி வங்கிகள் வரப்போகின்றன!

பணப் பரிவர்த்தனைக்குத் தனி வங்கிகள் வரப்போகின்றன!

பேமெண்ட் வங்கிகள் (PAYMENT BANKS) என்றால் என்ன... எப்படி செயல்படும்?

ரிலையன்ஸ், ஏர்டெல். வோடஃபோன், ஆதித்ய பிர்லா உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவ்வங்கிகள் செயல்பாட்டுக்கு வந்தால் கிராமப்புற அளவில் வங்கி சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேமெண்ட் வங்கி என்றால் என்ன?

பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கான உரிமம் பெற்ற ஒரு நிறுவனம், வாடிக்கையாளர்களிடமிருந்து ( ஆரம்பத்தில் நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை) டெபாசிட்டுகளை பெறலாம். மேலும் இண்டர்நெட் பேங்கிங், பண பரிமாற்ற வசதி, இன்சூரன்ஸ் விற்பனை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சேவைகளை அளிக்கலாம்.

பேமெண்ட்வங்கியின் நோக்கம் என்ன?

பேமெண்ட் வங்கி அமைக்கப்படுவதினால் நிதி பரிவர்த்தனை நடவடிக்கைகள் மேலும் அதிகமாகும். குறிப்பாக சேமிப்பு கணக்குகள், பேமண்ட்ஸ் மற்றும் ரெமிட்டன்ஸ் (remittance) சேவைகள் கூலித்தொழிலாளர்கள், குறைந்த வருவாய் உடையோர், சிறிய வியாபாரிகள் மற்றும் இதர அமைப்பு சாரா துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கிடைக்கும்.

டெபிட்/கிரெடிட் கார்டு கிடைக்குமா?

கிரெடிட் கார்டு கிடைக்காது. ஆனால் பேமெண்ட் வங்கிகள் ஏடிஎம்/டெபிட் கார்டுகளை வழங்கும்.

பேங்கிங் முறைக்கு பேமண்ட் வங்கிகளின் பங்களிப்பு என்ன?

வழக்கமான வங்கிகளுக்கு மேலும் அதிகமான நிதி வருவதையும், கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு வங்கி சேவைகள் கிடைக்கவும் இதுபோன்ற பேமண்ட் வங்கிகள் உதவும். மேலும் தற்போது பேமெண்ட் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள், நாடு முழுவதும் உள்ள 1,54,000 தபால் அலுவலகங்களும் (1,30,000 கிராமப்புற தபால் அலுவலகங்கள் உட்பட) மக்களுக்கு வங்கி சேவைகள் அளிக்க வகை செய்யும்.

லோன் கிடைக்குமா?

இந்த பேமெண்ட் வங்கிகள் கடன் வழங்குதல் போன்ற சேவைகள் எதிலும் ஈடுபட ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் அனுமதிக்கவில்லை.எனவே லோன் பெற நினைப்பவர்கள் வழக்கமான வங்கிகளுக்குத்தான் செல்ல வேண்டும்.

குறை தீர்க்கும் அமைப்பு உண்டா?

நிச்சயம் உண்டு. பேமெண்ட் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க உயரதிகாரம் கொண்ட வாடிக்கையாளர்கள் குறை தீர்ப்பு அமைப்பு செயல்படும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரத்தை ஒட்டி இந்த வங்கியின் செயல்பாடுகள் அமைய உறுதி செய்யப்படுவதோடு, பேமண்ட் வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலும் வலையமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

முன்னதாக நேற்று தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டது.

சன்பாரமா் தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி, ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.

இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும். இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.

Payment Bank எந்த அளவு வங்கித் துறைக்கு பயனளிக்கும்?

நேற்று ரிசர்வ் வங்கி 11 நிறுவனங்களுக்கு Payment Bank என்ற புது விதமான வங்கி முறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பின்புலத்தை அறியும் போது இந்த வங்கி முறை நமது வங்கித் துறைக்கு பெருமளவு மாற்றத்தைக் கொடுக்கலாம் என்பதை அறியலாம்.

இந்தியாவில் வங்கிகளைப் பயன்படுத்தாமல் இருக்கும் நாற்பது சதவீத மக்களை வங்கித் துறைக்குள் நுழைக்கும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய முறையில் செயல்படும் வங்கிகள் ஒரு வங்கி கிளையை எளிதில் செல்ல முடியாத மலைவாழ் புறத்தில் திறக்க வேண்டுமானால் அதிக செலவாகும்.

ஆனால் அந்த செலவிற்கேற்ப டெபாசிட்கள் கிடைக்காது. லோன் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இதனால் நஷ்டத்திலே அந்த கிளை இயங்க வேண்டி வரும்.

இதனால் தான் தொலை தூர ஏரியாகளில் அரசு வங்கிகளே அதிகம் செயல்படுகின்றன. தனியார் வங்கிகள் மிகவும் குறைவே.
எவ்வளவு தூரம் அரசு வங்கிகளை வைத்து விரிவாக்கம் செய்ய முடியும் என்பது இந்தியா போன்ற பரந்த நாட்டில் ஒரு சந்தேகமே.

வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார அளவில் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது ரிசர்வ் வங்கி கென்யா போன்ற ஆப்ரிக்கா நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்திய ஒரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வியாபாரங்கள் மூலம் அதிக அளவு நுகர்வோர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மூலமாக வங்கித் துறைக்கு அதிக பயனாளிகளை சேர்ப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதனை கிட்டத்தட்ட பின்புற வாசல் வழியாக வங்கிகளின் பயன்களை மக்களுக்கு எடுத்து செல்வது என்றும் கருதிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஏர்டெல் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் நெட்வொர்க் உள்ளது. அதிக அளவில் பயனாளிகள் உள்ளனர். அதிக அளவில் சேவை மையங்கள் நாடு முழுவதும் வியாபித்துள்ளன.

அந்த சேவையையும், பயனாளிகளையும் வங்கித் துறைக்குள் இணைத்தால் என்ன? என்பது தான் இந்த Payment வங்கியின் முக்கிய ஐடியா.
இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதும் எளிது. புதிதாக கிளைகள் எதுவும் திறக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் பெருமளவு செலவு எதுவும் கிடையாது.

தங்கள் கஸ்டமர் தொடர்பான KYC விவரங்கள் ஏற்கனவே நிறுவனங்களிடம் உள்ளன. அந்த தகவல்கள் மட்டும் போதுமானது என்று சொல்லப்பட்டு உள்ளதால் பெரிய அளவில் காகித வேலைகள் இருக்காது.

இன்டர்நெட் வங்கி சேவை, டெக்னாலஜி போன்றவையே Payment வங்கி சேவைக்கு முக்கிய தேவையாக அமையும்.

இந்த வங்கி சேவை கொடுக்கும் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பிரதான வங்கியுடன் சேர்ந்து செயல்படும்.

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் எஸ்பிஐயுடன் இணைந்து செயல்படும். ஏர்டெல் கோடக் மகிந்திரா வங்கியுடன் இணைந்து செயல்படும். ஆனால் பிரதான வங்கிகளின் பங்கு சதவீதம் 30%க்கு மேல் இருக்க கூடாது.

இந்த Payment வங்கியால் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட் பெறலாம். அதனை தங்கள் சேவைகளுக்கு பணம் கட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த வங்கிகள் கடன் எதுவும் கொடுக்க அனுமதி இல்லை. நமது பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.

பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணம் இந்த வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக பார்க்கப்படும். இது தவிர டெபிட் கார்ட், ATM போன்றவையும் திறந்து கொள்ளலாம். இதனால் நிறுவனங்களுக்கு வருவாயை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பு.

ரிசர்வ் வங்கியின் CRR, SLR போன்றவை இந்த வங்கிகளுக்கும் உண்டு. ஆனால் இந்த பணத்தின் 75% பகுதியை பாதுகாப்பான அரசு பத்திரங்களில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் கூட்டிக் குறைக்கும் போது அந்த பலன் மக்களுக்கு சென்றடைவதில்லை. ஏனென்றால், பாதி பேர் வங்கித் துறையையே பயன்படுத்தவதில்லை.

அதனால் ரிசர்வ் வங்கி பணவீக்கம் இவ்வளவு குறையும் என்று காகிதத்தில் ஒன்றை எழுதலாம். ஆனால் நடைமுறையில் வேறாக இருக்கும்.

பெரும்பாலான மக்களை இவ்வாறு வங்கி சேவைகளில் இணைப்பதன் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் கணக்கீடு செய்வது எளிதாக அமையும்.

இது நீண்ட கால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

இது பற்றிய உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. அய்யா வணக்கம்.
    இவ்வங்கிகளின் செயல்பாடு பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்
    1) நாம் செலுத்தும் வைப்பு தொகைக்கு வட்டி உண்டு. பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து இது வழங்கப்படும்.
    2) நாம் செலுத்தும் வைப்பு தொகையினை நமது சேவைகளுக்கு பணம் கட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணம் இந்த வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக பார்க்கப்படும். அதன் காரணமாக சேவை கட்டணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயரும்.
    3) இத்துறையில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் நிச்சயம் தங்கள் சுய லாபத்திற்கு மக்களை சுரண்டுவார்கள் இதை அரசும் கண்டுகொள்ளாது இதன் காரணமாக சேவை கட்டணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயரும்.
    4) சேவை கட்டணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயரும் என்பதால் கட்டாயம் விலைவாசி உயர்வில் இது முக்கிய பங்காற்றும்.
    5) இத்துறையில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் நிச்சயம் தங்கள் சுய லாபத்திற்கு நிறைய கோல்மால் செய்வார்கள் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற செய்திகள் வரும் ஆனால் நமக்கும் நிறைய வேலை இருக்கும் என்பதால் இதை கண்டுகொள்ளமாட்டோம். நாம ரொம்ப பிஸி
    6) எதிர்காலத்தில் நமது சேவைகளுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் நடத்தும் வங்கி மூலம்தான் தொகை செலுத்த வேண்டும் என அரசு நடத்தும் அரசியல்வாதி அரசியலமைப்பு சட்டத்திலேயே மாற்றம் கொண்டுவருவான்
    7) மக்களுக்கு வழங்கும் சேவையில் தனியாரை எதில் நுழைக்கவேண்டும் எதில் நுழைக்கக்கூடாது என்பதில் அரசுக்கு தெளிவு வேண்டும் தனியார் கொடுக்கும் காசுக்கு அரசு நடத்தும் அரசியல்வாதி பணிவதால் வரும் விளைவு இது.
    8) அரசு நடத்தும் அரசியல்வாதியிடம் இதை கேட்டால் தேர்தலில் ஓட்டு வாங்க மக்களுக்கு கொடுக்க காசு வேண்டும் என்பார்கள்
    9) என்ன ஆனாலும் நாம் கண்டிப்பாக சொல்லவேண்டியது ஜெய் ஹிந்த் (இப்படியே நம்மை ஜெய் ஹிந்த் மயக்கத்திலேயே வைத்து கொள்வது அரசு நடத்தும் அரசியல்வாதிக்கு கைவந்த கலை. நாம் நாட்டை காப்பாற்றவேண்டும். ஆனால் அவன் இந்தியாவை காலி செய்வான்)
    10) அட போங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    இந்த வங்கிகள் கடன் அளிக்காததால்,கிராமப்புரங்களில்
    பெருமளவு இவ் வங்கிகள் வளர்வது கடினமே.

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தனியார் துறை!கவர்ச்சிகரமான திட்டங்கள்,அணுகுமுறைகள்!! நமக்குத்தெரியாமலே நம்மை,மக்களை கபளீகரம் செய்யும் திட்ட நடைமுறைகள்!!!
    உதாரணத்திற்க்கு, வரும் புத்தாண்டை முன்னிட்டு வோடபோன் திட்டத்தில் செயல்படும் எஸ்.எம்.எஸ் முறையில் இரண்டு நாட்களுக்கு கட்டணம் வசூலிக்கப் படுமாம்!.
    இதுதான் வியாபார தந்திரம்!! மக்கள் சேவையில் மகத்தான மகசூல் அறுவடை.
    பாதிக்கப் படப்போவது நடுத்தர வர்க்கமே!!
    இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  4. இந்தத் திட்டம் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதாக உள்ளது.

    அரசு உடைமை வங்கிகளிடம் தனியார் பெரு முதலாளிகள் பெற்றுள்ள கடனை அடைக்க வைக்காமல், மீண்டும் அவர்கள் கையில் வங்கித்துறையயே தாரை வார்ப்பது சரியா? வாராக்கடனை வர வைக்க அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.

    ReplyDelete
  5. அய்யா வணக்கம் .
    இந்த பேமண்ட் வங்கிகள் கிராமங்களில் மட்டும் இயங்கலாம்.
    தற்போது வங்கி சேவையை பயன்படுத்தாத கிராம்ப்புற மக்களை இதன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊக்கம் அளிக்க வேண்டும். எப்படியாயினும் தனியாருக்கு இதில் அனுமதி வழங்குவது கூடாது என்று நினைக்கிறேன்.இந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் வேறூன்றி உள்ள அஞ்சல் துறை மட்டுமே போதுமானது .
    அன்புடன் அரசு

    ReplyDelete
  6. ஐயா,
    slmsanuma சொன்ன கருத்துகள் எல்லாம் பொட்டில் அடிப்பது போல் உள்ளது.
    அதிலும் 3, 5, 9, 10ஆம் கருத்துகள் அருமையிலும் அருமை, உண்மையிலும் உண்மை.

    ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றும் கூட்டத்துக்கு குறைவு இல்லை.
    இன்றைய அரசாங்கங்கள் எல்லாம் எங்கே மக்கள் நலனை குறி வைக்கிறார்கள்?
    (அநேக முன்னணி நாடுகள் எல்லாமே இதற்குள் அடக்கம்!,
    அதிலும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று விட்டதாகப் வெறுமே பீற்றிக் கொள்ளும் நாடுகளும்
    விதிவிலக்கல்ல. நீங்கள் சொல்வது போல் எல்லா நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் 337 தான்!!! எல்லா மண்ணிலும் நம்மைப் போல் நிறைந்த ஏமாளிகள் உண்டு. அவர்களை வைத்துத்தான் எல்லோரும் குதிரையோடிக் கொண்டிருக்கின்றனர். இல்லையென்றால் ஏழை நாடுகளை ஏன் இன்னமும் ஏமாற்றி பிழைக்கிறார்!)
    இதெல்லாம் வியாபார தந்திரமே. ஒன்றை செல்லுபடியாக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமோ அதை திறமாக எல்லா அரசுகளுமே செய்து கொண்டிருக்கின்றன.
    மேலே சொன்னவர் கருத்துப் போல்; மக்களை நன்றாக பிஸியாக எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும்
    இந்த அரசுகளுக்கு கை வந்த கலை. அப்படிஎன்றால் தான் யாரும் சுயமே சிந்திக்க நேரமில்லாது, ஏதோ செய்யட்டும், எதுவோ நடக்கட்டும் என்று இருந்து, பின் மீளவும் முடியாமல், மாளவும் முடியாமல் திணறி திண்டாடுவது.
    உள்ளதையும் கெடுத்ததாம் குட்டிச்சாத்தான். இனி கிராமமும் அந்த மக்களும் உருப்பட்டால் போல் தான்!

    ReplyDelete
  7. ///////Blogger slmsanuma said...
    அய்யா வணக்கம்.
    இவ்வங்கிகளின் செயல்பாடு பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்
    1) நாம் செலுத்தும் வைப்பு தொகைக்கு வட்டி உண்டு. பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து இது வழங்கப்படும்.
    2) நாம் செலுத்தும் வைப்பு தொகையினை நமது சேவைகளுக்கு பணம் கட்டவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பணம் அனுப்பும் போது வசூலிக்கப்படும் கட்டணம் இந்த வங்கிகளுக்கு முக்கிய வருமானமாக பார்க்கப்படும். அதன் காரணமாக சேவை கட்டணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயரும்.
    3) இத்துறையில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் நிச்சயம் தங்கள் சுய லாபத்திற்கு மக்களை சுரண்டுவார்கள் இதை அரசும் கண்டுகொள்ளாது இதன் காரணமாக சேவை கட்டணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயரும்.
    4) சேவை கட்டணம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உயரும் என்பதால் கட்டாயம் விலைவாசி உயர்வில் இது முக்கிய பங்காற்றும்.
    5) இத்துறையில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் நிச்சயம் தங்கள் சுய லாபத்திற்கு நிறைய கோல்மால் செய்வார்கள் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற செய்திகள் வரும் ஆனால் நமக்கும் நிறைய வேலை இருக்கும் என்பதால் இதை கண்டுகொள்ளமாட்டோம். நாம ரொம்ப பிஸி
    6) எதிர்காலத்தில் நமது சேவைகளுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடஃபோன், டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் போன்ற நிறுவனங்கள் நடத்தும் வங்கி மூலம்தான் தொகை செலுத்த வேண்டும் என அரசு நடத்தும் அரசியல்வாதி அரசியலமைப்பு சட்டத்திலேயே மாற்றம் கொண்டுவருவான்
    7) மக்களுக்கு வழங்கும் சேவையில் தனியாரை எதில் நுழைக்கவேண்டும் எதில் நுழைக்கக்கூடாது என்பதில் அரசுக்கு தெளிவு வேண்டும் தனியார் கொடுக்கும் காசுக்கு அரசு நடத்தும் அரசியல்வாதி பணிவதால் வரும் விளைவு இது.
    8) அரசு நடத்தும் அரசியல்வாதியிடம் இதை கேட்டால் தேர்தலில் ஓட்டு வாங்க மக்களுக்கு கொடுக்க காசு வேண்டும் என்பார்கள்
    9) என்ன ஆனாலும் நாம் கண்டிப்பாக சொல்லவேண்டியது ஜெய் ஹிந்த் (இப்படியே நம்மை ஜெய் ஹிந்த் மயக்கத்திலேயே வைத்து கொள்வது அரசு நடத்தும் அரசியல்வாதிக்கு கைவந்த கலை. நாம் நாட்டை காப்பாற்றவேண்டும். ஆனால் அவன் இந்தியாவை காலி செய்வான்)
    10) அட போங்கப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!/////

    அருமை. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Sakthi- 2014 said...
    வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    இந்த வங்கிகள் கடன் அளிக்காததால்,கிராமப்புரங்களில்
    பெருமளவு இவ் வங்கிகள் வளர்வது கடினமே./////

    இல்லை. அதற்கெல்லாம் அவர்கள் ஆகாத போகாத திட்டங்கள் எதையாவது வைத்திருப்பார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம். நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    தனியார் துறை!கவர்ச்சிகரமான திட்டங்கள்,அணுகுமுறைகள்!! நமக்குத்தெரியாமலே நம்மை,மக்களை கபளீகரம் செய்யும் திட்ட நடைமுறைகள்!!!
    உதாரணத்திற்க்கு, வரும் புத்தாண்டை முன்னிட்டு வோடபோன் திட்டத்தில் செயல்படும் எஸ்.எம்.எஸ் முறையில் இரண்டு நாட்களுக்கு கட்டணம் வசூலிக்கப் படுமாம்!.
    இதுதான் வியாபார தந்திரம்!! மக்கள் சேவையில் மகத்தான மகசூல் அறுவடை.
    பாதிக்கப் படப்போவது நடுத்தர வர்க்கமே!!
    இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.///////

    உங்கள் கருத்துத்தான் எங்கள் கருத்தும். கருத்துப் பகிர்விற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    namakku yenna payan////////

    அதை நீங்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. //////Blogger kmr.krishnan said...
    இந்தத் திட்டம் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பதாக உள்ளது.
    அரசு உடைமை வங்கிகளிடம் தனியார் பெரு முதலாளிகள் பெற்றுள்ள கடனை அடைக்க வைக்காமல், மீண்டும் அவர்கள் கையில் வங்கித்துறையயே தாரை வார்ப்பது சரியா? வாராக்கடனை வர வைக்க அரசு நடவடிக்கை எடுக்கட்டும்./////

    வாராக் கடனை வசூலிக்க எந்த நடவடைக்கை எடுத்தாலும், அது கைகொடுக்காது என்பதுதான் இதுவரை நாம் கற்றுக்கொண்ட அனுபவம்! வங்கிகளில் வேலை செய்யும் நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்!

    ReplyDelete
  12. /////Blogger ARASU said...
    அய்யா வணக்கம் .
    இந்த பேமண்ட் வங்கிகள் கிராமங்களில் மட்டும் இயங்கலாம்.
    தற்போது வங்கி சேவையை பயன்படுத்தாத கிராம்ப்புற மக்களை இதன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊக்கம் அளிக்க வேண்டும். எப்படியாயினும் தனியாருக்கு இதில் அனுமதி வழங்குவது கூடாது என்று நினைக்கிறேன்.இந்தியா முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் வேறூன்றி உள்ள அஞ்சல் துறை மட்டுமே போதுமானது .
    அன்புடன் அரசு/////

    அஞ்சல் துறையில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கவில்லை. இருக்கிற ஊழியர்களை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே புதிய சேவைகள் எல்லாம் திணறும்!

    ReplyDelete
  13. /////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    slmsanuma சொன்ன கருத்துகள் எல்லாம் பொட்டில் அடிப்பது போல் உள்ளது.
    அதிலும் 3, 5, 9, 10ஆம் கருத்துகள் அருமையிலும் அருமை, உண்மையிலும் உண்மை.
    ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றும் கூட்டத்துக்கு குறைவு இல்லை.
    இன்றைய அரசாங்கங்கள் எல்லாம் எங்கே மக்கள் நலனை குறி வைக்கிறார்கள்?
    (அநேக முன்னணி நாடுகள் எல்லாமே இதற்குள் அடக்கம்!,
    அதிலும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று விட்டதாகப் வெறுமே பீற்றிக் கொள்ளும் நாடுகளும்
    விதிவிலக்கல்ல. நீங்கள் சொல்வது போல் எல்லா நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் 337 தான்!!! எல்லா மண்ணிலும் நம்மைப் போல் நிறைந்த ஏமாளிகள் உண்டு. அவர்களை வைத்துத்தான் எல்லோரும் குதிரையோடிக் கொண்டிருக்கின்றனர். இல்லையென்றால் ஏழை நாடுகளை ஏன் இன்னமும் ஏமாற்றி பிழைக்கிறார்!)
    இதெல்லாம் வியாபார தந்திரமே. ஒன்றை செல்லுபடியாக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமோ அதை திறமாக எல்லா அரசுகளுமே செய்து கொண்டிருக்கின்றன.
    மேலே சொன்னவர் கருத்துப் போல்; மக்களை நன்றாக பிஸியாக எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும்
    இந்த அரசுகளுக்கு கை வந்த கலை. அப்படிஎன்றால் தான் யாரும் சுயமே சிந்திக்க நேரமில்லாது, ஏதோ செய்யட்டும், எதுவோ நடக்கட்டும் என்று இருந்து, பின் மீளவும் முடியாமல், மாளவும் முடியாமல் திணறி திண்டாடுவது.
    உள்ளதையும் கெடுத்ததாம் குட்டிச்சாத்தான். இனி கிராமமும் அந்த மக்களும் உருப்பட்டால் போல் தான்!///////////

    உண்மைதான் சகோதரி. நமக்குத் தெரிகிறது. சராசரிக்கும் கீழே உள்ள மக்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்களை நெறிப்படுத்தவும் ஆளில்லை.
    கண்ண பரமாத்மா மறுபடியும் அவதாரம் எடுத்து வந்தால்தான் இந்தக் குளறுபடிக்கெல்லாம் தீர்வு ஏற்படும்!

    ReplyDelete
  14. குரு வந்தனம்.
    65 ஆண்டு காலத்தில் நடக்காத காரியங்கள் பல இந்த அரசு வந்தவுடன் நடக்கும் என்பது பகல் கனவு. நாங்களும்
    தனியார் வளரப் பாடுபடுவோம் எனபது போல உள்ளது, இவ்வறிவிப்பு!
    ஏற்கெனவே, நெட்வொர்க் விஷயத்தில் நாம் ஏர்டெல், ரிலையன்ஸ் கம்பெனிகளின் ஏமாற்று வேலைகளை நன்றாக அறிவோம். அவர்களிடமே பணப பரிமாற்றத்தையும் கொடுத்தால் மில்லியன் மக்களும் சூறையாடப்படுவர் என்பது உறுதி! ஆண்டவா,நல்ல காலம் வருமா?

    ReplyDelete
  15. /////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    65 ஆண்டு காலத்தில் நடக்காத காரியங்கள் பல இந்த அரசு வந்தவுடன் நடக்கும் என்பது பகல் கனவு. நாங்களும்
    தனியார் வளரப் பாடுபடுவோம் எனபது போல உள்ளது, இவ்வறிவிப்பு!
    ஏற்கெனவே, நெட்வொர்க் விஷயத்தில் நாம் ஏர்டெல், ரிலையன்ஸ் கம்பெனிகளின் ஏமாற்று வேலைகளை நன்றாக அறிவோம். அவர்களிடமே பணப பரிமாற்றத்தையும் கொடுத்தால் மில்லியன் மக்களும் சூறையாடப்படுவர் என்பது உறுதி! ஆண்டவா,நல்ல காலம் வருமா?//////

    இறைவன் எல்லாவற்றையும் விட பெரியவன். ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். நல்ல காலம் வரும்!

    ReplyDelete
  16. எந்த செயலையும் மக்கள் கருத்து மூலம் அரசோ அல்லது தலைமை வங்கியோ முடிவு எடுக்கவேண்டும்.
    அப்படி பட்ட செயல் சிறந்ததாக இருக்கும் .
    மக்கள் கருத்து பெற நிறைய வசதிகள் உள்ளன

    ReplyDelete
  17. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    எந்த செயலையும் மக்கள் கருத்து மூலம் அரசோ அல்லது தலைமை வங்கியோ முடிவு எடுக்கவேண்டும்.
    அப்படி பட்ட செயல் சிறந்ததாக இருக்கும் .
    மக்கள் கருத்து பெற நிறைய வசதிகள் உள்ளன/////

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இந்த விஷயத்தில் மக்களின் கருத்தைப் பெற்றார்களா என்பது மட்டும் தெரியவில்லை! நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com