1.7.13

Short story. சிறுகதை: அறிவுரை ஆனாரூனா

 

Short story.சிறுகதை: அறிவுரை ஆனாரூனா

வீடுகளுக்குப் பட்டப்பெயர் வைப்பதில் நகரத்தார்களுக்கு இணை நகரத்தார்கள்தான்.பட்டப்பெயரைக்கூட பட்டப்பெயர் என்று சொல்லாமல்
நாகரீகமாக அடையாளப் பெயர் என்றுதான் சொல்வார்கள்.வேறு சமூகங்களில் அப்படியில்லை.

அடையாளப் பெயர்கள் ஒரு வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு, முற்காலத்தில் அவர்கள் கொண்டு விற்ற ஊர்களின் பெயரை வைத்தோ அல்லது
இன்ஷியலில் உள்ள முதல் மூன்றடுக்கு எழுத்துக்களை வைத்தோ அல்லது வேறு காரணப் பெயராகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கும்.

ஆனால் நிச்சயம் இருக்கும்.

தாப்பா,ஈப்போ, கிளாங் என்று மலேசியாவில் உள்ள ஊர்களில் முன்பு வணிகம் செய்தவர்களின் வீடுகளுக்கு 'தாப்பா தணிகாசலம் செட்டியார் வீடு,
ஈப்போ இளையபெருமாள் வீடு, கிளான் கிருஷ்ணன் செட்டியார் வீடு என்று சுவாரசியமான அடையாளப் பெயர்கள் இருக்கும் அதோடு கவிதை
நயமாகவும் இருக்கும். அந்தப் பெயர்களில்கூட தமிழ் சொல்விளையாட்டு இருக்கும். தாலாட்டுக் கேட்டு வளர்ந்தவர்கள் இல்லையா - பெயர்களில்
ஒரு ரிதம் (Ritham) இருக்கும்

சில வீடுகளின் அடையாளப் பெயர்கள் வினோதமாக அல்லது வேடிக்கையாகக்கூட இருக்கும். எங்கள் ஊரில் சில வீடுகளுக்கு இரட்டை மரத்தார் வீடு, பலா மரத்தார் வீடு,ஓலைக்கூடையார் வீடு என்றெல்லாம் பெயர்கள் உண்டு.சொல்லிக்கொண்டே போகலாம்.

வீடுகளுக்கு என்று மட்டுமில்லை, மனிதர்களுக்கும் அடையாளப் பெயர் வைத்துவிடுவார்கள். எல்.ஐ.சி.(L.I.C) ஏகப்பன்,பாங்க் ஆஃப் மெஜுரா
பழநியப்பன், வட்டிக்கடை வள்ளியப்பன் என்று பலருக்கும் அடையாளப் பெயர்கள் உண்டு. ஒரே ஊரில் பத்து வள்ளியப்பன்கள் இருந்தால் எப்படி
வித்தியாசப் படுத்திச் சொல்வதாம்? அதனால்தான் அடையாளப் பெயர்கள்.

அப்படிப் பெயர் சூட்டப்பெற்றவர்தான் இந்தக்கதையின் நாயகர் அட்வைஸ் ஆனாரூனா. (ஆனாருனா என்பது அருணாசலம் என்ற பெயரின்
சுருக்கமாகும்)  அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நூறு சதவிகிதம் காரணப்பெயர்தான்.யாரைப் பார்த்தாலும், அவர்கள் கேட்காமலேயே அறிவுரைகளை அள்ளி வீசுவார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர் ஊர் மக்களால் வைக்கப்பெற்றது

எப்போதுமே கேட்டுக்கொடுத்தால்தான் பெருமை. அள்ளி வீசுவது சிறுமை. அதனால் அவருடைய அறிவுரைகளை உட்கார்ந்து கேட்பவர்களும்
உண்டு. அவரைப் பார்த்தவுடனேயே 'அறுப்பான்டா மனுஷன்' என்று சொல்லி எழுந்து ஓடுபவர்களும் உண்டு

கதையின் நீளம் கருதி, அவருடைய புகழ்பெற்ற இரண்டு அறிவுரைகளை மட்டும் சொல்லிவிட்டு அவரைப் பற்றிய கதைக்குள் நுழைகிறேன்.

"ஒருவன் ஏழையாகப் பிறப்பதில் தவறில்லை: விதியின் மேல் பழியைப்போட்டு விட்டு ஏழையாகவே வாழ்வதுதான் தவறு. முயற்சி செய்து பணக்காரன் ஆகவேண்டும்" என்று அவர் சொல்லும் அறிவுரையைப் பலர் ஒப்புக்கொள்வார்கள்.காரணம் அதற்கு 'முயற்சி திருவினையாக்கும்' என்று அவரே விளக்கமும் சொல்வார்.

சிலர் அதை எதிர்த்து வாதம் செய்வார்கள்.

"அண்ணே நீங்க சொல்றது தப்பு. வாய்ப்புன்னு ஒன்னு இருக்கு, அது இல்லாம எப்படியண்ணே ஒருத்தன் முன்னுக்கு வரமுடியும்? இளையாராஜாவுக்கு
வாய்ப்பு கவிஞர் பஞ்சு அருணாசலம் மூலமா வாய்ப்புக் கிடைத்தது - பெரிய இசையமைப்பாளரா ஆயிட்டாரு! எல்லோருக்கும் அப்படிக்
கிடைக்கணும்ல. எத்தனை பேர் இன்னும் ஆர்மீனியப்பெட்டியோட சென்னையில சுத்திக்கிட்டிருக்காங்க தெரியமா?"" என்று அவருடைய பங்காளி வீட்டு இளைஞன் ஒருவன் ஒருமுறை சொல்ல, இவர் தன்னுடைய வாதத்தைத் துவங்கிவிட்டார்.

"இளையாராஜாவுக்கு ஒன்னும் எக்மோர் ஸ்டேசன்ல போய் இறங்கினவுடன வாய்ப்புக்கிடைக்கல. லட்சியத்தை மனசுல வச்சிகிட்டு மனுசன் பத்து
வருசம் பாடுபட்டிருக்காரு. அதோட அந்த பத்துவருட காலத்தில் தன்னுடைய முயற்சியாலும், பயிற்சியாலும் இசையில ஏகப்பட்ட விஷயங்கள்ள
கற்றுத் தேறியிருக்கார் - அதுதான் முக்கியம். கிடைச்ச வாய்ப்பை வச்சுத்தான் அவர் முன்னுக்கு வந்தார்னு சொல்றது தப்பு. விடாமுயற்சியாலதான்
அவர் வெற்றி பெற்றார். இல்லையின்னா இரண்டு படத்தோட ஊருக்குத் திரும்பியிருப்பார்!"

"அண்ணே இங்க வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச் சொல்றேன். அது இல்லாம எப்படியன்னே ஒருத்தன் சாதிக்க
முடியும்? ஒருத்தனுக்கு முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி, தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து
கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலைகிடைகின்றவனோட வளர்ச்சியை
எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும் ஒரு அம்சம் வேண்டாமா?."

"அதுக்குத்தான் முயற்சி, பயிற்சின்னு சொன்னேன்.கிராம வங்கியில சேர்ந்தவன், இதுபோதும்னு சொல்லிவிட்டுச் சும்மா இருக்ககூடாது. கருணைக் கிழங்கு புளிக்குழம்பையும், கத்திரிக்காய் கூட்டுக்கறியையும் சாப்பிட்டுவிட்டு சுகமாக வீட்டுல படுத்துத் தூங்கக்கூடாது. அஞ்சல் வழியில அடுத்தடுத்த கல்வி கற்றுத்தேர்ந்து தன் தகுதியையும், திறமையையும் வளர்த்துக்க வேண்டும். அடுத்தடுத்த லெவலுக்கு முயற்சி செய்யவேண்டும். வங்கி விட்டு வங்கி அல்லது வேலை விட்டு வேலை தாவ வேண்டும். அப்போதுதான் பணத்தைப் பார்க்க முடியும். செல்வந்தனாக முடியும்! "

"என்னால அப்படித் தாவ முடியாதண்ணே - எனக்கு ஏகப்பட்ட தளைகள், தடைகள் எல்லாம் இருக்கு - அதனால செல்வம் வர்றபோது வரட்டும்"
என்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் எழுந்து போய் விட்டான். அவனுக்கு குடும்பத்தில் பல பிரச்சினைகள், அதையெல்லாம் சொல்லி வாதிடாமல்
எழுந்துபோய் விட்டான். இவருக்கும் அது தெரியும் அதனால் விட்டு விட்டார்.

அதுபோல அவருடைய இன்னொரு புகழ்பெற்ற அறிவுரையை அடுத்துக் கொடுத்துள்ளேன். அதைக் கேட்பவர்கள் பலர் நக்கலாகச் சிரித்து விட்டுப்
போய் விடுவார்கள். அதற்குக் காரணம் அது தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் சாத்தியமில்லாத அறிவுரை. அது ஏன் புகழ் பெற்றது என்றால் அதை அவர் அடிக்கடி சொல்வார். ஏன் அவர் அதை வலியுறுத்திச் சொல்வார் என்றால் அந்த அறிவுரையின்படிதான் அவருடைய இல்லற வாழ்க்கை
அமைந்தது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத்துடன் சொல்வதாக நினைத்துக் கொண்டு அவர் சொல்வார். ஆனால் கேட்பவர்கள் அப்படி எடுத்துக்கொள்வதில்லை. அதுதான் சோகம்!

அந்த அறிவுரை இதுதான்:

"உன் தந்தை ஏழையாக இருந்தால் அது உன் தவறில்லை. ஆனால் உன் மாமனார் ஏழை என்றால் அது உன் தவறு"

எப்படி உள்ளது அறிவுரை?

நல்லதாக இருக்கிறதா? அல்லது நகைக்கும்படியாக இருக்கிறதா?

எப்படி வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப் போகட்டும். முதலில் அவர் கதையைத் தெரிந்து கொள்வோம் அந்த அறிவுரையின்படிதான் அவருடைய
இல்லற வாழ்க்கை அமைந்தது என்று சொன்னேன் இல்லையா - அது உண்மை.

தலைவன் இல்லாமல் கடலில் பயணித்த கப்பல் என்பார்களே அது போல பொருள் ஈட்டும் தந்தையில்லாத குடும்பத்தில், மூன்று சகோதரிகளுடன்,
பிறப்பு வரிசையில் இரண்டாவதாகப் பிறந்து சின்ன வயதில் பல சிரமங்களை அனுபவித்தவர் அவர்.

நண்பர் ஒருவரின் வீட்டிற்கு ஓடுகள் வாங்குவதற்காகக் கேரளாவிற்குப் போன அவர் தந்தை போனவர் போனவர்தான். இன்றுவரை திரும்பி வரவில்லை. என்ன ஆயிற்று என்றே தெரியாத சோகம். அவருடைய ஆத்தா, தான் சீதனமாகக் கொண்டுவந்திருந்த தங்கம், வெள்ளி, பித்தளை என்று அத்தனையையும் ஒவ்வொன்றாக விற்றுத் தன்மானத்தோடு தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். காமராஜர் இலவசக் கல்வித்
திட்டத்தில் உள்ளூர்ப் பள்ளிக் கூடத்தில் படித்தவரை, கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைத்தவர் அவருடைய மூத்த சகோதரி ஒரு தையல்மிஷின்
வாங்கி அதன் ஓட்டத்தில் அவரைப் படிக்கவைத்தாள்.

அந்த மங்கை நல்லாளளுக்கு எப்படித் திருமணம் செய்யப் போகிறோம் என்று பெற்றதாய் கலங்கி நிற்கையில் காலதேவன் கைகொடுத்தான்.

ஆனாரூனா, சின்ன வயதில் திரைப்பட நடிகர் அரவிந்தசாமி போல அழகாக இருப்பார். பார்த்துப் பிடித்துபோன பக்கத்து ஊர்ப் பணக்காரச் செட்டியார் ஒருவர் தன் ஒரே மகளை அவருக்குக் கட்டிக்கொடுப்பதற்காகத் தூது விட்டார். ஆச்சி தயங்காமல் மறுத்து விட்டார். வயதில் மூத்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு இளையவனுக்கு எப்படிப் பண்ணுவதாம்?

தூது வந்தவர் பலே கில்லாடி, ஆச்சியை மடக்கித் திருமணத்தை முடிப்பதற்காக எல்லாவிதமான ஆயுதங்களோடும் ஆயத்தமாகத்தான் அவர்
வந்திருந்தார்.

"என்ன ஆச்சி விவரம் தெரியாமல் பேசுகிறீர்கள். உங்கள் வீட்டு நடப்பு தெரியாமல் வந்து கல்யாணம் பேசுவேனா?. சொல்லிவிட்ட செட்டியார் பெரிய
கோடீஸ்வரர். மதுரையில் உள்ள பத்துப் பெரிய கட்டிடங்களில் இருந்து வாடகை வருகிறது. கீழையூரில் நானூறு ஏக்கர் பண்ணை இருக்கிறது.
அதோடு இலங்கையில் இருநூறு ஏக்கர் டீ எஸ்டேட் இருக்கிறது. பெரிய பெண்ணிற்கு ஒரு வரனைப் பாருங்கள் ஆகிற செலவை அவரே தருவார்.
ஏன் மூன்று பெண்களுக்குமே வரனைப் பாருங்கள். பணம் வாங்கித் தருகிறேன் ஊர் முழுக்க கொட்டகை போட்டு, அடுத்தடுத்த நான்கு மூகூர்த்த நாளில் நான்கு பேர் கல்யாணத்தையும் ஒருசேரப் பண்ணிவிடுவோம்."

ஆச்சி திகைத்துப்போய் விட்டார்கள். அதோடு மனதில் ஒரு நெருடலும் ஏற்பட்டது

"பெண் நன்றாக இருப்பாள் இல்லையா?"

"மகாலக்ஷ்மி மாதிரி இருப்பாள். திருப்பத்தூர் சிவன் கோயிலுக்குப் பெண்பார்க்க ஏற்பாடு செய்கிறேன். காலபைரவர் சன்னதியில் வைத்துப்
பெண்ணைப் பாருங்கள். பிடித்திருந்தால் செய்வோம். இல்லையென்றால் விட்டுவிடுவோம்"

ஆச்சி சரியென்று சொல்ல, தூதுவர் அதற்கு ஏற்பாடு செய்து விட்டு, அடுத்தநாளே ஆச்சியின் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டுபோக இரண்டு
கார்களோடு  வந்து வீட்டார். ஆச்சி தன்  பிள்ளைகளுடனும், பங்காளி வீட்டில் பெரியவர்கள் இருவருடனும் பெண் பார்க்கப் போனார்கள்

பெண் சிவந்த நிறத்தில் முகக்களையோடு இருந்தாள். உருவம்தான் சிறுத்த உருவமாக, பார்வைக்குத் திரைப்பட நடிகை ரேவதி மாதிரி இருந்தாள்.

அப்போதுதான் அது நடந்தது. தூதுவர் தாயையும், மகனையும் மட்டும் தனியே அழைத்து மெல்லிய குரலில் சொன்னார்."ஆச்சி மிகவும் குணமான
பெண்.உடலில் மட்டும் ஒரு சிறு ஊனம் இருக்கிறது.கல்யாணத்திற்குப் பிறகு தப்பாகி விடக்கூடாது என்று இப்பவே சொல்கிறேன்.அதானால் அந்தச் சிறு ஊனத்தைப் பெரிசு பண்ணாமல், பெரிய மனதுடன் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் மகனின் வாழ்க்கை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு ஏற்றமாக இருக்கும்."

அச்சிக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.

"என்னவிதமான ஊனம்?"

"சின்ன வயதில் அந்தப் பெண்ணிற்கு இளம்பிள்ளைவாதம் வந்து இடதுகாலை சற்று இழுத்துப் பிடித்துக் கொண்டு விட்டது.நிற்கும்போது ஊனம் தெரியாது. நடக்கும் போது மட்டும் சற்றுத் தெரியும்"

தன்குடும்பக் கஷ்டங்களுக்காக மகனுக்குத் தீங்கிழைப்பதா என்று சட்டென முடிவு செய்த ஆச்சி, வேண்டாம் என்று சொல்லும் முகமாக கண்ணால்
பதில் சொல்லி, கையெடுத்துக்கும்பிட நினைக்கையில், மின்னல் வெட்டாய்த் தன் தாயின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகன், தன் தாயின் கையைப் பிடித்து வைத்துக் கொண்டு உறுதியான குரலில் சொன்னான்.

"மனதில்தான் ஊனம் இருக்கக்கூடாது, உடலில் இருந்தால் பரவாயில்லை. எனக்குச் சம்மதம். அவர்களிடம் சொல்லி விடுங்கள்."
தூதுவர் உட்பட வந்திருந்த மணப்பெண் வீட்டார் அத்தனை பேருக்கும் பரம சந்தோசம்

மனதில் ஊனம் இருக்ககூடாது என்று சொன்ன மாப்பிள்ளையின் வார்த்தைக்கு மயங்கிய பெண்ணின் தகப்பனார் தன்னுடைய சொத்தில் பாதியைத்  திருமணத்தன்றே  பெண்ணுக்குக்  கொடுத்துவிட்டார்.

அப்புறம் நடந்ததெல்லாம் முக்கியமில்லை.

இதுதான் ஆனாரூனா செல்வந்தர் வீட்டு மாப்பிள்ளையான பூர்வ கதை. அவர் தன் சகோதரிகளின் நல்வாழ்க்கையை முன்னிட்டு ஐம்பத்தொன்று சதவிகித மும், அந்தப் பெண்ணின் அழகு, செல்வம் ஆகியவற்றை முன்னிட்டு மீதமுள்ள சதவிகிதத்திற்குமாக ஒப்புக்கொண்டார்..

ஆனால் சில பேர் பணத்திற்காக இவ்வளவு அழகான பையன் ஊனமான பெண்ணைக் கட்டிக் கொண்டு விட்டான் என்று புறம்பேசிக்  கொண்டிருந்தார்கள்.

புறம்பேசியவர்களையெல்லாம் புறம் தள்ளும்படியாக ஆனாரூனாவின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. அடுத்தடுத்து இரண்டு ஆண்
குழந்தைகளும் பிறந்து அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

இதெல்லாம் நான் எங்களூரை விட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும்வரை நடந்ததாகும்.

                      +++++++++++ +++++++++++ ++++++++++ ++++++++++

எனக்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் வேலை. வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களாகின்றன. அங்கே சென்று எம்.எஸ் பட்டப் படிப்பு
படித்த காலத்தையும் கணக்கில் சேர்த்தால் நான்காண்டுகளாகி விட்டன.

ஊரில் அப்பத்தாவீட்டு அய்யாவிற்கு எண்பாதாம் ஆண்டு முத்து விழா. தகவல் தெரிந்தவுடன் அடித்துப் பிடித்துக்கொண்டு ஊரை நோக்கிப் பறந்து வந்துவிட்டேன்.

எனக்கு எங்கள் ஊரை மிகவும் பிடிக்கும். அத்தனை பெரிய வீடு. வீட்டு வாசலில் இருக்கும் வேப்பமரத்து நிழல். அங்கே சாய்வு நாற்காலியைப்
போட்டுக் கொண்டு பாட புத்தகங்களைப்படிக்கும் சுகம். அய்யாவின் அரவனைப்பு. அப்பத்தாவின் சமையல். முக்கியமாக மாலை நான்கு மணிக்கு
அவர்கள் செய்து கொடுக்கும் வெள்ளைப் பணியாரம், பச்சைத் தேன்குழல், சொன்ன வேலைகளைச் செய்து தரும் வீட்டு வேலைக்காரர் வேலு, கார்
டிரைவர் கருப்பையா - இப்படி சொல்லிக் கொண்டே இருக்கலாம். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே ரசிக்கக்கூடிய விஷ்யங்கள் அவை.
பள்ளி, மற்றும் கல்லூரிப் படிப்பையெல்லாம் அருகிலிருந்த காரைக்குடிக்குச் சென்று படித்தவன் நான். எங்கள் ஊரில் இருந்து காரைக்குடி 14  கிலோமீட்டர் தொலைவுதான்.

என் தந்தையார் சென்னையில் அச்சக வசதியுடன் கூடிய பதிப்பகம் வைத்திருக்கிறார். அலுவலகம் பாண்டி பஜாரில், அச்சகம் கிண்டியில். வீடு
கோட்டுர் புரத்தில். எனக்கு சென்னையின் நெரிசலும் பரபரப்பும் சின்ன வயதிலேயே பிடிக்காமல் போய்விட்டது. அதனால் ஊரில் அய்யா,
அப்பத்தாவுடனேயே இருந்து பழகியவன். என் சகோதரிகள் மூவரும்இதற்கு நேர்மாறானவர்கள். ஊருக்கு வருவதென்றால் கண்ணைக் கசக்குவார்கள்.
அவர்கள் அனைவருமே எனக்கு மூத்தவர்கள். தற்போது திருமணமாகி சென்னையிலேயே செட்டிலாகி விட்டார்கள்.

ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் எனக்கு வீட்டில் தடபுடலான வரவேற்பு. யானையை விட்டு மாலை போட்டு வரவேற்காததுதான் குறை. அடுத்த இரண்டு நாட்களில் முத்து விழா நடக்கவிருக்கிறது. வீடு ஏகப்பட்ட உறவினர் கூட்டத்துடன் களைகட்டி அமர்க்களமாக இருந்தது.

ஆளாளுக்கு விசாரணை. யாருடனும் பத்து நிமிடம் தொடர்ந்து பேச முடியவில்லை. என் சகோதரி வீட்டுப் பிள்ளைகள் பெரிது பெரிதாக இருந்த
எனது ஆறு பெட்டிகளையும் குடைந்து பார்த்து யார் யாருக்கு நான் என்னென்ன விளையாட்டுச் சாதனங்கள் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன்  என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் என்னையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.

ஒருமணி நேரம் இருந்து அனைவருடனும் பேசிவிட்டு, வரும்போதே மனசுக்குள் நினைத்திருந்த காரியத்தைச் செய்வதற்காக, உடைகளை
மாற்றிக்கொண்டு புறப்பட எத்தனித்தேன்.

என் தந்தை கண்டுபிடித்துவிட்டார்.

மெல்லிய குரலில் கேட்டார்,"என்ன ஆனா ரூனாவைப் பார்க்கப் போகிறாயா?"

"ஆமாம்!"

"நானும் வருகிறேன், வா சேர்ந்து போவோம்" என்று சொல்லி அவரும் கிளம்பி விட்டார்.

ஊரில் எனக்கு மிகவும் பிடித்தவர் அவர்தான். அதோடு அவருடைய சின்ன மகன் என்னுடைய பள்ளித் தோழன் அதனால்தான் என் தந்தை ஊகம்கூட
செய்யாமல் கண்டுபிடித்து விட்டார்.

மற்ற நகரத்தார்கள் எல்லாம் கல்யாணம், காட்சி என்றால் மட்டுமே ஊருக்கு வந்து போவார்கள். ஆனால் ஆனா ரூனா உள்ளூரிலேயே வசித்து
வந்ததால், படிக்கின்ற காலத்தில்  எனக்கு அவர் நன்கு பரீட்சயமானவர். அவருக்கு என் தந்தை வயது என்றாலும், வயதை மறந்து நட்பாகப்
பழகுபவர். என்மீது நல்ல அபிபிராயம் வைத்திருப்பவர். எல்லோரிடமும் என்னைப் பற்றி 'நல்ல பையன்' என்று சொல்பவர்.

அடுத்த தெருவில்தான் அவருடைய வீடு. நடந்து செல்கின்ற வழியில் என் தந்தையாரிடம் சொன்னேன்."நான் ஒருவனே சென்று அவரைப் பார்த்து
விட்டுத் திரும்பி விடுவேனே.உங்களுக்கு எதற்கு வீண் சிரமம்?"

அதற்கு என் தந்தையார் சொன்ன பதில்,"இல்லை, நான் உன்னுடன் வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனாரூனா இன்று இருக்கும் நிலையில் நீ ஒருவன் மட்டும் தனியாகச் சென்று அவரைப் பார்ப்பது உசிதமல்ல!"

நான் திடுக்கிட்டுப்போய்க் கேட்டேன்,"ஏன் அவருக்கு என்ன ஆயிற்று?"

"ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருடைய சின்ன மகனும், மனைவியும் ஒரே நாளில் இறந்து போனார்கள். அவர் நொடிந்து போயுள்ளார்"

"அடடா, ரியலி அன்ஃபார்ச்சுனேட்...தாங்க முடியாத துக்கம்மும் கூட. எப்படி இறந்து போனார்கள்?"

"மகன் கொடைக்கானல் அருகே நடந்த கார் விபத்தில் இறந்துபோனான். அவன் இறந்த செய்தியை கேட்ட அவன் தாயார் அந்த நொடியிலேயே,
அதிர்ச்சியில் இறந்து போனார்கள்"

"அவருடைய மூத்த மகன் நன்றாக இருக்கிறானா?"

"அவன் வேறு இவருக்குத் தீராத தலைவலியைக் கொடுத்து விட்டான்"

"என்ன செய்தான்?"

"அவன் காதல், கத்திரிக்காய் என்று சொல்லித் தன்னுடன் நெருங்கிப் பழகிய வேற்று மதத்துப்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு
விட்டான். அதுவும் சமீபத்தில்தான் நடந்தது. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து அவர் வாழக்கையில் மூன்றுமுறை விதி சுனாமிப் புயலாக விளையாடி விட்டுப் போய் விட்டது.அத்துடன் கார் விபத்தில் பலியான சின்னமகன் குடித்திருந்த நிலையில் கார் ஓட்டியதால்தான் விபத்து  ஏற்பட்டுள்ளது என்று காவல்துறையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேறு சொல்லிவிட்டது. மனிதர் நொருங்கிப் போயிருக்கிறார்."

அவருடைய வீட்டருகில் வந்து விட்டதால் பேச்சை நிறுத்திக் கொண்டு, வீட்டிற்குள் நுழைந்தோம்.
               
******************************************************************
எங்களைப் பார்த்தவுடன் ஆனாருனா எழுந்து வீட்டின் பிரதான நிலைக் கதவுருகே வந்து நின்று வரவேற்கும் விதமாகக் கைகளை மட்டும் கூப்பினார்.

அவரைப் பார்த்தவுடன், எனக்குப் பொறுக்க முடியவில்லை. வாயை மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுக ஆரம்பித்து விட்டேன். என்னை
யறியாமலேயே கண்களில் நீ பெருக்கெடுத்துவிட்டது. என்னைக் கட்டிப் பிடித்து அனைத்து சமாதானப்படுத்தினார். உள் பெட்டக சாலையில்
போடப் பெற்றிருந்த நீண்ட தேக்கு நாற்காலியில் எங்கள் இருவரையும் அமரச் செய்தார். எதிரில் அவரும் அமர்ந்து கொண்டார்.

எப்படியிருந்த மனிதர் எப்படியாகிவிட்டார்?

சவரம் செய்யப்படாத முகம், வாரிச் சீர் படுத்தப் படாமல் கலைந்திருந்த தலை முடி. கசங்கிய சட்டை. எனக்கு அவருடன் என்ன பேசி  உரையாடலைத் துவக்குவதென்றே தெரியவில்லை

இறுக்கத்தை என் தந்தைதான் போக்கினார்.

"இப்போதுதான் வந்தான். வந்தவுடனேயே உங்களைப் பார்க்க வேண்டும் என்றான்.  கூட்டிக் கொண்டு வந்தேன்"

"எனக்குத் தெரியாததா என்ன?" என்று பதிலுறுத்த ஆனாரூனா, தொடர்ந்து பத்து நிமிடங்கள் என்னைப் பற்றியும் நடக்கவிருக்கும் எங்கள் அய்யாவின்
முத்துவிழா பற்றியும் பேசினார்.

பிறகு அவரிடம், புறப்படுகிறோம் என்று சொல்லிக்கொண்டு எழுந்தோம்.

அப்போது என் தந்தையார் அவருக்கு ஆறுதல் சொல்லும் முகமாக,"நான் சென்றவாரம் பார்த்ததைவிட, இப்போது நீங்கள் கொஞ்சம் தெளிவாக
இருக்கிறீர்கள். இப்படியே யதார்த்த நிலைக்குத் திரும்பும் மன வலிமையை உங்களுக்குப் பழநி அப்பன் தருவான்" என்றார். அப்போதுதான் அது
நடந்தது.

"அடடே, உங்களிடம் காட்ட வேண்டும் என்று எனக்கு இருபது நாட்களுக்கு முன்பு என்னுடைய இளைய சகோதரியின் கணவர் எழுதியிருந்த கடிதம்
ஒன்றை வைத்திருக்கிறேன். தருகிறேன்.படித்துப் பாருங்கள்" என்று சொன்னவர், அருகில் பீரோ மீதிருந்த தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் இருந்து
கடிதம் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.இருவரும் படித்தோம். .

'"பிள்ளை பிறக்காவிட்டால் அது நம் தவறல்ல; தலைவிதி: ஆனால் பிறந்த பிள்ளையை நல்ல முறையில் வளர்க்காவிட்டால் அது நம் தவறு - என்று
நீங்கள் பலருக்கும் அறிவுரை சொல்வீர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் நல்ல முறையில் வளர்க்கவில்லை
என்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி வளர்த்திருந்தால் மாதரசியான உங்கள் மனைவியை நீங்கள் பறிகொடுத்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு
அடுத்தடுத்து ஏற்பட்ட துயரங்களில் தாங்கமுடியாதது அதுதான் அதற்குப் பிராயச்சித்தமாக அந்த உத்தமியின் பெயரில் அறக்கட்டளை
ஒன்றை ஏற்படுத்தி உங்களைப்போல் பிள்ளைகளால் சோகமுற்றிருக்கும் மனிதர்களுக்கு அடைகலத்தையும் ஆறுதலையும் தரக்கூடிய சேவை அமைப்பு ஒன்றைச் சீக்கிரம் ஏற்படுத்துங்கள்.
உங்கள் ஊர் மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பார்கள். நாங்களும் வேண்டிய உதவிகளைச்
செய்கிறோம். அப்படி ஏற்படுத்தினால்தான் அந்த மாதரசி உங்களோடு வாழ்ந்த விசுவாசமான வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். இதைத் தங்களிடம் நேரில் சொல்லத் தயக்கமாக இருந்ததால் கடிதம் மூலம் எழுதுகிறேன். தவறு என்றால் மன்னிக்கவும். அந்த மாதரசியின் ஆன்மா  சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்."

கடிதத்தைப் படித்தவுடன் என் தந்தை சொன்னார்,"கடிதம் உணர்ச்சிகரமாக உள்ளது .ஆனால் எழுதியதில் ஒரு தவறு இருக்கிறது. ஒரு பிள்ளையை
அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி அல்லது பெண்குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் நாம் நல்லதைச் சொல்லி
வளர்க்கமுடியும். பதினைந்து அல்லது பதினெட்டு  வயதுவரைதான் நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளமுடியும். அதற்குப் பிறகு இன்றைய காலச்
சூழ்நிலையில் வெளியுலகத் தொடர்பு கிடைத்தவுடன் குழந்தைகளிடம் ஏற்படும் மனமாற்றத்திற்கும், செயல்களுக்கும் நாம் எப்படி முழுப்
பொறுப்பாக முடியும்? அதனால்தான் நம் முன்னோர்கள், கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்கு வரும்
என்று
சொன்னார்கள்"

என் தந்தையாரின் வாதத்தைக் கேட்ட ஆனாரூனா அவர்கள் அதற்கு அசத்தலாகவும், அற்புதமாகவும் பதிலுரைத்தார்கள்.

"இல்லை அண்ணே!, உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். நான் பிள்ளைகளைச் சரியான முறையில் வளர்க்கவில்லை என்பதுதான் உண்மை. நான் அவர்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. உயிர் காக்கும் மருந்து ஓவர் டோசானால் உயிரைப் போக்கிவிடும். அதுபோல
நான் அவர்களுக்குப் பல அறிவுரைகளை விடாது தொடர்ந்து சொன்னாதால் - அது ஓவர் டோஸாகி விட்டது. என்னை விட்டு வெளியேறும் சூழ்நிலை
வந்ததும் தன்னிச்சையாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். கட்டிவைத்திருக்கும் கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டால் பாய்ந்துதான் ஓடும்! அறிவுரை
என்பது மருந்து. அதைத் தேனில் கலந்துதான் கொடுக்கவேண்டும். தேவைப்படும்போதுதான் கொடுக்கவேண்டும். தேவையான அளவுதான் கொடுக்கவேண்டும். இல்லையென்றால் விளவு எதிர்மறையாகத்தான் இருக்கும்!


நிதர்சனமான உண்மை: இருவருடைய அற்புதமான வாதங்களைக் கேட்டதும் என் கண்ணில் நீர் சுரந்து விட்டது!

              ++++++++++++++++++  +++++++++++++++ +++++++++++++++++++++
ஐந்தாண்டுகளுக்கு முன்பு அடியவன் எழுதி, மாதப்பத்திரிக்கையொன்றில் வெளியாகி, பலரது பாராட்டையும் பெற்ற கதை இது! அதை இன்று
உங்களுக்குப் படித்து மகிழப் பதிவிட்டிருக்கிறேன்
--------------------------------------------------------------------------------------------
100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட செட்டிநாட்டு கட்டடக் கலைக்குச் சான்றாக காணொளி ஒன்றை இணைத்துள்ளேன். அனைவரும் பார்த்து மகிழுங்கள்
100 அடி அகலம், 200 அடி நீளம், கீழ்த் தளம் மட்டும் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடு. வயது 100 ஆண்டுகளுக்கும் மேலானது. உத்திரம், மரத் தூண்கள், நிலைகள், கதவுகள் அனைத்தும் பர்மா தேக்கினால் செய்யப்பெற்றவையாகும்



அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

22 comments:

  1. கதையை ஏற்கனவே படித்து இருந்தாலும், மீள் வாசிப்பும் நன்றாகவே இருந்தது.
    அறிவுரையையும் இடம் பொருள் ஏவல் தெரிந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் சொன்னால்தான் எடுபடும்.கூடியவரை அறிவுரைகளும் ஆலோசனைகளும் நம்மிடம் கேட்டால் மட்டுமே சொல்லவேண்டும். மனதில் அறிவுரை சொல்ல ஆர்வம் வந்தாலும் அடக்குவதே நல்லது. முக்கியமாக வயதானவர்கள் கட்டுப்படுத்த வேண்டிய பழக்கமாகும், அறிவுரை கூறுதல்.

    செட்டி நாட்டு வீடுகள் அற்புதமானவை. காணொலி அருமை. வீட்டைப் பராமரிக்கவே நான்கு நபர்கள் வேலை செய்ய வேண்டும்.

    நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. அசத்தலானக் கதை மிகவும் அருமை...
    இரண்டாவது அறிவுரை பொது நோக்கோடு பார்க்கும் போது சுயநலமாகத் தோன்றும்...

    இருந்தும், அது எதார்த்தமானது, அனுபவத்தால் விளைந்தது. சாதாரண மனிதர்களின் சிந்தனையில் உதிக்கும் நடைமுறைக் கருத்துமானது... வெளிப்படையானது, பலர் அப்படி கருத்தை மனதில் கொண்டிருந்தாலும் இப்படி வெளிப்படையாக சொல்வதில்லை என்பது தான் உண்மை...

    இருந்தும், பணக்கார மாமனார் ஏழை மருமகனைத் தேர்ந்தெடுத்து தனது மகளின் வாழ்வில் ஊனம் இல்லாமல் செய்திருக்கிறார் என்றும் கொள்வோம்.

    உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது... பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. அறிவுரை அத்தனையும்
    அம்சமாக இருக்கிறது எங்க

    அப்பாவிற்கும் இப்படி
    அந்த பட்ட பெயர் உண்டு..

    ReplyDelete
  4. ஐயா!...கதை என்று தாங்கள் சொன்னாலும் - நமக்குப் பக்கத்தில் கண் முன்னே நடைபெற்றதைப் போல இருக்கின்றது!..பக்குவப்பட்ட
    மனிதர்களைப் பற்றிய பக்குவமான கதை!. உணர்ச்சிப் பிழம்பான நடை. மனம் நெகிழ்ந்தது!..

    ReplyDelete
  5. Guru Vanakkam,

    Superb!!!

    Read like How Prakash Raj says in neengalum vellam oru kodi

    RAMADU

    ReplyDelete
  6. அய்யா
    வண‌க்கம், சிறுகதை அருமை, செட்டிநாட்டு அரண்மனையில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தாள்தான் இனிக்கும்.

    ReplyDelete
  7. செட்டி நாட்டு வாழ்க்கை முறையில் பல நல்ல கருத்துகள் பொதிந்து இருக்கும். அது இக்கதையில் நிறையவே இருந்ததற்கு வியப்பு இல்லை. பரிசைப் பெற்றதற்கு முழுத் தகுதியுள்ள கதை... வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    கதையை ஏற்கனவே படித்து இருந்தாலும், மீள் வாசிப்பும் நன்றாகவே இருந்தது.
    அறிவுரையையும் இடம் பொருள் ஏவல் தெரிந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் சொன்னால்தான் எடுபடும்.கூடியவரை அறிவுரைகளும் ஆலோசனைகளும் நம்மிடம் கேட்டால் மட்டுமே சொல்லவேண்டும். மனதில் அறிவுரை சொல்ல ஆர்வம் வந்தாலும் அடக்குவதே நல்லது. முக்கியமாக வயதானவர்கள் கட்டுப்படுத்த வேண்டிய பழக்கமாகும், அறிவுரை கூறுதல்.
    செட்டி நாட்டு வீடுகள் அற்புதமானவை. காணொலி அருமை. வீட்டைப் பராமரிக்கவே நான்கு நபர்கள் வேலை செய்ய வேண்டும்.
    நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!/////

    உங்களுடைய பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger G Alasiam said...
    அசத்தலானக் கதை மிகவும் அருமை...
    இரண்டாவது அறிவுரை பொது நோக்கோடு பார்க்கும் போது சுயநலமாகத் தோன்றும்...
    இருந்தும், அது எதார்த்தமானது, அனுபவத்தால் விளைந்தது. சாதாரண மனிதர்களின் சிந்தனையில் உதிக்கும் நடைமுறைக் கருத்துமானது... வெளிப்படையானது, பலர் அப்படி கருத்தை மனதில் கொண்டிருந்தாலும் இப்படி வெளிப்படையாக சொல்வதில்லை என்பது தான் உண்மை...
    இருந்தும், பணக்கார மாமனார் ஏழை மருமகனைத் தேர்ந்தெடுத்து தனது மகளின் வாழ்வில் ஊனம் இல்லாமல் செய்திருக்கிறார் என்றும் கொள்வோம்.
    உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது... பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களுடைய மனம் நிறைந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. ////Blogger வேப்பிலை said...
    அறிவுரை அத்தனையும்
    அம்சமாக இருக்கிறது எங்க
    அப்பாவிற்கும் இப்படி
    அந்த பட்ட பெயர் உண்டு..////

    உங்களுடைய பாராட்டிற்கும் தகவலுக்கும் நன்றி வேப்பிலை சுவாமி!

    ReplyDelete
  11. /////Blogger துரை செல்வராஜூ said...
    ஐயா!...கதை என்று தாங்கள் சொன்னாலும் - நமக்குப் பக்கத்தில் கண் முன்னே நடைபெற்றதைப் போல இருக்கின்றது!..பக்குவப்பட்ட
    மனிதர்களைப் பற்றிய பக்குவமான கதை!. உணர்ச்சிப் பிழம்பான நடை. மனம் நெகிழ்ந்தது!../////

    கதை உங்களுடைய மனதை நெகிழவைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Sattur Karthi said...
    Good Morning Sir!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger arul said...
    superb story/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Superb!!!
    Read like How Prakash Raj says in neengalum vellam oru kodi
    RAMADU/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் ராமுடு!

    ReplyDelete
  15. /////Blogger Kalai Rajan said...
    அய்யா
    வண‌க்கம், சிறுகதை அருமை, செட்டிநாட்டு அரண்மனையில் கூட்டு குடும்பமாக வாழ்ந்தால்தான் இனிக்கும்./////

    உண்மைதான் அக்காலத்தில் அவ்வீடுகளைக் கட்டிய நோக்கமும் அதுதான். இப்போது நிலைமை அப்படியில்லை. வேலை வாய்ப்பு, மற்றும் தொழில் காரணமாக குடும்ப உறுப்பினர்கள், வெவ்வேறு ஊர்களில், நாடுகளில் இருக்கிறார்கள். அவ்வீடுகளில் தற்சமயம் வயதானவர்கள் இரண்டொருவரே உள்ளார்கள்!

    ReplyDelete
  16. /////Blogger Advocate P.R.Jayarajan said...
    செட்டி நாட்டு வாழ்க்கை முறையில் பல நல்ல கருத்துகள் பொதிந்து இருக்கும். அது இக்கதையில் நிறையவே இருந்ததற்கு வியப்பு இல்லை. பரிசைப் பெற்றதற்கு முழுத் தகுதியுள்ள கதை... வாழ்த்துகள்....////

    உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி வக்கீல் சார்!

    ReplyDelete
  17. உலகத்தில் இலவசமாகவும் அளவில்லாமலும் கிடைப்பது அட்வைஸ். கதையில் உள்ளது போலவே என் நண்பனின் தந்தை ஒருவருக்கு பெயர் "கூனா பினா" கூனா பினா என்றால் குப்பை பிச்சை. மனிதர் அறிவுரையை அள்ளி விடுவதில் அவரை அடித்திக்கொள்ள முடியாது. நல்ல பதிவு ஐயா.

    ReplyDelete
  18. ////Blogger thanusu said...
    உலகத்தில் இலவசமாகவும் அளவில்லாமலும் கிடைப்பது அட்வைஸ். கதையில் உள்ளது போலவே என் நண்பனின் தந்தை ஒருவருக்கு பெயர் "கூனா பினா" கூனா பினா என்றால் குப்பை பிச்சை. மனிதர் அறிவுரையை அள்ளி விடுவதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது. நல்ல பதிவு ஐயா.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  19. /////Blogger Deiva said...
    Very Good Story and narration.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com