3.8.12

Poetry கவிதைச் சோலை: நாட்டை மாற்றிய தலைவர்கள்!

சமயபுரம் மாரியம்மன்
Devotional பொருளோடும் புகழோடும் வைப்பாய் எம்மை!

பக்திப்பாடல்

கற்பூர நாயகியே! கனகவல்லி!
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!

(கற்பூர)

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!

(கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!

(கற்பூர)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!

(கற்பூர)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!

(கற்பூர)

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!

(கற்பூர)

அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!

(கற்பூர)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!

(கற்பூர)

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் எம்மை!!

(கற்பூர)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

கவிதைச் சோலை:   நாட்டை மாற்றிய தலைவர்கள்!

தலைவர்கள்

மாடுதின் னாமலும் மனிதர்தொ டாமலும்
     வைக்கோலிற் படுத்த நாய்போல்
வையம் பெறாமலும் மண்ணில் விழாமலும்
     மாகடல் கொண்ட மழைபோல்
ஏடுகொள் ளாமலும் இசையில்நில் லாமலும்
     எழுதாது போன கவிபோல்
இலையில் இடாமலும் இருந்தேஉண் ணாமலும்
     இடம் மாறி விழுந்த கறிபோல்
நாடுகொள் ளாதஜன நாயகத் தலைவர்கள்
     நாட்டையே மாற்றி னாரே!
நலமுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற
     மலயரசி நங்கை தாயே!
              - கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. நல்ல பாடல்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...
    நன்றி...

    ReplyDelete
  2. அடடா! அரசியல் வாதிகளை நமது கவியரசரைப் போல அளந்து வைத்திருப்பவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அவரும் அரசியலில் இருந்தவர்தான். அப்படி இருந்த காலத்தை "வனவாசமாக" வருந்திச் சாடியவர் அவர். இயற்கையில் கண்ணனிடம் கொண்ட பக்தி, தான் பிறந்த வம்சத்தின் தெய்வ பக்தி இவை அத்தனையும் இருந்த காரணத்தால், அரசியல் சாக்கடையில் அவர் கண்ட உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எத்தனை உவமைகள். அத்தனையும் முத்தான உவமைகள். 'வைக்கோற் போரில்' படுத்த நாய், கடலில் விழுந்த மழைத்துளிகள், 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், இப்படி வரிசையாக நாட்டை (ஏ)மாற்றிய ஜனநாயகத் தலைவர்களை இதற்கு மேலும் வேறு யாராலும் நையாண்டி செய்ய முடியாது. அவருக்கு இணை அவரேதான்! குயில் பாட்டில் குயில் குரங்கைப் பார்த்து வர்ணிக்கும். அப்போது அது சொல்லுகிறது, மனிதர்கள் என்னதான் குரங்கைப் போல வாழ நினைத்தாலும் பட்டுமயிர் போர்த்த உடலுக்கும்,மரங்களில் தாவும் அழகுக்கும், வாலுக்கும் எங்கே போவார்கள் என்று எழுதுவார் பாரதி. அதைப் போல நையாண்டிதான் இது.வாழ்க கவியரசர் புகழ்.

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி

    ReplyDelete
  4. முத்துமாரியை பற்றிய முத்தான்ப் பாடலது
    முழு பக்தியோடுப் பாடி பணிவோருக்கு
    முக்தியினை தந்தருள்வாள் அன்னையவள்.

    ஆடி வெள்ளி என்பதால் அழகிய பாடலோடு அன்னையின் அருள் பெற ஆற்றுப் படுத்தி இருக்கிறீர்கள்...

    அடுத்த வெள்ளியில் நடக்கும் புனித ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் பொருட்டு எனக்கு பிடித்த

    ''அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும்''

    அருளாளர் நாகூர் ஹனிபா அவர்களின் இனிய குரலில் வரும் பாடலை வகுப்பறையில் பதிவிட வேண்டுகிறேன் ஐயா!

    ReplyDelete
  5. முத்தமிழில் முக்குளித்து கோர்த்தவரிகளன்றோ
    முத்தையாவின் முத்தான வரிகள்...

    நல்லதற்கும் நல்லவர்களுக்கும் இடமேது இந்த பூமியிலே என்பதை அருமையாகச் சொல்லியுள்ளார் கவியரசு!!!

    ஏடு கொள்ளாமலும் இசையில் நில்லாமலும்
    எழுதாமல் போனக் கவிபோல

    நாடு கொள்ளாமல் நல்ல பலத் தலைவர்களும் நம்மைவிட்டேப் போனரே! என்ற கவிஞரின் ஆதங்கம் அன்ன்னையவளிடமே கொட்டுகிறார்!

    கவிதைப் பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  6. அருமையான பாடல்கள்.
    அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

    ReplyDelete
  7. அம்பிகையின் அருள் போற்றும் பாடல் அருமை!!.

    எத்தனை தடவை கேட்டாலும் படித்தாலும் சலிக்காத பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆச்சரியப்படுத்தும் அமைதியான குரலும் வருடும் இசையும், பாடலின் ஆழ்ந்த கருத்துக்களும், சொந்தத் தாயிடம் நம் குறைகளைக் கொட்டுவது போன்ற பாவனையை ஏற்படுத்துவது உண்மை.

    //தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
    தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!//

    இந்த வரிகள் கூறும் உண்மை பிடிபட்டால், வாழ்க்கை என்ற வார்த்தையின் மகத்துவம் புரிபட்டு விடும். அந்தப் புரிதல் கிடைக்க அன்னை அருள வேண்டும்.

    முதல் வரி மட்டும்.'காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்' என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    அற்புதமான பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!!!.

    ReplyDelete
  8. கவியரசரின் மற்றுமொரு அற்புதப் பாடல். சில நாட்களுக்கு முன்பு, ஒரு பிரபல பத்திரிகையில், 'ஏன் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை? என்ற கேள்விக்கு, கவிஞர்.வாலி அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருந்தர். 'கவியரசர் கண்ணதாசன் 'எந்த அரசியல் கட்சியிலும் சேராதே' என்று எனக்கிட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டதனால் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை'. அவ்வாறு தன் சக கவிஞருக்கு கவியரசர் அறிவுறுத்தியதற்கு அரசியலில் அவரடைந்த கசப்பான அனுபவங்களே காரணம். அதற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது இந்தக் கவிதை. 'இந்தத் திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி' என்ற கவிஞர் பட்டுக்கோட்டையாரின் கவிதையும் நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி ஐயா!!!

    ReplyDelete
  9. தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்! என்றும் அம்மன் அருளுடன் . அய்யா வணக்கம்

    ReplyDelete
  10. என் இல்லத்தரசி நாள் தோறும் சமையல் செய்யும் போது சொல்லும் ஸ்லோகங்கள், செய்யுட்கள்,பாடல்கள் அகியவற்றில் முக்கிய‌ இடத்தைப் பிடித்திருப்பது 'கற்பூர நாயகியே கமலவல்லி...'. எந்தப் பாடல் அப்போது ஓடிக் கொண்டிருக்கிறதோ அதை வைத்து சமையல் எந்த நிலையில் உள்ளது என்பதை அடியேன் அறிவேன். இந்தப் பாடல் வந்துவிட்டால் இன்னும் 10 நிமிடங்களில் தட்டு வைப்பார்கள் என்று அறியலாம்.ம்ம்ம்... அவர்கள் சொல்லும் அனைத்தும் எனக்கும் கேட்டு கேட்டு மனப்பாடம் ஆனாலும் வாய் விட்டுச் சொல்ல அகங்காரம் தடுக்கும். ஆமாம், என்னைப் போன்ற 'அத்வைதி'[!!! ??? :)] பக்திப் பாடல் எல்லாம் பாடலாமோ?

    கவியரசரின் அரசியல் வாதிகள் பற்றிய விமரசனத்தினைப் படித்து மகிழ்ந்தேன்.
    ஆமாம், இதையெல்லாம் ஏன் சிறுகூடல் பட்டியில் வாழும் அன்னையின் காதில் போய் சொல்லுகிறார்?

    ReplyDelete
  11. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    நல்ல பாடல்கள்...
    தொடர வாழ்த்துக்கள்...
    நன்றி.../////

    உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. Blogger Thanjavooraan said...
    அடடா! அரசியல் வாதிகளை நமது கவியரசரைப் போல அளந்து வைத்திருப்பவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அவரும் அரசியலில் இருந்தவர்தான். அப்படி இருந்த காலத்தை "வனவாசமாக" வருந்திச் சாடியவர் அவர். இயற்கையில் கண்ணனிடம் கொண்ட பக்தி, தான் பிறந்த வம்சத்தின் தெய்வ பக்தி இவை அத்தனையும் இருந்த காரணத்தால், அரசியல் சாக்கடையில் அவர் கண்ட உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எத்தனை உவமைகள். அத்தனையும் முத்தான உவமைகள். 'வைக்கோற் போரில்' படுத்த நாய், கடலில் விழுந்த மழைத்துளிகள், 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், இப்படி வரிசையாக நாட்டை (ஏ)மாற்றிய ஜனநாயகத் தலைவர்களை இதற்கு மேலும் வேறு யாராலும் நையாண்டி செய்ய முடியாது. அவருக்கு இணை அவரேதான்! குயில் பாட்டில் குயில் குரங்கைப் பார்த்து வர்ணிக்கும். அப்போது அது சொல்லுகிறது, மனிதர்கள் என்னதான் குரங்கைப் போல வாழ நினைத்தாலும் பட்டுமயிர் போர்த்த உடலுக்கும்,மரங்களில் தாவும் அழகுக்கும், வாலுக்கும் எங்கே போவார்கள் என்று எழுதுவார் பாரதி. அதைப் போல நையாண்டிதான் இது.வாழ்க கவியரசர் புகழ்./////

    ஆகா, உங்களின் ரசனை உணர்வு வாழ்க! நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  13. ///Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஜயா
    நன்றி////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  14. /////Blogger ஜி ஆலாசியம் said...
    முத்துமாரியை பற்றிய முத்தான பாடலது
    முழு பக்தியோடுப் பாடிப் பணிவோருக்கு
    முக்தியினை தந்தருள்வாள் அன்னையவள்.
    ஆடி வெள்ளி என்பதால் அழகிய பாடலோடு அன்னையின் அருள் பெற ஆற்றுப் படுத்தி இருக்கிறீர்கள்...
    அடுத்த வெள்ளியில் நடக்கும் புனித ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் பொருட்டு எனக்கு பிடித்த
    ''அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும்''
    அருளாளர் நாகூர் ஹனிபா அவர்களின் இனிய குரலில் வரும் பாடலை வகுப்பறையில் பதிவிட வேண்டுகிறேன் ஐயா!/////

    உங்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் ஆலாசியம். நன்றி!

    ReplyDelete
  15. /////Blogger ஜி ஆலாசியம் said...
    முத்தமிழில் முக்குளித்து கோர்த்தவரிகளன்றோ
    முத்தையாவின் முத்தான வரிகள்...
    நல்லதற்கும் நல்லவர்களுக்கும் இடமேது இந்த பூமியிலே என்பதை அருமையாகச் சொல்லியுள்ளார் கவியரசு!!!
    ஏடு கொள்ளாமலும் இசையில் நில்லாமலும்
    எழுதாமல் போனக் கவிபோல
    நாடு கொள்ளாமல் நல்ல பல தலைவர்களும் நம்மை விட்டே போனரே! என்ற கவிஞரின் ஆதங்கம் அன்ன்னையவளிடமே கொட்டுகிறார்!
    கவிதைப் பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. /////Blogger ஸ்ரவாணி said...
    அருமையான பாடல்கள்.
    அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.////

    அனைவருக்கும் என்று சொன்ன உங்களின் நல்ல மனம் வாழ்க! நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. /////Blogger Parvathy Ramachandran said...
    அம்பிகையின் அருள் போற்றும் பாடல் அருமை!!.
    எத்தனை தடவை கேட்டாலும் படித்தாலும் சலிக்காத பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆச்சரியப்படுத்தும் அமைதியான குரலும் வருடும் இசையும், பாடலின் ஆழ்ந்த கருத்துக்களும், சொந்தத் தாயிடம் நம் குறைகளைக் கொட்டுவது போன்ற பாவனையை ஏற்படுத்துவது உண்மை.
    //தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
    தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!//
    இந்த வரிகள் கூறும் உண்மை பிடிபட்டால், வாழ்க்கை என்ற வார்த்தையின் மகத்துவம் புரிபட்டு விடும். அந்தப் புரிதல் கிடைக்க அன்னை அருள வேண்டும்.
    முதல் வரி மட்டும்.'காற்றாகிக் கனலாகிக் கடலாகினாய்' என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
    அற்புதமான பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!!!./////

    எனக்கு கிடைத்த பாடல் வரிகளை நான் பதிவிட்டேன். முதல்வரியைப் பற்றி நீங்கள் சொல்லியதைச் சரி பார்த்து, திருத்தம் செய்கிறேன் சகோதரி!

    ReplyDelete
  18. ///Blogger Parvathy Ramachandran said...
    கவியரசரின் மற்றுமொரு அற்புதப் பாடல். சில நாட்களுக்கு முன்பு, ஒரு பிரபல பத்திரிகையில், 'ஏன் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை? என்ற கேள்விக்கு, கவிஞர்.வாலி அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலளித்திருந்தர். 'கவியரசர் கண்ணதாசன் 'எந்த அரசியல் கட்சியிலும் சேராதே' என்று எனக்கிட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டதனால் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை'. அவ்வாறு தன் சக கவிஞருக்கு கவியரசர் அறிவுறுத்தியதற்கு அரசியலில் அவரடைந்த கசப்பான அனுபவங்களே காரணம். அதற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது இந்தக் கவிதை. 'இந்தத் திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி' என்ற கவிஞர் பட்டுக்கோட்டையாரின் கவிதையும் நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி ஐயா!!!////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  19. ////Blogger Gnanam Sekar said...
    தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்! என்றும் அம்மன் அருளுடன் . அய்யா வணக்கம்////

    ஆமாம். பாடலில் உள்ள அசத்தலான வரி அது! எடுத்துச் சொன்னமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    என் இல்லத்தரசி நாள் தோறும் சமையல் செய்யும் போது சொல்லும் ஸ்லோகங்கள், செய்யுட்கள்,பாடல்கள் அகியவற்றில் முக்கிய‌ இடத்தைப் பிடித்திருப்பது 'கற்பூர நாயகியே கமலவல்லி...'. எந்தப் பாடல் அப்போது ஓடிக் கொண்டிருக்கிறதோ அதை வைத்து சமையல் எந்த நிலையில் உள்ளது என்பதை அடியேன் அறிவேன். இந்தப் பாடல் வந்துவிட்டால் இன்னும் 10 நிமிடங்களில் தட்டு வைப்பார்கள் என்று அறியலாம்.ம்ம்ம்... அவர்கள் சொல்லும் அனைத்தும் எனக்கும் கேட்டு கேட்டு மனப்பாடம் ஆனாலும் வாய் விட்டுச் சொல்ல அகங்காரம் தடுக்கும். ஆமாம், என்னைப் போன்ற 'அத்வைதி'[!!! ??? :)] பக்திப் பாடல் எல்லாம் பாடலாமோ?
    கவியரசரின் அரசியல் வாதிகள் பற்றிய விமரசனத்தினைப் படித்து மகிழ்ந்தேன்.
    ஆமாம், இதையெல்லாம் ஏன் சிறுகூடல் பட்டியில் வாழும் அன்னையின் காதில் போய் சொல்லுகிறார்?/////

    சிறுகூடல்பட்டி என்னும் செட்டிநாட்டுக் கிராமம் கவியரசர் கண்ணதாசனின் பிறந்த ஊராகும். பிள்ளையார் பட்டியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம். காரைக்குடியில் இருந்து 17 கிலோமீட்டர் தூரம். அந்த ஊரின் எல்லையில் மலையரசி அம்மன் கோவில் என்னும் சிறு கோவில் உள்ளது. பக்கத்தில் பெரிய கண்மாய் (ஏரி) மரங்கள் சூழ்ந்த ரம்மியமான இடம். அந்த அம்மனின் பக்தர் அவர். இளைஞனாக இருந்த காலத்தில் பல நாட்கள் பகல் பொழுதை அங்கேதான் அவர் கழித்தாராம். ஒரு நோட்டுப் புத்தகத்தில் கவிதைகளை எழுதிப் பழகியதும் அங்கேதான்! அந்த அம்மனின் அருளால்தான் தனக்குக் கவிதை எழுதும் ஆற்றல் வந்தது என்னும் நம்பிக்கையும் அவருக்கு உண்டு. அதனால் தன்னுடைய பாடல்கள் சிலவற்றில் அந்த தெய்வத்தைக் குறிப்பிட்டிருப்பார். விளக்கம் போதுமா?

    ReplyDelete
  21. வருகை பதிவு சொல்கிறோம்
    அனுமதி உண்டு தானே..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com