30.1.12

Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?



Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?

Star Temples - Part 8

தேவயானி என்ற பெயரைப் பார்த்தவுடன், கோடம்பாக்கம் நினைப்போடு நீங்கள் உள்ளே நுழைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!

இது வேறு தேவயானி!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் முன்னொரு காலத்தில் நடந்த கடும் யுத்தத்தில், அசுரர்களில் பலர் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் போய்விட்டார்கள்.

அவர்களுக்கு ஏதய்யா மேல் உலகம் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். எல்லோருக்குமே ஒரு மேல் உலகம் உண்டு. ஒபாமாவுக்கும் உண்டு உங்களுக்கும் உண்டு எழுதும் எனக்கும் உண்டு. அதுதான் இறைவன் இருக்குமிடம். சிவலோகம் அல்லது வைகுண்டம் அல்லது சொர்க்கம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரவர் நோக்கப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றிற்குப் போய்விட்டார்கள். அதாவது மரணமடைந்து விட்டார்கள்.

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சக்திவாய்ந்த மருதசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் இறந்துபோன அத்தனை பேர்களையும் மீண்டும் உயிர் பெறச்செய்தார்.

அந்த மந்திரம் தெரிந்தால், தங்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நினைத்த தேவர்கள் ஒரு ஆசாமியைப் பிடித்தார்கள். அவன் பெயர் கசன். குரு பகவானின் மகன். அவனைச் சரிகட்டி அனுப்பிவைத்தார்கள். மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுவருவதற்காக. அவனும், அசுரகுருவிடம் சென்றான்.
அவனுடைய தந்தை குரு பகவானும் அவனை ஆசிர்வதித்து அசுரலோகத்திற்கு அனுப்பிவைத்தார்.

சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி அவனுக்கு உதவி செய்ய, அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். இதைக் கண்ணுற்ற அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்குப் ஆபத்து வந்துவிடும் என நினைத்து, கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில், சாம்பலைக் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார்.

கசனைக் காணாது கலங்கிய தேவயானி, கசனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொல்லும்படி தன் தந்தையிடம் வேண்டினாள்.

அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு, தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான்.

சுக்கிராச்சாரியார், தன் மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று அவனிடம் கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவருடைய மகள் தேவயானி தனக்கு சகோதரி முறை வேண்டும் என்று கூறி, அவரது வேண்டுகோளைக் கடாசி விட்டு, தேவலோகத்திற்குப் புறப்பட்டான்.

கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை சப்தமலைகளாலும் தேவலோகத்திற்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டாள். பையன் அசுரலோகத்தில், தேவயானியின் அரவணைப்பிலேயே தங்கும்படியாகிவிட்டது.

கசனைக் காணாத குருபகவான், தன் மகனை மீட்டுத்தரும்படி பெருமாளை வேண்டி, தவமிருந்தார். பெருமாள், கருணை கொண்ட பெருமாள், சக்கரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு குருபகவானின் வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த தலத்தில் எழுந்தருளினார்.

அந்தத்தலம்தான் இன்று சித்திரரத வல்லபபெருமாள் கோவில் இருக்கும் இடம்.

சித்திரை நட்சத்திர தலம் அது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமியன்று), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் அவர், சித்தி ரரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.

எனவே அத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.

அத்தல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம்.

கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.  குருபார்க்கக் கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலன் அடையலாம். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிராத்தனை செய்து வலம் வந்தால், பலன் கிடைப்பது நிச்சயம்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தைக் கையில் ஏந்தியபடி இந்தப் பெருமாளை சுற்றி வருவது நல்லது. நன்மையளிக்கும்.

கோவில் இருக்கும் இடம்: குருவித்துறை என்னும் சிறு கிராமம். ரியல் எஸ்டேட்காரர்களின் கையில் சிக்கி தனது அடையாளத்தை இழக்காத சிறு கிராமம்.

மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது.

தில்லியில் வாசம் செய்தவாறு அரசியல்வாதிகள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கும் அன்பர் சுப்பிரமணிய சுவாமியின் சொந்த ஊர்தான் இந்த சோழவந்தான்,

அங்கே செல்ல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன. வசதி உள்ளவர்கள் வாடகை ஊர்திகளில் சென்று வரலாம். குலுக்கல் வண்டி - அதான் நம்ம ஆட்டோ ரிக்ஷா வசதியும் உள்ளது.

பவுர்ணமி நாட்களில் அல்லது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் செல்வது உசிதமானது.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30மணி முதல் - மதியம் 12 மணி வரை. பிறகு மாலை 3மணி முதல் - 6 மணி வரை. விழாக்காலங்களில் இந்த நேரம் மாறுபடும்.
-------------------------------------------------------------
‘Star of Prosperity’ என்று புகழப்படும் சித்திரை நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் பற்றிப் பிறகு பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்

புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம். அதுதான் உசிதமானது. நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி எழுதுகிறேன். சுக்கிராச்சாரியாரின் மருதசஞ்சீவினி மந்திரம், கசனைக் கொன்று, எரித்து சாம்பலை டாஸ்மாக் சரக்கில் சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்த செயல்கள் எல்லாம் நடக்குமா?’ என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கான தலம் குறிவித்துறையில் இரூக்கிறது என்ற தகவலை மட்டும்  எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

36 comments:

  1. கசன் தேவயானி கதையில் சுக்கிராச்சாரியர் டாஸ்மாக் சரக்கைக் குடித்தார்.
    அதில் கரைந்து இருந்த கசனின் சாம்பல் அவர் வயிற்றுகுள் சென்றுவிட்டது.
    இப்போது தேவயானி வற்புறுத்தியதால் கசனை உயிர்பிக்க வேண்டும். அவன் உயிர் பெற்று சுக்கிராச்சாரியார் வயிற்றில் இருந்து வெளியில் வந்தால்,சுக்கிராச்சாரியார் உயிரை விட வேண்டும் என்ற இக்கட்டில் மாட்டிக் கொண்டார்.அப்போது அவர் தான் குடித்தது தவறு என்றும், யாரும் குடிக்க வேண்டாம் என்றும் உலகத்தாருக்கு தன் வாழ்க்கை உதாரணத்தைக்கூறி அறிவுரை சொல்கிறார்.குடியின் தீமையைச் சொல்லவே, அந்தப்பழக்கம் உயிருக்கே உலை வைக்கும் என்பதற்காகவே இந்தக் கதை மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    தேவயானியை வைத்தே அதிகக் காமம் தவறு என்று ஒரு கதையும் உண்டு.
    யயாதி தேவயானி!
    நல்ல பதிவு ஐயா!

    ReplyDelete
  2. பதிவிற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. கட்டுரையின் கடைசி பாரா உண்மை பொதிந்தது. மகாகவி பாரதியார் வாக்கு எனக்கு வேத வாக்கு. அவர் சொல்கிறார், வேதங்கள் சத்தியங்கள் என நம்பு. புராணங்கள் கதைகள் என்பதை உணர்ந்து கொள் என்கிறார். வேதத்தில் உள்ள உண்மைகளை சாமானிய மக்களும் உணர்ந்து கொள்ளத்தான் புராணங்கள் ஏற்பட்டன. இதிஹாசங்களும் வேத சாரத்தை உணர்த்த வந்தவைகள் தான். எனவே புராணத்தையே வரலாறாக எடுத்துக் கொள்ளாமல், அதில் பொதிந்து கிடக்கும் சத்திய வாக்குகளைப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதைத்தான் பெரியோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சிலர் மேலோட்டமாக இந்தப் புராணங்களைப் படித்துவிட்டு கேலி செய்யவும், குறை கூறவும் செய்வது தவறு என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. நல்ல தகவல்களை சரியான கண்ணோட்டத்தில் தரும் ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete
  4. "ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பெயரை மிகவும் பொருத்தமாகச் சொல்லிச் சென்ற நண்பர் லாயர் என்பதற்கும், வட இந்திய லாயருக்கும் கொடுத்திருப்பது எப்படிப் பொருத்தம் என்பதை எனக்குச் சற்று விளக்கினால் நன்று."

    நேற்றைய மலரில் திரு.தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் அவர்கள் கேட்டது நம்ப ஊர் லாயர்==கேசவன்.வடநாட்டு லாயர் == "பஞ்சாப"(பஞ்சாப்)கேசவன்

    வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.மீண்டும் நமது மேன்மையுடைய வாத்தியார்,அய்யர்,தெமோழி,மைனர்,kmrk மற்றும் பலரின் பேர்களோடு சந்திப்போம்.

    ReplyDelete
  5. Vatthiyar said,
    "புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம்."

    வசூல்ராஜா MBBS இல் சொல்வதை போல் பழமொழி சொன்னால் ரசிக்கணும்.ஆராய கூடாது.

    ReplyDelete
  6. Thanjavooraan said...
    இப்படித் திகட்ட திகட்ட ஒருசேர வாரமலரில் கொடுத்து வருவதைச் சற்று விரிவுபடுத்தி, வார நாட்களிலும் கொடுங்களேன்.

    இது போன்ற எண்ணம் எனக்கும் வந்து வாத்தியாரிடம் அனுமதி கோரியுள்ளேன்.
    ஒரு ஜோக்.(சைவமா,அசைவமா தெரியவில்லை)

    குழ்ந்தை:அப்பா நான் எப்பிடி பிறந்தேன்??
    அப்பா:அதுவாடா செல்லம் இரவு தூங்கும்போது சாமி உன்னைய உங்க அம்மா வயித்துல வைச்சிட்டு போய்ட்டார்!!??
    குழ்ந்தை:அப்படியா?அப்ப நீ Dummypiece ஆ டாடி???!!!

    ReplyDelete
  7. //குழ்ந்தை:அப்படியா?அப்ப நீ Dummypiece ஆ டாடி???!!!//........

    ஆனந்தமுருகனின் இந்த ஜோக்கைப் படித்து சிரித்தபோதுதான் ஒன்று தோன்றியது தந்தையைக் காட்டிலும் மகன் மகா புத்திசாலி என்று.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    "ஓம் நமசிவாய" என்னும் ஆன்மிக தொடரில் இந்த கதையை நான் பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்திருக்கிறேன்,மிகவும் அருமையான தொடர் அது...அதை இன்று மீண்டும் வாத்தியார் அவர்கள் மீண்டும் என் கண் முன் கொண்டு வந்துவிட்டார்,மிக்க நன்றி ஐயா...
    யாருக்கு எப்படியோ,உண்மையில் நான் அதிகம் விரும்புவது புராணக் கதைகளை மட்டும் தான்...அதற்காகவே படித்த கதைகளையே மீண்டும் மீண்டும் விரும்பி படிப்பேன்...இதில் ஆராய்ச்சி நடத்துவது தேவையற்றது...கருத்துக்களின் ஆழத்தை நல்லதொரு கதையின் மூலம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும் என்பது நம் முன்னோர்கள் ஆராய்ந்து கண்டு,நம்மிடம் தந்து சென்றது...அதனால் அதை ஆராயாமல் ரசிப்பது தான் அறிவுடைய செயல் என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  9. \\Vatthiyar said,
    "புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம்."

    வசூல்ராஜா MBBS இல் சொல்வதை போல் பழமொழி சொன்னால் ரசிக்கணும்.ஆராய கூடாது.\\
    நீங்க‌ள் கூறும் வ‌ச‌ன‌ம் இட‌ம்பெற்ற‌ திரைப்ப‌ட‌ம் "ப‌ம்மல் கே ச‌ம்ம‌ந்த‌ம்" என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  10. இன்று ஜனவரி 30. தியாகிகள் தினம். அண்ணல் காந்திஜியின் நினைவு நாள்.
    நாட்டுக்க்காக இன்னுயிர் ஈந்த அனைத்துத் தியாகிகளுக்கும் நம் அஞ்சலியை உரித்தாக்குவோம்.

    ReplyDelete
  11. சிறு வயதில் நானும் இந்த கதையைப் படித்திருக்கிறேன். அதை மீண்டும் என் நினைவுக்கு கொண்டு வந்து விட்டிர்கள்.

    ReplyDelete
  12. /// நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்///
    ஆர்வம் தாங்க முடியவில்லை, விரைவில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தன் உயிர் போய்விடும் எனத் தெரிந்தும் மகளுக்காக அவள் காதலனை உயிர் பெறச் செய்த சுக்கிராச்சாரியாரின் தந்தை பாசம் அருமை.
    காரியம் ஆனவுடன் ஓடிவிடாமல் குரு கற்றுக் கொடுத்த வித்தையை உபயோகித்து அவருக்கும் உயிர் கொடுத்த கசன் சிறந்த மாணவனுக்கு இலக்கணம்.
    பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  13. ///மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது.///
    பாண்டிய நாட்டிற்கருகில் 'சோழ'வந்தான் என்று ஊர் இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்.

    ReplyDelete
  14. ஆனந்தமுருகனின் "Dummypiece " நன்றாகவே வாய் விட்டு சிரிக்க வைத்தது
    நேற்றைய மலரில் தொழிலுக்கேற்ற பெயர் சூட்டிய ஆனந்தமுருகன் அந்த பெயருக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறார்.
    வகுப்பறைக்கு ஆனந்தம் தரும் காமெடியன் ஆனந்தமுருகன் (A comedian is one who entertains through comedy - என்ற பொருளில் சொல்கிறேன் , தவறாக எண்ண வேண்டாம் )
    அத்துடன்
    teacher - குருநாதன்
    head master - பரமகுரு
    seamstress - தையல் நாயகி
    makeup artist - சிங்காரி
    ஆகியவரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  15. Guru Vanakkam,

    More than the astrological facts, I like the way you present it.
    Thanks for posting this.

    RAMADU

    ReplyDelete
  16. //////Blogger kmr.krishnan said...
    கசன் தேவயானி கதையில் சுக்கிராச்சாரியர் டாஸ்மாக் சரக்கைக் குடித்தார்.
    அதில் கரைந்து இருந்த கசனின் சாம்பல் அவர் வயிற்றுகுள் சென்றுவிட்டது.
    இப்போது தேவயானி வற்புறுத்தியதால் கசனை உயிர்பிக்க வேண்டும். அவன் உயிர் பெற்று சுக்கிராச்சாரியார் வயிற்றில் இருந்து வெளியில்

    வந்தால்,சுக்கிராச்சாரியார் உயிரை விட வேண்டும் என்ற இக்கட்டில் மாட்டிக் கொண்டார்.அப்போது அவர் தான் குடித்தது தவறு என்றும், யாரும் குடிக்க

    வேண்டாம் என்றும் உலகத்தாருக்கு தன் வாழ்க்கை உதாரணத்தைக்கூறி அறிவுரை சொல்கிறார்.குடியின் தீமையைச் சொல்லவே, அந்தப்பழக்கம் உயிருக்கே

    உலை வைக்கும் என்பதற்காகவே இந்தக் கதை மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
    தேவயானியை வைத்தே அதிகக் காமம் தவறு என்று ஒரு கதையும் உண்டு.
    யயாதி தேவயானி!
    நல்ல பதிவு ஐயா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், மேலதிகத் தகவலுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. //////Blogger தமிழ் விரும்பி said...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  18. //////Blogger Thanjavooraan said...
    கட்டுரையின் கடைசி பாரா உண்மை பொதிந்தது. மகாகவி பாரதியார் வாக்கு எனக்கு வேத வாக்கு. அவர் சொல்கிறார், வேதங்கள் சத்தியங்கள் என நம்பு.
    புராணங்கள் கதைகள் என்பதை உணர்ந்து கொள் என்கிறார். வேதத்தில் உள்ள உண்மைகளை சாமானிய மக்களும் உணர்ந்து கொள்ளத்தான் புராணங்கள்
    ஏற்பட்டன. இதிஹாசங்களும் வேத சாரத்தை உணர்த்த வந்தவைகள் தான். எனவே புராணத்தையே வரலாறாக எடுத்துக் கொள்ளாமல், அதில் பொதிந்து கிடக்கும் சத்திய வாக்குகளைப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதைத்தான் பெரியோர்கள் சொல்லிச் சென்றி
    ருக்கிறார்கள். ஆனால் சிலர் மேலோட்டமாக இந்தப் புராணங்களைப் படித்துவிட்டு கேலி செய்யவும், குறை கூறவும் செய்வது தவறு என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. நல்ல தகவல்களை சரியான கண்ணோட்டத்தில் தரும் ஆசிரியருக்கு நன்றி.//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  19. /////Blogger Ananthamurugan said...
    "ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பெயரை மிகவும் பொருத்தமாகச் சொல்லிச் சென்ற நண்பர் லாயர் என்பதற்கும், வட இந்திய லாயருக்கும்
    கொடுத்திருப்பது எப்படிப் பொருத்தம் என்பதை எனக்குச் சற்று விளக்கினால் நன்று."
    நேற்றைய மலரில் திரு.தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் அவர்கள் கேட்டது நம்ப ஊர் லாயர்==கேசவன்.வடநாட்டு லாயர் == "பஞ்சாப"(பஞ்சாப்)கேசவன்
    வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.மீண்டும் நமது மேன்மையுடைய வாத்தியார், அய்யர், தெமோழி, மைனர், kmrk மற்றும் பலரின் பேர்களோடு
    சந்திப்போம்.///////

    நல்லது. பின்னூட்டம் வழியாக அடிக்கடி வாருங்கள். நானும் சந்திக்கிறேன்!

    ReplyDelete
  20. ///////Blogger Ananthamurugan said...
    Vatthiyar said,
    "புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம்." வசூல்ராஜா MBBS இல் சொல்வதை போல் பழமொழி சொன்னால் ரசிக்கணும்.ஆராய கூடாது.//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. //////Blogger Ananthamurugan said...
    Thanjavooraan said...
    இப்படித் திகட்ட திகட்ட ஒருசேர வாரமலரில் கொடுத்து வருவதைச் சற்று விரிவுபடுத்தி, வார நாட்களிலும் கொடுங்களேன்.
    இது போன்ற எண்ணம் எனக்கும் வந்து வாத்தியாரிடம் அனுமதி கோரியுள்ளேன்.//////

    கே.முத்துராம கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில், வகுப்பறையிலேயே தொடர்வது நல்லது. அதிக எண்ணிக்கையிலான வாசகர்களைச் சென்றடையும் என்றுள்ளார். அதைப் படித்தீர்களா?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஒரு ஜோக்.(சைவமா,அசைவமா தெரியவில்லை)
    குழ்ந்தை:அப்பா நான் எப்பிடி பிறந்தேன்??
    அப்பா:அதுவாடா செல்லம் இரவு தூங்கும்போது சாமி உன்னைய உங்க அம்மா வயித்துல வைச்சிட்டு போய்ட்டார்!!??
    குழ்ந்தை:அப்படியா?அப்ப நீ Dummy piece ஆ டாடி???!!!///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //////Blogger Thanjavooraan said...
    //குழ்ந்தை:அப்படியா?அப்ப நீ Dummypiece ஆ டாடி???!!!//........
    ஆனந்தமுருகனின் இந்த ஜோக்கைப் படித்து சிரித்தபோதுதான் ஒன்று தோன்றியது தந்தையைக் காட்டிலும் மகன் மகா புத்திசாலி என்று.//////

    நல்லது. நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  23. ///////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    "ஓம் நமசிவாய" என்னும் ஆன்மிக தொடரில் இந்த கதையை நான் பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்திருக்கிறேன்,மிகவும் அருமையான தொடர் அது...அதை இன்று மீண்டும் வாத்தியார் அவர்கள் மீண்டும் என் கண் முன் கொண்டு வந்துவிட்டார்,மிக்க நன்றி ஐயா...
    யாருக்கு எப்படியோ,உண்மையில் நான் அதிகம் விரும்புவது புராணக் கதைகளை மட்டும் தான்...அதற்காகவே படித்த கதைகளையே மீண்டும் மீண்டும்
    விரும்பி படிப்பேன்...இதில் ஆராய்ச்சி நடத்துவது தேவையற்றது...கருத்துக்களின் ஆழத்தை நல்லதொரு கதையின் மூலம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும் என்பது நம் முன்னோர்கள் ஆராய்ந்து கண்டு, நம்மிடம் தந்து சென்றது...அதனால் அதை ஆராயாமல் ரசிப்பது தான் அறிவுடைய செயல் என்று
    நினைக்கின்றேன்...//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. /////Blogger R.Srishobana said...
    \\Vatthiyar said,
    "புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம்." வசூல்ராஜா MBBS இல் சொல்வதை போல் பழமொழி சொன்னால் ரசிக்கணும்.ஆராய கூடாது.\\
    நீங்க‌ள் கூறும் வ‌ச‌ன‌ம் இட‌ம்பெற்ற‌ திரைப்ப‌ட‌ம் "ப‌ம்மல் கே ச‌ம்ம‌ந்த‌ம்" என்று நினைக்கின்றேன்...//////

    இரண்டு படங்களுமே கிரேசி மோகனின் திரைக்கதை வசனத்தில் வந்தவை ஆகும்!

    ReplyDelete
  25. ////////Blogger kmr.krishnan said...
    இன்று ஜனவரி 30. தியாகிகள் தினம். அண்ணல் காந்திஜியின் நினைவு நாள்.
    நாட்டுக்க்காக இன்னுயிர் ஈந்த அனைத்துத் தியாகிகளுக்கும் நம் அஞ்சலியை உரித்தாக்குவோம்.//////

    காந்தி என்றால் அம்மா சோனியாவையும், மகன் ராகுல் காந்தியையும் மட்டுமே மக்கள் நினைக்கும் அளவிற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அண்ணலை எல்லாம் மறந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.

    “நன்றி கெட்ட மாந்தரடா
    நானறிந்த பாடமடா”
    - கவியரசு கண்ணதாசன்

    ReplyDelete
  26. ///////Blogger minorwall said...
    நல்ல கதை..//////

    நல்லது. நன்றி மைனர்!

    ReplyDelete
  27. //////Blogger iyer said...
    இது
    வருகை பதிவு..//////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  28. //////Blogger ananth said...
    சிறு வயதில் நானும் இந்த கதையைப் படித்திருக்கிறேன். அதை மீண்டும் என் நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்./////

    அதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததில் அடியேனுக்கும் மகிழ்ச்சிதான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  29. ///////Blogger தேமொழி said...
    /// நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்///
    ஆர்வம் தாங்க முடியவில்லை, விரைவில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    தன் உயிர் போய்விடும் எனத் தெரிந்தும் மகளுக்காக அவள் காதலனை உயிர் பெறச் செய்த சுக்கிராச்சாரியாரின் தந்தை பாசம் அருமை.
    காரியம் ஆனவுடன் ஓடிவிடாமல் குரு கற்றுக் கொடுத்த வித்தையை உபயோகித்து அவருக்கும் உயிர் கொடுத்த கசன் சிறந்த மாணவனுக்கு இலக்கணம்.
    பதிவிற்கு நன்றி ஐயா./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. //////Blogger தேமொழி said...
    ///மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது./// பாண்டிய நாட்டிற்கருகில் 'சோழ'வந்தான் என்று ஊர் இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்.//////

    சோழர்கள் படையெடுத்து வந்து தங்கிய ஊராக இருக்கலாம்:-)))))

    ReplyDelete
  31. //////Blogger தேமொழி said...
    ஆனந்தமுருகனின் "Dummypiece " நன்றாகவே வாய் விட்டு சிரிக்க வைத்தது. நேற்றைய மலரில் தொழிலுக்கேற்ற பெயர் சூட்டிய ஆனந்தமுருகன் அந்த
    பெயருக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறார். வகுப்பறைக்கு ஆனந்தம் தரும் காமெடியன் ஆனந்தமுருகன் (A comedian is one who entertains through
    comedy - என்ற பொருளில் சொல்கிறேன் , தவறாக எண்ண வேண்டாம் )
    அத்துடன்
    teacher - குருநாதன்
    head master - பரமகுரு
    seamstress - தையல் நாயகி
    makeup artist - சிங்காரி
    ஆகியவரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா?///////

    தாய்க்குலத்திற்கு மறுப்பேது? சேர்த்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  32. //////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    More than the astrological facts, I like the way you present it.
    Thanks for posting this.
    RAMADU//////

    உங்களின் பாராட்டிற்கு சால தாங்ஸண்டி ராமுடு காரு!!

    ReplyDelete
  33. சோழர்கள் படையெடுத்து வந்து தங்கிய ஊராக இருக்கலாம்:-)))))

    சோழன் படையெடுத்து வரவில்லை,,
    சோழன் உவந்தான் என்ற பெயர் தாங்கிய இவ் ஊர் மருவி இப்படி அழைக்கப் படுகிறது.

    இவ் ஊரின் அருகில் இருக்கும் "திருவேடகம்" என்னும் ஊரில் உள்ள "திருவேடகநாதர்" சுயம்பு லிங்கம்..

    இங்கு தான் சமனர்களுடன் வாதிட்ட சம்பந்தப் பெருமான் புனல் வாததில் வென்று திரு ஏடு காவிரியை எதிர்த்து நின்றது..

    "வாழ்க அந்தனர்" எனத் தொடங்கும் இந்த பதிகத்திற்கு சேக்கிழார் பெருமான் 24 பாடல்களில் விரிவாக்கம் தந்து இருப்பார்.. அவர் மெய்சிலிர்த்து எழுதியதை அவரது பாடல்கள் பதிவு செய்யும்..

    இந்த தகவல்களை எழுதுகையில் எமது உள்ளமும் அப்படியே...


    திருப்பாசுரம் எனத் தொடங்கும் இந்த திருப்பதிகம் 12 பாடல்களை உடையது..

    நம்ம ஊரை வுட்டுட்டலாமா வாத்தியர் அய்யா...?
    (அய்யர் சொல்லட்டுமே என அப்படி விட்டுவிட்டேன்னு சொல்லிடாதீங்க..)

    ஒரு நாளைக்கு இந்த பதிகத்தை எத்தனை முறை படிப்போம் என எமக்கே தெரியாது அத்தனை முறை படிப்போம்..

    அய்யருக்கு அத்தனை பிடித்த்த்த்த்தது
    அனுமதித்து முழு பாடலினையும் பதிவுடுங்களேன்... வகுப்பறை தோழர்களுக்காக

    ReplyDelete
  34. /////Blogger iyer said...
    சோழர்கள் படையெடுத்து வந்து தங்கிய ஊராக இருக்கலாம்:-)))))
    சோழன் படையெடுத்து வரவில்லை,,
    சோழன் உவந்தான் என்ற பெயர் தாங்கிய இவ் ஊர் மருவி இப்படி அழைக்கப் படுகிறது.
    இவ் ஊரின் அருகில் இருக்கும் "திருவேடகம்" என்னும் ஊரில் உள்ள "திருவேடகநாதர்" சுயம்பு லிங்கம்..
    இங்கு தான் சமனர்களுடன் வாதிட்ட சம்பந்தப் பெருமான் புனல் வாததில் வென்று திரு ஏடு காவிரியை எதிர்த்து நின்றது..
    "வாழ்க அந்தனர்" எனத் தொடங்கும் இந்த பதிகத்திற்கு சேக்கிழார் பெருமான் 24 பாடல்களில் விரிவாக்கம் தந்து இருப்பார்.. அவர் மெய்சிலிர்த்து எழுதியதை அவரது பாடல்கள் பதிவு செய்யும்..
    இந்த தகவல்களை எழுதுகையில் எமது உள்ளமும் அப்படியே...
    திருப்பாசுரம் எனத் தொடங்கும் இந்த திருப்பதிகம் 12 பாடல்களை உடையது..
    நம்ம ஊரை வுட்டுட்டலாமா வாத்தியர் அய்யா...?
    (அய்யர் சொல்லட்டுமே என அப்படி விட்டுவிட்டேன்னு சொல்லிடாதீங்க..)
    ஒரு நாளைக்கு இந்த பதிகத்தை எத்தனை முறை படிப்போம் என எமக்கே தெரியாது அத்தனை முறை படிப்போம்..
    அய்யருக்கு அத்தனை பிடித்த்த்த்த்தது
    அனுமதித்து முழு பாடலினையும் பதிவுடுங்களேன்... வகுப்பறை தோழர்களுக்காக/////

    அய்யருக்கு எதற்கு அனுமதி? எழுதுங்கள் வலையில் ஏற்றிவிடுகிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com