30.9.11

வெள்ளைக் காகத்தின் வேலை என்ன?

----------------------------------------------------------------------------------------
வெள்ளைக் காகத்தின் வேலை என்ன?

பக்தி மலர்

அந்தக் கூட்டம் ஜோனாதனின் பெற்றோர்களுக்கு மிகுந்த க‌வலை அளிப்பதாக இருந்தது.ஆம்! தன் மகனை குழுவிலிருந்து விலக்கப் போகிறார்கள் என்றால் எந்தத் தாய் தந்தைக்குத்தான் கவலை தோன்றாது?

இத்தனைக்கும் ஜோனாதனின் நடவடிக்கைகளைப் பற்றிப் புகார் வந்த போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் அவனுடன் பலமுறை  பேசித்தான் பார்த்தார்கள் அவனுடைய பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை.

ஜோனாதன் செய்த தவறுதான் என்ன?

அந்தக் குழுவில் உள்ள பலரும் சொன்ன புகார்களைப் பட்டியலிட்டுப் பார்க்காலாம்.

ஜோனாதான் உணவு எடுப்பதில் அக்கறை காட்டாமல் பறப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறானாம்.

"நம்முடைய ஜாதிப் பறவைகள் பறப்பதைவிட அதிக உயரம் இவன் பறக்க முயற்சி செய்கிறான்"

"இவன் செய்யும் சாகசச் செயல்களால் மற்ற இளைஞர்களான பறவைகளும் இவனைப்போலவே செய்ய ஆவல் கொள்கின்றன”

"பக்கவாட்டில் பறந்து பார்கிறான்.நல்ல உயரத்திற்குப் போய் விட்டு அங்கிருந்து இறக்கைகளை மடக்கிக்கொண்டு விழுந்து பார்க்கிறான்”

"'டைவ்' அடிக்க பார்க்கிறான்”

"பறப்பதில் இதுவரை நாம் செய்யாதவற்றையெல்லாம் இவன் செய்கிறான்”

"நம்முடைய வேலையான மீன் பிடித்து உண்பதை இவன் பெரும்பாலும் புறக்கணிக்கிறான்."

புகார்கள் முடிவில்லாமல் கூறப்பட்டன.

ஜோனாதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இந்த இடத்தில் நான் முக்கியமான ஒன்றை உங்க‌ளுக்குச் சொல்லி விட வேண்டும்.

ஜோனாதன் மனிதன் அல்ல. அவனுடைய முழுப்பெயர் "ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல்" ஜோ ஒரு கடற்பறவை.கடற்காக்கை என்று சொல்லலாம்.

கடற் காக்கைகளை நமது வேதாரண்யம் போன்ற கடற்கரைகளில் காணலாம்.

அவைகள் வெள்ளை நிறத்தில் ந‌ம் கறுப்புக் காக்கைகளைப் போலவே 'காகா'என்றே கறையும்.

'சீ கல்' பெரிய இறக்கைகள் பெற்று இருந்தாலும், கடல் அலைகள் எழும்பும் உயரத்தை தாண்டிப் பறக்க மாட்டா.

நம் ஹீரோ ஜோ அந்த இனப் பறவைகளில் சற்றே வித்தியாசமான பிறவி.

"ஜோ! நான் சொல்வதைக்கேள். நாம் பறப்பதற்காகப் பிறக்கவில்லை. மீன் பிடித்து உண்ணவே பிறந்துள்ளோம்." இது தலைவர் சீ கல் கூறியது.

"பணிவுடன் உங்க‌ளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் பெரியவரே! உங்க‌ளுடைய கருத்து மிகவும் பழமையான கருத்து. நாம் மீன் பிடித்து உண்பதே பறப்பதற்காகத்தான். நமக்கு இயற்கை அளித்துள்ள கொடை பறப்பதற்கான இறக்கைகள்.அவற்றை நாம் செவ்வனே பயன்படுத்தி மேலும் சிறப்பாகப் பறக்க வேண்டும் என்பதே என் கொள்கை." என்றான் ஜோனாதன்!

"அப்படியானால் நம் குழுவின் கட்டுப்பாட்டை மீறி செயல் பட்டுக் கொண்டே தான் இருப்பாயா?"

"நான் தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, கூடிக் கிழப்பருவம் எய்தி,பின் கூற்றுக்கு இரையாகிப் போகும் வேடிக்கையான பிறவி அல்ல.எனக்குப் பறக்க சுதந்திரம் உள்ளது. எனவே மேலும் முயன்று பறப்பேன். பறப்பதில் உச்ச நிலையை அடைவேன்"

"இந்தக் கலகக்காரனை, நம் இனத் துரோகியை அடித்து விரட்டுங்கள்."

கட்டளையிட்டார் தலைவர். கட்டளை நிறைவேற்றப்பட்டது.

ஜோவின் தாய் கதறி அழுதாள். "மகனே இப்போதே சரியாக உணவு எடுக்காமல் எலும்பும் தோலுமாக உள்ளாய்.வேண்டாமடா இந்த ஆராய்ச்சியெல்லாம். பெரியவர்கள் சொல்லைக் கேளடா."

ஜோ மனம் மாறவில்லை. தன் இலட்சியமே பெரிதென சொந்த பந்தங்களை யெல்லாம் விட்டுப் பிரிந்து, பறந்து சென்றான்.

தனிமையில் தன் பறக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள மேலும் மேலும் முயற்சியில் ஈடுபட்டான்.

பருந்தும் ,வல்லூறும், கருடனும் பறக்கும் உயரத்தை எட்ட முடியுமா என்று எண்ணினான். 'உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?' என்று தன் இனத்தார் கேட்டது காதில் ஒலித்தது.'ஏன் குருவி பருந்தாகக் கூடாது?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

'வேகமாகப்பறக்கும் பறவைகள் எப்படி இற‌க்கைகளைப் பயன்படுத்துகின்றன, பறந்து கொண்டே பூவில் தன் உடலை நிலை நிறுத்தி தேன் உறுஞ்சும் சிட்டு எப்படி தன் சிறகுகளை படபடக்கிறது, ஒரிரு அசைவுகளைமட்டும் செய்து விட்டு கருடன் எப்படி நீண்டநேரம் காற்றில் வழுக்கிச்செல்கிறது' என்றெலாம் ஆய்வு செய்தான். எல்லாவற்றையும் தானும் செய்து பார்த்து பறப்பதில் ஒரு நிபுணன் ஆனான் நம் கதாநாயகன் ஜோ!

அந்தசமயத்தில் ஒளி பொருந்திய பொன்மய வண்ணத்தில் இர‌ண்டு பறவைகள் வானில் இருந்து ஜோவிடம் வந்தன.

"ஜோனாதன் லிவிங்ஸ்டன்! உன்னுடைய சாதனைகளைக் கண்டு மெச்சினோம். மேலும் உனக்குக் கற்பிக்கவே நாங்கள் வந்துள்ளோம்." என்றனர்.

ஜோ அந்த அதிசயப் பறவைகளின் தோற்றத்தைக் கண்டு வியந்தான்.

ஜோ: "நீங்கள் என்ன சொக்க வாசிகளா? சொர்க்கம் என்று ஒன்று உள்ளதா?"

புதிய பறவைகள்:"சொர்க்கம் என்பது ஒரு பூமியோ,இடமோ அல்ல. நீ இப்போது அடைய இருக்கும் , முயற்சி செய்து கொண்டிருக்கும் பணியில் நிறைவு எய்திவிட்டால் அதுவே சொர்க்கம்."

அந்த அதிசயப் பற‌வைகள் ஜோவிற்கு பல பறக்கும் வித்தைகளைக் கற்பித்த‌ன.

ஜோவும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். இனி பறக்கும் வித்தையில் ஜோவுக்குத் தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை என்ற நிலை வந்த போது அந்த அற்புதப் பறவைகள் காற்றில் கரைந்தது போலக் காணாமல் போயின.

பாடம் சொல்லிக்கொடுக்கும் போது, 'அன்பு' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கப் பணித்து இருந்தனர் அந்த அதிசயப் பறவைகள். ஜோவுக்கு அன்பு என்ற மந்திரம் மனதில் ஆழப்பதிந்துபோய், தன் இனத்தாரின் மீது அனபு பெருகியது. தன் மக்கள் வாழும் பகுதிக்குசென்றான். தனக்கு ஒரு சீடன் கிடைப்பான என்று காத்து இருந்தான்.

ஒருநாள் அப்படிஓர் இளைஞன் கிடைத்தான். தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அந்த சீடனுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு
ஜோனாதன் மேல் நோக்கிப் பறக்கத் துவங்கினான். மேலும் மேலே, மேலே மேலே, மேலே...... விண்ணை எட்டும் வரை பறந்து மறைந்தான்.

Qoutes:
========
I want to fly where no seagull has flown before. I want to know what there is to know about life!
--------
Father, Mother: Son, this may not be the best life, but it's all we know. Jonathan: There's got to be more to life than fighting for fish heads!
------------------------------------------------------------------------
[the Elder banishes Jonathan from the flock]
The Elder: You are henceforth and forever outcast!
----------------------------------------------------------------
Jonathan: Listen, everybody! There's no limit to how high we can fly! We can dive for fish and never have to live on garbage again!
------------------------------------------------------------------------
Chang: Heaven isn't a place; heaven is perfection.
-------
Chang: Perfect speed isn't moving fast at all; perfect speed is being there.
-----------
Chang: To fly as fast as thought to anywhere that is now - you begin by knowing that you have already arrived...
----
Chang: I am a perfect expression of freedom, here and now.
----------
Jonathan: You have the freedom to be yourself, your true self, here and now - and nothing can stand in your way!
---------
Jonathan: I only wish to share what I've learned - the very simple fact that it is right for a gull to fly!
------------
Jonathan: The only true law is that which sets us free.
========================================================================
இது RICHARD BACH என்பவர் எழுதிய Jonathan Livingstone Seagull (1970களில் வெளிவந்து பிரபலமான)தத்துவ நாவலைத் தழுவி எழுதியது.

கூகுள் ஆண்டவரைக்கேட்டால் முழுநாவலும் படிக்கக் கிடைக்கும். இந்திய, இந்து, பெளத்த மதக் கொள்கைகள் மேற்கே பரவியதன் தாக்கமாக
இந்த நாவல் வெளி வந்துள்ளது.

ஜீவாத்ம பரமாத்ம தத்துவத்தை விளக்க நம் வேத உபநிடதங்களில் மரத்தின் மேல்  உணவெடுக்காமல் மேல் நோக்கியே அமர்ந்திருக்கும் பறவையும், கீழ்க்கிளைகளில் உணவைக் கொத்திக் கொன்டு இருக்கும் பறவையும் பேசப்பட்டுள்ளன.கீழ்க்கிளையில் உணவெடுக்கும் பறவை சலித்துப் போய் மேற்கிளையில் உள்ள பறவையிடம் மெள்ள மெள்ள சென்று அடையுமாம்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:
வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

============================================================
வாழ்க வளமுடன்!

29.9.11

பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு

 ----------------------------------------------------------------------------------------------------
பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு

வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப்  புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table

பாஸந்தி முதல் கிண்ணம்

-----------------------------------------------------------------------------
மார்கழித் திங்கள் அல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடைபெறும் உயிரல்லவா!

- கவிஞர் வைரமுத்து

சங்கமம்’ என்னும் திரைப் படத்தில் வரும் பாடலின் துவக்க வரிகள் இவைகள். என்ன அசத்தலான வரிகள் பாருங்கள். நாயகி நாயகனை  நினைத்துப் பாடுகிறாள். ஒரு முறை அவனது திருமுகம் பார்த்தால் போதும். அதற்குப் பிறகு உயிர் போனாலும் பரவாயில்லை என்னும்  தொனியில் “ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடைபெறும் உயிரல்லவா!” என்கிறாள்

இதல்லவா காதல் மயக்கத்தில் வரும் கலக்கலான உணர்வு. கவிஞர் அசத்தியிருக்கிறார்.

இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை எங்கோ கேட்ட மாதிரி இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. ஆண்டாள் பாசுரத்தில் வரும் வரிகள் அவைகள். அதையும் உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.

(ஆண்டாள் பாமலை:
மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயணனே நமக்கே பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏலோர் எம்பாவாய்!)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாஸந்தி இரண்டாவது கிண்ணம். 

பாஸந்தி இனிப்பு. திகட்டும் என்று நினைப்பவர்கள் தாவிக்குதித்து அடுத்த ஐட்டத்திற்குப் போய் விடலாம்.

------------------------------------------------------------------------------
ஒரு பெண்ணின் ஏக்கத்தை, உள்ளத் துவளலை, எட்டு வரியில் என்னமாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். பாடல் வரிகளைப் பாருங்கள்:

"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே


ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா"


மலரையும். மங்கையையும், தேனையும் எப்படிக் கொக்கி போட்டு எழுதியுள்ளார் பார்த்தீர்களா? முழுப் பாடலும் வேண்டும் என்பவர்களுக்காக
பாடல் வரிகளை முழுமையாகக் கீழே கொடுத்துள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா

1.
    சுடும்போதும் சிரிப்பேன்; துன்பம்
         சுட்டபின் தென்றல் வந்து
    தொடும்போதும் சிரிப்பேன்; தீய
         சொல்லினால் நெஞ்சில் காயப்
    படும்போதும் சிரிப்பேன்; இந்தப்
         பாரெல்லாம் போற்றி மாலை
    இடும்போதும் சிரிப்பேன்; என்றன்
         இதயமே இறைவன் சோலை!

    - கவிதாயினி திருமதி செளந்தரா கைலாசம்

2.

    அண்டவெளிக்குச் சென்றவனும்
    திரும்பி விட்டான்
    அதையடுத்துச் சந்திரனுக்குச்
    சென்றவனும் திரும்பிவிட்டான்
    ஆனால்....
    அடுத்துள்ள சுடுகாட்டிற்குச்
    சென்றவன் எவனும்
    இதுவரை திரும்பவில்லை - ஏனோ?

    - கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓமப்பொடி
(பக்கோடாவைக் கடித்து சாப்பிட முடியாதவர்களுக்காக)

கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய அசத்தலான திரையிசைப் பாடல்கள். பள்ளி ஆசிரியான இவர் நாடக உலகில் நுழைந்து,  பிறகு திரையுலகில் கோலோச்சினார். கவியரசர் கண்ணதாசன் அவர்களே இவர் பாடல்களுக்கான ரசிகர் என்னும் போது, இவர் பாடல்களின் அருமை தெரியவரும்!

சில பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன். இவைகள் எல்லாம் அந்தக் காலத்தில் பல இதயங்களைக் கலக்கிய பாடல். அதை மனதில் கொள்க!

1
ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ!

படம்: அமுதவல்லி (1959) பாடியவர்கள். டி.ஆர்.மகாலிங்கம். பி.சுசீலா இசை. விஸ்வநாதன் ராமமூர்த்தி

2
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே..

இசை பாடிடுதே
-படம் மாயா பஜார் (1957) பாடியவர்கள். கண்டசாலா & பி.லீலா. இசை கண்டசாலா

3
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா

படம்- மணாளனே மங்கையின் பாக்கியம் (1957) பாடியவர்.பி.சுசீலா, இசை: ஆதி நாராயண ராவ்    

4.
இன்று போய் நாளை வா
படம்: சம்பூர்ணராமாயணம் (1961) பாடியவர். சி.எஸ். ஜெயராமன். இசை: கே.வி.மகாதேவன்

5
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்

- படம். மாயாபஜார் (1957) பாடியவர். திருச்சி லோகநாதன் இசை. கண்டசாலா

6.
கண்களும் கவி பாடுதே
படம் அடுத்த வீட்டுப் பெண் (1960) சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ், இசை:ஆதி நாராயண ராவ்

7.
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே

- படம்: அடுத்த வீட்டுப் பெண் (1960) பாடியவர் P.B ஸ்ரீநிவாஸ், இசை ஆதி நாராயணராவ்   

8
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

- படம் குலேபகாவலி (1955) பாடியவர்கள் ஏ.ஏம்.ராஜா & ஜிக்கி இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

9.
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே

- படம். வணங்காமுடி (1957) பாடியவர்கள். டி.எம்.எஸ் & பி.சுசீலா, இசை. ஜி.ராமநாதன்

10
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள்கதையை!

- படம்: மிஸ்ஸியம்மா (1955) இசை.எஸ். ராஜேஷ்வரராவ். பாடியவர்கள். ஏ.எம்.ராஜா & பி.லீலா
-------------------------------------------------------------------------------------
3
ஃபில்டர் காஃபி

     “எல்லாம் முடிந்து விட்டது.இனி நம்மைக் காப்பாற்ற யாராலும் முடியாது” என்ற உச்சகட்ட சோதனைக்கு ஆளாகித் தற்கொலை பண்ணிக் கொள்ள நினைக்கிற அவசரக்காரப் பிறவிகளுக்கு விமோசனம் தரக்கூடிய பதிலைத் தேடியே அந்த மனிதன் அந்த அமாவாசை இருட்டில் மலைமேல் ஏறிக்கொண்டிருந்தான் போலிருக்கிறது.

    ஏதோ விரக்தி. கல்லையும், முள்ளையும் இருட்டில் மித்துக்கொண்டு மலை உச்சியை நோக்கி வழி தெரியாமல் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந் தான். மழையும் பிடித்துக் கொண்டது. மலை உச்சியை அடைய கொஞ்ச தூரம்தான் இருக்க வேண்டும். அவன் கால் வைத்த பாறை ஒன்று சறுக்கியது. கால் தடுமாறி கீழே உருளத் துவங்கிவிட்டான் அந்த மனிதன். அதிர்ஷ்ட வசமாக அந்த இருட்டிலும் ஒரு மரத்தின்  கிளையைப் பற்றிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி கதறி அழத் துவங்கினான். எந்த வினாடியும் மரணம் காத்திருக்கிறது. நேரம் ஆக ஆகப் பற்றியிருந்த கிளை முறியத்துவங்குகிறது. அவனோ பிடியை விடவில்லை. இதோ....மரணம்.....

    காலை உதயம். எங்கும் வெளிச்சம். அந்த மனிதன் கீழே பார்த்தான். அப்படிப் பார்த்த பொழுது அவன் கால்களுக்கும் பூமிக்கும்  இருந்த இடைவெளி ஒரு அடி தூரம்தான். ஒரே ஒரு அடிதான்!

    எப்பேற்பட்ட பிரச்சினைக்கும் உரிய தீர்வு, விமோசனம், உங்கள் பக்கத்திலேயே  இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள  வழியில்லாமல் வாழ்வில் தடுமாறுகின்றவர்களுக்காகத்தான், அந்த மனிதன் இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கியபடி சித்திரவதையை அனுபவித்திருக்கிறான்.
    ஆக்கம்: முள்ளும்மலரும் படப்புகழ் இயக்குனர் மகேந்திரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து இளைஞர்களுக்காக க.க.படம்: க.க. என்றால் முன்பே சொல்லியிருக்கிறேன். கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்.
இந்த வாரம் யாராக இருக்கும்?. நீங்களே பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

சத்தியமாக தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி இவர்தான். 
யாரென்று தெரிகிறதா? தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள் 
நஷ்டம் ஒன்றுமில்லை. இவர் பெயரில் சென்னை பாண்டி பஜாரில் 
இவர் கட்டிய திரையரங்கு ஒன்று இருக்கிறது. 
மனோகரா திரைப் படத்தில்  வசந்தசேனை என்ற பெயரில் 
சிவாஜியுடன் கல்லா கட்டியவர் இவர்!
=========================================================
புதிர்


இந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர்.
யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதோ அந்தப் பாடல்:

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

(சிட்டு)

படம்: புதிய பறவை
பாடியவர்: பி.சுசீலா
படலின் நாயகி. பி.சரோஜாதேவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


======================================
வாழ்க வளமுடன்!

28.9.11

துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!

----------------------------------------------------------------------------------------
 துன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்!

    “துன்பத்திற்கு தோழிகளா? என்ன சார் சொல்கிறீர்கள்?”

உங்கள் புருவங்களை உயர்த்தவைக்க வேண்டும் என்பதற்காக அந்த வார்த்தைப் பிரயோகம். தஞ்சாவூர்ப் பெரியவர் போன்றோருக்காக சரியான
வார்த்தைகளுடன் செய்தி கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்:

துன்பம் எப்போதும் தனியாக வராது. துணையோடு தொடர்ந்து வரும்! அதாவது துணைகளை அழைத்துக்கொண்டுதான் வரும்

ஒரு சின்ன சம்பவம். என்ன நடந்தது பாருங்கள்

ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்றிருந்தது. அதே நேரம் மழையும் பெய்து கொண்டிருந்தது. மாட்டுக் கொட்டகை செம்மையாக இல்லாததால். பிறந்திருந்த கன்று ஈரத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. பெய்த மழையில் குடியிருந்த மண் வீட்டின் முன்பகுதி இடிந்து  விட்டது. இவற்றைச் சரி செய்யலாம் என்றால் உதவிக்கு ஆளில்லை. விவசாயியின் மனைவி உடல் நலமில்லாமல் படுத்திருந்தாள். போதாக்குறைக்கு வேலைக்காரன் இறந்துவிட்ட செய்தி வேறு கிடைத்துள்ளது. நிலத்தில் ஈரம் காய்ந்து போவ தற்குள் விதைத்துவிடலாம் என்று  அவன் விதை நெல்லைத் தூக்கிக் கொண்டு ஓடினால், எதிரே பழைய கடன்காரன் வந்து நின்று கொண்டு கடன் பாக்கியைக் கேட்கிறான். அவனுக்குச் சாக்கு போக்கு சொல்லி சமாளித்து விட்டு அனுப்பி னால், அரசாங்க ஆட்கள் உழுது பயிரிட்ட பூமிக்கு நிலவரி கேட்டுப்
பெறுவதற்கு வந்து நிற்கிறார்கள். ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றால், குருக்கள் வந்து உள்ளூர் கோவிலுக்கு உரிய  காணிக்கைப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு வற்புறுத்துகிறார். அவரையும் சமாளித்து அனுப்பினால், நேரம் காலம் தெரியாமல்  உள்ளூர்ப் புலவர் ஒருவர் வந்து, கவிதை பாடி பரிசு தருமாறு கேட்கிறார். அந்த விவசாயிதான் என்ன செய்வான்? அவனுக்கு ஏற்பட்டுள்ள  துன்பம் ஒன்றா இரண்டா, ஒவ்வொன் றாகத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தால் அவன்தான் என்ன செய்வான்? பார்க்க முடியாத, பார்த்து  ஆறுதல் சொல்ல முடியாத கொடுமைகள் அல்லவா அவன் படுகின்ற துன்பம்!

பாடலைப் பாருங்கள்

    “ஆசன மழை பொழிய இல்லம் விழ
         அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
    மாசரம் போகுதென்று விதை கொண்டோட
         வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்
    கோ வேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
         குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
    பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க
         பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!

         - விவேக சிந்தாமணி பாடல்

கதையின் நீதி: துன்பம் வரும்போது தனியாக வராது. துணையுடன் வந்துதான் நம்மைத் தொல்லைப் படுத்தும்! ஆகவே துன்பம் வருங்காலத்தில்
அதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2
எதெது எப்போது கவிழும்?


பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!

பாடலைப் பாருங்கள்:

    மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
        காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
    கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
        ஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே!

        - விவேக சிந்தாமணி

----------------------------------------------------------------------------------
உங்களைக் கவர்ந்த பாடலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

27.9.11

Astrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்!

---------------------------------------------------------------------------------------
Astrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்!

இந்தியாவில் அதிகம் பேரால் கையாளப்பட்ட, பார்க்கப்பெற்ற, அலசப்பெற்ற ஜாதகத்தை இன்று உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
அன்னை இந்திரா காந்தி அவர்களின் ஜாதகம்தான் அது!
----------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------
அவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்ததே. அதனால் அலசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஜோதிடம்  கற்றுக்கொண்டிருப்பவர்கள். இது போன்று நன்கு அறிந்தவர்களின் ஜாதகத்தை அலசிப் பார்த்தே தங்களுடைய  ஜோதிட அறிவை மேன்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 19.11.1917 அன்று இரவு 11.11 மணிக்கு அலகாபாத் நகரில் பிறந்தார்.

அவர் கடக லக்கினக்காரர். மகர ராசிக்காரர்.

ஜாதகத்தின் மிகச் சிறப்பான அம்சம் 3 பரிவர்த்தனை யோகங்கள் உள்ளன.

சந்திரனும் சனியும் லக்கினம் மற்றும் ஏழாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
சூரியனும் செவ்வாயும் இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன.
குருவும் சுக்கிரனும் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டில் பரிவர்த்தனை பெற்றுள்ளன

மூன்று பரிவர்த்தனை யோகங்களால் ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றதைப் போன்ற வலிமையைப் பெறுகின்றன. பொதுவாக 3 அல்லது 4 கிரகங்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் அது ஜாதகருக்கு அல்லது ஜாதகிக்கு  ராஜயோகத்தைக்கொடுக்கும்

இந்தப் பரிவர்த்தனைகள்தான் அவரை வலிமையுடையர் ஆக்கின. மன உறுதி கொண்டவர் ஆக்கின. பரிவர்த்தனைகளின் பலம் அதீத சக்திகளை உடையது. அந்த அதீத சக்திதான் அவரை இந்தியப் பிரதமாராக்கியதுடன், தொடர்ந்து 17 ஆண்டுகள் அவரைப் பதவியில் வைத்து அழகு பார்க்கவும் செய்தது.

எதிர்ப்பு சக்திகளையெல்லாம் உடைத்த அவர் தேசத்தின் நிர்வாகத்தை சீரமைத்தார். ஸ்திர தன்மையைக் கொடுத்தார்.

அவருக்கு சிம்மாசன யோகம் இருந்தது. 10ஆம் அதிபதி செவ்வாய் இரண்டில் வந்தமர்ந்தார்.அத்துடன் புத ஆதித்ய யோகம் ஐந்தாம் இடத்தில் இருந்தது.

குரு 11ல் அமர்ந்து, அவருக்கு செல்வத்தையும், வாழ்க்கை வசதிகளையும் அள்ளிக்கொடுத்தார்.ஆறில் இருந்த ராகு, அவர் தன்னுடைய எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்ய உதவினார்.

சனி திசை சந்திர புத்தியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவை இரண்டும் மாரக இடமான ஏழுடன்  சம்பந்தப்பட்டிருந்தால் அந்தக் காரியத்தைச் செவ்வனே செய்தன. 31.10.1984 ல் அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் அவரை எச்சரித்தார்.

ஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்த திருமதி. காந்தி அவர்கள் அந்தத்தேதியில், தன்னுடைய நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார். இருந்தாலும் விதிவிடவில்லை. மெய்காப்பாளர்கள் மூலம் அதை நிறைவேற்றியது. அவருடைய பாதுகாப்பிற்காகப் போடப் பட்டிருந்த காவலர்களில் இருவர் அவருக்கு  எமனாக மாறி அவரைச் சுட்டுக்கொன்ற கொடுமையை என்னவென்பது?

எல்லாம் விதி. வேறு என்னத்தைச் சொல்லமுடியும்?

அவர் சிறு வயதில் மிகப் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருந்தார். கல்கத்தாவில் உள்ள சந்திநிகேதன் பள்ளியிலும், பிறகு லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலும் படித்தார். மத்தியவயதில் அரசியலில் ஜொலித்தார். பிரதமரின் மகள் என்னும் மரியாதையோடு வலம் வந்தார்.

தன்னுடைய 49வது வயதில் நாட்டின் பிரதமரானார். சுமார் 17ஆண்டுகள் இந்தையப் பிரதமராக ஆட்சி செலுத்தினார். தனது 67வது வயதில் (31 October 1984 அன்று ) உயிர் நீத்தார்.

அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்ததன் காரணமாக 25 வயதில் (1942ல்) திருமணமான அவர் 43 வயதில் (1960ல்) தன் கணவர் பெரோஸ் காந்தியைப் பறிகொடுக்க நேர்ந்தது.

லக்கினத்தில் சனி இருப்பது அவயோகம். அதுவும் பெண்கள் ஜாதகத்தில் அப்படியொரு அமைப்பு இருந்தால் அவள் இளம் வயதிலேயே விதைவையாகி விடுவாள். சனியினுடன் சுபக்கிரங்களின் சேர்க்கை அல்லது பார்வை  இருப்பது மட்டுமே அதற்கு விதிவிலக்காகும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

26.9.11

Astrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்

அன்பர் காமராஜரை அறியாதவர் யார் இருக்க முடியும்?

சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்ட இரண்டாவது தலைவர் அவர்தான் (முதல் இடம் எப்போதுமே மகாத்மா காந்திக்குத்தான்!)

விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலே தந்தையைப் பறிகொடுத்ததால்  வறுமையில் அல்லல் பட்டார். ஆறு வயதில் தன் தந்தையை இழந்தார். தந்தை ஒரு தேங்காய் வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல் போனது. இளம் வயதில் ஒரு துணிக் கடையில் வேலை செய்தார். 16 வயதில் அரசியலில் நுழைந்து சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.சத்தியமூர்த்தியின் அரவணைப்பு கிடைத்தது.

கல்கத்தாவிற்கு அருகில் உள்ள அலிப்பூர் சிறையில் 2 ஆண்டு காலம் வாசம் செய்ய நேரிட்டது. 1942ல் மீண்டும்  சிறைப்பட்டு அமராவதி நகர் சிறையில் 3 ஆண்டு காலம் வாசம் செய்ய நேர்ந்தது.

13.4.1954ஆம் தேதி தமிழ் நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றார்

மூடிக்கிடந்த 6,000 பள்ளிகளைத் திறக்க வைத்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வித் திட்டத்தையும், மதிய உணவுத்  திட்டத்தையும் அறிமுகப்  படுத்திய முன்னோடி அவரே!

விவசாயத்திற்காக பவானி அணை, வைகை அணை, அமராவதி, சாத்தனூர் அணை பரம்பிக்குளம் பொன்ற அணைகள் எல்லாம் அவர்  காலத்தில் கட்டப்பட்டவையே!

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனம்,
நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனம், மணலி பெட்ரோலிய
நிறுவனம், போன்ற பலபெரிய தொழிற் சாலைகளும், அமபத்தூர் தொழிற்பேட்டை போன்றவைகள்  எல்லாம் அவர் காலத்தில் துவங்கப்பட்டவையே. இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம்.

சுமார் 10 ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்த அவர் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளவில்லை. சொந்தவீடு கூட இல்லாமல்  இருந்தவர்..

பின்னர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி,
இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்து பதவில்  அமர்த்தியவர்
அவரே. அதனால் கிங் மேக்கர் என்னும் பட்டத்தையும் பெற்றார் அவர்.

அவரால் பதவி பெற்றவர்கள் லால் பகதூர் சாஸ்திரி, மற்றும் திருமதி இந்திரா காந்தி அம்மையார்!

அவரின் பரம பக்தரான கவியரசர் கண்ணதாசன், அவரைப்பற்றி இப்படிக் குறிப்பிட்டார்.

“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்
 அன்பனே காமராஜா, உன்கையில் அதுவும் இல்லையே!”


என்ன அசத்தலான வரிகள் பாருங்கள்!

1967ல் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் துறவறம் பூண்டவர் 2.10.1975ஆம் தேதி  இறைவனடி சேர்ந்தார்

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்!
________________________________________________________


----------------------------------------------------------------------------------------
அவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!

லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான  வாழ்க்கை அமைந்தது.

சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது. 'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்” என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.

அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!

7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி,  மக்கள் என்று குடும்ப  வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம்  இருந்தது. அது அவருக்குப் பல  வழிகளில் கை கொடுத்தது.

ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக்  கவனியுங்கள். அவை இரண்டும்  அவருக்கு புத்தி சாதுர்யத்தையும், சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும்  பெற்றுத் தந்ததுடன், எடுத்த காரியங்களில் வெற்றிகளையும்  பெற்றுத்தந்தன!

இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி
பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும்  திரிகோண, கேந்திர
பலத்துடன்இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத்
தலைமைப் பதவியைப் பெற்றுத்தந்தன.

கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான
3 ஆம் இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான  பாக்கியஸ்தானத்தைப்
பார்த்ததால் பல யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப்
பெற்றுத்தந்தது.

பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி திசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல்
அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் - அதுவும் குறிப்பாக ராகு  கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்

ஒரு ஜாத்ககத்தை அலசுவது இப்ப்டித்தான். அதற்காகத்தான் இந்தப் பாடத்தை இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துப் பயனடைந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் டானிக்!
-------------------------------------------------------------------------------------------
2

நல்ல இல்வாழ்க்கை அமைவதற்கான ஜாதக அமைப்புக்கள் என்ன?
பதினோரு அமைப்புக்கள் உள்ளன. அதைவைத்து திருமணம் ஆக
வேண்டி யவர்கள்  தங்களுக்கு நல்ல இல்வாழ்க்கை அமையுமா
என்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நடுத்தரவயதினர்,  தங்கள்
உடன் பிறப்புக்களுக்கு அமையுமா என்று தெரிந்துகொள்ளலாம். வயதானவர்கள், தங்கள் மகன் அல்லது  மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்பும் பாடமாகும். அனைவருக்கும் பயன் உள்ள பாடமாகும்.

அது மேல் நிலைப் பாடம்.மேல் நிலைப்பாட வகுப்பில் அதைப் பதிவு செய்துள்ளேன். படிப்பவர்கள் அது பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
______________________________________________


வாழ்க வளமுடன்!

25.9.11

மகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது எது?

வாரமலர்

பதினான்கே வயதான ஜேக் நல்ல கால் பந்து ஆட்டக்காரன்.15 வயதுக்குக் குறைவான குழுவில் ஒரு முக்கிய உருப்பினன். 31  ஆகஸ்டு 2011 ஜேக்கின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாயிற்று. ஆம்! அன்றுதான்  கால் பந்து விளையாடும் போது அவனுக்கு ஓர் எதிர்பாராத விபத்து நேர்ந்தது.

 ஆவேசமாகப் பந்தை உதைத்து ஜேக் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தான்.'கோல் போஸ்டாக' இர்ண்டு உயரமான கம்புகள் நடப்பட்டு இருந்தன.தரையில் சொருகுவதற்கு வாகாக கூரான இரும்பு முனைகள் கம்புகளின் முனையில் இருந்துள்ளன.பந்து ஒரு'கோல் போஸ்டை'த் தாக்கி, அக் கம்பு தரையை விட்டுக் கிளம்பி அம்பு போல் பயணித்து ஜேக்கின் வலது புயத்தில் பாய்ந்து குத்தி,மறுபக்கம் வெளி வந்து விட்டது. திடீரென ஏற்பட்ட விபத்தால் ஜேக் அதிர்ச்சி அடைந்தானே தவிர பயமோ பதட்டமோ அடைய வில்லை.அவனுடைய அதிர்ஷ்டம் இரத்த நாளங்களைத் தாக்காமல் வெறும் சதையில்தான் இரும்பு முனை குத்தியுள்ளது.

நம் ஊரில் கன்னத்தில் முதுகில் அலகு குத்துவார்களே  அதுபோலத்தான். என‌வே இர‌த்த‌ம் வ‌ர‌வில்லை. எனெனினும் வ‌லி மிக‌வும் இருந்துள்ள‌து.க‌ம்பின் நீள‌ம் கார‌ண‌மாக‌ ஜேக்கால் ஆம்புல‌ன்ஸில் ஏற‌முடிய‌வில்லை.என‌வே குத்தியுள்ள‌ நிலையிலேயே க‌ம்பின் நீள‌ம் ர‌ம்ப‌த்தால் அறுக்க‌ப்ப‌ட்டு குறைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னால் ஏற்ப‌ட்ட‌ அசைவுக‌ள் பெருவ‌லியைக் கொடுத்தன‌. ஜேக் க‌ண் க‌ல‌ங்காம‌ல் பொறுத்துக் கொண்டான்.

அதன் பின்ன‌ர் அம்புல‌ன்ஸில் ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்துச் செல்ல‌ப் ப‌ட்டான்  ஜேக்.அங்கே உட‌னே அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்டு வீடு திரும்பினான். கோடை விடுமுறை முடிந்து 7 செப்ட‌ம்பெர் 2011 முதல் நாளே அன்றே ப‌ள்ளியில் ஆஜ‌ராகி விட்டான் ஜேக்! (நானா‌க‌ இருந்தால் அந்த‌ ஆண்டுப் ப‌டிப்பையே ஒத்தி வைத்து இருப்பேன்!)

இந்த‌ விப‌த்தைப்ப‌ற்றி முழு விவ‌ர‌த்தையும் இங்கிலாந்தில் உள்ள‌ எல்லா கால்ப‌ந்தாட்ட‌க் குழுக்க‌ளுக்கும் தெரிவித்து இது போன்ற‌ கூர்முனையுள்ள‌ 'கோல் போஸ்டு'க‌ளைத் த‌விர்க்க‌ அர‌சு அறிவுரை கூறியுள்ள‌து.அதுதான் ஒரு பொறுப்பான‌ அர‌சின் சிற‌ப்பு.

 ஜாக்கின் புகைப்படம், உங்கள் பார்வைக்காக!
--------------------------------------------------------------
2.
கம்மா‌ டிஸ்சார்டு என்ற‌ 25 வ‌ய‌து மங்கையின் பேட்டியில் இருந்து:

"கே: உங்க‌‌ளை எது புன் முறுவ‌ல் பூக்க‌ வைக்கும்?

ப‌:சூரிய‌ வெப்ப‌ம்,வெளிச்ச‌ம்,ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வின‌ர்க‌ள்!"

ந‌ன்றாக‌க் க‌வ‌னியுங்க‌ள். ம‌கிழ்ச்சி கொடுப்ப‌தில் முத‌லிட‌ம் கொடுப்ப‌து எது?

சூரிய ஒளி!

ஆம்! ஆண்டின் 7,8 மாத‌ங்க‌ள் ப‌னி, குளிர்காற்று,ம‌ழை, மேக‌ மூட்ட‌ம் என்று உள்ள‌ நாட்டில் சூரிய‌ ஒளியை க‌ண்டால் ம‌க்க‌ள் ம‌கிழ்ச்சி அடைகிறார்க‌ள். ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ள் தான் கோடை.ப‌னிக்கால‌த்தில் வெளியில் ந‌ட‌மாட‌ முடியாம‌ல் வீட்டிற்குள்ளேயே முட‌ங்கிக் கிட‌க்கும் பெண்க‌ள் முதிய‌வ‌ர்க‌ளுக்கு 'வின்ட‌ர் புளூஸ்'என்ற‌ ம‌ன‌ அழுத்த‌ நோய் உண்டாகுமாம்.

2012 ஒலிம்பிக்ஸ் ஜூலை ஆக‌ஸ்டு மாத‌ங்க‌ளிலேயே ந‌ட‌க்க‌ இருக்கிற‌து.

பிபிசி யின் ப‌ருவ‌நிலை அறிக்கையைப் பார்த்துவிட்டே எல்லோரும் ஒரு நாளின் ப‌ணிக‌ளைத் திட்ட‌மிடுகிறார்க‌ள்.95% கால‌நிலை அறிக்கை ச‌ரியாக‌வே உள்ள‌து. சில‌ ச‌ம‌ய‌ம் அறிக்கையின் ப‌டி இய‌ற்கை ந‌ட‌க்க‌ வில்லை எனில் எல்லோரும் அந்த‌ 'மெட்ரோலாஜிக‌‌ல் துறையைக் க‌ண்டிக்கிறார்க‌ள். ச‌மீப‌த்தில் ப‌ருவ‌ நிலை அறிக்கை த‌யாரிக்கும் அறிவிய‌ல் முறை ச‌ரிதானா என்ப‌தை ஆய்வு செய்ய‌ ஒரு நாடாளும‌ன்ற‌க் குழு அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

(மேலும் ஓரிரு வார‌ங்க‌ள் இல‌ண்ட‌ன் செய்திக‌ள் தொட‌ரும்.)

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்!
ஆக்க‌ம்:
நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராம‌கிருஷ்ண‌ன். (லால்குடி).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23.9.11

எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

-------------------------------------------------------------------------------
எதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------
1.
நாளை புரட்டாசி சனிக்கிழமை. திருமலைவாசனை நினைப்பதற்கும், வணங்குதற்கும், போற்றி மகிழ்வதற்கும் உகந்தநாள். ஏழுமைலயானைப் போற்றிபாட கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான, அர்த்தும் பொதிந்த பாடலை உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா

திருப்பதி...

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா

திருப்பதி...

- பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

  “உரைத்தது கீதை என்ற தத்துவமே, அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே” என்னும் வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------
2

--------------------------------------------------------------------------------
பேராசிரியன் ஆனபிறகு ஆரம்பப் பள்ளிகளை அழிக்கச் சொல்வார்களா என்ன?
 

யோகா, தியான, பிராணாயாம வகுப்புக்கள் இந்நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. இன்று நகரத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒரு முறையாவது இப்படிப்பட்ட வகுப்புக்கள் பற்றிக் கட்டாயம் கேள்விப் பட்டிருப்பார். ஆழ்நிலை தியானம்(ட்ரான்சிடென்டல் மெடிடேஷன்),வாழும் ‌கலைப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, குண்டலினியோகம் என்று இவற்றில் பலவிதம்.

தியானத்தின் போது எந்தவிதமான குறியீடுகளையும்(சிம்பல்) மனதில் நினைக்காமல், நிர்மலமான மனதற்ற வெளியில் உலாவுதல்தான் மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. குறியீடுகள்,அடையாளங்கள்,உருவங்கள்,ஏன் தீப ஒளி போன்ற தியானத்திற்கு உதவி செய்யும் கருவிகளனைத்தும் தவிர்க்கப்பட வேண்டுமென்பது ஒரு நிலைப்பாடு.

அவ்வாறு தியானத்திற்கு உதவியாக இருக்கும் உருவம் போன்றவைகளை மனதில் இருத்தி தியானம் செய்தல் 'கீழ்நிலை' தியானம் என்றும், உருவம் தவிர்த்த தியானமே 'மேல்நிலை' என்றும் பாகுபடுத்திச் சொல்வார்கள்.

 உருவ வழிபாடு பற்றிக் கடுமையான விமர்சனக்கள் உள்ள ஆப்ரஹாமிக் மதங்களிலும் கூட, அவர்களுடைய வழிபாட்டு முறைகளைக் கூர்ந்து நோக்கினால் உருவ வழிபாட்டுச் சாயல்களைக் காண முடியும். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமான வெட்ட வெளிக்கு திக்கு திசை உண்டா? ஒரு திக்கு நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால் அதுவும் குறியீடு (சிம்பல்) தானே?

18 வயது இளைஞனாக என் குருநாதரிடம் மந்திர உபதேசம் பெற்றபோது அவர் என் வயதுக்கு ஏற்றபடி ஒரு தியான முறையை உபதேசித்தார்.

அது என்ன?

"உன் வயது உனக்குக் குறியீடு இல்லாத தியானம் செய்ய‌த் தடையாக இருக்கும்.எனவே நான் சொல்லும் முறைப்படி முதலில் தியானம் செய்து வா. பின்னர் தானாகவே உருவமற்ற தியானம் உனக்குக் கை கூடும். இப்போது என் முன் வந்து இந்த தீட்சை பெற இன்று காலை முதல் நீ செய்த செயல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்து இங்கே என் முன் வந்து அமர்ந்தது வரை ஒவ்வொன்றாகக் கூறு பார்க்கலாம்" என்று பணித்தார்.

நானும், பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 4.30 மணி) எழுந்தது, குளித்து முடித்து புத்தாடை அணிந்தது, பூசைக்கான பொருட்களைச் சேகரம் செய்தது, குரு காணிக்கைப் பொருட்களை எடுத்து வைத்தது, கோவிலுக்குள் நுழைந்தது, மண்டபத்தில் குருவின் வரவுக்காகக் காத்திருந்தது, குருவைக் கண்டு வணங்கியது, இப்போது அவர் முன் உபதேசம் பெற அமர்ந்து இருப்பது,என்று வரிசையாகக் கூறினேன்.

ஒவ்வொரு செயலைக் கூறியவுடனும் 'அதனை இன்னும் கொஞ்சம் விவரி' என்பார். எடுத்துக்காட்டாக,'கோவிலுக்குள் நுழைந்தேன்' என்றவுடன்,'அதனை மேலும் விவரிக்கும் முகமாக,' கோவிலில் என்ன என்ன பார்த்தாய்?' என்று தூண்டுவார். நானும் மேலும் நுணுக்கமாக விவரிப்பேன்.

"நாள் தோறும் இதேபோல வெளியில் நடந்த செயல்களில் துவங்கி மெதுவாக ஆன்மீகச் சூழலுக்கு வந்து மனதாலேயே இறைவனைத் தரிசித்து தியானம் செய்" என்று உபதேசித்தார்.

உடனே எனக்கு மனதாலேயே கோவில் புனைந்த ஒரு நாயன்மார் நினைவுக்கு வந்தார். ஒரு கோவிலைக் கட்ட நடைமுறையில் எவ்வளவு மாதங்கள்  ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் மாதங்கள் அந்த நாயன்மார் கோவில் கட்டும் நினைவாகவே இருப்பாராம் அவர்தான் திருநின்றவூர் அருகில் வாழ்ந்த பூசலார் நாயனார். அரசன் கட்டிய கோவிலுக்கு முன்னரே பூசலாரின் இதயக் கோவிலுக்கு இறைவன் எழுந்தருளினார் என்பது வரலாறு. பூசலாரின் வழியைத்தான் என் குருநாதர் எனக்குக் காட்டி அருளினார்.

உங்களுக்குப் பிடித்தமான ஒரு கோவிலுக்குச் சென்று ஒரு நாள் முழுதும் அங்கேயே இருங்கள்.அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, தீப அலங்காரம், நாகஸ்வ‌ர ஓசை, மணியோசை அர்ச்சனை தீபாராதனை அனைத்தையும் மனதில் பதித்துக்கொள்ளுங்கள்.நந்தவனத்தில் உலாவி என்னென மலர்கள் பூக்கின்றன என மனதில் வாங்குங்கள்.சிலைகளை யெல்லாம் உற்று நோக்கி மனதில் பதியுங்கள்.

தியானம் செய்ய மறுநாள் அமரும் சமயம், அக்கோவிலில் கண்ட காட்சிகளையெல்லாம் மனத்திரையில் சினிமாப்படம் போல ஓட்டிப் பாருங்கள் மெதுவாக ஒவ்வொரு இடமாகக் கடந்து, அதாவது கொடிமரம், பலிபீடம்,அர்த்த மண்டபம், கருவறை,என்று மனதாலேயே பயணம் செய்யுங்கள்.கருவறையில் நடைபெறும் அர்ச்ச்னை முதலியைவைகளை மனக் காதால் கேளுங்கள்.நாதஸ்வர ஓசை,மணியோசையை
உணருங்கள். பெரிய தீபாராதனை நடைபெறுவதை மனக்காட்சியாகக் காணுங்கள்.

இந்த முறையில் உங்க‌ளுக்கு தியானம் உடனடியாகக் கைகூடாவிட்டாலும், மன ஒருமைப்பாடு ஓரிரு வாரங்களில் கிட்டிவிடும்.மன ஒருமைப்பாடு ஏற்பட்டுவிட்டாலே மன அமைதியும்,நிதானமும் கைகூடிவிடும். பின்னர் தியான நிலை வெகு சீக்கிரத்திலேயே கை கூடிவிடும்.

'மேல் நிலை' தியானக்காரர்கள் இதனை ஏளனம் செய்யலாம். செய்தால் செய்துவிட்டுப்போகட்டும். அயர்வுறாதீர்கள்.பெரிய பேராசிரியர்கள் எல்லாம் ஆரம்பக் கல்விக்கற்றுத்தான் பேராசான்கள் ஆனார்கள். தாங்கள் முன்னேறி விட்டதால் ஆரம்பப் பள்ளிகளை பேராசிரியர்கள் அழிக்கச் சொல்லமாட்டார்கள்தானே?

எனவே இந்த எளிய  தியான முறையைக் கைக்கொண்டு இறையருள் பெறுவீர்களாக!

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

22.9.11

பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

----------------------------------------------------------------------------------------
பாஸந்தி, பக்கோடா மற்றும்  ஃபில்டர் காஃபி

புதுப் பகுதி

வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table



1. பாஸந்தி

பெண்ணை வர்ணிப்பதற்கு - அதுவும் கேட்பவன் அசந்து போகும் அள்விற்கு வர்ணிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனை விட்டால் யார் இருக்கிறார்கள்?

ஒரு அழகான பெண்ணை அவர் இப்படி வர்ணிக்கின்றார்:

"மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
எங்கும் உன் எண்ணமே
எல்லாம் என் வண்ணமே"


அடடா,  மின்னல் பாதி, தென்றல் பாதி (அதாவது இரண்டும் சேர்ந்து) உன்னை ஈன்றதோ (பெற்றதோ)  என்கிறாரே! இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது? அத்தோடு விட்டாரா?

நீ விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி

என்று வேறு அடுக்கிக் கொண்டே போகிறார்

என்னவொரு அசத்தலான கற்பனை!!!!

முழுப்பாடலையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஸந்தி இரண்டாவது கிண்ணம்



குறும்பு

“என் விழிகளே
விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளில்
வருட நினைக்கும்போது
உன் மேனிவீட்டை
முந்தானைக் கதவால்
மூடிக் கொள்கிறாயே -
தென்றலுக்கு
லஞ்சம் கொடுத்து
அதைத்
திறக்கச் சொல்ல
மாட்டேனா?

- கவிஞர் வாலி
-----------------------------------
அது ஏன்?
மரங்கள்
தமக்குள்
முனகிக் கொண்டன.

    இந்த மனிதர்கள் -
    நம்மைக் கொண்டு
    பல
    சிலுவைகளைச்
    செய்து விடுகிறார்கள்....

    ஆனால்....

    தம்மைக் கொண்டு
    அவர்களால்
    இன்னமும்
    ஓர்
    ஏசுவைத்
    தயாரிக்க
    இயலவில்லையே!
    அது ஏன்?

    - கவிஞர் வாலி
----------------------------------------------------
2. பக்கோடா

குடியரசு தினம்

“ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சித்
தலைவர்களுக்கும்!

பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்.

“யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?”

- கவிஞர் மு.மேத்தா
------------------------------------------------
அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்
அமெரிக்காவோ
எண்ணெய்க்காக
வளைகுடா நாடுகளின்
தலையைத் தடவுகிறது......

- கவிஞர் மு.மேத்தா
---------------------------------------------------
3. ஃபில்டர் காஃபி


   “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா?

   “சொல்லுங்கோ”

   வாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு    பிராமணன்.

   ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.

   சொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது.

   “சுவாமி நான் வரட்டுமா?

   “ரொம்ப சந்தோஷம்” இரண்டு கை அறைந்து கூப்புகிறார் அப்பா.

   “தட்சிணை தரேளா? கார்த்தாலேர்ந்து ஒரே பசி...”

   இடுப்பு பர்ஸை எடுத்துப் பிரித்து பத்து பைசாவைத் தூக்கி, நீட்டின உள்ளங்கைகளில் போடுகிறார்

   “வழியோட போற பிராமணனுக்கு வைத்தியோட சன்மானம் பத்து கட்டி வராகன்”

    எதுவும் சொல்லாது பத்து பைசா கொடுத்திருக்கலாம். பத்து கட்டி வராகன் என்று நீட்டி முழங்கியதுதான் நஞ்சு.

    வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.

   “பதினாறும் பெத்து பெரு வாழ்க்கை வாழணும். நீங்க போறபோது இந்த பத்துபைசா கூடவரும்”

   “எச்சக்கலை படவா, என் வாசலில் நின்னு, நான் போறது பத்தியா பேசறே” தகப்பன் சீறி எழ.....

   “பத்து பைசாவிற்கு இதுதான் பேச முடியும்” நின்று பதில் சொல்லிவிட்டு போகிறது அது.

   “பிராமணனாடா நீ! சவண்டி நாயே..” தெருவை உலுக்கும் என் தகப்பன் குரல். வந்தது காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.நீள நடை. நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.

   “என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா?”

   “போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.

   - முன்கதை சுருக்கம் என்னும் தன்னுடைய சுய சரிதை நூலில், ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியதில் ஒரு பக்கம். அவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாசன். பள்ளி மற்றும் எழுத்துலகில் அவரின் பெயர் ‘பாலகுமாரன்’
-----------------------------------------------------------------------------------------------------
அடுத்து க.க. லெட்சுமி ராயின் படம் (க.க. என்பதற்கு கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்)
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
‘மங்காத்தா’ புகழ் லெட்சுமி ராயை நினைத்துக் கொண்டு 
நீங்கள் வந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!
நம்புங்கள் எங்கள் காலத்து லெட்சுமி ராய் இவர்தான்
--------------------------------------------------------------------------------------------------
புதிர்

இந்தப் படத்தில் உள்ள பெண்மணி யார்? 
முடிந்தால் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!
க்ளூ வேண்டுமா? நம் வகுப்பறை - ஜப்பான் மைனருக்கு நன்றாகத் தெரிந்தவர். ஆனால் ஜப்பானுக்கு இவர் இதுவரை போனதில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தியார்

22.9.2011
-----------------------------
இதோ அந்தப் பாடல்:

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே - அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே - என்
கண்ணே பூவண்ணமே

(சிரிப்பில்)

மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
எங்கும் உன் எண்ணமே
எல்லாம் என் வண்ணமே

நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுகள் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன்.. ஓ..
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்

தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இழையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே

(சிரிப்பில்)
படம் : எங்கிருந்தோ வந்தாள்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

++++++++++++++++++++++++++++++++===

வாழ்க வளமுடன்!

21.9.11

தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

--------------------------------------------------------------------------------------
தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

பிள்ளை வளர்ந்து பெரியவனாகிவிட்டால்(இளைஞனாகி விட்டால்), தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான்.
இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள்.
கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான்.
வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள்!

யார் சொன்னது? ஞானி ஒருவன் சொன்னது!

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ள அந்தப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!


-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். “எனக்கு எழுபது வயதாகிவிட்டது. என் மனைவிக்கு 68 வயதாகிறது. இன்று வரை அவள் என் சொல்லை மீறமாட்டாள்” என்று யாராவது ஒருவர் கத்தியைத் தூக்கிக்கொண்டுவரலாம். அதெல்லாம் விதிவிலக்கு (exemption)
 
Exemptions should not be taken as examples.
விலக்குகள் உதாரணமாகாது
அதை மனதில் வையுங்கள்!

ஒரு மாறுதலுக்காக விவேக சிந்தாமணிப் பாடலை வலை ஏற்றினேன். எப்படியுள்ளது? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
21.09.2011


வாழ்க வளமுடன்!

20.9.11

Astrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்!

-------------------------------------------------------------------------------------
Astrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்!

ஒரே வரியில் ஜாகத்திற்குப் பலன் சொல்லிவிட்டு ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம். அப்படிப்பட்ட யோகத்துடன் கூடிய ஜாதகம் இது.

என்ன யோகம்?

மகாபாக்கிய யோகம்!

லக்கினத்தில், சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால், ஜாதகருக்கு அந்த யோகம் கிடைக்கும்!

அரசனுக்கு நிகரான யோகம். அவர் இசைக்கு அரசர். இசை ரசிகர்களுக் கெல்லாம் அரசர்! எண்ணற்ற மனிதர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.

1977 ஆம் ஆண்டிற்கு முன்பு ஒரு ஐந்து வருட காலம் தமிழ்த் திரை உலகில் சற்றுத் தொய்வு விழுந்து, தமிழ் ரசிகர்களின் மனதில் எல்லாம் இந்திப் படங்களின் பாடல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
(உதாரணம். Bobby, ஆராதனா, அந்தாஸ்(ஜ்), யாதோன் கி பாரத், ஷோலே போன்று பல படங்களைச் சொல்லலாம்)

அவர்களையெல்லாம், தன் துவக்கப்படங்கள் இரண்டின் மூலம், மீண்டும்   தமிழ் திரை இசைப் பாடல்களைக் கேட்பதற்கு இழுத்துக் கொண்டு வந்தவர் இளையராஜா.

“மச்சானைப் பார்த்தீங்களா, மலை வாழைத் தோப்புக்குள்ளே” என்ற      பாடலும், “கண்ணன் ஒரு கைக் குழந்தை, கண்கள் இரண்டும்  பூங்கவிதை” என்ற பாடல்களைப் போல எத்தனை பாடல்கள்?

அவரைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

அவரது ஜாதகத்தை அலசுவோம்
++++++++++++++++++++++++++++++++++++++

அவருடைய ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் இருந்து மகா பாக்கிய யோகத்தைக் கொடுத்துள்ளார்கள். அத்துடன் மட்டுமா? ரிஷபலக்கினத்திற்கு யோககாரகரான சனீஷ்வரன் (9 & 10ஆம் இடத்திற்கு உரியவர்) லக்கினத்தில் இருக்கிறார். அவர் தர்மகர்ம அதிபதியும் ஆவார். கேட்க வேண்டுமா? அவரும் மற்றவர்களும் சேர்ந்து அவர் செய்த தொழிலில், அவரை எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உச்சத்தில் கொண்டு போய் விட்டார்.

ரிஷப லக்கினத்திற்கு 3ஆம் இடமான வெற்றி ஸ்தான அதிபதி, சந்திரன் உச்சம் பெற்றதுடன், அவரும் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்து, அவருடைய வெற்றிகளைப் பல மடங்காக்கிக் காட்டினார்.

தர்மகர்ம அதிபதி லக்கினத்தில் முதன்மைக் கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனுடன் அமர்ந்ததால், அவருக்கு ஆன்மீகத்திலும் தர்மத்திலும் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்திற்கும் நிறைய தான தர்மங்களை ராஜா செய்திருக்கிறார். (அவரைப் பற்றிப் பக்கமாக எழுதலாம். எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் எழுதவில்லை!)

சுக்கிரனும் ராகுவும் சேர்ந்தால் கலைத் துறைதான். உடன் குருவும் சேர்ந்ததால், அவர் இசைக் கலைஞரானார்.

பூர்வபுண்ணிய அதிபதி புதன் (5th Lord) லக்கினத்தில் அமர்ந்ததால், அவருக்குப் பூர்வ புண்ணிய வாசனையாக கர்நாடக சங்கீதமும் வசப்பட்டது. பூர்வ ஜென்மத்தில் திருவாளர். பாலமுரளி கிருஷ்ணாவைப் போல, அவர் பெரிய கர்நாடக இசைக் கலைஞராக இருந்திருப்பாரோ என்னவோ -அது முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. மெல்லிசை, பாரம்பரிய கர்நாடக இசை, கிராமத்துத் தெம்மாங்கு இசை, மேற்கத்திய இசை, என்று இசையின் அத்தனை பரிமாணங்களும் அவருக்கு வசப்பட்டன!!! அவரது பூர்வ புண்ணியத்தால்தான் அவை எல்லாம் உள்ளங்கைக் கனியாக அவருக்குக் கிடைத்தன என்றால் அது மிகையல்ல!

நான்காம் வீட்டில் மாந்தி. சுகத்தைக் கெடுக்கக்கூடிய அமைப்பு. அவர் கடுமையான உழைப்பாளி. இயற்கையாகவே சுகங்களை நாடுபவர் அல்ல! அந்த வீட்டின் அதிபதி சூரியன் திரிகோணமேறியுள்ளார். அத்துடன் அந்த வீட்டிற்குப் பத்தில் உள்ளார்.. அதனால் அவர் இன்று செல்வந்தராக உள்ளார். ஆனால் எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும், அவர் எளிமையாக உள்ளார். தன்னுடைய தோற்றத்தைப் பற்றி, வசதி, வாய்ப்புக்களைப் பற்றிக் கவலைப் படாமல் எளிமையாக இருக்கிறார். எண்ணற்ற ரசிகர்கள் அவருக்குக் கிடைத்ததற்கு அந்த எளிமையும் ஒரு காரணம்! அந்த எளிமைக்கு மாந்தி ஒரு காரணம்!

இளம் பிராயத்தில் அவர் ஏன் சிரமப்பட்டார் என்ற கேள்வி பாக்கி நிற்கும். மனிதர் கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளார். அத்தனை கிரகங்களும் ராகு கேதுவிற்குள் மாட்டிக்கொண்டிருப்பதைக் கவனியுங்கள். 1943ல் பிறந்த அவர் 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் பலவித கஷ்டங்களை அனுபவித்தார் என்றால், அது அந்த காலசர்ப்ப தோஷத்தினால்தான்! அந்த தோஷமே பின்பு அவருக்குப் பலத்த யோகத்தைக் கொடுத்தது. அதனால்தான் அந்த அமைப்பிற்குக் காலசர்ப்ப தோஷம் cum யோகம் என்று பெயர் அதை மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
20.09.2011
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தில் மேன்மை பெறுவதற்கு இதுபோன்ற ஜாதக அலசல்கள் முக்கியம். தொடர்ந்து பல ஜாதகங்களை அலசுவதற்கு எனக்கு விருப்பம்தான். ஆனால் இது ஏற்ற இடமல்ல. இது திறந்த வெளி இணையம். இங்கே எழுதுபவைகள் எல்லாம் உடனுக்குடன், சுடச்சுட, திருட்டுப்போய்க் கொண்டிருக்கிறன. ஆகவே மேல் நிலையப் பாடங்களை இங்கே நான் எழுதுவதில்லை. ஒரு அழகான இளம் பெண் திறந்தவெளியில்  குளிப்பதற்குச் சமம் அது. ஆகவே எனது தனி இணைய தளத்தில் அவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை அதில் 100 பாடங்களை எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவைகள் எல்லாம்  பின்னால்,  புத்தகங்களாக  வரவிருக்கிறது. அப்போது  அனைவரும் படிக்கலாம். அதுவரை  பொறுத்திருங்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், இங்கே இதுவரை எழுதப்பெற்றுள்ள 480 பாடங்களைப் படித்தால் போதும். அதுவே அதிகம்! அடைப்படையான விஷயங்களை இங்கே தொடர்ந்து எழுத உள்ளேன். அவற்றைத் தொடர்ந்து அனைவரும் படிக்கலாம்!

வாழ்க வளமுடன்!

19.9.11

Short Story: சொந்த வீடு

----------------------------------------------------------------------------------------
சிறுகதை: சொந்த வீடு
-----------------------------------------
                
சிங்காரச் சென்னையில் கடந்த இருபத்திரெண்டு ஆண்டுகளாக வசித்துவரும் தெய்வானை ஆச்சிக்கு ஒரு தீராத மனக்குறை உண்டு. சொந்த வீடு ஒன்று இல்லையே என்ற குறைதான் அது.

திருமணமான மூன்றாம் நாள் மாலையும் கழுத்துமாக, அன்புக்கணவனுடன் காரைக்குடியில் இரயில் ஏறி சென்னைக்கு வந்த ஆச்சி, முதலில் குடியிருக்கத் துவங்கியது சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு ஸ்டோர் வீட்டில். மூன்று ஆண்டுகள் கழித்து, அதே செளகார் பேட்டையில், நாராயண மேஸ்திரி தெருவின் விரிவாக்கப் பகுதியான விநாயக மேஸ்திரி தெருவிற்குக் குடிபெயர்ந்த ஆச்சி இன்றுவரை அதே  வீட்டில்தான் குடியிருக்கிறார்கள்.

அதை வீடு என்று சொல்ல முடியாது. பதினைந்திற்குப் பத்தில் ஒரு பெரிய அறை, அதற்கு எதிர் வரிசையில், தனியாக பத்திற்குப் பத்தில் ஒரு  சமையல்  அறை, அவ்வளவுதான். அதே வரிசையில் தனியாக ஒரு குளியலறையும், கழிப்பறையும் உண்டு. அந்தத் தளத்தில் இருக்கும் மற்ற அறைகள் எல்லாம் அரிசி குடோன்களுக்கு வாடகைக்கு விடப் பெற்றுள்ளது.

மேலே உள்ள மற்ற தளங்களில் எல்லாம் மார்வாரிக் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தீடீரென்று வருபவர்களுக்கு, ஜெய்ப்பூரில் இருப்பது  போன்ற உணர்வு ஏற்படும்.

கட்டட உரிமையாளர் புரசைவாக்கத்தில் இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வாடகைப் பணத்தை வாங்கி வங்கில் போடுவதற்காக  வருவார்.

ஆச்சியின் கணவர் பழநியப்ப அண்ணனுக்கு, அதே ஏரியாவில், ஆண்டர்சன் தெருவில் உள்ள பேப்பர் கடை ஒன்றில் வேலை. மொத்த வியாபாரம். நகரத்தார் ஒருவருக்குச் சொந்தமான ஐந்து கடைகளில் அதுவும் ஒன்று. பத்து காகித ஆலைகளுக்கு விநியோகஸ்தர்கள். கேட்க வேண்டுமா? கொடிகட்டிப் பறக்கும் அளவிற்கு வியாபாரம்.

துவக்கத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்த பழநியப்ப அண்ணன், தன் நேர்மை, மற்றும் சுறுசுறுப்பால் பதவி உயர்வு பெற்று, கடையின் மேலாளர்  என்ற அந்தஸ்த்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டில் கஷ்டப்படுவது? நான் என்ன அடையாறில் பங்களா வேண்டுமென்றா ஆசைப் படுகிறேன்? நானூறு சதுர அடியில் சின்னதாக இருந்தாலும், சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டாமா? இந்த கந்தகோட்ட முருகன்  என்றைக்குக் கண்ணைத் திறந்து என்னைப்  பார்க்கப் போகிறான் என்று தெரியவில்லை!” என்று ஆச்சி அடிக்கடி புலம்பலாகச் சொல்லிக்  கண்ணைக் கசக்குவார்.

ஆச்சியின் அன்புக் கணவர் பழநியப்ப செட்டியாருக்கு அது பழகிப் போய்விட்டது.

“போடி புரியாதவளே! வால்டாக்ஸ் ரோட்டில் போய்ப்பார். எத்தனை பேர் பிளாட்பாரத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று  தெரியும். அவர்களெல்லாம் சந்தோஷமாக இல்லையா? சந்தோஷம் என்பது சொத்தில் இல்லை. வீட்டில் இல்லை. நம் மனதில் இருக்கிறது.”

“உங்கள் முதலாளிச் செட்டியாருக்குச் சென்னையில் மட்டும் பதினைந்து வீடுகள் இருக்கின்றன. அவரைப் பார்த்தாவது உங்களுக்கு ஆசை  வர வேண்டாமா? ஆசை வந்தால் அல்லவா மனதில் ஒரு வேகம் வரும். வேகம் வந்தால் அல்லவா அதைச் செயல்படுத்த முடியும்?”

ஆச்சி கடுகடுவென்று பேசினால், செட்டியார் நீட்டி, நிதானமாகப் பேசுவார்.

“தெய்வானை எதையும் குறையாக நினைத்தால், குறையாகவே போய்விடும். எல்லாப் பறவைகளும் ஒரே உயரத்தில் பறக்காது. குருவிக்கென்று  ஒரு உயரம், புறாவிற்கென்று ஒரு உயரம். கழுகிற்கென்று ஒரு உயரம் இருக்கும். ஆகவே நமக்கு விதிக்கப்பட்ட உயரத்தில்தான் நாம் பறக்க  முடியும். அதை நினைவில் வை. நிம்மதியாக இரு. முதலாளிச் செட்டியாரைப் பற்றிச் சொல்கிறாயே, அவருக்கு உள்ள மனக்கவலை என்ன  வென்று தெரியுமா உனக்கு? அவருக்கு இரண்டும் பெண் குழந்தைகள். வீட்டிற்கு ஆண் வாரிசு இல்லையே - தனக்குப் பின்னால்  இந்தத்  தொழிலை யார் முன்நின்று நடத்தப்போகிறார்கள் என்ற கவலை அவருக்கு உண்டு. அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப்போகிறது?”

“வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று தேவை. இன்னொன்று ஆசை. ஆனால் வேண்டாம் என்பதற்கு  நூறு காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் எதையாவது சொல்லி என் வாயை அடைப்பதே வழக்கமாகிவிட்டது”

“சரி நானும் நீ ஒப்புக்கொள்ளும் விதமாக ஒரே ஒரு காரணத்தைச்  சொல்கிறேன். கையிருப்பு இல்லாததுதான் அந்த ஒரே ஒரு காரணம்.”

அதற்குப் பிறகு ஆச்சி மெளனமாகி விட்டார்கள். பழநியப்ப அண்ணனும் ஈரிழைத் துண்டைக் கையில் எடுத்துக் கொண்டு குளியலறையை  நோக்கி நடந்தார். காலை மணி எட்டாகிவிட்டது. ஒன்பது மணிக்கெல்லாம் கடையில் இருக்க வேண்டும் 
----------------------------------------------------------------

“உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை. நீ என்ன சொத்தைப் பற்றிப் பேசுகிறாய்?” என்று கவியரசர் கண்ணதாசன் அடிக்கடி சொல்வாராம்.

கண்ணதாசனின் புத்தகங்களை விரும்பிப் படித்து மனதில் ஏற்றி வைத்துள்ளதால், பழநியப்பஅண்ணனுக்கு அந்த சிந்தனை எப்போதும் உண்டு.

“நம் உடம்பே நமக்குச் சொந்தமில்லை. ஒரு நாள் இந்த உடம்பை விட்டு விட்டு நாம் போகப் போகிறோம்” என்பார்

“நாம் என்பது நம்முடைய ஆன்மா. நம்முடைய ஆன்மா, உடம்பு என்னும் வாடகை வீட்டில் குடியிருக்கிறது. ஒவ்வொரு பிறவிக்கும் கடவுள்  கொடுத்தது அந்த வீடு. குடக்கூலி இல்லை. அதாவது மாத வாடகை இல்லை. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளையடிக்க வேண்டாம்.  அப்படிப்பட்ட வீடு அது. அதை ஒழுங்காக வைத்திருக்கிறோமா என்றால் - இல்லை! கண்டதையும் தின்று வீட்டின் எல்லாச் சுவர்களும்  தள்ளிக்கொண்டு நிற்கின்றன. விரிசல் விட்டிருக்கின்றது. அத்துடன் சிகரெட், வெற்றிலை பாக்கு, பான்பராக் என்று லாகிரி வஸ்துக்களை எல்லாம் உள்ளே தள்ளி வீட்டின் உட்புறம் நாளுக்குநாள் கெட்டுக்கொண்டிருக்கிறது. வீட்டுக்காரன் கேட்டால் என்ன சொல்வது? வீட்டுக்காரன்  கேட்க மாட்டான் என்பது சர்வ நிச்சயமாக நமக்குத்
தெரியும். அதனால் எந்தவொரு பயமுமில்லாமல் இருக்கிறோம்!”
என்று அதற்கு விளக்கமும் சொல்வார்.

காரைக்குடி செஞ்சி பகுதியில் அவருக்குப் பொது வீடு ஒன்று இருந்தது. இப்போது இல்லை. அவருக்குத் திருமணமானபோது, வீட்டின்  முகப்புப் பகுதியில் ஒரு பாதி இடிந்து விட்டிருந்தது. முட்டுக்கொடுத்து நிறுத்தி வைத்திருந்தார்கள். பங்கு வீடு. எண்ணிக்கையில் பதின்மூன்று  புள்ளிகள். (குடும்பங்கள்) வம்சாவழி உரிமையில் 24ல் ஒரு பங்கு.

பராமரிக்கும் விஷயத்தில் ஒற்றுமை இல்லாததால், வீட்டை இடித்துத்
தரை மட்டமாக்கிவிட்டு, இடத்தைப் பங்கு வைத்துக்கொண்டார்கள். ஒரு
புண்ணியவான் ஆட்களை வைத்து இடித்துக் கொடுத்ததோடு, எடுத்துக்கொண்ட தேக்கு மரங்களுக்காக, இடிக்கச் செலவு செய்த கூலி
போக இரண்டரை லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டுப்போனான்.
அது நடந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். அன்றையத் தேதியில்
அது  ஒரு நல்ல தொகை.

பழநியப்ப அண்ணன் பங்கிற்கு, ஆயிரம் சதுர அடி இடமும், பத்தாயிரம்
ரூபாய் பணமும் கிடைத்தது. இன்று வரை அது அப்படியே உள்ளது.

அந்த இடத்தை விற்றுவிட்டு, சென்னையின் புறநகர்ப் பகுதியில் சின்னதாக ஒரு வீட்டை வாங்கலாம் என்று ஆச்சி சொன்னபோது, அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை.

“அந்த இடம் பூர்வீகச் சொத்து. அதை விற்கும் உரிமை நமக்கில்லை.
நமக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் தலை எடுத்து, அங்கே ஒரு 
வீட்டைக் கட்டிக்கொள்ளட்டும். கொப்பாத்தாள் அருளால், அது நம் காலத்திலேயே நடந்தால், வயதான காலத்தில், நாம் அங்கே சென்று  தங்கிக்கொள்ளலாம் இப்போது நீ சும்மா இரு. அதை வைத்துக் குழப்பம்
செய்து என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதே” என்று உறுதியாகச்  சொல்லிவிட்டார்.

என்ன நடந்தது?

ஆண்டவன் சித்தப்படி, அதாவது தலை எழுத்துப்படி எல்லாம் நடந்தது.

---------------------------------------------------------------------------------

நாதஸ்வரம், திருமதி செல்வம் போன்ற தொலைக் காட்சி சீரியல்களில்,
தன் கவலைகளை மறந்து, ஆச்சி முங்கிக் களிக்க இரண்டாண்டுகள்  ஓடிப்போனது.

வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி அதிசயமானது. கீழே இருக்கும் பகுதி
ஒருநாள் மேலே வரும்.வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம்,  குளிர்காலம் என்று பருவங்களில் மாற்றம் ஏற்படுவதைப் போல, மனித வாழ்க்கையிலும் ஏற்படும்.

அப்படியொரு வசந்தகாலம் ஆச்சியின் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

ஆச்சியின் ஒரே மகன் கணேசன் இறையருளாலும், கடை முதலாளி தொடர்ந்து செய்த கல்விக்கட்டண உதவிகளாலும், கிண்டி பொறியியற்
கல்லூரியில் மேல் நிலைப் பொறியாளர் படிப்பைப் படித்து முடித்தான்.

படிப்பை முடிக்க முடிக்கவே அவனுக்கு காம்பஸ் இன்டர்வியூவில்,
அதாவது கல்லூரி வளாக நேர்காணலில் பன்னாட்டு நிறுவனமொன்றில்
நல்ல  வேலை கிடைத்துவிட்டது.

துவக்கத்தில் ஆண்டிற்கு 32 லட்ச ரூபாய்கள் சம்பளம். விசா, பயணச்
சீட்டு, கைச் செலவிற்கு டாலரில் பணம் என்று எல்லாவற்றையும் 
அவர்களே ஏற்பாடு செய்துகொடுத்துவிட்டார்கள்.

முதல் மூன்று மாதம் கலிஃபோர்னியாவில் பயிற்சி. அதற்குப் பிறகு,
தென் கொரியாவில் உள்ள தங்கள் கிளை நிறுவனத்தில் வேலை என்று 
எல்லா உத்தரவுகளையும் கையில் கொடுத்து விட்டார்கள்

ஒரு நல்ல நாளில் பையனும் புறப்பட்டுப் போய்விட்டான்.

ஆச்சிக்கு நிலை கொள்ளாத சந்தோஷம்.

இருக்காதா பின்னே?

                     +++++++++++++++++++++++++++++++++++++++++++

அதற்கு அடுத்து வந்த ஆறு மாத காலத்தில், ஆச்சி அவர்கள் தன் நீண்டநாள் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதாவது  வீடூ ஒன்றை வாங்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

இன்றைய நிலவரத்தில் நடுத்தரக் குடும்பங்களுக்குத் தனி வீடெல்லாம் சாத்தியமில்லாத நிலையால், ஆச்சி அவர்கள் அடுக்குமாடிக்  குடியிருப்பில் ப்ளாட் ஒன்றைத் தேடத் துவங்கினார்கள்.

ஆச்சிக்கு சென்னையில் மிகவும் பிடித்த பகுதி தியாகராய நகர்தான்.
வடக்கு உஸ்மான் சாலை பகுதி நாதமுனி தெருவில் இரண்டொரு
அடுக்கு  மாடி வளாகங்களைப் பார்த்தார்கள். ஒன்றும் பிடிபடவில்லை.

தாங்கள் தற்போது இருக்கும் செளகார்பேட்டை அல்லது மண்ணடிப்
பகுதியில் பார்க்கலாம் என்று செட்டியார் சொன்னபோது ஆச்சி அவர்கள்  அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இது மிகவும் நெரிசலான பகுதி. இங்கே கஷ்டப்பட்டது போதும். எங்கள் அத்தை மக்கள் மூவரும்  தி.நகரில்தான் இருக்கிறார்கள். அங்கேதான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதமாகக்
கூறி விட்டார்.

நடேசன் பூங்கா அருகே, மைலை ரங்கநாதன் தெருவில், புதிதாகக் கட்டப்பெற்றிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின், முன்றாவது தளத்தில்
ப்ளாட் ஒன்று அமைந்தது. அந்தக் கட்டடத்தின் முதல் தளத்திலேயே
ப்ளாட் ஒன்று இருந்தாலும் ஆச்சி அவர்கள் மூன்றாவது தளத்தைத்தான் தெரிவு செய்தார்கள். காற்று நன்றாக வரும். கொசுத் தொல்லை
இருக்காது என்று அதற்குக் காரணத்தையும் சொன்னார்கள்.

ஆச்சியின் திருக்குமாரன் வேலைக்குச் சென்ற ஆறாவது மாதம் சொந்த வீட்டுக் கனவு நனவாகியது.

ப்ளாட்டின் விலை பத்திரப் பதிவுச் செலவுடன் சேர்த்து நாற்பது லட்ச ரூபாய்கள். ஆச்சியின் அத்தை மகன் முத்தப்பன், தேசிய வங்கி ஒன்றில்
மேலாளராக இருந்ததால், வங்கி கைகொடுக்க, வீடு கைக்கு வந்தது.
வங்கிக்கு நாலில் ஒரு பங்கு வரம்புத் தொகை கட்ட, ஆச்சி அவர்களின் 
உபரி நகைகளும், ஸ்ரீதனமாக வந்த வெள்ளிச் சாமான்களும் உதவின.

“எனக்கு என்ன பெண் பிள்ளையா இருக்கிறது? இவற்றையெல்லாம் வங்கி லாக்கரில் வைத்து இனிமேலும் எதற்காக காப்பாற்ற வேண்டும்?”  என்று சொல்லி எல்லாவற்றையும் மொத்தமாக விற்றுக் காசாக்கிப் பணத்தை வங்கியில் வீட்டுக் கடனின் வரம்புத் தொகைக்காகச் செலுத்தி  விட்டார்.

ஒரு நல்ல முகூர்த்த நாளில், கணபதி ஹோமம் செய்து, பால் காய்ச்சும் வைபவத்தை வைத்துப் புது ப்ளாட்டில் குடியேறினார்கள்.

விதி வேறுவிதமாகப் பாதை போட்டிருந்தது. அன்றே ஆச்சியின் வாழ்வில் அந்த துக்க சம்பவமும் அரங்கேறியது.

பால் காய்ச்சும் வைபவத்திற்குப் பையன் வரவில்லை. வந்து போனால், பயணச் செலவே ஒரு லட்ச ரூபாய் ஆகுமென்பதால், ஆச்சி அவர்களே
நீ வரவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என்று  மொத்தம் நூறு பேர்கள் வந்து கலந்து கொண்டு
விட்டுப் போனார்கள்.

வந்திருந்த அனைவருக்கும் சரவணபவனில் ஆர்டர் கொடுத்து,
வரவழைத்து, காலைச் சிற்றுண்டியும் மதிய விருந்தும் வழங்கினார்கள்.

வந்திருந்தவர்களெல்லாம் சென்ற பிறகு மாலை நான்கு மணிக்குத்தான்
அது நடந்தது.

வந்திருந்தவர்களில் ஒருவர் கைப்பையை மறந்து வைத்துவிட்டுப் போக,
அது ஆச்சியின் கண்களில் பட, பையைப் பிரித்துப் பார்த்தார்கள்.

உள்ளே நிறையப் பணம் இருந்தது. கீழ்த் தளத்தில் இடது பக்கம் இருக்கும் வீட்டுக்காரர்தான் கடைசியாக வந்தார். கைப்பை அவருடையதாகத்தான் இருக்கும். விசாரித்துக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று ஆச்சி
கீழே இறங்கி வரும்போதுதான் அது நடந்தது.

மின்தடை இருந்ததால் லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஆச்சி படி
வழியாக இறங்க முற்பட்டார்கள்.

ஏதோ நினைப்பில், முதல் படிக்கும் இரண்டாம் படிக்கும் அடுத்தடுத்துக் கால்களை இறக்கிவைக்காமல், வேகத்தில் மூன்றாம் படியில் காலை
வைக்க, ஏற்பட்ட தடுமாற்றத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.

தடுமாற்றத்தில் தலை குப்புற விழுந்தவர், அதே வேகத்தில், அசுர
வேகத்தில் படிகளில் சறுக்கிக் கீழ் நோக்கி இறங்கி, வராந்தாவில்
இருந்த  தூணில், தடால் என்ற ஓசையுடன், உச்சந்தலைப் பகுதி மோத
“ஆத்தா” என்ற பலத்த குரலோசையுடனும் விழுந்தார்கள்

விழுந்தார்கள் என்று சொல்வதைவிட, விழுந்து இறந்தார்கள் என்று சொல்வதுதான் சரியா இருக்கும்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. ஆச்சியின் வாழ்க்கைக்குக் காலதேவன் முற்றுப் புள்ளி வைத்துவிட்டான் அவ்வளவுதான்.

ஆச்சிக்குப் பலமாகத்தலையில் அடிபட்டதுடன், அதிர்ச்சியில் ஸ்ட்ரோக்கும் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக மருத்துவமனைக் குறிப்பில்  எழுதியிருந்தார் கள்.

செட்டியார் மனதளவில் நொறுங்கிப் போயிருந்தார். தகவலறிந்த நெருங்கிய உறவினர்கள் வந்திருந்திருந்து ஆச்சியின் இறுதி யாத்திரைக்கு  வேண்டியதைச் செய்தார்கள்.

கொரியாவில் இருந்து பையன் அடுத்த நாளே வந்திறங்கினான். கண்ணம்மா பேட்டை மின் மாயானத்தில் ஆச்சியின் உடல் அக்கினிக்கு இரையானது.

நான்கு நாட்களில் பழநியப்ப அண்ணன் தன் நிலைக்குத் திரும்பினார்.

“அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்?”


என்னும் கவியரசர் கண்ணதாசனின் வைரவரிகள் அவ்வப்போது அவர் மனதிற்குள் வந்து நிழலாடின.

புது வீட்டில் ஒரு நாள் கூடத் தங்கி, படுத்து உறங்காமல் தன் மனைவி காலமானதில் பழநியப்ப அண்ணனுக்கு மிகுந்த வருத்தம்.

அப்போதுதான் ஞானி ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது.

“கடவுளால் உனக்குத் தரப்பட்டதை யாராலும் பறிக்க முடியாது;
கடவுளால் உனக்கு மறுக்கப்பட்டதை யாராலும் தர முடியாது”


“நிதர்சனமான உண்மை. தன் மனைவிக்கு வீடு பாக்கியம் இல்லை போலும். அதனால்தான் காரைக்குடியில் இருந்த பூர்வீக வீடு, அவள் திருமணமாகி
வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தரை மட்டமாகிவிட்டது. போராடி இங்கே வாங்கிய வீட்டிலும் அவளால் ஒரு நாள் கூட தங்க  முடியாமல் போய்
விட்டது” என்று பழநியப்ப அண்ணன் சிந்தனை வயப்பட்டார்.

ஆச்சி இறந்து ஒருவாரம் கழித்து, அவருடைய மகன் கொரியாவிற்குப் புறப்பட்ட போது, அவனைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்துவிட்டார்.

“அப்பச்சி, உங்கள் வயதிற்கு நீங்கள் அழுகக்கூடாது. எனக்கு ஆறுதல்
சொல்ல வேண்டிய நீங்களே அழுதால் எப்படி?”

“ஆசையாய் வாங்கிய புது வீட்டில் என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு அவள் போய் விட்டாளேடா!”

“நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று யார் சொன்னது?”

“என்னடா சொல்றே?”

“ஆத்தாளும் உங்களோடுதான் இருக்கிறாள். உருவமில்லாத அருவமான நிலையில் உங்களோடுதான் இருக்கிறாள். இந்த வீட்டில்தான் இருக்கிறாள். எந்தப் பெண்ணுமே செய்ய யோசிக்கின்ற காரியத்தை ஆத்தா செய்தார்கள். , நகைகளை விற்று ஆத்மார்த்தமாக இந்த வீட்டை  வாங்கினர்கள். அப்படி  வாங்கிய தன் வீட்டைவிட்டு ஆத்தா ஒரு நாளும் போகமாட்டார்கள். அவர்களுடைய உடம்புதான் போய்விட்டது.  ஆத்மா இங்கேதான்
இருக்கிறது. நமக்குத் துணையாக அது என்றும் இங்கேதான் இருக்கும்.  மனதைத் தளரவிடாமல் இருங்கள்.”

பழநியப்ப அண்ணனின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.

“உருவாய், அருவாய், உளதாய், இலதாய்” என்று பல வடிவங்களிலே அதுவும் குறிப்பாக உருவமில்லாத வடிவில் இருக்கக் குமரக்கடவுள்
ஒருவரால்தான் முடியுமா? ஆத்மார்ந்தமான செயல்களில் ஈடுபடும்
மனித ஆன்மாக்களுக்கும் அது சாத்தியமே!

அப்படிபட்ட ஆன்மாக்களைத்தான் ‘குலதெய்வங்கள்’ என்ற பெயரில்
காலம் காலமாக நாம் வணங்கி வருகிறோம்! படையல் போடுகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------
- மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய கதை. நீங்களும் படித்து மகிழ, உங்களுக்காக, இன்று வலையில் ஏற்றியுள்ளேன். படித்து  மகிழ்ந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்

19.9.2011
-------------------------------------------------------
நம் வலைப்பூவின் டெம்ப்ளேட்டைத் தவிர மற்றவற்றை எல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை இங்கே எழுதியவைகள் மொத்தம் 925
பதிவுகள் அவற்றில் சைடு பாரில் உள்ள Label எனப்படும் குறிச்சொல் பகுதியை படிப்பதற்கு வசதியாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணியில் எழுபது சதவிகிதம் முடிந்துள்ளது. மீதமுள்ளவைகள் இரண்டொரு நாளில் முடிந்து விடும்.

நமது வகுப்பறையின் மூத்த மாணாக்கர்களில் ஒருவரும், நமது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவருமான திருவாளர் வி.கோபாலன்  அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தப் பணிகள் முடியும் முன்பாகவே மீண்டும் பாடங்களைத் துவங்கியுள்ளேன்
----------------------------------------------------------           
வாழ்க வளமுடன்!