----------------------------------------------------------------------------------------
எங்கேயடா போனாய் நீ?
“இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே!”
------ரமண மகரிஷி
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
------திருவள்ளுவர்
-----------------------------------------------------------------------------
எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?
குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.
14ஆம் நாள் அதிகாலை
பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.
“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”
என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”
அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”
“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.
அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.
பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.
சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.
அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.
அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!
ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு.
மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.
ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.
அப்போதுதான் அது நிகழ்ந்தது.
பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.
தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:
“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”
பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:
“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------------
பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்
“உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருளிருக்கும்”
என்றார் கவியரசர் கண்ணதாசன்
அதுபோல
“பிறப்பு என்றொரு கதையிருந்தால்
இறப்பு என்றொரு முடிவிருக்கும்”
முடிவில்லாத கதையே இல்லை. முடிவில்லாத மனித வாழ்க்கையும் இல்லை! எல்லோருடைய வாழ்க்கையும் முடிவை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக் கிறது. படம் எத்தனை ரீல்கள்? எப்போது முடியும் என்பது மட்டும் தெரியாது. அது தெரிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆகவே அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.
“ஆறிலும் சாவுண்டு.
நூறிலும் சாவுண்டு”
ஆறு ரீல்களில் முடிகிற படமும் உண்டு. நூறு ரீல்கள்வரை இழுத்தடித்துக்கொண்டு ஓடுகிற படமும் உண்டு.
பயத்திலேயே பெரிய பயம் மரண பயம்தான். அந்த பயம் இல்லாதவர்கள் ஞானிகள் மட்டுமே. அல்லது ஞானம் உள்ளவர்கள் மட்டுமே!
---------------------------------------------------------
எல்லாம் இருக்கிறவரைதான். அதாவது உன்னுடையது, என்னுடையது என்னும் உடைமைப் போராட்டம் எல்லாம் உயிர் உள்ளவரைதான்!
பட்டம், பதவி, சொத்து, சுகம், செல்வம் எதுவும் கூட வராது.
அதைத்தான் பட்டினத்தார் நெத்தியடியாக ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போனார். “ அடேய் நீ செத்துப்போனால் உன்னுடன் நீ போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் எதுவும் வராது!” என்னும் பொருள்பட இப்படிச் சொன்னார்:
“காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”
காதறுந்து ஒடிந்துபோய் எதற்கும் பயன்படாத ஊசிகூட உன்னுடன் வராது என்றார். அதையும் அவர் சொல்லவில்லை. அவருக்கு மகனாக வந்துதித்த சிவபெருமான், எழுதிக்கொடுத்த சிற்றோலை மூலம் உணர்ந்து கொண்டார். அது உங்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------
ஆனால் நாம் கேட்டுக்கொள்வோமா? மாட்டோம்!
அதையெல்லாம் சாகிற அன்றைக்குப் பார்த்துக்கொள்வோம். இப்போது போய் இரண்டு ‘பெக்’ அடித்துக் கவலையை மறப்போம் என்று கிளம்பிவிடுகிறவர்கள் பலர் உண்டு.
“ஒன்றாம் தேதியானால், செல்போன் பில் கட்ட வேண்டும். பணம் வேண்டாமா? ஹவுஸிங் லோன் கட்ட வேண்டும் அல்லது வீட்டு வாடகையைக் கொடுக்க வேண்டும் பணம் வேண்டாமா? அரிசி கிலோ 42 ரூபாய் விற்கிறது, பெட்ரோல் லிட்டர் 65 ரூபாய் விற்கிறது - பணம் வேண்டாமா? சில்லறைக் கவலைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் செல்வந்தனாக இருக்க வேண்டும். செல்வம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அல்லது செல்வத்தைத் தேடி அலையாமல் அல்லது உழைக்காமல் இருக்க முடியுமா? பட்டினத்தார் சொன்னதெல்லாம் பரதேசம் போகிற காலத்திற்கு; இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு அதெல்லாம் ஒத்துவராது.
சும்மா வாயை மூடிக்கொண்டிருங்கள்!” என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம். அவர்களிடம் வாயைக் கொடுத்தால் மாட்டிக்கொண்டு விடுவோம்.
அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!
----------------------------------------------------------------
மரணத்தின் நிலைப்பாட்டைப் பட்டினத்தடிகள் ஒரு பாட்டில் - அதுவும் நான்கே வரிகளில் மிகவும் அழகாகச் சொன்னார். பாடலைப் பாருங்கள்.
“வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
“உன்னுடைய வீடு இங்கே இருக்கிறது. உன்னைப்பெற்ற தாயும், உனக்குக் கழுத்தை நீட்டிய மனைவியும் இங்கே இருக்கிறார்கள். நீ பெற்ற பட்டம், பதவி, பெருமைகள் எல்லாம் இருக்கிறது. உனக்கான அடுத்த வேளை அறுசுவை உணவு தயாராக இருக்கிறது. உன்னுடைய அருமைப் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். உன் வீட்டுக் கொள்ளையில் மாடுகளும், அவை ஈன்ற கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன. நீ தேடி வைத்த பொன், பொருள் எல்லாம் இருக்கிறன்றன. உன் உடல் இருக்கிறது. உன்னை மட்டும் காணவில்லையே -
எங்கேயடா போனாய் நீ?” என்று கேட்டு உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துபோன நிலையை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் அவர். உடம்பை விட்டு ஆன்மா நீங்கும் நிலைதான் மரணம்.
----------------------------------------------------------------
வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்தவன் சொன்னான்:
ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறதா கல்வியும்
மூவெட்டில் பண்ணாத திருமணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் கிடைக்காத மரணமும் வீணே!
ஆக எட்டெட்டில் - அதாவது 64 வயது வரைதான் - வாழ்க்கை அங்கீகாரம் உடையதாக, அதிகாரம் உடையதாக இருக்கும். அதற்குப் பிறகு உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம் போனசாக வருவது. அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு விடுங்கள். ஆட்டம் பாட்டத்தை எல்லாம் முடித்துக்கொண்டு விடுங்கள்.
உயில் எழுதி வைக்க வேண்டுமென்றால் வைத்துவிடுங்கள்.
அதற்குப் பிறகு, எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களைப் போல, சிறுமிகளைப் போல அந்தக் கணங்களில் வாழ்ப் பழகிக்கொள்ளுங்கள். அந்தந்த நேரங்களில் வாழப் பழ்கிக்கொள்ளுங்கள்.
Try to live in a momentary world and enjoy momentary life (Momentary means lasting for only a moment. Occurring or present at every moment)
வாரியார் சுவாமிகள் சொல்வார்::
“ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அங்கே பயணிப்பதற்கான இரயில் அல்லது பேருந்து சீட்டிற்கு முன் பதிவு செய்து வைக்கிறோம். வேண்டிய பணத்தை எடுத்து வைத்துக்கொள்கிறோம். அங்கே தங்குவதற்கு
விடுதிகளில் முன் பதிவு செய்து வைக்கிறோம். எத்தனை நாட்கள் தங்க உள்ளோமோ அத்தனை நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொள்கிறோம். நம்மை அழகு படுத்துவதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கிறோம். சூட்கேசைத் தயார் செய்து வைக்கிறோம். ஆனால், போனால் திரும்ப முடியாத இறுதிப் பயணம் ஒன்று இருக்கிறது. அதற்கு எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள்?”
என்று கேட்பார்.
எதையும் எடுத்துக்கொண்டு போகமுடியாது என்று அவருக்குத் தெரியும். எதை என்று அவர் கேட்பது புண்ணியக் கணக்கில் எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதாகும்!
புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்.
---------------------------------------------------------------------
மனிதனின் ஆயுள் காலம் நான்கு வகைப்படும்
1. குழந்தைப் பருவத்தில் மரணம். இது எட்டு வயதிற்குள் நடப்பது.
2. அற்ப ஆயுளில் மரணம் - இது எட்டில் இருந்து 32 வயதிற்குள் நடப்பது.
3. மத்திம வயதில் மரணம் - இது 32ல் இருந்து 64 வயதிற்குள் நடப்பது.
4. தீர்க்கமான ஆயுள் அல்லது பூரண ஆயுள் - 64ற்கு மேல் 100 அல்லது 120 வயது வரை வாழ்ந்து மரணிப்பது.
---------------------------------------------------------------------
நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல! எத்தனை பேர்களுக்கு நம் வாழ்க்கை பயன்பட்டது என்பதுதான் முக்கியம்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!