28.8.11

லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 2

சமீபத்தில் லண்டனில் நடந்த கலவரத்தில் எடுக்கப்பெற்ற படம்
---------------------------------------------------------------------------------------------
லண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி 2

ஞாயிறு மலர்

1
நான் இலண்டன் வந்த நேரமோ என்னமோ இங்கே கலவர‌ம் வெடித்து விட்டது.

இதற்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

'அப்படியானால் எது அல்லது யார் காரணம் என்பதைச் சொல்லுமேன்!' என்கிறீர்களா?அதுதான் இங்கு யாருக்குமே புரியவில்லை.

நம் ஊர் மாதிரியே ஒரு தாதா(?)வைக் காவல்துறை 'என்கவுன்டர்' செய்து போட்டுத்தள்ளிவிட்டது. இறந்தவர் கறுப்பு இனத்தவர். அவருடைய உறவினர்களும்,நண்பர்களும் காவல்துறையைக் கண்டித்து ஓர் ஊர்வலம் நடத்தினர். அது எல்லாம் முடிந்தவுடன் சிறிய அளவில் கலவரம் துவங்கியது.

ஆசியர்களுடைய கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. முக்கியமாக மின் சாதனங்கள், செல்போன், கம்ப்யூட்டெர் விற்கும் நிறுவனங்கள் தாக்கப்பட்டன. காவல் துறை இதை சற்றும் எதிர்பார்காதாதால் சற்றே மெத்தனமாக இருந்துவிட்டது. கேட்க ஆளில்லை என்றவுடன் புற்றீசல் மாதிரிக் கிளம்பிப் பலரும் கடைத்தெருவுக்கு வந்து கைக்கு அகப்பட்டதை எடுத்துக்கொண்டு பிடித்தனர் ஓட்டம். பகற் கொள்ளை மாதிரி நடந்தது. காவல் துறை சுதாரிப்பதற்குள் 400 கடைகள் சூறையாடப்பட்டன.

விக்கிபீடியாவில் 'இலண்டன் ரியட்ஸ் 2011' என்று கேட்டுப்பாருங்கள். ‌  இணைப்புக்களுடன் பல தகவல்களும் கிடைக்கும்.

'டயம்ஸ்' இதழ் கொடுத்த செய்திகள் அபாரமாக‌ இருந்தன. கலவரத்தின் போது மனதாபிமான‌த்துடன் நடந்து கொண்ட 10 பேரைப் பற்றி தனிச் செய்தி கொடுத்தது டயம்ஸ்.அதில் முதல் இடம்  ஆப்கானிஸ்தான் பெரியவர் ஒருவருக்கு!அவருடைய மகனை கலவரத்தைத் தூண்டியவர்கள் 80 மைல் வேகத்தில் காரில் வேகமாக வந்து மோதித் தள்ளிக் கொன்று விட்டனர். அவர் உறவினர்களும் நண்பர்களும் பழி வாங்கத் துடித்துக் கொண்டு கிளம்பிய போது அந்தப் பெரியவர் அவர்களைத் தடுத்து "ஓர் உயிர் போனதற்கு 100 உயிரைக் கொல்ல நினைக்காதீர்கள். இந்தத் துக்கம் என் ஒருவனோடு போகட்டும். இன்னும் 100 முதியவர்களை துக்கப்படச் செய்ய வேண்டாம்"என்று சாந்தப் படுத்தினாராம்.

ஒரு பெண்  தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றைக் கவர்ந்து சென்றுவிட்டாள். ஆனால் இரவு தூக்கம் வராமல் மனசாட்சி உறுத்தி உள்ளது.மறுநாள் காலையில் காவல் நிலையத்திற்கு வந்து பெட்டியை ஒப்படைத்து வருத்தம் தெரிவித்து உள்ளாள்."நான் சமூகசேவகியாக நினைத்து அதற்கான படிப்பைப் படித்து வருகிறேன். ஆனால் நானே சபலத்துக்கு ஆளாகி இப்படி செய்து விட்டேனே என்று என் மனசாட்சி குத்துகிறது. எனவே தவறுக்குப் பிராயச்சித்தமாக தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டு விட்டேன்." என்றாளாம் அப்பெண்!

கலவர‌த்திற்கான காரணங்கள் பல சொல்ல படுகின்றன.அதில் என் மனதைத் துளைப்பது 'பல இனத்தவர் கொண்ட சமூக அமைப்பு'!இந்தக் கருத்து என்ன சொல்ல நினைக்கிறது? ஆங்கிலேயர் என்ற வெள்ளையினம் மட்டுமே இங்கே வாழ வேண்டும் என்கிறதா? அப்படியானால் இங்கிலாந்து காலனியாக்கிப் பிடித்து வைத்து இருந்த நாடுகளில் இருந்து கடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக இலண்டனில் குடியேறி இதையே தன் தாய் நாடாக நினைத்து வாழும் மக்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? இங்கேயே பிறந்து வளர்ந்த வெள்ளயர் அல்லாத மக்களெல்லாம் வெளியேற வேண்டுமா?

இது பற்றிப் பல சொல்லலாம்.பலரும் ஊடகங்கள் மூலம் அறிந்து இருப்பீர்கள் என்பதால் இத்தோடு இதை முடித்துக் கொள்கிறேன்.

2
இங்கிலாந்தில் 6 இளைஞர்களுக்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கிறார்களாம்.அவர்கள் எல்லாம் 16 வயது முதல் 24 வயதுக்குள் இருப்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து  வேலை யற்றோருக்கான மானியத்தைப் பெறுபவர்கள். No Employment Education or Training (NEET)  என்ற வகையில் வருகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் கலவர‌த்திற்கு, அல்லவா? சோம்பலுற் றவனின்  மனம் சைத்தான் குடிகொள்ளும் இடமல்லவா?
==============================================================
--------------------------------------------------------------------------------------------
3.
ரெடிங் என்ற இடத்தில் தமிழர்களுக்கான ஒரு சந்திப்பு நடந்தது.பெரும்பாலும் இந்த சந்திப்புக்களில் நமது உணவு வகைக்கான கையேந்திபவன் கடைகள் நிறைய வருகின்றன.'சென்னை தோசா' மிகவும் ஒரு பிரபலமான ஒரு தோசைக் கடை. இந்த சந்திப்பில் தமிழ்க் குடும்பத்தினர் வீட்டுச் சமையல் செய்து அசத்தினர். வீட்டில் செய்த இனிப்புக்கள் போளி, அதிரசம் என்று பலவும் கிடைத்தன‌.விற்பனையில் கிடைக்கும் லாபம் நற்செயல்களுக்குப் பயன்படுத்தப்படும்.

அதிகமாக யாழ் தமிழ‌ர்களே வந்திருந்தனர். அவர்களிடம் நிறையப் பேசினேன். இன்னமும் அவர்களுடைய ஈழக்கனவு கலையவில்லை.இந்திய அரசும், முந்தைய கலைஞர் ஆட்சியும் யாழ் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று நான் தான் வேகமாகச் சொன்னேன்.

"நாங்கள் இப்போது உள்ள நிலைமையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுடைய ஆதரவையும் கட்சி பேதமின்றி எப்படிப் பெறுவது என்பதே இனி நாங்கள் சிந்திக்க வேண்டியது” என்றார்கள். இந்திய மக்களின் ஆதரவு குறைந்ததற்கு ராஜீவ் காந்தியைக் கொன்றது தான் காரணம்; அது ஒரு வரலாற்றுப் பிழை என்பதை ஒப்புக்கொண்டார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது சூடான் நாடு பிரிந்து தெற்கு சூடான் உருவாகிவிட்ட செய்தி கிடைத்தது. சூடானிலும் இலங்கையைப்போல இன வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பங்களில் தெற்கு சூடானியர் பலரும் கொல்லப்பட்டனர்.அவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது போலத் தங்களுக்கும் கிடைக்கக் கூடாதா? என்ற ஏக்கம் ஈழத்தமிழர்கள் குரலில் ஒலித்தது. "தெற்கு சூடானைப் போல ஈழமும் ஒரு நாள் எங்களுக்குக் கிடைக்கும்! ஓம்(ஆம்) தானே?!"என்றனர். நானும் 'ஓம் ஓம்' என்று ஆமோதித்தேன்!

அடுத்து என்னை சந்தித்து உரையாடியவர்  கம்போடியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கப் பிரஜை ஆகிய ஒருவர். அவர் பெயரை என்னால் மனதில் இருத்திக்கொள்ள முடியவில்லை.கம்போடியர் என்று ஆவர் கூறியவுடன் எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்களை அவிழ்த்து விட்டேன். இந்தியப் புராணங்களில் காம்போஜம் என்று குறிப்பிடப்படுவது கம்போடியாதான் என்று கூறினேன். அந்த நண்பருக்கு 'ஜ' சொல்ல வரவில்லை. அதுவும் வாயில் மசால் தோசையினை வைத்துச் சுவைத்துக் கொண்டு காம்போஜத்தை பலவகையாக உச்சரித்தார்.

"எங்கள் சூரிய வர்மன் 12ம் நூற்றாண்டிலேயே காம்போஜத்தை ஆண்டிருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய கோவில் வளாகம் உள்ள அன்க்கோர்வாட் கோவில் இந்திய நாகரீகம், கலாச்சாரம் எவ்வாறு உலகளாவி இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு" என்று கூறினேன். பொறுமையுடன் கேட்டுக்கொண்டார் என் (கம்போடிய) அமெரிக்க‌ நண்பர்.

கரோக்கி எனப்படும் ஓர் இசை அமைப்பில் பின்னணி இசை மட்டும் ஒலிக்கிறது. பாடலை நாம் பாட வேண்டும். பாடப்படும் ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய‌ அறக்கட்டளைக்கு இரண்டு பவுண்டு கிடைக்கும் என்றும் எனவே பாட வாருங்கள் என்று ஒலிபெருக்கியில் அழைத்துக்கொண்டே இருந்தனர்.பலரும் பாடி மகிழ்வித்தனர். எல்லாம் சினிமாப்பாட்டுக்கள் தான். 'வாடா மாப்பிளே வாழப்பழத் தோப்பிலே...','டாடி மம்மி வீட்டில் இல்லை தடைபோட யாரும் இல்லை...'போன்ற பாடல்களுக்கு பாடலுடன் ஆடலும் சேர்ந்து ஒரே அமர்களம்தான் போங்கள்.

பெரியவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, சிறியவர்களுக்கான் கிரிக்கெட் போட்டி, ஓட்டபந்தயம், டென்னிகாய்ட், குட்டீசுக்கு உருளைக்கிழங்கு ஓட்டப் போட்டி என்று அமர்களப்பட்டது.ஒருபக்கம் பெண்கள் மருதாணி இடுவது,கோலம் போடுவது என்று அசத்தினர். சோளக்கதிரை தணலில் வாட்டி அளித்தனர். அதற்கு நல்ல வரவேற்பு.

என்னதான் சொன்னாலும் மசால் தோசை, பஜ்ஜி போண்டா ஸ்டால்களில்தான் அதிகக்கூட்டம் அலைமோதியது.

அங்குள்ள மருத்துவமனைக்கு குழந்தைகள் வார்டு வளர்ச்சிக்கு 500 பவுண்டு தானமாகக் கொடுக்கப்ப‌ட்டது.அந்த நகர மேயர் ஒரு பெண்மணி தன் கணவரோடு வந்து இருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டு தவறாமல் மசால் தோசையைச் சாப்பிட்டுவிட்டுப் போனார்.

(இன்னும் வரும்)

வாழ்க வள்முடன்!
ஆக்கியோன்:கே. முத்துராமகிருஷ்ணன்,(லால்குடி)
முகாம்: இலண்டன் மாநகரம்
=============================================================
கம்போடியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கப் பிரஜை ஆன 
மனிதருடன் உரையாடியபோது எடுத்த படம்!
------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

4 comments:

  1. ஆக்கத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றி அய்யா!

    ReplyDelete
  2. அது எப்படி, இந்த குரு பெயர்ச்சி போல இப்போது எங்க மாமா லண்டன் பெயர்ச்சி ஆகி இருக்கிறார். அந்த பலன்தான் இந்த கலவரமா இல்லையா என்று வகுப்பு ஆசிரியர் தான் சொல்லணும். அப்போதான் நாங்க ஒத்துப்போம்.

    ReplyDelete
  3. /////Blogger Ramachandranwrites said...
    அது எப்படி, இந்த குரு பெயர்ச்சி போல இப்போது எங்க மாமா லண்டன் பெயர்ச்சி ஆகி இருக்கிறார். அந்த பலன்தான் இந்த கலவரமா இல்லையா என்று வகுப்பு ஆசிரியர் தான் சொல்லணும். அப்போதான் நாங்க ஒத்துப்போம்./////

    மாமாவைக் குருவுடன் ஒப்பிட்டுவிட்டீர்கள். மாமா பெயர்ந்ததால் நன்மைகள்தானன்றி வேறொன்றுமில்லை.
    கலவரத்திற்கெல்லாம் வேறு கிரகங்கள் காரணமாகும். பழைய பாடங்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

    ReplyDelete
  4. //நான் இலண்டன் வந்த நேரமோ என்னமோ இங்கே கலவர‌ம் வெடித்து விட்டது.

    இதற்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பதை மட்டும் உங்களுக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.//

    ஹா..ஹா..ஆரம்ப வரிகள்-கம்போஜம் எல்லாமே கலக்கல். ஐயா தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com