------------------------------------------------------------------
சாகாது கம்பனவன் பாட்டு - அது - தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!
இலக்கியச் சோலை!
இன்றைய இலக்கியச் சோலையை அலங்கரிக்கின்றது கவியரசர் கண்ணதாசனின் பாட்டு.
காவடிச் சிந்தில் எழுதிய பாட்டு; மனதைப் புரட்டிவிடும் போட்டு!
என்னவொரு சந்தம், எதுகை, மோனை துள்ள வைக்கும் பாட்டு
மனிதர் அச்த்தியிருக்கிறார். படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
தலைப்பு: கம்ப சூத்திரம்
எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
------------------------------------------------------------
பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!
சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்
போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!
அண்ணனொடு தம்பியர்கள்
நாலாகி ஐந்தாகி
ஆறேழு ஆனவிதம் கூறி - எனை
ஆளுகிறான் மூளைதனில் ஏறி!
தென்னிலங்கைச் சோலையிலே
சீதை அனுமனிடம்
சொன்னதொரு வாசகத்தைப் பார்த்து - நான்
துள்ளிவிட்டேன் மெனியெல்லாம் வேர்த்து!
கள்ளிருக்கும் கூந்தலினாள்
உள்ளிருப்பாள் என்று சொல்லி
பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது
பாட்டல்ல உண்மையென்று நம்பு!
காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு - அது
தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!
கம்பனெனும் மாநதியில்
கால்நதிபோல் ஆவதென
நம்புகிறேன் பாட்டெழுதும் நானே - அந்த
நாயகன்தான் என்ன நினைப்பானோ?
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
அருமை..
ReplyDeleteகம்ப சூத்திரம் அருமை அந்தக் கவிஞரே
கம்பனைப் பாத்திரமாய்க் கொண்டு
தனது 'பா'திறம் காட்டிய பாங்கை
பாருங்களேன்...
மகுடம் உனக்கிந்த
மண்டலமும் உனக்கென்று
தந்து விட்ட பின்னாலும்
தவ வேடம் தான் கொண்டு
அண்ணனது காலணியை
அரசாள வைத்தானே!
பரதன்; அவ்னிந்த
பாரதத்தின் மூத்த தம்பி.
அனுபவக் கவி! அனுபவித்தே எழுதியக் கவி!!.
பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா!
"கள்ளிக்கும் கூந்தலினாள்
ReplyDeleteஉள்ளிருப்பாள் என்று சொல்லி
பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது
பாடலல்ல உண்மையென்று நம்பு!"
ஐயா, தட்டச்சு பிழை என நினைக்கிறேன்...
"கள்ளிருக்கும் கூந்தலினாள்"
என வரும் என நினைக்கிறேன்.
நன்றி.
வாத்தியார் ஐயா வணக்கம்!.
ReplyDeleteகவியரசர் கண்ணதாசன் அவர்களின் கம்பன் அருமை.
ReplyDeleteநமது தஞ்சாவூர் பெரியவர் கோபாலன் ஐயா அவர்கள் கம்பராமாயணம் முழுமையும் பாட்டுக்குப்பாட்டு உரைநடையாக எழுதியுள்ளார்கள்.அது கீழ்க்கண்ட வலைப்பூவில் கிடைக்கும்.
http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/
தம்பட்டம் அடிக்கும் இந்த இக்கால
ReplyDeleteதமிழ் உலகில் இப்படி ஒரு
பாமாலை படித்த அனுபத்தில்
படைத்திருக்கும் கவிஞரை
சுவைத்து மகிழ்ந்திட தந்த
சுப்பையா வாத்தியாருக்கு நன்றிகள்
வணக்கமும்
வாழ்த்துக்களும்
கம்பராமாயணம் ஒவ்வொரு முறையும் படிக்கும் தோறும் இன்பம் பொங்கிவரும். கவி அழகைக் காணக் கம்பனைப் படிக்க வேண்டும். அதிலும் கண்ணதாசன் ஓர் பிறவிக் கவிஞன். கற்பனை உலகில் சஞ்சரித்த நம் காலத்து கம்பன். அவன் புகழ்ந்தெழுதிய கம்பனின் பெருமையை வேறென்ன சொல்லிப் புகழ்வது? நண்பர் கே.எம்.ஆர். எழுதியிருப்பதைப் போல கம்பராமாயணம் முழுவதையும் உரைநடையில், ஆங்காங்கே சிறு விளக்கங்களையும், வான்மீகம் போன்ற இதர ராமாயணத்திலிருந்து கம்பன் வேறுபடும் இடங்களையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் தயைகூர்ந்து http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
ReplyDeleteஎனும் வலைப்பூவில் சென்று படிக்கலாம். கம்பன் கவியமுதைப் பருகப் பருக இன்பம். இந்த அமுதப் பொய்கைக்கு எனக்கு வழிகாட்டிய பெருமை பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன், பேரா.எஸ்.கே.இராமராஜன் (கம்பராமன்) ஆகியோரைச் சேரும். இந்த நேரத்தில் அந்த மேலோர்களை வணங்கி மகிழ்கிறேன்.