5.6.11

சங்கடமில்லாத சங்கேத மொழிகள்!

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சங்கடமில்லாத சங்கேத மொழிகள்!

வாரமலர்

இன்றைய வார மலரை, நமது வகுப்பறை மூத்த மாணாக்கர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது.
படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------------
'தடுக்கி விழுந்தேன்' என்பது வலைதளத்தில் ஓர் இன்பமான அனுபவமாகப் போய் விடுவது உண்டு.http://www.stumbleupon.com/  என்று ஒரு தளமே உள்ளது.

அதுபோல தடுக்கி விழுந்ததுதான் http://thiruvarangan.blogspot.com/

மோஹனரங்க‌ன் என்ற ஸ்ரீவைஷ்ணவ அன்பர் எழுதுகிறார். அருமையான,கட்டுரைகள்.வைஷ்ணவ சம்பிரதாயத்தை அறிய ஒரு நுழைவுவாயில் அந்த வலைப்பூ.

அதில் 'வைணவ பரிபாஷை'பற்றி 6 கட்டுரைகள் மிகவும் சுவையுடன் எழுதியுள்ளார். நகைச்சுவையுடன், அந்த சம்பிரதாயத்தை அறிய விரும்புவோருக்கு அருமையான விருந்து.

தத்துவம் எல்லாம் எனக்கு எட்டிக்காய். படிக்கக் கூடியதாக இருக்கும் கதை கட்டுரைகளையே படிப்பது எனது இயல்பு. கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பக்கத்தைப் புரட்டும் மன இயல்பு என்னுடையது.அதாவது மிகச் சாதாரணன். 'அறிவுஜீவி' மனமயக்கம் சற்றும் இல்லாதவன்.சுற்றி வளைத்துச் சொல்லும் சொற்கள் மண்டையில் சுலபமாக ஏறாது எனக்கு.

போகட்டும். என் புராணம் வேண்டாம். சொல்ல வந்த செய்திக்கு வருவோம்.

பரிபாஷை என்கிறார்களே அது என்ன?

"பெரும்பாலும் பரிபாஷை என்பது ஒரு குழுவினரின், அல்லது ஒரு கோஷ்டியினரின் பரிமாற்றப் பேச்சு.......பேச்சு வழக்குகள் என்பனவற்றில் குழூஉக்குறி, சங்கேதம் என்பன பொதுவாக அமையும்."என்கிறார் மோஹனரெங்க‌ன் சுவாமி.

அந்தக் குழுவினர் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய சங்கேத மொழி பரிபாஷை!

ராணுவத்தில் ஒரு வழக்கம் உண்டு.ஒவ்வொரு  நாளும் ஒரு சொல்லை ரகசியமாக சொல்லி விடுவார்கள்.எப்படி நம் கணினிக்கு 'பாஸ்வர்ட்' சொல்லி உள்ளே புக வேண்டுமோ அதுபோல காவலுக்கு நிற்போரிடம் 'பாஸ்வர்ட்' சொல்லிப் புக வேண்டும். பாஸ்வர்ட்  தெரியாதவர்கள் எதிரியாகப் பாவித்து வெளியில் நிறுத்த‌ப்படுவர்.கிட்டத் தட்ட பரிபாஷையும், தான் இந்தக் கூட்டத்தைச் சார்ந்தவந்தான் என்பதை நிலை நிறுத்தும் வேலையைத்தான்
செய்கிற்து.தத்துவ நிலையில் நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் நடைமுறை யதார்த்ததில் நான் சொல்வது 'பரிபாஷை என்பது ஓர் அடையாளக் குறிப்பே'.

தண்ணீர் என்பதை ஸ்ரீவைஷ்ண‌வர் "தேர்த்தம்" என்பர்.ஸ்மார்த்தர்கள் 'ஜலம்' என்றோ 'தீர்த்தம்' என்றோ சொல்வார்கள்.தேர்த்தாமாடுதல் என்றால் குளித்தல் என்று பொருள் வைணவக் குடும்பங்களில்.  ஸ்மார்த்தக் குடும்பத்தில் அதுவே 'ஸ்நானம்' ஆகிவிடும்.

பாயசம் என்பது எல்லோருக்கும் தெரியும்.வைண‌வர்கள் அதனை அக்காரவடிசல் என்பார்கள்.சர்க்கரை பொங்கல் என்பது திருக்கண்ணமுது. தயிர்சாதம் என்பது ததியன்னம்.

ஒரு ஸ்மார்த்தக் குடும்பத்தில் நடக்கும் பூஜை வழிபாடு அதைத் தொடர்ந்து நடக்கும்  விருந்துக்குப் பெயர் சமாராதனை.வைணவ குடும்பத்தில் அதுவே ததியாரதனை.

இப்படி ஒரே செயலுக்கோ ,பொருளுக்கோ அவரவர் குழு சார்ந்த சொற்களைப் பயன்படுத்தும் சொற்களே பரிபாஷை.

தஞ்சை மாவட்டத்தில் 'ஒரு நல்லதிற்கு போயிருக்கிறார்' என்றால் ஒரு 'சாவுக்கு,இழவுக்குப் போயிருக்கிறார்' என்று பொருள்.அல்லது அதையே சில குழுக்கள் 'தேவைக்குப் போயிருக்கிறார்' என்றும் சொல்லும்.

"திருவாளத்தான்" என்று 'வள வள' என்று பேசுபவனைக் குறிப்பாக உணர்த்துவார்கள்."அதோ வருகிறானய்யா திருவாளத்தான்! நான் போய்க் கொள்கிறேன்!"என்று நண்பர் குழு 'போர'டிப்பவன் கண்ணில் பட்டதும் சிதறி
ஓடும்.

"மேற்படியார் வந்தாப்பல" என்று சொன்னவுடனே அந்தக்குழுவில் உள்ளோர் அந்த 'மேற்படியார்'  யார் என்று புரிந்து கொள்வார்கள். குழுவில் சேராதவர்களுக்குப் புரியாது.

ஏதோ பரிபாஷை என்றால் அய்யர்,அய்யங்கார் சமாச்சாரம் என்று எண்ணி விடாதீர்கள். அரசியலிலும் இது கடைப் பிடிக்கப்படும்.

பேரறிஞர், பேராசிரியர், பெருந்தலைவர்,புரட்சித் தலைவர்,மூதறிஞர்,கலைஞர்,நாவலர், நாஞ்சிலார்,.... இவற்றை சொன்னவுடனேயே யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க‌ளுக்குப் புரிகிறதல்லவா? அவர்களுடைய
முழுப்பெயரைச் சொல்லாமலே புறிகிறதல்லாவா?அதுதான் சங்கேத மொழி. அந்த அந்தக் குழுவில் மட்டுமே அது செல்லுபடியாகும் அல்லது செலவாணியில் இருக்கும்.

அரசியலில் இப்படி பட்டப் பெயர் இல்லாதவர்கள் தங்கள் ஊர் பெயரை சூட்டிக் கொண்டார்கள்.

தஞ்சையார், புதுகையார், நாவல்ப‌ட்டார், தாந்தோன்றியார்,என்பது போலப் பலபல.அன்பில் ஊரைச் சேர்ந்தவர் அன்பிலார்! 'அன்பு இல்லாதவர்' என்றும் பொருள் கொள்ளலாகும்தானே!

எல்லாத் தொழிலுக்கும் சங்கேத மொழி உண்டு.கூடப் பணி புரிபவர்களுக்கு சங்கேதப் பேர் எல்லாம் உண்டு.

கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.மேஸ்திரி வந்தார். சித்தாள் ஒருத்தி கூவினாள்,"தண்ணிவண்டி வந்திடிச்சி" மற்றவர்கள் உஷார் ஆனார்கள். எப்போதும் 'மப்'பில் இருக்கும் மேஸ்திரிக்கு சங்கேதப் பெயர் 'தண்ணிவண்டி'

திருமண‌த்தில் சமையல்வேலை மேற்பார்வையில் இருந்தேன்."சாம்பாரை எடைகட்டு, பாலை எடைகட்டு" என்று சமையல் மேஸ்திரி சொன்னார்.அப்படியென்றால் 'சுடுநீரை எடுத்து சாம்பாரிலோ, பாலிலோ ஊற்று' என்று பொருள். அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சொல்லாட்சி.

'கழுத்து ஆம்படையானிடம் இத்தனை நாள் கஷ்டப்பட்டேன். இப்போ வயத்தாம்படையானிடம் சிரமப்படுகிறேன்' என்றாள் ஒரு மூதாட்டி.கழுத்தில் தாலிகட்டினவன் கழுத்தாம்படையான்.வயற்றில் இடம் பிடித்தவன் வயத்தாம் படையான். அதாவது பெற்ற மகன்.

செருப்பு காணாமல் போய்விட்டது. கிவாஜ சொன்னார் "பரதாழ்வார் வந்து போயுள்ளார்". பொருள் புரிகிறதல்லவா? ஸ்ரீராமனின் பாதுகையை வேண்டிப்பெற்றுச் சென்றார் அல்லவா தம்பி பரதன்?

அந்தக் காலத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சப் பண‌த்திற்குப் பரிபாஷை உண்டு.ஒரு கப்பல் தர வேண்டும். ஒரு மான் தரவேண்டும் என்றால் அந்தப் படம் போட்ட நோட்டை லஞ்சமாகத் த‌ர வேண்டும் என்று பொருள்.

'அறுவை' என்பதும் ஒரு சங்கேதச் சொல்தான். மேற்கொண்டு அறுக்காமல் முடித்துக் கொள்கிறேன்.

எழுத்தாக்கம்
கே.முத்துராம கிருஷ்ணன்
லால்குடி

வாழ்க வளமுடன்!

4 comments:

  1. கப்பலும் மானும் போய் இப்போ
    கலர் காந்தியானதாலே எந்த கலர் என

    கரடி விடவேண்டி உள்ளது..
    கரடியும் குழு வார்த்தை தானோ?

    வாரமலரை எப்பவும் போல்
    உற்சாகமாக அமைத்தமைக்கு

    வணக்கமும் வாழ்த்துக்களும்
    வழக்கம் போல் வள்ளுவ சிந்தனை

    சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
    சொல்லில் பயனில்லா சொல்

    ReplyDelete
  2. அன்புடன் வணகம்
    திரு ..KMR.K..அழகான பதிவு ,எதார்த்தமான நடை ,வழக்கில் உள்ள விஷயம், இன்று கல்லூரி இளைஞர்களிடம்.. கூட... இது போன்ற சங்கேத பாஷைகள் பயன்பாடு இருக்கிறது.. ஆனால் கேட்டால் படு காமெடியாக இருக்கும்..!!!வாழ்க !!

    ReplyDelete
  3. மிக மிக அருமையான ஆக்கம் ஐயா,

    இப்படி ஒரு 4 - 5 ஆக்கங்களைத் தாருங்கள்..

    நாமும் பட்டையை கிளப்பலாம்..
    சந்தேக பாசையிலேயே பேசி..

    நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com