3.6.11

மந்திகள் எதற்குப் பயப்படும்?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 மந்திகள் எதற்குப் பயப்படும்?

வெள்ளி மலர்.

இன்றைய வெள்ளி மலரை நமது வகுப்பறையின் மூத்த மாணாக்கர் திரு. கோபாலன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
_____________________________________________

மந்திகள் பயந்தது ஏன்? மொட்டுக்கள் மலர்ந்தது ஏன்?

திருஞானசம்பந்தப் பெருமான் தலயாத்திரை செய்து கொண்டு வரும்போது, கரைபுரண்டு ஓடும் காவிரி நதியின் வடகரை வழியாகப் பல தலங்களை தரிசித்துக்கொண்டு வருகிறார். காவிரி ஆறு தன்னிரு கரைகளிலும் சோலைகளையும், வயல் வெளிகளையும் பசுமையாகப் பரப்பிக் கொண்டு தவழ்ந்து செல்லும் காட்சியைக் காண்கிறார். ஆங்காங்கே வானளாவ எழுந்து நிற்கும் ஆலய கோபுரங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. காத தூரம் கடக்குமுன் ஐந்தாறு ஆலயங்கள் தென்பட, அங்கெல்லாம் சென்று வழிபட்டு மேற்கு திசை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

அப்போது தூரத்தே ஓர் உயர்ந்த கோபுரம் கண்களுக்குத் தென்படுகிறது. ஓ! அதுதான் திருவையாற்றுத் தலமோ? சாலையின் இருபுறத்திலும் அடர்ந்து வளர்ந்த சோலைகள். சலசலத்து ஓடும் வாய்க்கால்கள். அந்த வாய்க்கால்களிலிருந்து மதகுகள் வழியாக வயலுக்குத் தண்ணீர் பாயும் ஓசை. பறவைகளின் ஒலி. ஆங்காங்கே புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஓசை. இதோ, நெருங்கி வந்து விட்டார் ஐயாறப்பரின் வானுயர்ந்த கோபுரத்துக்கு அருகில்.

ஆலயத்தின் உள்ளிருந்து இசையின் ஒலி கேட்கிறது. அந்த இசைக்குத் தகுந்தாற்போல ஒலிக்கும் சலங்கை ஒலி. அவற்றோடு இணைந்து ஒலிக்கும் மத்தளத்தின் ஒலி. இந்த ஒலிகள் எல்லாம் ஆலயத்தைச் சுற்றி வெகு தூரம் பரவிக் கிடக்கிறது. காவிரிக் கரையில் அமைந்துள்ள பசும் சோலைகளில் பறவைகளின் கானம். பழுத்துத் தொங்கும் பழங்களைச் சுவைத்துச் சாப்பிடும் மந்திகளின் கூட்டம். திடீரென்று ஆலயத்திலிருந்து மத்தளங்களின் ஒலி பலமாகக் காற்றில் மிதந்து வருகிறது.

அந்த ஓசையைக் கேட்ட மாத்திரத்தில் மரத்தில் பழங்களை உண்டு கொண்டிருந்த மந்திகளுக்கிடையே ஓரு சலசலப்பு. அந்த மந்திகள் பழம் சாப்பிடுவதை நிறுத்திவுட்டு ஒலி வந்த திசையை உற்று நோக்குகின்றன. பிறகு திடீரென்று மரத்தின் கிளைவிட்டுக் கிளை தாண்டி, ஓங்கி வளர்ந்த ஒரு மரக் கிளையின் மீது ஏறி மரத்தின் உச்சிக்குச் செல்கின்றன. அங்கிருந்து அவை வானத்தை அண்ணாந்து நோக்குகின்றன. அங்கு அவைகள் என்ன தேடினவோ தெரியவில்லை, அவைகள் ஏமாற்றமடைந்தது போல தோன்றியது. மறுபடியும் அவைகள் பழங்களைத் தின்னத் தொடங்கிவிட்டன.

ஞானக்குழந்தை திருஞானசம்பந்த மூர்த்தி இந்தக் காட்சியை காண்கிறார். மெல்ல சிரித்துக் கொள்கிறார். அவருக்குத் தெரியும் அந்த மந்திகள் ஏன் அப்படி மரத்தின் உச்சிக்குச் சென்று வானவெளியை அண்ணாந்து பார்த்தன, பின் ஏன் ஏமாற்றமடைந்து பழங்களைத் தின்னத் தொடங்கின என்று. ஆலயத்திலிருந்து ஒலித்த அந்த மத்தள ஒலி, அவைகளுக்கு இடியோசை போலக் கேட்டிருக்கிறது. மழை வருகிறதோ, அதற்காக வானம் உறுமுகிறதோ, இடி இடிக்கிறதோ என்று அவை வானத்தை அண்ணாந்து பார்த்தனவாம். அங்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் பிறகு வழக்கம் போல பழங்களைத் தின்னத் தொடங்கினவாம்.

திருஞானசம்பந்தர் திருவையாற்றை நெருங்கிவரும் நேரம் பார்த்த இந்தக் காட்சிகளை வர்ணித்துப் பாடுகிறார்.

"புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று
அருள் செய்வான் அமரும் கோயில்;
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட
முழவு அதிர மழை என்று அஞ்சிச்
சில மந்தி அலமந்து மரம் ஏறி
முகில் பார்க்கும் திரு ஐயாறே!"


மறுபுறம் மான் கூட்டங்கள் ஓடிவருகின்றன. அங்கு வழியில் ஓடும் ஒரு ஓடையைத் தாண்டி அந்த மான்கள் பாய்ந்து ஓடுகின்றன. அப்படி திடீரென்று மான்கள் ஓடிவரவும், அங்கு மரத்தடியில் திரிந்துகொண்டிருந்த மந்திகள் பயந்து போய் மரத்தின் மேல் பாய்ந்து ஏறுகின்றன. அப்படி அவை பாய்ந்த வேகத்தில் மரத்தில் கட்டியிருந்த தேன்கூடு சிதைந்து தேன், ஓடை நீரில் சிந்துகிறது, நீரில் ஏற்பட்ட இந்த சந்தடியால் அங்கு ஓடிக்கொண்டிருந்த மீன்கள் நீருக்கு மேலாகத் துள்ளத் தொடங்கின, மீன்கள் துள்ளி விழுந்ததனால் அங்கு முளைத்து மொட்டு விட்டிருந்த தாமரைகள் மலரத் தொடங்கின. இந்தக் காட்சி அவர் கண்களில் படுகிறது.

"ஊன்பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன்
பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்
தான்பாயும் விடை ஏறும் சங்கரனார்
தழல் உருவர் தங்கும் கோயில்;
மான்பாய, வயல் அருகே மரம் ஏறி
மந்தி பாய மடுக்கள் தோறும்
தேன்பாய, மீன்பாயச் செழுங்கமல மொட்டு
அலரும் திருஐயாறே!"


எழுத்தாக்கம்
வி.கோபாலன்
தஞ்சாவூர்

_______________________________________________________________
மகிழ்ச்சியான அறிவிப்பு

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அவருடைய சொந்த ஊரில் கோவில் திருவிழாக்கள். திரும்பி வர 4 நாட்கள் ஆகும். அதுவரை வகுப்பறைக்கு விடுமுறை. பழைய பாடங்களை மீண்டும் படியுங்கள். அடுத்த வகுப்பு
8.6.2011 புதனன்று நடைபெறும்!

வாரமலர் மட்டும் 5.6.2011 அன்று வெளியாகும் (Through Google blog's auto post option). அதை எழுதியவர் யார்? பொறுத்திருந்து பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

6 comments:

  1. ஆலயத்தின் உள்ளே "ஆமந்திரிகை" எழுப்பிய ஒலி
    அதன் பொருட்டு நடந்த நிகழ்வுகளை எல்லாம்
    திருஞான சம்பந்தர் அழகுறப் பாடியுள்ளார்...

    ஆனால் அதை இவ்வளவு அழகாக தாங்கள் கூறிய
    பதவுரை... அருமை..
    கவியுள்ளம் என்பதுவும் இது தானோ௧ நல்
    கவிதைக்கு நயவுரை தந்ததுவும் அது தானோ.
    கம்பனே வந்தானா; காட்சிதனைத் தந்தானா! கருத்திலே
    கம்பனே புகுந்தானா; காவிரியாய் விரிந்தானோ!!
    அற்புதமான வருணனை... அருமையான உரைநடை..

    உண்மையில் (உரைநடையில்) கம்பனைக் காண்கிறேன்.

    நன்றிகள் ஐயா! நன்றி!!

    ReplyDelete
  2. வணக்கம் கோபாலன் ஐயா,

    அடியவனது அடுத்த ஆக்கத்திற்காக ( [புலன்கள் சந்பந்தமாக ) தேர்ந்தெடுத்திருந்த பாடலைத் தொட்டு இங்கு ஒரு ஆக்கம் தந்திருக்கிறீர்கள்..

    மகிழ்ச்சி..

    ஏற்கனவே அது தொடர்பாக இன்று ஒரு ஆக்கம் தந்திருக்கிறேன்.

    எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், இறைவன் அன்பர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது நிரூபிக்கிறது..

    குருவருளையும் திருவருளையும் சிந்தித்து வியக்கிறேன்..

    ReplyDelete
  3. வணக்கம் கோபாலன் ஐயா,

    இதுபோல பல அரிய அற்புதமான இலக்கியத் தொடர்கள் நமது பன்னிரு திருமுறைகளில் இருக்கின்றன..

    தேவாரம், திருவாசகம் என்றால் அது எதோ ? போரடிக்கும் பக்தி காவியம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் பலரும்..

    ஆனால் அது ஒரு அருளோடு கூடிய வாழ்வியல் நூல் என்பதை உணர்த்த இந்த ஆக்கம் ஒரு அற்புத துணை.

    நன்றி ஐயா

    ReplyDelete
  4. தொடர்ந்து அருமையான பாடல்களை அறியத்தருவதற்கு நன்றி. இதோடு கூட, இவை எதில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிடுவது உதவியாக இருக்கும். தங்களின் வர்ணனைகள் மிகவும் கவர்ந்தன.

    நெறிமயங்கிஅறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்திஅலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் //

    ஊன்பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன்பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்தான்பாயும் விடை ஏறும் சங்கரனார்தழல் உருவர் தங்கும் //

    இந்த வரிகள் சரியாகப்புரியவில்லை. சற்றே விளக்குங்கள்.

    ReplyDelete
  5. தஞ்சைப் பெரியவர் கோபாலன்ஜி அவர்களின் ஆக்கம் அருமை ஐம்புலன் தட்டுக் கெட்டு அலையும் மனத்திற்குக் குரங்கு ஓர் உபமானமாக ஆக்கப்பட்டுள்ளது.முழவின் ஒலி மட்டும் அன்றி மடவார்களின் நடன‌மாடும் ஒலியும் குறிக்க‌ப்பட்டுள்ளது. ஆட்டமும் குறங்குகளை அச்ச மடையச்செய்தது என்றால் அது நிலம் அதிர ஆடிய ஆட்ட‌மாக இருந்திருக்க வேண்டும்; அதாவது சிவதாண்டவ நடனமோ?

    பெரியவருக்கு ஐயாறப்ப‌ரின் மேல் தீராத காதல்.மாதத்தின் பாதி நாட்களை
    திருவையாற்றிலேயே கழிக்கிறார்.எல்லாவற்றிலும் இறைவனைக்காணல் என்பது பெரியவரைப் பொறுத்தவரை எல்லாவூரிலும் திருவையாற்றையே காணல் என்று ஆகிவிட்டது.

    ReplyDelete
  6. இயற்கையை பாடாத எங்கள்
    இன்னிசை சம்பந்தரா..

    எடுத்துச் சொல்வதில் மட்டும்
    எங்கள் கோபாலனய்யா சளைத்தவரா

    ரசனையோடு சொல்லும் போது
    ருசிக்கும் என்பதாலே தான் முன்பு

    பாட்டி கதைக்ள் பிரசித்தமானதுஇப்போ
    வட்டில்(CD) வரும் கதைகளோ ப்ப்பூ

    நயம்பட தந்தமைக்கும்..
    நலம் பெற தந்தமைக்கும்

    நன்றிகள் வாழ்த்துக்களுடன்
    நாங்களும் வணக்கங்களுடன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com