30.4.11

எங்கே போகிறது இந்த உலகம்?

-------------------------------------------------------------------
எங்கே போகிறது இந்த உலகம்?
இளைஞர் மலர்

ஏன் இந்த அவலம்? எங்கே போகிறது இந்த உலகம்?

சில தினங்களுக்கு முன்பு தினமலர் தனது சினிமா செய்திப் பிரிவில் இந்தச் செய்தியை பிரசுரித்திருந்தது!!!

"பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கு, ஏற்ற இந்திய மணப்பெண் காத்ரீனா கைப்தான் என்று பிரபல  மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், மறைந்த டயானா ஆகியோரின் மூத்த
மகனான வில்லியம்ஸ் ஆர்தர் பிலிப்யிஸ்க்கும், கதே மிடில்டனுக்கும் நாளை(29.04.11) திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனில் உள்ள பாரம்பரியம் மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. உலகமே இவர்களது திருமணத்தை 
ஆவலாக எதிர்பார்த்துள்ள நிலையில், இளவரசர் வில்லியம்ஸ்க்கு
ஏற்ற இந்திய மணப்பெண் பாலிவுட் நடிகைகாத்ரீனா கைப்தான்
என்று பிரபல மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் தெரிவித்து
இருக்கிறது.

இதுதொடர்பாக அந்த இணையதளம் 8000பேரிடம் நடத்திய கருத்து
கணிப்பில் 75.3சதவீதம் பேர் காத்ரீனா  கைப்புக்கும், 16.7சதவீதம்
பேர் பிரியங்கா சோப்ராவுக்கும், 8சதவீதம் பேர் சோனாக்ஷி
சின்ஹாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகவலை
ஷாதி.காம் இணையதளத்தின் தலைமை அதிகாரி கவுரவ் ராக்ஷித்  தெரிவித்துள்ளார்."

எவ்வளவு நேர்த்தியான ஒரு பணி..... இந்தக் கருத்துக் கணிப்பில்
எட்டாயிரம் பேர் கலந்ததும் தான்...... என்னே??...

சரி இதைப் பாருங்கள்...

"எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? என்ற
கேள்வியுடன் ஒரு ஏடாகூட கருத்துக்கணிப்பை  நடத்தியிருக்கிறது
ஒரு ஆங்கில நாளிதழ். ஹாலிவுட் நடிகைகள் பலரும் நிர்வாண
ஓவியத்திற்கு போஸ் கொடுத்து பல கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேகலாச்சாரம் விரைவில் பாலிவுட்
நடிகைகள் மத்தியிலும்  பரவப் போகிறது. இதற்கான முயற்சிகளில்
பிரபல ஓவியர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக 
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நிர்வாண ஓவியத்தை மையக் கருத்தாக வைத்து ஒரு கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளது.

அதாவது, எந்த நடிகையின் நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை?
என்ற கேள்வியுடன், நாட்டின் முக்கிய  நகரங்களில் நடத்தப்பட்ட
இந்த கருத்துக்கணிப்பில் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டு
கருத்து தெரிவித்தனர்.

கருத்துக்கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று
ஐஸ்வர்யா ராய் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு  அடுத்தபடியாக பிரியங்கா சோப்ரா 30 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார்.
ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன்  13 சதவீதமும், கரீனா கபூர்
12 சதவீதமும், மலாய்கா அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா
1 சதவீதமும்  ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். சென்னை ரசிகர்கள் அதிக
அளவில் விரும்பியது கரீனா கபூரைத்தானாம். நம்ம ஊர்  த்ரிஷா
உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா?
அல்லது ஓட்டுக்கள் விழவில்லையா?

என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை."

என்ன நடக்கிறது இங்கே? எதை நோக்கி இந்தப் பயணம்? எங்கே சென்று முடியும்?

இப்படியெல்லாம் ஒரு ஆசை! இந்த மஞ்சள் பத்திரிக்கைச் செய்தியை தினமலரில் மணம் பரப்பச் செய்வது தான்  ஏன்?

முன்னைய செய்தி தொடர்புள்ள, அந்த நிறுவனம் பதிந்தவர்களுக்கு
மாத்திரம் பணம் பெற்றுக் கொண்டு திருமண  ஜோடி சேர்த்துக்
கொண்டு இருந்தது. இப்போது வேறு வேலையை செய்து
கொண்டிருக்கிறது?.

அடுத்ததாய் உள்ளது:

யாரைப் பிறந்த மேனியில் பார்க்கப் பிடிக்கும் என்று ஒரு ஆங்கில
நாளேடு இந்தியாவின் பல நகரங்களில்  நடத்திய சர்வே... அதில் இன்னொருவனின் மனைவி தான் முதலிடத்தில் வந்திருக்கிறார்!?...

பங்கெடுத்து வாக்களித்தவர்கள்....

தமது தாய் நாட்டையே தாயின் கோலத்தில் பார்க்கும் நம்
மண்ணின் மைந்தர்கள்  என்பது தான் வெட்கக்கேடு....ஆங்கிலப்
பத்திரிகை நடத்தும் அயோக்கியர்கள் பெண்ணில்லாமல் சுயம்பாய் வந்தவர்களா?

இல்லை பெண் என்றாலே வக்கிரமாய்ப் பார்க்கும் மன நோயாளிகளா?

வெள்ளைக் கலாச்சாரம் கொள்ளை கொள்வது எதை?

விவேகானதர் சொன்னார்.. மேலை நாடுகளிலே ஒரு நாள்
தொடர்ந்து அழுகுரல் கேட்கும் என்றார்... கீழை  நாடுகளிலும் அது
தொடர்ந்தே ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை....

நம்மைப் பெற்றவளும், நம்மொடுப் பிறந்தவளும் பெண்தானே, நாம் பெற்றாலும் அது பெண்தானே?

அபிராமி பட்டராக இருக்க வேண்டாம், சுத்தானந்த பாரதியாக
இருக்க வேண்டாம்... ஒரு நல்ல மகனாக,  தமையனாக, தந்தையாக இருக்கலாமே?

நமது முன்னோர்களின் அறவுரைகளை இந்தத் தருணத்திலே சற்று
திருப்பிப் பார்ப்போம்!!

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை
(கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்று ஆசாரக்கோவை)

ஒழுக்க மற்றவை
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.


நரகத்துக்குச் செலுத்துவன
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.


தனித்திருக்கக் கூடாதவர்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.


“ பெற்றவள், தாம் பெற்ற மகள், உடன் பிறந்த சகோதிரி என்றாலும் ஒரே இடத்தில்  தனியாக உறக்கம்  கொள்ளக் கூடாது”

ஐம்புலன்களில் எது எப்படிக் கெடும் என்பதை யாரறிவார்?

ஆக, ஒவ்வொருவருக்கும் முதல் உரிமை தாய், அடுத்து மகள் கடைசியாக உடன் பிறந்த சகோதரி என்று இதில் வகை படுத்தியதையும் காணலாம்... எவ்வளவு உரிமை இருந்தாலும்... செய்யத் தாகாதன என புலவர் கூறியதை
மனதில் கொள்ள வேண்டும்...

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” - கலித்தொகை.

இங்கே பண்பையும் பாடறிந்து ஒழுகும் தன்மையையும், அதன் உண்மையையும் இந்த உலகிற்கு கூறியவன் தமிழன் தான்...   

தமிழில் இல்லாதது ஏதும் இல்லை. இவை எக்காலத்திற்கும்
பொருந்தும். பல சூழலில் ஆசையின் பொருட்டு பெண்ணிற்கு
பெண்ணே தீங்கிளைத்தாலும், மகாகவியின் ஆதங்கத்தை பார்ப்போம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.


அந்த மகாகவியே மேலும் கூறுகிறான்....

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்' என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.

பாழும் சமூகம் இன்று எதைச் சொல்கிறது பாருங்கள்....

எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? கருத்துக்
கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஐஸ்வர்யா ராய்
முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா
சோப்ரா 30 சதவீதவாக்குகள் பெற்றிருக்கிறார். ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன் 13 சதவீதமும், கரீனா கபூர் 12 சதவீதமும், மலாய்கா
அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா 1 சதவீதமும் ஓட்டுக்கள்
பெற்றுள்ளனர்.

சரி, இந்த செய்தியைத் தந்த தினமலர் என்ன சொல்கிறது பாருங்கள்....

“நம்ம ஊர் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா? அல்லது ஓட்டுக்கள்  விழவில்லையா?
என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை."

இதை வெளியிட்ட தினமலர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை ?

பாவம் அதனின் ஆதங்கம் அது!

ஆமாம்.. நடிகைகள் தானே.... என்பது அல்ல... அவளும் ஒருவனின்
மகள், இன்னொருவனின் மனைவி, வேறொருவனுக்கு தாய்.... இப்படிக் கண்டால் உண்மை புரியும்...

இந்தப் பெரும் வியாதி எங்கும் பரவினால்.... இப்படிப்பட்ட மன
நோயாளிகள் எங்கும் நிறைந்திருந்தால் என்ன  ஆகும்? வாருங்கள்!!!
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்???

நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோவிந்தசாமி
சிங்கப்பூர்


வாழ்க வளமுடன்!

24 comments:

  1. "மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டுமம்மா!"
    எனது ஆதங்கத்தை இங்கு தெரிவிக்க அனுமதித்த
    ஆசிரியருக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  2. கூல் டவுன் ஆலாசியம்! கூல் டவுன்! கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 8,000 பேர்களுடன் இந்தியா முடிந்து விடுகிறதா? இந்திய ஜனத்தஒகை மொத்தம் 121 கோடி. ஆகவே டென்சன் ஆகாதீர்கள். கலியுகம் அப்படி இப்படி சில பேர்கள் இருக்கத்தான் கூடும். எல்லோருமே ரமண ரிஷிகளின், பாரதியின் கொள்கைப் பிடிப்புடன் இருந்துவிட முடியுமா என்ன? கவலையை, ஆதங்கத்தை விடுத்து, கூலாக இருங்கள்.

    தமிழ் நாட்டில் தினசரி குடிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 75 லட்சம் பேர்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. அதற்கு வேண்டுமென்றால் ஆதங்கப் படுங்கள். எங்கே போகிறது தமிழகம் என்று எழுதுங்கள்
    நட்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  3. சக்கரச் சுழற்சியில் இது ஒரு நிலை என்று விட்டு விடுங்கள் ஹாலாஸ்யம்ஜி!
    தினமலர் தன்னைவிட விலை குறைத்து விற்கும் தினகரனுடன் போட்டி போட வேண்டும்.எனவே ஏதாவது 'கவரிசி' காட்ட வேண்டும்;மாத்தி யோசிக்க வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு காரணமாக இது போன்ற எதையாவது செய்ய வேண்டியுள்ளது.மன்னித்து விட்டு விடுங்கள்.

    ReplyDelete
  4. அச்சம், பழி, பாவம், இவை மூன்றும் இகவாவாம் இல் இறப்பான் கண்

    என்னும் திருக்குறளை நினைவு கூர்ந்து அமைதி கொள்கிறேன்...

    //பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்பேதைமை யற்றிடுங் காணீர்.//

    இதற்கு உடந்தையாக இருக்கும் அந்த நடிகையரைத் தவிர வேறு யாரை நோவது ?

    ஆமாம் அவர்களது பெற்றோர், உடன் பிறந்தோர், கணணணணவன் - ஆகியோர் என்ன செய்கிறார்களாம் ?

    வேதனைதான் மிஞ்சுகிறது ...

    ReplyDelete
  5. நெருப்பை ஊதி கனிய வைத்தால்
    நெஞ்சம் பதைக்கத்தானே செய்யும்..


    மீண்டும் வரவில்லை அந்நிலைக்கு..
    மீண்டு வருகிறோம்..


    இன்னமும் தெரியவில்லையென்றால்
    இனி தெரியாமலே போகட்டும்..


    ஆடுகள் அல்ல அய்யர் அதனால்
    ஆடாமல் நிற்கிறார்..

    ReplyDelete
  6. இந்த பதிவினையும் வந்த பின் ஊட்டத்தையும் படித்தஉடன் நினைவிற்கு வந்த பாடல்

    "தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி
    தாளம் வந்தது பாட்டை வச்சி"

    என ஒரு பாட்டு T ராஜேந்தர் பாட்டு அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

    ReplyDelete
  7. ////கூல் டவுன்! கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 8,000 பேர்களுடன் இந்தியா முடிந்து விடுகிறதா////
    சரி சார்.... இப்படித்தான் நானும் நாடுகடத்தப் பட்டேன்...
    இல்லை சார், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டாவர்களை ஒருபுறம் நிறுத்தினாலும்... அந்த சர்வே செய்ய முனைந்தவர்கள்.... மேலும் இந்தத் தகவல்களை வண்ணமயமாக்கி படங்களுடன் படு கவர்ச்சியாக ஒரு சில பாரம்பரிய மிக்க பொறுப்புள்ள... காலகாலமாக பல எதிர்ப்புகளிலும் இந்த சமூகத்திற்கு தொண்டு செய்யும் பத்திரிக்கையும் பாதை மாறுகிறதே என்பது தான் ஆதங்கம்... அதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்...

    ////தமிழ் நாட்டில் தினசரி குடிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 75 லட்சம் பேர்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. அதற்கு வேண்டுமென்றால் ஆதங்கப் படுங்கள்////

    தாங்கள் சொல்வதும் உண்மை தான்... இப்பவெல்லாம் குடிப்பது என்பது சாதாரணமாகி விட்டது... அதைச் செய்யாதவன் எதோ தவறு செய்வதாகக் கருதுகிறது இந்தச் சமூகம்... அல்லது ஒருவேளை அவன் உடம்பிற்கு ஒவ்வாமை யாக இருக்கும் என்று சாக்கு சொல்கிறது.... என்னிடம் ஒரு வெள்ளையர் கேட்டார் நீ கிராமத்தில் இருந்து வந்துள்ளாயா? என்று.. பாவம் அவருக்கு நம் கிராமத்தின் இற்றைய நிலைத் தெரிய வழியில்லை.....

    ஒரே ஒரு உபாயம் பெண்கல்வி வேண்டும்.... பெண் உண்மையில் சதந்திரம் பெற்று சரியானப் பாதையில் போக நல்ல மனிதர்கள் உதவி புரிய வேண்டும்.. பெண்களும் நிலைமைப் புரிந்து... கல்லானாலும் கணவன் புல்லா(full ) நாளும் புருஷன் என்று இல்லாமல்... ஒப்பனைக்கும்... ஓய்யாரத்திற்கு... பட்டுப் புடவைக்கும்..ஆயிரம் ஜோடி செருப்புக்கும், அங்கமெல்லாம் மின்ன தங்கத்திற்கும் அலையாமல்.... அவர்களின் பலமறிந்து... கட்சிப் பொருளாகவே இருக்காமலும் அப்படி செய்பவர்களை விரட்டி நையப் புடைய வேண்டும்... (ரெளத்திரம் பழகவேண்டும்)....

    "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" தனிமனித ஒழுக்கம் வளர தாயே மிகச் சிறந்தவள்... ஆக அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கவேண்டும்....
    "நல்லவனாவது தீயவனாவது அன்னையின் வளர்ப்பிலே--- முத்தையாவின் முது மொழி.." நன்றி..

    ReplyDelete
  8. /////தினமலர் தன்னைவிட விலை குறைத்து விற்கும் தினகரனுடன் போட்டி போட வேண்டும்.எனவே ஏதாவது 'கவரிசி' காட்ட வேண்டும்////

    யார் யாரோடு போட்டி போடுவது என்பதற்கு விவஸ்தை இருக்கிறது அல்லவா?
    அந்த பத்திரிகை இப்படி செய்தால் பேச்சிற்கே இடமில்லை.... நல்லவிசயத்திற்கு போட்டி போடலாம்...
    தங்களுக்குத் தெரியாதது இல்லை... ஆசிர்வதித்த திருவனந்தபுர பத்மநாத சுவாமி மன்னித்தால் போதும் நன்றி சார்.

    ReplyDelete
  9. தமிழ்ப் பத்திரிகைகள் இப்போதெல்லாம், அவை பக்தியைப் பரப்புவனவாக இருந்தாலும், இலக்கியம் மற்றும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளானாலும் சரி, இவற்றில் சினிமா, இனக்கவர்ச்சிப் படங்கள் அவற்றோடு சுடச்சுட செய்திகள் இவைகள் இல்லாமல் கிடையாது. மேற்கத்திய நாகரிகம், நடை, உடை, பாவனைகள், பேச்சு, செயல்பாடுகள், இளைய தலைமுறையினர் கூடுமிடங்களில் அவர்கள் நடவடிக்கைகள், அவர்களது போக்கு எல்லாம் ஆக்கிரமித்து விட்டது. அதன் பயனாக தமிழில் பேசுவதாக நினைத்துக்கொண்டு ஆங்கிலத்தில், இடையிடையே சிலதமிழ்ச்சொற்களுடன் பேசுவது நிலைபெற்றுவிட்டது. ஆண், பெண் நட்பு, உறவு, பழக்கம் இவைகளெல்லாம்கூட எல்லை கடந்து போய்விட்டது. வார்த்தைக்கு வார்த்தை தமிழ் பண்பாடு என்றெல்லாம் முழங்கும் கூட்டம்கூட கூடப்பழகும் ஆண் நண்பனை, போடா, வாடா என்பதும், அவனோ அவளை சர்வ சாதாரணமாக தொட்டுத் தடவி, அணைத்து என்னவோ, இன பேதம் அறியாதவர்கள் போல நடந்துகொள்வதும் சாதாரணமாகவா அல்லது அப்படிச் செய்வதில் இன்பம் கண்டா என்பதும் தெரியவில்லை. நாசமாகப் போய்க்கொண்டிருக்கும் இந்த பழக்க வழக்கங்களைத் தூண்டி விடும் பணியில் பத்திரிகைகள் ஈடுபட்டிருக்கின்றன. அதைக் கண்டு நண்பர் ஆலாசியம் ஆத்திரப் படுவதைத் தடுக்காதீர்கள். நாகரிகம் தெரிந்தவர்கள் அனைவரும் கொதித்து எழவேண்டிய நேரம் இது.

    ReplyDelete
  10. அன்புடன் வணக்கம் திரு அலாசியம்.
    **மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டுமம்மா!"**
    பொதுவாக ஒரு பெண்ணை!! ஆண்கள் பார்க்கும் போது அவளது முகத்தை பார்த்து பேசு !!
    எத்துணை பேர் இதை பின் பற்றுகிறார்கள்.!!. பள்ளி விட்டு கல்லூரி செல்லும் காலம் எனக்கு எனது
    ஆசிரியர் கூறிய ஒழுக்க நெறி.. **ஏலே எந்த பொம்பளை கூட பேசினாலும் அவ கண்ணை பார்த்து பேசு அல்லாது அவ தலை பார்த்து பேசு..** இன்று வரை தொடர்கிறது ..பல சந்தர்பங்களில் சிலரின் கபட முகம் கண் காட்டிகொடுதுள்ளாது.. நன்றி !!JI"

    ReplyDelete
  11. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் மன்னிக்கணும்
    ***தமிழ் நாட்டில் தினசரி குடிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 75 லட்சம் பேர்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. அதற்கு வேண்டுமென்றால் ஆதங்கப் படுங்கள். எங்கே போகிறது தமிழகம் என்று எழுதுங்கள்*--::கொலை செய்தவனை விட. கொலை செய்ய தூண்டியவனுக்கு தண்டனை அதிகம் . என்பது தான் விதி....
    தமிழ் நாட்டில் முதன் முதலாக குடி திறந்து விட்டு மக்க்களை குடிகாரனாகிய அரசுக்கு!! அரசனுக்கு என்ன கொடுக்கணும்...!!
    எத்துணை மக்கள் இந்த குடியால் சீரழிகிறார்கள் !! நான் இருக்கும் இடத்தில சில பெண் மக்களே வார விடுமுறை நாட்களில் கணவனுடன் மது அருந்தும் பழக்கம் .. காணும்போது என்று தீரும் {நீங்கும்)இந்த சாராய தாகம் ***

    ReplyDelete
  12. இந்தப்பத்திரிகைக்கு எதிராக ஏற்கனவே பலர் அணிதிரண்டு எழுந்து பல சமயங்களில் கண்டனம் எழுப்பியது பழைய செய்தி..அரசியல் நிலைப்பாடுகளில் என்றுமே தன் சிறுமைத்தனத்தை வெளிப்படுத்திவரும் இந்தப் பத்திரிக்கை இப்போது இப்படி காரியங்களின் மூலம் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்து வருகிறது என்பது ஒன்றும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தவில்லை..
    ஏற்கனவே இந்தப்பத்திரிகையில் வெளியான தமிழக நடிகைகள் பற்றிய சில தவறான தகவல்களுக்குக் கண்டனம் தெரிவித்து பிரபல நடிக,நடிகைகள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஸ்ரீப்ரியாவும், விவேக்கும் பேசிய
    பேச்சுக்களைவிட உங்கள் ஆக்கம் ஒன்றும் அதிகக் காரமானதாக எனக்குத் தெரியவில்லை..
    தேசியத்தின் திறமையை,
    வீரத்தை(??) நிலைநிறுத்தும்(??) விளையாட்டு வீரர்கள்
    ஏலத்தில் விடப்படுவது, தனிநபர்கள் அவர்களை வாங்கிவிடுவது,
    திறமை படைத்த ஊழியர்கள் பெருநிறுவன அதிபர்களால் விலைக்கு வாங்கபடுவது என்று இந்த சுயமரியாதை இழந்த சமுதாயத்தின்
    பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்ட மாற்றம்தான் மேல்சொன்ன இந்த சர்வே..
    பர்சண்டேஜ் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் அதைப் பெருமையாக, தனக்கு வழங்கப்பட்ட கவுரவமாக, பாபுலாரிட்டி இன்டெக்ஸ் கூடிவிட்டதால் மார்கெட் விலை இன்னும் ஏறி எந்தக் கம்பெனிக்கு nude மாடல் ஆகலாம் என்று சம்பந்தப் பட்டரே கூட கனவு கண்டு கொண்டிருந்தாலும் இருக்கலாம்..(இதுவரை இந்த சர்வேக்கு கண்டனம் ஏதும் தெரிவித்திராத பட்சத்தில் இது உறுதி செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம்.) சர்வேயில் பங்கு கொண்ட அனைவரும் ஆர்வமுடன் அவர்களின் கனவு நனவாகக் காத்திருக்கும் வேளையில் இப்படி ஒரு ஆக்கத்தை, ஒரு ஆரோக்கியமான இந்த சமுதாயத்துக்கு எதிரான ஒரு கருத்தை பதிவு செய்தது தேவைதானா என்பதை நீங்களே சொல்லுங்கள்..

    ReplyDelete
  13. ////ஆமாம் அவர்களது பெற்றோர், உடன் பிறந்தோர், கணணணணவன் - ஆகியோர் என்ன செய்கிறார்களாம் ?////
    பதிக்கப் பட்டவர்களுக்காக அல்ல இதை நமக்கேன் என்று இருந்தால் நாளைய சந்ததி....
    இந்தக் கேள்வி தான் உங்களுக்கும் வேதனைதான் மிஞ்சுகிறது ...

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ///நெருப்பை ஊதி கனிய வைத்தால்
    நெஞ்சம் பதைக்கத்தானே செய்யும்..
    மீண்டும் வரவில்லை அந்நிலைக்கு..
    மீண்டு வருகிறோம்..
    இன்னமும் தெரியவில்லையென்றால்
    இனி தெரியாமலே போகட்டும்..
    ஆடுகள் அல்ல அய்யர் அதனால்
    ஆடாமல் நிற்கிறார்..////

    மதுரையம் பதி புலவரே!
    நெஞ்சு பதித்தால் போதாது
    நெற்றி நரம்பு புடைக்கனும்
    வேண்விழியில் செவ்வரி ஓடனும்..

    மீண்டு வருவதல்ல
    மீட்டு வரணும்..

    ஆடல்ல மாடு அதுவும்
    செல்லா மாடு...
    இளங்கோ சொன்னது போல்
    செல்லா செல்வம்
    மதுரையம் பதியிலே
    மறைந்து போனது...
    இப்போது வகுப்பறைக்கு வந்தது..
    பின்னூட்டத்திற்கு நன்றி..

    ReplyDelete
  15. //"தட்டி பாத்தேன் கொட்டாங்குச்சி
    தாளம் வந்தது பாட்டை வச்சி"////

    ஆமாம், காலம் மாறிப் போச்சாம்
    உரலு நின்னு கல்லு சுத்து தாம்
    அதனாலத் தான் இந்த தப்புத் தாளமா!!

    அத்தைக்கு ஒட்டு மீசை வைத்து...
    சித்தப்பான்னு கூப்பிடலாமாம்...!!

    ReplyDelete
  16. /////நாகரிகம் தெரிந்தவர்கள் அனைவரும் கொதித்து எழவேண்டிய நேரம் இது.////
    வெள்ளையின் மீது உள்ள மோகம்..
    வெள்ளை பாசையின் மீது உள்ள சபலம்
    வெள்ளையனாய் மாறியதாக பிரம்மை

    இங்கே தான் நுனி நாக்கு ஆங்கிலம் என்றால்
    வாயை பிளக்க ஒருக் கூட்டம்..
    அந்த ஊரில் அடி முட்டாளுக்கு கூடத்தான் அந்த பாசை
    பரீட்ச்சயம்...

    என்னமோ எல்லாம் வெளி பகட்டு...
    ஸ்ரீ ராமனுக்கு சீதையை பிடித்தது.....
    நல்லவேளை... ஜனகன் கூட
    சிறிது யோசித்ததற்கு
    கோப முனி நீ கவலையை விடு
    தசரதன் மகன் என்பதல்ல..
    வசிஷ்டரின் சீடன் அது முக்கியம் என்றான்..

    அங்கே இந்த வெள்ளை மோகம் வந்திருந்தால்??!!...

    தங்களின் பின்னூட்டம் ஊக்கம் தருகிறது ஐயா!

    ReplyDelete
  17. //இன்று வரை தொடர்கிறது ..பல சந்தர்பங்களில் சிலரின் கபட முகம் கண் காட்டிகொடுதுள்ளாது.. நன்றி !!JI"///

    உண்மை தான்... அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு... நான்காவது பெண் பார்க்காமலே தொடுவது யாரென்று உணர்வாளாம்...
    அதை போலவே பயிர்ப்பு ஆணின் பார்வையும் அதன் தன்மையும் அவளுக்கு உணர்த்தும் என்று நம்பலாம்...
    தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  18. ////தமிழ் நாட்டில் முதன் முதலாக குடி திறந்து விட்டு மக்க்களை குடிகாரனாகிய அரசுக்கு!! அரசனுக்கு என்ன கொடுக்கணும்...!!
    எத்துணை மக்கள் இந்த குடியால் சீரழிகிறார்கள் !! நான் இருக்கும் இடத்தில சில பெண் மக்களே வார விடுமுறை நாட்களில் கணவனுடன் மது அருந்தும் பழக்கம் .. காணும்போது என்று தீரும் {நீங்கும்)இந்த சாராய தாகம் ***/////

    கொள்கைரீதியாக உடன் பாடில்லையாம்.... இருந்தாலும் பிச்சை போட வேறு வழி இல்லையாம்... சமத்தா இருக்கணும்னு சொல்லி வளர்க்கணும் போல..

    யாரும் உத்திரவாதம் இதுவரைத் தரவில்லை... தருவதற்கு பயம்... எங்கே அரியணை ஏறாமல் போய்விட்டால்.. அடி தொழுபவரும்.. காலடி மண்ணை திருநீராய் அணிபவரும் காணாமல் போய்விட்டால்....

    சங்க மருவிய காலம் அல்ல.. சங்க காலத்திற்கும் முந்தியது... சுதந்திரம் வாங்க காந்தி வருவார் என்று நம்புவோம்... அவர் மறுத்தால்.. பகத் சிங்கையும்.. வாஞ்சி நாதனையும் தான் கூப்பிடவேனும்.. நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  19. ///அரசியல் நிலைப்பாடுகளில் என்றுமே தன் சிறுமைத்தனத்தை வெளிப்படுத்திவரும்/////
    வேறு வழியில்லை அரசியல் மாத்திரம் மட்டும் அல்ல எல்லா வற்றிற்குமே
    போட்டிப் பத்திரிகை தான் காரணமாம்....
    கிருஷ்ணன் சார் கூறி விட்டார்கள்... பார்த்திருப்பீர்கள்.

    ReplyDelete
  20. ////பேச்சுக்களைவிட உங்கள் ஆக்கம் ஒன்றும் அதிகக் காரமானதாக எனக்குத் தெரியவில்லை..///

    உண்மை தான் வகுப்பறையில் உள்ள பலவீனமானவர்களையும் கருத்தில் (அந்த விதத்தில் இல்லை என்றாலும் வேறுவிதத்தில் இருந்த)
    கொண்டு நம்ம வாத்தியார்
    ஒவ்வாத மேலே தூவி இருந்த செம்மிளகாய்களை நீக்கிவிட்டார்கள்.. அதான் சற்று காரம் குறைவு.... வகுப்பறை அல்லவா!!

    ReplyDelete
  21. //தேசியத்தின் திறமையை,
    வீரத்தை(??) நிலைநிறுத்தும்(??) விளையாட்டு வீரர்கள்
    ஏலத்தில் விடப்படுவது, தனிநபர்கள் அவர்களை வாங்கிவிடுவது,
    திறமை படைத்த ஊழியர்கள் பெருநிறுவன அதிபர்களால் விலைக்கு வாங்கபடுவது என்று இந்த சுயமரியாதை இழந்த சமுதாயத்தின் /////

    தங்களின் ஆதங்கமும் சரி தான்.. நீயின்றி நானில்லை... நானின்றி நீயில்லை என்பதைப் போல்.. ஆக்கமு ஊக்கமும் சேர்ந்தால் தானே திறமை சபைக்கு வரும்... இதில் தன மானத்தோடு இருக்க வேண்டியது ஊக்கம் தான்... தங்களின் கருத்தும் அது தான்..

    ReplyDelete
  22. ///சர்வேயில் பங்கு கொண்ட அனைவரும் ஆர்வமுடன் அவர்களின் கனவு நனவாகக் காத்திருக்கும் வேளையில் இப்படி ஒரு ஆக்கத்தை, ஒரு ஆரோக்கியமான இந்த சமுதாயத்துக்கு எதிரான ஒரு கருத்தை பதிவு செய்தது தேவைதானா என்பதை நீங்களே சொல்லுங்கள்..////

    தங்களின் கோபம் புரிகிறது... நிகழ்வு... இளைய பாரதத்தை புதைகுழிக்கு இழுத்துச் செல்வதைப் பார்ப்போம்..
    ஆரோக்கியமான இந்த சமுதாயம் என்னும் விரக்தியும் கவலை அளிக்கிறது... அதனாலே நாமெல்லாம் நாடு கடத்தப் பட்டுவிட்டோமோ.. இப்போது நம்ம வீட்டில் இருப்பவர்கள் கவலை இல்லாமல் இருப்பார்கள்.. நன்றி...உறவினர் திருமண சாப்பாடு கலைக் கட்டுதா! வழிமேல் விழிவைத்து....
    நன்றிகள் சகோதரரே!

    ReplyDelete
  23. நன்றி நண்பரே..தங்களின் உளங்கனிந்த அன்பான வரவேற்புக்கும் செல்லவேண்டிய இடம் வரை இனிமையான பயணமாக அமைய தங்களின் காரை ஒட்டிக்கொண்டு சேர்த்துவிட்டு சென்ற அன்புக்கும் நன்றி..சிங்கப்பூரை உங்கள் வீட்டு 50 வது மேல் மாடியிலிருந்தே இணைக்கப்பட்ட வழிப்பாதைகள் மூலம் சுற்றிக்காட்டிய உங்களின் அன்புக்கு மிகுந்த நன்றி..

    ReplyDelete
  24. நண்பருக்கு, நன்றியெல்லாம் வேண்டாம் நண்பரே!
    நல்லபடியாய ஊருக்கு சென்று நல்ல செய்திகளைக் கூறுங்கள்....
    வாழ்த்துக்கள் நண்பரே.... என்றும் அன்புடன்.... ஆலாசியம் கோ

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com