29.4.11

பகவானுக் கடிதம் எழுதினேன் பலனே பதிலாய் வந்தது.

----------------------------------------------------------------------------


வெள்ளி மலர்
இன்றைய வெள்ளி மலரை மூவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------

1
பகவானுக் கடிதம் எழுதினேன் பலனே பதிலாய் வந்தது.

1982 - ஆம் ஆண்டு எனது இரண்டாவது மற்றும் மூன்றாவது சகோதிரிகளுக்கு  மூன்று மாத இடைவெளியில் திருமணம் நடக்க இருந்தது.

அப்போது வீட்டில் எப்போதும் அவர்களின் கல்யாண ஏற்பாடுகள் அதாவது சீர் வரிசை, நகை நட்டு என்ற பேச்சுக்கள் தான் நடந்த கொண்டிருந்தன... எனக்கு அப்போது பதினோரு வயது தான், சிறு பிள்ளையாக இருந்தாலும்; எனது பேச்சும் செயலும் நடவடிக்கையும் வயதிற்கு மீறியதாக சற்று முதிர்ந்ததாகவே இருக்கும்.

என்னைவிட வயதில் மூத்தவர்களிடம் எனது கவனம் அதிகம் இருக்கும்; இன்னும் சொல்லப் போனால் அவர்களுடன் பேசிப் பழகுவதில் தான் அதிக நாட்டமும் இருக்கும். அது ஏனோ என்று பின்னாளில் நான் அதைப் பற்றிய சிந்தனையில் பல நேரம் இருந்திருக்கிறேன். சில நேரங்களில்... ஒரு வேலை நான் எனது தந்தையாரின் 41-வது வயதில் பிறந்ததால் இருக்குமோ? என்றும் கூட நினைத்தது உண்டு!?. அதுவும் சரியாகத் தான் இருக்கும் என்று வேறொரு சமயம் நான் மகாத்மா காந்தியைப் பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன்.

"மகாத்மாவிடம் ஒரு நிருபர் கேட்டாராம் உங்கள் இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் உங்களிடம் இருந்து முற்றிலும் மாறுபடுகிறாரே? என்று. அதற்கு மகாத்மா, ஆமாம் உண்மை தான் ஒருவர் நான் மிருகமாக இருக்கும் போது பிறந்தார்... மற்றொருவர் நான் மனிதனாக இருக்கும் போது பிறந்தார் என்றாராம்" ஹரே ராம் இதில் தான் எத்தனைக் கருத்து பொதிந்துள்ளது...

இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம்... இருந்தும் சில நேரங்களில் மறந்தும் போகலாம்... இது இளையோருக்கு பயன் படட்டும்...

நான் எனது மகனைப் பெற்றெடுக்க எண்ணி இருந்த போது தெய்வ சிந்தனையோடு இருந்தேன்... அன்று வியாழன்! எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது... உண்மையில் எனது மகன் இன்றுவரை அவனது பத்தாவது வயது வரை ஒரு முறை கூட என்னை கோபத்திற்கு ஆளாக்கியதே இல்லை (மேஷ ராசி இரண்டில் செவ்வாய் உட்சம் கோபம் கடலெனப் பெருகும் என்னிடத்தில், அதனால் தான் கூறுகிறேன் ).. எனது சுண்டு விரல் கூட அவனின் மேல் கோபத்தில் அழுந்தியதில்லை... போகப் போகத் தான்; இன்னும் புரியும், தெரியும்!!???...

இருந்தும் என்னைப் போலே (நான் சிறுவயதில் இருந்ததைப் போல்) அவனும் இப்போதே பெரிய மனிதனை போல பழகுகிறான் என்று அவனின் நண்பர்களின் சில பெற்றோரிடம் புகாரைப் / பாராட்டையும் பெறுகிறான். அதை என்னால் உணர முடிகிறது...

(மன்னிக்கணும் கொஞ்சம் தூக்கலான சுயபுராணம் இருந்தும்.... பாயாசத்தில் வாசனைக்காக கலக்கும் பச்சைக் கற்பூரத்தைப் போல கொஞ்சமாகவே இருக்கும் படிப் பார்த்துக் கொள்கிறேன்).

வழக்கமாக துன்பத்தில் நாம் நம்மை அறியாமலே தெய்வத்தை அழைப்போம். அது இயற்கை, நான் பெரும்பாலும் எனது இன்பத்தில்; நான் இன்பமாக உணரும் ஒவ்வொரு தருணத்திலும் அந்த ஆண்டவனுக்கு நன்றியைக் கூறுவேன்... அது படைத்தவனிடம் நன்றி பாராட்டுவது என்றாலும் கூட! அதுவே நாம் அனுபவிக்கும் அந்த இன்பம் சாத்தியமானதா???? என்று எண்ணிப் பார்க்கவும் செய்யும் என்பது எனது கருத்து!!!....

என் பெற்றோருக்கு நான் எட்டாவதாகப் பிறந்து உயிரோடு இருக்கும் ஒரே ஒரு ஆண் பிள்ளை..... தவமாய் தவமிருந்து என்னைப் பெற்றார்களாம் (ஆமாம் நாகூர் ஆண்டவருக்கு கூட முடி காணிக்கை செலுத்தவேண்டும் / பாத்தியா ஓதவேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள்)

சரி விசயத்திற்கு வருவோம்... வீட்டில் கல்யாணச் செலவிற்கான பணப் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது... அப்பாவின் மத்திய சேம நிதியில் கடன் (சி.பி.எப் லோன்) பெற படிவத்தை நிரப்பி அதனுடன் முகூர்த்தப் பத்திரிக்கையையும்  இணைத்து அனுப்பி ஒரு மாதங்கள் கழிந்தும் எந்த பதிலும் இல்லை.... அது அப்படி இருக்க....

எனது பள்ளியில் உயர்நிலை வகுப்பில் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியை செல்வி. ஆனந்தம், ஆமாம் அந்த ஆசிரியை திருமணமே செய்து கொள்ளாதவர். தஞ்சையில் இருந்து வந்து எங்கள் ஊரில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்கள். அவர்களுக்கு அப்போது வயது ஒரு முப்பத்தைந்து இருக்கும் என நினைக்கிறேன்... அந்த ஆசிரியை எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் தங்கி இருந்தார்கள்.

ஆக, ஆசிரியை தனியாக இருந்ததால் அவர்களுக்கு துணையாக இரண்டு சிங்கங்கள் காவல். வேறு யாரும் அல்ல இந்த ஹாலாஸ்யமும் எனது நண்பன் செல்வக்குமாரும் தான்.

தினமும் பள்ளி முடிந்து சாயங்காலம் கைகால் முகமெல்லாம் சுத்தம் செய்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியையின் வீட்டிற்கு சென்று விடுவோம். அங்கே ஆசிரியை எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதோடு வேறு பல நல்ல விசயங்களையும், கதைகளையும் சொல்லித் தருவார்கள்.

அப்படித்தான் ஸ்ரீ சீரடி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அறியலானேன். அதைத் தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் வரலாற்றையும் அறியலானேன்.

அதன் பின்பு நான் விஷ்ணு அவதாரங்கள், என்று கூறப்பட்ட பாபாக்களின் தீவிர பக்தனானேன். தினமும் சாயங்காலம் ஆசிரியையின் வீட்டில் வழிபாடு செய்வோம், அதிலும் குருவாரம் நடப்பது தான் சிறப்பு பஜனை. சுவாமியின் படத்தில் ஏதாவது அற்புதம் நடக்கிறதா என்று நாள் தோறும் பார்ப்பது வழக்கம். சில மாற்றங்களை கண்டு பூரிப்போம். காண்பவரே சந்தேகம் கொள்வது இயற்க்கை; அப்படி இருக்க கண்டவர் கூறினால் நம்புவது கடினம் தான்.

இரவு சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிட்டு ஆசிரியையின் துணைக்கு அவரின் வீடு சென்று… பக்தி, படிப்பு, தூக்கம் என்று சென்று கொண்டிருந்தது.

அப்போது தான், என் சகோதிரிகளின் திருமணப் /  குடும்ப பணப் பிரச்னையை எப்படியோ அறிந்திருந்த ஆசிரியை என்னிடம் தீர விசாரித்து; அது தீர பாபாவிடம் நீ மனம் உருகி வேண்டிக்கொள் என்றார்கள். சரி என்று அப்படியே செய்தேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்...

அது ஒரு வெயில் காலத்து இரவு, எங்கள் வீதியில் (ஹவுசிங் யூனிட்) பெரும் பாலானோர் பெரியவர்களும், பெண்டிரும் வாசலில் வந்து படுத்து உறங்குவது வழக்கம். எங்களின் பெரியக் குடும்பம்... வயது வந்த எனது அக்காக்கள் நான்கில் மூவர், நான் எனது பெற்றோர்......வழக்கமாக இரவில் அனைவரும் படுக்கைக்குச் செல்ல தாமதமாகும். அந்த நேரங்களில் நான் வீட்டு வாசலில் இருக்கும் பட்டியல் கல்லில் சென்று உறங்கிவிடுவேன்; இரவு அனைவரும் படுக்க, படுக்கைத் தயாராகிய பிறகு என் தாயார் வந்து என்னை எழுப்பி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்...

அப்படி ஒரு நாள் என்னை எழுப்பி விட்டு என் அம்மா வீட்டிற்குள் சென்று என்னை பார்த்தால் நான் காணவில்லை... மாறாக நான் எதிர்த்த வீட்டின் வாசலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றேன்... அப்போது அங்கு வாசலில் படுத்திருப்பவர்கள்... தூக்கத்திலே நடந்து வந்த என்னைப் பார்த்து ஆலாசியம் என்ன வேண்டும் என்று கேட்க... நான் அவர்களிடம் எங்கள் வீட்டு தங்க விசிறியைத் தாருங்கள் என்றுக் கூற அவர்கள் அனைவரும் என்னது தங்க விசிறியா?? என்று பெரிதாக சிரிக்கவும், எனது தாயாரும் என்னை பின் தொடர்ந்து வந்து இதைக் கண்டு அவர்களும் சிரிக்கவும்... எனக்கு சுய நினைவு வரவும் சரியாக இருந்தது.... நான் வெட்கப் பட்டுக் கொண்டு வீடு திரும்பினேன்.... ஆழ் மனதில் இந்தத் தங்கம் படுத்திய பாடு தான் அது.... ஆசிரியைக்கு துணைக்கு செல்பவன் வீட்டில் எப்படி என்கிறீர்களா?.... ஆசிரியை மாதத்தில் ஒரு சனி ஞாயிறு ஊருக்கு (தஞ்சை என்று நினைக்கிறேன்) அவர்களின் சித்தப்பா வீட்டிற்கு சென்று விடுவார்கள்.....

அந்த அளவிற்கு வீட்டின் பிரச்சனையில் எனது கவனம் இருந்திருக்கிறது... இதை இன்றும் சில நேரங்களில் சகோதிரிகளுடன் இருக்கும் பொது சொல்லிச் சிரிப்பது வழக்கம்.... சரி கதைக்கு வருவோம்....

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அப்படித்தான், அன்று பாபாவின் படத்திற்கு முன்பு நான் கும்பிடும் போது அங்கே புதிதாக வந்திருக்கும் சஞ்சிகையைக் கண்டேன். மாதம் ஒரு முறையோ, இருமுறையோ சரியாக ஞாபகம் இல்லை.... பகவான் சத்திய சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து ஆசிரியையின் வீட்டிற்கு பக்தி தாங்கிய சிறிய சஞ்சிகை வரும்.

அப்போது, அதை கண்ணுற்ற எனக்கு ஒரு சிந்தனையும் தோன்றிற்று. உடனே நானும் ஆசிரியையிடம்  சென்று... டீச்சர் நான் பாபாவைக் கும்பிடுவதோடு இருக்காமல்; நான் அவருக்கே எனது பிரச்னையை தபாலில் எழுதி அனுப்பினால் நன்றாக இருக்குமே! என்றேன்.

அதற்கு வழக்கமாக அமைதியான புன்னகையுடன் சிறிது புன்முறுவலோடு......

(இதை எழுதும் போது என் கண்கள் பனிக்கிறது... டீச்சர் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ? நான் உங்களின் நினைவை சுமந்துகொண்டே தான் இருக்கிறேன்!! கடைசியாக நீங்கள் மாறுதலாகிப் போகும் போது நான் கண்ணீரோடு உங்களைப் பிரிந்தது என் மனதில் இன்றும் ஈரமாகவே இருக்கிறது. இனியும் நான் உங்களை இந்த ஜென்மத்தில் சந்தித்து ஆசி பெறுவேனா? என்று ஏக்கம் மேலிடுகிறது.. எங்கிருந்தாலும் என்னையும் என் மனைவி மக்களையும் ஆசிர்வதியுங்கள்)
………..சற்று கலங்கி விட்டேன்... புன்முறுவலோடு என்னை அனுமதித்தும் சஞ்சிகையின் அனுப்புனர் முகவரியை குறித்துக் கொள்ளவும் சொன்னார்கள். நானும்

பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபா,
பிரசாந்தி நிலையம்,
புட்டப் பருத்தி - அஞ்சல்,
அனந்தப்பூர் மாவட்டம்,
ஆந்திரப் பிரதேசம்.

என்று ஆங்கிலத்திலே குறித்துக் கொண்டேன். பிறகு வீட்டிற்கு வந்து எனது தாயாரிடம் விவரத்தைக் கூறினேன். அவர்களும் அப்படியாவது பிரச்சனை தீர பணம் உடனே வராதா! என்ற எண்ணத்தோடு என்னை எழுதச் சொல்லி தபால் செலவிற்கும் ஒரு ரூபாய் தந்தார்கள்.

உடனே, ஒரு வெள்ளைத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு.. பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபா அருள் என்றும் எழுதி எனது பிரச்சனைகளையும், அதோடு மற்ற விவரகளுடன் எனது தந்தையாரின் சி.பி.எப் அக்கவுன்ட் எண்ணையும் மற்றும் அவரின் மற்ற விவரங்களையும்  எழுதி எங்களது சிரமம் தீர தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தபாலையும் அனுப்பினேன்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்..... கேசியர் ஆபத் சகாயம் அவர்கள் அப்பாவை வரவழைத்து விவரத்தைக் கூறியதோடு அல்லாமல். இது எப்படி சாத்தியம்.. வழக்கமாக இவ்வளவு சீக்கிரம் கடன் கிடைக்காதே?.. இருந்தும் எப்படியோ ஆண்டவனின் அருளால் உங்கள் விசயத்தில் விரைவாகவே கிடைத்துள்ளது என்றுக் கூறி ஆச்சரியமும் சந்தோசமும் கொண்டார் என்று அப்பாவும் ஆச்சரியத்துடன் அம்மாவிடம் கூறியிருக்கிறார்கள்.

நான் பள்ளியில் இருந்து திரும்பினேன் எனது பாபாவின் படத்திற்கு மல்லிகை சரம் சூட்டி அவரின் முன்பு விளக்கு ஏற்றி.. புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவில்  தசாங்கமும் தனது மணத்தை வீடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.

எனக்கு ஆச்சரியம் மேலிட.... அம்மா! அம்மா!! என்னாயிற்று இன்றைக்கு, ஏதோ அதிசயம்! நம் வீட்டில் நடக்கிறது என்றேன். ஆமாம் அப்பா…. நமது பாபாவின் அருள் தான் அந்த அதிசயம் என்று அத்தனையும் விளக்கினார்கள்.

பிறகு உடனே நானும் என் அம்மாவும் சென்று ஆசிரியையிடமும் கூறி அவர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தினோம். பிறகு வீட்டில் அனைவருமே பாபாவையும் சேர்த்து வணங்கலானோம்.

1926-ல் அவதாரம்: புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு ஸ்ரீ சாய் பாபா அவதாரம் செய்தார். அப்போது அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்ய நாராயண ராஜு. சத்யம், சிவம், சுந்தரம் என்ற தத்துவங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த பாபா தன்னுடைய பக்தர்களுக்காக காற்றிலிருந்து விபூதி வரவழைப்பது, லிங்கங்களை வரவழைத்துத் தருவது போன்ற சித்து வேலைகளைச் செய்வார். அதைத்தான் அவருடைய விமர்சகர்கள் மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். ஆனால் பாபாவின் அருளாசியால் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டதால் அவரை அவதார புருஷனாகவே மக்கள் பார்த்தனர். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பாரதவாசிகள் முதல் படித்த வெளிநாட்டவர் வரை அவருடைய சீட கோடிகளின் எண்ணிக்கையும் தரமும் அனேகம்.

 பாபா மறையவில்லை. கோடிக்கணக்கான சீடர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார். அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற. உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.  உலகம் முழுவதும் பக்தர்களைப் பெற்றிருப்பது அத்தனை சுலபம் அல்ல. அதிலும், அறிவுஜீவிகளையும் மிக உயர்ந்த பதவிகளில் உள்ள மெத்தப்படித்த மனிதர்களையும் பக்தர்களாக ஆட்கொள்ள முடிந்தது என்றால் அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், அதை நிகழ்த்திக்காட்டியவர் சாய் பாபா.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ மேஜிக் என்றோ தள்ளிவிடவா முடியும்?

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதோடு, துன்பத்தில் துடிக்கும் உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தொடங்கியதுதான் புட்டபர்த்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்த மருத்துவமனையில் சேவை செய்த சாய் மன்றத் தொண்டர்களும் பல லட்சம். இந்தச் சேவையின் பலனைத் தான் மட்டுமே பெறுவதாக இல்லாமல், இதில் அத்தனை தொண்டர்களுக்கும் பங்கிருப்பதாக மாற்றியதால்தான் அவரது அறக்கட்டளை இன்று ரூ. 40,000 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.

 "உற்றநோய் நோன்றல், உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்கிறது வள்ளுவம். அதாவது ஏற்பட்ட துன்பத்தைத் தாங்குதல், துன்பம் ஏற்பட்டதற்காகவோ அல்லது ஏற்படுத்தியவர்கள் மீதோ தான் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டும் தவத்தின் வடிவம் என்கிறார் வள்ளுவர். அந்த வழி வாழ்ந்தவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இருவர்தான். ஒன்று காஞ்சி சங்கர மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா.******

சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒழுங்கு, கட்டுப்பாடு, உணர்ச்சிகளுக்கு ஆள்படாமை, பிறருக்கு உதவுதல், அமைதி காத்தல் ஆகியவற்றை அவருடைய பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது.

நன்றி தினமணி.

"செயற்கரிய செய்வார் பெரியர்"

பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபாவினை நாம் நன்கு அறிவோம்.... அவரின் அறிய தொண்டை இந்த உலகம் நன்கு அறியும். இந்த தருணத்திலே; இறைவனோடு அவர் கலந்த தருணத்திலே,  நான் அவரை நன்றியோடு நினைந்து வணங்குகிறேன்.

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிஙகப்பூர்




ஒரு மாறுதலுக்காக கட்டுரையாளரின் படத்தைப் போடாமல், அவருடைய செல்வத்தின் படம் போடப்பட்டுள்ளது. 
முதல் படம், சிறுவனின் 3 வதுப் புகைப்படம். 
அடுத்தபடம் 10 வயதில் சமீபத்தில் எடுக்கப்பெற்றது
பெயரா? கோவிந்தசாமி சுதன் ஆலாசியம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
நரியைப் போல் தின்று, நாயைப்போல் தூங்கியவர்!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு இளைஞர்களாக 16 பேர் சீடர்களாகக் கிடைத்தார்கள்.எல்லோருமே அந்தக் காலத்தில் கொல்கத்தாவில் ஆங்கிலப் பள்ளிகளில்,கல்லூரிகளில் படித்தவர்கள்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்களுக் கெல்லாம் முறைப்ப‌டி சன்னியாசம் கொடுக்கவில்லை. தன் மறைவுக்குச் சில நாட்களுக்கு முன்னர் காவி வஸ்திரத்தை மட்டும் தன் கையால் எடுத்துக் கொடுத்தார்.

அவருடைய மறைவுக்குப் பின்னர் இந்த இளைஞர்கள் கூடித் தாங்களாகவே விரஜா ஹோமம் செய்து சன்னியாசத்தை மேற்கொண்டனர். இதற்குத் தலைமை ஏற்று எல்லோருக்கும் அவர்களுடைய குண இயல்புக்கேற்ற சன்யாசப் பெயரைக் கொடுத்தவர் சுவாமி விவேகான்ந்தரே ஆவார்.அப்படி பெயர் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவர் அற்புதானந்தர்!

எல்லா சீடர்களும் ஆங்கிலம் பயின்றவர்கள் என்று நான் கூறியதில் ஒரு மாற்றம்.பிற்காலத்தில் சுவாமி அற்புதானந்தர் என்று பெயர் பெற்ற லாட்டு மஹராஜ் எழுதப் படிக்கத் தெரியாதவர். சரியாகப் பேசக்கூட வராது.நரேந்திரர் என்ற பெயர் கொண்ட விவேகானந்தரை எல்லோரும் 'நரேன்' என்று கூப்பிடுவார்கள்.லாட்டு அவர்களுக்கு அப்படிக் கூப்பிட வராது.அவர் விவேகானந்தரை 'லொரேன் பாய்' என்றே கூப்பிடுவார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் ஓர் இல்லறச் சீடர் வீட்டில் எடுபிடி ஆளாக லாட்டு இருந்துள்ளார். அடிக்கடி அந்த இல்லறச் சீடர் வீட்டிலிருந்து   ஸ்ரீராம கிருஷ்ணருக்கு ஏதாவது சிறப்புத் தின்பண்டங்கள், தோட்டத்தில் காய்த்த பழம்,காய், பூக்கள் ஆகியவை அனுப்பி வைப்பார்களாம். அதனைக் கொண்டு சேர்ப்பது லாட்டுஜிதான்.அப்படித்தான் குருதேவரிடம் லாட்டுஜிக்குப் பழக்கம். சீடனின் நல்லியல்பைக் குரு கண்டு கொண்டார்.சீடனுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டார். தன் இல்லறச் சீடரிடம் பேசி லாட்டுஜியைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள அனுமதி பெற்றார்.அது முதல் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மெய்க்காப்பாளராக லாட்டுஜி விளங்கினார்.

லாட்டுஜி எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து ஆள். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். நல்ல உடல் உழைப்புக் கொடுக்கக் கூடியவர். அதனால் நன்கு சாப்பிடக் கூடியவர்.தூக்கமும் அப்படியே.சீடனை இந்தத் தாமச உணர்விலிருந்து வெளியில் கொண்டு வரக் குருதேவர் ஒரு நாள்,

"ஏய் லாட்டு!என்ன நீ நரியைப் போல் தின்கிறாய். நாயைப்போல் தூங்குகிறாய்"

என்று கண்டிக்கும் குரலில் சொன்னாராம். அந்த சமயத்தில் இருந்து அவர் சாப்பாடு வேண்டும் என்று கேட்பதை நிறுத்தி விட்டாராம்.யாராவது அவருக்குத் தாங்களாகவே முன் வந்து உணவு அளித்தாலே சாப்பிடுவாராம்.அதேபோல தூங்குவதற்காகப் படுப்பதையும் விட்டு விட்டாராம் எப்போதும் அமர்ந்த கோலத்திலோ அல்லது நின்ற கோலத்திலோதான் அவரைப் பார்க்க முடியுமாம். அவர் படுத்துக் கொண்டு அதன் பின்னர் யாருமே பார்க்கவில்லயாம்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வங்க மொழி எழுதப் படிக்கத் தெரியும். தூய அன்னை சாரதாமணி தேவியாருக்குக் குருதேவர்தான் வங்க மொழி சொல்லிக் கொடுத்தார். அது போலவே லாட்டுஜிக்கும் வங்க மொழி கற்பிக்கக் குருதேவர் முயன்று பார்த்துத் தோல்வி அடைந்தாராம்.

"அந்த சரஸ்வதி தேவியே வந்தாலும் உனக்குப் பாடத்தை மண்டையில் ஏற்ற முடியாதப்பா!" என்று சொல்லிவிட்டு குருதேவர் லாட்டுவுக்கு கற்பிப்பதைக் கைவிட்டு விட்டாராம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் எந்த அற்புத்தத்தினையும் செய்யவில்லை என்று பலரும் சொல்லக்கேட்ட விவேகானந்தர்,

"ஏன் செய்யவில்லை? லாட்டுஜியை ஒரு மகானாக உருப் பெறச் செய்தவர் குருதேவரே! அதுவே அவர் செய்த அற்புதம்!"என்று கூறுவாராம்.

அதனாலேயே லாட்டுஜிக்கு சன்னியாச நாமமாக சுவாமி அற்புதானந்தர் என்ற திருப் பெயர் சூட்டியுள்ளார் விவேகானந்தர்!

சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதும் சுற்றி வந்த பின்னர், அமைப்புக்கள் இல்லாததே இந்து மதத்தின் ஒரு குறை என்று நினைத்தார். எனவே தான் அமைப்பு ரீதியாகச் செயல் பட விழைந்தார். எனவே மடம், மிஷன் ஆகியவற்றைத் துவங்கினார்.அமைப்பு என்றாலே சட்டதிட்டங்கள் வந்து விடுமல்லவா?

மடத்தில் காலையில் 4 30க்கு மணியடிக்கப்படும்.எல்லோரும் எழுந்து தயாராகி 5 மணிக்குத் தியான மண்டபத்திற்கு வர வேண்டும். 5 முதல் 6 வரை தியானம். மீண்டும் 6 மணிக்கு மணியடித்தால் தியானம் கலைய வேண்டும்.... இப்படிக் காலை முதல் மாலை வரை திட்டம் தீட்டி எல்லோருக்கும் அறிவுறுத்தப் பட்டது. லாட்டு மஹராஜுக்கும் சொல்லப்பட்டது.அந்தக் கூட்டத்த்தில் விவேகானந்தர் சொல்லிய விஷயங்களை எல்லோரும் ஏற்றுக் கொண்டு செயல் படுத்த உறுதி எடுத்துக் கொண்டனர். அப்போது லாட்டு மஹராஜ் மட்டும் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறி விட்டாராம்.அவ்ரைப் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினார் விவேகானந்தர்.

"லாட்டுபாய்!எங்கே கிளம்பி விட்டீர்கள்?"

"என்னை மன்னித்துவிடுங்கள் லொரேன்பாய்!உங்கள் கட்டுத் திட்டம் எதுவும் எனக்குச் சரியாக வராது.என்னால் கடைப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.நான் என் போக்கில் கங்கைக் கரையில் ஒரு பிச்சைக்காரனாக‌ வாழ்ந்து விட்டுப் போகிறேன்."

"எந்தக் கட்டுப்பாட்டை உங்க‌ளால் கடைப்பிடிக்க முடியாது, லாட்டுபாய்?"

"எல்லாக் கட்டுப்பாடுகளையும்தான் என்னால் கடைப் பிடிக்க முடியாது.அதுவும் முக்கியமாக தியானத்தைப் பற்றியது.நான் படிக்காத முட்டாள். நீங்கள் எல்லாம் மணி அடித்தவுடன் தியானம் செய்யவும், மீண்டும் மணி அடித்த‌வுடன் தியானம் கலையவும் கூடிய அளவுக்குப் படித்த அறிவாளிகள்.நானோ பாமரன். எனக்குத் தியானம் கூடி விட்டால் உங்கள் மணியொலி எல்லாம் எனக்குக் கேட்காது.நான் தொடர்ந்து தியானத்திலேயே பல நாட்கள் கூட இருப்பேன். எனவே சங்கத்தின் வேலைகள் என்னால் பாதிக்க வேண்டாம்.போய் வருகிறேன், லொரேன்பாய்!"

விவேகானந்தர் பதில் சொல்ல முடியாமல் நின்று விட்டார்.லாட்டு மஹராஜ் வாசல் கேட்வரை சென்று விட்டார்.  திகைத்து நின்ற விவேகானந்தர் ஓடிச் சென்று லாட்டு மஹராஜை வழி மறைத்தார்.

"லாட்டுபாய் போக வேண்டாம்.உங்க‌ளுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.உங்கள் விருப்பம் போல் விரும்பிய நேரத்தில் தியானம் செய்யலாம்.உள்ளே வாருங்கள்" என்று திருப்பி அழைத்து வந்தார்.

சுவாமி விவேகானந்தரின் விருப்பத்திற்காகக் கொஞ்சநாள் மடத்தில் தங்கியிருந்தாலும் லாட்டு மஹராஜால் தொடர்ந்து மடத்தில் தங்க முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் கங்கைக் கரையில் ஒரு பிச்சைக்காரனைப் போலத் தோற்றம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்தாராம்.

சுவாமி அற்புதானந்தரின் நினைவைப் போற்றுவோம்!

இந்தச் சம்பவத்திலிருந்து உங்க‌ளுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

நன்றி, வணக்கம்!
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப் போட்ட கவிஞர்!
திருப்பதி உண்டியலில் எல்லோரும் பணத்தை, தங்கத்தைப் போடுவார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசன் பாட்டு ஒன்றை எழுதிப் போட்டுவிட்டு வந்தார்

“என் கடனைத் தீர்ப்பாய் இறைவா! திருமலைவாழ்
        வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே - மங்காத
செல்வத்தை அள்ளித் தினமும் தருவாயேல்
        நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்"


அந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்குப் பணத்திலும் வறுமை இல்லை. ஓடிப்போய்விட்டது. பாட்டிலும் வறுமை இல்லை. எண்ணற்ற பாடல்களை எழுதிக்குவித்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் பணம் பெருகும். பாட்டெழுதிப் போட்டால் புலமை பெருகும். துன்பங்களை எழுதிப்போட்டல், நமது துன்பங்கள் நீங்கும். மொத்தத்தில் பட்ட கடன் தீரும். அடுத்து முறை திருமலைக்குச் செல்லும்போது முயன்று பாருங்கள்

“வேங்கடம் ஏறக் கால்வலு வில்லை
     வீட்டிலே இருந்துனைக் கேட்டேன்
பாங்குடன் எனக்குப் பைந்தமிழ் அளித்த
     பாட்டையே காணிக்கை போட்டேன்
தீங்குடன் நலமும் சேர்த்துவைக் கின்றாய்
     சிறிது அதைப் பிரித்துவைப் பாயே
ஓங்குமால் நிலையே உயர்பெரும் மலையே
     உன்பதம் என்சிரம் தாயே


என்று தான் பாட்டு எழுதிப்போட்டு விட்டு வந்ததையும் கவிதையாக்கிச் சொன்னார் கவியரசர் கண்ணதாசன்

எப்படி இருக்கிறது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------

வாழ்க வளமுடன்!

17 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    எனது நினைவுகள் தாங்கிய கட்டுரையை
    வெளியிட்டதற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. அற்புதமான கருத்தை அற்புதானன்தவர் வழி கூறியுள்ளீர்கள்.
    புத்தக அறிவு என்பது இந்த உலகிற்கு அவசியமானது ஆனால்
    மெய்யறிவுக்கு அது அவசியமில்லாதது!!! என்பது அது...

    வெள்ளை உள்ளம் கொண்ட கள்ளம் கபடம் இல்லா
    பிள்ளை உள்ளம் ஒன்றே போதும்... ஆண்டவனைக் காண... என்பதும்

    மணியடித்து வருவதற்கும் போவதற்கும் தியானம் ஒன்றும் புகைவண்டியல்ல என்பதும்...
    இன்னும் பலவாக அற்புத விசயங்களை தாங்கிய கட்டுரை...

    நன்றி கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  3. "தீங்குடன் நலமும் சேர்த்துவைக் கின்றாய்
    சிறிது அதைப் பிரித்துவைப் பாயே"

    என்று பாங்குடன் வேண்டி பணிந்து நின்ற
    கண்ணனின் தாசன் கவிஞன் அல்லவா!
    அதனால் தானோ, லக்ஷ்மியை அல்லாது
    சரஸ்வதியை காணிக்கையாக்கி இருக்கிறான்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. பாபாவின் அருளனுபவம் அருமை... இன்னும் பாபாவிற்கு ஒரு கவிதாஞ்சலி இந்த இணைப்பில்...http://neelakandans.blogspot.com/2011/04/2011-24-0740.html

    ReplyDelete
  5. பாபாவைப் பற்றி யாரும் சொல்லவில்லையே,நாம் சொல்வதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த போது உங்கள் கட்டுரை வெளியாகியது ஆறுதலாக இருந்தது.இக்கட்டுரைக்குப் பரிசாக உங்களுக்கு ஓர் தங்க‌ விசிறியைப் பரிசளிக்கட்டும் பாபா,ஹாலாஸ்யம்ஜி!

    ReplyDelete
  6. சுவாமி அற்புதாநந்தர் பற்றிய கட்டுரை வெளியிட்டதற்கு நன்றி அய்யா!
    ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் துறவிச் சீடர்கள் 16 என்று இருக்க வேண்டும் அய்யா!
    முடிந்தால் திருத்தம் செய்து விடவும் அய்யா!

    ReplyDelete
  7. நாத்திகராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இத்துணை நம்பிக்கை உடையவராக மாறியது ஆண்டவன் தடுத்தாட் கொண்டதே ஆகும்.ஆக்கம் நன்று அய்யா

    ReplyDelete
  8. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளில் பாரதி பித்தர் ஆலாசியம் அவர்களின் கட்டுரை .. என்னே பொறுத்தம் ?

    இதுவே பாபாவின் அற்புதம் அல்லவா ?

    ஆலாசியம் உங்களுக்கு பாபாவின் அருள், பாரதியின் அருள், பாரதிதாசனாரின் அருள், மகாத்மாவின் அருள் என யாவும் இன்று ஒருங்கே கிடைத்திருக்கிறது..

    இவை யாவுக்கும் துணை நின்ற வாத்தியாருக்கும் நன்றிகள்

    வழ்த்துக்கள்...ஆலாசியம் ஜீ...

    ReplyDelete
  9. அற்புதானந்தர் பெயருக்கு ஏற்ப அற்புதமானவர் என்பது புரிகிறது...

    பல அரிய விசயங்களை தொடர்ந்து நல்கிவரும் கிருஷ்ணன் சாருக்கு வணக்கங்கள் பல...

    ReplyDelete
  10. 1993இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி ஒரு வழக்கு. பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் முன் நின்று அந்த வழக்கை நடத்தி வந்தேன். நீதிபதிகள் சீனிவாசன், ராஜு, பக்தவத்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் வழக்கு நடந்தது. தீர்ப்பு வரும் நாள், அதே கவலையில் நான் அலுவலக வேலையாக பட்டுக்கோட்டை கிளையில் இருந்தேன். சுமார் 12 மணிக்கு சென்னையிலிருந்து செய்தி. வழக்கை அவர்கள் தேசிய டிரிப்யூனலுக்கு அனுப்பி தீர்ப்பு சொல்லிவிட்டார்கள் என்று. சாதகமான தீர்ப்புக்குக் காத்திருந்தவர்களுக்கு பலத்த அதிர்ச்சி. உடனே புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அன்று முழுவதும் அதே கவலை. இரவு படுத்துக்கொண்டபின் பாபாவிடம் இறைஞ்சினேன். பாவம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை வீணாகிவிட்டதே, உங்களிடம் முறையிட்டு வேண்டிக் கொண்டது வீண்தானா" என்று. காலையில் எழுந்ததும் அலுவலகத்தில் என் மேஜை கண்ணாடியின் கீழ் வைத்துக் கொள்ள பாபாவின் படமொன்றைத் தேடினேன். பத்திரிகைகளைத் துழாவியபோது ஒரு டைப் செய்த காகிதம் கிடைத்தது. அதில் இருந்த வாசகங்களில் சிலவற்றை நினைவிலிருந்து எழுதுகிறேன்: "I am hearing your Prayers; Continue to pray, I know when your prayers to be conceded. Stopping in the middle is not devotion... "
    எனக்கு நிம்மதி ஏற்பட்டது. டிரிப்யூனலில் இறுதியாக ஊழியர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. எனினும், நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீலுக்குச் சென்றது. வழக்கு இன்னமும் இழுக்கிறது.

    ReplyDelete
  11. அன்புள்ள வாத்தியாருக்கு,

    இப்படி ஒன்றுக்கு மூன்றாக பதிவுகளை தந்து எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டீர் ...

    மூன்றும் மூன்று சுவை .. முக்கனிகள் போல ..

    வாத்தியாருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ...

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம் திரு ஹலசியம் பாபாவின் கட்டுரை::- உங்களுக்கு அவர் மேல் கொண்டுள்ள ஆன்மீக நம்பிக்கை பாராட்டபட வேண்டும். பாராட்டுகள்.. வாத்தியார் சார் வணக்கம் ..நா தழும்பேற நாத்திகம் பேசியவன் "என்று தன்னை தானே ஒரு முறை திரு கண்ணா தாசன் கூறியாதாக கேள்விப்பட்டதுண்டு!!""// நாத்திகராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இத்துணை நம்பிக்கை உடையவராக மாறியது ஆண்டவன் தடுத்தாட் கொண்டதே ஆகும்.ஆக்கம் நன்று அய்யா--//"'திரு KMRK....வணக்கம் நமது வாழ்க்கை முறை :--சமய தீட்சை, விஷேட தீட்சை, சிவபூஜை ,ஆச்சர்ய அபிஷேகம்,வானப்ரஸ்தம் ,சந்நியாசம்... இதில் கடைசி இரண்டுக்கும் சதா சர்வ காலமும் இறை சிந்தனை வேறு எந்த நியமும் கிடையாது !!!லாட்டு மகாராஜா சன்னியாசியாகவே இருந்திருக்கிறார் ..!!பிச்சை கேட்கும் விதி :::பசுவின் கன்று பால் குடிக்க வரும்போது பால் சுரக்கும் நேரம் இதுவே ஒரு சந்நியாசி ஒரு வீட்டில் பிச்சை கேட்கும் நேரம்.. அதற்குள் அந்த வீட்டில் பிச்சை இடவில்லை என்றால் அடுத்த வீடு ,அடுத்த வீடு இப்பிடி மூன்று வீடுகள் ??பின்னர் தன இடம் போய இருத்தல் !!மக்கள் சந்நியாசி இருக்கும் இடம் தேடி வந்து தாமதத்திற்கு பொருக்க வேண்டி உணவு கொடுத்தால் வாங்கி உண்ண வேண்டும்..சந்நியாச தர்மம் !!ஆகவேதான் அவர் கங்கை கரைய்ல் ஒரு பிசைகாரரைபோல் வாழ்ந்து இருக்கிறார்..!!. எதோ அடியேனுக்கு தெரிந்த விஷயம் !! தவறு இருந்தால் பொறுத்து கொள்க !! .

    ReplyDelete
  13. சித்திரை மாதத்தில் மட்டும் தான் முக்கனிகள் கிடைக்கும்
    முக்கனி போல் மூன்று கட்டுரைகளை கொடுத்த வாத்தியாருக்கு நன்றி

    ReplyDelete
  14. மூன்று கட்டுரைகளூமே அருமை

    ReplyDelete
  15. எனது கட்டுரையை வாசித்த... பாராட்டிய அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் கூறிக் கொள்கிறேன்

    ReplyDelete
  16. மூன்றுமே நன்றாக இருந்தன.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com