Short Story: ஆத்தா எழுதிய கடிதங்கள்
அகத்தில் இருப்பவள் ஆத்தாள். அம்மா என்பதற்கான தூய தமிழ்ச்சொல். செட்டி நாட்டில் அன்னையை ஆத்தாள் என்றுதான் சொல்லுவார்கள் பிறப்பில் இருந்து நம் உள்ளத்தில் இருக்கும் பெண்மணி ஆத்தா(ள்)
அகம் + ஆள் = அகத்தாள் = ஆத்தாள்
ஒரு ஆத்தாள் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்துக் கதையாக்கியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இந்தமாதம், ஒரு மாத இதழுக்காக எழுதியது. அது அந்த இதழில் வெளியாகி உள்ளது. நீங்களும் படித்து மகிழ அதை உங்களுக்காக இன்று வலையேற்றி இருக்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
1
15.12.2007
பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
நேற்றுக் காலை, என்னை, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, போகும்போது, நீ கண்கலங்கிய காட்சி என் நெஞ்சிற்குள்ளேயே நிற்கிறது.
கவலைப் படாதே! நான் நினைத்த அளவிற்கு, இங்கே ஒன்றும்
மோசமாக இல்லை. எல்லாம் முறையாகத்தான் நடக்கிறது. இந்த
முதியோர் காப்பகம் கட்டி ஐந்து ஆண்டுகளாகிறதாம். இதை
முதியோர் இல்லம் என்று சொல்லாமல், முதியோர் காப்பகம்
என்றுதான் சொல்கிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
என்று என் அறிவிற்கு எட்டவில்லை!
இன்றையத் தேதிக்கு மொத்தம் 450 பேர்கள் இருக்கிறார்களாம். பத்துப்பேர்களாவது நட்பாகக் கிடைத்தால் போதும்.
மிச்சக் காலத்தை ஓட்டிவிடுவேன்.
இங்கே பக்கத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவ பெருமாள்
கோவில் என்னும் திருக்கோவில் உள்ளதாம்.பதினொன்றாம்
நூற்றாண்டில் கட்டப்பெற்ற பழம் பெருமை வாய்ந்த கோவிலாம். ஆழ்வார்களில் மூத்தவரானமகான் ராமானுஜர் அவதரித்த ஊராம்
இது. வயதான காலத்தில் இங்கே வந்து சேர்ந்ததால், என்னுடைய வைகுண்டப் பிராப்த்தி நிறைவேறும் என்று நம்புகிறேன். அதை
நினைத்தால் சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெத்தபிள்ளைகள், தாயபிள்ளைகள், பங்காளிகள், செட்டிநாட்டில்
உள்ள நம் ஊர் மக்கள் என்று அனைவரையும் பிரிந்து வந்து இங்கே
இருக்க வேண்டிய கட்டாகட்டியான சூழ்நிலையை நினத்தால் மட்டும்
மிகவும் வருத்தமாகஉள்ளது. வேறு ஒரு வருத்தமும் இல்லை.
மாதம் ஒருமுறையாவது வந்து பார்த்துவிட்டுப்போ! வரும்போது, சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் மோட்டார் சைக்கிளில் வர வேண்டாம். காலம் கெட்டுக்கிடக்கிறது. நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் சொல்லும்படியாக இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் எல்லாம் விமானம் செல்லும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
உன்னை நம்பி, என்னுடன் சேர்த்து நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. ஆகவே பஸ்சிலேயே வந்துவிட்டுப்போ!
அன்புடன்,
காலத்தால் கரை ஒதுங்கிப்போன உன் ஆத்தா,
கமலம்பாள்
++++++++++++++++++++++++++++
2
1.1.2008
பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
இங்கே வந்து 15 தினங்களாகி விட்டன! எல்லாம் ஓரளவிற்குப் பழகி
விட்டது. காலையில் இட்லியும், பொங்கலும் தருகிறார்கள். மதிய
உணவாக சாதத்துடன் சாம்பார் அல்லது புளிக்குழம்பு, ஒரு கூட்டு,
ஒரு பொரியல் தருகிறார்கள்.
மோர் புளிக்காமல் அம்சமாக இருக்கிறது. இரவில் இட்லி,
தோசை அல்லது சப்பாத்தி. எதை வேண்டுமென்றாலும்
வாங்கிக் கொள்ளலாம். மாலையில் 4 மேரி பிஸ்கெட்டுகளும்,
டீயும் தருகிறார்கள். காலை எட்டு மணிக்கு ஃபில்டர் காப்பியும்,
பகல் 11 மணிக்கு வெஜிடெபிள் சூப்பும் தருகிறார்கள். எல்லாம் சூடாக இருக்கிறது. வீட்டுச் சாப்பாட்டிற்கு இது தேவலை. அதாவது அடுத்தவர் கையை எதிர்பார்த்துச் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
காலை மற்றும் மாலையில் தினமும் 40 நிமிடங்களுக்குக் குறையாமல் அனைவரும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதைக் கண்காணிக்க ஆள் போட்டிருக்கிறார்கள்.
பொது வாசகசாலையும், பொது தொலைக்காட்சி அரங்கமும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் யாராவது ஒருவர் வந்து ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துக்கிறார்.
ஒரு அறைக்கு இரண்டு பேர்கள். என் அறையில் என்னுடன் ஸ்ரீரங்கத்து
மாமி ஒருவர் இருக்கிறார். வயது அறுபத்தைந்து. என்னைவிட ஐந்து
வயது குறைவானவர். வேதங்கள் உபநிடதங்கள் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார். அவருக்கு ஒரே மகன். தில்லியில் பெரிய பதவியில் இருக்கிறானாம். மருமகள் கலப்பாம். உணவு, கலாச்சாரம்
பிடிக்கவில்லை. இங்கே வந்துவிட்டேன் என்கிறார்.
இங்கே உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு கதை இருக்கிறது.
என்னத்தைச் சொல்வது? கலிகாலம்! “வடித்த சோறும், உப்பும்,
தண்ணீரும், கிடைத்தால் போதும் என்ற காலம் வரப்போகிறது”
என்று எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.அப்படித்தான் எதிர்காலம் இருக்கும்போலத் தெரிகிறது!
அடுத்தமுறை வரும்போது உன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வா!
அன்புடன்,
உன் ஆத்தா,
கமலம்பாள்
+++++++++++++++++++++++++++++++++
3
1.4.2008
பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
“நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்”
என்று அந்தச் சிறுகூடல்பட்டிக் கவிஞன் எழுதிவைத்துவிட்டுப்போனது எனக்கும் சேர்த்துத்தான் என்பது இப்போதுதான் தெரிகிறது.
வயதான காலத்தை முதியோர் இல்லத்தில் கழிக்கும்படியாக நேரிடும்
என்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை. "உனக்கென்ன நான்கு
பிள்ளைகள். வயதான காலத்தில் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்வார்கள்" என்று உங்கள் அப்பச்சி முன்பு சொன்ன
தெல்லாம் நீர் மேல் எழுத்தாகப் போய்விட்டது.
நான்கில் மூன்று, பெண் பிள்ளைகளாகப் போய்விட்டன.
அவர்களைக் கட்டிக்கொடுத்தாகிவிட்டது. கொட்டிக் கொடுத்துக் கட்டிவைக்கவில்லை. எதவாகத்தான் கட்டிக்கொடுத்தோம்.
கைக்கும் வாய்க்குமான வருமானத்தில் அவர்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னை வைத்து அவர்களால்
எப்படிப் பராமரிக்க முடியும்? அது நியாயமுமல்ல!
உங்கள் அப்பச்சியின் மறைவிற்குப்பின் உன்னைத்தான் நான் நம்பியிருந்தேன்.
நீ நல்லவன். சத்திய சிந்தன். ஆனாலும் கிரகக்கோளாறு. மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை.
“என்ன செலவானாலும் பரவாயில்லை, முதியோர் இல்லலத்தில் உங்கள் தாயாரை விட்டுவிடுங்கள். என்னால் பார்த்துக்கொள்ள முடியாது” என்று அவள் உத்தரவு போட்ட பிறகு உன்னால் என்ன செய்ய முடியும்?
எம்காம், சிஏ என்று உன்னை நன்றாகப் படிக்கவைத்தேன். பழநி அப்பன் அருளால் உனக்கு மத்திய அரசு வேலையும் கிடைத்தது. கை நிறையச் சம்பளமும் வருகிறது. ஆனாலும் என்ன பிரயோசனம்?
அந்நியத்தில் வேண்டாம், அனுசரனையாக இருப்பாள் என்று உனக்கு சொந்தத்தில் மணம் முடித்தேன். வந்த மகராசி, வாய்க்கு ருசியாக ஒரு நாள் கூட சமைப்பதில்லை. மாதத்தில் பாதி நாள், லெட்சுமி குழம்பும்,
வாழைத் தண்டு பொரியலும்தான். பொங்கலன்று மட்டும்தான் பொரித்த அப்பளத்தைக் கண்ணில் காட்டுவாள்.
உனக்காவது பரவாயில்லை. தினமும் ஒருவேளை, அலுவலகத்தில் ஊழியர்களுக்கென்று உள்ள குறைந்த கட்டணக் கேன்ட்டீனில்
சாப்பிட்டு விடுகிறாய். இரண்டு பெண் பிள்ளைகளும் என்ன செய்யும்? கேட்டால்,அவர்களுக்காகத் தான் பணத்தைச் சேர்க்கிறேன் என்கிறாள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதாவது உன் அப்பச்சி இறந்த பிறகு
உங்கள் வீட்டிற்கு வந்தநாள் முதலாக அவளுடைய சிக்கனத்தைப்
பார்த்துப் பலமுறை நான் அதிர்ந்து போயிருக்கிறேன். அதைச் சிக்கனம்
என்று சொல்ல முடியாது. மகாக் கருமித்தனம். பிள்ளைகள்
இரண்டிற்கும் வயதிற்குத் தக்க வளர்ச்சி இல்லை. தேய்ந்து
போய் இருக்கின்றன. உன் மனைவி கடுகைக் கூட எண்ணிப்
போட்டுத்தான் தாளிக்கிறாள். அந்தக் கொடுமையை எங்கே போய்ச்
சொல்வது? அதை எல்லாம் நீ கண்டு கொள்வதில்லை. பிள்ளைகள்
இரண்டும் தேய்ந்துபோய், சோகை பிடித்ததுபோல இருந்தால் எவன் கட்டிக்கொள்வான்? பின்னால் உனக்குத்தான் கஷ்டம்!
நேற்று நீ இங்கே என்னைப் பார்க்க வந்திருந்தபோது, உன் மகள்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தாய்.அவர்கள் இருவரும்
‘அப்பத்தா’ என்று என்னைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்கள். நீங்கள் திரும்பிச் சென்றதில் இருந்து உங்கள் நினைவாகவே இருக்கிறது. அதனால்தான் மன ஆறுதலுக்காக இந்தக் கடித்தத்தை எழுதுகிறேன்.
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
உன்னை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. பழநி அப்பனை பிராத்திப்பதைத் தவிர எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.
உனக்கும் அப்பச்சி இல்லை. எனக்கும் அப்பச்சி இல்லை. அப்பச்சி
இல்லாதவர்களுக்கெல்லாம் அவன்தான் அப்பச்சி! அவன்தான் உன்
வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்!
கண்ணீருடன்,
உன் ஆத்தா,
கமலம்பாள்
+++++++++++++++++++++++++++++++++++++
4
15.10.2008
பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
நேற்று கிறுகிறுவென்று தலை சுற்றுவதுபோல இருந்தது. சுதாகரித்து, அருகில் இருந்த தூணைப் பிடிப்பதற்குள் தவறிக் கீழே விழுந்துவிட்டேன். முன்பக்கத் தலையில் அடிப்பட்டுவிட்டது. நெற்றி நன்றாகப் புடைத்துக் கொண்டு விட்டது.
அருகில் இருந்தவர்கள் பதறி விட்டார்கள். ஐஸ் கட்டிகளை வைத்து முதல் உதவி செய்தார்கள். விடுதிக்கு வழக்கமாக வரும் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு, தாழ் இரத்த அழுத்த நோய் (Low Blood
Pressure) உள்ளது என்று சொல்லி, அதற்காக மாத்திரைகளைக் கொடுத்து விட்டுப் போனார். நெற்றியில் இன்று காலையில் வீக்கம் வற்றிவிட்டது.
இருந்தாலும் பத்து நாட்கள் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி, பக்கத்தில் உள்ள மருத்துவ சிகிச்சைப் பகுதிக்கு என்னை மாற்றி விட்டார்கள்.
அந்தப் பகுதிக்கு, தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று நிதி
உதவி அளிக்கிறதாம். அங்கே பெண்களுக்காகத் தனி அரங்கும், ஆடவர்களுக்காகத் தனி அரங்கும் உள்ளது. தலா பத்துப் பேர்களைத்
தங்க வைத்து சிகிச்சைஅளிக்கும் வசதிகள் உள்ளன.
அங்கே நம் செட்டிநாட்டு கிராமம் ஒன்றைச் சேர்ந்த சாலி ஆச்சி
அவர்களைச் சந்தித்தேன். இங்கிருந்து பத்துக் கிலோ மீட்டர்
தொலைவில் ‘சிவன்தங்கல்’ என்னும் கிராமத்தில் இருக்கும்
முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களாம். அந்த இல்லமும்
இதைச் சேர்ந்ததுதானாம். அங்கே எண்பது வயதிற்கு மேற்பட்டவர்
களைத் தங்க வைத்துள்ளார்களாம்.
அந்த ஆச்சி தன் மனக்குறையைச் சொல்லி ‘ஓ’ வென்று கதறி
அழுததைப் பார்த்து அரண்டுபோய் விட்டேன். அந்த ஆச்சிக்கு
நான்கு மகன்களாம். அண்ணா நகரில் ஆச்சி பெயரில் இருந்த
பெரிய வீட்டை இரண்டு கோடிக்கு விற்றுக் காசாக்கிப் பங்கு
வைத்துக்கொண்டு விட்டார்களாம். ஆச்சியை ஆளுக்கு மூன்று
மாதங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்துப்
பேசியவர்கள், அதன்படி செய்யவில்லையாம். அங்கேயும்
மருமக்கள் பிரச்சினைதான். ஒருவருக்கொருவர் தன்முனைப்புப் பிரச்சினையும் உள்ளதாம். இங்கே கொண்டுவந்து விட்டு விட்டார்களாம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆச்சி இங்கேதான் இருக்கிறார்களாம்.
இப்போது அதிகப்படியாக எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால்,
வயது மூப்பின் காரணமாக (சாலி ஆச்சிக்கு வயது எண்பத்தெட்டு -
அதை நினைவில் கொள்ளவும்) இயற்கை உபாதைகள் அனைத்தும்
ஆச்சிக்கு சில சமயங்களில் இருக்கும் இடத்திலேயே நடந்து விடுகிறதாம். பாதி நேரம் தன்னினைப்பு இல்லாததுதான் அதற்குக் காரணமாம். அங்கிருக்கும் ஊழியர்கள் இரண்டு மூன்று முறை அடித்து
விட்டார்களாம். “ஏன் ஆச்சி இப்படிச் செய்கிறாய்? ஒன்னுக்கு வந்தால் எழுந்துபோய் இருந்துவிட்டு வருவதற்கு என்ன கேடு?” என்று வேறு திட்டுகிறார்களாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னைப் பார்க்க வந்த தன் மூத்த
மகனிடம் ஆச்சி அதைச் சொல்லித் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்கள்.
“அப்பச்சி என்னை இங்கே அடிக்கிறாங்கடா. ஒத்த மகள்னு சின்ன
வயசிலே எங்க அப்பச்சி என்னைச் செல்லமா வளர்த்தாருடா. என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா! அவ்க இருந்தவரைக்கு ஒரு துரும்பு என்மேலே பட்டதில்லைடா! இங்கே
யிருந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கடா ராசாக்களா!
இல்லைன்னா ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுங்கடா, சாப்பிட்டு உயிரைப் போக்கிக்கிறேன்டா!” என்று சொல்லிஅழுதவர்களை
சமாதானப் படுத்திவிட்டு, ஊழியர்களை அழைத்து, ஆளுக்கு ஐநூறு
ரூபாய் கொடுத்து, இனி அடிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டுப்
போனாரே தவிர, மூத்த மகன் வேறு ஒன்றும் செய்யவில்லையாம்.
அதற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வரவுமில்லையாம்.
நெஞ்சு கணக்கிறது. கண்கள் பனிக்கின்றன. இதற்கு மேல் எழுத வரவில்லை. மற்றவை அடுத்த கடிதத்தில்
அன்புடன்,
ஆத்தா,
கமலாம்பாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++
5
11.11.2008
பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
இப்போது ஓரளவிற்கு நலமாக இருக்கிறேன். மீண்டும் பெரிய
விடுதிக்கே என்னை மாற்றிவிட்டார்கள். இப்போது ஸ்ரீரங்கம்
மாமியுடன் இருந்த அறையல்ல. வேறு ஒரு புதிய அறை. உணவுக்
கூடத்திற்கு அருகிலேயே போட்டுக் கொடுத்து விட்டார்கள். கோவை சூலூரைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்னும் பெண்மணி என்னுடன் இருக்கிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராம். கலகலப்பாகப் பேசுகிறார்.
பகல் பொழுது எப்படியோ கழிந்து விடுகிறது. இரவில்தான் தூக்கம்
சரியாக இருப்பதில்லை. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக
இருக்கிறது. சாலி ஆச்சி அடிக்கடி கண்முன் நிற்பதுபோலத்
தோன்றுகிறது.
அப்படிச் சமயங்களில் கந்த சஷ்டிக் கவசத்தை மனதிற்குள் சொல்லி
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். எத்தனை நாட்கள் இந்த
அவதியோ? காலம்தான் கணக்கை முடித்து ஐந்தொகையைக் கொடுக்க வேண்டும்.
அன்புடனும், சற்றுக் கலக்கத்துடனும்
உன் ஆத்தா,
கமலம்பாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
3.3.2009
பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
மறுபடியும் கிறுகிறுப்பு தலை சுற்றல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்று அதிகாலை கட்டிலில் இருந்து இறங்கிக் கழிப்பறைக்குச் செல்லும் வழியில் விழுந்துவிட்டேன். அடிபடவில்லை. யாரும் பார்க்கவுமில்லை. எழுந்து விட்டேன்.
அதற்குக் காரணம் எனக்குத் தெரியும். தினமும், இரண்டு வேளை
சாப்பிடுங்கள் என்று சொல்லி மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை
நான் சாப்பிடுவ தில்லை. அதிக நாள் உயிர் வாழ விரும்பவில்லை.
சாலி ஆச்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எனக்கும் ஏற்படக்கூடாது.
சீக்கிரம் வைகுண்டத்திற்குப் போய்விடவேண்டும்.
மாத்திரையைச் சுற்றி இருக்கும் தாள்களைக் கிழித்து அறையில்
இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டு விடுவேன். மாத்திரை
களைக் கழிப்பறைப் பேசினில் போட்டுத் தண்ணீர் ஊற்றித் தள்ளி விட்டுவிடுவேன். தினமும் ஒழுங்காக மாத்திரைகளைச் சாப்பிடுவதைப்போலப் பாவனை செய்து கொண்டிருக்கிறேன்.
எத்தனை நாள் ஆகுமோ - எப்போது உயிர் போகுமோ? தெரிய
வில்லை!
எல்லாம் அவன் செயல்!
இறைவனின் அழைப்பிற்காக பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
உன் ஆத்தா
கமலாம்பாள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
6.6.2009
பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,
ஆத்தா எழுதிக்கொண்டது.
எச்சு வருகிறது. உடம்பும், மனமும் சோர்ந்து விட்டது. ரெம்ப நாள்
தாங்காது.
உனக்கு இதுவரை எழுதிய கடிதங்கள் எதையும் உனக்கு நான்
அஞ்சலில் அனுப்பவில்லை. அனுப்புவதற்கான வசதிகள் இங்கே
இருந்த போதும் உனக்கு நான் அனுப்பவில்லை. உன் மனம் மிகுந்த வேதனைப்படும் என்பதால் ஒன்றைக்கூட அனுப்பவில்லை.
நான் காலமான பிறகு, அவை அனைத்தையும் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் என் பெட்டியிலேயே இவற்றைச் சேர்த்து
வைத்துள்ளேன். அனேகமாக உனக்கு நான் எழுதும் கடைசிக்
கடிதம் இதுவாக இருக்கலாம்! மூன்று பெண்களுடன் பிறந்த உனக்கு
ஒன்றும் வைக்காமல் போகக்கூடாது என்பதற்காக, நம் வீட்டு இரட்டை அறையில் உள்ள பெட்டகத்தில் 30 பவுன் நகைகளை வைத்துள்ளேன்.
என் அப்பச்சி எனக்குப் பிற்காலத்தில் கொடுத்தது. அத்துடன் சோழ
வந்தான் கிராமத்தில் அவர்களுக்கு உரிய இடத்தில் இரண்டு ஏக்கர்
பூமியை எனக்காக எழுதிக்கொடுத்தார்கள். அதற்கான பத்திரமும்
நகைகளுடன் உள்ளது. அவைகள் பெட்டகத்தின் இரகசிய அறையில்
உள்ளன. அவைகள் உனக்குத்தான். உன் பெண்களின் திருமணச்
செலவிற்கு அவற்றை நீ பயன் படுத்திக்கொள். பழநியில் உள்ள
சாதுக்கள் மடத்திற்கு அன்னதானத்திற்கென ரூபாய் பத்தாயிரம்
மட்டும் எனக்காகச் செலுத்திவிடு. அது மட்டும் எனக்காக
நீ செய்தால் போதும்!
முருகனருள் முன்னிற்கும்!
அன்புடன்
உன் ஆத்தா
கமலாம்பாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதினைந்து நாட்களில், ஒரு அமாவாசைத் திதியன்று கமலாம்பாள் ஆச்சி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். தகவல் தெரிந்து வந்த மகன் பெரிச்சியப்பன், தன் தாயாரின் பூத உடலை அம்புலன்ஸ் வாகனம்
ஒன்றில் ஏற்றிக் கொண்டு, அங்கிருந்து நேராக திருவொற்றியூர் நகர விடுதிக்குச் சென்று விட்டான். கலங்கிய மனதுடன் தாயாரின் அந்திமக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினான்.
அவனுடன் முதியோர் இல்லத்திற்கு வந்த அவனுடைய மனைவி,
இல்லத்தில் உள்ள புத்தகத்தில் கையெழுத்தை இட்டு விட்டு,
ச்சியின் உடலையும், உடமைகளையும் பெற்றுக்கொண்டதற்கான சடங்குகளை முடித்துக் கொண்டு தன் தம்பியுடன் காரில் புறப்பட்டாள்.
அப்போதுதான் அது நடந்தது.
காப்பகத்தின் மேலாளர் ஆச்சியின் பெட்டியைக் கொண்டுவந்து
கொடுத்தார். எடுத்துக்கொள்ளாமல் போகிறீர்களே என்றும் சொன்னார்.
அதில் என்ன இருக்கும் என்று மகராசிக்குத் தெரியாதா என்ன?
வேண்டாம் என்று சொன்னாள். அவர் விடவில்லை. நீங்கள்தான்
எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கையில் திணித்து, அனுப்பி வைத்தார்.
காப்பகத்தை விட்டு வெளியே வந்தவள், அங்கே பக்கத்தில் இருந்த
பெரிய குப்பைத் தொட்டியில் அதைப் போட்டு விட்டுத் தன் தம்பியுடன்
காரில் கிளம்பிப் போய்விட்டாள்.
பார்த்துக்கொண்டிருந்த பிச்சைக்காரன் ஒருவன் பெட்டியைப்
பிரித்துப் பார்த்தான். பழங்காலத்து இரும்புப் பெட்டி.எடைக்குப்
போட்டால் நூறு, இருநூறு கிடைக்கும். உள்ளே இருந்த நான்கு
சேலைகளில் நன்றாக இருந்த இரண்டு சேலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, நைட்டி எனப்படும் இரவு உடைகளுடன் மற்ற துணிமணிகளையும், சீப்பு, கண்ணாடி இத்யாதிகளுடன், கொத்தாக
இருந்த கடிதங்களையும் குப்பைத்தொட்டியிலேயே வீசிவிட்டுப்
போய்விட்டான்.
அடுத்த நாள் ஆச்சி சிதையில் எரிந்து கொண்டிருந்த அதே
நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி குப்பைக் கிடங்கில்
ஆச்சியின் கடிதங்களும் தீக்கிரையாகின!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதையின் முடிவு திருப்தியாக இல்லையா? உங்களுக்காக
கதையின் இன்னொரு க்ளைம்மாக்ஸைக் கீழே கொடுத்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
அடுத்து வந்த பதினைந்தாம் நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதை
இறைச் செயல் என்றும் சொல்லலாம்.
ஆத்தாவின் திரேக்கியத்தை எப்படிச் செய்யலாம். மனைவி, மக்களுக்கு, மற்றும் உடன் பிறப்புக்களுக்கு புதுத்துணிகளை என்ன பட்ஜெட்டில் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், பெரிச்சியப்பனின்
மனதில் பொறிதட்டியது.
யாரோ ஒரு புண்ணியவான் காப்பகத்திற்கு வந்தவர், அங்கிருந்த
அததனை பெண்களுக்கும் ஒரு காட்டன் புடவையைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாராம்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பெரிச்சியப்பன் தன் தாயாரைப் பார்க்கப் போயிருந்தபோது, “நான் எங்கே அப்பச்சி அதைக் கட்டிக்கொள்ளப்
போகிறேன்? அந்தப் புடவையைக் கொண்டுபோய் என் பேர்த்தியிடம்
கொடு” என்று தன் தாயார் சொன்னபோது, தன் தாயாரின் பெட்டியில்,
மேலாக இருந்ததை எடுத்துக்கொண்டு வந்தது நினைவிற்கு வந்தது.
த்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்த சமயம், தன்னுடைய மனைவியும், மகள்களும் வெளியூர் சென்றிருந்ததால், தன்னுடைய அலமாரியில்
அதை வைத்ததும் பெரிச்சியப்பனின் நினைவிற்கு வந்தது.
இப்போது அது நினைவிற்குவர, அதை எடுத்துத் தன் மூத்த மகளிடம் கொடுத்தான்.
“அய்ய்ய்...” என்று ஆச்சரியம் மேலிட, வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவள், ஒரே நிமிடத்தில் திரும்பி வந்தாள்.
“அப்பா, அப்பத்தா கொடுத்த சேலைக்குள் இந்தக் கடிதம் இருந்தது”
ஆமாம், அது ஆச்சி அவர்கள் எழுதியிருந்த கடைசிக் கடிதம். படித்தவுடன் பெரிச்சியப்பன் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டான். பலவிதமான உணர்வுகள் கண்ணிலும் மனதிலும் தோன்றி மறைந்தன. மற்ற கடிதங்கள் எல்லாம்
மனைவி கடாசிவிட்டு வந்த பெட்டியோடு போய்விட்டதை உணர்ந்தான். கடவுள் அருளால் முக்கியமான அந்தக் கடிதமாவது மிஞ்சியதே என்று மகிழ்ந்தான்.
எல்லாம் பழநி அப்பனின் கைங்கர்யம். அந்தக் கடிதத்தில், பழநி சாதுக்கள் மடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கும்படி ஆச்சி எழுதியிருந்தார் அல்லவா? அதை நிறைவேற்றும் விதமாக அந்தக் கடிதம் மட்டும் தப்பித்திருக்கிறது.
வைக்கும் நியாமான கோரிக்கைகள் நிறைவேறாமல் போகாது. அதுதான் பழநி அப்பனின் மகிமை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!