27.3.11

ஆறிய பவனும் ஆறாத பவனும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆறிய பவனும் ஆறாத பவனும்!

ஒரு சமயம் டெல்லி உமாஜியைப் பார்த்து நானும் ஜோக் பட்டியல் ஒன்று தயாரித்து வாத்தியாருக்கு அனுப்பினேன். வாத்தியார் வெளியிடவில்லை.

மின்னஞ்சலில் கேட்டபோது, "நீங்கள் 'சீரியஸ்' ஆன செய்தியையே எழுதுங்கள்"என்று பணித்துவிட்டார்.சினிமாவில் எந்த வேடம் முதல் படத்தில் செய்கிறோமோ, அதுவேதான் கடைசி வரைக்கும்.வில்லன் ஆக முதலில் செய்தால் அந்த முத்திரையைக் குத்தி மீண்டும் மீண்டும் வில்லனாக நடிக்கவே அழைப்பு வரும்.இதற்கு ரஜனி மட்டும்தான் விதிவிலக்கு. முதலில் நிறைய வில்லன் ரோல் செய்தார். 16 வயதினிலே பரட்டையை மறக்க முடியுமா? ஆனால் பின்னர் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்து, சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டர்.

என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன். "நமக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ? சொல்லப்  போனால் நான்தான் அதிகமாக மனதுக்குள் சிரிக்கும் ஆசாமி.ஒரு குணம் (கெட்டதோ?) என்னிடம் இருப்பதை நானே கண்டு கொண்டேன். அது என்னவென்று கேளுங்கள்.('என்ன‌?' என்று கோரஸ் சத்தம் கேட்கிறது)  என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருடைய முகத்தையும் போல என் முகத்தை மாற்றிக் காட்டுவது. இதை ஒரு கலையாகவே பலர் செய்கின்றனர். அதைக் கலை என்று பார்க்கத் தெரியாதவர்கள் "வலித்தா காண்பிக்கிறாய்?" என்று கோபித்து 'தர்ம அடி' கிடைக்க வழியுண்டு. என்றைக்கு எனக்கு 'அறம் சார்ந்த அடி' கிடைக்கப் போகிறதோ?!அதென்ன 'அறம் சார்ந்த அடி'? அதாங்க தர்ம அடியே தான்!  திடீரெனத் தோன்றிய தனித் தமிழ் ஆர்வம் அப்படிச் சொல்ல வைத்தது.

ஜோக்குக்காகப் பத்திரிகைகளையும் இணையத்தையும் பார்க்க வேண்டாம். நம் அன்றாட வாழ்விலே பார்க்கக்கூடிய நிகழ்வுகளிலேயே பல நகைச்சுவைகள் நிரம்பியுள்ள்ளன. கண்ணையும், காதையும், கூடவே ரசிகத் தன்மயையும் கூர்மைப்படுத்தினால், மகிழ்ச்சியில் கூத்தாடலாம்.சிலேடை, நக்கல், திருகுதாளம் என்று ஒரு 'ரவுண்டு'க‌ட்டி ஜோக்"கடி"க்கலாம்.

ஒருநாள் நானும் என் பெரியம்மாவும் சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வாசல் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். பெரியம்மா படிக்காதவர்கள். 2,3 வகுப்பு படித்து இருக்க‌லாம். ஆனால் நல்ல கூர்மையான அறிவு.எங்க‌ள் இல்லத்தைக் கடந்து பல கூவி விற்போர் சென்று கொண்டிருந்தனர்.முதலில் ஒரு ஆண் வாழைக் காயும், பின்னால் ஒரு பெண் வாழை இலையும், அதன் பின்னர் ஒரு ஆண் பாகற்காயும், அவருக்குப்பின்னே ஒரு பெண் பாக்கு மட்டையும் கூவிக்கூவி விற்றுச்சென்றனர்.

முதல் ஆள் ஓங்கிய குரலில் "வாழக்காஆஆஆ வாழக்கா..." என்று கூவினார் பெரியம்மா சொல்கிறார்கள்,"அவன் எந்த அக்காவை வாழச் சொல்கிறான்?"

பின்னால் வந்த பெண் "வாழலை..ய்..ய்.. வாழலெய்ய்ய்" என்று கீழ்ஸ்தாயியில் அழும் குரலில் சொல்கிறாள். பெரியம்மா சொல்கிறார்கள்,"ஓஹோ!இவள் தானோ அவனுடைய வாழாத அக்கா?"

அதன் பின்னர் ஒருவன் "பாருக்காஆஆஆ பாருக்காஆவ்..." என்று பாகற் காயைக் கூவி விற்கிறான்.பெரியம்மா மீண்டும், "எந்த அக்காவை இவன் பார்க்கச் சொல்கிறான்?" என்று கேட்கிறார்கள்.

பின்னாலயே ஒரு பெண் "பாக்க‌மாட்டெய்ங் பாக்கும‌ட்டைய்ய்ய்.."என்று கூவுகிறாள்.பெரியம்மாவின் மூளை வேலை செய்கிறது. "ஓஹோ! இவள் தானோ அவன் பார்க்கச் சொன்ன அக்கா? ஏன் பார்க்க மறுக்கிறாள்?"என்று சிரிக்காமல் கேட்டார்கள்.

ஒரு சாதாரண நிகழ்வில் நகைச்சுவையை, யாரையும் புண்படுத்தாத வகையில், இலக்கிய நயம் சொட்டச் சொட்டக் கூறிய பெரியம்மாவின் ஆற்றல் இன்று நினைத்தாலும் வியக்க வைக்கிறது.நகைச்சுவையாகப் பேசுவது, எழுதுவது எப்படி என்று பாடம் சொல்லிக் கொடுத்தாலும் நகைச்சுவை வந்து விடுமா? நகைச்சுவைக்கு 'டைமிங்', 'பாடி லாங்குவேஜ்' மற்றும் மொழி ஆற்றல் அவசியம்.'காமெடி டிராக்' என்று தனியாகப் போடக்கூடாது.நகைச்சுவை பெரியம்மாவைப் போல இயல்பாக மனத்துக்குள் முகிழ்க்க வேண்டும்.அதை மற்றவரும் மகிழும் வண்ணம் நேரம் பார்த்து அவிழ்த்து விடவேண்டும்."நான் ஒரு ஜோக் சொல்கிறேன் கேட்கிறீர்களா?" என்று கேட்டால், பெரும்பாலும் அடிக்கப்போகும் ஜோக் அறுவையாகப் போய்விடும் அபாயம்  உண்டு. பெரியம்மாவின் பெயர் கணப‌தி நடராஜன் சாரின் ஊரில் உள்ள பிரபலமான அம்பாளின் பெயர்.

முன்பெல்லாம் "அய்யர் காபி கிளப்", "பிராமணாள் டிபன் சென்டர்" என்று பெயர்ப் பலகையைத் தாங்கி நிற்கும் சிறிய சாப்பாட்டுக் கடைகள் உண்டு. அந்தக் கடையின் முக்கிய முதலே அந்த சாதிப் பெயர்தான். தந்தை பெரியார் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு செயல் திட்டமாக, பொது இடத்தில் சாதிப்பெயர் இருந்தால் தார் கொண்டு அதனை அழிக்கச் சொன்னார்.

தி க வினர் அப்படி தார் கொண்டு அழித்தனர். பெரியாருக்கு ஆதரவு பெருகியது. எனவே 'அய்யர்', 'பிராமணாள்' என்ற பெயர்க‌ள் மாற்றப்பட்டு 'லக்ஷ்மி பவன்' 'சரஸ்வதி கபே' 'ஷண்முக விலாஸ்' 'கணபதி கபே' என்று பெயர்கள் சூட்டப்பட்டன. அதிலும் கொஞ்சம் பேர் சாமர்த்தியம் செய்து "ஆரிய ப‌வன்"
என்று இனப் பெயரைச் சூட்டிக்கொண்டனர்.(ஆரியப் படையெடுப்போ, ஆரிய இனமோ, ஒன்றும் இல்லை' என்று அந்தக் கதையை அவிழ்த்து விட்ட மாக்ஸ்முல்லரே சொல்லியும் இன்றளவும் பிராமணர்களை ஆரியர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் சொல்வது நிற்கவில்லை) இந்த 'ஆரிய பவன்' என்ற பெயர் தங்க‌ளுடைய பிராமண அடையாளத்தை வியாபாரத்திற்காகத் தக்கவைக்கும் என்று கருதியவர்கள் அவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டனர்.

பிராமணர் அல்லாதோர் சப்பாட்டுக்கடை ஆரம்பிக்கும்போது 'திராவிடச் சிற்றுண்டி நிலையம்' என்று போட்டி போட்டார்கள்.

ஜோக் சொல்ல வந்துவிட்டு பழக்க தோஷத்தால்  சீரியஸ் ஆகிவிட்டேனோ? ஒரு சமயம் நண்பர் கூப்பிட்டார். "வாருங்கள் ஆரிய பவனில் ஒரு காப்பி சாப்பிடலாம்" என்றார்."வேண்டாம் சூடான பவனுக்கே போவோம்" என்றேன். நண்பர் ஒரு வினாடி புரியாமல் திகைத்தார். புரிந்தவுடன் ஆழமான நகைச்சுவையை ரசித்தார்.  "ஆரிய","ஆறிய" என்ற சொற்களை வைத்து விளையாடிய சிலேடை அது.

என்ன கொஞ்சமாவது சிரிப்பு வருதா? சிரிப்பு வராவிட்டாலும் வாய்விட்டுச் சிரியுங்கள்.நோய் விட்டுப் போகும்.குமரி முத்து, மதன் பாப் போலச் சிரியுங்கள். வீரப்பாச் சிரிப்பு வேண்டாம். நன்றி!

ஆக்கம்:
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK)
லால்குடி

------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர். திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் 
ஒரு கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பெற்ற படம்
(ஆண்டு 1994)

வாழ்க வளமுடன்!

37 comments:

  1. உண்மை நமது அன்றாட வாழ்க்கையில்
    நிறைய நகைச்சுவை நிகழ்ச்சிகள்
    ரசிக்கும் படி உள்ளன

    ReplyDelete
  2. கோமதி சங்கரனை தரிசத்து வந்த
    கோ மானே, அவர் நலமா..

    பண்புள்ளவர்களை "கண்" பார்வையே
    பட்டென விளக்காமலே காட்டிடுமே

    தொடர்பில்லாமல் எதுவும்
    தொடராது என்பதால்; இன்று

    வகுப்பறையில் வாத்தியார் உங்களுடன்
    வகுப்பறை மாணவர்கள் நாங்களும்..

    ReplyDelete
  3. முதலில் வில்லன் என்றும் பின்னர்
    முத்திரை பதித்த ஹிரோ என


    ரஜினி மட்டும் அல்ல; நாம்
    ரசித்து பழகிய சத்தியராஜும் தான்


    நகைப்பதால் தான் சுவையே என
    நயமாக சொன்ன பதிவு; அங்கே சில


    சீரியஸாக சொன்னாலும்
    சிரிப்பு வருது மலரும் நினைவாக


    சுவையாக சூடாக இருந்தது...
    சுவைஞர்களுக்கின்று சன்டேயல்லவா

    ReplyDelete
  4. kmrk அவர்களிடமிருந்து வழக்கத்துக்கு மாறான பதிவு ..
    நல்ல நகைச்சுவை இழையோடும்போதே சீரியசாகவும் செல்லும் தன் மனவோட்டத்தையும் ஒத்துக்கொண்டு எழுதியிருப்பது இயல்பாக இருக்கிறது..
    எழுத்து நடையே மிக இயல்பாக இருக்கிறது..
    படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..பதிவிட்ட வாத்தியாருக்கு வணக்கங்கள்..
    ஜப்பான் சுனாமி புரட்டிப் போட்டதில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் கதிர்வீச்சு அபாயம் என்று லைவ் அப்ப்டேட் கேட்டுக் கேட்டு கனத்த இதயத்துக்கு மருந்தாக தங்களின் இந்த வார எழுத்து முயற்சி அமைந்திருப்பதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. கிருஷ்ணன் சார் தங்கள் பெரியம்மாவின் நகைச்சுவை மிகவும் நன்று...

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம் திரு kmrk...நீங்கள் வில்லனும் இல்லை கமேடியனும் இல்லை !! பெரிய ஹீரோ !!!! பிறர் பேசும்போது அவர்கள் பேச்சை கவனித்து அதற்கு தகுந்தார் போல தன்னுடைய பேச்சை விஷயங்களுடன் கொண்டு வருவது என்ன சாமானியமா !! எந்த ஒரு நபருடன் பேசினாலும் அதற்கு தகுந்தார் போல அவர்மனதுக்கு இசைந்த விஷயங்களை பேசுவது!!! .அதுவும் ஒரு கலைதான் அதில் நீங்கள்தான் ஹீரோ....எங்கே அய்யா போனீங்க??? திரு மைனர்வாள்!!!உங்களின் பின்னூட்ட்டம் இல்லாமல் தளமே சோகமாக இருக்கிறது...நீங்கள் நலமாக இந்தியாவில் விடுமுறைல்!!! இருப்பதாக திருமதி உமா சொன்னார்கள்... இறைவனுக்கு நன்றி...!

    ReplyDelete
  7. அனைவருக்கும் வணக்கம்
    முதலில் "கண்"டு ...வணக்கம் இட்டது.. ஹீரோதான்.. மிகவும் எளிமையான பேச்சு தன்னடக்கம் !! அவர்தம் துணைவியார்..சீரிய பண்பு.. வித்தியாசம் பார்க்காமல் யதார்த்தமான பழகுதல் !!<<<<"""".தொடர்பில்லாமல் எதுவும்
    தொடராது """"">>வாத்தியாருக்கு வணக்கங்கள்.!!!>> இரு பேர்களின் அனுபவம்" நாம்"" கற்றுகொள்ள நிறைய உள்ளது!!

    ReplyDelete
  8. ////hamaragana said... எங்கே அய்யா போனீங்க??? திரு மைனர்வாள்!!!உங்களின் பின்னூட்ட்டம் இல்லாமல் தளமே சோகமாக இருக்கிறது...////

    இன்னமும் என்னை நினைவில் கொண்ட தங்களுக்கு நன்றி..
    தொடர் அலைச்சல் மற்றும் வேறுவேறு அலுவல்கள் காரணமாக நீண்ட நாட்கள் வகுப்புக்கு வரவில்லை..
    சொல்லாமல் லீவ் எடுத்துவிட்டேன்..
    இப்பிடி இணைய வகுப்பில் இந்த வசதி இருப்பதால்தானே நாங்கல்லாம் இங்க வந்து போயிட்டுருக்கோம்?

    ReplyDelete
  9. 'தர்ம அடி' கிடைக்க வழியுண்டு. என்றைக்கு எனக்கு 'அறம் சார்ந்த அடி' கிடைக்கப் போகிறதோ?!அதென்ன 'அறம் சார்ந்த அடி'? அதாங்க தர்ம அடியே தான்!

    ஆகா கிருஷ்ணன் ஐயா இது போதாதா உங்களுடைய நகைச்சுவை உணர்வுக்கு ,, அற்புதம் ... நல்ல படைப்பு ஐயா

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா!

    முத்து ஸ்ரீ ராம கிருஷ்ணன் சார்!

    தாங்கள் இதுவரைக்கும் சொல்லவே இல்லையே!

    தங்களுக்கு இப்படி ஒரு அசத்தலான திறமை இருக்கு என்று ,

    என்னத்த இருந்தாலும் " முத்து முத்து ", தான் போங்க :-)))

    ReplyDelete
  11. உங்கள் ஆக்கம் படிக்க சுவாரசியமாக இருந்தது.

    நம் அன்றாட வாழ்விலே பார்க்கக்கூடிய நிகழ்வுகளிலேயே பல நகைச்சுவைகள் நிரம்பியுள்ள்ளன. கண்ணையும், காதையும், கூடவே ரசிகத் தன்மயையும் கூர்மைப்படுத்தினால், மகிழ்ச்சியில் கூத்தாடலாம்.சிலேடை, நக்கல், திருகுதாளம் என்று ஒரு 'ரவுண்டு'க‌ட்டி ஜோக்"கடி"க்கலாம்.//

    நீங்கள் சொல்வது சரிதான். நான் இப்போதும் நினைத்து நினைத்துச் சிரிக்கும் விஷயங்கள் நிறைய. எதுலயும் seriousness கிடையாதா? எதை எடுத்தாலும் என்ன சிரிப்புன்னு பாட்டிகிட்டேர்ந்து திட்டும் நிறைய வாங்குவோம். இப்பவும் தொடர்கிறது. பிறந்த / புகுந்த வீட்டு உறவினர்களில் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமை உண்டு.

    ReplyDelete
  12. என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருடைய முகத்தையும் போல என் முகத்தை மாற்றிக் காட்டுவது//

    அப்படின்னா உங்காத்துக்கு வந்தா முகமூடி போட்டுண்டுதான் வரணும்.

    ReplyDelete
  13. நான் இரண்டு நாட்கள் மூனனால் தான் என் வீட்டில் சொன்னேன் ஜப்பான் minorwall பின்னூட்ட்டம்
    வரவில்லை எப்படியும் திங்கள்கிழமை வரும் என்று உங்கள் பின்னூட்ட்டம் வந்து விட்டது.
    மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்
    நைனார்

    ReplyDelete
  14. பார்த்தேன் படித்தேன் படித்து சிரித்தேன் மலைத்தேன் இதுவென மலைத்தேன்

    ReplyDelete
  15. /// dorairaj said...உண்மை நமது அன்றாட வாழ்க்கையில்
    நிறைய நகைச்சுவை நிகழ்ச்சிகள் ரசிக்கும் படி உள்ளன///
    ஆமாம் சார்.அதைத்தான் சொல்ல வந்தேன்.ஒவ்வொருவருடைய முகபாவஙகளும்,தன்னிச்சையற்ற செயல்பாடுகளும், பேச்சு முறைகளும் நகைப்புக்கு இடம் கொடுக்கும்.நாம் தான் கவனித்து சிரித்துக் கொள்ள வேண்டும்.
    பின்னூட்டத்திற்கு நனறி.முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறீர்களோ?

    ReplyDelete
  16. /// iyer said...கோமதி சங்கரனை தரிசத்து வந்த கோ மானே, அவர் நலமா///

    ஆம் சங்கர நாராயணரும் நலமே!கோமதி அம்பாளும் நலமே!அதோடுகூட நமது வகுப்பறையின் தொழிலதிபர் "நமது சங்கீதம்" அவர்களும் அவரது துணைவியாரும் நலம்தான்.அவ்ர்கள் வீட்டு சொதிக் குழம்பின் மணமும் ருசியும் இனி வாழ்நாளில் மறக்க முடியாது.

    ReplyDelete
  17. ///அங்கே சில சீரியஸாக சொன்னாலும் சிரிப்பு வருது மலரும் நினைவாக
    சுவையாக சூடாக இருந்தது...///
    ஆம் நான் மேல் அதிகத் தகவல்களுக்காகப் பல செய்திகளை ஆங்காங்கே என்
    ஆக்கங்களில் சில சம்யம் புகுத்திவிடுவேன். அதன் பேரில் வாதப்பிரதிவாதம் வரலாம் என்று தெரிந்தே அவ்வாறு எழுதுவேன்.கலகம் என் நோக்கம் அல்ல.
    செய்தி சொல்வதே நோக்கம்.Aryan invasion theory"
    என்று கூகிள் ஆண்டவரைக்க் கேட்டால் பல செய்திகள் கிடைக்கும்.Koenard elst
    அவர்களின் ஆக்கங்கள் ஆணித்தரமானவை.டெல்லி ஜவஹர்லால் நேரு பலகலைப் பேராசிரியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆரிய இனம் உண்டு என்று
    வாதாடுவார்கள்.ஆட்சியாளர்கள் சொல்வதுதான் சரித்திரம்.ஆங்கிலேயர்களுக்குப் பிரித்தாளவும், பிறரைப் பின்னுக்குத் தள்ளி தாங்கள் முன்னேற்வும் பல யுக்திகள் தேவைப்பட்டன.அதில் ஒன்றுதான் ஆரியன், திராவிடன்!அவர்களுடைய இந்த சூழ்ச்சியை நன்கு புரிந்துகொண்டவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே!
    என் ஆக்கங்களை நன்கு படித்து விமர்சனம் செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  18. ///ஜப்பான் சுனாமி புரட்டிப் போட்டதில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் கதிர்வீச்சு அபாயம் என்று லைவ் அப்ப்டேட் கேட்டுக் கேட்டு கனத்த இதயத்துக்கு மருந்தாக தங்களின் இந்த வார எழுத்து முயற்சி அமைந்திருப்பதில் மகிழ்ச்சி..///

    தங்க‌ளை மீண்டும் வகுப்பறையில் காண வழிசெய்த ஆண்டவனுக்கு நன்றி.

    சுனாமி, பூகம்பம் சமயம் அங்கு இல்லாமல் இந்தியாவுக்கு உங்க‌ளை அழைத்து வந்த சக்தி எது மைனர்வாள்!? இது ஓர் ஆச்சரியமே! வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete
  19. ///Alasiam G said...கிருஷ்ணன் சார் தங்கள் பெரியம்மாவின் நகைச்சுவை மிகவும் நன்று.///

    பெரியம்மா வாழ்க்கையில் பொருளால் கிடைக்கக்கூடிய எந்தப் பலனையும்
    அனுபவிக்கவில்லை. பிறரை அண்டிப் பிழைக்கும் சூழல்தான். இருந்தாலும் அவர்கள் நகைச்சுவை உணர்வு மங்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

    ReplyDelete
  20. ///////// arumuga nainar said...

    நான் இரண்டு நாட்கள் மூனனால் தான் என் வீட்டில் சொன்னேன் ஜப்பான் minorwall பின்னூட்ட்டம்
    வரவில்லை எப்படியும் திங்கள்கிழமை வரும் என்று உங்கள் பின்னூட்ட்டம் வந்து விட்டது.
    மிக்க மகிழ்ச்சி.
    அன்புடன்
    நைனார்////////


    நன்றி நைனார் அவர்களே..சுனாமி வருவதன் முதல் நாளிரவு இங்கே கன்ஃபிர்ம் டிக்கெட் முழுப்பணமும் செலுத்தி வாங்கி வைத்திருந்தேன்..அதன்படி திரும்ப இன்று ஜப்பானுக்குத் திரும்பிச்செல்லும் நாள்..ஆனால் அன்பு உள்ளங்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறேன்..அபர்த்மென்ட்கான்செல் பண்ணாமல் இங்கே தங்கும் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நஷ்டக்கணக்கை போட்டுப்பார்த்தால் தலை சுற்றுகிறது..சுனாமியால் மொத்தமாகக் காணமல்போனவர்களுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை..

    ReplyDelete
  21. ////////// kmr.krishnan said... சுனாமி, பூகம்பம் சமயம் அங்கு இல்லாமல் இந்தியாவுக்கு உங்க‌ளை அழைத்து வந்த சக்தி எது மைனர்வாள்!? இது ஓர் ஆச்சரியமே! வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு!////////
    மிக்க நன்றி.. கடவுள் இல்லையென்றும் தன்னம்பிக்கை தன் முயற்சி மட்டுமே வழி என்றும் கொள்கை கொண்ட எனக்கு ஒரு மாற்றுக்கருத்தாக தானாக வண்டி ஓட்டுவதற்கும் டிரைவர் வைத்து ஓட்டுவதற்கும் உள்ள வித்தியசசம் போலே ஆராய்ச்சியாகவே இந்தமுறை கடவுளை நம்பி செயல்பட்டுப்பாருங்கள் என்று உண்மையில் நந்தகோபால் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களை அறிமுகப்படுத்தி அவரை வணங்கி வேண்டினால் நிச்சயம் நடக்காத நம்பமுடியாத விஷயங்கள் சாத்தியமாகும் என்று மிகவும் வலியுறுத்தி சொல்லியதன் பேரில் அதன் படி செயல்பட்டு என் மனைவிக்கு இருந்த ஒரு இன்றைய அளவிலேஇந்த துறையில் டோக்யோவிலே உலக முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தினாலேயே சாத்தியப்பட முடியாத ஒரு விஷயம் சாத்தியமானது..
    இது ஸ்ரீ ராகவேந்திரர்பால் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்த வேளையில் ஒரு புது முயற்சியாக இந்த முறை திடீர் பயணமாக அவருடைய வழிகாட்டுதலிலே வேறு ஒரு காரணத்துக்காகவென்று இந்தியா பயணமானேன்..
    வந்த வேலை என்னவோ வெற்றிகரமாக முடியவில்லை என்ற போதிலும் எனக்கென்னவோ என்னை சுனாமி நிலநடுக்கம் மற்றும் கதிரியக்க அபாயத்திலிருந்து இந்தியாவுக்கு இழுத்துவர திட்டமிட்டு ராகவேந்திரர் வேறு ஒரு காரணத்தைக் காட்டி செயலாற்றிவிட்டதாக உணர்கிறேன்.. ஏனென்றால் வேறெந்தக் காரணத்தையும் முன்னிருத்தியிருந்தாலும் நான் கிளம்பியிருக்க மாட்டேன்..
    ஜப்பானில் நாங்கள் இருக்கும்பகுதி புகுஷிமா பிளான்ட் லிருந்து 200 km தொலைவில் உள்ளது..கதிரியக்கம் 1 .222 மைக்ரோ சிவேர்த்ஸ் / hour என்றாக இருந்தது சற்று குறையத் தொடங்கியுள்ளது.. தண்ணீர் பால் கீரை முட்டைகோஸ் ப்ராக்லை என்று சிலவற்றில் கதிரியக்கம் அறியப்பட்டாலும் உண்பதால் உடனடி பாதிப்பு ஒன்றும் இல்லை என சம்பந்தப்பட்ட துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..
    இருந்தாலும் சுத்தமாக கதிரியக்க பாதிப்பு சற்றும் இல்லாத இயற்கை உணவை உண்ணும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பதை நினைத்து ஸ்ரீ ராகவேந்திரரை நன்றியுடன் வணங்குகிறேன்..]

    ReplyDelete
  22. அபர்த்மென்ட்கான்செல் பண்ணாமல் இங்கே தங்கும் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நஷ்டக்கணக்கை போட்டுப்பார்த்தால் தலை சுற்றுகிறது..//

    இதப் படிக்கவே கஷ்டமா இருந்துது. கவலைப்படாதீங்க, கூடிய விரைவில் எல்லாம் சரியாயிடும்.

    ReplyDelete
  23. ஸ்ரீ ராகவேந்திரரை நன்றியுடன் வணங்குகிறேன்//

    ம்ம் ஸ்ரீ ராகவேந்திரர் உங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்கட்டும்!

    ReplyDelete
  24. கணபதி சார்! என் மேல் உள்ள அன்பால் கொஞ்ச‌ம் அதிகமாகவே புகழ்கிறீர்கள்.
    தாங்கள் சொல்லியுள்ள பண்புகளை மேலும் மேம்படுத்த கோமதி அம்பாள் துணை நிற்கட்டும்.

    ReplyDelete
  25. ///ஆகா கிருஷ்ணன் ஐயா இது போதாதா உங்களுடைய நகைச்சுவை உணர்வுக்கு ,, அற்புதம் ... நல்ல படைப்பு ஐயா///

    என்னுடைய எல்லாப் பதிவுகளிலுமே நகைச்சுவை அடி நாதமாக இழையோடும்.
    ஆனால் ஏதாவது ஒரு செய்தி கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகிவிடுவதால் நகைச்சுவையை யாரும் கவனிக்காமல் போய்விடுமாறு அமைந்து வந்தது.அதனால் தான் இந்தப் பதிவினை நகைச் சுவைக்கு மட்டும் எனத் தனியாகப் பதிவிட்டேன்.அப்போதும் கொஞ்சம் சீரியஸ் ஆக சிலது சொல்லி விட்டேன்.போகட்டும்.

    தாங்கள் ஏன் அடுத்த பதிவைத் தரவில்லை, இடைப்பாடியாரே!?

    ReplyDelete
  26. அன்புடன் வணக்கம் திரு ..kmrk,& sri.iyyer...
    அடியேனுக்கு எதோ புதுசாக சங்கீதம் என பட்டம் கொடுத்திருக்கிறார்கள் என மீதுள்ள அதீதமான அன்பின் காரணமாக !!! நான் ஒரு ஞான சூனியம் !!!.சொதி குழம்பு :- சொந்தகாரர்:- திருமதி.!!! உடன் கைவேலை பார்த்தது நான்தான் !!!.""""" என்னத்த இருந்தாலும் " முத்து-- முத்து --"""'", தான் போங்க """

    ReplyDelete
  27. அன்புடன் வணக்கம் திரு மைனர்வாள் ..
    ..""""சுனாமி வருவதன் முதல் நாளிரவு இங்கே கன்ஃபிர்ம் டிக்கெட் முழுப்பணமும் செலுத்தி வாங்கி வைத்திருந்தேன்..அதன்படி திரும்ப இன்று ஜப்பானுக்குத் திரும்பிச்செல்லும் நாள்..ஆனால் அன்பு உள்ளங்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறேன்..அபர்த்மென்ட்கான்செல் பண்ணாமல் இங்கே தங்கும் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நஷ்டக்கணக்கை போட்டுப்பார்த்தால் தலை சுற்றுகிறது..சுனாமியால் மொத்தமாகக் காணமல்போனவர்களுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை.""""
    வகுப்பறையல் பெரிய பெரிய சக மாணாக்கர்கள் எல்லாம் எங்கே எங்கே மைனர்வாள் ??? என தேடும் பொது இறைவன் உங்களை விட்டு விடுவான என்ன?? அதுதான் முன்கூட்டியே இங்கே கொண்டு வந்து விட்டான் ( ஸ்ரீ ராகவேந்த்ரர் ) அவருக்கு நன்றி.!!!...

    ReplyDelete
  28. /// கடவுள் இல்லையென்றும் தன்னம்பிக்கை தன் முயற்சி மட்டுமே வழி என்றும் கொள்கை கொண்ட எனக்கு ஒரு மாற்றுக்கருத்தாக தானாக வண்டி ஓட்டுவதற்கும் டிரைவர் வைத்து ஓட்டுவதற்கும் உள்ள வித்தியசசம் போலே ஆராய்ச்சியாகவே இந்தமுறை கடவுளை நம்பி செயல்பட்டுப்பாருங்கள் என்று உண்மையில் நந்தகோபால் எனக்கு ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களை அறிமுகப்படுத்தி அவரை வணங்கி வேண்டினால் நிச்சயம் நடக்காத நம்பமுடியாத விஷயங்கள் சாத்தியமாகும் என்று மிகவும் வலியுறுத்தி சொல்லியதன் பேரில் அதன் படி செயல்பட்டு என் மனைவிக்கு இருந்த ஒரு இன்றைய அளவிலேஇந்த துறையில் டோக்யோவிலே உலக முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தினாலேயே சாத்தியப்பட முடியாத ஒரு விஷயம் சாத்தியமானது..
    இது ஸ்ரீ ராகவேந்திரர்பால் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்த வேளையில் ஒரு புது முயற்சியாக இந்த முறை திடீர் பயணமாக அவருடைய வழிகாட்டுதலிலே வேறு ஒரு காரணத்துக்காகவென்று இந்தியா பயணமானேன்..///

    பாருங்கள் உங்க‌ளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே ஸ்ரீராகவேந்திரர் செயல் பாட்டது போல் தோன்றுகிறது.எனக்கும் கூட 2006ல் ஏழரைச்சனியும், 6ல் குருவும் என்ற‌ சூழலில், பல விதத் தொல்லைகள். தஞ்சை ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்கு வியாழன் தோறும் சென்று வழிபட்டதில் தொல்லைகள்
    மறைந்தன.

    ReplyDelete
  29. ///தாங்கள் இதுவரைக்கும் சொல்லவே இல்லையே!
    தங்களுக்கு இப்படி ஒரு அசத்தலான திறமை இருக்கு என்று ///

    என் ஆக்கங்களையெல்லாம்(20 உள்ளது) மீள் வாசிப்பு செய்து பாருங்கள் கண்ணன் ஜி!எவ்வளவு இடத்தில் நான் நகைச்சுவையைக் கையாண்டுள்ளேன் என்று புரியும்! உஙளுடைய ஆதரவுக்கு நன்றி கண்ணன் ஜி!

    ஒரு முறை நீங்கள் கேட்டிருந்த சமசப்தமப் பொருத்தத்திற்கு விடை அளித்து இருந்தேனே!அந்தப் பெண் ஜாதகம் அமையவில்லையா?

    ReplyDelete
  30. ///நீங்கள் சொல்வது சரிதான். நான் இப்போதும் நினைத்து நினைத்துச் சிரிக்கும் விஷயங்கள் நிறைய.///
    அப்பாடி! நகைச்சுவை எழுதியாவது உங்க‌ள் பாராட்டைப் பெற வேண்டும் என்று தான் இருந்தேன்.நீங்கள் ஒப்புக் கொண்டதற்கு நன்றி உமாஜி!

    நினைத்து நினைத்து சிரிக்கும் போது, எதற்குச் சிரித்தேன் என்று சொல்ல முடியாத விஷயங்களும் வந்துவிடும். "ஏன் சிரித்தீர்கள் ?" என்று மாமி கேட்டு மிரட்டும் போது எதையாவது சொல்லி சமாளிப்பேன்.நான் வழிவதைப் பார்த்து "பொய்யி பொய்யி புளுகு மூட்டை" என்று கொக்கரிப்பார்கள். மீண்டும் ஒரு
    'ஹி ஹி ஹி...'தான்

    ReplyDelete
  31. ///// என் மனைவிக்கு இருந்த ஒரு இன்றைய அளவிலேஇந்த துறையில் டோக்யோவிலே உலக முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தினாலேயே சாத்தியப்பட முடியாத ஒரு விஷயம் சாத்தியமானது.. /////

    மிகவும் சந்தோசம் நெப்போலியன். வாழ்த்துக்கள். முன்பு ஒருமுறை உங்கள் வாக்குப் பலிக்கட்டும் என்று சொல்லி இருந்தீர்கள்.... அப்புறம் ஒரு முறை... எங்கள் வீட்டிலும் ஒரு சந்தோஷ நிகழ்வு என்றீர்கள்.. அது இதுவாக இருக்க வேண்டும் என்று அன்றே ஆண்டவனிடம் வேண்டினேன்.. ஆண்டவன் அருள் உங்கள் அனைவருக்கும் முழுமையாக என்றும் கிடைக்கும்.

    ////இயற்கை உணவை உண்ணும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருப்பதை நினைத்து ஸ்ரீ ராகவேந்திரரை நன்றியுடன் வணங்குகிறேன் ///

    சற்று யோசிக்க வேண்டாம்... அது தான் அப்படியே பிடித்துக் கொள்ளுங்கள்.. அது மட்டும் போதும்.. எவரு எதுவுமே தேவையில்லை... உங்களின் கடமைகளை மட்டும் செய்து கொண்டு போங்கள்.. ஆனந்தம் நிலைத்து நிற்கும்.

    ///இது ஸ்ரீ ராகவேந்திரர்பால் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்த வேளையில் ஒரு புது முயற்சியாக இந்த முறை திடீர் பயணமாக அவருடைய வழிகாட்டுதலிலே வேறு ஒரு காரணத்துக்காகவென்று இந்தியா பயணமானேன்..
    வந்த வேலை என்னவோ வெற்றிகரமாக முடியவில்லை என்ற போதிலும் எனக்கென்னவோ என்னை சுனாமி நிலநடுக்கம் மற்றும் கதிரியக்க அபாயத்திலிருந்து இந்தியாவுக்கு இழுத்துவர திட்டமிட்டு ராகவேந்திரர் வேறு ஒரு காரணத்தைக் காட்டி செயலாற்றிவிட்டதாக உணர்கிறேன்...

    இப்படித்தான் நேரான பல காரியங்களை நாம் புரிந்து கொள்ள முடியாது..... எல்லாவற்றிற்குள்ளும் நமக்குத் தெரியாத ஒரு சூட்சுமம் இருக்கும் அது அவனன்றி யாரறிவார்... ஆனால் அது தான் இதுவோ என்று நாம் யாவரும் அறிவோம்.... நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் என்றும் சந்தோசத்தில் திளைத்திருக்க மீண்டும் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  32. ///அப்படின்னா உங்காத்துக்கு வந்தா முகமூடி போட்டுண்டுதான் வரணும்///

    அப்பவும் கற்பனை பண்ணி முகத்தை மாற்றுவோம் இல்ல!!

    ஒருமுறை நான் பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பக்கம் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்மணி அமர்ந்து பயணம் செய்தார்கள். நான் மணிக்கட்டை சுழற்றி பயிற்சி செய்தேன்.அதைப்பார்த்து பயந்து போய் அந்தப்பெண் அலறி விட்டாள்.பர்தாவை விலக்கி "என்ன செய்கிறிர்கள்?ஏதோ மந்திரம் போடுகிறீர்களா?"என்று கத்தத் துவங்கிவிட்டாள்.நடத்துனர் வந்து பஞ்சாயத்து வைக்கும்படி ஆகிவிட்டது.

    ReplyDelete
  33. /// avvai7 said...பார்த்தேன் படித்தேன் படித்து சிரித்தேன் மலைத்தேன் இதுவென மலைத்தேன்///

    நன்றி "அவ்வை 7" அவர்களே!அதென்ன 7 வது அவ்வை! யார் மற்ற 6 அவ்வைகளும்? அவ்வை நடராஜன் என்று தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் இருந்தார்.

    சரி,பாட்டி!சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?

    (அட! ஆறிய பவனும் ஆறாதபவனும்;சுட்ட பழம் சுடாத பழம்!...)

    ReplyDelete
  34. /////////Uma said... இதப் படிக்கவே கஷ்டமா இருந்துது. கவலைப்படாதீங்க, கூடிய விரைவில் எல்லாம் சரியாயிடும்.////////

    THANKS S LOT FOR YOUR CONCERN AND WISHES..

    ReplyDelete
  35. பாசக்கார hamaragana , அன்பு வழி காட்டும் KMRK ,என் கதை, கமென்ட் என்ற அளவிலே என்ற அளவிலே பதில் கமென்ட் அடிப்பதுடன் நின்று விடாமல் ஆங்காங்கே சிறிதளவிலே சொல்லி விட்ட என் சுய அனுபவங்களை மனதில் நிறுத்தி அவற்றைக் கோர்வையாக்கி விழைவின்படி நடக்கும் என்று வேண்டி, வாழ்த்தி நெக்குருக வைத்த அன்பு அண்ணன் ஆலாசியம் என அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு {இன்னும் வுட்டா பேசிட்டேயிருப்பேன்..நேரமாகிக் கொண்டிருக்கிறபடியால்(மணி பத்து ஆயிடுச்சு) , தேர்தல் கமிஷன் கெடுபிடி அதிகமிருக்கிறபடியால்} இந்த அளவிலே இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்..நன்றி..வணக்கம்..

    ReplyDelete
  36. ////kmr.krishnan said... என் ஆக்கங்களையெல்லாம்(20 உள்ளது) மீள் வாசிப்பு செய்து பாருங்கள் கண்ணன் ஜி!எவ்வளவு இடத்தில் நான் நகைச்சுவையைக் கையாண்டுள்ளேன் என்று புரியும்!////

    இதை நான் வழிமொழிகிறேன்..
    கண்ணன் அவர்கள்
    20 ஆக்கங்ககையும் படித்து முடித்து அதுகுறித்த உங்கள் ஆய்வுக்கட்டுரையை,
    ஆக்கத்தை ஆசியருக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்..

    ReplyDelete
  37. இந்த அளவிலே இந்த உரையை முடித்துக்கொள்கிறேன்..//

    கொஞ்சம் சோடா குடிச்சுக்கோங்க!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com