மறக்க வேண்டியதும், நினைக்க வேண்டியதும்!
-----------------------------------------------------------------------------
இன்றைய வாரமலரை மொத்தம் 3 கட்டுரைகள் அலங்கரிக்கின்றன. மூத்த மாணவர்களில் ஒருவரின் கட்டுரையும், வெளிநாட்டில் வசிக்கும் இருவரது கட்டுரைகளும் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
"அந்தச் சுவர்களில் என்ன எழுதி இருக்கிறது?"
மதுரைப் பாலத்தை எங்கள் மகிழ்வுந்து(கார்)கடந்து கொண்டிருந்தபோது பின் இருக்கையில் இருந்து அந்தப் பெரியவர் கேட்டார். அது நடந்த ஆண்டு 1986.
பெரியவர் என்றா சொன்னேன்? அவர் பெரியவர் மட்டும் அல்ல.புகழ் பெற்ற மிஷன் மற்றும் மடத்தின் தலைமைப் பதவியைத் தன் 90 வயதுக்குப்பின்னர் அடைந்து சிறப்பாக வழி நடத்தி சமாதி நிலையை அடைந்தவர். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து நமது நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தியவர்.பல தத்துவப் புத்தகங்களை எழுதியவர்.அவர்களுடன் நான் மகிழ்வுந்துப் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தபோது, அவர்கள் மடத்தின் உப தலைவராக இருந்தார்கள்.
நாங்கள் மதுரையில் இருந்து இராஜபாளைத்திற்கு மகிழ்வுந்தில் சென்று கொண்டு இருந்தோம்.இராஜபாளையத்தில் சுழற்சங்க மகாநாட்டைத் துவக்கி வைக்க அவர்களுக்கு அழைப்பு. என்னையும் அங்கே வேறு ஒரு பணி நிமித்தம் அழைத்துச்சென்றார்கள்.மகிழ்வுந்தின் முன் இருக்கையில் நானும், ஒரு இளம் பிரம்மச்சாரியும் நெருக்கியடித்து அமர்ந்து இருக்கிறோம்.பின் இருக்கையில் அவர்கள் தனியாக அமர்ந்து மோன நிலையில் இருப்பது போல் மெளனமாகப் பயணிக்கிறாகள்.
அப்போதுதான், வைகைப் பாலத்தின் மீது செல்லும் போது அந்தக் கேள்வி அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் நடந்தது.அத்துறவிக்குத் தமிழ் தெரியாது.அவருடைய தாய் மொழி மலையாளமாக இருக்கக்கூடும்.
"அந்தச் சுவர்களில் என்ன எழுதி இருக்கிறது?"
அப்போதுதான் நாங்களும் பாலத்தின் கைப்பிடிச்சுவர்களை கவனித்தோம்.
நாத்திகப் பிரசாரச் சொற்கள் காணப்பட்டன.
பிரம்மச்சாரி பதட்டத்துடன் கூறினார்: "அவர்கள் 'கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை' என்று எழுதியிருக்கிரார்கள்"
துறவி கேட்கிறார்:"யார் அவர்கள்? நாயக்கரின் கட்சியினரா?"
(இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.அக்காலத்தில் தந்தைப் பெரியாரைக் குறிப்பிடும் போது நாயக்கர் என்று குறிப்பிடும் வழக்கம் புழக்கத்தில் இருந்தது. தவறாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.திசை திருப்பும் படி எதுவும் விம்ர்சிக்க வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் கொள்கிறேன்)
"ஆம்! சுவாமிஜி!"
"வேறு என்ன எழுதியிருக்கிறது?"
நான் கூறினேன்: “கடவுளை மற! மனிதனை நினை!”
"ஓ! மனிதனை நினைக்க ஏன் கடவுளை மறக்க வேண்டும்?" என்று சொல்லிவிட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார் துறவி!
பயணம் தொடர்ந்தது. சற்று நேரம் கழித்துத் துறவி கூறினார்:
"நாயக்கருடன் நாம் ஐம்பது சதம் ஒத்துப் போகிறோம். நம் கொள்கை கடவுளை நினை; மனிதனை நினை."
பயணம் மேலும் தொடர்ந்தது. தியானம் போலத் தோன்றினாலும் துறவி இந்தக் கருத்தையே தியானம் செய்து வருவது போலத் தோன்றியது.
துறவி தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறது போலப் பேசுகிறார்:
"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் தானே இருக்கிறார்! ஆகவே மனிதனை நினைத்தால், கடவுளை நினைப்பது போலத்தானே!"
மகிழ்வுந்து வேகம் பிடிக்கிறது.துறவியின் உள்ளமும் கூட வேகம், விவேகம் இரண்டும் பெற்றுப் பயணிக்கிறது.
"நமது சுவாமிஜி (விவேகானந்தர்) நமக்குக் கூறினார், தரித்ர தேவோ பவ!மூர்க தேவோ பவ! நர சேவா, நாராயண சேவா!"
"ஏழையான மனிதக் கடவுளை வணங்கு! அறிவிலியான மனிதக் கடவுளை வணங்கு! மனிதனுக்குச் செய்யும் சேவையே மாதவனுக்குச் செய்யும் சேவை"
துறவி தியானத்தில் ஆழ்ந்து விட்டார். மெளனமாகப் பயணித்தோம்.
எதிர்ப்படும் மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் கடவுளைப் பார்ப்பது போல பிரமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு அப்படித் தோன்றியது.
வாழ்க்கைப் போராட்டத்தில் தொடர்ந்து அக்கொள்கையைக் கடைப்பிடிக்க முடியா விட்டாலும், அவ்வப் போது நினைவு படுத்திக்கொண்டு நரசேவை செய்வேன்.
தொடர்ந்த சேவையாக ஏதாவது ஒன்றினை என் மறைவுக்குப் முன்னர் நிறுவ வேண்டும் என்று ஆவல்.
நடப்பதெல்லம் நம் கையிலேயா இருக்கிறது?
ஆகட்டும் பார்க்கலாம்!
- ஆக்கம். K.முத்துராமகிருஷ்ணன் (KMRK), தஞ்சாவூர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
----------------------------------------------------------------------------------
ஆக்கம் எண் 2
தலைப்பு: பாலில் செய்த பலகாரம்
தலைப்பை பார்த்துவிட்டு, ஏதோ சமையலைப்பற்றிய குறிப்பு என்று யாரும் நினைக்க வேண்டாம். முழுமையாகப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்
மேற்குமலைத் தொடர்ச்சி அடிவாரம். ஒரு சின்ன கிராமம். அடியேனின் ஊர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்ப் பணி செய்பவர்கள். காலம் 1983 ஆம் ஆண்டு. அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். நாங்கள் அண்ணன் தம்பி என்று மூன்று பேர்கள். நான் கடைக் குட்டி.
என் அன்னை வழித் தாத்தாவும் அதே கிராமத்தில்தான் இருந்தார். வயது அறுபதிற்கும் மேலாக இருக்கும். எப்பொழுது பார்த்தாலும் ஊர்ப் பிள்ளையார் கோவில் திண்ணையில், தன் வயதொத்தவர்களுடன் அமர்ந்து, தெருவில் போகிறவர்களைப் பிடித்து நக்கலடிக்கத்துவங்கி விடுவார். அதில் ஒரு சந்தோஷம் அவருக்கு. ஒரு நாள் நான் சிக்கிக் கொண்டு விட்டேன்.
தினத்தந்தி நாளிதழைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். நானும் செய்திகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே வந்தேன். அவர் மேலபடி, கீழேபடி, அந்தப்பக்கம் படின்னு அறிவுறுத்திக்கொண்டே இருந்தார்.
அப்படிப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு செய்தியின் தலைப்பு வாசகம் என்னைச் சற்றுக் குழப்பியது. எழுத்துக் கூட்டி மனதிற்குள் வாசிக்க முயன்றேன்.
"பா..லி..... ப..ல..கா...ர..ம்" என்று மனதிற்குள் கூட்டிச் சொல்லிக்கொண்டவன், அதுவரை கேள்விப்படாதாக இருக்கிறதே என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
பத்திரிக்கை, தவறாக எழுத்துப்பிழைகளோடு அச்சிட்டு விட்டது என்று சட்டென்று மனதிற்குள் தோன்ற பிழையுள்ள வார்த்தைகளைத் திருத்தி "பாலில் பலகாரம் செய்து விட்டனர்" என்று அந்தச் செய்தியை வாசித்து விட்டேன். தாத்தாவும் அவரோட உடனிருந்த நண்பர்களும் பயங்கரமாக சிரித்து விட்டார்கள். ஒரு நிமிடம் நானும் ஆடிப்போய்விட்டேன்.
தாத்தா கோபமாக, "யாருடா ஒனக்கு தமிழ் சொல்லிக்குடுத்த வாத்தியாரு?.... நீயெல்லாம் என்னதான் பள்ளிக் கூடத்துல படிச்சயோன்னு தெரியல" என்று சொல்லிட்டு மறுபடியும் அந்தச் செய்தியை படிக்க சொன்னாரு. நானும் தட்டுத்தடுமாறி அந்த செய்தியை வாசித்துவிட்டு, தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடி வந்துவிட்டேன்.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரையிலும் தினத்தந்தி பத்திரிக்கை தவறாகவே அந்த சொல்லை அச்சிட்டு விட்டது என நினைத்திருந்தேன். தாத்தாவுக்கு என்ன தெரியுமுன்னு அவர்மேல் கோபமாகவும் இருந்தேன். ஆனால், கல்லூரியில் படித்த காலத்தில்தான் அது சரியான வார்த்தைதான் என்பது தெரிய வந்தது.
அன்று வாசித்து நான் மட்டிக்கொண்டு விழித்த அந்தச் செய்தி இதுதான்:
"ஈரோட்டில் 10 வயது சிறுமியைப் பாலில் பலகாரம் செய்து விட்டனர். குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு"
உண்மையான செய்தி உங்களுக்கே தெரிந்திருக்கும்.
"ஈரோட்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு"
அறியாப் பருவம் அது, அறியாமல் இருந்தது நான்தான் என்பதும் புரிந்துவிட்டது. இடையில் ஐந்தாண்டுகளாக மனதில் தங்கியிருந்த கோபத்தை மனதைவிட்டு வெளியேற்றினேன்.
தமிழ் வாழ்க! தாத்தாக்களும் வாழ்க!
ஆக்கம்: ஜவஹர் கோவிந்தராஜ், சிட்னி, ஆஸ்ட்ரேலியா
++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
--------------------------------------------------------
ஆக்கம் எண் 3
எப்படிப் பிச்சை இடவேண்டும்?
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் நான், திடீர் மற்றும் தூரத்து சொந்தங்களால் எப்படி அவதியுற நேர்ததது என்பதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இதை எழுதத் தூண்டுகோலாக இருந்தது எது தெரியுமா,? வகுப்பறை பக்திமலரில் வந்த 'இறைவியின் செயல் என்றாகிவிட்ட பின்பு மர்மம் ஏது' என்னும் கட்டுரை.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வு ஒன்றை வைத்து எழுதப்பெற்ற கதை அது என்றால், இது தற்காலக் கதை.
சென்ற ஆண்டு ஒரு நாள் மதியம். கைபேசி கிணு கிணுக்க எடுத்துப் பார்த்தால், சென்னை எண் ஒன்றிலிருந்து அழைப்பு.
எடுத்துப் பேசினேன். பேசியவர் தன்னை இன்னாரென்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் சொல்லவந்த செய்தியைச் சொன்னார். அவருடைய மகன் மேற்படிப்பிற்காக இங்கிலாந்திற்கு வரவுள்ளதாகவும், அவன் படிக்கவுள்ள கல்லூரி என் வீட்டிற்கு அருகில் இருப்பதாகவும், கூறியவர், தொடர்ந்து சொன்னார்:
“அவனை ஒரு வாரம் முன்னதாகவே அனுப்பி வைக்கிறோம். அங்கே உள்ள நடைமுறை வாழ்கையைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்”
பேச்சு வேண்டுகோளாக இல்லை. உத்தரவாக இருந்தது.
சரி என்றேன். சனி வந்து பிடிக்கப்போவது தெரியாமல்!
என் கணவரும் சம்மதித்தார். “ஆஹா!! அதற்கென்ன செய்தால் போயிற்று!”
சரி என்று சொன்ன மறு நிமிடத்திலிருந்து எனக்கு நாலா பக்கங்களில் இருந்தும் தொல்லை பேசி அழைப்புகள். நேரம் காலம் இல்லாமல் அவருடைய மூத்த சகோதரி, அவருடைய அன்னை மற்றும் அவருடைய உறவினர் களிடமிருந்து எல்லாம் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. நானும் மரியாதை நிமித்தமாகப் பேசிவிட்டு வைத்துவிடுவேன். என்மேல் அக்கறை கொண்டவர்கள் போலப் பேசியவர்கள் எல்லாம் பேசினார்கள்.
எதையும் யாரிடமும் எதிர்பார்க்காத நான் “அம்மாவைப் போல நினைத்துக் கொள்:” என்ற அவர்களுடைய ஜாலவார்த்தைக் குழியிலும் விழுந்தேன்.
தாயற்ற நான். அவர்களின் உள்நோக்கம் அறியாமல் அவர்களுடைய தொல்லை பேசிகளுக்கு மதிப்பும் கொடுத்தேன்.
தேவமகன் வந்திறங்கினான்.
அவனை அழைத்து வந்து, கவனித்து அவனுடைய பெற்றோருக்கு கொடுத்த வாக்கின்படி நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொடுத்து (முதல் வெளிநாட்டு பயணமாம்) பத்து நாட்கள் வைத்திருந்து, பார்த்துப் பார்த்து அவனுக்கு வேண்டியவற்றைச் செய்து கல்லூரி வளாகத்தில் இருந்த விடுதியில் (ஹொஸ்டலில்) கொண்டுபோய் விட்டேன்.
மறுநாளே திரும்பி வந்து விட்டான்.
வந்தவன் இன்னும் பாடம் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னான். ஒரு வாரம் இருந்துவிட்டுப் பிறகு போகிறேன் என்றும் சொன்னான். இருந்த சமயத்தில் நம் கவனம் எங்கும் சிதறி விடாதபடி தன் மேலேயே இருக்கும்படியும் பார்த்துக் கொண்டான். சொந்த அலுவல்களை மறந்து, கணவரையும், மகளையும் மறந்து அவன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தேன்
தொலைபேசி மூலம் வந்த உத்தரவுகளை நிறைவேற்றுவதே என் வேலையாக இருந்தது,
அந்த சமயத்தில் என்னுடைய போதாத நேரம், என் தந்தையின் உடல்நிலை மோசமாக உள்ள செய்தியும் அவருக்கு உட்னே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்ற செய்தியும் வர ஊருக்குக் கிளம்பும்படி ஆயிற்று.
மகளையும், கணவரையும் விட்டுவிட்டுத் தனியாகப் புறப்ப்ட்டுச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்ற வேளையில், “உங்கள் தந்தையை உங்கள் சகோதரர்கள் பார்த்து கொள்ளுவார்களே. நீங்கள் அங்கேயே இருந்து தீபாவளியை எங்கள் மகனோடு கொண்டாடுங்கள்” என்று உத்தரவும் வந்தது.
எப்படிச் சொன்னார்கள் தெரியுமா? “இந்தக் காலத்தில் பைபாஸ் சர்ஜெரி ரொம்ப சாதாரணம் அதற்காக நீங்கள் இவ்வளவு தூரம் வரவேண்டுமா? நாங்கள் பார்த்துகொள்கிறோம்”
என் மரமண்டையில் மணியடித்தது.
அவர்கள் பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், நம் தந்தைதான் நமக்கு முக்கியம் என்று கிளம்பினேன்.
தேவமகன், "நான் வேண்டுமென்றால் இங்கேயே தங்கி உங்கள் மகளைப் பார்த்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்டான்.
அவன் வேலையை அவன் பார்த்து கொள்வதே பெரியது. அதில் அடுத்தவர்க்கு என்ன அவனுடைய உபச்சாரம் என்று நினைத்தவள், “இல்லை நீ ஹொஸ்டல் சென்று விடு” என்று சொன்னேன், சரி என்று முகத்தை தூக்கி வைத்துகொண்டு போனான்.
சென்னையில் வந்து இறங்கினேன் பதின்மூன்று மணிநேரம் பிரயாணம் செய்த களைப்பும் உடன் வந்தது.
தந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குப் போகும் முன்பு, ஒரு 20 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என்று நினைத்தபோது, தேவமகன் வீட்டாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல். என்னை பார்க்க வரப்போவதாகச் சொன்னார்கள்.
என் வீட்டாரிடமிருந்து எனக்குத் திட்டுத்தான் மிஞ்சியது. என் மூத்த சகோதரர் என்னைக் கடிந்து கொண்டார். மருத்துவமனைக்குச் சென்று திரும்பினோம்.
இரண்டு மணி நேரத்தில், தீபாவளிக்குத் துணிமணிகளை வாங்கி விடலாம் வா பின்னர் நேரம் கிடைக்காது என்று என் சகோதரர் சொல்லக் கடைக்குக் கிளம்பிச் சென்றோம். அரை மணி கூட ஆயிருக்காது. தேவமகன் குடும்பத்தார் எங்கள் வீட்டு வாசலில் நிற்பதாகச் சொன்னார்கள்.
துணிமணிகளை வாங்காமல், அடித்துப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினோம்.
தேவமகனின் பெற்றோர்கள் பேசினார்கள் பாருங்கள். அடடா, அடைமழை தோற்றுப்போகும்.
அத்தனையும் தங்களிள் பிள்ளையைப் பற்றிய புராணம்.
ஒரே பிள்ளை; ஓராயிரம் பக்கப் புராணம்
“மருத்துவமனை செல்ல நேரமாகிவிட்டது” என்று நாங்கள் சொல்லியும், அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து பேசினார்கள்.
அவர்களும், அவர் உடன் வந்த அவர்களுடைய உறவினர்களும் அந்த தேவமகனின் பெயரை ராமஜெபம் போன்று செபிக்க ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில், “திரும்பச் செல்லும்போது நீங்கள் ஏர் இந்தியா விமானத்தில்தானே போகிறீர்கள் நாங்கள் எங்கள் மகனுக்குச் சில சாமன்களைத் தருகிறோம் கொண்டு செல்லுங்கள்” என்ற உத்தரவையும் போட்டார்கள்.
“46 கிலோ அளவுதான் அனுமதிப்பார்கள். என்னுடைய உடைமைகளும் இருக்கின்றனவே” என்றதற்கு “சரி நாங்கள் தரும் சாமன்களின் அளவு 23 கிலோவிற்குள் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்கிறோம். எடுத்துச் செல்லுங்கள்” என்றார்கள். என்னை வாயைத் திறக்க விடவில்லை.
தொடர்ந்து சொன்னார்கள், “உங்களுகென்ன வாங்க இங்கே என்ன இருக்கிறது? ஏது நேரம்?”
என்னைத் திகைக்க வைத்துவிட்டு, இறுதியாகப் புரப்பட்டுச் சென்று விட்டார்கள். இல்லை பறந்து சென்று விடார்கள்.
நான் போன் செய்து என்னால் அவ்வளவு எடுத்து போக முடியாது என்று கட் அண்ட் ரைட் ஆகச் சொன்னேன் “அப்படியா?” என்று அவர்களுடைய சுருதி இறங்கியது. “சரி புத்தகங்களை மட்டுமாவது எடுத்துசெல்லுங்கள்” என்றார்கள். நானும் சரி என்றேன்,
புத்தகம்தானே என்று. பார்த்தால், வந்து இறங்கியது பாருங்கள் அப்பப்பா! 15 கிலோ அளவில் புத்தகங்கள்.
ஒருவழியாக, விமானம் ஏறியவள், இங்கே வந்து இறங்கினேன்.
விமான நிலையத்தில், கிரீன் சேனல் வழியாக நுழைந்தேன். என்னைத் தடுத்த விமான நிலைய அதிகாரிகள், பையைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். 'கை, கால்களில் நடுக்கம். மனதில் பதற்றம்
புத்தகங்களை எடுத்துப் பார்த்தார்கள். முதல் பக்கத்தைத் திறந்து பார்த்தார்கள். அவற்றில் இந்த புத்தகத்தை இந்தியாவை தவிர வேறு எங்கும் உபயோகிக்க கூடாது என்றும், மீறினால் குற்றம் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. அனைத்து புத்தகமும் அம்பேல்.
என் கணவருக்கு வந்ததே பாருங்கள் கோபம்!
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பார்களே, அது அரங்கேறியது!
அன்று, அதிலிருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டேன்!.
பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும்.
ஆக்கம்: திருமதி. மலர்விழி, இங்கிலாந்து
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மீண்டும் எனக்கு வாய்ப்புக் கொடுத்து என் ஆக்கத்தை வெளியிட்ட ஐயாவுக்கு
ReplyDeleteஎன் மனம் ஆர்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிட்னி ஜவஹர் அவர்களின் ஆக்கம் கண்களில் நீர் சுரக்கும் அளவுக்குச் சிரிக்க வைத்தது.உண்மையாகவே நல்ல நகைச்சுவை. தருமர் என்ற தமிழ்ப்பெயரை ஆங்கிலத்தில் எழுதியதை, தமிழ்தெரியாத ஆங்கிலப் பேராசிரியை "தாரு மாறு"
என்று வாசித்து வகுப்பில் 'கொல்' என்ற சிரிப்பு அலைகளை ஏற்படுத்தினார்.
சிட்னி ஜவாஹருக்கு வாழ்த்துக்கள்.வடிவேலு, விவேக் இதைப் படித்தால் கட்டாயம் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி ஆக்கி விடுவார்கள்.
லண்டன் மலர்விழியின் ஆக்கம் நல்ல அநுபவம். எனக்கும் ஒரு மகள் பாஸ்டனிலும், ஒரு மகள் லண்டனிலும் இருப்பதால் அவருடைய சிரமங்களை நன்கு புரிந்து கொள்கிறேன்.உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கும் வழக்கம் எனக்கு நன்றாக அத்துப்படி.எவ்வளவு பட்டாலும் இன்னும் உதவிசெய்ய இறங்கி சிக்கலில் மாட்டுவது தொடர்கிறது.'உங்களைத் திருத்த முடியாது'என்று என் ம்னைவி தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்.சகோதரி மலர்விழிக்குப் பாராட்டுக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
KMRK சார் ஆக்கம் தொடர்பாக:
ReplyDeleteநாத்திகத்து வசனங்கள் எவ்வளவோ இருந்தாலும் 'பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?' என்ற வாசகம் மிகவும் நகைப்பு உட்படுத்திய, நினைவில் பதிந்த வாசகம்..
'ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?சிலரின் பிறப்பு அறிவுக்குப் பொருந்துமா?' என்ற வாசகம் நடக்கவே வாய்ப்பில்லாத, ஆனால் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகளை தகர்க்கும்..மூட நம்பிக்கைதானோ? என்ற கேள்வியைத் தூண்டும்..
'இல்லவே இல்லை..' என்பவர்களின் இத்தகைய கேள்விகளுக்கு 'இருக்கு..இருக்கு..'என்பவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறுவது
இவ்விதமான அடிப்படை நம்பிக்கைகள் அடிப்படையில் நமது இந்த மானிட சமுதாயம் கட்டப்பட்டிருப்பதால் 'அவரவர் விருப்பம்..கொள்கைத் திணிவு வேண்டாம்' என்ற அளவில் தனிமனிதனாக மனக் குழப்பங்களிலிருந்து விடுபடுவதுதான் தன்னம்பிக்கை கொண்டு வாழ்வைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்குவோருக்கு உரிய வழியாக இருக்கும்..
இந்த டாப்பிக்கை வைத்து குளிர் காயும், வாழ்வியல் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இருதரப்பினரும் இந்த சமுதாயத்தில் இருப்பதால் இந்த அளவிலே சிந்தனைஒட்டத்தை நிறுத்த வேண்டியதுதான்..
வணக்கம் ஐயா!
ReplyDeleteமுக்கனியில் சாறு எடுத்து செய்த " பழனி பஞ்சாமிர்தம்!" போல இருந்ததது இன்றைய படைப்புகள் அனைத்தும்.
ஐயா
ReplyDeleteஅன்புள்ள சகோதரி!திருமதி. மலர்விழி
தங்களின் கட்டுரையில் எமக்க தெரிந்தது என்பதனை விட மனதை மிகவும் வருடியது என்று சொன்னாள்
அந்நிய தேசம் சென்றும் ஆதரவிஅற்று
வரும் நாட்டு காரர்களுக்கு உதவ வேண்டும் என்ற தங்களுடன்
"உடன் பிறந்த உதவி மனப்பான்மை!"
தான்.
ஒரு சிலர் செய்யும் சுத்த சுய நலத்தால் நாம் மற்றவருக்கு செய்ய நினைக்கும் பொது நல மனப்பான்மை குணம் நம்மில் இருந்து விடை பெற செய்து விடுகின்றனர் என்பது தான் மிகவும் பரிதாபதீர்க்கு உள்ள இன்றைய நிலைமை.
ஐயா
ReplyDeleteஅன்புள்ள சகோதரி!
திருமதி. மலர்விழி அவர்களுக்கு தாங்கள் நடந்ததை நினைத்து வருந்த வேண்டாம்.
தாங்கள் அனுபவித்ததை போல நிறைய நிகல்விகள் உண்டு அவற்றுள் சில .
௧. சிறு வயது முதல் பிராத்தனையுடன் கூடிய லட்சியத்தை அடைய வேண்டாம்.
௨. கல்யாணம் காட்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்
௩. உடன் பிறப்புகளுக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்.
௪. தனது வேலை, ஜோலியை ஒன்றும் செய்ய வேண்டாம்.
௫. சொத்து சுகம் எதுவும் தேட வேண்டாம்.
௬. பாயில் இருந்து கூட இல்லை, கட்டிலில் இருந்து விழுந்தவன் மீண்டும் கட்டுலுக்கு வந்து விட கூடாது.
பாயில் அல்லாமல் மண்ணோடு மண்ணாகி போகிவிட வேண்டும்.
இன்னும் எத்தனையோ எத்தனையோ கூறலாம் நண்பர்கள், உறவினர்கள், நல் உள்ளம் படைத்த மனிதர்கள், செல்வந்தர்கள் , பொது நலவாதிகள் என்ற போர்வையில் மறைந்து இருக்கும் சுயநலவாதிகள் பற்றி அன்பு சகோதரி.
அடுத்தவருக்கு உதவிகின்றவர் என்ற நமது
" மனப்பான்மையை தெரிந்து கொண்டு!"
அறுத்த காயதீர்க்கு சுண்ணாம்பு தராத சின்ன புத்தி படைத்த சின்னபையன்கள்
எல்லாம் கேட்கும் பணத்தை, பொருளை, தகுதி இல்லாத வேலையை வாங்கி கொடுத்தால் நல்லவர்கள். இல்லை என்றால் "உனது உறவே!" வேண்டாம் என்று கூறும் சுத்த சுயநல வாதிகள் நிரந்த உலகம்.
மேலே ஒருவன் உள்ளான் அவனை நினைத்து ஆக வேண்டிய பாருங்கள் உடன்பிறவா சகோதரியே!
நண்பர் கே.எம்.ஆர்.அவர்களின் கட்டுரை நிகழ்ச்சி பற்றி நான் அவரிடமிருந்தே பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருக்கிறேன். அவர் பூஜ்ய ரங்கநாதனந்தா சுவாமிஜி அவர்கள். இராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர். அவர் சொன்ன கருத்து மனிதனுள் இருப்பதும் கடவுள்தானே என்பது. ஆம், அத்வைத சிந்தனை இதைத்தான் கூறுகிறது. மகாகவி பாரதியும் இதுகுறித்துக் கூறும் வாக்கினைப் பாருங்கள். "வானத்தில் வேலி போடலாமா? இராமகிருஷ்ண முனி கேட்கிறார்." இந்த கேள்வியை அப்படியே விட்டுவிட்டு மேற்கொண்டு கவிதை வரிகளை எழுதியபின், இறுதியில் பதிலளிக்கிறார். "ஆம்! வானத்தில் வேலியிட முடியும். பூமியில் இருப்பதும் வானம் தானே!" இந்த சிந்தனை வந்தவற்கு பேதங்கள் கிடையாது. அறியாமை, குறுகிய நோக்கம் கொண்டவர்களுக்குத்தான் பேதங்கள் எல்லாம். அடுத்த கட்டுரை சிறப்பு. சின்ன வயதில் நமக்குப் புரியாத விஷயங்களை இலை மறைவு காய் மறைவாக பெரியவர்கள் பேசுவார்கள். நமக்கு செக்ஸ் கல்வி இல்லாத நிலையில் பெரியவர்கள்தான் நமக்கு ஆசிரியர்கள். நல்ல பதிவு. நிறைவான பகுதியில் அந்தப் பெண்ணின் அனுபவம் கொடுமையானது. மேலோட்டமாக பிறருக்கு நன்மை செய்யவேண்டுமென்கிற குணம் படைத்த நல்லவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் ஏராளமாக வரும். வாழ்க்கையில் மனிதர்களைப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள். இனியாவது மனிதர்களை புரிந்து கொள்ளட்டும்.
ReplyDeleteஎன்மேலும்,கடவுள்களின் மீதும்,துறவிகளின் மீதும் கோபித்துக்கொண்டு, மற்ற ஆக்கங்களிப்பற்றி ஒன்றும் சொல்லாமல் போகலாமா மைனர்?
ReplyDeleteநீங்கள் சின்ன செட்டுக்குப் பிரதிநிதி அல்லவா?
சென்கோவியின் வலைப்பூ பார்த்தீர்களா? உங்களுக்குப் பிடிக்கக் கூடிய மாதிரி பதிவுகள் போடுகிறார்."அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரைப் பயணமும்" என்ற பதிவினையும், அங்கே என் பின்னூட்டத்தையும் படித்துப் பாருங்கள் மைனர்.
http://sengovi.blogspot.com
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
இன்றைய பதிவுகளில் ஆஸ்த்ரேலியா ஜவஹர் அவர்களின் அறியாப்பருவ
காமெடி சூப்பர்.
திருமதி. மலர்விழி அவர்களின் பரிதாபகரமான அனுபவம் , பிறருக்கு
உதவி செய்யும் எண்ணம் கொண்ட பலருக்கும் ஏற்படுகிறது.
ஆகவே பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு
நாம் தள்ளப்படுகிறோம்.
மிகப்பெரிய ஆன்மீகப் பெரியவருடன் சேர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பை
பெற்றுள்ள திரு.KMRK. அவ்ர்களும் நம் வகுப்பறையில் படிப்பது சக மாணவர்
களாகிய நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்தானே.
அன்புடன், அரசு.
மூன்று பாடங்களும் அலுப்பே இல்லாமல் கவனிக்க வைத்தன.
ReplyDelete//////////////////
ReplyDeletekmr.krishnan said...
என்மேலும்,கடவுள்களின் மீதும்,துறவிகளின் மீதும் கோபித்துக்கொண்டு, மற்ற ஆக்கங்களிப்பற்றி ஒன்றும் சொல்லாமல் போகலாமா மைனர்?\\\\\\\\\\\\\\\\\\\
கோபம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை சார்..ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பதை உணர்ந்தவன் என்பதால் இப்படி விஷயங்களில் நான் கோபப்படுவதே இல்லை..
எல்லோர் ஆக்கங்களையும் காலையிலேயே படித்தேன்..தங்களின் ஆக்கம் கொஞ்சம் நெருடல் உள்ளது என்பதால் உடனே எழுந்த மன ஓட்டத்தை உடனே பதிவு செய்தேன்..கொஞ்சம் வெளியில் வேலைகள் இருந்து சென்று விட்டேன்..இப்போதுதான் வீடு திரும்பினேன்..அதனால்தான் லேட்..\\\\\\\\\\\\
ஜவஹர் பாலில் பலகாரம் செய்த கதை செம சிரிப்பை வரவழைத்தது..
ReplyDeleteஜவஹர் contextualஆ வாசித்த வாக்கியம் முழுதும் எப்படி பிரசுரிக்கப் பட்டிருந்தது என்பதை விளக்கி அவர் எப்படிப் வாசித்தார் என்று
பின்வருமாறு விளக்கியிருந்தார்.
'அன்று வாசித்து நான் மட்டிக்கொண்டு விழித்த அந்தச் செய்தி இதுதான்:
"ஈரோட்டில் 10 வயது சிறுமியைப் பாலில் பலகாரம் செய்து விட்டனர். குற்றவாளிகளுக்கு காவல்துறை வலைவீச்சு" '
என்று இந்த முழு வாக்கியத்தையும் ஆரம்பத்தில் சொல்லாமல் பின்னரே சொல்லியிருந்தார்.. துவக்கத்தில் "பாலில் பலகாரம் செய்து விட்டனர்" என்று வாசித்ததாக மட்டும் சொல்லிச் சென்றதால் 'ஒருவேளை பால் பணியாரமாக இருக்குமோ?' என்று தோன்றியது..context ட்டை suspense ஆகவைத்திருந்தார்.படிக்க சுவாரஸ்யமாக இருந்தது..
சொல்லவந்ததை எப்படிச் சொல்லவேண்டும், எப்போது எதை சொல்லவேண்டும் என்ற sequence நுணுக்கம் ஜவஹருக்கு வசப் பட்டிருக்கிறது..
தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தை சற்றும் உற்சாகம் குறையாமல் சரியாக எல்லோருக்கும் கொண்டு சேர்த்திட வேண்டும் என்றும் அவர் எடுத்திருக்கும் முயற்சி பலனளித்திருக்கிறது..
லண்டன் மலர்விழி அவர்களின் எழுத்து பல இடங்களில் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது..விமர்சிக்கத் துவங்கினால் அவருக்கும் மனத்தாக்கம் ஏற்படலாம் என்று நினைக்கிறேன்..
ReplyDeleteஇந்த வகையில் மனத்தாக்கத்தை ஒருவரின் எழுத்து எற்படுத்துமானாலே அது அவரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றிதான்..இன்னும் பலர் படித்துவிட்டு ஏறுக்கு மாறான விமர்சனங்களைத் தவிர்ப்பது நலமோ என்று கூட நினைத்திருக்கலாம்..
அனுபவித்தவரின் தாக்கம்
எழுத்தில் தெறி(க்)கிறது...
ஆனாலும் 'பிச்சையிடுகிறேன்' என்ற மனோபாவத்தினை முன்பே சொல்லியிருந்தால்
அந்தப் பையனும், பையனைச் சார்ந்தவர்களும் இவர்களிடமிருந்து விலகியிருப்பார்களோ என்றே தோன்றுகிறது..
இவர்களும் இப்படி அவஸ்தையில் இருந்து தப்பித்திருக்கலாம்.
முகத்துக்கு முன்னால் பட்டவர்த்தனமாக,
தோன்றியதை அப்படியே சொல்லிவிடுவது பல தர்மசங்கடங்களைத் தவிர்க்கும்
என்பதே எனக்கு சரியாகப் படுகிறது..
இப்படிச் சொல்ல தயங்கி முகஸ்துதி பார்ப்பவர்கள் அவஸ்தைப் படுவதில் ஆச்சரியம் இல்லை..
///////kmr.krishnan said... தொடர்ந்த சேவையாக ஏதாவது ஒன்றினை என் மறைவுக்குப் முன்னர் நிறுவ வேண்டும் என்று ஆவல். \\\\\\\\\\\\\
ReplyDeleteதங்களின் இந்த விழைவில் என் பங்களிப்பு எந்த வகையிலாவது தங்களுக்கு உதவுமானால் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..
லண்டன் மலர்விழியின் பதிவு குறித்து சில மேலதிகத் தகவல்கள். வெளிநாட்டுக்குப் பிள்ளைகளைப் படிக்க அனுப்பும் போது அங்கு தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து அவர்களுடைய உதவியைப் பெறுவது என்பது சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். ஆனால் தங்கள் சுயநலம் தான் பெரிது என்று உதவி செய்தவரை ஆபத்தில் சிக்க வைப்பது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். நம் நாட்டு கல்லூரி புத்தகங்களின் அட்டையில் சிவப்பு நிறத்தில் "இந்த புத்தகங்கள் இந்தியாவுக்கு வெளியே வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்வது குற்றம்" என்று எழுதப்பட்டிருக்கிறது. கொட்டை எழுத்தில் உள்ள இந்த அறிவிப்பைப் படித்தோ அல்லது படிக்காதது போல பாவனை செய்து கொண்டோ, உதவி செய்ய வந்த ஒருவரை அதுவும் லண்டனிலிருந்து அவசர காரியமாக வந்து திரும்பும் ஒரு பெண்ணை கஸ்டம்ஸ் செக்கில் மாட்டிவிடுவது மிகப் பெரிய குற்றம். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தன்னந்தனியாளாகத் தனது மூட்டை முடிச்சுகள் திறக்கப்பட்டு புத்தகங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, குற்றம் சுமத்தும் போது, அந்தப் பெண்ணின் நிலைமையை நினைக்க வருத்தம்தான் ஏற்படுகிறது. உதவி செய்ய வந்தவர்களை இப்படி நட்டாற்றில் இறக்கி கழுத்தை அறுப்பதுதான் தமிழனின் பண்பாடா. சற்று சிந்திப்போம்.
ReplyDeleteமுன்று முத்துகள் மிகவும் அருமை.
ReplyDeleteதிருவாளர் கிருஷ்ணன் சாரின் மலரும் நினைவுகளில் ஒரு மகத்தான நினைவு வகுப்பறையில் மணம் வீசியது ஒரு சுகந்தம்.
ReplyDeleteதிருவாளர் ஜவகர் அவர்களின் நினைவுகள் சிரிக்க வைத்ததோடு எனது தொடக்கப் பள்ளி ஆசிரியரையும் ஞாபகப் படுத்தியது....
சகோதிரி மலர்விழி அவர்களின் கட்டுரை உண்மையில் மிகவும் சங்கடத்திற்கு கண்டனத்திற்கும் உரியதும் கூட....இப்படியும் மனிதர்களா என்று சொல்ல முடியாது காரணம் இப்படித்தான் பலரும் இன்று இருக்கிறார்கள்.... கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனத் தூக்கி மணவறையில் வை என்று... சுயநல விசம்பிகள்....உங்களின் தாட்சணியம் தான் உங்களை இவ்வளவு சிரமத்திற்கு ஆளாக்கி விட்டது என்று நினைக்கிறேன்.....
உங்கள் நல்ல மனதை புரிந்துக்கொள்ளாத இங்கிதம் இல்லாத மனிதர்கள்....... நல்ல வேலையாக மாணவவிடுதியில் நீங்கள் வீட்டில் இல்லாதபோது அனுமதிக்காது திருப்பி அனுப்பியதும்... உங்கள் தந்தையாரின் இதய அறுவை சிகிச்சைக்கு வந்ததும்..... நீங்கள் அல்ல; இறைவன் உங்களை நல்ல முடிவு எடுக்க உதவி இருக்கிறான் எனலாம்....
இது போன்றவர்கள் நடக்கும் பாதையிலே நடப்பது தவறு; வேறு வழி இல்லாத போது... இடுப்புத் துணியைக் கூட இறுக்கிக் கட்டிக் கொண்டு நடப்பது மிகவும் நல்லது போலும்.... அவர்களை நினைக்கும் போதெல்லாம் அவர்கள் மீது கோபம் வருகிறதோ இல்லையோ, உங்களின் மீதே உங்களுக்கு இப்போ கூடக் கோபம் வரும் என நினைக்கிறேன்....உங்களின் அனுபவம் என்போன்றோருக்கு ஒருப் பாடம் நன்றி சகோதிரி...
வரம் தந்த ஈசனின் தலையில் கைவைக்க துரத்தின பத்மாசுரனின் கதையாக இருக்கிறது.....
திரு.மைனர்வாள் அவர்களுக்கும் திரு.KMRK அவர்களுக்குமிடையே பின்னூட்டங்கள் மற்றும் கட்டுரைகள் வாயிலாக நடக்கும் அறிவுசால் கருத்துப் பறிமாற்றங்களின் ஆழம் எம்போன்ற சாமான்யர்களை பேந்தப் பேந்த விழிக்கவைக்கிறது. 'நான் அடிப்பது மாதிரி அடிக்கிறேன். நீ அழுவதுபோல் அழு' என்பதுபோன்ற புரிந்துணர்வு எம்முடன் அவர்களுக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்
ReplyDelete/////////////G.Nandagopal said...
ReplyDeleteஎம்போன்ற சாமான்யர்களை பேந்தப் பேந்த விழிக்கவைக்கிறது.////////
சாமான்யர்....நீங்க..?
வணக்கம் மாமூ..நல்லாருங்க..
///////kmr.krishnan said... தொடர்ந்த சேவையாக ஏதாவது ஒன்றினை என் மறைவுக்குப் முன்னர் நிறுவ வேண்டும் என்று ஆவல். \\\\\\\\\\\\\Minorwall said......
ReplyDeleteதங்களின் இந்த விழைவில் என் பங்களிப்பு எந்த வகையிலாவது தங்களுக்கு உதவுமானால் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..///////////
இந்த அணிலும் தங்களின் மேலான பணிக்கு எந்தவகையிலாவது உதவும் என்றால் அது என் பாக்கியம். ஆனால் புண்ணியம் முழுவதும் KMRK தமக்கே உரியது என்று நினைத்தால் ஒருவேளை எம்போன்றோரை நிராகரிக்ககூடும்.
/////////////G.Nandagopal said...
ReplyDeleteஎம்போன்ற சாமான்யர்களை பேந்தப் பேந்த விழிக்கவைக்கிறது.////////
Minorwall said.....
சாமான்யர்....நீங்க..?//////
ஜாம்பவான்களின் குறிப்புகளையெல்லாம் எளிதாக கிரகித்துக் கொள்ள முடியாதவர்களை எல்லாம் சாமான்யர்கள் என்று சொல்லாமல் பின் எப்படி அழைப்பதாம்.
///''தங்களின் இந்த விழைவில் என் பங்களிப்பு எந்த வகையிலாவது தங்களுக்கு உதவுமானால் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''///
ReplyDeleteமைனர்வாளின் மறுபக்கம் எவ்வளவு மேன்மையானது என்பது இந்த சொற்றொடர்
காண்பிக்கின்றது.வேறு யார் கண்ணிலும் படாத வாக்கியங்கள் உங்களுக்கு மட்டும்
பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது, மைனர்!கட்டுரையை முடித்த போது நான் சொன்ன சொற்களை மீண்டும் சொல்கிறேன்."ஆகட்டும் பார்க்கலாம்"
///''இந்த அணிலும் தங்களின் மேலான பணிக்கு எந்தவகையிலாவது உதவும் என்றால் அது என் பாக்கியம். ஆனால் புண்ணியம் முழுவதும் KMRK தமக்கே உரியது என்று நினைத்தால் ஒருவேளை எம்போன்றோரை நிராகரிக்ககூடும்"///
ReplyDeleteநன்றி நந்தகோபரே!ஏற்கனவே நண்பர் ஹாலாஸ்யம் என் பணிக்கு முன்கையை நீட்டி உதவியவர். மைனருடன் நீங்களும் சேர்ந்து மூவராகி உள்ளீர்கள். சிந்தியுங்கள். ஆலோசனைகளை முதலில் கூறுங்கள். நடைமுறைக்குக்
கொண்டுவர எனக்கு ஆண்டவன் ஆரோக்கியத்தையும் ஆதரவையும் ஆயுளையும்
அளிக்க வேண்டுங்கள்.நன்றி!நனறி!
கிருஷ்ணன் சார், //மனிதனை நினைக்க ஏன் கடவுளை மறக்க வேண்டும்?" // இது உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது.
ReplyDeleteநான் தஞ்சாவூரில் இருந்தபோது எல்லா சுவர்களிலும் பாப்பான் பூணலை அறுத்து எறி, குடுமியை ----------------- அப்படின்னு நிறைய எழுதியிருக்கும். நாத்திகவாதங்கள் எல்லாமே இதே போல் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இருப்பது எரிச்சலூட்டும் விஷயம். இன்னும் ஒரு மோசமான பாட்டு கூட பள்ளியில் பசங்க பாடிக்கொண்டிருப்பார்கள் (அதன் அர்த்தம் தெரியாமலேயே).
ஜவஹர் நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteமலர்விழி, லேண்ட்மார்க் education ல ஒரு முக்கியமான பாடம் 'learn to say நோ'. இல்லாவிட்டால் தர்மசங்கடங்கள்தான். நான் என்னால் முடியாத விஷயங்களுக்கு யாராக இருந்தாலும் நேரடியாக சொல்லிவிடுவேன். (அதனால திமிர் பிடித்தவள்னு சில பேர் பின்னாடி சொல்வதையும் கண்டுகொள்வதில்லை)
ReplyDeleteவணக்கம் கேஎம்ஆர் சார்.
ReplyDeleteமனிதனை நினைக்க
கடவுளை மறக்க வேண்டுமா என்ன?
குழந்தையை நேசிப்பதற்காக
மனைவியை வெறுக்க வேண்டுமா
என்ன?
உங்களைப் போன்றவர்களின்
சேவை இங்கே தேவை.
ஆகிவிடும்.
பார்க்கப் போகிறேன் சார்.