--------------------------------------------------------------------------------
விதிப்படிதான் நடக்குமா? பகுதி 4
உட்தலைப்பு (sub title):
எது பெருமை? எது சிறுமை?
இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால் பல
பதில்கள் உள்ளன. ஆனால் கேள்வியைச் சுருக்கி -
முதல் பெருமை எது? என்று கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்.
அது என்ன? இந்த இடத்திலேயே சொன்னால்
கட்டுரையின் வீச்சு அல்லது வேகம் குறைந்து
போய்விடும். ஆகவே இறுதிப் பகுதியில் சொல்கிறேன்
என்னுடன் - என் மனதிற்குள் உடன் இருக்கும் - ஆசான்கள்
- என்னுடைய ஆசிரியர்கள் மூன்று பேர்கள். அவர்களிடம்
கேட்டுவிட்டுத்தான் முக்கியமான எதையும் எழுத
முனைவது வழக்கம்.
ஒருவர் திருவள்ளுவர், இன்னொருவர் பாரதியார்
மூன்றாமவர் கண்ணதாசன்
முதல் அத்தியாயம் எழுதும்போது திருவள்ளுவரைக்
குடைந்துவிட்டேன். அதனால் இந்த அத்தியாயத்திற்கு
கவியரசர் கண்ணதாசனை நச்சரித்தேன்.
அவர் சிரித்தபடி சொன்னார். எல்லாம் என் பாடல்களியே
இருக்கிறது.அதுவும் உனக்கு நான் கற்றுத்தந்தவைதான்.
யோசித்துபார் - மூளையைக் கசக்கிப்பார் தெரியும்
என்று கூறிவிட்டார்.
யோசித்துப்பார்த்தேன் - சட்டென்று பிடிபட்டது.
உதவிய பாடல் வரிகளைப் பாருங்கள்:
"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
உறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்
வறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்
பெருமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்"
அடடா கண்ணதாசன் அவர்கள் எப்படிப் பட்டியல்
இட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதோடு
விட்டாரா? தொடர்ந்து சொல்கிறார்:
"துணையும்வரும் தனிமைவரும் பயணம் ஒன்றுதான்
வழிபடவும் வரம்தரவும் தெய்வம் ஒன்றுதான்"
உனக்கு துணை கிடைத்தாலும் சரி அல்லது தனியாக
இருக்க நேரிட்டாலும் சரி (வாழ்க்கைப்) பயணம் ஒன்று
தான்னு நெற்றியடியாக எப்படி அடித்தார் பாருங்கள்?
அதுதான் கண்ணதாசன்!
சரி, நாம் கட்டுரைக்குள் வருவோம்
பெருமை என்றால் என்ன? சிறுமை என்றால் என்ன?
பெருமை = 1.தான் அல்லது தன்னைச் சார்ந்தோர்
அடைந்த உயர்நிலை, வெற்றி முதலியவை காரணமாக
மதிப்பில் உயர்ந்துவிட்டதாகக் கொள்ளும் உணர்வு.
pride; sense of Pride. 2. ஒன்றின் உயர்ந்த நிலை
அல்லது தகுதி standing reputation.
சிறுமை = 1.மதிப்பிழ்ந்து வெட்கப்பட வேண்டிய நிலை.
கீழ்நிலை meanness: degradation;smallnesss
2. முக்கியம் அற்ற சிறிய தன்மை, குறையுடைய
நிலைமை. insignificance
உங்களுக்கு பெருமையாகத் தோன்றுவது எது என்று
கேட்டால் 'சந்தேகமென்ன, மீனாட்சி அம்மன் கோவில்
தான்' என்று மதுரைக்காரர்கள் சொல்வார்கள்.
தருமமிகும் சென்னை வாசிகளைக் கேட்டால்,
'உலகின் இரண்டாவது பெரியதும், அழகியதுமான
மெரீனா கடற்கரையைக் காட்டுவார்கள்.
கோவை வாசிகளைக் கேட்டால் சிறுவாணித் தண்ணீருக்கு
ஈடு ஏது -அதுதான் எங்களூருக்குப் பெருமை சேர்ப்பது
என்பார்கள்
இப்படி ஊருக்கு ஊர், மனிதருக்கு மனிதர் பதில் மாறுபடும்.
சரி இந்த உலகிற்கே பெருமை சேர்ப்பது எது?
யாரைக்கேட்டால் சரியான பதில் கிடைக்கும்?
உலகிலேயே மனிதனுக்கு மனிதனால் எழுதப்பட்டதில்
மிகச் சிறந்ததும், ஒப்புவமையற்றதுமான திருக்குறளை
எழுதிய வள்ளுவரையே கேட்போம்.
வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கின்றார் பாருங்கள்!
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு."
நேற்று இருந்தவன் இன்றில்லை அதுதான் இந்த
உலகத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கின்றார்
வள்ளூவர் பெருமகனார். நிலையாமை (Instability)
அதிகாரத்தில் வரும் குறள் இது
வேறு ஒரு சிந்தனையாளன் இதே கருத்தை ஒரே
வரியில் இப்படிச் சுருக்கமாகச் சொன்னான்
"நிலையாமைதான் நிலையானது"
(Uncertainity is certain)
ரத்தினச்சுருக்கமாக எப்படிச் சொன்னான் பாருங்கள்.
எல்லாம் நிலையில்லாததுதான். நம்மை விட்டுப்
போகக்கூடியதுதான். ஏன் எல்லாவற்றையும் போட்டது
போட்டபடி போட்டு விட்டு நாமும் ஒருநாள்
போகப் போகிறோம்.
அதைத்தான் பகவான்- அந்தக் கார்மேக வண்ணன்,
நம் மனம் கவர்ந்த கண்ணபிரான் இப்படிச் சொன்னார்
"எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொருவனுடையதாகிறது. மற்றொருநாள்
அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமுமாகும்"
எத்தனை பேர் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றார்கள்?
"மாடு மனை போனால் என்ன
மக்கள் சுற்றம் போனால் என்ன
கோடி செம்பொன் போனால் என்ன - உந்தன்
குறுநகை ஒன்று போதும்!"
என்று கவிஞனொருவன் தன் மனைவியிடம் சொன்னானாம்.
மாடு என்றால் செல்வத்தைக் குறிக்கும். செல்வம், வீடு,
பிள்ளைகள், சுற்றத்தார் என்று எது என்னை
விட்டுப்போனாலும் கவலையில்லையடி - உன் புன் சிரிப்பு
ஒன்றுபோதுமென்றானாம் அந்தக்கவிஞன்.
பட்டினத்தார் சரித்திரதைப் படித்தபோதுதான் எல்லாம் மாயை
(illusion) என்பதை அதே கவிஞன் உணர்ந்தான்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, கைபற்றிய மாந்தரும்
வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு
மட்டே" என்ற பட்டினத்தடிகளின் பாட்டைப் படித்துப்
புரிந்து கொண்ட பிறகு குறுநகையெல்லாம் அந்தக்
கவிஞனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை!
பட்டினத்தாருக்கே அவருடைய வளர்ப்பு மகனாக வந்துதித்த
சிவபெருமான்தான் 'காதறுந்த ஊசியும் வாராது காணும்
கடைவழிக்கே" -என்பதை - அதாவது மனிதன் இறந்து
விட்டால் அவன்கூட எதுவும் வராது - காது ஒடிந்து
பயனற்றுப்போன ஊசி கூட உடன் வராது என்று உணர்த்தினார்
ஒருமுறை இப்படி அடுக்கடுக்காக அடியவன் பேசிக்
கொண்டிருந்தபோது கேட்டுகொண்டிருந்த அன்பர்
குறுக்கிட்டார்.
"அண்ணே நீங்கள் சொல்வதெல்லாம் போகிற காலத்திற்
குத்தான் பொருந்தும்! இருக்கும் போது என்ன செய்ய
வேண்டும்? - எதைப் பெருமையாக நினைக்க வேண்டும்?
அதைச் சொல்லுங்கள்" என்றார்
"இருக்கிறகாலம், போகிறகாலமென்று காலத்தில் எல்லாம்
வேறு பாடு கிடையாது. ஏன் இன்று இரவிற்குள்ளேயே கூட
உங்களுக்கு இறுதிப் பயணச் சீட்டுக் கொடுக்கப்பட்டு
விடலாம். அதைத்தான் நம் வீட்டுப் பெரியவர்கள்
தூங்கையிலே வாங்கிகிற காற்று, சுழி மாறிப் போனாலும்
போச்சு என்பார்கள்" என்று அவருக்குப் பதில் சொன்னேன்
அவர் மெதுவாகத் தொடர்ந்து சொன்னார்."அண்ணே,
ஒன்னாம் தேதியானால் குறைந்த பட்சம் இருபதாயிரம்
ரூபாய் பணம் வேண்டிய திருக்கிறது.வீட்டுக் கடனுக்குத்
தவணைப் பணம், பால் கார்டு,மின் கட்டணம், மளிகைக்
கடை பில், செல்போன் பில், வேலைக்காரி சம்பளம்,
பெட்ரோல் கார்டு, இத்தியாதிகள் என்று வரிசையாக
வந்து பாடாய்ப் படுத்துகின்றன. வாழ்க்கையே
போராட்டமாக இருக்கிறது. இன்றையச் சூழ்நிலையில்
இதையெல்லாம் சமாளித்து ஒருவன் உயிர் வாழ்வதே
பெருமையான விஷயம்தான்"
"நகரங்களில் வாழ்கின்ற ஆடு மாடுகள் கூடத்தான்
மனிதன் மிஞ்சிய உணவோடு கீழே போட்டுவிட்டுப்
போகும் பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து விழுங்கி
விட்டு உயிர் வாழ்கின்றன - உயிர் வாழ்வதா
முக்கியம்.அதையே பெருமையாக நினைப்பதா?
யாருக்குத் தான் பிரச்சினைகள் இல்லை ?
தேவைகளைக் குறைத்துக் கொண்டு வருமானத்திற்
குள் வாழ்வதற்குப் பழகினால் எந்தப் பிரச்சினையும்
இல்லை. தஞ்சை மாவட்டத்தில் தினசரி ரூபாய்
நூறுக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் எண்ணற்ற
தொழிலாளிகள் எல்லாம் சந்தோஷமாக வாழவில்லையா?
வரும் பிரச்சினைகளைச் சமாளித்து வாழ்வதுதான்
வாழ்க்கையின் முதல் நியதி. - அடிப்படை நியதி -
ஆகவே அதைத் தவிர்த்து நீங்கள் பெருமைப்
படுவதைச் சொல்லுங்கள்" என்றேன்
"எனக்குத் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்" என்றார் அவர்
நான் சொன்னேன் " எளிமையான வாழ்க்கை, நேர்வழியில்
பொருளீட்டல், சிக்கனம், இறையுணர்வு, தர்மசிந்தனை,
பெற்றோர்களையும், பெரியோர்களையும் மதித்தல்,
இயற்கைக்கும், அரசிற்கும் எதிராக எதையும்
செய்யாதிருக்கும் மேன்மை என்று அனைத்து
நற்பண்புகளையும் கொண்ட இனம் - இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றையும், கலாச்சாரத்
தையும் கொண்ட இனம் தமிழர் இனம்.ந்ம்மைப் போன்ற
எண்ணற்ற இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு
நம் நாடு.பல மொழிகளைக் கொண்டது நம்நாடு. பல
மதத்தவர்களைக் கொண்ட்து நம் நாடு. பலவிதமான
இயற்கை நிலைகளைக் கொண்டது நம் நாடு.
திரு.ஜவஹர்லால் அவர்கள் சொன்னதுபோல வேற்றுமையில்
ஒற்றுமை நிறைந்தது நம் நாடு"
"தொன்மையிலும், கலாச்சரத்திலும், பண்பாட்டிலும்
நமக்கு இணையானவர்களைக் கொண்ட நாடு
வேறொன்றுமில்லை! அது நிதர்சனமான உண்மை!
ஆகவே இந்தத் திருநாட்டில் பிறந்திருக்கிறோம்
என்பதுதான் முதல் பெருமை!"
"இந்தியாவில் பிறந்ததற்காக முதலில் பெருமைப்படுங்கள்!"
அவர் மெய்மறந்து சொன்னார்,"ஆமாம், அதுதான் உண்மை!"
அத்துடன் கேள்வி ஒன்றையும் கேட்டார்.
"சரி, எது சிறுமை?"
"நம் தாய்த்திரு நாட்டை இகழ்ந்து பேசுவதுதான் சிறுமை!"
"இதில் உங்களுடைய விதிப்படிதான் நடக்கும் என்பது
எங்கே வரும்?"
"பிறப்பு உன் கையில் இல்லை!இந்தத் தாய்தான் வேண்டுமென்று
நீ விரும்பிப் பிறக்கவில்லை. அதுபோல நாடும் அப்படித்தான்
இரண்டுமே இறைவன் அளித்த கொடை. நீ வாங்கி வந்த வரம்!
இல்லையென்றால் நீ நைஜீரியாவிலோ அல்லது ஜாம்பியாவிலோ
பிறந்திருப்பாய். இல்லையென்றால் அவற்றைவிட மோசமான
நாடு ஒன்றில் பிறந்திருப்பாய்!"
"ஆகவே அதை உணர்ந்து கொள் முதலில்!
நாட்டை நேசி,
நாட்டிற்கு விசுவாசமாக இரு.
நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இரு.
அந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்!"
(தொடரும்)
அருமையான தத்துவக் கட்டுரை - நமது விருப்பமல்ல - தாயும் தாய்த்திருநாடும். உலகிலேயே உயர்ந்தது இவை இரண்டும். ஆக பெருமை எது எனில் நம் தாயும் பிறந்த பொன்னாடும் தான்.
ReplyDelete///cheena (சீனா) said...
ReplyDeleteஅருமையான தத்துவக் கட்டுரை - நமது விருப்பமல்ல - தாயும் தாய்த்திருநாடும். உலகிலேயே உயர்ந்தது இவை இரண்டும். ஆக பெருமை எது எனில் நம் தாயும் பிறந்த பொன்னாடும் தான்.///
நன்றி மிஸ்டர் சீனா! நீங்கள் என் வயதுக்காரர். எண்ணமும், சிந்தனை ஓட்டமும் ஒன்றாகவே இருக்கும்.அதனால் கட்டுரை அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள். இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
தாத்தா நல்லா இருக்கு ...
ReplyDeleteஆஹா வாத்யாரே.. அருமையான பாடம்..
ReplyDeleteவழக்கம்போல் என் காதலனான கவிஞன் துணைக்கு வந்திருக்கிறான்.
//"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, கைபற்றிய மாந்தரும் வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு மட்டே"//
இதைத்தானே, "வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ" என்றான் நம் கவிஞன். புரிந்து கொண்டு வாழ்ந்து செத்தவர்கள் புண்ணியம் சேர்த்தார்கள்.. வாழுகின்றவர்கள் நிம்மதியாக இருக்கின்றார்கள். இது அனுபவத்தால் விளைந்தது.. அனுபவம் செய்கையால் உண்டானது.. அந்தச் செய்கை உணர்வால் எழுவது.. அந்த உணர்வு தோற்றத்தின் விளைவால் விதையால் விழுந்தது.. அதுதான் நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு.
வாத்தியாரே தோண்டித் துருவிப் பார்த்தாலும் கவிஞன் இறவாக் கவிஞன்தான்..
//நாட்டை நேசி, நாட்டிற்கு விசுவாசமாக இரு. நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இரு. அந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்!//
உண்மை வாத்யாரே.. இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் மொழிகளின் வேற்றுமையில் இந்திய மனங்களின் ஒற்றுமையை நாம் இன்னும் பலப்படுத்தத்தான் வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை - பேத்தியே நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட்டாள் - கவலைப் படாதீர்கள்
ReplyDelete////Baby Pavan said...
ReplyDeleteதாத்தா நல்லா இருக்கு ...////
பேராண்டி நீ சொன்னதில் மகிழ்வே!
ஆனால் உன் அப்பா வயதுடையவர்கள் ஒருவரும் வந்து இதைச் சொல்லவில்லையே!
///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஆஹா வாத்யாரே.. அருமையான பாடம்..
வழக்கம்போல் என் காதலனான கவிஞன் துணைக்கு வந்திருக்கிறான்.
வாத்தியாரே தோண்டித் துருவிப் பார்த்தாலும் கவிஞன் இறவாக் கவிஞன்தான்..
//நாட்டை நேசி, நாட்டிற்கு விசுவாசமாக இரு. நாட்டிற்கு நன்றியுள்ளவனாக இரு. அந்த உணர்வு ஒன்றுதான் உன்னை மேம்படுத்தும்!//
உண்மை வாத்யாரே.. இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் மொழிகளின் வேற்றுமையில் இந்திய மனங்களின் ஒற்றுமையை நாம் இன்னும் பலப்படுத்தத்தான் வேண்டும்.////
கட்டுரை 100% உங்களைச் சென்றடைந்திருக்கிறது நண்பரே! நன்றி!
cheena (சீனா) said...
ReplyDeleteஅடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை - பேத்தியே நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட்டாள் - கவலைப் படாதீர்கள்///
நன்றி மிஸ்டர் சீனா!
//கட்டுரை 100% உங்களைச் சென்றடைந்திருக்கிறது நண்பரே! நன்றி!//
ReplyDeleteவாத்யாரே இந்த நண்பர், தோழர்ன்றதெல்லாம் நமக்குள்ள வேண்டவே வேண்டாம்.. நான் என்றென்றைக்கும் உங்களது பாசத்துக்குரிய, கீழ்ப்படிதலுள்ள மாணவனாகவே இருந்து கொள்கிறேன்..
இப்ப பாருங்க தமிழ்மணத்துல 'தோழரும்', 'நண்பரும்' வாங்கிக் கட்டிக்கிறதை.. நமக்குத் தேவையா..?
VANAKKAM SIR,
ReplyDeleteREALLY EXCELLENT,I ENJOYED.
ARANGAN ARULVANAGA
ANBUDAN,
K.SRINIVASAN.
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) சைட்...
ReplyDelete//கட்டுரை 100% உங்களைச் சென்றடைந்திருக்கிறது நண்பரே! நன்றி!//
வாத்யாரே இந்த நண்பர், தோழர்ன்றதெல்லாம் நமக்குள்ள வேண்டவே வேண்டாம்.. நான் என்றென்றைக்கும் உங்களது பாசத்துக்குரிய, கீழ்ப்படிதலுள்ள மாணவனாகவே இருந்து கொள்கிறேன்..
இப்ப பாருங்க தமிழ்மணத்துல 'தோழரும்', 'நண்பரும்' வாங்கிக் கட்டிக்கிறதை.. நமக்குத் தேவையா..?////
அவர்கள் வாங்கிக் கட்டிக்கொள்வது வேறு! இது அதைக்குறிப்பதல்ல!
////VANAKKAM SIR,
ReplyDeleteREALLY EXCELLENT,I ENJOYED.
ARANGAN ARULVANAGA
ANBUDAN,
K.SRINIVASAN.///
அடடே 13.10.2007ல் எழுதியது உங்கள் கண்ணில் இன்று பட்டதும் அரங்கன் அருளாலதன் நண்பரே! நன்றி!
நன்றியுடன் அன்பு வணக்கங்கள்!
ReplyDeleteதங்கள் வகுப்பறைல் பதியப்படாத மாணவனாக தங்கள் பதிவுகளை தவறாது படித்து வரும் மாணவர்களுள் நானும் ஒருவன். நான் கனடாவில் வசிப்பதால் ஜோதிடம் பயிவதற்கான நூல்கள் கிடைப்பது அரிது. அதனால் இணையத்தளங்கள் மூலம் தேடிய பொழுது தங்கள் வகுப்பறையில் நுளையும் வாய்ப்பு கிட்டியது. தங்கள் வகுப்பறைப் பாடங்கள் குருடனாக இருந்த எனக்கு இறைவனால் கிடைத்த வெள்ளைப் பிரம்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
தங்கள் பணி மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்
நன்றி
கனகா-கனடா
//////Blogger kanaga said...
ReplyDeleteநன்றியுடன் அன்பு வணக்கங்கள்!
தங்கள் வகுப்பறைல் பதியப்படாத மாணவனாக தங்கள் பதிவுகளை தவறாது படித்து வரும் மாணவர்களுள் நானும் ஒருவன். நான் கனடாவில் வசிப்பதால் ஜோதிடம் பயிவதற்கான நூல்கள் கிடைப்பது அரிது. அதனால் இணையத்தளங்கள் மூலம் தேடிய பொழுது தங்கள் வகுப்பறையில் நுளையும் வாய்ப்பு கிட்டியது. தங்கள் வகுப்பறைப் பாடங்கள் குருடனாக இருந்த எனக்கு இறைவனால் கிடைத்த வெள்ளைப் பிரம்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.
தங்கள் பணி மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்
நன்றி
கனகா-கனடா/////
நன்றி நண்பரே. முன் பதிவுகள் அனைத்தையும் படியுங்கள்!